நாலு வரி நோட்டில் வந்தப் பதிவு.

PadminiShivaji

படம்: தில்லானா மோகனாம்பாள்

பாடல்: நலந்தானா நலந்தானா..

இசை: K.V.மகாதேவன்

பாடியவர்: இசையரசி P. சுசீலா

நாதஸ்வரம்: மதுரை சகோதரர்கள் சேதுராமன், பொன்னுசுவாமி

பாடலாசிரியர்: கவியரசர் கண்ணதாசன்

உணர்ச்சிப் பிழம்பாக ஒரு சம்பவம், பாடலுக்கேற்ற ஒரு சிறந்த தருணம், இதைவிட ஒரு திரைப்படத்தில் இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் சேர்ந்து நடித்துக் கொடுத்திருக்கும் ஒரு  master piece!  நாதஸ்வர கலைஞர் சிக்கல் ஷண்முக சுந்தரனும் நாட்டிய நங்கை மோகனாம்பாளும் உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றினர். எப்பவும் போல காதலுக்கு எதிர்ப்பு. இந்த முறை தாயின் வடிவில். வேறு ஒரு போட்டியில் ஷன்முகசுந்தரத்துக்குக் கத்திக் குத்துப் பட்டு, பின் உடல் தேறி வாசிக்கும் முதல் கச்சேரி அது. அந்த நிகழ்ச்சியில் நாட்டியமாட மோகனாம்பாளுக்குத் தாய் விதித்த ஒரு கட்டளை ஷன்முகசுந்தரத்துடன் பேசக் கூடாது என்பது தான். இசை வெள்ளமாகப் பாய்கிறது சிக்கலின் நாதஸ்வரத்தில் இருந்து, ஆனால் அதே சமயம் அடிப்பட்ட கையில் இருந்து இரத்தம் வடிகிறது. துடிதுடிக்கும் மோகனாம்பாள் தாயிடம் கொடுத்த வாக்கினால் காதலனிடம் பேச முடியவில்லை, அதனால் பாட்டினால் நலம் விசாரிக்கிறார்.

நலம் தானா? நலம்தானா?

உடலும் உள்ளமும் நலந்தானா?

நலம்பெற வேண்டும்

நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு

இலைமறை காய் போல் பொருள் கொண்டு

எவரும் அறியாமல் சொல் இன்று.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்

என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்.

புண்பட்ட சேதியை கேட்டவுடன்

இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்

நடப்பதையே நினைத்திருப்போம்

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

காலம் மாறும் சந்திப்போம்.

இதில் முக்கியமாக காதலியின் அதீத அன்பை இந்த வரிகள் காண்பிக்கின்றன.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்

என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்.

புண்பட்ட சேதியை கேட்டவுடன்

இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

முதலில் கவிஞர் பொதுவாக கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ என்று காதலி குறிப்பிடுவதாகக் காட்டி பின் அடுத்த வரியிலேயே என் கண் பட்டதால் என்று சொல்லுவதாக எழுதியிருப்பது காதலியின் காதலுக்குப் பெருமை சேர்க்கிறது. புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் அவள் துடிப்பதை “இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்” என்கிறார். சொல்லமுடியாத அளவு துயரம்!  இசைக்கே முக்கியத்துவம் கொடுத்த அதிக பாடல் வரிகள் இல்லாத பாடல் இது. ஆனால் சொல்ல வந்ததை உணர்ச்சிப் பூர்வமாக சுருங்கச் சொல்லி விடுகிறார் கவியரசர்.

சுசீலாம்மா பாடும்போது என்ன ஒரு பாவம்! இந்தப் பாடலுக்கு உயிர் சேர்ப்பது அவர் குரல் என்றால் மிகையாகாது. அவர் பாடியபின் அந்த குரலுக்கேற்ற நடிப்பைத் தருவதில் பத்மினிக்குச் சிரமமே இருந்திருக்காது.  நாதஸ்வரமும், நாட்டியமும், பாவங்களைக் கொட்டி நடித்த நடிகர்களும் இந்தப் பாடலைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கி விட்டனர்.

பாடலின் சுட்டி http://www.youtube.com/watch?feature=endscreen&v=O2_lvaCrSLU&NR=1

 

நன்றி: http://4varinote.wordpress.com/2013/05/11/guest28/

Advertisements

சூது கவ்வும் – திரை விமர்சனம்

soodhu-kavvum_1364369250

ஒரு நல்ல திரைக்கதை எப்படிப்பட்ட சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சூதுகவ்வும் ஒரு நல்ல உதாரணம். நலன் குமாராசமி எழுதி இயக்கி இருக்கிறார். இது அவரின் முதல் படம் என்று நம்ப முடியவில்லை. சமீபத்தில் நகைச்சுவை என்ற பெயரில் நிறைய படங்கள் வந்து விட்டன. ஒன்றுமே சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இந்தப் படம் நிச்சயமாக விதிவிலக்கு. கிரேசி மோகன் படம் போல வரிக்கு வரி சிரிப்பு அலை. சில சமயம் ஒரு சிரிப்பலை முடிவதற்குள் அடுத்த ஜோக் வந்து, காதில் விழாமல் கூடப் போய் விடுகிறது.

சட்ட விரோதச் செயலைப் பற்றிய கதை என்றாலும் அதில் கேவலமாக எதையும் புகுத்தாமல் கையாண்டிருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு பாராட்டு! அதனாலேயே இந்தப் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கலாம். கதை முழுக்க சிறு சிறு எதிர்பாராத ட்விச்டுகள் சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது. விஜய் சேதுபதிக்கு நடுத்தர வயது பாத்திரம், மிகவும் நன்றாக செய்திருக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, இரண்டு படத்தில் இருந்தும் வேறுபட்ட கதாபாத்திரம். அவர் கூட நடிக்கும் மற்ற மூவரும் ரொம்ப இயல்பாக நடித்துள்ளனர். பெண் கதாப்பாத்திரம் (சஞ்சிதா ஷெட்டி) புது மாதிரியாகப் புகுத்தப் பட்டிருப்பது கதாசிரியரின் கற்பனை வளத்தைக் காட்டுகிறது. ராதா ரவியும், M.S.பாஸ்கரும் தான் பழைய முகங்கள். கனகச்சிதமாகப் பொருந்துகிறது அவர்களுடைய ரோல்ஸ்! பின்பாதியில் வரும் யோக் ஜப்பியும் பாத்திரத் தன்மையைஉணர்ந்து நன்றாக நடித்துள்ளார். அதே போல் இதர பாத்திரங்களும், ஒன்றுமே சோடை போகவில்லை.

இடைவேளைக்குப் பிறகு முக்கால்வாசித் திரைப்படங்களில் தொய்வு ஏற்பட்டுவிடும். இதில் கடைசி சீன் வரை விறுவிறுப்புக் குறையவில்லை. பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். காசு பணம் துட்டு மணி மணி என்று ஒரு தமிழ் கவிதையாக ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது 😉 லோ பட்ஜெட் படம், அதனால் சிம்பிளாக உள்ளது. காதலில் சொதப்புவது எப்படி மாதிரி கேப்மாரித்தனத்தில் சொதப்புவது எப்படி என்பது தான் இந்தப் படம்!

எப்பவுமே இயக்குனர்களின் முதல் படம் சூப்பராக இருக்கும். அடுத்து அவர் எடுக்கும் படங்களைப் பொருத்தே அவரின் அசல் திறமை தெரியும். ஆனால் முதல் படத்திற்கு இயக்குனர் எந்த இடத்திலும் சொதப்பாமல், லூஸ் என்ட்ஸ் இல்லாமல் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் முழு கவனம் செலுத்தி பூர்த்தி செய்திருக்கிறார். என்ன, சீனுக்கு சீன் குடி, சிகரெட்டு, அது தான் நெருடுகிறது. ஆனால் கயவன் வெள்ளை வேட்டிக் கட்டி திருநீறு பூசிக் கொண்டு கங்கா ஜலமா அருந்துவான் என்று இயக்குனர் கேட்கலாம். கொஞ்சம் சமூக அக்கறையோடும் நல்ல படங்கள் எடுத்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும் 🙂