படம்: தில்லானா மோகனாம்பாள்
பாடல்: நலந்தானா நலந்தானா..
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்: இசையரசி P. சுசீலா
நாதஸ்வரம்: மதுரை சகோதரர்கள் சேதுராமன், பொன்னுசுவாமி
பாடலாசிரியர்: கவியரசர் கண்ணதாசன்
உணர்ச்சிப் பிழம்பாக ஒரு சம்பவம், பாடலுக்கேற்ற ஒரு சிறந்த தருணம், இதைவிட ஒரு திரைப்படத்தில் இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் சேர்ந்து நடித்துக் கொடுத்திருக்கும் ஒரு master piece! நாதஸ்வர கலைஞர் சிக்கல் ஷண்முக சுந்தரனும் நாட்டிய நங்கை மோகனாம்பாளும் உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றினர். எப்பவும் போல காதலுக்கு எதிர்ப்பு. இந்த முறை தாயின் வடிவில். வேறு ஒரு போட்டியில் ஷன்முகசுந்தரத்துக்குக் கத்திக் குத்துப் பட்டு, பின் உடல் தேறி வாசிக்கும் முதல் கச்சேரி அது. அந்த நிகழ்ச்சியில் நாட்டியமாட மோகனாம்பாளுக்குத் தாய் விதித்த ஒரு கட்டளை ஷன்முகசுந்தரத்துடன் பேசக் கூடாது என்பது தான். இசை வெள்ளமாகப் பாய்கிறது சிக்கலின் நாதஸ்வரத்தில் இருந்து, ஆனால் அதே சமயம் அடிப்பட்ட கையில் இருந்து இரத்தம் வடிகிறது. துடிதுடிக்கும் மோகனாம்பாள் தாயிடம் கொடுத்த வாக்கினால் காதலனிடம் பேச முடியவில்லை, அதனால் பாட்டினால் நலம் விசாரிக்கிறார்.
நலம் தானா? நலம்தானா?
உடலும் உள்ளமும் நலந்தானா?
நலம்பெற வேண்டும்
நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று.
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்.
புண்பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் சந்திப்போம்.
இதில் முக்கியமாக காதலியின் அதீத அன்பை இந்த வரிகள் காண்பிக்கின்றன.
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்.
புண்பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?
முதலில் கவிஞர் பொதுவாக கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ என்று காதலி குறிப்பிடுவதாகக் காட்டி பின் அடுத்த வரியிலேயே என் கண் பட்டதால் என்று சொல்லுவதாக எழுதியிருப்பது காதலியின் காதலுக்குப் பெருமை சேர்க்கிறது. புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் அவள் துடிப்பதை “இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்” என்கிறார். சொல்லமுடியாத அளவு துயரம்! இசைக்கே முக்கியத்துவம் கொடுத்த அதிக பாடல் வரிகள் இல்லாத பாடல் இது. ஆனால் சொல்ல வந்ததை உணர்ச்சிப் பூர்வமாக சுருங்கச் சொல்லி விடுகிறார் கவியரசர்.
சுசீலாம்மா பாடும்போது என்ன ஒரு பாவம்! இந்தப் பாடலுக்கு உயிர் சேர்ப்பது அவர் குரல் என்றால் மிகையாகாது. அவர் பாடியபின் அந்த குரலுக்கேற்ற நடிப்பைத் தருவதில் பத்மினிக்குச் சிரமமே இருந்திருக்காது. நாதஸ்வரமும், நாட்டியமும், பாவங்களைக் கொட்டி நடித்த நடிகர்களும் இந்தப் பாடலைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கி விட்டனர்.
பாடலின் சுட்டி http://www.youtube.com/watch?feature=endscreen&v=O2_lvaCrSLU&NR=1
May 21, 2013 @ 07:17:23
அருமை… ரசித்தேன்…
May 21, 2013 @ 13:34:27
நன்றி 🙂
May 31, 2013 @ 15:03:07
இன்றே உங்கள் நாலு வரிப் பதிவை அறிந்தேன்;
வாழ்த்துக்கள்-ம்மா!
//இந்தப் பாடலுக்கு உயிர் சேர்ப்பது அவர் குரல் என்றால் மிகையாகாது. அவர் பாடியபின் அந்த குரலுக்கேற்ற நடிப்பைத் தருவதில் பத்மினிக்குச் சிரமமே இருந்திருக்காது//
ஒரு வாசகமாச் சொன்னாலும், திரு வாசகமாச் சொன்னீங்க!
இந்தப் பாடல் சர்க்கரைப் பொங்கல் போல..
*கண்ணதாசனின் வரிகளே = அரிசி
*சுசீலாம்மாவின் வருந்தி வாடும் குரலே = வெல்லம்
*நாதசுர இசை = தண்ணீர்
இந்த மூனுமே போதும் சருக்கரைப் பொங்கலுக்கு!
ஆனால், நெய்யும்/ முந்திரியும் மேலும் மணம் அல்லவா?
*முந்திரி=பத்மினியின் முகபாவங்கள்
*நெய்=மணக்க மணக்க, சிவாஜியின் நடிப்பு
காட்சியைப் பார்க்காம, பாடலை மட்டும் கேட்டாலே கூட உள்ளம் கரையும்;
என் – கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
அவன் துன்பத்துக்கும் தன்னையே காரணமாக்கிக் கொள்ளும் மாசற்ற காதல்!
ஆனா, அவன் தான் முதல்-ல்ல இருந்தே, சரியாப் புரிஞ்சிக்காம, ஆனா புரிஞ்சிக்கவும் ஆசைப்பட்டு, கடைசியில் காதலை உணர்கிறான்;
இந்தச் சினிமாக் காவியம் பற்றி @dagalti அவர்களின், மிகச் சிறப்பான பதிவும், சில பின்னூட்டங்களும், இங்கே
http://dagalti.blogspot.com/2013/04/collection-of-scattered-thoughts-on.html
May 31, 2013 @ 17:06:28
Thank yo so much. I so much wanted to read my insignificant post 🙂 What
awesome post by Dagalti and such great conversation between you two! Appaaa
what geniuses you two are!!
May 31, 2013 @ 15:04:50
Can I tell a “Cinema Secret”, behind this song?
இந்தப் பாடல், அறிஞர் அண்ணா மேல், கவிஞர் கண்ணதாசன், ஒளிஞ்சி-மறைஞ்சி எழுதியது:)
May 31, 2013 @ 16:01:20
கண்ணதாசன், திராவிட இயக்கத்தில் இருந்து விலகிட்டாரு;
ஆனா, அந்த இயக்கம் ஆட்சிக்கு வந்துருச்சி;
மதறாஸ் என்பதைத் “தமிழ்நாடு” கண்ட, அறிஞர் அண்ணா அவர்களே முதலமைச்சர்!
ஆனா, தமிழ்நாட்டின் ஊழ்வினை…
அண்ணா புற்று நோயில் விழுந்து, துன்பப் பட்டுக்கொண்டிருந்த நேரம் (1968)
அப்போ தான் தில்லானா மோகனாம்பாள் வந்த நேரமும் கூட…
—-
*கண்ணதாசனின் குணம் = ஒருவர் எவ்ளோ பெரிய பிரபலமா இருந்தாலும், “adjust” செய்துகொண்டு போகாத, கொள்கை வீறு!
*சினிமா சான்ஸ், மேலும் படங்கள் வரணுமே = இதுக்கெல்லாம் கவலைப் படாம, தமிழைத் தமிழாய் அணுகும் குணம்!
ஆனா, உள்ளத்தில் குழந்தை போல!
என்ன தான், அண்ணாவை விட்டு விலகி வந்துட்டாலும், அது இயக்கத்திலிருந்த “ஒரு சில ஆட்கள்” மீதான கோவமே அன்றி, அண்ணா மேல் வந்த வெறுப்பு அல்ல!
ஆனாலும், பழைய உறவைப் போய்ப் பாராட்டி, மீண்டும் ஒட்டிக் கொள்ளாத குணமாச்சே கண்ணனின் தாசனுக்கு!
இன்றுள்ள சிலரைப் போல், ஒட்டுண்ணி இலக்கியவாதியா அவரு?
ஆனாலும், தன் முன்னாள் அன்புள்ள அண்ணாவை நலம் விசாரிக்கணும்; எப்படி விசாரிப்பது??
——–
சினிமாப் பாட்டில் ஒளிஞ்சி-மறைஞ்சி நலம் விசாரிக்கிறார்;
உடலும் உள்ளமும் நலந்தானா?
நலம்பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
*** “இலை மறை காய்” போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று!***
இப்பிடித் தான், நானும் இன்று விசாரிக்கிறேன்; அப்பிடியொரு நெலமையில் முருகன் வச்சிட்டான்!
Jul 02, 2019 @ 07:54:18
இந்த பாடல் சிவரஞ்சனியில் பாடி அந்த நாலு வரியில் சோகத்தை இழைத்து பாடும் போது நீலமணியில் கற்கண்டாய் கொடுக்கும் போது பாடிய இசையரசியை பாராட்டுவதா? இல்லை இசை ஜாம்பாவன் KV M ஐ புகழ்வதா? இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரின் திறமையும் மெருகேற்றி வழங்கப்பட்டதானே!
Jul 02, 2019 @ 07:54:18
இந்த பாடல் சிவரஞ்சனியில் பாடி அந்த நாலு வரியில் சோகத்தை இழைத்து பாடும் போது நீலமணியில் கற்கண்டாய் கொடுக்கும் போது பாடிய இசையரசியை பாராட்டுவதா? இல்லை இசை ஜாம்பாவன் KV M ஐ புகழ்வதா? இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரின் திறமையும் மெருகேற்றி வழங்கப்பட்டதானே!