வத்திக்குச்சி – திரை விமர்சனம்

Anjali in Vathikuchi

Anjali in Vathikuchi

தற்போது ஒரு படத்திற்கு இருபது கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர் A.R.முருகதாசின் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம். கூடுதல் தகவல் தன் தம்பியையே ஹீரோவாகவும் நடிக்கவைத்துள்ளார். பெயர் திலீபன். படத்தின் இயக்குனரும் புதுமுகம், பெயர் கின்ஸ்லின். இசை சர சர சாரக் காத்து பேம் ஜிப்ரான். இதைத் தவிர கண்ணுக்குக் குளிர்ச்சியாக அஞ்சலி வந்து போகிறார். சரண்யா, ஜெயப்ரகாஷ் போன்றோர் படத்திற்கு பிராண வாயுவை அளிக்கிறார்கள்.

சுவாரசியமாக படம் ஆரம்பிக்கிறது. இப்போ எல்லாம் திரைப்படங்களில் புது இயக்குனர்கள் யதார்த்தத்தை பதார்த்தமாகப் பரிமாறுவதால் கீழ் தட்டு மக்களின் சூழ்நிலைகளை மிகவும் அழகாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குனர். படத்தில் காதல் தொட்டுக்க ஊறுகாய் மாதிரி தான். மெயின் சாப்பாடு ஹீரோ அவனை சுற்றி வரும் பலமான எதிர்ப்புக்களை எப்படி முறியடிக்கிறான் என்பது தான். ஆதலால் அடிதடி அமர்க்களம் நிறைய. சந்தர்ப்பவசத்தால் தவறை தட்டிக்கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதன் பின் பல விஷயங்களில் அது போல செயல் பட்டு, அவனுக்குத் தெரியாமலேயே பல எதிரிகள் உருவாக்கிவிடுகிறான். அவர்கள்  அவனை அழிக்க நினைக்கின்றனர். அவர்களை எப்படி எதிர்த்து வெற்றி பெறுகிறான் என்பதே கதை.

எப்பவும் சொல்லப்படும் கதையில் சில புதுமைகளை புகுத்தி வெற்றிப் படமாக தர இயக்குனர் முயன்று இருக்கிறார். பாதி வெற்றி தான் கிடைத்துள்ளது. ஆங்காங்கே கதையில் தொய்வு. கதை நிற்பதே ஹீரோ ஒருவனே அனைவரையும் அடித்து த்வம்சம் செய்யும் ஆற்றல் உடையவன் என்ற அஸ்திவாரத்தில் தான். ஹீரோ அதற்கான பயிற்சி எடுத்துக் கொள்வதாகக் காண்பித்தாலும் கதை அந்த அனுமானத்தின் மேல் உட்காருவதால் படம் ஆட்டம் காண்கிறது.

திலீபன் முதல் படத்திற்கு நன்றாக நடித்துள்ளார். அழகெல்லாம் கிடையாது. ஆனால் ஆணுக்கு எதற்கு அழகு? பாடல் மற்றும் பின்னணி இசை வாகை சூட வா அளவு எல்லாம் இல்லை. இமொஷனால் மேலோட்ராமா கிடையாது. அஞ்சலியின் அம்மாவே அந்த பையன் நல்ல பையன் தான் அவனையே லவ் பண்ணு என்று எந்த சச்பென்சும் வைக்காமல் பச்சை கொடி காட்டிவிடுகிறாள். சின்ன பட்ஜெட் படம். வத்திக்குச்சி ஒரு டைம் பாஸ்.

vathikuchi1

கை போ சே – திரை விமர்சனம்!

Kai Po Che

Kai Po Che

கொபசெ- (கொள்கை பரப்பு செயலாளர்) மாதிரி படம் பெயர். Chetan Bhagath எழுதிய The Three Mistakes Of My Life கதையைத் தழுவி எடுக்கப் பட்டிருக்கும் திரைப்படம்.

மூன்று நண்பர்கள், ஒவ்வொருவரும் ஒரு விதம். இவர்கள் இணைந்து ஒரு விளையாட்டுச் சாதனங்கள் விற்கும் கடையை திறக்கிறார்கள். கதைக் களம் அஹமதாபாத், இந்து முஸ்லிம் சச்சரவுகள், பூஜ் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு, இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் வேகம், பொறுமையின்மை அனைத்தும் சரியான முறையில் காட்டப்படுகிறது. முக்கியமாக விஸ்வரூபத்திற்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட தடையும் பின் போராட்டங்களும் இந்தப் படத்திற்கு இல்லாதது பாராட்டுக்குரியது. ஏனென்றால் நேரடியாக கோத்ரா புகைவண்டி எரிப்பும் அதன் பின் தீவிரவாத இந்துக்கள் எழுப்பும் வெறி தாக்குதலும் அப்படியே பதிவு பண்ணியிருக்கிறார்கள்.

இதில் மூன்று நண்பர்களில் ஒருவனுக்கு (கோவிந்த்)வியாபார முன்னேற்றமே குறி, அடுத்தவனுக்கு (இஷான்) அலி என்ற முஸ்லிம் சிறுவனுக்கு கிரிக்கெட் ஆடுவதில் உள்ள தனித் திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்பது ஒன்றே குறிக்கோள். அடுத்த நண்பன் (ஓமி) தன் விருப்பத்துக்கு மாறாக அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிர்பந்தம்.

முதல் பாதி சிறிது மெதுவாகவே நகர்கிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது. இஷானின் தங்கை படத்தின் நாயகி. கற்பனைக் கதையை ஏதோ உண்மை கதையைப் பார்ப்பது போன்ற தோற்றத்தை இயக்குனர் அபிஷேக் கபூர் ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி வாழ்க்கையை தடம் புரண்டு ஓடச் செய்கின்றன என்பதே படத்தின் ஒன் லைன்!

பின்னணி இசை மற்றும் பாடல்கள் நன்றாக உள்ளன. வன்முறை ரொம்ப இல்லை. சிறந்த குடும்ப சித்திரம். நான் வியாழக்கிழமை சத்தியம் திரை அரங்கில் பார்த்ததால் சப் டைட்டிலுடன் பார்த்து இந்தி வசனத்தை புரிந்துகொள்ள முடிந்தது. இந்தி தெரியாதவர்கள் வியாழன் அன்று சென்று பார்க்கலாம்.

என்னை இந்தப் படத்தில் கவர்ந்தது படத்தில் இழையோடியிருக்கும் ஒரு தேசிய உணர்வு. அன்புக்கும் பாசத்துக்கும் அனைத்து வேற்றுமைகளையும் வெல்லும் சக்தி உண்டு.

Indian Flag

Indian Flag