தீயா வேலை செய்யணும் குமாரு! – திரை விமர்சனம்

theeyaa velai

சுந்தர்.C கதை/இயக்கத்தில் ஒரு நகைச்சுவை சித்திரம். வசனம் நளன் குமாரசாமி, வெங்கட் ராகவன். ட்விட்டர் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று யாராவது நினைத்திருந்தால் இந்தப் படம் அதற்கு சரியான பதில். ஒவ்வொரு ஒன் லைனர் நகைச்சுவை டயலாகும் அப்படியே ட்வீப்ஸ் போடும் ட்வீட்ஸ்! ட்விட்டர் FB இரண்டையும் நன்றாகக் கவனித்து எழுதப்பட்ட “நகைச்சுவை காவியம்” தீயா வேலை செய்யணும் குமாரு!

கதை – சுந்தர். C  என்று எப்படி மனசாட்சியில்லாமல் போட முடிந்ததோ? ஒரு ஆங்கிலப் படத்தின் கதையை (வில் ஸ்மித் நடித்த Hitch படத்தின் அப்பட்ட காபி) வழக்கம் போல சுட்டு தமிழ் மக்களின் ரசனைக்கு (!) ஏற்ப மாற்றியமைத்துத் தன் தனித் திறமையை காட்டியிருக்கிறார் சுந்தர். C. ஆனால் சும்மா சொல்லக் கூடாது, அவரின் திறமை திரைக்கதையில் மிளிர்கிறது.

சித்தார்த், சந்தானம், குஷ்பூவின் வாரிசு ஹன்சிகா மோட்வானி முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராமனும் இருக்கிறார். பாவம் அவர் இன்னொரு கார்த்திக் குமாராக மாறி வருகிறார். சித்தார்த்துக்குப் பதிலாக வேறு ஒருவரைப் போட்டிருந்தால் படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. என்னமோ மிஸ்ஸிங் அவரிடம். நிஜ வாழ்க்கைக் காதலுக்கு மரியாதையாக சமந்தாவையும் நடுவில் ஒரு சீனில் வரவழைத்தபோதும், அவரிடம் பேசும்போதும் கூட இமோஷன் ரொம்ப கம்மி தான். சந்தானம் அவர் பங்கை சரி வரச் செய்திருக்கிறார் (அதிசயமாக அதிகப் பிரசங்கித்தனம் குறைவாக உள்ளது, அதற்கு நிச்சயம் இயக்குனரைப் பாராட்ட வேண்டும்). இன்னொரு அதிசயம், ஹன்சிகா நடிப்பில் நல்ல முன்னேற்றம்! மிகவும் அழகாகவும் இருக்கிறார்.

வித்யுலேகா ராமனும் டெல்லி கணேஷும் சின்னப் பாத்திரத்தில் வந்தாலும் முன்னவர் நகைச்சுவை டைமிங்கிலும் பின்னவர் அனுபவ நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்கள். RJ பாலாஜிக்கு முதல் படம். நன்றாகப் பண்ணியிருக்கிறார். தேவதர்ஷினி, பாஸ்கி, சித்ரா லக்ஷ்மணன், ஐஸ்வர்யா மேனன், மனோபாலா (பென்சில் மாமா) எல்லோருக்கும் டைலர் மேட் ரோல்ஸ்! நளினியும் இருக்கிறார். ஸ்வர்ணாக்காவாக வந்து தூள் கிளப்புகிறார்.

மெல்லிய சாரல் பாடல் நன்றாக உள்ளது. திருட்டுப் பசங்க பாடல் கடைசியில் க்ரெடிட்ஸ் ஓடும்போது வருகிறது. மொத்தப் படத்தை விட இந்தக கடைசி பிட் தேவலாம் என்று தோன்றுகிறது. மார்ப்பிங்கில் குஷ்பூ ஹன்சிகாவாக மாறுகிறார். ப்ளூபர்ஸ் நிஜத்தைவிட இன்னும் சிரிக்கும்படி உள்ளது.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. ஆனால் பெண்களை கரெக்ட் பண்ணுவது எப்படி என்பது தான் படத்தின் ஒன் லைனர். சுந்தர்.C யின் மொத்த அனுபவம் படத்துக்குப் பலம். ஆனால் எங்கோ எதையோ தவற விட்டுவிட்டார். போய் பார்த்து, கொஞ்சமாக சிரித்துவிட்டு வரலாம் 🙂