கல்வியா? கலையா? விளையாட்டா?

Indian-graduation

 

பெற்றோர்களுக்கு எப்பொழுதுமே பொறியியல் மருத்துவம் போன்ற துறைகளில் தான் தங்கள் பிள்ளைகள் பிரகாசிக்க வேண்டும் என்று விருப்பப் படுகின்றனர் . அதனாலேயே பத்தாம் வகுப்பு முடிந்தவுடனே பெற்றோர்கள் பிள்ளைகளை விரும்பி சேர்க்கும் பாடப் பிரிவுகள் கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், மற்றும் கணிப்பொறி அறிவியல். இப்பொழுது சார்டர்ட் அக்கௌன்டன்ட் துறையிலும் மென்பொருள் துறைக்கு இணையாக மட்டும் இல்லாமல் அதற்கு மேலும் சம்பளம் கிடைப்பதால் வர்த்தக/கணக்கியல் துறைக்கும் மவுசு கூடி பிள்ளைகள் அதிலும் சேர்க்கப்படுகின்றனர். மற்ற துறைகளை பெற்றோர்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை. பள்ளிகளும் இதைத் தவிர வேறு பாடப் பிரிவுகளை அளிப்பதும் இல்லை.

என்னுடைய மகள் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாள். ஆனால் அவளுடைய ஈடுபாடு கலைத் துறையில் இருந்தது. அதனால்  மேலே குறிப்பிட்ட எந்த பாடப் பிரிவையும் அவள் தேர்ந்தெடுக்கவில்லை. அவள் கேட்டது உளவியல், பொருளாதாரம், சரித்திரம், ஆங்கில இலக்கியம் அல்லது வேறு மொழி இலக்கியங்கள் போன்ற பாடங்கள். நான் சென்னை முழுவதும் இருபத்தைந்து பள்ளிகளுக்கு நேரில் சென்று விசாரித்திருப்பேன்.(ஏனென்றால் தொலைபேசியில் எந்தப் பள்ளியும் என்ன பிரிவுகள்  வழங்குகிறார்கள் என்பதைக் கூட சொல்ல மாட்டார்கள்). நான் விசாரிப்பதையே விநோதமாகப் பார்த்தார்கள். Arts என்றால் அவர்களுக்கு commerce மட்டுமே! ஒரே ஒரு பள்ளி தான் என் மகள் கேட்ட பாடப் பிரிவினை அளித்தது. ஆனால் இருபதுக்கும் மேற்பட்டப் பாடங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு பாட திட்டத்தில் இருந்தும் எந்தப் பள்ளியும் அவைகளை கற்பிப்பதில்லை. ஏனென்றால் யாரும் அந்தப் பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில்லை. அதனால் அதற்கு ஆசிரியர்கள் போட்டு கற்பிப்பதில் பள்ளிகளுக்கு எந்த லாபமும்  இல்லை. 
அந்த அளவில் இருக்கிறது நமது சமுதாயம்! 

+ 2 முடித்த பின் அவள் இளநிலை பட்டப் படிப்புக்குத் தேர்ந்தெடுத்தப் பாடப் பிரிவு சரித்திரம். அவள் முதலில் + 1 ல் arts  subjects எடுத்தபோதே உறவினர்களும் நண்பர்களும் எங்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். Commerce கூட எடுக்கவில்லை, என்ன இவள் முன்னேற்றத்தை இப்படி தடை செய்கிறீர்கள் என்றார்கள். அவளுக்கு தான் பகுத்தறியும் புத்தியில்லை என்றாலும் பெற்றோர்கள் நீங்கள் அவளை கட்டாயப் படுத்தி வேறு துறையில் சேர்க்க வேண்டும் என்றனர். சரித்திரம் எடுத்த பின் கேட்கவேண்டுமா? எந்தப் பிரிவும் கிடைக்காதவர்கள் தான் சரித்திரம் படிப்பார்கள் என்றார்கள். இல்லை எங்கள் மகள் சரித்திரம் படைப்பாள் என்று நாங்கள் அப்பொழுது அவர்களிடம் சொல்லவில்லை 🙂 அவள் இளநிலை பட்டப் படிப்பை முடிக்கையில் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் பெற்றாள். இப்பொழுது அவள் திரைக்கதை/நாடகமாக்கம்/எழுத்துத் துறையை தேர்ந்தெடுத்து அதில் மேற்படிப்புப் படித்து வருகிறாள். அவள் எடுத்த முடிவின் வெற்றி தோல்வியை காலம் நிர்ணயிக்கும். ஆனால் அவளின் முயற்சி இன்றைய தேதியில் அவளுக்கு மனநிறைவைத் தருகிறது. 

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனிப்பட்ட திறமை உள்ளது. அதை பெற்றவர்களும் மற்றவர்களும் ஊக்குவிக்க வேண்டும். சில துறைகளில்  காலூன்ற அதிகக் காலம் எடுக்கும். நிரந்தர வருவாய் தன்மையும் இருக்காது. ஆனால் சாதிக்க நினைப்பவர்கள், அந்தத் துறையில் பேரார்வம் உள்ளவர்கள் உழைத்து உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். பெற்றோர்கள்  கொடுக்கும் உற்சாகம் தான் அந்த குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையாக மாறுகிறது. விளையாட்டு, நாட்டியம், இசை, எழுத்து, ஓவியம் போன்ற துறைகளில் உள்ளார்ந்த திறமை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. சிலருக்கே அது அமைகிறது. ஆனால் திறமை இருந்தும் சர்வ நிச்சயமாக அந்தத் துறையில் வெற்றி பெறலாம் என்று உறுதியாகச் சொல்ல முடியாமல் இருப்பதால் பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது. பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே தான் அவர்கள் பிள்ளைகளுக்கு குறிப்பிட்டத் துறையில் திறன் இருந்தும் அதையே முழு நேர தொழிலாக எடுத்துக் கொள்ள விருப்பபடுவதில்லை.

இது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய மன உளைச்சலை தரும் விஷயம். தொழிற்கல்வி படிப்பு தான் சுய முன்னேற்றத்துக்கு உதவும். விளையாட்டு, கலை போன்றவற்றில் அதீத ஈடுபாடு வேலைக்கு ஆகாது என்பதும் எல்லார் மனதிலும் வேரூன்றியுள்ள எண்ணமாகும். ஆனால் தனித்திறன் உள்ள பிள்ளைகளுக்கு இந்த மாதிரி முட்டுக்கட்டை, மிகுந்த மனவருத்தத்தை தரும். அவர்களுடைய இந்தத் தணியாத தாகம் படிப்பில் கவனம் செலுத்தக் கூட தடையாக மாறிவிடும். மேலும் பெற்றோருடன் சண்டை சச்சரவு, காரணமில்லாத விஷயங்களுக்குக் கோபம் போன்றவை தினப்படி நிகழ்வாகிவிடும். பிடிக்காத பாடத்தைப் படிப்பதால் மதிப்பெண் வேறு குறைந்து பெற்றோர்களின் அதிருப்திக்கும் ஆளாகின்றனர். இந்தக் குழந்தைகளில் சிலர் படிப்பில் உண்மையான ஆர்வம் இல்லாமல் dyslexia போன்ற கல்வி கற்பதில் குறைபாடு உள்ளவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்தக் குழந்தைகளுக்கும் கலை, விளையாட்டு போன்றவைகளில் தானாகவே வரும் ஈடுபாடு மாற்றுத் திறனை மேம்படுத்தும். தன்னம்பிக்கையை வளர்க்கும்.  

அதே சமயம் சில பெற்றோர்கள் தரும் ஊக்கம் அபாரமானது. ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்து, அல்லது கூலி வேலை செய்பவரின் பிள்ளையாக பிறந்து விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள் பலர் உள்ளனர். அந்தப் பெற்றோர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி விளையாட்டு பயிற்சிக்கும் கட்டணம் செலுத்தி, பிரத்யேக உடை, காலணி, மற்றும் உபகரணங்கள் வாங்கிக் கொடுத்து ஒலிம்பிக் போட்டிக்கே அனுப்பியுள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் புரிதலை கண்டு பெருமைப் படுகிறேன். 

தன்னுடைய இச்சைக்கு உகந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அதில் தகுந்த வருமானம் வராவிட்டால் மாற்று திட்டம் வைத்திருக்க வேண்டும். வேறு வகையில் வருமானத்தை பெறுக்கிக் கொள்ள வழி தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் வாழ்வில் தோல்வியுற்றவர்களாகத் தான் கருதப் படுவார்கள். அதே சமயம் அவர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் ஈடுபடாவிட்டால் வாழ்வில் முக்கியமான ஒன்றை பறிகொடுத்தவர்களாகவே காலமெல்லாம் வருந்துவர். 

ஒன்று மட்டும் நிச்சயம். நல்ல குரல் வளமும் பாடும் திறனும் உடைய ஒருவர் சங்கீதத் துறையில் பிரகாசிக்க முயற்சி எடுக்கவில்லை என்றால் அது அவருக்கும் இசைக்கும் எவ்வளவு பெரிய இழப்பு! குடும்பத்தினர் ஆதரவு இல்லையெனில் எதுவும் சாதிக்க முடியாது. அதனால் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. பிள்ளையின் திறனை ஆராய்ந்து, சீர் தூக்கிப் பார்த்து, தகுதி இருப்பின் அவரின் விருப்பத்திற்கு தடை செய்யாமலும் இயன்ற உதவிகளையும் செய்து ஊக்கமளிக்க வேண்டும். படித்து பட்டம் பெறுவது தான் வாழ்க்கையில் அந்தஸ்த்தை ஏற்படுத்தும் என்பது எல்லருக்கும் பொருந்தாது. வெற்றி தோல்வியை காலம் நிர்ணயிக்கும். ஆனால் நிச்சயமாக இயற்கையாக அமையபெற்ற திறன் படைத்த பிள்ளைகள் மன நிறைவும் மகிழ்ச்சியும் அனுபவிப்பர்!

10 Comments (+add yours?)

 1. Natarajan
  Mar 08, 2012 @ 18:37:24

  ஆர்ட்ஸ் என்ற போது சில தலைமை ஆசிரியர்களே பெற்றோர்களின் மனதை கலைத்து விடுவதை என் கண்ணாலே கண்டிருக்கிறேன்! 😦

  Reply

 2. amas32
  Mar 09, 2012 @ 01:36:11

  அதே தான் எனக்கும் நடந்தது :)) கல்லோரியிலேயே எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. என் அவளை சரித்திரப் பிரிவில் சேர்க்கிறீர்கள் என்று அந்த கல்லூரியின் HOD கேட்டார்!

  Reply

 3. vedhaLam
  Mar 09, 2012 @ 04:03:59

  நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் இது கிராமப்புற மாணவர்களுக்கு எந்த அளவு பொருந்தும் என்று தெரியவில்லை.உங்கள் மகளுக்காக பல இடங்களில் விசாரித்து நல்ல கல்வியை, விருப்பப்பட்ட கல்வியை கொடுத்தீர்கள். வாழ்த்துகள். ஆனால் கிராமப்புற பெற்றோர் எவ்வளவு பேருக்கு மருத்துவத்தையும்/பொறியியலையும் தவிர வேறு படிப்புகள் குறித்து தெரிந்திருக்கிறது? மேலும் இவை இரண்டிலும் தான் படிப்பு முடிந்ததுமே பணம் ஈட்டும் வாய்ப்பு அதிகம். மிடில் க்ளாஸ் குடும்பங்களில் குழந்தைகளை இப்படிப்புகளில் சேர்ப்பதற்கு இதுவே முதல் காரணம். -இப்படிக்கு எழுத்திலும், வரலாற்றிலும், தமிழிலும் ஆர்வம் கொண்டமென்பொறியாளன்!

  Reply

 4. ipokkiri
  Mar 09, 2012 @ 04:43:41

  Eye-opener. நமது எண்ணத்தை திணிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. சுற்றத்தார் பலர் உங்களையும், உங்கள் மகளை டிஸ்கரேஜ் செய்யும்போது, உங்கள் மனம் பாடுபட்டிருக்கும் அல்லவா?

  Reply

 5. amas32
  Mar 09, 2012 @ 07:41:34

  உண்மை தான் அர்ஜுன். அதையே தான் நானும் குறிப்பிட்டிருக்கிறேன். கிராமங்களை விடுங்கள், நகரங்களிலேயே எவ்வளவு பேருக்கு இந்த மாதிரி முடிவெடுத்து செயல் படுத்த முடிகிறது? ஆனால் அதனால் அந்த மாணவனுக்குள் இருக்கும் கலைஞன் சாகிறான்.

  Reply

 6. amas32
  Mar 09, 2012 @ 07:42:56

  @ipokkiri (Twitter) நன்றி 🙂

  Reply

 7. ப.செல்வக்குமார்
  Mar 09, 2012 @ 07:45:42

  பெரும்பாலும் இன்றைய இந்தியக் கல்விநிலை குறிப்பாக தமிழக கல்விநிலை என்பது பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. ஒருவர் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகவே கருதப்படுகிறார். பொருளாதாரத்தில் சிறந்தநிலை என்பதே வாழ்வியலின் வெற்றி நிலை என்று கருதும் காலம் இருக்கும் வரையிலும் மருத்துவமும், பொறியியலுமே சிறந்த கல்வியாகக் கருதப்படும்.மருத்துவம் மற்றும் பொறியியலை விரும்பிப் படிப்பவர்கள் தவிர :))

  Reply

 8. amas32
  Mar 10, 2012 @ 16:53:09

  Thank you Selvakumar for your valuable comment.amas32

  Reply

 9. Swami
  Mar 12, 2012 @ 09:52:31

  Yours will be one in million case . One just cant resist the temptation of choosing between engg / medicine – more than the interest the illusion of you can earn only if you select those two groups force one to select. . I wish i had the courage to selct the branch of my choice 🙂 . But no regrets now .

  Reply

 10. amas32
  Mar 12, 2012 @ 10:23:34

  Thanks for your comment 🙂

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: