என்னுடைய திருமணம் எண்பத்தி நான்காம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. என் கணவர் அப்பொழுது அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆர்லிங்க்டனில் உள்ள கல்லூரியில் பொறியியலில் முதுகலை பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். மாணவ விசாவில் வந்து திருமணம் செய்து கொண்டால் மனைவியை உடன் அழைத்துச் செல்வது எளிது என்பதினால் ஒரு ஆறு மாதப் படிப்பு இன்னும் இருக்கையில் சென்னை வந்து திருமணம் செய்ய முடிவு செய்தார். எங்களுடையது பெரியவர்கள் பார்த்து நிச்சயித்தத் திருமணம். அவர் வந்த முதல் வாரத்தில் பார்த்த எதுவும் அவர்களுக்குத் தகையவில்லை. இன்னும் ஊருக்குக் கிளம்ப இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் தருவாயில் என்னை பெண் பார்க்க வந்தனர். நாங்கள் ஒரு மணி நேரம் தனிமையில் பேசினோம். எனக்கு எதெது முக்கியம் என்று அவரிடம் சொன்னேன். அறவே பிடிக்காத விஷயங்களை சொன்னேன். முக்கியமாக எனக்கும் அவருக்கும் ஒத்துப் போன கருத்து அமெரிக்காவில் இருந்து சில வருடங்களில் இந்தியா திரும்ப வேண்டும் என்பதே. மே இருபத்தியிரண்டாம் தேதி முடிவு செய்து ஜூன் ஒன்றாம் தேதி எங்கள் திருமணம் நடைபெற்றது! 😉 இப்பொழுது எல்லாம் இது மாதிரி சாத்தியமா என்று தெரியாது.
R2I (Return to India) இந்தியா திரும்பலாமா?
02 May 2012 46 Comments
in Events, Life Thoughts, People, Tamil
ஒரே அறை கொண்ட குடியிருப்பு. மிக மிக சொற்பத் தொகையில் குடும்பம் நடத்தினோம். டெக்ஸாசில் எவ்வளவு முயன்றும் வேலை கிடைக்காததால் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேன் ஹோசே என்ற நகரத்துக்குச் செல்ல தீர்மானித்தோம். கையில் வெறும் நானூறு டாலர்களுடன் மிகப் பழைய காரில் இரண்டு நாள் இடைவிடாது பயணித்து சேன் ஹோசே அடைந்தோம். ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி அவர் வேலை தேட ஆரம்பித்தார். கையிருப்பு இருபது டாலர்கள் இருக்கும்போது அவருக்கு வேலை கிடைத்தது. மேலும் ஒரு மாதம் அவர்கள் வீட்டிலேயே தங்கி, முதல் மாதச் சம்பளம் வந்தவுடன் வாடகை வீட்டிற்கு முன்பணம் கொடுத்துக் குடியேறினோம். எங்களுக்கு உதவிய அந்த உறவினரை எக்காலத்திலும் மறக்க முடியாது. அவர்கள் வீட்டில் இருந்த போது அவர்களின் நண்பர்கள் எங்களுக்கும் நண்பர்கள் ஆனார்கள். அனால் வயதில் எங்களை விட பதினைந்து வயது போல மூத்தவர்கள். அவர்களின் பிள்ளைகள் அங்கேயே வளர்ந்ததால் அவர்களின் பழகும் முறையும் அவர்களின் எண்ணப் போக்கும் எங்களால் நன்குணர முடிந்தது. மேலும் அந்தக் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதப் படிக்க மற்றும் பேச நான் கற்றுக் கொடுத்ததால் அவர்களிடம் நெருங்கிப் பழகும் அனுபவமும் எனக்குக் கிடைத்தது. தேங்காய் வெளியே ப்ரௌன் நிறம், உள்ளே வெள்ளை. இந்தக் குழந்தைகளும் அவ்வாறே. தோலின் நிறம் இந்திய நிறம், எண்ணங்கள் அனைத்தும் வெள்ளையர்கள் போலே. அப்பொழுதே மனத்தில் ஒரு தெளிவு வந்தது, அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தால் நாங்கள் தான் மாற வேண்டும். அங்கு பிறந்து வளரும் குழந்தைகள் கண்டிப்பாக மாறாது.
என் திருமணத்திற்கு முன்பு ஒரு கல்லூரியில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளேன்.அமெரிக்காவில் என் கணவரை சார்ந்த விசாவில் இருந்ததால் என்னால் உடனே பணி புரிய முடியவில்லை. மேலே படிக்கலாம் என்றால் கல்லூரிக் கட்டணம் அதிகமாக இருந்தது. ஒரு வருடம் அந்த ஊரில் குடி இருந்த பிறகு கட்டணம் குறையும். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தான் என்னால் மேல் படிப்புப் படிக்க முடிந்தது. அதில் ஒரு சந்தோஷ நிகழ்வு என்னவென்றால் நானும் என் கணவரும் ஒரே பட்டமளிப்பு விழாவில் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றோம்.
அமெரிக்கா நிச்சயமாக நம்மை சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொடுக்கிறது. நல்ல வேலை கிடைத்த பிறகு அது ஒரு சொர்க்க பூமி தான், திரும்ப வேலை பறிபோகாத வரையில்! நான் அங்குக் கல்லூரியில் படித்த நாட்கள் மறக்க முடியாதவை. பாடத் திட்டமும் பயில்விக்கும் முறையும் இந்திய முறையில் இருந்து மாறுபட்டது. நாம் என்ன பயில்கிறோம் என்பது வகுப்பில் பாடம் கற்பிக்கும் போதே புரிந்தது. ஒரு குழுவின் அங்கத்தினராக இருந்து எப்படி பங்களிப்பது, நடைமுறைக்குத் தேவையான பயிற்சி ஆகியவற்றை இந்த படிப்பு கற்பித்தது.
பலருக்கு நிறைய நெருங்கிய உறவினர்கள் அவர்கள் வசிக்கும் ஊரிலோ அல்லது அருகிலுள்ள உள்ள ஊரிலோ இருந்தால் அவ்வளவாக தாய் மண்ணை விட்டு நெடுந்தூரம் வந்துவிட்டதை நினைத்து வருத்தம் கொள்ள மாட்டார்கள். சிலருக்கு உறவினர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் கிடைக்கும் சௌகர்யங்கள் அதை ஈடு செய்து விடும். எல்லாவற்றையும் விட ஒரு மிகப் பெரிய அனுகூலம் என்னவென்றால் அங்குக் கிடைக்கும் அளவற்ற சுதந்திரம். யாரும் யாருடைய விஷயத்திலும் தலையிடுவதில்லை. பெற்றோர், நெருங்கிய உறவினர்களின் தலியீடு இல்லை. மாசு இல்லாத சூழல். சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்குக் கொடுக்கப் படும் முக்கியத்துவம், அறிவுக்கு முக்கியத்துவம் தரும் அலுவலகச் சூழல், லஞ்சமும் ஊழலும் இல்லாத தினப்படி வாழ்வு, இயற்கை அழகுக் கொஞ்சும் ஊர்கள், சிறிது பணம் சேர்ந்தவுடனே வாகனமும் வீடும் வாங்க முடிகின்ற வாய்ப்பு, இவை அனைத்தும், அங்கு சென்ற பின் ஒருவரை திரும்ப இந்தியா வந்து வாழ வேண்டுமா என்று நினைக்க வைக்கிறது.
முக்கால்வாசி குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் குழந்தை பருவம் முதலே பிள்ளைகள் குழந்தைகள் காப்பகத்தில் வளர்கின்றன. அதனால் அமெரிக்க உணவு மற்றும் அவர்களின் வளர்ப்பு முறையை பின் பற்றி விடுகின்றன. வீட்டுக்கு வந்தால் இந்திய வகை உணவு மற்றும் அவர்களின் தாய் மொழி சிறிது காதில் விழும். பெற்றோர்களும் அவர்களின் கூட வேலை செய்யும் சக அமெரிக்கர்களின் தாக்கத்தினால் அவர்களின் வளர்ப்பு முறையையே பின்பற்றத் துவங்குகின்றனர். Be a Roman in Rome என்பது போல அந்த ஊர் பழக்க வழக்கங்கள் அத்துப்படியாகி அவையே அங்கு வாழும் நம்மவர் பண்பாடாக மாறிவிடுகிறது. அங்கு அனைத்தும் ஒரு ஒழுங்கு/அமைப்பு முறையை கொண்டுள்ளதால் வாழ்க்கை மிக எளிதாக உள்ளது.
ஆனால் உடல் நலம் கெட்டுவிடக் கூடாது. விஞ்ஞான வளர்ச்சியில் முதல் இடம் பெற்ற நாடு. சந்தேகமே இல்லை. ஆனால் அவர்கள் ஒழுங்கு/அமைப்பை எங்கும் கடைபிடிப்பதால் வியாதி கண்டறியும் முறையும் விஸ்த்தாரமானது. மருத்துவரை சந்திக்க நேரம் கிடைக்கவே ஒரு வாரம் ஆகும். பிறகு அவர்கள் சொல்லும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பொறுமையாக முடிவுகள் வரக் காத்திருக்க வேண்டும். பின் ஏதும் கோளாறு இருந்தால் அதன் மோசமான தாக்கங்களை மருத்துவர் முதலில் நம்மிடம் சொல்லிக் கூடியவரை நம்மை நன்றாக பயமுறுத்திப் பின் தாக்கம் கம்மியாக இருப்பின் எப்படி உடல் நலம் சீரடையும் என்றும் சொல்லுவார். அதன்பின் கொடுக்கப் போகும் மருந்தின் பக்க விளைவுகள் அனைத்தையும் சொல்லி நம்மை ஒரு வழிப் பண்ணி பின் மருந்துகளை பரிந்துரைப்பார்.
அப்பொழுது தான் நம் நாட்டின் அருமை நமக்குத் தெரியும். இங்கு மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளைப் பார்த்தவுடன் அது என்ன வியாதி என்று கண்டுப் பிடித்து மருந்துகளைக் கொடுத்து உடனே கட்டுக்குக் கொண்டு வருவர்.
அதே சமயம் மற்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ளச் செய்வர். தொண்ணூறு சதவிகித மருத்துவர்கள் இங்கே நோயாளிகளுக்கு நல்ல வார்த்தைச் சொல்லி உடல் நலம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை ஊட்டி அனுப்புவர்.
அங்கே முடியாமல் இருக்கும் போது ஒரு சுடு தண்ணீரோ காபியோ நாமே தான் போட்டுக் கொள்ள வேண்டும். உற்றார் உறவினரின் பெருமை அப்பொழுது தான் உரைக்கும். ஆனால் நண்பர்கள் உதவி அங்கு அதிகம். குடும்பத்தினர் இல்லாத குறையை அவர்கள் தான் தீர்த்து வைப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட நண்பர்கள் அமைவதும் நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே!
நான் குழந்தைகள் பிறப்பதற்கு முன் முழு நேர வேலைக்குச் சென்றுள்ளேன், மற்றும் தாயாரோ மாமியாரோ எங்களுடன் தங்கிய போது முழு நேர வேலை மேற்கொண்டுள்ளேன். அவர்கள் இல்லாத போது பகுதி நேர வேலைக்குத் தான் போயிருக்கிறேன். அது என் சொந்த விருப்பம். குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் மாலை நேரக் கல்லூரியில் வேலைப் பார்த்தேன். சனி ஞாயிறுகளிலும் வேலைக்குச் செல்வேன். என் கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். என் குழந்தைகள் பள்ளிச் செல்லும் வரை ஆங்கிலம் தெரியாமல் தான் வளர்ந்தார்கள். வீட்டில் பேசும் மொழி தமிழ் மட்டுமே. பள்ளிக்கூடத்தில் சேர்ந்தவுடன் ஆங்கிலம் தெரியாமல் சிறிது சிரமப் பட்டார்கள். ஆனால் ஒரு வாரத்தில் ஆங்கிலம் புரிந்து பேச ஆரம்பித்து விட்டனர். பள்ளியில் குழந்தைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து மாறுபடாமல் இருக்க பெற்றோர்கள் அமெரிக்கக் குழந்தைகள் உண்ணும் மதிய உணவு வகைகளையே டப்பாவில் அடைத்து அனுப்புவர். ஆதலால் இட்லி தோசை போன்ற உணவுகளை குழந்தைகள் பழகாததால் பிற்காலத்திலேயும் அவைகளை விரும்பி உண்ணுவதில்லை. மேகரோனியும் பாலாடைக் கட்டியும், ரொட்டி வெண்ணெய், பர்கர் போன்றவை தான் மதிய உணவாகக்க் கொடுத்தனுப்பப் படும்.
ஒரு சில சமயங்களில் இந்தியக் குழந்தைகள் நம் குழந்தைகளுக்கு நண்பர்களாக அமையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலும் பள்ளித் தோழர்கள் அமெரிக்கக் குழந்தைகளாகத் தான் அமையும். ப்ளே டேட் என்று சொல்லப் படும் விளையாடுவதற்காக இன்னொரு நண்பர் வீட்டுக்குக் குழந்தையை அனுப்பும் போதும் அவர்களின் வீட்டுப் பழக்கங்கள் நம் குழந்தைகளுக்கு பரிச்சியமாகி அது தான் சராசரி வாழ்க்கை நிலை என்று நினைத்துக் கொள்கின்றனர். நம் வீட்டிலோ வேறு சட்ட திட்டங்கள். உதாரணத்திற்கு வீட்டிற்குள் செருப்பு அணிவதில்லை, சுவாமிக்கு விளக்கேற்றி தினம் வழிபடுவோம், சில சம்பிரதாயங்களை கடைபிடிப்போம். இவை அனைத்தும் அங்கு வளரும் நம் குழந்தைகளுக்கு ஏற்புடையதாய் இருப்பதில்லை. ஏன் ஏன் என்று நிறைய கேள்வி கேட்பார்கள், அவர்களை திருப்தி படுத்தும் வகையில் பதில் சொல்லத் தெரிந்தால் நன்று. இல்லையென்றால் நாம் பத்தாம் பசலிகள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேர் விட ஆரம்பித்துவிடும். பின் பதின் பருவத்தில் நாம் சொல்வதற்கெல்லாம் எதிர் வாதம் செய்வது மிக சகஜமாகிவிடும், முக்கியமாக டேட்டிங் விஷயத்தில் அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் விவாதம் நடைபெறும். இங்கு இந்த பிரச்சினைகள் இல்லையா என்று கேட்கலாம். கலாச்சார மாறுதலால் வரும் பிரச்சினைகள் இங்கு இல்லை. எங்கும் உள்ள தலைமுறை இடைவெளியினால் வரும் பிரச்சனைகளை நாம் எங்கிருந்தாலும் சந்திக்கத் தான் வேண்டும்.
என் கணவர் பல நல்ல நிறுவனங்களில் வேலை பார்த்தார். ஆனால் அந்த காலக் கட்டத்தில் ஒரு நிலைக்கு மேல் வெளிநாட்டவருக்குப் பதவி உயர்வு கிடைப்பது அரிதாக இருந்தது. இப்பொழுது நிலைமை மாறியிருக்கலாம். திறமை மிகுந்த அவருக்கு அவர் தகுதிக்கு ஏற்ற உத்தியோக உயர்வு கிடைக்காதது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. இச்சமயத்தில் அவர் வேலை செய்த நிறுவனத்தில் வேலையில் மறுசீரமைப்பு நடைபெற்றதில் அவர் தன் வேலையை இழந்தார். இவர் மிகச் சிறந்த நிர்வாகியாக இருந்தும் இவரை வேலையில் இருந்து எடுத்தது எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தான். நாலு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு, இரண்டு கார்கள் என்று சௌகர்யமான வாழ்க்கை. அனால் எந்தச் சொத்தும் முழுச் சொந்தம் கிடையாது. மாதா மாதம் வீட்டுக்கும், வாகனங்களுக்கும் வாங்கிய வங்கிக் கடனைத் தவறாமல் கட்ட வேண்டும். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் அவருக்கு வேறு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்பொழுது மிகவும் தீவிரமாக இந்தியா திரும்பிப் போவதைப் பற்றி நாங்கள் யோசித்தோம் . அது தொண்ணூற்றி மூன்றாம் வருடம். அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் அவருடைய துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை. அதனால் சிங்கப்பூர் போவதென்று தீர்மானித்தோம். சன் சாப்ட் என்ற நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. அதே சமயத்தில் பே ஏரியாவிலேயே மிக நல்ல நிறுவனத்தில் அதிக சம்பளத்துடம் ஒரு வாய்ப்பும் சேர்ந்தே வந்தது. ஆனால் நாங்கள் தீர்மானமாக சிங்கப்பூர் வாய்ப்பை எடுத்துக் கொள்ள முடிவு செய்தோம். அதற்கு முக்கிய காரணம் எங்கள் குழந்தைகளின் வயது. பெண்ணுக்கு ஆறு, பிள்ளைக்கு நாலு. வேறு ஒரு வாய்ப்பு வரும் போது கிளம்பலாம் என்று முடிவு செய்தால் அவர்கள் இன்னும் வளர்ந்து விடுவார்கள். அங்கு வேரூன்றிவிடுவார்கள். பெயர்த்தெடுத்து வருவது கடினம்.
ஆனால் எங்கள் முடிவு எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த ஊருக்கு வருவதற்கு எல்லோரும் தங்கள் வலது கையைக் கூடக் கொடுப்பார்கள், உங்களுக்கு என்ன பைத்தியமா திரும்பிச் செல்வதற்கு என்று தான் பலர் கேட்டனர். இந்தியாவின் குறைகளை பட்டியலிட்டனர். திரும்பிச் செல்வது முட்டாள் தனம் என்று முகத்துக்கு நேராகச் சொன்னார்கள்.
அவர் சிங்கப்பூர் சென்ற பிறகு குழந்தைகளுடன் தனியாக நாலைந்து மாதங்கள் அங்கு இருந்தேன் ஏனென்றால் என் கல்லூரி வேலையும் என் குழந்தைகளின் பள்ளியாண்டும் முடிய வேண்டி இருந்தது. வீட்டை விற்க முயற்சி செய்து முடியாமல் போய் வாடகைக்கு விட்டு விட்டு தான் கிளம்பினோம். வீடு விற்பனைச் சந்தை ரொம்ப கீழிறங்கி இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து தான் விற்க முடிந்தது.
விமான நிலையத்திற்குக் கிளம்பும் தருணம், எங்கள் நண்பர் வண்டியுடன் வந்துவிட்டார், என் மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டச் செல்லும் போது என் மகள் ஓடிப்போய் அடுப்பு இருக்கும் இடத்தைக் கட்டிக் கொண்டு, இது என் வீடு , என் நாடு, என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லாதே என்று உரக்க அழ ஆரம்பித்து விட்டாள். அந்த வயதிலேயே அந்த மண்ணோடு அவ்வளவு இணைப்பு! இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் அழைத்து வருவது இன்னும் கடினமாகியிருக்கும்.
சிங்கப்பூரில் மூன்று வருடம் இருந்து பின் இந்தியா வந்து சேர்ந்தோம். அதை ஒரு தனிப் பதிவாய் போடும் அளவு அதிலும் கதை உள்ளது 🙂 சிங்கப்பூரில் இருந்து விரைவில் வேலைத் தேடி இந்தியா வரப் பெரும் உந்துதல் என் மகள் தான். ஏனென்றால் அங்கு இருக்கும் இந்தியர்களை வேறுபடுத்தி பார்க்கும் மற்ற இனத்தவரின் பார்வை அவளுக்குப் பிடிக்கவில்லை. எட்டு வயதில் சென்னையில் ஒரு பள்ளியில் சேர்ந்து தாத்தா பாட்டியுடன் தங்கி படிப்பது என்ற முடிவை அவளாக எடுத்து விட்டாள்.
நானும் குழந்தைகளும் சென்னையிலும், என் கணவர் மும்பையிலும் என்று மூன்று வருடங்கள் வாழ்ந்தோம். அதன் பின் தான் அவருக்குச் சென்னையில் வேலைக் கிடைத்தது. சென்னையில் குழந்தைகள் மிக நன்றாக இந்த சூழ்நிலைக்கு ஏற்பஅனுசரித்து வாழப் பழகிக் கொண்டார்கள். பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும் தெருவுக்கு விளையாடச் சென்றால் என் மகன் விளக்கு வைத்த பின் தான் திரும்பி வருவான். அந்த ஒரு மகிழ்ச்சியே போதும் நாங்கள் இந்தியா திரும்பி வந்ததற்கு. என் மாமியார் மாமனார் எங்களுடன் தான் இருந்தார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமைகளில் பால விஹார் அல்லது பால விகாஸ் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்து விடுவது மூலம் நம் கலாச்சாரத்தின் அறிமுகம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு நம் முயற்சி எதுவும் தேவை இல்லாமல் அது தானாக வருகிறது. அங்கு குழந்தைகளுக்குப் பொதுவாகக் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்துவிடுவோம். இங்கு ஒரு பந்தைத் தொலைத்தால் கூட அதற்கு அவர்கள் பொறுப்பாகிறார்கள். மேலும் அவர்கள் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதை சுற்றி இருக்கும் பல இல்லாதவர்களைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். இதெல்லாம் பார்த்துத் தெரிந்து கொள்வது, எந்த வகுப்பும் கற்றுத்தர இயலாது. தீபாவளி, பொங்கல், விநாயகச் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் இன்னும் இங்கே கோலாகலமாகத் தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவையெல்லாம் அங்கு இன்னும் ஒரு சாதா நாளே. பண்டிகை வார நாளில் வந்தால், வார இறுதியில் நண்பர்கள் சேர்ந்து பலவிதமான உணவை உண்டு மகிழும் ஒரு நாளாக, வேறு எந்த கோலாகலமும் இல்லாமலும் பண்டிகையின் முக்கியத்துவமும் உணரப்படாமல் சென்று மறையும் ஒரு நாளாக ஆகிவிடுகிறது.
என்னுடைய குழந்தைகள் இப்பொழுது அங்கே தான் இருக்கிறார்கள். திரும்பி வருவார்களா என்று தெரியாது. மகன் வேலை பார்க்கிறான். மகள் படித்துக் கொண்டு இருக்கிறாள். திரும்பி வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் திரும்பி வருவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளன. அவை நாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நிச்சயமாக நாங்கள் எங்கள் பிள்ளைகளை இங்கே நல்ல முறையில் வளர்க்க முடிந்தது. அவர்களின் உறவினர்களோடு நெருக்கம் ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது. திரும்பி வந்த புதிதில் எங்களுடைய நண்பர்கள் பலர் விடுமுறைக்கு வரும்போது எங்களை சந்தித்து, உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்ற கேட்பார்கள். எவ்வளவு கொசுத் தொல்லை, தெருவெல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது, மழைக் காலத்தில் சாக்கடைத் தண்ணீரும் மழை நீரும் கலந்து தெருவில் கால வைக்க முடிவதில்லை, இந்த சூழ்நிலையில் எப்படி சிரமம் பார்க்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். நாங்கள் திரும்பி வந்த புதிதில் தொலைபேசி தொடர்புக்கும், எரிவாயு தொடர்புக்கும், ரேஷன் கார்டுக்கும், நல்ல பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கும் அலையா அலைந்துள்ளேன். அமெரிக்க வாழ்க்கையை இங்கே எதிர்ப்பார்க்க முடியாது. இந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்ள நினைப்பவர்கள் மட்டுமே திரும்பி வந்து வெற்றி பெற முடியும். இப்பொழுது நம் நாட்டில் கிடைக்காத பொருட்களே இல்லை. நாங்கள் திரும்பி வந்த போது காலையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் கெல்லாக்ஸ் சீரியல் கூட கிடைக்காது. என் கணவர் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது குழந்தைகளுக்கு அதை வாங்கி வருவார் 🙂
விடுமுறைக்கு அங்கிருந்து வரும் NRI பிள்ளைகள் இங்கே வரும்போது ஒரு வெளிநாட்டுக்கு வருவது போல தான் வந்துவிட்டுப் போகிறார்கள். இந்த மண்ணோடு ஒட்டுதல் கிடையாது. நிறைய பிள்ளைகள் பலவித வாக்குறுதிகள் அளிக்கப்பட்டப் பின்னே (லஞ்சம்) இங்கே வந்து, பின் எப்பொழுது திரும்பிப் போவோம் என்று செல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். இன்னும் பெரியவர்கள் ஆன பின்னே அதாவது இருபது முப்பது வயதுக்குப் பின் இங்கே வரவேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. அங்கேயே திருமணம் செய்துகொண்டு விடுகின்றனர். இந்திய வம்சாவளியினராக மருமகனோ மருமகளோ அமைந்தாலே முதல் தலைமுறை பெற்றோர்கள் ஆனந்தம் அடைந்து விடுகின்றனர். வேறு இனத்தவரை மணந்தாலும் அதையும் ஒத்துக்கொண்டுப் போக வேண்டிய சூழ்நிலை தான். இந்த மாதிரி மாறுதலான வாழ்க்கை சம்மதம் என்றால் தொடர்ந்து அங்கு இருப்பதும் மகிழ்ச்சியை தரும்.
ஆனால் அங்கே இருக்கும் work culture, திறமையை ஊக்குவிக்கும் வாய்ப்புகள், தாராள மனப்பான்மை, மக்களிடயே இருக்கும் எதையும் ஒத்துக் கொள்ளும் ஒரு பறந்த மனோபாவம், இத்தகைய குணங்களை நாம் அங்கே போன பின் புரிந்து பாராட்ட ஆரம்பிப்போம். ஏன் நம் நாட்டிலும் அது போல இல்லை என்று நினைக்க வைக்கும். அங்கு சென்று திரும்பியவர்கள் அந்த அனுபவத்தை தங்களால் முடிந்த அளவு இங்கே கொண்டுவர பாடுபட வேண்டும். தாய் நாட்டுக்குத் திரும்பியும் வரவேண்டும் என்பது என் அவா 🙂
May 02, 2012 @ 17:51:36
Have experienced many versions of Infrastructure comparison between the 2 countries from many people.But nice to read an article with a cultural comparison.Generally the NRI community in USA gaze at us through the developement prism. Giving due credit to their infrastructure & developement ,U hav actually reversed the gaze through a cultural prism. Through those little experiences that u hav had with ur kids- u hav cleverly brought out the cultural superiority of India. Thank you for bringing out such an amazing blog.Keep Blogging!!
May 03, 2012 @ 03:25:08
அருமையான பதிவு சிந்தனைகளில் தெளிவும் முதிர்ச்சியும் .பளபளப்பான ஜிகினா வாழ்க்கையை விடுத்து இங்கே வருவதானால் ஆழ்ந்த தொலை நோக்கு பார்வையும் நம் கலாச்சாரத்தின் மீதான ஈடுபாடும் நிச்சயம் வேண்டும்.நிச்சயம் ரசித்தேன்.பதிவை மட்டுமல்ல திட்டமிட்ட உங்கள் வாழ்க்கையையும்.
May 03, 2012 @ 05:14:36
Very nice to know that at 21st century also we are interested to follow our Indian culture. Especially a US returner. I have a question to you mam. Being a good parent u were back from the USA. But what made u to send your son& daughter to work in the same USA?
May 03, 2012 @ 06:18:31
The same reason, I had said in my post. The country has a lot to offer. They have gone there for their education and to gather experience in their fields of work. My daughter is aspiring to be a playwright. Hope they do the same when they become parents 🙂
May 03, 2012 @ 07:31:53
Thank you Subramanayam for such a detailed response. I really appreciate it. Your words are encouraging :-)amas32
May 03, 2012 @ 07:33:14
Thank you Uma for your lovely response 🙂 I am really happy you read my blog and commented as well.amas32
May 04, 2012 @ 02:39:20
அருமையான பதிவு.
May 04, 2012 @ 02:40:49
அருமையான எழுத்து நடை, பக்கிர்த்து கொண்டதுக்கு நன்றி\
May 04, 2012 @ 03:21:07
US(A) !A- Adimai !
May 04, 2012 @ 04:13:48
Excellent post, M’am..Esp. the part you were leaving US was quite moving..
May 04, 2012 @ 05:48:15
நன்றி 🙂
May 04, 2012 @ 05:51:03
Thank you, those living there can relate to that. It was heart wrenching to pry my daughter away from the oven while holding my son in one hand.amas32
May 04, 2012 @ 09:11:34
அருமையான பதிவு.நீங்கள் சொல்லும் விஷயங்களுடன் முழுமையாய் ஒத்துப்போகிறேன்.நாங்கள் இந்தியா திரும்ப முடிவெடுத்ததற்கும் காரணம் இது தான். இங்க இருக்கும் போது என் மகள், தினமும் எங்கயாவது கூட்டிட்டு போங்கன்னு நச்சரிப்பாள்.பின் வேறுவழியில்லாமல் தனியே பொம்மைகளுடன் விளையாட ஆரம்பித்துவிடுவாள்.பார்க்கவே கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இப்போ (மனைவியும்,மகளும் இந்தியாவில்)அவளுக்கு நேரமே போதவில்லை.டான்ஸ் க்ளாஸ்,பாட்டு க்ளாஸ்,நண்பர்கள் என்று முழு நேர பிசி.நீங்கள் சொல்வது போல்,இப்போ இந்தியாவில் கிடைக்காததே இல்லை… கொஞ்சம் பணம் இருந்தால், அதே வெளிநாட்டு வாழ்க்கையை இந்தியாவிலும் வாழலாம். சொந்தங்கள்,குடும்ப நிகழ்ச்சிகள்,பண்டிகைகள்,நண்பர்கள் என்று அந்த சுகமே தனி. வெளிநாட்டில் என்ன தான் நண்பர்கள் இருந்தாலும், ஏதோ ஒன்று குறையும்.இது தற்காலிக நட்பு தான் என்ற எண்ணமே அவர்களுடன் நெருங்கவிடாமல் செய்யும்.
May 04, 2012 @ 09:16:57
அனுபவங்கள் தான் வேறு, நிதர்சனம்
May 04, 2012 @ 09:28:46
முற்றிலும் உண்மை, என்னதான் நண்பர்கள் உதவியை நாடினாலும் அவர்கலும் ஓரளவு தான் உதவ முடியும். Blood is thicker than water. என்னுடைய இரண்டாவது கர்ப்ப காலத்தில் சிக்கல் ஏற்பட்ட போது என் கணவரின் பெற்றோர்கள் கூட இருந்து உதவியது போல வேறு யாராலும் செய்திருக்க முடியாது.
May 04, 2012 @ 09:37:08
அருமையான் அலசல் ! ##ஏன் நம் நாட்டிலும் அது போல இல்லை என்று நினைக்க வைக்கும்.## இந்த ஒரு காரணத்திற்காகவே பலர் திரும்ப வர நினைப்பதில்லை !!
May 04, 2012 @ 09:49:10
……………”அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தால் நாங்கள் மாற வேண்டும். அங்கு பிறந்து வளரும் குழந்தைகள் மாறாது”…………. அதானே அஸ்திவாரத்தை பொறுத்தே கட்டிடமும் நிலைக்கும்..! அருமையான பதிவு அனேகமாக .. சக ட்விட்டரின் வாழ்விலிருந்து இதான் முதன் முறை என நினைக்கேன்..! சூப்பர்.. சொந்த வாழ்க்கையையே சுட்டிக்காட்டி விட்டீர்கள்..! பிள்ளைகளுக்கு அஸ்திவாரமிட்ட பின் நிலைத்து நிற்கவும் கற்று கொடுத்து விட்டீர்கள்..! வாழ்த்துக்கள்…
May 04, 2012 @ 09:49:46
Nice perspective. I didn’t understand your post as if india is culturally superior to other countries. It is about our attitude towards the local culture. It is very difficult to adapt at an age of 25 or 28 ! And the same holds true for the kids. They can’t adapt to some alien culture just because their parents are some other country ! They will not understand deepavalli or pongal ! And even after 10 years, i can’t understand the joy of Santa Claus ! And if we are going to move within the circle of indian friends, their childhood experience would be really limited. And so, the best option is to get them to india before they get to the age and say “NO” ! But now, the situation is different in india too. I don’t know whether kids learn anything from the school about the social situation. They all go to a school where there is no diversity. Let us hope that i underestimate them and they are good enough to understand.
May 04, 2012 @ 10:23:14
வாய்ப்பே இல்லைங்க. அட்டகாசமான பதிவு. ரொம்ப ரொம்ப இயல்பாவும், படிக்கிறதுக்கு இனிமையாகவும் இருக்கு. அமெரிக்க வாழ்க்கையை விரும்பாதவர்கள் இல்லை. அதே சமயம் அதன் சாதக, பாதகங்களையும் போரடிக்காம ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க :))
May 04, 2012 @ 10:41:48
மிகச் சிறந்த பதிவு. ஒரு இருபது முப்பதாண்டுகால நிகழ்வுகளை சுருங்கச் சொல்லியதன் மூலம், அன்றாடப் பிரச்சினைகளில் முகம் தொலைக்கும் மனிதர்களுக்கு வாழ்வை சற்று தள்ளி நின்று பார்க்கச் சொல்லித் தந்துள்ளீர்கள். இதில் வரும் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா ஆகியவற்றையெல்லாம் தாண்டி நம் வாழ்வில் வரும் மாற்றங்களும் அவற்றைக் கையாண்ட விதமும் அருமையாக சொல்லப் பட்டுள்ளது. உங்களது இந்த பதிவைப் படிக்கும் அனைவரும் என்னைப் போலவே, தங்கள் வாழ்வையும் சற்றே திரும்பி பார்ப்பார்கள் என்பதும் அன்றன்றைக்குள்ள பிரச்சினைகளைத் தூசுகளைப் போல் ஊதித் தள்ளி விட்டு முன்னேறிச் செல்வார்கள் என்பது உறுதி. பதிவுக்கு நன்றி.
May 04, 2012 @ 15:10:01
அருமையான பதிவுஇத்தனை பிரச்னைகளின் நடுவிலும் உங்கள் இருவரின் திட்டமிடல் பிரம்மிக்க வைக்கிறது.அமெரிக்க வாழ்க்கையில் எவ்வளவோ உயர்ந்த விஷயங்கள் இருக்கலாம். ஆனால் குடும்பப் பிணைப்பு, வாழ்கக்கையில் ஒட்டுதல், பரஸ்பரப் புரிந்துணர்வு எல்லாம் இருக்காதுசொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா ??
May 04, 2012 @ 15:16:00
நன்றி பிரபா!
May 04, 2012 @ 15:30:58
ஆமாம்! 🙂 பின்னூட்டத்துக்கு நன்றி 🙂
May 04, 2012 @ 15:39:10
I would say India has more to offer to a child's well rounded growth than the US. The children there become really confused by the dichotomy after a few years. First generation parents still live in the past (India) and try to instil some amount of Indianness in the kids.The kids on the other hand learn to ignore the parents after a while because they do not like the constant badgering. No culture is superior or inferior to the other. My point is if you decide to continue living in a foreign land with you being Indian at heart you are bound to face unhappiness in the future. Thank you for your valuable comments 🙂
May 04, 2012 @ 15:40:22
மிக்க நன்றி மகிழ்வரசு 🙂
May 04, 2012 @ 15:41:00
ரொம்ப நன்றிங்க 🙂
May 04, 2012 @ 15:42:12
எவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்க, மிக்க நன்றி 🙂
May 04, 2012 @ 23:23:02
அருமையான பதிவு. ஒரு நிமிடம் கூட சோர்வடைய வைக்காத எழுத்து ஓட்டம். பதிவில் மிகவும் கவர்ந்தது இரண்டு பக்க பலம், பலவீனங்களை சிறந்த முறையில் எடுத்துச் சொன்னீர்கள். வெளிநாட்டிலே வாழ்துவிடுவது தவறா? என்கிற கேள்வி என்னுள் உள்ளது. அதற்கான பதில் ஒரு நீங்க விளக்கம் தான். அதற்கு ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்படி எழுதினால் அந்த பதிவு இதனுடன் நிறைய சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஒரு நல்ல அனுபவப் பகிரு, உள்ளார்ந்த அலசல். அருமை..!!
May 05, 2012 @ 01:02:39
Thank you Naveen. I am glad the post made sense to a lot of people 🙂
May 05, 2012 @ 04:41:56
அருமையான பதிவு ! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !
May 05, 2012 @ 06:51:54
நன்றி சுச்சி 🙂
May 07, 2012 @ 21:48:59
எனக்கும் உள்ளுக்குள் பயம் இருக்கு நீங்க சொன்ன பிறகு ரொம்ப பயம் வந்திடுச்சு அக்கா இருந்தாலும் என்ன செய்வது ( பணம் பணம் பணம் ஆ இருக்கு வாழக்கை) என் மனைவிக்கும் இங்க வேலை வாங்கிடலாம் நு இருந்தேன் இதை படிக்கும் / பார்க்கும் போது என்ன என்ன வோ தோன்று கிறது பார்க்கலாம்
May 08, 2012 @ 11:36:18
Appumahe, Best of luck to you about your future decisions 🙂
May 08, 2012 @ 18:12:47
Though it is not new to me but your sincere feelings and the way you expressed in this blog had touched me. I really appreciate your bold action to come across long years of sufferings and sacrification for the family & children and for our culture.I remember that when my uncle after visiting London, he started affixing “Foreign Return” after his name, which was a practice in those days. But now, a lots of relatives in my family either returned or still living in the foreign soil and have told the same experiences what you had in USA.God Bless You, Your family and Children. Long Live
May 09, 2012 @ 01:22:10
Thank you Mr.Krishnakumar for your thoughtful comment. Such encouraging words! 🙂
May 11, 2012 @ 11:34:16
Great post 🙂 you ve really brought out the in and outs of abroad life 🙂 keep going ..
May 11, 2012 @ 12:04:23
Thank you Guruparan 🙂
May 19, 2012 @ 12:27:01
Interesting and true.
May 19, 2012 @ 13:17:59
Thank you 🙂
Sep 29, 2012 @ 14:19:46
உங்கள் அனுபவத்தை மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
திரும்பி வந்ததற்கு பாராட்டுக்கள்!
நீங்கள் சொல்வதுபோல் அமெரிக்க வாழ்க்கை சொர்க்கமாக இருக்கலாம். ஆனால் பணத்திற்காக அம்மா அப்பாவையும் மறந்து விடுகிறார்களே!
வயதான காலத்தில் அவர்களுக்குத் துணை வேண்டாமா? இவர்களுக்கு வேண்டும்போது அம்மாவோ, மாமியாரோ வர வேண்டும். ஆனால் அவர்களுக்கு வயதாகும்போது எந்தவித உதவியும் செய்ய இவர்களுக்கு மனது இருப்பதில்லை.
வயதானவர்களுக்கு – (இந்திய அம்மா அப்பா)- அமெரிக்காவில் வாழ்க்கை என்பது இல்லை. தங்கச் சிறைச்சாலைதான்!
நிறையச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவருக்கு 3 பெண்கள் ஒரு பிள்ளை. கடைசி பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு வரும். அதனால் திருமணம் செய்யவில்லை. தங்களுக்குப் பிறகு அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் தம்பிக்கே ஒரு பெண்ணைக் கொடுத்தார் அந்த மாமி. இப்போது அம்மா, அப்பா போனபின் தங்கையை அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டுத் திரும்ப அமெரிக்காவுக்கே சென்று விட்டனர் மாமாவும், சொந்த அக்காவும்.
நாளை இதே நிலை அவர்களுக்கு வராதா? அமெரிக்கா போனவுடன் சுய நலமிகளாகி விடுகிறார்களே, ஏன்?
சாரி! மனதில் இருப்பதைக் கொட்டிவிட்டேன்.
Sep 29, 2012 @ 15:01:26
நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பெற்றோர்களைப் பிரிந்து பிள்ளைகள் வேறுநாடுகளில் வசிப்பது அதிகம் ஆகிவிட்டது. அதனால் வரும் துன்பங்களும் அதிகம். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
Dec 19, 2012 @ 03:49:44
சரியான நேரத்தில், twitter’ல் இப்பதிவு படிக்க லிங்க் கொடுத்ததிற்கு நன்றி ங்க amas32. என்னுள் உள்ள பல கேள்விகளுக்கு வெகு அழகா பதில் அளித்துள்ளீர்கள். கண்டிப்பா நாங்கள் எடுக்கும் முடியில் உங்கள் எழுத்துதிற்கு பெரும் பங்கு இருக்கும் என்று நம்புகின்றேன் :).
Dec 19, 2012 @ 05:51:59
I am glad to be of service 🙂
May 04, 2014 @ 04:50:15
நல்லதொரு பதிவு.
May 04, 2014 @ 07:06:03
thank you 🙂