கதை என்ன என்று ஓரளவு தெரிந்து தான் படம் பார்க்கப் போனேன். Traffic என்று மலையாளத்தில் வந்த படத்தின் தமிழ் ரீமேக். மூளை இறந்த ஒருவரின் இதயத்தை இன்னொரு மாற்று இதயம் தேவையான நோயாளியிடம் மிக விரைவாகச் சென்று சேர்ப்பிக்க வேண்டும். அது தான் கதை.
நல்ல ஒரு கதைக் கரு. இதில் முக்கியமாக இதயத்தை அல்லது வேறு ஒரு உறுப்பை எப்படி ஒரு உயிர் பிழைக்க முடியாத ஒருவரின் குடும்பத்தின் ஒப்புதலோடுப் பெறுவது, அவர்களின் உணர்வுகள், அதை பெறுபவரின் உணர்வுகள் இவற்றை போகஸ் செய்திருந்து படத்தை எடுத்திருந்தால் படம் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.
கோடம்பாக்கமே இருக்கிறது படத்தில். ஏன் என்று தான் தெரியவில்லை. அனாவசியமாக நடிகர்களுக்காக கதை எழுதப்பட்டிருக்கிறது. கதைக்காக நடிகர்கள் இல்லை. மேலும் ஒரு பாத்திர அமைப்புக் கூட முழுமையாக இல்லை, சிறப்பாகவும் இல்லை. பிரகாஷ் ராஜ் ஒரு சுநலம் மிக்க நடிகர் என்பது கதைக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. அக்கறையுள்ள தாயாக ராதிகாவும் மகளின் கடைசி தருணங்கள் என்று நினைக்கும் நேரத்திலும் குழந்தையுடன் இல்லாமல் கணவனுடன் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார். படத்தில் மகா கேவலமான ஒரு ட்விஸ்ட் பிரசன்னவால் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு மருத்துவருக்கான உடல் மொழியே பிரசன்னாவிடம் இல்லை. அவர் ஒரு டாக்டராம்!உயிர்ப்புள்ள சம்பங்களுக்காப் பஞ்சம்? உண்மையில் நடந்த சம்பவங்களைக் காட்டியிருந்தாலே படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
இதில் ஒரே ஆறுதல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயப்ரகாஷின் நடிப்பு. ஆனாலும் அவர்களின் பாத்திரப் படைப்பு இன்கம்ப்ளீட். அந்த விபத்து நடப்பதற்கு முன் இன்னும் சஸ்பென்சோடு கதையை நகர்த்தியிருக்கலாம். ஒரு குட்டி சீனில் விஜயகுமார். சரத் குமார் தான் டிராபிக் போலிஸ் கமிஷனராக வருகிறார். படம் அவர் படம். நன்றாக நடித்திருக்கிறார். அனால் எடிட்டிங் சரியில்லையா, வசனம் சரியில்லையா, இல்லை திரைக்கதை சரியில்லையா, இல்லை ஒட்டு மொத்தமாக எல்லாமே சரியில்லையா என்று என்னால் சரியாக சுட்டிக் காட்ட முடியவில்லை. அதனால் சரத் குமாரும் சோபிக்கவில்லை.
Wait, I have kept the best #FacePalm for the last. #சூர்யா. கடவுளே! அவர் அவராகவே வருகிறார். அதுதான் ஆகச்சிறந்த கொடுமை. கடைசி கட்டத்தில் நெருக்கமாக வீடுகள் உள்ள காலனியில் டிராபிக்கை விலக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதற்கு அவர் அங்கு உள்ள அவர் ரசிகர்களுக்கு தொலைக் காட்சி மற்றும் வானொலி மூலம் அறிக்கை விடுகிறார். மக்களும் அவர் பேச்சைக் கேட்டு பர பரவென்று தீயாய் வேலை செய்து வழித் தடத்தை சரி செய்து இதயம் கொண்டு செல்லும் வண்டியை விரைவில் செல்ல வழிவகுக்கின்றனர். அதற்கு பிறகு அவர் உறுப்பு தானம் செய்ய சொல்லி ஒரு ஸ்பீச். உண்மையாகவே கேட்கிறேன் இவர் என்ன பெரிய அப்பாடக்கரா? அவர் பேச்சும் செய்கையும் மிகவும் செயற்கையாகவும் எரிச்சலையூட்டுவதுமாக உள்ளது.
இந்தப் படத்தில் சேரனும் இருக்கிறார். முக்கிய பத்திரத்தில் வருகிறார். அவர் தான் வாகன ஒட்டி. அவர் பாத்திரப் படைப்பு மட்டுமே செயற்கைத் தனம் இல்லாது உள்ளது. விபத்து விளைவித்த பெண் காவல் நிலையத்தில் வந்து தகவல் சொல்கிறாள். பிறகு என்ன ஆச்சு என்பது நம் ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது. பிரசன்னா ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் திரும்பவும் அவரை வண்டியில் சேரன ஏன் ஏற்றிக் கொள்கிறார் என்பது கடைசி வரை விடுவிக்கப் படாத ஒரு புதிர். வேலூர் மருத்துவமனையில் ராதிகா கையில் க்ளோபல் மருத்துவமனையின் பைல் உள்ளது. அஸிஸ்டன்ட் டைரக்டரும் சரியில்லை!
படம் பார்த்து திட்டுவதே என் வேலை என்று நினைத்து விடாதீர்கள். நல்ல படம் வந்தால் நிச்சயம் நல்ல விமர்சனம் எழுதுவேன். அடுத்து சேட்டை பார்க்கப் போகிறேன். படம் நன்றாக இருந்தால் விமர்சனம் உண்டு. இல்லையேல் கிடையாது 🙂