ஶ்ரீனிவாசர் திருமலை வந்த கதை

lord

அதாகப்பட்டது, கதை வராஹ அவதாரத்தில் இருந்து தொடங்குகிறது. திருமால் வராஹ அவதரம் எடுத்து பூமாதேவியை பாதாள லோகத்தில் இருந்து மீட்டு பின் தன் இருப்பிடமாக திருமலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கேயே வசிக்கலானார். அதனால் அந்த இடத்திற்கு வராஹ ஷேத்ரம் என்ற பெயரும் வந்தது.

நைமிசாரண்யத்தில் முனிகளும் ரிஷிகளும் சூத பௌராணிகரிடம் எந்த ஸ்தலம் மஹா விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது என்று கேட்டனர். அதற்கு அவர் திருமலையை சுட்டிக் காட்டினார். அந்த மலைக்குக் கேட்டதைக் கொடுக்கும் பலமும் வந்து வணங்குவோர்க்கு அனைத்துச் செல்வங்களையும் தரும் சக்தியும் இருப்பதை எடுத்துரைத்தார். ஒரு யுகம் அழிந்து மறு யுகம் பிறக்க வேண்டிய வேளை வந்தது. மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அதில் பூமியும் கரைந்து பாதாள லோகத்துக்குச் சென்று விட்டது. அதனால் மாஹா விஷ்னு வெள்ளை பன்றி ரூபத்தில் பாதாள லோகத்திற்குச் சென்று ஹிரண்யாக்‌ஷன் என்ற கொடிய அரக்கனுடன் போரிட்டு பூமியை மீட்டு வந்தார். புது யுகம் பிறந்தது. இந்த காலம் ஷ்வேத வராஹ கல்பம்!

பூமியை ஸ்திரப்படுத்திய பின்னர் மஹாவிஷ்ணு (பூவராஹர்) கருடனை அழைத்து, வைகுண்டத்தில் இருந்து க்ரிடாசலாவையும் தேவர்களையும், விஷ்வக்சேனரையும் கொண்டுவரச் செய்தார்.  க்ரிடாசலா ஒரு தேவ மலை. தங்கமும், வைரமும், வைடூரியமும் நிறைந்தது. வானளாவிய மரங்கள், நறுமணம் கமழ்கின்ற மலர்கள் நிறைந்த பூங்காவனம் அது. பறவைகள் இனிய கானங்களை எழுப்பிய வண்ணம் இருக்கும் ஒரு ஆனந்த மலை அது! கின்னரர்களும் பாட்டு இசைத்து சலசலத்து ஓடும்  நீரோடைகளுக்கு இணையாக இனிய ஒலியை எழுப்பிய வண்ணம் இருப்பர். மொத்ததில் ஹரியின் உறைவிடமாக இருக்க முழுத் தகுதி நிறைந்த வாசஸ்தலம் அந்த நாராயண மலை! அந்த மலையை வராஹர் எந்த புனிதமான இடத்தில் வைக்க வேண்டும் என்று கருடனுக்கு உத்தரவு இட்டார். நீண்ட மலையானது ஆதிசேஷனை ஒத்து இருந்தது. அங்கு அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்ந்து வந்தனர். வருவோர்க்கு மோக்‌ஷம் அளிக்கும் இடமாக அது ஹரியின் அருளால் மாறியது. அந்த மலையில் ஸ்வேத வராஹராக மஹாவிஷ்ணு வாசம் செய்ய ஆரம்பித்தார். பக்கத்திலேயே ஸ்வாமிபுஷ்கரணி என்ற புனித குளம் உதயமாயிற்று. அதற்கு தெற்கு புரத்தில் தான் பின்னாளில் சங்கு சக்கரதாரியாக ஶ்ரீனிவாச பெருமாள் திருமகளுடன் வீற்றிருக்கப் போகிறார். இந்த மலைக்குப் பல பெயர்கள் உள்ளன. அதில் சில, சிந்தாமணி, நாராயணாத்ரி, சிம்மாசலம், சேஷாசலம் ஆகியவை.

7hillsjpg

இன்னொரு கதையும் உள்ளது. ஒரு சமயம் விஷ்ணு நாரதரிடம் வைகுண்டத்தை விட்டு சில காலம் வேறு இடம் தங்க வேண்டும், நல்ல இடமாகச் சொல் என்றாராம். நாரதர் சொன்ன இடம் இதே சேஷாசலம் இருக்கும் இடம் தான். ஆனால் அது எப்படி உருவானது என்பதற்கு ஒரு உப கதை உள்ளது. ஒரு சமயம் வாயுவும் ஆதிசேஷனும் யார் பலசாலி என்று சண்டை இட்டனர். சேஷன் மேரு மலையை தன் பாம்பு உடலால் நன்றாகச் சுற்றிக் கொண்டு வாயுவை அழைத்து நகர்த்த முடியுமா பார் என்று சவால் விட்டார். வாயு எவ்வளவு முயன்றும் மலையை நகர்த்த முடியவில்லை. அப்பொழுது ஆதிசேஷன் மூச்சு விட வாயைத் திறந்த பொழுது வாயு அவருக்குள் புகுந்து மலையின் ஒரு பகுதியை ஊதித் தள்ள ஆரம்பித்தார். பல யோஜனை தூரங்கள் பறந்து சென்ற பின் மேரு வாயுவிடம் அந்த மலையை அங்கேயே விட்டுவிடுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டது. ஆதிசேஷனுக்கு அவமனமாகப் போய் விட்டது. தன் தோல்வியை எண்ணி வெட்கி விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தார். மஹாவிஷ்ணுவும் அவர் முன் தோன்றி ஒரு வரம் அளித்தார். ஆதிசேஷன் தான் ஒரு மலையாக மாறி விஷ்னு அவர் தலை மெல் வாசம் செய்யவேண்டும் என்றும் அந்த மலைக்கு சேஷாசலம் என்றும் பெயரிடப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்னுமொரு கதை உள்ளது. ஒரு முறை நிறைய முனிவர்கள் சேர்ந்து கங்கைக் கரையில் ஒரு யாகம் நடத்தினர். அங்கு வந்த நாரதர் அந்த யாகம் எந்த பகவானுக்காக நடத்தப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பினார். அதுவரை அதைப் பற்றி யோசிக்காத முனிவர்கள் அந்த பொறுப்பை ப்ருகு முனிவரிடம் ஒப்படைத்தனர். அவரும் முதலில் சத்திய லோகம் சென்று ப்ரம்மனை தரிசித்தார். அவரோ கலைவாணியுடன் பேசிக் கொண்டு இவரை கவனிக்கவில்லை. அடுத்து கைலாசம் சென்றார். அன்கும் சிவனார் சக்தியோடு ஐக்கியமாகி இவரை கண்டுக் கொள்ளவில்லை. பிறகு ப்ருகு வைகுண்டம் சென்றார். அங்கேயும் இதே கதை தான். திருமால் திருமகளுடன் ஆனந்தமாக இருந்தார். கோபம் வந்து ப்ருகு முனிவர் திருமாலின் மார்பில் காலால் எட்டி உதைத்தார். உடனே எழுந்த மாஹா விஷ்ணு ப்ருகு முனியின் பாதங்களைப் பற்றி என்னை உதைத்ததில் உங்கள் கால் வலித்திருக்குமே என்று பிடித்து விட்டார். அதனால் முனிவர் திரும்பி சென்று யாகத்தின் பிராசதத்தை விஷ்ணுவிற்கே அளிக்கவேனண்டும் என்று எடுத்துரைத்தார். ஆனால் மஹாலக்‌ஷ்மி தன் வாசஸ்தலமான பெருமாளின் இதயத்தை ப்ருகு முனிவர் உதைத்து விட்டதால் கோபம் கொண்டு பூலோகம் வந்து கோலாபூரில் குடிகொண்டார். தனிமையில் வாடிய திருமால் அங்கும் இங்கும் திரிந்து பின் சேஷாசலத்தை அடைந்தார். அந்த இடம் பிடித்துப் போய் ஸ்வாமி புஷ்கரணியின் கரையில் ஒரு எறும்புப் புற்றில் வசிக்கத் தொடங்கினார்.

அவரின் வராஹ தோற்றம் அதி பயங்கரமாக இருந்தது. தேவர்களும் முனிவர்களும் பிரார்த்தித்துக் கொண்டதன் பேரில் வராஹ பெருமான் அழகிய ரூபத்தை எடுத்துக் கொள்ள இசைந்தார். ஶ்ரீதேவி பூதேவியுடன் அங்கு வசிக்க வாக்குக் கொடுத்தார். இந்த மலைக்குப் பல கல்யாண குனங்கள் உண்டு. விரஜா நதியைப் போல கங்கையின் பிறப்பிடமான இந்த மலைக்குப் பாவங்களை போக்கும் வல்லமை உள்ளது. பார்ப்பதற்கு சாதாரண மலையைப் போல இருந்தாலும் பக்தர்களின் பக்தி இந்த மலையில் புனிதமடைகிறது. பக்தியின் சக்தி பன்மடங்காகப் பெருகி கேட்ட வரத்தை அடையச் செய்கிறது. அதே போல ஸ்வாமிபுஷ்கரணியில் நீராடினாலும் பாவங்கள் தொலைகின்றன.

OLYMPUS DIGITAL CAMERA

வெங்கடேச பெருமாள் பல லீலைகளை மலையில் நிகழ்த்தி இருக்கிறார். இராமாவதாரத்தின் போது சீதையுடன் இங்கு உலவியதாக இதிஹாச புராணங்கள் கூறுகின்றன. அதனால் அந்தப் புண்ணிய ஷேத்திரத்தில் யாகம் நடத்த சில முனிவர்கள் முடிவு செய்து  யாகம் நிகழ்த்த, அந்த யாகத்தில் வழஙகப்பட்டதை பெற்றுகொள்ள மிக மிக சௌமிய ரூபத்தில் மஹாவிஷ்ணு திருமகளுடன் எழுந்தருளினார். அதே போல வேங்கடேசனாக இன்னொரு சமயமும் ஒரு வயோதிகருக்கு உதவ திருமலையில் அவ்வாறே காட்சி தந்தார். சோம வம்சத்தைச் சேர்ந்த சங்கண்ணா என்ற அரசன் நல்லபடியாக அரச பரிபாலனம் செய்து கொண்டு இருந்தபோது எதிரிகள் சூழ்ச்சியால் நாட்டை இழந்தான். தன் குடும்பத்துடன் காய் கனிகளை உண்டு காட்டில் மறைந்து இருக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. மிகவும் மன வருத்தத்துடன் ஓர் இரவு உறங்கும் பொழுது அரசனுக்கு அசரீரியாக கனவில் ஒரு குரல் கேட்டது. வடக்கே இரண்டரை மைல் தொலைவில் வெங்கடாச்சல மலை உள்ளது, அதில் ஸ்வாமிபுஷ்கரணி உள்ளது. அருகில் ஒரு எறும்புப் புற்று உள்ளது. அதன் உள்ளே திருமால் வீற்றிருக்கிறார். அங்கு சென்று குடிசை அமைத்துத் தினமும் புஷ்கரணியில் நீராடி திருமாலை தியானித்தால் இழந்த நாடு திரும்பக் கிடைக்கும் என்று அந்த அசரீரிக் குரல் கூறிற்று. அரசனும் அதே போல செய்ய அவருக்கு வெங்கடேசப் பெருமாள் ஸ்வாமி புஷ்கரணியின் மேலே, தங்க விமானத்தில் ஜகஜ்ஜோதியாக சங்கு சக்கர கதையுடனும் மஹாலக்‌ஷ்மியுடனும் காட்சி தந்தார். வேண்டிய வரத்தை அளித்து, அரசன் இழந்த நாட்டை திரும்ப கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கதைப்படி சீதை இராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட பிறகு, இராமனும் இலக்குவனும் வானரப் படைகளுடன் இங்குத் தங்கி புஷ்கரணியில் நீராடி பிரார்த்தனை செய்து பின் இலங்கை சென்று வெற்றி வாகை சூடியதாகவும் சொல்லப்படுகிறது.

ப்ரம்மாண்ட புராணப்படி :-

சோழ தேசத்தில் கோபினாதர் என்ற ஒரு கிருஷ்ண பக்தர் இருந்தார். அவர் இறைவனிடம் முக்தி வேண்டி கேட்டுக் கொண்டதன் பேரில் கிருஷ்ண பரமாத்மா அவரை சேஷாச்சல மலைக்குச் சென்று ஶ்ரீனிவாசனைப் பிரார்த்திக்கும்படி கூறினார். அவருக்குத் துணையாக ரங்கதாசர் என்பவரும் வருவார் என்றும் கூறினார். அதே போல் அவர்கள் இருவரும் மலை மேல் சென்று எறும்புப் புற்றில் இருந்து ஶ்ரீனிவாசப் பெருமாளின் விக்கிரகத்தை எடுத்து ஒரு மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். ஒரு முறை லக்‌ஷ்மி தேவி பிரம்மாவை பசுவாகவும் சிவனை கன்றுக் குட்டியாகவும் மாற்றி சோழ நாட்டு அரசனிடம் விற்றுவிட்டார். அந்த மாடு சேஷாச்சல மலையின் மீது தினம் சென்று அந்த எறும்புப் புற்றின் மீது பால் சொரிந்து விட்டு வீடு திரும்பியதால் பால் கிடைக்காத பால்காரன் அரசியிடம் திட்டு வாங்கினான். என்ன நடக்கிறது என்று பார்க்க மாட்டைப் பின் தொடர்ந்த பால்காரன் மாடு ஒரு புற்றின் மீது பாலை சொரிவதைக் கண்டு கோபமுற்று ஒரு கோடாலியை எடுத்து மாட்டை வெட்டப் போனான். அப்பொழுது பெருமாள் புற்றில் இருந்து வெளிவந்து வெட்டை அவர் வாங்கிக் கொண்டதில் அவர் தலையில் இருந்து இரத்தம் வடிந்தது. இதைக் கண்ணுற்ற பால்காரன் அந்த இடத்திலேயே உயிர் நீத்தான். பின் அந்தப்  பசு கீழே சென்று அரசனை மலைக்கு அழைத்து வந்தது. அரசன் மிகவும் வருத்தமுற்றான். ஶ்ரீனிவாசர் அரசினடம் பின்னாளில் ஆகாசராஜா அவரின் மகள் பத்மாவதியை எனக்கு மணமுடித்துக் கொடுப்பார், அப்பொழுது அவர் ஒரு கிரிடம் பரிசளிப்பார். அதை பிரதி வெள்ளிக்கிழமையும் நான் அணிவேன். அப்பொழுது எனக்கு வலி தெரியாது என்று கூறினார்.

ஶ்ரீனிவாசக் கல்யாணம் :-

Kalyanam

ஒரு முறை ஶ்ரீனிவாசர் காட்டுக்கு வேட்டையாடப் போனார். ஒரு யானையைத் துரத்தியபடி வெகு தூரம் பயணப்பட்டு ஒரு நந்தவனத்தை அடைந்தார். அங்கு ஆகாசராஜனின் புதல்வி தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆகாசராஜன் தொண்டைமானின் சகோதரன், சந்திர வம்சத்தினன். ஒரு முறை நிலத்தை உழும்போது ஒரு தாமரையில் மறைந்திருந்த குழந்தையைக் கண்டெடுத்தான். அந்தக் குழந்தைக்கு பத்மாவதி எண்று பெயரிட்டு வள்ர்த்து வந்தான். பிறகு அவனுக்கு வசுதேவா என்ற மகனும் பிறந்தான். ஶ்ரீனிவாசர் பத்மாவதியைக் கண்டவுடன் மையல் கொண்டு அவளை மனமுடிக்க அவளிடம் விருப்பத்தைத் தெரிவித்தார். வசுதேவரின் மகனான கிருஷ்ணன் தான் தான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால் அவர்கள் அவரை விரட்டியடித்துவிட்டனர். அவர் மிகுந்த சோகத்துடன் எறும்புப் புற்றுக்கு வந்து அமர்ந்து விட்டார். அவரை கவனித்து வந்த வகுளா தேவி அவரின் வருத்தத்தைக் கண்டு அவரே அரசனிடம் சென்று பேச முடிவெடுத்தார். அதற்கு முன்பே ஶ்ரீனிவாசர் ஒரு குறத்தியைப் போல வேடமிட்டு அரசி தரணியைப் பார்த்து அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார். அந்த சமயம் வகுளா தேவியும் அங்குச் செல்ல எல்லாம் இனிதே முடிந்தது. ஶ்ரீனிவாசருக்கும் பத்மாவதித் தாயாருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிரைவேறியது.

Tirupati Balaji Temple

தொண்டைமான் தான் இப்பொழுது இருக்கும் கோவிலை நிறுவினார். அவர் தான் முன் ஜென்மத்தில் ரங்கதாசராகப் பிறந்தவர். இந்த அழகிய கோவிலில் திருப்தியுடன் வசிக்கிறார் ஶ்ரீனிவாசர். ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம், தொல்காப்பியத்தில் இத் திருமலையைப் பற்றி “வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லகம்” என்று குறிப்பும் உள்ளது. சிலப்பிதிகாரத்தில் “நெடியோன் குன்றம்” என்று திருமலையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த இப்பாடலுடன் இந்தக் கட்டுரையை நிறைவுக்குக் கொண்டு வருகிறேன்.

வேங்கடமே விண்ணோர் தொழுவதும் மெய்ம்மையால்

வேங்கடமே மெய்வினை நொய்தீர்ப்பதுவும் —வேங்கடமே

தானவரை வீழத் தானாழிப் படைத் தொட்டு

வானவரைக் காப்பான் மலை.

Reference: The tirumala Temple by Dr N.Ramesan

Advertisements

44 Comments (+add yours?)

 1. Anonymous
  Apr 24, 2013 @ 19:46:24

  Interesting. On one hand, we have a story, that says God is everywhere and so, the devotee need not worry in which direction his feet lay. We also have sthala puraNams.

  The flow and yr laguage are good.

  Akaashath padhitam thoyam
  Yatha gachathi sagaram –
  Sarvadeva namaskaram
  Sri vasudevam prathi gachathi.

  Reply

 2. amas32
  Apr 24, 2013 @ 20:44:27

  Thank you :-))

  Reply

 3. ரசனைக்காரன் (@Rasanai)
  Apr 25, 2013 @ 01:08:20

  Interesting..Have only heard the Kuberan story..All the stories here are new to me 🙂

  Reply

 4. Indran
  Apr 25, 2013 @ 02:22:49

  Interesting ………….. :))))

  Reply

 5. @thachimammu
  Apr 25, 2013 @ 03:26:55

  ஸ்ரீநிவாசர், திருமலை மற்றும் பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். .

  ஒரு வேளை நான் இது போல் எதாவது முயற்சி செய்தால், எப்படி எழுதலாம் என்றும் கற்றுக்கொண்டேன் – சிக்கனமான தொகுப்பு, அழகு நனட, சாதாரணமான வார்த்தைகள்.

  மிக்க நன்றி மா

  Reply

 6. Natarajan
  Apr 25, 2013 @ 03:35:19

  Thanks for all the versions ma. Really an interesting read. It’s been like a decade I read an article on thirupppathi.

  Reply

 7. anonymous
  Apr 25, 2013 @ 07:05:39

  ஸ்ரீ-நிவாசன் (திரு வாழ் மார்பன்) வந்த “கதையை” நீங்க சொன்னீங்க-ம்மா; நன்று:)
  கதையாக இல்லாமல், “வரலாற்றை”யும் இதே இடத்தில் இட்டு வைக்கிறேன்; அனுமதி தாருங்கள்:)
  —-

  “வட வேங்கடம் – தென் குமரி ஆயிடைத்
  தமிழ் கூறும் நல் உலகம்”
  -ன்னு வேங்கடமே, தொல் தமிழ் நாட்டின் எல்லை (வட எல்லை)

  வேம் + கடம் = வெப்பமான காடு
  “மாயோன் மேயக் காடு உறை உலகமும்” -ன்னு தொல்காப்பியம்;
  “காடுறைக் கடவுள்” என்பது சங்க இலக்கியம்;
  காட்டு மக்களின் தமிழ்த் தொன்மம் = திருமால்;

  தங்கள் கண்ணுக்குப் பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை = “மால்” என்று பண்டைத் தமிழர் வழுத்தினர் என்பார் திரு.வி.க

  “மாயோன் வழிபாடு, தமிழ்நாட்டின் பூர்வ குடி வழிபாட்டுள் ஒன்று” – என்பது ஈழத்து அறிஞர் கா.சிவத்தம்பி ஆராய்ச்சியுரை;
  முல்லை நில ஆயர்களை/ ஆவினங்களை, போரில் காத்த தலைவன்; அந்த முன்னோனுக்கு இட்ட நடுகல்லே = மாயோன் வழிபாடு;

  வெட்சி x கரந்தை -ன்னு, ஆவினத்தை விரட்ட/காக்க -ன்னு போர் துவங்கும்;
  அப்படியான ஆதிகுடிகள் போரிலே, குடி காத்த முன்னோரின் நடுகல் = திருமால் (எ) மாயோன்

  இதற்கு, வழிபாட்டுப் பறை = ஏறு கோட் பறை; கூத்து = குரவைக் கூத்து

  இந்த எளிய நடுகல்லே = பின்னாள் கலப்பால்/ கதைகளால்… புராணப் பெருந்தெய்வம் ஆகிப் போனது;

  வெட்சி x கரந்தை -ன்னு தான் புறத்திணையே துவங்கும்;
  முல்லை -ன்னு தான் அகத்திணையே துவங்கும்;
  = இப்படித் துவக்கமே, மாயோன் தான்!
  = முன்னை மரபின் முதுமொழி முதல்வ/ அரும் பெறல் மரபின் பெரும்பெயர் முருக -ன்னு இரண்டு பெரும் “மரபுகள்”!
  —-

  வேங்கடம் (எ) மூங்கில் காட்டிலே, நிற்கும் மாயோன் மரபு;

  Reply

 8. anonymous
  Apr 25, 2013 @ 07:25:02

  சங்கப் பாடல்கள், வேங்கட-நாடு, வேங்கட-நெடுவரை, வேங்கட-வரைப்பு, வேங்கடச்-சுரம் -ன்னு விதம் விதமாய்க் காட்டும்;

  தொண்டையன், திரையன், புல்லி நாடு -ன்னு,
  காடுகள் -> நாடுகள் ஆன போது,
  நடுகல் வேங்கடவனும் -> பெருந் தெய்வம் ஆகிப் போனான்;

  புல்லி நாட்டக் காட்டு மக்கள், மாட்டின் கழுத்திலே, “புளிச்சோறு” கட்டிக் கொண்டு,
  வேங்கட மலையின் தாழ் வரைகளில் மேய்த்து, தேக்கிலையில் சோறு உண்டதை அகநானூறு காட்டும்;
  —-

  வேங்கட நாட்டு மக்கள் = வடுகர்/ குடவர்

  வரகரிசியை உரலில் இட்டு, உலக்கையால் குற்றி,
  சுளகால் நேம்பி,
  தேங்காய்ப் பால் போல் வெண்ணிறம் கொண்ட அரிசியாக்கி,
  இளஞ் சுனையில் முகந்து வந்த நீரோடு அடுப்பில் ஏற்றி,
  சோறு பொங்கி, அந்நாட்டில் வாழ்ந்த குடவர்;

  வேங்கடத்துப் பனிபடு சோலையில்,
  யானை மரா மரத்தின் பட்டையை உரிக்கும்;
  அப்படி உரிக்கும் போது, அதன் காய்கள், நெல் காய்ந்து கொண்டிருக்கும் பாறை மீது பட்டுச் சிதறும்; (மழை பெய்யும்போது விழும் ஆலங்கட்டிகள் – பனிக்கட்டிகள் போல)
  -ன்னு புறநானூற்றுக் காட்சிகள்
  —-

  இப்படியான மலையின் காடுகளில், காடுறைக் கடவுள் = வேங்கடவன்;
  “விழவறை வேங்கடம்” -ன்னு இங்கு எப்பமே விழா!

  எல்லையில் இருப்பதால், பொருள் தேடிச் செல்லும் பல நாட்டு மக்களும், வேங்கடத்தைக் கடந்து செல்ல வேண்டிய சூழல்;

  அதனால், பல சமூக/ பல நாட்டுப் பண்பாடுகளின் வீச்சு; பலரின் ரசனைக்கேற்ப, பலப்பல விழாக்கள் -ன்னு சங்க இலக்கியக் காட்சிகள்;

  Reply

 9. anonymous
  Apr 25, 2013 @ 08:08:25

  ஆனால், இந்த “உண்மையான” சங்க இலக்கியக் காட்சியெல்லாம், இன்னிக்கி ஓரம் கட்டி விட்டு,

  வேங்கடாத்ரி சமஸ்தானம், பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன
  வேங்கடேச சமோ தேவோ, ந பூதோ, ந பவிஷ்யதே
  -ன்னு பவிஷ்யோத்தர புராணமாய் ஆகி விட்டது;

  “மதம்” என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால்,
  மக்களும் அவரவர் கஷ்ட நஷ்டங்களுக்கு,
  “பகவான் மேல் பாரத்தைப் போட”, உடன்பட்டு விட்டார்கள்:)
  ——

  இப்படி மாறி விட்டாலும்…
  வேங்கடவனின் தமிழ்த் தொன்மத்தை, செல்வச் செருக்கில்லா இயற்கை வழிபாட்டை… காத்துக் குடுத்தனர் ஆழ்வார்கள்!

  பொருள் தெரிஞ்சோ/ தெரியாமலோ,
  இன்னிக்கும் வேங்கடவனின் தெலுங்குக் கருவறையிலும் ஒலிக்கின்றன தமிழ்ப் பாசுரங்கள்;

  வாழ்க்கையே போனாலும் மாறாத உண்மைக் காதல்
  = இறைவனிடம் இட்டுச் செல்லும் -ன்னு காமத்தைப் புறந்தள்ளாத தீந்தமிழ்…
  யானை, அதன் துணைக்கு, Sauce-இல் தோய்த்து, Finger Chips ஊட்டி விட்டு, இறைவனை வணங்கும் ஆழ்வாரின் உள்ளக் காட்சி;

  பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்நின்று
  இருகண் இளமூங்கில் வாங்கி – அருகிருந்த
  தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
  வான்கலந்த வண்ணன் வரை
  —–

  “வேங்கடவா, கோவிந்தா” என்று ஊரே அலற…
  “வேங்கடவா, பாவீ” -ன்னு திட்டிச் சாபம் குடுக்குறா இந்தப் பொண்ணு:)

  என் முலை மேல், என் கண்ணீர் பட்டு, ஆவியா எழும்புதே!
  *டேய், உன்னை வையகத்தார் மதிக்க மாட்டாங்க -ன்னு அவ வுட்ட சாபம் தான் போலும்…
  *இன்னிக்கி இத்தினி பேரு, வேங்கடவனை மதிக்கவே மாட்டேங்குறாங்க:)

  தெண்ணீர்பாய் வேங்கடத்து, என் திருமாலும் போந்தானே,
  கண்ணீர்கள் முலைக் குவட்டில், துளி சோரச் சோர்ந்தேனே
  கருதாது, ஓர் பெண்கொடியை,
  வதை செய்தான், வையகத்தார் மதியாரே 🙂

  காமத்தீயுள் புகுந்து, இங்கு இலக்காய் நான் இருப்பேனே!
  காமத்தீயுள் புகுந்து, இங்கு இலக்காய் நான் இருப்பேனே!

  Reply

 10. anonymous
  Apr 25, 2013 @ 08:59:07

  திருவேங்கட மலையில் நிற்கும் தெய்வம் யார்?

  -ன்னு அப்பப்போ கெளம்பும்:) Problems of Pirabalams:)
  அவரவர் ஊகங்கள், அவங்கவங்க மனசுக்குப் பிடிச்சது தானே வரலாற்று உண்மை?:)

  அதுக்காக, விதம் விதமாய், மாலை கோப்பாங்க;
  * குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் = பரங்கி மலை St Thomas பாவம்:)
  * திருப்பதிக் கோயில் மதிலில் சிங்கம் இருக்கு = பல்லவ அரசி, சாமவை, தன் நாட்டுச் சின்னத்தைப் பொறித்தாள் (காஞ்சி வரதன்/ உலகளந்தான் கோயிலிலும் சிங்கம் உண்டு)

  * அந்தச் சிலைக்குப் புடைவை கட்டுறாங்க
  = இதுக்குத் தான் ராமராஜன் கலர்ல, “உள்சாத்து,வெளிச்சாத்து”-ன்னு நீளமாத் துணி உடுத்திக்கக் கூடாது-ன்னு சொல்லுறது; கேட்டாத் தானே?:)

  * இத பத்தி, அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதி இருக்காரு
  = பாவம் அவரு; “தூங்குற அரங்கனுக்குத் தான் சுப்ரபாதம் பாடணும்; நிக்குற ஆளுக்கு எதுக்குப் பாடணும்?” -ன்னு “லாஜிக்” பேசக் கூடியவரு:)
  = அப்படியே பாடினாலும், தூங்குற ஆளு, முழுச்சிக்கிட்டு நிக்கவாப் போறாரு? எதுக்குய்யா பாடணும்? -ன்னா Quiet ஆயீடுவாரு:) அன்னை மீனாட்சிக்கும் சுப்ரபாதம் இருப்பது தெரியாது போலும்:)
  ——–

  தாத்தாச்சாரியாருக்கு யார் மேல கோவமோ? அது இப்பிடித் திரும்பீருச்சி:)
  “தான் கோயில்ல வேலை பாத்தவன்; தனக்கு எல்லாம் தெரியும்”-ன்னு சொன்னவரு, ஒரேயொரு பொய்யால் மாட்டிக்கிட்டாரு;

  “வேங்கடவனுக்கு ரெண்டே கரம் தான்;
  தோளில் சங்கு-சக்கரங்கள் சாத்தி வச்சிருக்காங்க” – என்பதே அந்தப் பொய்;

  ஆனால், திருமுழுக்கு/ திருமஞ்சனத்தின் போது, ஆண்டுக் கணக்கில் காத்திருந்து பார்க்கும் பொது மக்களுக்குத் தெரியும்…
  நான்கு கரங்கள்;
  தோளில் சார்த்தி இல்லை; பின்னிரு கைகளில் ஏந்தி நிற்கும் உண்மை!!

  அலங்காரத்தில் (அகங்காரத்தில்) உண்மை தெரிவதில்லை:)
  ஆனா, அலங்காரம் களைஞ்ச வேங்கடவனைப் பாத்தாத் தெரீஞ்சீரும்!
  ——–

  அலங்காரம் களைஞ்சா, பாக்க முருகன் போலக் கூடத் தெரியும், சில காதல் மனங்களுக்கு:)
  *அதே நாலு தோளு, அதே கைகள்,
  *அதே நிக்கும் கோலம்; அதே புன்சிரிப்பு
  *அதே “சிலுக்கு” இடுப்பு:))

  அப்படிப் பார்த்தா,
  முருகன் கோயில் அபிஷேகத்தில் இருப்பதெல்லாம் பெருமாள் -ன்னும் சொல்லீறலாம்:)
  பெருமாள் கோயில் திருமஞ்சனத்தில் இருப்பதெல்லாம் முருகன்-ன்னும் சொல்லீறலாம்:)
  “தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே!” -ன்னு ஆழ்வார் அருளிச் செயல்;

  ஆனா, ஒரேயொரு “வித்தியாசம்” பளீர்-ன்னு தெரியும்;
  ***** மார்பிலே, திருமகளின் “திருமறு” (மச்சம்)

  = இந்தப் பெரிய மச்சம் முருகன் சிலைகளில் இருக்காது
  = அன்னை போன்றவளோடு, மருமகன் (முருகன்), உறவு கொள்வானோ? -ன்னு வரும் விபரீதத்தை எண்ணிப் பார்த்தால், மனசு இப்படியெல்லாம் சிந்திக்காது:)
  ——–

  நான், வாழைப்பந்தல் கிராமத்தில் இருக்கும் போது, தீவிர சைவக் குடும்பம்-ல்ல?
  கோயில் ஐயிரு வேற ஏத்தி வுடுவாரு; சின்னப் புள்ளையாச் சொல்லுவேனாம்…

  “எதுக்கு அத்தினி மாலை போட்டு இருக்காங்க கால் வரைக்கும்?
  காலின் கீழ் மயில் இருக்கு; அதை மறைக்கத் தான்; நாமக்காரப் பசங்க”:))

  அப்படிப் பேசிய பையன் தான், இன்னிக்கி இப்படிப் பின்னூட்டம் எழுதி இருக்கேன்:)

  அப்போ “சங்கத் தமிழ்” தெரியாது; இளங்கோ அடிகள் காட்டும் வேங்கடவன் தெரியாது
  அப்போ me one = “அறியாச் சிறுவன்” ;
  அறியாச் சிலுக்குச் சிறுவனை, முருகா மன்னிச்சிரு:)

  Reply

  • amas32
   Apr 26, 2013 @ 00:23:51

   A photograph of Tirumanjanam of Balaji showing Him as a four armed with Changu Chakkram http://s2.hubimg.com/u/2111129_f520.jpg !

   Reply

   • Kannabiran Ravi Shankar (KRS)
    Apr 26, 2013 @ 16:04:35

    இல்லம்மா; Sorry, இது Bangalore Iskcon கோயில் சிலை:)
    திருமலை எம்பெருமான் இப்பிடி இருக்க மாட்டாரு;
     
    திருப்பதிப் பெருமாள் கையில் = சங்கு-சக்கரங்கள், கற்சிலையோடு கிடையாது;
    மற்ற நகைகள் போல், மாட்டி எடுக்கும் வகையைச் சேர்ந்தது;
    —-
     
    அது எந்தச் சமயமானாலும், “உண்மையே” முக்கியம்; சமணமோ, சைவமோ, வைணவமோ எதுவானாலும்…
    = என் “விசுவாசம்” தமிழுக்கே! என் காதல் முருகனுக்குக் கூட இல்லை;
    = என் “விசுவாசம்” தமிழுக்கே! தாய்-தந்தையரான பெருமாளுக்கும் இல்லை;
     
    வாழ்க்கையில் நட்புக்கு விசுவாசம்;
    ஆனா, எழுத்தில் = தமிழுக்கு மட்டுமே என் விசுவாசம்; Sorry for this naked truth!
    —-

   • amas32
    Apr 26, 2013 @ 16:11:30

    That is what I thought. I have had the baakyam to see Balaji’s
    Thirumanjanam. He was with two hands only.

   • Kannabiran Ravi Shankar (KRS)
    Apr 26, 2013 @ 16:19:57

    திருவரங்கம் –ன்னு Google Image செய்து பாருங்கள்; அரங்கன் கையில் சங்கு சக்கரங்கள் இருக்காது;
    But அறி துயில்; அதனால் “வம்பு” கிளம்பவில்லை:)
     
    இவ்வளவு ஏன்?
    திருச்செந்தூர் போன்ற பழமை வாய்ந்த முருகன் கோயில்களில் கூட, முருகன் கையில் வேல் இருக்காது;
     
    வேல், சும்மா தோளில் சார்த்தி வைப்பாங்க; கற்சிலையோடு இருக்காது;
    அதே போல் தான் திருமலை – திருப்பதியும்;
     
    பண்டைத் தமிழ் மக்கள், தங்கள் இறை வடிவங்களில் ஆயுதம் வைக்கவில்லை;
    நடுகல் படைகளிலும் = ஆயுதங்கள் தனியே தான் குத்தி வைப்பதுண்டு
    —-
     
    சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள் குறிப்பிடுவதும் இதுவே;
    “பகை அணங்கு ஆழியும்/ பால் வெண் சங்கும்
    தகை பெறு தாமரைக் **கையில் ஏந்தி**”
     
    *நான்கு கரம் தான் = அது உண்மை
    *தோளில் சார்த்தி இல்லை! = அதுவும் உண்மை
    *ஆனால் கற்சிலையோடு கிடையாது;
    *மற்ற நகைகள் போல், மாட்டி எடுக்கும் வகையைச் சேர்ந்தது;
    It will be something like this = http://2.bp.blogspot.com/_9vbFLWt4Si4/S1P5faGHdgI/AAAAAAAAAGk/ibsYZmpzX5o/s400/1.bmp%5B2%5D.jpg
     
    minority சமயங்களின் மரபியல் பெருமை பிடிக்காத சில majority மக்கள்…
    சில சமயச் சழக்கர்கள்…
    திருமலையில் “வம்பு” கிளப்பிய போது…
     
    இராமானுசர், “இந்த நகைகளை இனி எடுக்கவே வேண்டாம்; அபிடேகம் செய்யும் போது கூட எடுக்க வேணாம்; சிலையோடவே நிரந்தரமாக இருந்து விடட்டும்” என்று கோயில்-ஒழுகிலே சாசனம் செய்தார்
    (மற்றபடி, பாம்பாக மாறி வேண்டிக்கிட்டார்; Magic நடந்தது என்பதெல்லாம் சும்மா “புராணம்”; அறிவுக்குப் பொருந்தாக் “கதைகள்”)
    —-
     
    இன்னிக்கும் அபிடேகத்தின் போது பார்க்கலாம்;
    *நான்கு கரங்கள்
    *பின் இரு கரங்களில், நகையாய்ப் பொருந்தியுள்ள சங்கு-சக்கரங்கள்
    *திருமாலுக்கே உரிய, “மார்பில் திருமறு” (திருமகள் மச்சம்)
    =இது சிலையோடவே இருக்கும்; பிரிக்க முடியாது
     
    முருகன் சிலைகளில் “திரு மறு” (திருமகள் மச்சம்) கிடையாது;
    அவன் மருமகன்;
    அன்னை போல ஒருத்தியான திருமகளுடன் தகாத உறவு கொள்வானா? –ன்னு யோசிச்சிப் பாத்தா, சமயச் சழக்கர்கள் வம்பு செய்ய மாட்டார்கள்;
    (But for some ppl, religion is first, god only next:)
     
    சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-ன்னு எவ்வளவு தரவு குடுத்தாலும்,
    “தங்கள் மனமே முக்கியம்,
    தமிழின் உண்மை முக்கியம் அல்ல” என்று இருப்பவர்களுக்கு…
    சங்கத் தமிழே வடிவான = முருகனே உணர்த்தி அருளுவான்;
     
    மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்;
    முருகா – உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்;
    வாழ்வில் உழன்றாலும், முருகா – உன்னோடே என்றென்றும் வாழ வேண்டும்

   • amas32
    Apr 26, 2013 @ 16:57:47

    Thanks for the clarification 🙂

 11. anonymous
  Apr 25, 2013 @ 09:35:32

  தமிழுக்கு வாய்த்த இளங்கோ அடிகள்; (3rd CE)

  பொய் சொல்லாத நல்ல உள்ளம்; புராணம் கலவாத தமிழ் உள்ளம்;
  தான் சமணரே ஆனாலும்,
  எந்தச் சமயத்தையும் சாராமல், “தமிழைத் தமிழாய் அணுகுதல்” என்ற உள்ளம்;
  அவரு சொல்லுறாரு, “வேங்கடவன் யார்?” -ன்னு….
  ——-

  *** வீங்கு நீர் அருவி “வேங்கடம்” என்னும்
  ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
  ….
  பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
  தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,

  நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
  பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
  செங் கண் மால் நெடியோன் நின்ற வண்ணமும்! ***

  சிலப்பதிகாரம் காட்டும் வேங்கடவன்;
  = பகை அணங்கு ஆழி (சக்கரம்); பால் வெண் சங்கு ஏந்தி உள்ளவன்! அவன் யார்?
  = பூவாடையில் பொலிதல் (இன்றும் பூலங்கி தரிசனமுலு); அவன் யார்?
  = செங்கண் மால் நெடியோன்? அவன் யார்?

  அவனே அவன்!
  அவனே = வேங்கடவன்!
  ———–

  இளங்கோவுக்கு முற்பட்ட எட்டுத் தொகை;
  அதில் கூட…
  வேங்கடவன் = வளைசங்கு-ஆழி ஏந்திய கையன்

  *** பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
  இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
  “நேமியும் வளையும் ஏந்திய கையால்”,

  அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!
  தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்! ***
  ———–

  இது போதாதென்று,
  பின்னாளில், சிறந்த முருக பக்தரான அருணகிரியே (15th CE) திருப்புகழில் பாடுகிறார், உமை அண்ணன் வேங்கடவனை!

  *** உலகு ஈன்ற பச்சை உமை அண்ணன்
  வட வேங்கடத்தில் உறைபவன்
  உயர் சாரங்க சக்ர கரதலன் மருகோனே! ***

  நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிக்காத வேங்கடவன்…
  நாயன்மார்கள் எவருமே பாடாத வேங்கடவன்…
  பின்னாளில் மட்டும்,
  சமயச் சழக்கர் சிலரால் கிளப்பி விடப்பட்டு, வாய்க்கு அவல் தந்த வேங்கடவன்:)

  “திருமலை” என்ற பேரும், குழப்பத்துக்கு ஒரு காரணம்;
  குற்றாலத்துக்கு அருகில் உள்ள “திருமலை”க் குமாரசாமி கோயில் = பெரிய மலை அல்ல; சிறிய குன்று;
  இந்தத் “திருமலை”யைத் தான் “திருமலை” என்று குறித்தார் அருணகிரி; “தாமிரபரணி சூழ் வயல் திருமலை”; திருவேங்கடத்தில் தாமிரபரணி கிடையாது:)
  ———–

  இதுவே சங்கத் தமிழ் காட்டி நிற்கும் = வேங்கடம்!
  சமயம் சாரா, இளங்கோ அடிகள், காட்டி நிற்கும் = வேங்கடம்!

  வேங்கடவா,
  நீ அவனோ? நீ இவனோ?
  எவனாயினும், உன்னைக் காட்டும் ஓங்கு சங்கத் “தமிழே வெல்க!”

  Reply

 12. anonymous
  Apr 25, 2013 @ 09:47:31

  //அதாகப்பட்டது, கதை வராஹ அவதாரத்தில் இருந்து தொடங்குகிறது//

  அதாகப்பட்டது, வரல்+ஆறு, சங்கத் தமிழில் நிறைவடைகிறது:)))

  மிக்க நன்றி-ம்மா!
  பதிவிற் சொன்ன கதைகளும் புராணங்களும், என் கற்பனைக்கும் இன்பம் தந்தன;
  எதுவாயினும், அங்கொரு கால், அரை நிமிடம் = கண்ணாரக் கண்டு தொழ, உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

  உலகம் உண்ட பெருவாயா; உலப்பில் கீர்த்தி அம்மானே!
  திலதம் உலகுக்காய் நின்ற, திருவேங்கடத்து எம் பெருமானே!
  கூடுமாறு கூறாயே; கூடுமாறு கூறாயே;
  —–

  (மெய்த் தமிழ்த் தரவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு…)
  நீ எவனாயினும், எந்தையே, என் அப்பா…
  உன் அடிக் கீழ்,
  வாழ்க்கையில் வாடி விட்டேன்;
  அன்று அவளை உன் மார்பில் சேர்த்துக் கொண்டது போல்,
  என்னையும் என் முருகவனிடம் சேர்ப்பித்து விடு!

  Reply

  • amas32
   Apr 25, 2013 @ 12:50:54

   KRS, I am so happy that my 4 Lines on Lord Venkatesa has brought out 400 lines from you. நீங்கள் பின்னூட்டம் இட வேண்டும் என்பதற்காகவே ஶ்ரீனிவாசப் பெருமாள் என்னை இந்தப் பதிவை எழுத வைத்தார் போலும். இவ்வளவு விவரங்கள் தந்து என் பதிவைப் பெருமை படுத்தியதற்கு நன்றி. நீங்கள் வாழ்க பல்லாண்டு!

   Reply

 13. anonymous
  Apr 25, 2013 @ 11:20:27

  //Reference: The tirumala Temple by Dr N.Ramesan//

  Is this, the blue color book, with TTD on it, by the well know telugu epigraphist Dr. Ramesan?
  May have some good/rare old photos too!

  Reply

 14. தெனாலிசோமன் (@i_thenali)
  Apr 25, 2013 @ 12:11:35

  அமெரிக்காவில் ஒரு கதா காலாட்சேபம்!!!! நல்லா இருக்குங்க :))))

  Reply

 15. Sudha
  Apr 25, 2013 @ 12:36:44

  Got very good leads to tell stories to Janani. Superb writing amma. 🙂

  Reply

 16. kbkk007
  Apr 25, 2013 @ 17:41:13

  பதிவும், கேயாரஸ்ஸின் பின்னூட்டமும் அவ்வ்வளவு கவர்ந்தன. நன்றி ம்மா.. சில தகவல்கள் எனக்குப் புதிது. புக் மார்க் செய்து வைத்திருக்கிறேன். இன்னுமொருமுறை படிக்க..

  Reply

 17. Uma Chelvan
  Apr 25, 2013 @ 21:07:59

  KRS, you did an excellent Job as usual. you bring out the best and the truth. When you have time, go to “Tamil Kathukklam” and read the post about “Ravanan” In Ramayana. Mr. Chokken posted in his FB too. keep going, keep going and keep up the good work. Kudos.,

  Reply

 18. Uma Chelvan
  Apr 25, 2013 @ 21:10:28

  It is very informative. Thanks for the post!

  Reply

 19. anonymous
  Apr 26, 2013 @ 05:47:38

  If u permit, one small video…
  திருப்பதிக் கருவறையில் தமிழ்! (Tirumala – Tomala Seva) = http://youtu.be/6APOS4lQNHc

  The above video is a replica model of Tomala Seva, at Tirumala Tirupati Temple, released by TTD
  This shows how tamizh pasurams are recited inside the Sanctum;
  The Lord is bedecked with “Flower Garlands” as he listens to “Tamizh Garlands”
  ———-

  (This blog post being relevant, assembling it here, for posterity
  – for all those ppl – educated/un educated, bad/good, rich/poor,
  – for those who heartfully wished if they cud have 2 more seconds before the Lord)

  காலங்கள் மாறி, புராணம் புகுந்தாலும்,
  சங்கத் தமிழ்த் தொன்மம், மங்காது வாழி!
  = “நல் தமிழ் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே!”

  Reply

 20. shanthhi
  Apr 26, 2013 @ 08:56:20

  இதுவரை கேட்காத நிறைய கதைகள் ,தகவல்கள் .அருமை அம்மா :))

  @shanthhi

  Reply

 21. தமிழ் திரு (@krpthiru)
  Apr 27, 2013 @ 09:01:04

  இதில் உள்ள சில கதைகள் முனிவர் உதைத்தது, திருக்கல்யாணம் போன்றவைகள் அரைகுறையாய் கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போதுதான் இந்த தகவல்களை முழுமையாக கேள்விப்படுகிறேன். உங்கள் பதிவையும், KRS அவர்களின் பின்னூட்டத்தையும் ரசித்தேன். மிக்க நன்றி 🙂

  Reply

 22. ராசா (@rAguC)
  Apr 27, 2013 @ 14:18:57

  யோவ் முருகா…. இந்த வனவாசத்தை எப்போ ஐயா முடிப்பீர்… தமிழ் உன்னை மன்னிக்கவே மன்னிக்காது…

  Reply

 23. psankar
  Apr 27, 2013 @ 16:41:46

  Came here for kryes’ comments (to be honest) 🙂 But I loved the post as well as comment.

  Reply

 24. உமாக்ருஷ் (@umakrishh)
  Apr 28, 2013 @ 13:53:48

  ஆகா 🙂 உங்க பதிவும் அருமை..அப்படியே ஒளிஞ்சு இருந்த முருகனை இழுத்து வந்து பின்னூட்டமிட்டு சுவராசியத்துடன் அவர் அதகளம் செய்திருப்பதும் அருமை :)))முருகா உங்கள மிரட்டி கேக்கறேன் வந்துடுங்க திரும்பி :))

  Reply

 25. Anonymous
  Feb 20, 2016 @ 16:32:35

  உங்கள் புண்ணியத்தில் திருப்பதி தரிசனமும், கே.ஆர்.எஸ்சின் இலக்கிய விளக்க இன்பமும் கிடைக்கப்பெற்றேன். நன்றி.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: