என் தாயை பற்றி எழுத வேண்டும் என்று விருப்பம். ஆனால் எங்கே ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை.
என் தாய் பிறந்தது ஒரு பாரம்பர்யம் மிக்க, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தில். என் பாட்டனார் நீதிபதியாக இருந்தார். அரசாங்கப் பணி ஆனதால் பல ஊர்களுக்கு மாற்றல் உண்டு.அதனால் கல்லூரியில் சேருவதற்கு முன்பே பல ஊர்களில் வசித்ததால் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கமும் என் தாய்க்கு அத்துப்படி. நாலு ஆண் பிள்ளைகளுக்குப் பின் பிறந்ததால் அருமையாகவும் வளர்க்கப் பட்டார். சென்னையில் குவீன் மேரிஸ் கலூரியில்பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்ற பின் என் தந்தையை மணந்தார்.
என் தந்தை அவர் குடும்பத்தின் மூத்த மகன். நிறைய தங்கைகள் தம்பிகள். அவரின் தந்தை இருந்தாலும் குடும்பப் பொறுப்பு முழுவதும் என் தந்தை தலை மேல் தான். என் தாயின் தந்தை, என் தந்தையின் குணத்தை பார்த்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பம் ஆனாலும், பிள்ளை நல்ல பிள்ளை என்று மகளை கட்டி கொடுத்திருக்கார். என் தந்தை தன் கடின உழைப்பால் உயர்ந்து சொந்த தொழிற்சாலை தொடங்கி சுற்றத்தாரை பெருமை பட வைத்தார். அனைத்துத் தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். தம்பிகளை படிக்க வைத்துத் திருமணமும் செய்து வைத்தார். எல்லாம் என் தாயின் துணையோடு. என் மூன்றாவது அத்தைக்கும் நாலாவது அத்தைக்கும் ஒரே வருடத்தில் திருமணம் நடந்தது. என் தாய் தன் நகைகளையே போட்டு அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். என் அத்தைகளும் சித்தப்பாக்களும் என் தாயை தங்கள் தாயாகவே இன்றும் நினகின்றனர்.
யார் கண் பட்டதோ என் தந்தையின் தொழில் பங்குதாரர், வெள்ளை உள்ளம் கொண்ட என் தந்தையை பண விஷயத்தில் நன்றாக ஏமாற்றி விட்டார். மிகுந்து நிதி நெருக்கடியான நிலைமை. நானும் என் தம்பியும் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தோம் நான் பத்தாம் வகுப்பு என் தம்பி ஐந்தாம் வகுப்பு. அதே நேரத்தில் தான் என் தந்தை அவருடைய இன்னொரு தொழிற்சாலையில் பெரிய முதலீட்டில் பால் பேரிங்க்ஸ் தயாரித்து, அதுவும் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியது. அதிலும் நட்டம். என் தாய் எப்பொழுதுமே என் தந்தைக்கு வணிக நிர்வாகத்தில் உறுதுணையாக உதவி செய்து கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் என் தாயின் பொறுப்பு பன்மடங்காகியது. அஞ்சா நெஞ்சம் என்று என் தாய்க்கு தான் பட்டம் கொடுக்க வேண்டும். என் அம்மாவின் சாதுர்யமும்,தைர்யமும் தான் எங்களை அந்த சூழ்நிலையிலும் தாக்குப் பிடிக்க வைத்தது.
அதன் பின் என் தந்தையை பார்கின்சன்ஸ் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது. என் தந்தைக்கு அப்பொழுது ஐம்பது வயசு தான். அந்த நோயின் தாக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியூமே தவிர மருத்துவத்தில் முழு நிவாரணம் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. கொடிய நோய். மூளையில் சுரக்கும் டோபாமைன் இவர்களுக்கு சுரப்பதில்லை அதனால் மூளை கட்டளை இட்டாலும் கை கால்கள் அதை மெதுவாத்தான் செயல் படுத்தும். மோட்டார் ச்கில்சை பாதிக்கும் ஒரு நோய். நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறையாது.
என் அம்மா என் அப்பாவிற்கு கைகளும் கால்களும் ஆனார். பூமா தேவிக்கு மறு பெயர் மரகதம் என்று என் தாயின் பெயரை வைத்து விடலாம். உதவிக்கு வேலையாட்கள் இருந்தாலும் இரவும் பகலும் இருபத்திநான்கு மணி நேரமும் என் தந்தையை கவனித்துக் கொண்டவர் என் தாய். காந்தாரி த்ரித்ராஷ்டரனுக்குக் கண் தெரியவில்லை என்று திருமணத்துக்குப் பின் தன கண்களை கட்டிக் கொண்டாள். ஆனால் என் அம்மா அதற்கு ஒரு படி மேலே சென்று என் தந்தைக்குக் கண்ணாகவே இருந்தார்.
எத்தனை முறை என் தந்தை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், அத்தனை முறையும் அங்கும் செவிலித் தாயாக இருந்து இல்லத்திலும் அதையே தொடர்ந்து செய்தார். ட்ரெஸ்ஸிங் செய்வது, ஊசி போடுவது, சக்ஷன் பம்ப் மூலம் சளி எடுப்பது, ரைல்ஸ் டியுபில் உணவு கொடுப்பது போன்ற அனைத்தும் தெரியும். என் தந்தையின் அறைக்குள் நுழைந்தால் அது ஒரு நோயாளியின் அறையை போலவே இராது. என் அப்பாவும் மடிப்புக் கலையாத மேல் சட்டையும் வெள்ளை வேட்டியுமாகத் தான் காட்சி அளிப்பார். எல்லாம் என் தாயின் கை வண்ணம். இது ஒரு நாள் இரண்டு நாள் கதையல்ல பல வருடங்கள் என் தந்தையை பேணிக் காத்தார் என் தாய். எத்தனையோ குடும்ப விழாக்களுக்குச் சென்றதில்லை. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
என் தந்தை உயிர் துறக்கும் நேரத்திலும் என்ன செய்ய வேண்டுமோ அதை செவ்வன செய்தார். என்னை கங்கை நீர் இருக்கும் இடத்தைச் சொல்லி எடுத்து வரச் சொன்னார். அனைவரும் கங்கை நீரை என் தந்தையின் வாயில் விட்டோம். ஓம் நமோ நாராயணா என்ற நாமத்தை எங்களை உரக்க ஜபிக்கச் சொன்னார்.அவரை தன்னுடன் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் விடைபெற அனுமதி கொடுத்தார். அது மிகக் கடினம் ஏனென்றால் என் தாய் என் தந்தைக்கு செய்த அனைத்தும் அன்பினால் செய்தது. எதையுமே அவர் கடமையாகக் கருதிச் செய்யவில்லை.
இந்த வயதிலும் என் தம்பிக்கு அவன் தொழிலில் (என் தந்தை ஆரம்பித்ததை அவன் தொடர்கிறான்) உறுதுணையாக இருக்கிறார். அவருடைய பொது அறிவு அனைவரையும் வியக்க வைக்கும். தெரியாத விஷயமே கிடையாது என்று சொல்லலாம். அவரை போல் ஒரு நிர்வாகத் திறன் உடையவரை பார்க்கவே முடியாது. எந்தத் துன்பத்திலும் சிரித்த முகமாகவே இருப்பார். என்னை பொறுத்த வரையில் இந்தப் புவியில் என் தாயை விட அழகான மனிதர் யாருமே இல்லை.
Jan 13, 2012 @ 18:13:02
நன்றாக வந்திருக்கிறது.. நிறைய எழுதுங்கள்..
Jan 13, 2012 @ 18:27:19
எளிய நடை மனம் திறந்த பதிவு. உங்கள் குடும்பத்தின் நல்லது கெட்டதுகளை உங்கள் தாய் சந்தித்த சாதுரியம் அதாத்தியமானது # பெண் மட்டுமே இதைபோல அசாதரன சுழ்நிலையில் செயல்பட முடியும். நல்லவர்கள் என்றும் வாழ்வில் நிம்மதியோடு இருப்பார்கள் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம்
Jan 13, 2012 @ 18:44:04
ரொம்ப ரொம்ப நன்றி.
Jan 13, 2012 @ 19:26:04
நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! 🙂
Jan 14, 2012 @ 13:58:26
அடடா!!! நல்லா இருக்கு
Jan 14, 2012 @ 15:37:42
நன்றி, உங்க அருமையான பாராட்டுக்கு:)