லக்ஷ்மி இராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு நல்ல படம். எப்படி இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஒரு பெண் இயக்குனரால் நன்றாகக் கையாளப்பட்டதோ அதே போல இவரும் ஒரு கஷ்டமான சப்ஜெக்டை திறமையாகக் கையாண்டுள்ளார். கௌரி ஷிண்டேக்கு முதல் படம் ஹிட்! அதே போல லக்ஷ்மி இராமகிருஷ்ணனுக்கும் இந்த படம் ஒரு சிறந்த பாராட்டுதலை பெற்று தரும் 🙂
சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரின் நடிப்பு பிரமாதம். அவர் வயதுக்கு ஏற்ற பாத்திரம். அவர் குடித்தனம் இருக்கும் வீடு, அந்த ஏழ்மையான சூழலில் உதவிக்கரம் நீட்டும் வீட்டுக்கு சொந்தக்காரர்களான பாய், பாயம்மா, இவர்களின் மனிதாபிமானம், விளையாட்டுத் தனமான் பிள்ளை, பொறுப்பான மகள், மனைவியை புரிந்துகொள்ளாமல் விட்டுப் போன கணவன், அவனின் மனிதநேயம் மிக்க இரண்டாம் மனைவி, ஒரு மனவளர்ச்சிக் குன்றிய எளியவன் – அனைத்துப் பாத்திரப் படைப்புகளும் கொஞ்சம் கூட மிகை இல்லாமலும் கதைக்கு பலமாகவும் அமைத்திருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.
மேல் தட்டு வாழ்க்கையையும் நன்கு சித்தரித்து உள்ளார். வழக்கு எண் 18/9 படத்தில் பணக்காரர்களை கெட்டவர்களாகவும் ஏழைகளை நல்லவர்களாகவும் காட்டியிருந்ததாக ஒரு குற்றச் சாட்டு இருந்தது. அது மாதிரி இல்லாமல் மேல் தட்டு மனிதராக இருந்தாலும் இயல்பாக ஒருவர் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வாரோ அவ்வாறே காட்டியிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது.
Bi-polar Disorder என்ற நோயைப் பற்றி மூணு படத்தில் சிறிது பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் மிகவும் சிறந்த முறையில் கதையோடு விளக்கப் பட்டிருக்கிறது. ஏதோ documentary போல இல்லை. படத்தோடு ஒன்றி போய்விடுகிறோம். கடைசியில் மருத்துவர் விளக்குவதை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வைத்திருந்தால் நம் தமிழ் ஆடியன்சுக்கு இன்னும் சிறப்பாகப் புரிந்திருக்கும். கதையின் நோக்கமே மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது தானே!
பின்னணி இசையும் பாடல்களும் என்னை ஈர்க்கவில்லை. அதே போல ஜெயபிரகாஷ், கவிதாலயா கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் எதற்காக? அவசியமே இல்லை. Flashbackகாகவும் தற்போது நடைபெறும் நிகழ்சிகளாகவும் காட்டியிருந்தும் குழப்பம் இல்லாமல் நகர்கிறது திரைக்கதை. அதற்கு எடிட்டருக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் படத்தின் நேரம் தொண்ணூறு நிமிடங்கள் தான். சுருங்கச் சொல்லியிருப்பது அழகு 🙂
நோயைக் காட்டி பயங்காட்டாமல் நல்ல முறையில் திரைக்கதை அமைத்ததற்கு லக்ஷ்மி இராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள்! கன்னி முயற்சியில் சிக்சர் ஸ்கோர் பண்ணியுள்ளார், வாழ்த்துகள்!
Oct 29, 2012 @ 03:02:33
சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி…
படம் பார்க்க வேண்டும்…
Oct 29, 2012 @ 03:03:22
Thank you 🙂
Oct 30, 2012 @ 02:16:20
Thanks a lot , encouraged to do more now. When you, as audience have noticed the nuances in the film , i feel great pleasure and sense of satisfaction. I will strive to do better next time…
Oct 30, 2012 @ 02:38:49
Thank you, it was great watching a good film 🙂