நான் இஞ்சினீயர் கிடையாது, ஆனால் விஜய் நடனமாடும்போது fluid mechanics பற்றி என் மனம் ஆட்டோமாடிக் ஆக நினைக்கிறது. என்ன மூவ்மெண்ட்ஸ்! அவர் உடம்பு இரத்தமும் தசையுமால் ஆனதா அல்லது ரப்பரால் செய்யப்பட்டதா? நீரோட்டம் போல் உள்ளது ஒரு ஸ்டெப்பிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் பொழுது. அப்படியொரு ease. அவருக்குத் தோதான நடன இயக்கத்தை செய்வதே ஒரு பெரிய சாலெஞ் தான். சண்டைக் காட்சிகளும் சும்மா பறந்து பறந்து அடிக்கிறார். அடி ஒவ்வொன்றும் நாலு அஞ்சு டன் தேறும்.
இரண்டாம் பாதியில் MGR ஸ்டைலைப் பின்பற்றி சிக்கென டைட் ஷர்ட் போட்டு வருகிறார். அவருக்கு நன்றாக சூட் ஆகிறது. ஆனால் சத்யராஜுக்கு சிவப்பு சால்வை சஜெஸ்ட் செய்த உடையலங்கார நிபுணர் யாரோ? ட்விட்டரில் ஒருவர் சொன்ன மாதிரி ராஜபக்ஷேவை தான் அந்த உடை நினைவு படுத்துகிறது. பாம்பேயில் வாழும் தமிழ் தாதாவுக்கு வேறு உடை யோசித்திருக்கலாம். ஏனென்றால் அதைத் தானே விஜய் கடைசியில் அணிய வேண்டியிருக்கிறது. அதற்காகவாவது கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். கடைசி சீனில் சிவப்பு சால்வையோடு அவர் வரும்போது…. கடுப்புத்தான் வருகிறது.
அமலா பால் ஹீரோயினி. நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் அவருக்கு ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் இல்லை. அதாவது ஆடியன்சுக்கு அவரைப் பார்த்தால் ஈர்ப்பு வருவதில்லை. மேக் அப் இன்னும் கொஞ்சம் நன்றாகப் போட்டிருக்கலாம். படம் முழுக்க டல்லடிகிறார். உடைகளும், வண்ணங்களும் எடுப்பாக இல்லை. ஆனால் இவர் டல்லட்டிப்பதாலோ என்னவோ விஜய் பளபளவென்று தெரிகிறார்.
பிற மொழி படங்களின் ரைட்ஸ் வாங்கி நடித்து நடித்து விஜய்க்கு போரடித்து விட்டதால் தமிழ் பட ரீமேக்கில் இறங்கியுள்ளார் போலும். அதுவும் படம் தயாரிப்பில் எட்டு பேரைத் தயாரிப்பாளராக அறிவித்து ரஜினி படம் எடுப்பது போல இவர் ரீமேக் என்று இறங்கியாச்சு, அப்புறம் எதற்கு ஒரு பட ரீமேக் என்று நாலஞ்சு படத்தை ஒரே படத்தில் எடுத்து முடித்துவிட்டார். எனக்குத் தெரிந்து நாயகன், புதிய பறவை, தேவர் மகன் இவற்றின் கலவை தலைவா. ஆங்காங்கே வேறு சில படங்களின் சீன்களும் தெரிந்தன.
ஆஸ்திரேலியாவில் எல்லாம் போய் எடுத்திருக்கிறார்கள். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. தமிழ் பசங்க பாடல் சுமார். வாங்கண்ணா வணக்கங்கண்ணா, தலைவா தலைவா, யாரிந்த சாலையோரம்.. ஆகிய மூன்று பாடல்களும் நன்றாக உள்ளன. பின்னணி இசையெல்லாம் சும்மா வெறும் சத்தம் தான்.
சத்யராஜ் இந்த வயதிலும் நல்ல fit ஆக உள்ளார். அவர் பாத்திரத்திலும் depth இல்லாததால் சோபிக்கவில்லை. காமெடிக்கு சந்தானம். அவர் ஹேர் ஸ்டைல் சுத்தமா நன்றாக இல்லை. ரொம்ப குறைந்த அளவு தான் காமெடி சீன்ஸ். எதோ சிரிக்க வைக்கிறார்.
இயக்கம் சரியில்லை. முதல் பாதி ஜவ்வு மிட்டாய். விஜய் நடனத்தை பாஷனாகக் (passion) கொண்டுள்ளார் என்று கதைப்படி சொல்லும் போது இன்னும் நன்றாக அவரின் ப்ளஸ் பாயிண்டை வைத்து கதையை நகர்த்தியிருக்கலாம். சரி வேற எதுக்கும் தான் சிரமப்படவில்லை. க்ளைமேக்சுக்காவது கொஞ்சம் மூளையைக் கசக்கியிருக்கலாம் இயக்குனர் விஜய். பொன்வண்ணன் செய்வதெல்லாம் கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை.
விஜய் நிறைய உழைத்திருக்கிறார். கூடவே அனைத்து டெக்னிஷியன்களும். என்ன பிரயோஜனம். கதையில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டாமா? நடிகர்கள் இத்தனை fan following வைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் social responsibility யோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் தவறா? புரியவில்லை.
இந்தப் படம் திமுக ஆட்சயின் போது வந்திருந்தால் தளபதி, எங்கள் தளபதி பாட்டுக்காக தடை செய்யப்பட்டிருக்கும். அதிமுக ஆட்சி என்பதால் Time To Lead தடைக் கல்லாயிற்று!