
ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சிக்குப் பதினைந்து நாட்கள் முன்னதாகவே டிக்கெட்டை முன் பதிவு செய்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கி விட்டோம். நானும் என் கணவரும் திரைப்படங்களுக்குச் செல்லும் அளவு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வது வழக்கமில்லை. A.R ரஹ்மான் கான்செர்ட்டிற்கு டிசெம்பர் 2012ல் குடும்பத்துடன் சென்று மழையில் நனைந்து ரசித்து மகிழ்ந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. அதில் முக்கிய ஆனந்தம் எங்கள் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்ததால் கொட்டும் மழையிலும் நிகழ்ச்சியை வெகுவாக ரசிக்க முடிந்தது. ராக் கான்செர்ட் போன பீல் 🙂
ஆனால் ஷ்ரேயா இசை நிகழ்ச்சி சர் முத்தா வேங்கடசுப்பா ராவ் உள்ளரங்கில். அதனால் மழை வந்தாலும் கவலை இல்லை 🙂 மிகவும் நவீன அரங்கம். 5000 ரூபாயில் இருந்து டிக்கெட்டுக்கள் விற்பனை! அடுத்து 3000, 2000, கடைசி வகுப்பு பால்கனி 750 ருபாய். அதுவே போதும் என்று தீர்மானித்து பால்கனியில் நல்ல இருக்கைகளைத் தேர்ந்தெடுத்து விளம்பரம் வந்த முதல் நாளே இருக்கைகளை பதிவு செய்துவிட்டோம்.
இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முக்கியத் தூண்டுதல் ட்விட்டரில் உள்ள @vrsaran , @kanapraba and @ikaruppu எப்பொழுதும் ஷ்ரேயாவைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் அடையும் எல்லையில்லா ஆனந்தத்தின் காரணத்தை அறிய இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டோம்!
டிராபிக்கிற்குப் பயந்து நிகழ்ச்சிக்கு ஒண்ணரை மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பியும் போய் சேர ஒரு மணி நேரம் ஆனது. டிக்கெட்டை வாங்கிக் கொண்டு கொஞ்சம் சிற்றுண்டியும் அருந்தி இருக்கைக்குப் போய் அமர்ந்தோம். பால்கனியாக இருந்தாலும் மிகவும் நாள் வியு! ஒரு முறை அரங்கத்தை மேலேயிருந்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ஒரு சிறுமியைப் போல எனக்குள் குதுகலம். ரொம்ப நேரம் காக்கவைக்கவில்லை. குறித்த நேரத்தில் 7.30pm நிகழ்ச்சித் தொடங்கியது. அதற்கு முன் நான் அரங்கத்தில் இருந்து ட்வீட்டியத்தை வைத்து கருப்பும் எங்களைக் கண்டுப்பிடித்து வந்து பேசினார். ரொம்ப தேட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் முன் ரோவில் இருந்தார் :-))
முதலில் இரு பாடல்களைப் பாடியது ரிஷி என்ற வடநாட்டு சூப்பர் சிங்கர் வின்னர். அவர் தான் நிகழ்ச்சி முழுவதும் ஆண் குரலுக்குப் பாடியவர். மக்கள் பொறுமை இழக்க ஆரம்பிக்கும் முன் ஷ்ரேயா பாடிக் கொண்டே அரங்கத்தில் என்ட்ரிக் கொடுத்தார். தேவதை மாதிரி இருந்தார். கருப்பு நிற கால் டைட்ஸ். மேலே கருப்பில் வெள்ளி ஜரிகையால் ப்ரோகேட் செய்யப்பட முழுக் கை டாப்ஸ். முதுகு வரை கட்டபடாத நீள கருங்கூந்தல். காலில் வெள்ளி நிறத்தில் பின்னலுடனான ஸ்டிலெடோஸ் வைத்த செருப்பு.
செம எனர்ஜி! துளிக் கூட மூச்சு வாங்காமல் நளினமாக மேடையில் சில அசைவுகளுடன் நடனமாடிக் கொண்டே தான் பாடினர். வரிசையாகப் பல ஹிந்திப் பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக, கொஞ்சம் கூட இடைவெளி விடவில்லை. பலப் பாடல்கள் சோலோ நம்பர்கள் தான். அவர் முதல் முதலில் தேவதாஸ் படத்திற்குப் பாடிய பாடலையும் பாடினர். அவர் போட்டுக் கொண்டிருந்த வெள்ளி ஜரிகை உடைக்கு ஈடாக அவர் குரல் வெள்ளிக் கம்பியாக சிலிர்த்து ஒலித்தது. அனாயாசமாக உயர்ந்த பிட்சைப் பிசிறில்லாமல் எட்டிப் பிடித்தார். ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் ஆடியன்சுடன் பேசினார். பதில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
திராவிட இயக்கத்தின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு சமயத்தில் பள்ளியில் படித்தமைக்கு மிகவும் நொந்து கொண்டேன். ஹிந்தி ஒரு வார்த்தைப் புரியவில்லை. பள்ளிப் பருவத்திலாவது அமிதாப்பின் விசிறியாக இருந்து நிறைய ஹிந்திப் படங்கள் பார்த்துக் கொஞ்சம் மொழிப் பரிச்சியமாவது இருந்தது. இப்போ சுத்தமாக டச் விட்டுப் போச்சு. சென்னை எக்ச்பரசில் இருந்து ஒரு பாடலும், நான் பார்த்து ரசித்த சாவரியா படப் பாடலும் அனுபவிக்க முடிந்தது. இசைக்கு மொழி அவசியம் இல்லை தான். ஆனாலும் ஒரு மணி நேரம் ஹிந்திப் பாடல்களையேக் கேட்டுக் கொண்டு தமிழ் பாடலைக் கேட்க ரொம்ப ஏங்கினேன். என் கணவர் தடுத்தும் தமிழ் பாடல் ப்ளிஸ் என்று பால்கனியில் இருந்து இரு முறை கத்திக் கேட்டேன். என் குரல் அவர் காதுகளுக்கு எட்டாவிட்டாலும் டெலிபதியாக அவரை சென்று அடைந்து முதல் தமிழ் பாட்டாக முன்பே வா என் அன்பே பாட்டைப் பாடினர். பாடுவதற்கு முன்பு நான் பாடிய எல்லா மொழி பாடல்களிலும் இந்தப் பாடலே எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் என்று சொன்னார். ஆனால் என்ன ஒன்று, இது தமிழில் உள்ளது என்றார். அங்கே அவரின் தாய் மொழிப் பற்று தெரிந்தது!!
வந்திருந்த ஆடியன்ஸில் 15% தான் தமிழர்கள் என்று நினைக்கிறேன். முழுக்க முழுக்க ஹிந்தி கும்பல். ஒவ்வொரு சீட்டும் டேக்கன், அரங்கம் நிரம்பி வழிந்தது. அவர் நடுவில் ரசிகர்களுடன் உரையாடியதும் ஹிந்தியிலேயே தான் இருந்தது. சில ஆங்கில வார்த்தைகள் நடு நடுவில் பயன்படுத்தியதால் என்ன கேட்கிறார் என்று புரிந்துக் கொள்ள முடிந்தது. கூட்டம் அப்படி ரசித்துப் பாராட்டியது. அவரும் சென்னை ரசிகர்கள் ரொம்ப விவரமானவர்கள், அதனால் இங்கு பாட வரும் போது எப்பொழுதுமே நன்றாகத் தயார் செய்து கொண்டு வருவேன் என்று நிகழ்ச்சி ஆரம்பித்திலேயே கூறினார்.
அடுத்தப் பாடலாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இருந்து பாடினர் – மன்னிப்பாயா . இந்தப் பாட்டைப் பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார். கேட்க எளிமையானப் பாடலாகத் தோன்றினாலும் பாடுவதற்கு மிகவும் கடினமானப் பாடல், அதுவும் மேடையில் பாடுவதற்கு என்று குறிப்பிட்டுச் சொன்னார். A.R ரஹ்மானை மிகவும் புகழ்ந்து பேசினார். அவரின் இசையமைப்பில் முதலில் பாடிய ஹிந்திப் பாடலைப் பாடுவதற்கு முன் எப்படி அவர் இசையமைப்பில் பாடமாட்டோமா என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த போது எனக்கு இந்த நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று கூறி பின் பாடலைப் பாடினர். ரஹ்மான் அவருக்கு நிறைய அருமையானப் பாடல்களை அளித்தது அவரின் பெரும் பாக்கியம் என்றும் கூறினார்.
ஆணுடன் பாடும் எந்த குரலுக்கும் அந்த ரிஷி தான் கூடப் பாடினர். ஆனால் மன்னிப்பாயா பாடலுக்கு ஷ்ரேயா தனியாகவே பாடினர். ஒருவேளை ரிஷிக்கு தமிழ் பாடல் வராதோ என்னவோ. அதி அற்புதமாக அந்தப் பாடலை பாடினர். ஆண் குரலை பாடும் பொது சூப்பர் ஹை பிட்ச் எடுத்துப் பாடினர். இந்த இரு தமிழ் பாடல்களுக்கு மட்டும் தான் iPad பார்த்துப் பாடினர். அனைத்து ஹிந்திப் பாடல்களும் மனப்பாடம். அவர் இசைக் குழு ப்ராக்டிஸ் பண்ணாமல் வந்த ஒரு பாடலை இசையின்றி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாடினர். தேவ கானம் தான். இசையின்றி அவர் குரல் மட்டும் தேனாகக் காதில் பாய்ந்தது. அவர் முற்பிறவியில் என்ன நல்லது செய்தாரோ இந்த குரல் வளத்தைப் பெற! ஆனால் நாமும் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறோம் இவர் குரலில் பாடல்களைக் கேட்டு ரசிக்க!
இடைவேளை என்று தனியாக விடவில்லை. அனால் அவர் பத்து நிமிட ப்ரேக் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி உள்ளேப் போனார். அந்த சமயத்தில் ரிஷி பாடினர். பாவம் அவருக்கு ரொம்ப ரசிகர்கள் இல்லை. நிறைய பேர் அந்த சமயத்தில் வெளியே சென்று வந்தனர். அவர் வேறு உடை மாற்றிக் கொண்டு வருவாரோ என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன், அனால் மேகப் டச்சப் செய்து கொண்டு fresh ஆக அதே உடையில் திரும்ப உள்ளே நுழைந்தார். அவர் சின்ன அசைவுகளுடன் குதித்து குதித்து பாட்டுக்கேற்ப ஆடும் போது கள்ளம் கபடமில்லாத ஒரு சிறு பெண்ணைப் போல எனக்குத் தோன்றினார். ஆரம்பம் முதலே ஆடியன்ஸையும் தன்னோடு பாட வைத்தார். உண்மையாகவே இந்த ஹிந்திக்காரர்கள் நன்றாகப் பாடுகிறார்கள். எவ்வளவு உரக்க அவருடன் பாடி பங்கேற்கிறார்கள் தெரியுமா? மேடை லைட்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. அப்பப்போ அரங்கிலும் விளக்கேற்றி ரசிகர்களையும் அவர்களின் ஆர்வத்தையும் ஷ்ரேயாவுக்குக் காட்டினார்கள். பால்கனி பக்கம் விளக்கு ஏற்றாமல் கடைசியில் போட்ட போது மகிழ்ச்சியுடன் எங்கள் திசையிலும் பார்த்து ஏன் இத்தனை நேரம் அந்தப் பகுதியில் விளக்குப் போடவில்லை என்று செல்லக் கோபமுற்றார்! அதற்கு அவருக்கு எங்கள் ஆரவாரம் பரிசாகக் கிடைத்தது.
நாங்கள் நிகழ்ச்சி முடிய சிறிது நேரம் இருக்கும் போதே கிளம்பிவிட்டோம். அதற்கு முக்கியக் காரணம். அவர் தொடர்ந்து பாடிய ஹிந்தி பாடலால் தான். சென்னையில் நடப்பதால் பல தமிழ் பாடல்கள் நிகழ்ச்சியில் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கிருந்தது. வந்திருந்த கூட்டத்துக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. மேலும் ஷ்ரேயாவுக்கும் தமிழ் பாடல்கள் தேவை என்ற எண்ணம் இல்லை என்றே தோன்றியது. Looked like she was oblivious to that fact. ஆனால் மிகவும் இனிமையான ஒரு மாலைப் பொழுது. கோடான கோடி நன்றி ஷ்ரேயாவிற்கு, அவர் அளித்த இன்னிசை மழைக்கு 🙂 இன்னொரு முக்கிய விஷயம், அவர் புகைப்படத்தில் இருப்பதை விட நேரில் இன்னும் அழகாக உள்ளார் 🙂