மாமியார் மருமகள் இருவரும் பெண்களே. மருமகளாக இருந்தவர் மட்டுமே மாமியாராக ஆக முடியும். ஆனால் மருமகளாக இருந்தவர் மாமியாராக மாறும்போது ஏன் ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது?
இந்த உறவின் தொடக்கம் மகன்/கணவன். அதனால் இந்த உறவில் பிரச்சினை என்றால் பாதிக்கப் படுவதும் அவனே.
மருமகள் கணவன் வீட்டுக்கு வந்தவுடன் அவள் எதிர்பார்ப்பது தாயன்பு. அது மாமியாரிடம் கிடைத்து விட்டால் பிறகு அது மிட்டாய் வீடு தான்! பல தாய்மார்கள் அன்பாய் அரவணைத்து மருமகளை மகளாய் நேசித்து இல்லத்தில் ஒருத்தியாய் அவளை ஏற்றுக் கொள்கின்றனர். திருமணத்தின் முன்பே பிள்ளையின் தாய் பெண் வீட்டாரை மதித்து நடந்தாலே வரப்போகிற மருமகளுக்கு மாமியாரின் மேல் ஒரு மரியாதை பிறக்கும். இந்த பண்பாடு படிப்பினாலோ, சமுக அந்தஸ்தினாலோ வருவது அல்ல. உண்மையான அன்பு இருக்க வேண்டும். மகனின் மனைவி மகிழ்ச்சியோடு இருந்தால் தான், மகன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற புரிதல் மூலம் மட்டுமே இது முடியும்.
மருமகளை தனக்கு போட்டியாளராகப் பார்க்கும் தாய்மார்களால் தான் பிரச்சினை ஆரம்பம் ஆகிறது. எப்பொழுதுமே மகனுக்கும் தாய்க்கும் ஒரு விசேஷ பந்தம் உள்ளது. அதனால் தான் அவனை ஆள வேறு ஒரு பெண் வெளியில் இருந்து வந்தவுடன் தாய்க்கு ஒரு பயம் வந்து விடுகிறது. மேலும் நான் ஒரு உயரதிகாரி, நீ என் கீழே வேலை பார்ப்பவள் என்ற நோக்கோடு மாமியார் உறவை ஆரம்பித்தாலும் அது மருமகளின் வெறுப்பில் தான் போய் முடியும். சக தோழியாக பாவித்து பொறுப்புகளையும் அதற்கேற்ற அதிகாரத்தையும் பகிர்ந்தளித்தால் உறவு வலுப்படும். அதேபோல தான் தந்தைக்கும் மகளுக்கும் ஒரு உன்னத உறவு உள்ளது. ஆனால் வீட்டோடு மாப்பிள்ளை என்று அதிகம் பேர் இல்லாததால் மாமனார் மருமகன் பிரச்சினை நாம் அதிகம் காண்பதில்லை 🙂
வீட்டுக்கு வந்த மருமகளும் மாமியாரை தாயை போல நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சுமுகமாகப் போகும். இல்லை என்றால் சிறு பிரச்சினை கூட பூதாகாரமாக வெடிக்கும். மருமகளும் புதிய இல்லத்தின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். வீட்டுக்கு வந்த விருந்தாளி போல பட்டும் படாமலும் இருக்கக் கூடது. அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்டு, அனைவரிடத்திலும் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. பொறுமை வேண்டும். பெரும்பாலும் மருமகள் மாமியாரை விட அதிகம் படித்து வேலைக்குச் செல்பவளாக இருந்தால் மாமியாருக்குத் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. அது வேறு விதத்தில் கோபமாய் வெளிவரும். ஆனால் மாமியாரின் அனுபவ முதிர்ச்சிக்கு மதிப்பளித்து மருமகள் முதலில் இருந்தே தக்க மரியாதை கொடுத்து வந்தால் இந்த சூழ்நிலையை அறவே தவிர்த்துவிடலாம்.
இதற்கெல்லாம் பாலமாய் அமைய வேண்டியவன் மகன்/கணவன். பல ஆண் மகன்களுக்கு தாயையும் மனைவியையும் தக்க முறையில் கையாள்வதற்கான முதிர்ச்சி இருப்பதில்லை. புதுப் பெண்டாட்டி சொல் பேச்சுக் கேட்டு அலையறான் என்று தாயிடமும், சரியான அம்மா பிள்ளையாய் இருக்கிறாயே என்று மனைவியடமும் திட்டு வாங்கிக்கொண்டு, திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஏண்டா கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று நொந்து போகிறவர்கள் அநேகம் பேர்.
என் மாமியார் என்னை இப்படித் தான் நடத்தினார், நானும் அதுபோல நடந்து கொள்வதில் தவறில்லை என்று புதிய மாமியார்கள் நினைக்கவும் செய்கிறார்கள். நான் என் வீட்டில் இப்படித் தான் இருந்தேன், இங்கேயும் இப்படித் தான் இருப்பேன் என்று புது மருமகள்களும் நினைக்கிற காலம் இது. நம்முடைய கலாச்சாரத்தில் குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து, கலந்து பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுதல் என்பது வழக்கத்தில் இல்லை. பெரும்பாலும் பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு வளர்ந்ததால் திருப்பி அவர்களிடம், நீ செய்வது தவறு, வேறு மாதிரி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லத் துணிவு வருவதில்லை. அதே சமயம் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் போது ஒரு குற்ற உணர்வோடே செய்கிறார்கள். இரண்டுமே தேவையில்லை.
இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தோடும், நிதி நிலைமையில் மகனை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாது இருந்தாலும், மகனுக்குத் திருமணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் வைப்பதே அறிவுள்ள செயலாகும். தூரத்தில் இருக்கும் போது குற்றங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. பிரிவினால் அன்பும் பெருகுகிறது. உறவும் மேம்படுகிறது. பின்னொரு நாளில் இரு சாரார்க்கும் உதவித் தேவை படும் பொழுதில், அதாவது மருமகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பொறுப்பான அன்புடையவர்களின் தேவை ஏற்படும் போதோ, அல்லது மாமியாருக்கு மூட்டு வலி வந்து மருமகளின் உதவி தேவை படும் போதோ அன்புடனும் கௌரவத்துடனும் உதவி பரிமாற்றம் இயல்பாக நடக்கும்.
Feb 02, 2012 @ 05:21:07
அற்புதமாக உள்ளது… இன்றைய நடைமுறையில் இதுவே நல்லது..
Feb 02, 2012 @ 05:31:26
//. பின்னொரு நாளில் இரு பாலாருக்கும் உதவித் தேவை படும் பொழுதில், அதாவது மருமகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பொறுப்பான அன்புடையவர்களின் தேவை ஏற்படும் போதோ, அல்லது மாமியாருக்கு மூட்டு வலி வந்து மருமகளின் உதவி தேவை படும் போதோ அன்புடனும் கௌரவத்துடனும் உதவி பரிமாற்றம் இயல்பாக நடக்கும்//. ithu romba correct
Feb 02, 2012 @ 07:23:09
Thank you RealBennu 🙂
Feb 02, 2012 @ 07:23:58
Thank you Usharanims :)amas32
Feb 02, 2012 @ 08:13:28
“உதவி பரிமாற்றம்” – good word. Article is very meaningful and practical
Feb 02, 2012 @ 15:09:21
nandri sutha 🙂
Feb 05, 2012 @ 11:28:28
//இரு பாலாருக்கும்//Possibly meant இரு சாராருக்கும்?இரு பாலாருக்கும்: for both men and womenபால்- genderமத்தபடி ‘familiarity breeds contempt’ இரண்டு பேர் மட்டும் இருக்கும் வீட்டில் நடக்காதா என்ன?உடல் ஆரோக்கியம், நிதி நிலை தவிர ஒவ்வொருக்கும் ‘முழுமையான வாழ்வு’ என்று எது தோன்றுகிறதோ அம்முறையில் இருக்கவேண்டும். ஒரு சில தம்பதிகளுக்கு அவர்கள் Emotional satisfaction தங்கள் இருவரைச் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தைகளை விட்டு விலகி வாழ்வது என்பது அர்த்தமற்றதாக இருக்கும். ‘தாங்கள் இருவர் மட்டும் ஒரு unit-ஆக இயங்க வேண்டும்’ என்று என்றுமே எண்ணிப் பார்த்திராதவர்களாக இருப்பர். ஒன்று இக்காலத்தில் உசிதம், இரண்டாவது இல்லை என்று பொதுமைபடுத்த முடியாது என்று நினைக்கிறேன். அவரவருக்கு இயைவானதைத் தேர்வுசெய்துகொள்ளவேண்டும்.
Feb 05, 2012 @ 16:22:39
Dear Dagalti, Will make the correction. So nice of you to read both my posts 🙂 Yes, your point is very valid, but where parents have that expectation, when children do not reciprocate in the same way it does lead to mental unhappiness to the parents as well. Hence my suggestion. Of course I only generalised and individual situations have so many equations to consider and what you say falls under that category. Thank you so much for making that point 🙂 amas32
Feb 08, 2012 @ 15:01:48
sollammal solkiraithanikudithanam
Feb 08, 2012 @ 16:24:56
எங்கு தேவையோ அங்கு 🙂 நன்றி உங்கள் கருத்துக்கு 🙂
Nov 27, 2012 @ 08:56:47
ஒரே பெண் தற்காலத்தில் பலருக்கும். என் தாய் தந்தையர்தான் என்னோடு இருப்பார்கள். உன்னுடைய பொருளும், நீ கொடுக்கும் சவுகரியங்களும் மட்டும் வேண்டும். உன் பெற்றோர் வேண்டாம், அவர்களுடைய சொத்து கொடுத்தால் பரவாயில்லை, வேண்டும் என்று சொல்லும் பெண்களை என்ன செய்வது?
Nov 27, 2012 @ 09:01:04
ரொம்ப கஷ்டம் மா! ஆனால் காலம் ரொம்ப மாறி வருகிறது. இதைவிட பெரிய கவலைகள் உள்ளன.
Nov 27, 2012 @ 09:00:30
பொதுவாகவே வீட்டைப் பராமரிப்பது பெண்களின் செயலாகவே இருக்கிறது. வேலைக்குப் போனாலும், போகாவிட்டாலும். ப்ரச்சினை அங்குதான் ஆரம்பமும் ஆகும். மருமகள் வளர்ந்த சூழ்நிலையும், எக்ஸ்போஷரும் மாமியாரைக் காட்டிலும் வேறாக இருக்கலாம். தன் வீட்டை இப்படித்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பலாம்.முன்காலத்தில் (ரொம்ப முன்னாடி இல்லை 🙂 ) இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் சமரசம் வந்துவிடும். அட்ஜஸ்மெண்ட். இப்போது யாருக்கும் அதற்கு பொறுமை இல்லை.அதனால் இப்பொழுது இன்னொருமுறையும் பழக்கத்தில் காண்கிறேன்.பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருத்தல். வீடு வேறு, சமையல் வேறு. ஆனால் அவசர உதவிக்கு, கூப்பிட்ட குரலுக்கு வர மகனும் மருமகளும் உடன் இருக்கிறார்கள் என்ற மனநிம்மதி பெற்றோருக்கு.மேலும் அவர்களுக்கு பேரன் பேத்திகளோடு நேரமும், மகன் மருமகள் இருவரும் வேலைக்கு செல்வதானால் அவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நிம்மதியும்.
Nov 27, 2012 @ 09:03:56
ஆமாம், இது இப்போ நிறைய இடங்களில் காணலாம். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சண்டை சச்சரவு இல்லாத உறவுமுறைகளுக்கு எதுவும் பண்ணலாம் என்று ஆகிவிட்டது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி 🙂