என் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-)

நான் இந்த முறை இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்றிருந்தேன். மகனுடன் சியாட்டிலில் நான்கு வாரங்கள். மகளுடன் லாஸ் ஏஞ்சலஸில் நான்கு வாரங்கள். முதலில் சென்றது வாஷிங்க்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டிலுக்கு. மிகவும் அழகான ஒரு நகரம்.முதன் முதலில் Starbucks என்ற காபிக் கடை அந்த ஊரில் தான் ஆரம்பித்தது. பிறகு அது மிகப் பெரிய செயின் ஸ்டோராக மாறி அது இல்லாத தெருவே இல்லை என்று ஆகிவிட்டது! நான் ஏப்ரல் நடுவில் சென்றாலும் இன்னும் நல்ல குளிர் இருந்தது. என் மகன் பெல்வியு என்ற நகரத்தில் இருந்து சியாட்டிலுக்குக் குடிபெயர்ந்திருந்தான். பெல்வியு ஒரு அமைதியான இடம். சத்தம் நிறைந்த இடத்தில் நகர வாழ்க்கை வாழ வேண்டும் என்று விருப்பப் பட்டதால் சியாட்டில் வந்திருந்தான். மெயின் தெருவின் மேலேயே வீடு. கீழே உள்ள படம் தான் என் மகனின் அபார்ட்மெண்ட்.

aptbldg

ஜன்னலைத் திறந்து வைத்திருந்தால் கீழே நடப்பவர்கள் பேசும் சத்தம் கேட்கும். அவன் தெருவில் மட்டுமே நான்கு பார்கள்! எதிரேயே பேருந்து நிறுத்தம். என் மகன் வேலைக்குப் பேருந்தில் தான் செல்வான். பக்கத்திலேயே மளிகைக் கடை. நடந்து சென்றுத் தேவையானப் பொருட்களை நானே வாங்கி வந்துவிடுவேன். முதல் மாடியில் குடியிருப்பு. பழைய கட்டிடம், அதனால் மின் தூக்கிக் கிடையாது. தரையில் கார்பெட் கிடையாது, hardwood floor, அழகான fireplace! என் மகன் வீட்டில் சமைப்பதில்லை. சமையல் வகுப்புக்கு அனுப்பி, குளிர்சாதனப் பெட்டியின் மீது ரசம், சாம்பாருக்கான சமையல் குறிப்புக்களை அச்சிட்டு ஒட்டியும் ஒரு பயனும் இல்லை. அதனால் நான் இருந்த ஒரு மாதமும் நான் சமைத்த உணவை விரும்பி உண்டது தான்அமெரிக்கா சென்றதற்கான நான் கண்ட பலன் 🙂

நான் முன்பு பல வருடங்கள் அங்கு இருந்ததால் அந்த ஊர் தொலைக் காட்சி காமெடி நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பல காட்சிகளை விரும்பி நாள் முழுக்க பார்ப்பேன். இணையம் நல்ல துணை. மகன் வேலை முடிந்து லேட்டாக வந்தாலும் பொழுது போவதில் சிரமம் இல்லை. பெங்களூர் மாதிரி ரோடுகள் மேலே ஏறி கீழே இறகும் வகை. அதனால் நடைப் பயிற்சி கொஞ்சம் மூச்சிரைக்க வைக்கும். மேலும் கண்ட நேரத்தில் மழை வரும். சியாட்டிலில் வருடத்தில் 200 நாட்களாவது மழை உண்டு என்று நினைக்கிறேன். தடை படாத மின்சாரம், விரைவாக செயல்படும் இணைய இணைப்பு, நல்ல காய்கறிகள், சத்தான பால், சுத்தமாகக் கழுவி விடப்பட்ட தோற்றத்தைத் தரும் தெருக்கள், நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லும் வசதி அனைத்துமே சென்னையிலிருந்து அந்த ஊரை சுகப்படுத்திக் காட்டியது.

என்னை அங்கு @nilavinmagal @Soyahere ஆகிய ட்வீட்டர்கள் என்னை குடும்பத்துடன் வந்து சந்தித்தது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது.

அங்கு இருந்தபோது சில ட்விட்டர் நண்பர்களுடன் உரையாடினேன். ஒருவர் என் தமிழ் ஆசான் @elavasam , மற்றவர் என் இசை ரசனைக்கு ஆசான் @rexarul 🙂 திரு ரெக்சை முன்பே சந்தித்துள்ளேன். திரு இலவசம் அவர்களுடன் இது தான் முதல் முறை உரையாடுவது. அவருடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி 🙂 அதே போல @sricalifornia  வுடன் முதல் முறை உரையாடியது பெரும் மகிழ்ச்சி 🙂  திரு @losangelesram  அவர்களிடமும் முதன் முறையாகப் பேசினேன். சந்திக்க முயன்று, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சந்திக்க முடியவில்லை.

நான் அங்கு இருந்த போது என் பிறந்தநாள் வந்தது. என் மகனுடன் பல வருடங்கள் கழித்து என் பிறந்தநாளைச் சேர்ந்து கொண்டாடினேன். அருமையான லாப்டாப்பை எனக்கு அவன் பரிசளித்தான் 🙂

N'slaptop

அங்குள்ள ஜாபனீஸ் தோட்டம் மிகவும் அழகு. அதற்கு ஒருநாள் மகன் அழைத்துச் சென்றான். சூது கவ்வும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று ஒரு நாள்  கண்டு களித்தோம். சூது கவ்வும் திரைப்படத்தை என் மகனின் நண்பர்களுடன் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதற்கு முன்னால் உதயம் திரைப்படம் பார்க்கச் சென்று யாருமே வராததால் படத்தைத் திரையிடுவதையே கேன்சல் செய்துவிட்டனர். பிறகு ஒரு இந்தித் திரைப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தோம். அதுவும் பயமாக இருந்தது. படத்தினால் அல்ல, திரையரங்கில்  மொத்தம் எங்களையும் சேர்த்து நான்கு பேர்கள் தான்!

japgarden2

லாஸ் ஏன்ஜலசுக்கு என் மகனுடன் சென்றேன். என் கணவரும் அங்கு வந்திருந்தார். என் மகளுக்கு graduation! நமக்கு இங்கே மஞ்சள் நீராட்டு விழா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அங்கு பள்ளி இறுதி, இளங்கலை, முதுகலை பட்டம் பெரும் நிகழ்ச்சிகள்! சுற்றத்தாருடன் அந்த நிகழ்ச்சிக்குச் சென்று சிறப்பிப்பது அந்த நாட்டின் மரபு. ரொம்ப நன்றாக நடந்தது என் மகளின் பட்டமளிப்பு விழா. அந்த நிகழ்ச்சியின் Key note speaker மிக அருமையாகப் பேசினார். அவர் ஓர் வெற்றிப்பெற்ற திரைப்பட கதை வசனகர்த்தா, இயக்குநரும் கூட. அவர் மனைவி ஒரு நடிகை. கலைத் துறையில் முன்னேற முயலும்போது வரும் இடர்பாடுகள், அதை அவர் சமாளித்த விதம், அவர் தன மனைவியை சந்தித்த விதம், தற்போது அவர் மகன் எப்படி கால்பந்து வீரனாக இருக்க முயன்று கொண்டு இருப்பது முதல் அனைத்தையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.

balloon grad

இந்த பட்டமளிப்பு விழாவில் என் மகள் நாடகக் கதை வசனம் எழுதுவதில் முதுகலைப் பட்டம் பெற்றாள். இந்த வகுப்பில்  வருடத்திற்கு மூன்று பேர்களை தான் இந்தக் கல்லூரி சேர்த்துக் கொள்ளும்.threenames

மிகவும் உழைத்து மகள் வாங்கிய பட்டத்தை எண்ணி எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதில் அவளின் இரு நாடகங்கள் அமெரிக்க அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசை வென்று Feb 2014 ல் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படப் போகிறது. இது பெரிய பேறு.

madgrad

அவளின் பரிசுப் பெற்ற நாடகத்தை முதல் முறையாக நாங்கள் அவள் கல்லூரி நடத்திய Drama readingல் கேட்டோம். ரொம்ப நகைச்சுவையாகவும் கடைசியில் நெகிழ்ச்சியாகவும் இருந்தது நாடகக் கதை.

reading2

நாங்கள் வாழ்ந்த சான் ஹோசே என்ற நகரத்திற்குச் சென்று எங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க எண்ணியிருந்தோம். அதன் படி இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின் ஐந்து மணி நேரக் கார் பயணத்தில் சான் ஹோசே சென்றடைந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு பல நண்பர்களையும் பல உறவினர்களையும் சந்தித்தோம். ஐந்து நாட்கள் அந்தப் பகுதியில் இருந்தும் எங்களால அனைவரையும் சந்திக்க முடியவில்லை. எங்கள் நண்பர்களின் குழந்தைகள் வளர்ந்து நல்ல வேலைகளிலும் திருமணம் முடித்த நிலையிலும் இருந்தனர். சில நண்பர்கள் வேலை இழந்து வயதின் காரணமாக இன்னொரு வேலை கிடைக்காமல் இருந்தது மனத்துக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால் எப்படியோ சமாளித்து பல்வேறு செயல்பாடுகளில் பங்களித்துக் கொண்டு மகிழ்ச்சியாகத் தான் தோன்றினார்கள்.

ஊர் முற்றிலும் மாறியிருந்தது. அது இயற்கையே. பல புதிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. ட்வீட்ட்ர் @rskumaran ஐயும் அவர் மனைவியையும் அங்கு சந்தித்தோம். அவர் விருந்தோம்பல் அவ்வளவு அருமை! புதுமணத் தம்பதிகளான அவர்கள் சில வருடங்களில் தாய் நாடு திரும்பும் எண்ணத்தில் உள்ளனர். அதே நடக்க என் வாழ்த்துகள் 🙂 அவரின் வீட்டு சுவாமி மாடப் புகைப்படம் கீழே 🙂

rskumaran

என் முன்னாள் உறவினர் ஒருவரின் வீடு தீப்பிடித்து எரிந்து அவரை வாடகை வீட்டில் சந்தித்தது ஒரு சோகம். ஆனால் காப்பீட்டுத் தொகை திரும்பவும் வீடு கட்ட ஒரு 90% ஆவது உதவும் என்று அவர் கூறியது ஒரு ஆறுதல். ஏன் முன்னாள் உறவினர் என்று எழுதியுள்ளேன் என்று நினைக்கிறீர்களா? அவர் எங்கள் உறவினரை விவாகரத்து செய்தவர். இன்னொரு தோழியின் வீட்டில் திடீரென தண்ணீர் பைப் வெடித்து தண்ணீரின் கனம் தாங்காமல் பாத் டப் முதல் மாடியிலிருந்து விழுந்து உடைந்து கீழ் தளத்தின் கூரையிலும் தரையிலும் பெரிய ஓட்டைகள். தெய்வாதீனமாக யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை. இந்த ரெண்டு நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுவதன் காரணம் அங்கே வீடுகள் மரத்தால் ஆனவை. ஆதாலால் தீயில் நிமிஷமாகக் கருகிவிடக் கூடியவை, தண்ணீரின் டாமேஜையும் தாங்காதவை.

கணவருடன் நிறைய ஷாப்பிங் செய்தேன் 🙂 எனக்கு நண்பர்கள் அதிகம். அதனால் சின்ன சின்னப் பொருட்களாக நிறைய வாங்கினேன். அங்கே நிறைய மிகப் பெரிய மால்கள் உள்ளன. ஆனால் என்ன நடந்து நடந்து கால்கள் அசந்து போய்விடுகின்றன. மேலும் இங்கே சென்னையில் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன, இன்னும் விலை குறைவாக! அங்கு சென்று வந்தால் ஏதாவது வாங்கிவரவேண்டும் என்ற கட்டாயத்தால் வாங்கினேனே தவிர நான் பார்த்த வரையில் நம் தேவைகேற்றப் பொருட்கள் இங்கே நன்றாகக் கிடைக்கின்றன.

சான் ஹோசேயில் நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டைச் சென்று பார்த்தோம். சின்ன மாறுதல்கள் தான் செய்திருந்தார்கள். வீடு நன்றாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் என்னை நினைவில் வைத்துக் கொண்டிருந்தது தான்! அவரும் வீட்டை மாற்றாமல் இருந்தது இன்னொரு ஆச்சர்யமே 🙂 அங்கு நான் எடுத்துக் கொண்டப்  புகைப்படம் கீழே .

HermaSt

LA யில் வெனிஸ் நகரைப் போலவே ஒரு இடத்தை ஒரு செல்வந்தர் உருவாக்கி வைத்துள்ளார். அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பழமையான கலாச்சாரம் போல் ஒன்றும் இல்லாததால் அவர் இதைச் செய்தாராம். நடுவில் நீரோடை. இரண்டு பக்கமும் மில்லியன் டாலர் வீடுகள் 🙂

venice canal

என் மகள் சான் டியேகோ என்னும் ஊருக்கு இன்னொரு உறவினரைப் பார்க்க அழைத்துச் சென்றாள். அது மெக்சிகோ நாட்டின் பார்டரில் உள்ளது. லாஸ் ஏஞ்சலஸ், மற்றும் கலிபோர்னியா மாகாணம் முழுவதுமே ஒரு காலத்தில் மெக்சிகோவைச் சேர்ந்தது தான். அதனால் ஸ்பானிஷ் பேசும் மெக்சிகோவில் இருந்து வந்தவர்கள் தான் இங்கே அனேகமாக உள்ளனர். இங்கிருந்தால் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக் கொள்வது நல்லது. சான் டியேகோவில் ஒரு வார இறுதித் தங்கினோம். அங்கு சென்னையைச் சேர்ந்த ட்வீட்டர் @dagalti ஐ சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கு சந்திக்காமல் அங்கு சந்தித்தது மகிழ்ச்சியே 🙂 கீழே உள்ளப் புகைப்படம் சான் டியேகோ கடற்கரையில் எடுத்தது.

sandiego

என் மகள் இன்னும் மூன்று ரூம் மேட்டுகளுடன் ஒரு வீட்டில் தங்கியுள்ளாள். அனைவருமே ரொம்ப நல்லப் பெண்கள். அதில் ஒருவர் தமிழ். அவருக்கும் நான் ட்விட்டர் வந்ததும் முதலில் பாலோ செய்த @complicateur க்கும் காதல் திருமணம் நடக்க இருக்கிறது. காம்ப்ளிகேடர் மிகப் பெரிய ராஜா விசிறி, தமிழ் ஆர்வலர். அங்கு இருந்த போது அவரும் நானும் பல தமிழ் படங்களை இணையத்தில் பார்த்து ரசித்தோம் 🙂

இன்னொரு ரூம் மேட் கொரியா நாட்டு வம்சாவளிப் பெண் . மகா நல்ல பெண். இதை நான் பல முறை சொல்லி சொல்லி என் மகள் ரொம்ப கடுப்பாகிவிட்டாள். தினம் வேலைக்குச் செல்லும் முன் எனக்கு குனிந்து வணக்கம் கூறிவிட்டுத் தான் செல்வாள். இன்னொரு பெண் அமெரிக்கன். அவளும் இருக்கும் இடமே தெரியாது. அவர்கள் பொதுச் சமையல் அறையில் அவரவர் பொருட்களை வைத்துக் கொண்டு அழகாக சமைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்வதைப் பார்க்க, இதே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை குடும்ப சூழலிலும் அவர்கள் பின்னாளில் கடைப்பிடித்தால் அவர்களின் குடும்ப வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.

LA யில் மிகப் பெரிய ரோஜா தோட்டத்திற்கும் சென்று வந்தேன். அங்கு பலதரப்பட்ட ரோஜா தோட்டத்தைத்  தவிர பலவித நாட்டைச் சேர்ந்த தோட்ட வகைகளையும் உருவாக்கிப் பராமரிக்கின்றனர். அதில் ஒரு படம் கீழே!

rosegarden

நான் சியாட்டிலில் இருந்தபோது மழை, உடல் நலமின்மை, காரணமாக வாக்கிங் அதிகம் செல்லவில்லை. அனால் LA யில் இருந்தவரை தினமும் செல்ல முடிந்தது. LAயில் மழையே கிடையாது. ஆடிக்கொரு முறை தான் பெய்யும். இருந்தும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன! அங்கு நான் எடுத்தப் புகைப்படங்களைத் தான் நான் இப்பொழுது தினம் ஒரு பூ படமாக ட்விட்டரில் போட்டு வருகிறேன்.

என் மகளின் professor (HOD) என்னை மதிய உணவுக்கு அழைத்து என் மகளின் எதிர்காலம் பற்றிப் பேசியது கல்லூரி மாணவர்கள் மேல் ஆசிரியர்களுக்கு உள்ள ஈடுப்பாட்டினைக் காட்டியது. நான் என் மகளின் முன்னாள் மேனேஜரையும் சந்தித்தேன். அவரும் என் மகளுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதைப் பற்றி என்னுடன் பேசினார்.

விருந்தினரகாச் சென்று வந்ததினால் எனக்குப் பொறுப்பு அதிகம் இல்லை. ஆயினும் நான் தங்கியது என் பிள்ளைகள் வீட்டில் என்பதால் அவர்கள் பொறுப்புடன் இல்லாத விஷயங்களில் நான் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனாலும் அது சுகமான சுமை தான். பொதுவில் அமேரிக்கா நான் 22 வருடங்கள் முன் இருந்ததை விட பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்தியர்களுக்குத் தேவையான அனைத்தும் இப்பொழுது முன்பைவிட எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. ஒரு இந்தியத் திருமணத்தையே ரொம்ப எளிமையாக இப்பொழுது அங்கே நடத்தி விட  முடியும். கோவில்கள் அத்தனை அருமை பெருமையாக உள்ளன! கீழே LAயில் உள்ள மாலிபு சிவா விஷ்ணு கோவில் புகைப்படம்.

malibu temple

இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் வரைக்கும் அமெரிக்கா சொர்க்க பூமி. மிகவும் பிரயாசைப்பட்டு மெனக்கெட்டு திரும்பி வரவேண்டும் என்று உள்ளப் பூர்வமாக நினைப்பவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்பி வருவர். உடல் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் யார் தயவும் அங்கு தேவை இல்லை. அதனால் உறவினர்கள் தேவை தெரிவதில்லை. மேலும் உறவினர்கள் இடத்தை நண்பர்கள நிரப்பிவிடுகின்றனர். நண்பர்களிடம் இன்னும் மனத்தில் பட்டதை சொல்லும் சுதந்திரமும் உள்ளது. அதனால் உறவினர்கள் பிடுங்கல் இல்லாமல் அங்கு வாழ்வது பலருக்கு வசதியாகவே உள்ளது. மேலும் நிறைய குடும்பங்களில் சகோதர சகோதரிகள் அனைவருமே அங்குக் குடிபெயர்ந்து இருப்பதால் இந்தியா எப்போதேனும் ஒரு முறை வந்து சென்றாலே பலருக்குப் போதுமானதாக உள்ளது.

அங்கு பிறந்து வளரும் குழந்தைகள் அமெரிக்கர்கள் தான், சந்தேகமே இல்லை. நிறமும் சாயலும் இந்தியன் என்று சொல்லும் அவ்வளவே. அவர்களின் எண்ணங்கள் அந்த நாட்டுப் பண்பாட்டை ஒத்தே இருக்கிறது.

நான் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நாள் வந்ததும் மகளை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் தலைத் தூக்கியது.  சியாட்டிலில் இருந்துக் கிளம்பும் போதும் இதே வருத்தம் இருந்தது.

A parent must learn to cut the apron strings at the right time to let the children grow independently, no matter how much it hurts. பகவத் கீதையும் அதைத் தான் சொல்கிறது. பாதையை வகுத்துக் கொடுத்தப் பின் அவரவர் வாழ்க்கை அவரவர் தான் வாழவேண்டும்.

42 Comments (+add yours?)

 1. Sudharsan (@vSudhar)
  Jul 09, 2013 @ 10:40:41

  //ஏன் முன்னாள் உறவினர் என்று எழுதியுள்ளேன் என்று நினைக்கிறீர்களா? அவர் எங்கள் உறவினரை விவாகரத்து செய்தவர்// :))

  எழுதுவது இப்போ உங்களுக்கு ரொம்ப எளிதாயிடுச்சு. யாரோ இயல்பா முன்னாடி உட்கார்ந்து பேசுறது போல இருந்துச்சு

  Reply

 2. elavasam
  Jul 09, 2013 @ 10:41:21

  நல்ல பதிவு! மகள் படத்தைப் போட்டு மகனைப் புறக்கணித்ததற்கு வன்முறையான கண்டனங்கள்! போனில் பேசியவர்கள் பட்டியலைக் காணோமே!! :))

  Reply

 3. Arumugam
  Jul 09, 2013 @ 11:04:22

  யாரோ இயல்பா முன்னாடி உட்கார்ந்து பேசுறது போல இருந்துச்சு

  Reply

 4. nradhakn
  Jul 09, 2013 @ 11:49:52

  நல்ல பதிவு! என்னடா முன்னாள் உறவினர்ங்கறாங்களேன்னு யோசிக்கையில் அடுத்த வரியிலேயே விளக்கிவிட்டீர்கள். 🙂 மேலும் பல பயணங்கள் இதுபோல் அமையட்டும்.

  Reply

 5. Mathan (மதன்.க) (@kmathan)
  Jul 09, 2013 @ 12:03:13

  அழகான பதிவு …நீரோடை போன்ற தெளிவு .
  // A parent must learn to cut the apron strings at the right time to let the children grow independently, no matter how much it hurts // நிஜம் தான்

  Reply

 6. ILA (a)இளா
  Jul 09, 2013 @ 13:17:47

  Well written Travelogue (?!)

  Reply

 7. Blogeswari
  Jul 09, 2013 @ 14:44:21

  Semmaya ezhudi irukkeenga. Very well written, Ma’am!

  Reply

 8. Gowtham
  Jul 09, 2013 @ 16:05:23

  அவன் தெருவில் மட்டுமே நான்கு பார்கள்!//

  கரெக்ட்டான அபர்ட்மெண்ட்ட தான் சூஸ் பன்னிருக்கிறார் அவ்வ்வ்…:-)))))))
  ********************************************
  இந்த பட்டமளிப்பு விழாவில் என் மகள் நாடகக் கதை வசனம் எழுதுவதில் முதுகலைப் பட்டம் பெற்றாள். இந்த வகுப்பில் வருடத்திற்கு மூன்று பேர் தான் இந்தக் கல்லூரி சேர்த்துக் கொள்ளும்.//

  என்னுடையா பெரிய வாழ்த்துக்களை மறக்காமல் கூறிவிடுங்கள்..:-))))))
  *********************************************

  கணவருடன் நிறைய ஷாப்பிங் செய்தேன் 🙂 எனக்கு நண்பர்கள் அதிகம். அதனால் சின்ன சின்னப் பொருட்களாக நிறைய வாங்கினேன் //

  அதில் ஒரு கைக்கடிகாரம் எனக்காக இடம் பெற்றதற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா..:-)))
  *************************************************

  நான் தங்கியது என் பிள்ளைகள் வீட்டில் என்பதால் அவர்கள் பொறுப்புடன் இல்லாத விஷயங்களில் நான் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனாலும் ****அது சுகமான சுமை தான்.***** //

  அது உங்கள் கடமையும் கூட ..!!!
  ***************************************************************

  பொதுவில் அமேரிக்கா நான் 22 வருடங்கள் முன் இருந்ததை விட பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்தியர்களுக்குத் தேவையான அனைத்தும் இப்பொழுது முன்பைவிட எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. ஒரு இந்தியத் திருமணத்தையே ரொம்ப எளிமையாக இப்பொழுது அங்கே நடத்தி விட முடியும். //

  நானெல்லாம் எப்போது அமெரிக்கா செல்வேன் என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தைகள்..!!!!

  ******************************************************************

  நான் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நாள் வந்ததும் மகளை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் தலைத் தூக்கியது. சியாட்டிலில் இருந்துக் கிளம்பும் போதும் இதே வருத்தம் இருந்தது.//

  நெகிழ்ச்சி மா…!!!

  @HarryGowtham

  Reply

 9. வடுவூர் குமார்
  Jul 09, 2013 @ 16:08:48

  வாவ்! படிக்க படிக்க யோரோ நேரிடையாக பேசுவது போல் இருந்தது.

  Reply

 10. அர்ஜுனன் பாலக்காடு
  Jul 09, 2013 @ 17:13:44

  ரசிகர்களின் விருப்பதிற்கிணங்க பதிவு எழுதியமைக்கு நன்றிகள். இந்தப்பதிவில் நான் உணர்ந்தது வெறும் அமெரிக்கா மட்டுமல்ல.. :))

  Reply

 11. Uma Chelvan
  Jul 10, 2013 @ 00:40:47

  Beautiful. nice write up. Kudos.

  Reply

 12. Indran
  Jul 10, 2013 @ 01:38:50

  எங்களையும் அமேரிக்காக்கு கூடவே கூட்டிட்டு போன மாதிரி இருந்தது :))

  Reply

 13. LKG (@chinnapiyan)
  Jul 10, 2013 @ 01:56:48

  ரொம்ப இன்ஃபர்மேடிவ்வாகவும் சுவாரஷ்யமாகவும் இருந்தது. மொத்தத்தில் பெருமை, சந்தோசம், துக்கம் எல்லாம் சரியான கலவையில் கலந்திருந்தது. படித்து முடித்தபின், உங்கள் கருணை உள்ளம், இரக்கசுபாவமே என் மனதில் மேலோங்கி இருந்தது. இறைவன் உங்கள் குடும்பத்திற்கு மேலும் மேலும் சிறப்பையும் அருளையும் வாரி வழங்கட்டும். நன்றி.

  Reply

 14. Arasu ™ (@arivukkarasu)
  Jul 10, 2013 @ 02:39:05

  Enjoyed reading. Thank you madam !

  Reply

 15. ரசனைக்காரன் (@Rasanai)
  Jul 10, 2013 @ 02:51:03

  அமர்க்களம்ம்மா..I concur with the final paragraphs totally :))

  Reply

  • amas32
   Jul 10, 2013 @ 03:07:13

   ரசனைக்காரர் அமர்க்களம் என்று சொன்னால் பெரிய பெருமை எனக்கு 🙂 நன்றி 🙂

   Reply

 16. Rex Arul
  Jul 10, 2013 @ 03:03:15

  அருமையான பதிவும்மா. வாழ்த்துக்கள்.

  உரையாடிக்கொண்டே போவது போல அருமையான நடை. புகைப்படங்கள் வேறு பாயாசத்தில் முந்திரி திராட்சையாக 😉

  உங்களிடம் தொலைபேசியில் வெகு நேரம் உரையாடியது, இன்னும் நெஞ்சில் நீங்காமல் பசுமையாக இருக்கிறது.

  என்னது? டாக்டருக்கு படிக்கலியா? எஞ்சினியருக்கும் இல்லியா? வக்கீலுக்கும் இல்லியா? என்னது? வெறும் Fine Artsஆ என்று அவரவர் மேதைமையைக் காட்டும் போக்கிரித்தனம் இங்கு இல்லாதது, இங்கு பயில வரும் அனைத்து மாணாக்கருக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும் பெருமையே. அங்கு தான் அமெரிக்காவின் பெருமையே இருக்கிறது. எல்லா படிப்புக்கும் மரியாதை உண்டு.அதிலும் உங்கள் மகள் பயிலும் படிப்புக்கு இருக்கும் மவுசும், போட்டியும், எஞ்சினியரிங் மட்டும் அறிந்தவர்களுக்கு MIT மற்றும் Georgia Tech போன்றது என்று புரியும். இருந்தும் Fine Artsக்கு எல்லாம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் பல நாடுகள் அறிந்து இருப்பது இல்லை. அது ஒரு வகையில் அமெரிக்காவுக்கு ஆதாயம் ஆகிவிடுகிறது. மற்ற நாட்டில் இருந்து இங்கு வந்து பயிலும் மாணவர்கள் அதைத் தானே நாடி வருகிறார்கள். அந்த வகையில், குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து, அதை ஆதரித்து, அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களை இங்கே அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்து படிக்க வைத்தது, உங்களின் பெருந்தன்மையையும், வாழ்வின் புரிதலையும் காட்டுகிறது.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  வாழ்க வளமுடன்.

  Reply

  • amas32
   Jul 10, 2013 @ 03:11:38

   ரொம்ப நன்றி ரெக்ஸ் 🙂 நீண்ட பின்னூட்டம் இட்டு உங்கள் எண்ணங்களைப்
   பகிர்ந்தமைக்கு நன்றி 🙂 எனக்குக் கடவுள் பெரிய வரத்தை அருளியுள்ளார் –
   எனக்கு சூப்பர் நண்பர்கள் 🙂 நன்றி!

   Reply

 17. http://twitter.com/axpn
  Jul 10, 2013 @ 04:16:15

  பதிவுக்கு நன்றி !! கோட்டு கோபி பாணியில் ‘வேற வேற’ இன்னமும் எதிர்பார்த்தேன் 🙂

  சிங்கம் பார்ட் 2 மாதிரி, இதற்கு பார்ட் – 2 எதிர்பார்க்கிறேன், கடைசி சில பாராக்களில் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள். நான் எதிர்பார்த்தது வேற 🙂

  அங்கு வாழும் தற்போதைய இந்தியர்களின் வாழ்வியல் முறை (குடும்பங்கள்), (Vs சீனர், அந்நியர்) — அதையும் தற்போது சென்னை/தமிழகம்/இந்தியாவில் நமது குடும்பங்கள் வாழும் முறை (கொசுக்கடி, கரெண்ட் இல்லை, டிராபிக் பற்றியதல்ல) பற்றிய அலசல்களை எதிர்பார்த்தேன்.

  (மகளின் படத்தை எடுத்துவிடவும்)

  Reply

 18. Sarath Chandar (@sarathchandar)
  Jul 10, 2013 @ 07:06:12

  Nice write up ma.
  //உடல் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் யார் தயவும் அங்கு தேவை இல்லை.//

  Thought provoking to people like us who are in US. I wish I could have met you. I live in Fremont.

  Reply

 19. Sudha
  Jul 10, 2013 @ 14:06:34

  பாதையை வகுத்துக் கொடுத்தப் பின் அவரவர் வாழ்க்கை அவரவர் தான் வாழவேண்டும். – very true 🙂 @sweetsudha1

  Reply

 20. Saba-Thambi
  Jul 11, 2013 @ 14:11:24

  Enjoyed the post as I have listened in person

  Reply

 21. உமாக்ருஷ் (@umakrishh)
  Jul 11, 2013 @ 15:13:30

  //A parent must learn to cut the apron strings at the right time to let the children grow independently, no matter how much it hurts. பகவத் கீதையும் அதைத் தான் சொல்கிறது. பாதையை வகுத்துக் கொடுத்தப் பின் அவரவர் வாழ்க்கை அவரவர் தான் வாழவேண்டும்.//

  வெறும் வாய் வார்த்தைக்காக நட்புக்காக அலங்கார வார்த்தைகளாக சொல்லல.உள்ளார்ந்து சொல்றேன்.பெருமைக்குரிய பெற்றோர் பெருமைக்குரிய பிள்ளைகள்.என் பள்ளியில் இந்தப் பள்ளியால் நான் பெருமையடிகிறேன் என்னால் இந்தப் பள்ளி பெருமையடைகிறது என்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருக்கும்.அது போன்றதொரு குடும்பம் உங்களுடையது.செடியை நட்டு அது நன்றாக வளர்வதற்கு உரிய சூழலை உருவாக்கி விட்டால் போதும்.மீதி தன்னால் நடக்கும்.ஒரு பெற்றோராக உங்கள் கடமையையும் செய்து பிள்ளைகளின் உணர்வையும் மதித்து பிரிதலின் கொடுமையையும் சகித்து நீங்கள் நடந்து கொண்டதாகட்டும் உங்கள் பிள்ளைகள் அதை உணர்ந்து மிக சமர்த்தாக ஒரு மகனாக ஒரு மகளாக ஒழுக்கமாகவும் நன்றாகவும் படித்து தன்னைப் பார்த்துக் கொள்ளுதலே பெற்றோருக்கு பெரும் பேறு அதை சரியாக முறையாகச் செய்ததாகட்டும் சற்றே பொறாமைப் பட வைக்கும் குடும்பம் உங்களுடையது.ஏக்கமாக இருந்தாலும் இது நட்பாக அமையப் பெற்றதே எனக்கு மிக மகிழ்வுக்குரிய ஒன்றாக நினைக்கின்றேன்.ஏதேனும் பதிவு என்றால் எழுத சோம்பல்பட்டு அப்படியே போடறேன்.ஆனால் மறக்காமல் உங்கள் அனுபவங்களை சுவையாக பகிர்வது நிறைவாக இருக்கின்றது 🙂

  Reply

  • amas32
   Jul 11, 2013 @ 15:51:30

   உமா, ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பின்னூட்டம். ரொம்ப நன்றி.
   எவ்வளவு அருமையா எழுதியிருக்கீங்க. உங்களை நான் தோழியா அடைந்துலேயும் மட்டற்ற
   மகிழ்ச்சி. அது இறைவன் எனக்குக் கொடுத்த வரம் 🙂 நன்றி!

   Reply

 22. GiRa ஜிரா
  Jul 17, 2013 @ 15:26:42

  வணக்கம் அம்மா..

  இந்தப் பதிவை முன்பே படித்து விட்டேன். ஆனாலும் பின்னூட்டம் இட முடியாமல் வேலைப்பளு.

  பதிவைப் படிக்கும் போது ஒரு நல்ல குடும்பக்கதையை தொலைக்கட்சியில் பார்ப்பது போன்ற உணர்வு.

  உங்கள் அனைவரையும் முருகக் கடவுள் நல்லபடி பார்த்துக்கொள்ளட்டும். வாழ்க.

  Reply

 23. Kannabiran Ravi Shankar (KRS)
  Jul 26, 2013 @ 03:50:19

  //A parent must learn to cut the apron strings at the right time to let the children grow independently, no matter how much it hurts.
  பாதையை வகுத்துக் கொடுத்தப் பின் அவரவர் வாழ்க்கை அவரவர் தான் வாழவேண்டும்//

  வைர வரிகள்!
  கந்த சட்டிக் கவசம் சொல்லலீன்னாக் கூடப் பரவாயில்ல; ஆனா இந்த வரிகளை, ஒவ்வொரு பெற்றோரும் தினமும் சொல்லிக் கொள்வது நல்லது!
  ——

  When we truly love a person, we “respect” their own course of life, even it might have mistakes; We “respect” their mistakes as well!

  “சொந்தக் காரங்க முன்னாடி கவுரவமா இருக்கணும், மற்ற குடும்பம் போலத் தன் குடும்பத்திலும் இயல்பாவே எல்லாம் நடக்கணும்”
  – போன்ற எதிர்பார்ப்புகளில் தான், பெற்றோர்->மற்றோர் ஆகிப் போகிறார்கள்!:(

  Children are NOT born FOR u
  Children are just born THROUGH u

  எல்லோருக்கும் இப்படியொரு “புரிதல்” வாய்ப்பதில்லை!
  அந்த வகையில், உங்கள் பிள்ளைகள், செல்வம் உடையவர்களே (“மக்கட் செல்வம்”)

  Even though children might not show outwardly, they carry a “deep bonding” for such parents!
  = இதை விட ஒரு பெரிய வரமோ/ சொத்தோ, ஒங்களுக்கு (பெற்றோர்க்கு) அமைந்து விடுமா என்ன?
  ——

  Reply

  • amas32
   Jul 26, 2013 @ 04:04:38

   KRS, நீங்கள் எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல், மாலனுக்கு, மால் மருகனுக்கு, எனக்கும்
   அந்த கொடுப்பினை உண்டு.
   உங்கள் பின்னூட்டம் எனக்கு டானிக், நன்றி 🙂

   Reply

 24. amas32
  Jul 26, 2013 @ 04:05:51

  நிச்சயம் நிறைவேறும், எனக்கும் அந்த ஆசை உண்டு :-))

  Reply

 25. kamala chandramani
  Aug 06, 2013 @ 06:52:14

  அருமையான பதிவு. அமெரிக்காவிற்கு நேரில் உங்களுடனே வந்ததுபோல், ஒரு உணர்வு. படங்களும் அதற்கு உதவின. பிரிவுகள் தவிர்க்க முடியாதவை. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது உங்களிடம். வாழ்த்துகள்.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: