கிருஷ்ணா…

தாய்மையை எதிர்பார்த்துக் கொண்டு.. (மாடல்)

நான் 1992ல் வணிகவியலில் முதுகலை பட்டத்தை சான் ஹோசே மாநிலப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெற்றிகரமாக பெற்றேன். அது ஒரு சாகசம் தான். நான் திரும்ப படிக்கப் போன போது என் மகளுக்கு நான்கு வயது, என் மகனுக்கு இரண்டு வயது. என் மாமியார் மாமனார் கூட இருந்தது எனக்கு பேருதவியாக இருந்தது. நான் மூன்று செமஸ்டர்களில் படித்துப் பட்டம் பெற்றேன் {4.0 GPA – தற்பெருமையில்லை :-)} அறைக்கதவை மூடிக் கொண்டு படிப்பேன். கதவை விடாமல் தட்டிக் கொண்டே இருப்பான் என் மகன். புத்தகங்களை படுக்கைக்கு அடியில் ஒளித்துவைத்து விட்டு என்னை படிக்க விடாமல் அவனுடன் விளையாட வரும்படி செய்வான். ஆனால் இந்தப் பதிவின் பார்வை நான் எப்படி படித்தேன் என்பதை பற்றி அல்ல. என்னுடைய நண்பன் கிருஷ்ணாவைப் பற்றியது.

அவனை நினைவு கூர்ந்து நான் எழுதும் ஒரு நினைவுப் பதிவு இது. கிருஷ்ணாவும் நான் படித்த சமயத்தில் அதே கல்லூரியில் அதே பட்டப்படிப்பை தான் படித்துக் கொண்டிருந்தான். என்னுடைய வகுப்புகள் மாலை ஆறிலிருந்து ஒன்பது வரை. கல்லூரி வகுப்பு அறைகள் அருகில் கார் நிறுத்தம் கிடையாது. சிறிது தொலைவில் தெருவில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும். நான் முதல் செமஸ்டரில் இருக்கும் பொழுது கிருஷ்ணா கடைசி செமஸ்டரில் இருந்தான். நாங்கள் இருவரும் வேறு வேறு வகுப்புகள். ஆனால் வகுப்பு முடிந்ததும் என்னுடன் என் கார் நிறுத்தம் வரை நடந்து வந்து நான் காரை கிளப்பும் வரை இருந்து பின் அவன் பேருந்து பிடித்து செல்வான். என் மேல் அவ்வளவு அக்கறை. அந்த தெருக்களில் விளக்கு வெளிச்சம் ரொம்ப இருக்காது. எங்கள் வீடுகள் வேறு வேறு திசையில் இருந்தன. என் தோழியின் தம்பி அவன்.

அதிர்ந்து பேச மாட்டான். அவன் அக்கா ஸ்பான்சர் செய்து கிரீன் கார்டுடனே அவன் அமேரிக்கா வந்திருந்தான். படிப்பு முடிக்கும் தருவாயிலேயே நல்ல வேலை கிடைத்து பின் சென்னை சென்று அழகிய பெண்ணையும் மணம் முடித்து வந்தான். நாங்கள் சிங்கப்பூர் போவது என்று முடிவான பிறகு எங்களுடைய பர்னிச்சர்களை கிருஷ்ணாவும் அவன் மனைவியும் வாங்கிக் கொண்டார்கள். அப்பொழுது தான் அவர்கள் வீடு செட் அப் பண்ணிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சிங்கப்பூர் கிளம்பும் பொழுது அவர்கள் மகிழ்ச்சியுடன் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிற்கும் நற்செய்தியை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர் 🙂

ஆறு மாதங்கள் கழித்து சான் ஹோசேயில் இருந்து தொலைபேசி மூலம் ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. கிருஷ்ணா நீச்சல் குளத்தில் முழுகி இறந்துவிட்டான் என்பது தான் அது. இந்த சம்பவம் நடந்த அன்று மதியம் கணவனும் மனைவியும் நண்பர் ஒருவரின் சீமந்தத்திற்கு சென்று திரும்பியுள்ளனர். கிருஷ்ணா சீமந்தத்திலும் சரியாக சாப்பிடவில்லையாம். வீடு திரும்பியதும் ரொம்ப ஹெவியாக இருப்பதாக மனைவியிடம் சொல்லிவிட்டு அவர்கள் இருந்த குடியிருப்பின் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து விட்டு வருவதாகச் சொல்லி கீழே போயிருக்கிறான். நீச்சல் அடிப்பதால் உடல் சுறுசுறுப்பு அடையும் என்ற எண்ணத்தில் நீச்சல் அடிக்க போயிருக்கிறான். சில நிமிடங்களிலேயே அவன் உடல் நீச்சல் குளத்தில் மிதப்பதைப் பார்த்த வேறு ஒரு வீட்டுக்காரர் ஆம்புலன்சுக்கு போன் பண்ணியுள்ளார். மதிய வேளை, வார நாள், ஆதலால் நீச்சல் குளத்தில் அவன் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கே  யாரும் இல்லை. கடைசி நிமிடங்களில் என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. நன்றாக நீச்சல் அடிக்கக் கூடியவன் தான் அவன். அவன் மனைவிக்கு இன்னும் இரண்டே வாரங்களில் குழந்தை பிறக்கும் நிலைமையில் இந்த விபரீதம்!

அவன் இறப்பதற்கு ஒரு மாதம் முன் அவன் தன் மனைவியிடம் கம்பெனியில் இன்டர்னல் ஆடிட் செய்யும் பொழுது தன்னுடன் வேலை பார்ப்பவன் பணம் கையாடல் பண்ணியிருப்பது தெரிய வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறான். உடனே மேலதிகாரிக்கு தகவல் சொல்ல நினைத்த பொழுது, அந்த ஆள் இவனிடம் தான் எப்படியும் பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும், சிறிது கால அவகாசம் தரும்படி கெஞ்சியிருக்கிறான். ஒரு அமெரிக்கன் இந்த சூழ்நிலையில் இவ்வாறு நடந்துகொண்டிருப்பானா என்பது சந்தேகம் அனால் கிருஷ்ணா அவனுக்குக் கால அவகாசம் கொடுத்திருக்கிறான். மிகவும் இரக்க சுபாவம் அவனுக்கு. அனால் நாட்கள் சென்று கொண்டே இருந்ததே தவிர அவனிடம் இருந்து பணம் வரவில்லை. மேலதிகாரியிடம் சொல்லிவிடுவது என்று தீர்மானித்த அன்று அவன் மேலதிகாரி லீவு போட்டிருந்திருக்கிறார். அன்று இந்த ஆளும் அவன் அறைக்கு வந்து நீ மேலதிகாரியிடம் சொல்லிக்கொள், என்னால் பணம் புரட்ட முடியவில்லை, விளைவுகளை சந்திக்க நான் தயார் என்று கூறியிருக்கிறான். அறைக்கு வரும்பொழுதே ஒரு க்ளாசில் கோலா பானம் கிருஷ்ணாவிற்கு கொண்டு வந்திருக்கிறான். கிருஷ்ணா வேண்டாம் என்று மறுத்தும், நீ சாப்பிட்டால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று கூறியுள்ளான். அவன் அரபு நாட்டைச் சேர்ந்தவன். அவன் தொந்தரவு தாள முடியாமல் அதை குடித்திருக்கிறான். அந்த கோலா பானம் கேனிலோ அல்லது பாட்டிலிலோ அவன் கொண்டு வந்து கொடுக்கவில்லை, ஒரு க்ளாசில் கொட்டி எடுத்து வந்து கொடுத்திருக்கிறான். நண்பர் வீட்டு விசேஷத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் அவனிடம் பேசிய உடனே வீட்டிற்கு கிளம்பியிருக்கிறான். வீடு வந்தவுடனே தன் மனைவியிடம் நடந்ததை சொல்லியிருக்கிறான். மேலும் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவன் உடல் நிலை சரியில்லாமலும் இருந்திருக்கிறது.

விசாரணைக்கு வந்த போலீசாரிடம் மனைவி இந்த அலுவலக விவரங்களை சொல்லியிருக்கிறார். சகோதரியும் அவன் நன்றாக நீச்சல் அடிக்கக் கூடியவன் ஒரு சின்ன நீச்சல் குளத்தில் முழுக வாய்ப்பில்லை என்றும் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் போஸ்ட்மார்டம் அறிக்கையில் உடலில் விஷம் இருந்ததற்கான அறிகுறி ஏதும் இல்லாததால் அது விபத்தால் நிகழ்ந்த மரணம் என்று போலீசார் கேசை மூடிவிட்டனர்.

கிருஷ்ணாவின் மனைவியின் சோக நிலையை நீங்கள் புரிந்து கொண்டிருக்க முடியும். அவளுக்கு வாழவே விருப்பமில்லை. அவள் இடுப்பு வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன் அவளை நானும் என் கணவரும் சந்தித்து ஆறுதல் சொன்னோம். பிரசவ வேளையின் போது அவள் சிறிதும் ஒத்துழைக்கவில்லை. உடலில் திராணியே இல்லை. அவள் நாத்தனாரும் இன்னொரு நெருங்கிய தோழியும் தான் பிரசவ நேரத்தில் கூடவே இருந்து தைரியம் அளித்து சுகப் பிரசவத்திற்கு வழி செய்தார்கள். கிருஷ்ணாவின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. (அமெரிக்காவில் ஸ்கான் பண்ணும் பொழுதே குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவில்லை.) பெண் பிறந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று  குழந்தைக்கு கிருஷ்ணா தேர்ந்து எடுத்து வைத்த பெயரையே அவள் வைத்தாள்.

மருமகனின் காரியத்துக்கு வந்த கிருஷ்ணாவின் மனைவியின் பெற்றோர்களில், தந்தை ஏதோ அவசர வேலை நிமித்தமாக உடனே கிளம்பிவிட்டார். தாய் மட்டும் மகளுக்கு துணையாக தங்கிவிட்டார். சென்னை திரும்பிய மாமனார் அவர் நண்பரின் வற்புறுத்தலின் பேரில் உடனே வேலூர் சென்று அங்கு ஆவியுடன் பேசும் ஒருவரை சந்தித்து இருக்கிறார். அவர் மகளுக்கு நேர்ந்த பேரிழப்பு அவரை மிகவும் பாதித்து இருந்தது. அதைவிட அவர் மருமகனின் மரணத்தில் அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அதனால் அவர் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். கிருஷ்ணாவின் ஆவியே அந்த நபரின் உடலில் வந்ததாக கிருஷ்ணாவின் மாமனார் என்னிடம் கூறினார். கிருஷ்ணாவின் ஆவி தனக்கு நீச்சல் குளத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின் மரணம் சம்பவித்ததாகவும் கூறினானாம். மேலும் கண்டிப்பாக அவனுடன் வேலை செய்தவன் கொடுத்த பானத்தில் எதொ மருந்து கலந்திருக்க வேண்டும். அதை குடித்த பிறகு தான், அவன் நிலை கொள்ளாமல் தவித்ததாகவும் ஆவி வடிவில் இருந்த கிருஷ்ணா கூறினானாம். கிருஷ்ணாவின் மாமனார் வேலூர் சென்றபோது அவர் மகளுக்கு குழந்தை பிறந்திருக்கவில்லை. ஆனால் கிருஷ்ணாவின் ஆவி தனக்கு மகள் தான் பிறப்பாள் என்றும் சொல்லி, தன் மனைவிக்கு மறு கல்யாணம் செய்து வைக்கும்படி மாமனாரிடம் கேட்டுக் கொண்டானாம்.

இந்த தகவல் அனைத்தையும் அமெரிக்காவில் இருக்கும் மகளுக்கு அவர் தெரியப் படுத்தினார். ஆனால் அங்கு இருந்த அவள் உறவினர்களும் நண்பர்களும் போலீசிடம் இந்த மாதிரி தகவல்களைக் கொடுத்தால் எந்த பயனும் இருக்காது என்று சொல்லி அவளை மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்க விடாமல் தடுத்துவிட்டனர்.

இந்தியா திரும்பி வந்து சில வருடங்களில் மறுமணம் புரிந்து கொண்டாள். இன்றும் தன் முதல் கணவன் மரணம் இயற்கையானதல்ல என்று தான் எண்ணுகிறாள்.

கிருஷ்ணாவை நினைக்கும் போதெல்லாம் அவனின் சிரித்த முகமும் நல்ல உள்ளமும் தான் என் நினைவுக்கு வருகிறது. விதி வலியதுதானோ?

12 Comments (+add yours?)

 1. abi
  Oct 10, 2012 @ 11:31:22

  படித்தேன்.கிருஷ்ணன் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது.ஒரு அரேபியனுக்கு அமேரிக்க போலீசார்,ஏன் துணை போக வேண்டும் என எனக்கு புரிபடவில்லை.நம்மை சுற்றி நடக்கும் மரணங்களின் வழியே தான் அதன் வலியை நாம் உணரவேண்டியிருக்கிறது. 😦 .இருப்பினும் இறுதி பக்கங்களில் வரும் பேய்,ஆவி போன்றவற்றில் அணு அளவும் நம்பிக்கையில்லை. கிருஷ்ணா அவர்களின் மகன் இப்போது என்ன செய்கிறார்?

  Reply

  • amas32
   Oct 10, 2012 @ 12:20:25

   எனக்கும் நம்பிக்கை இல்லை தான். நடந்ததை எழுதியிருக்கிறேன். யாரோ சொல்லி கெட்டு எழுதவில்லை. கிருஷ்ணாவின் மாமனார் என்னிடம் சொல்லியதை பகிர்ந்துள்ளேன். அவரும் அன்றைய பொழுதில் ஆடித் தான் போய் விட்டார்.

   Reply

 2. ILA (a)இளா
  Oct 10, 2012 @ 14:14:34

  எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. மறுமணம் செய்துகொண்டாள் என்றதும்தான் பெரு மூச்சே வந்தது. பிரசவ நேரத்தில் நடந்த அசம்பாவிதம் , என்னால் மறக்கவே முடியாத மாதிரி செய்துவிட்டது.

  Reply

  • amas32
   Oct 10, 2012 @ 14:17:11

   ஆமாம். ரொம்ப சோகம். அவளின் துன்பத்தை அந்த நேரத்தில் அளவிட முடியாது. நல்ல அன்யோன்யமான தம்பதிகள் வேற.

   Reply

 3. P. Magendran
  Oct 11, 2012 @ 01:51:06

  கேள்விகளை வைத்துகொண்டு தேடப்படும் பதில்களால்தான் நகர்கிறது வாழ்க்கை சிலவேளைகளில் இதுமாதிரி கனமாகவும் 😦

  Reply

 4. ரைட்டர் நட்டு (@NattAnu)
  Oct 11, 2012 @ 02:20:56

  Truth is stranger than fiction என்பது தான் உடனே தோன்றியது. எனக்கு ஆவிகளில் நம்பிக்கை உண்டு, அல்லது நம்புவது வசதியாக இருக்கிறது என கூறலாம். சும்மாவே சந்தேகப்படும் அமெரிக்க போலீஸ் அந்த அரேபியனை கொஞ்சம் ஈசியாக விட்டுவிட்டதுதான் உறுத்துகிறது.

  1,2 எழுத்துப்பிழைகள் இருக்கு, முடிஞ்சா பாருங்க..

  Reply

 5. யமுனா
  Oct 11, 2012 @ 04:11:20

  என்ன சொல்வதென்று தெரியவில்லை.. நானும் என் நண்பனை விபத்தில் இழந்திருக்கிறேன்.. உங்கள் வலி புரிகிறது..

  அருமையான பதிவு!

  Reply

 6. Arivukkarasu K (@arivukkarasu)
  Oct 11, 2012 @ 04:15:40

  மறுமணம் செய்தாலும், <> ….. இது வாழ்நாள் முழுதும் நினைவை விட்டுப் போகாது என்னும்போது மனம் கவலை கொள்கிறது … 😦

  Reply

 7. திண்டுக்கல் தனபாலன்
  Oct 12, 2012 @ 06:53:11

  பகிர்வு வருத்தப்பட வைக்கிறது…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்…

  நன்றி…

  Reply

 8. ranjani135
  Oct 12, 2012 @ 07:15:23

  அன்புள்ள திருமதி சுஷீமா,
  உங்களின் சில பதிவுகளை இன்றைய வலைசரத்தில் பரிந்து கொண்டு இருக்கிறேன்.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html

  வருகை தருக, ப்ளீஸ்

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: