படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் ஆண்டனி
பாடல்: கபிலன்
பாடகர்கள்: சுசித் சுரேசன், சங்கீதா ராஜேஸ்வரன்
சுட்டி: http://www.youtube.com/watch?v=-jgfVDYPoNM
கரிகாலன் காலப் போல கருத்திருக்குது குழலு
குழலில்ல குழலில்ல தாஜு மஹால் நிழலு
சேவலோட கொண்ட போல சிவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு
பருத்திப் பூவப் போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
வலம்புரி சங்கப் போல வழுக்குது உன் கழுத்து
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
கார் குழலை கரிகாலன் காலுக்கு இதற்கு முன்னால் யாரவது ஒப்பிட்டு இருக்கிறார்களா தெரியாது, ஆனால் நல்ல கற்பனை! காதலன் சொல்லும் அந்த வரிக்கு காதலி, இல்லையில்லை அந்த கருமை தாஜ் மஹாலின் நிழைலை ஒத்து இருக்கிறது என்கிறாள். காதல் சின்னமான தாஜ் மஹால் மிகப் பெரியக் கட்டிடமும் கூட. அதன் நிழல் அடர்த்தியாகத் தான் இருக்கும்.
சேவலோட கொண்டை நல்ல சிவப்பு நிறம். உதடும் அதே நிறம் என்று சொல்வது மிகவும் பொருத்தம். ஆனால் காதலி தன உதடுகளை மந்திரித்தத் தகடு என்கிறாள். உண்மை தானே? காதலனைக் கிறங்க வைக்கும் செவ்வாய் அவளுடையது, மேலும் அவள் உதடுகள் சொல்வதைக் கேட்டு பூம் பூம் மாடு போல தலையை ஆட்டத் தானேப் போகிறான். அதனால் அவள் உதடு மந்திரித்தத் தகடு தான் 🙂
பருத்திப்பூ வெடித்து அதில் வரும் பஞ்சு மெத்து மெத்தென்று இருக்கும். காதலியின் பட்டுப் பாதங்களுக்கு பஞ்சை உவமையாக்குகிறான் காதலன், ஆனால் காதலியோ வெந்த பச்சரிசி சோற்றைப் போல மெதுவாக தன் கால்கள் இருப்பதாகச் சொல்கிறாள். வடித்தப் பச்சரிசி சாதம் எப்பொழுதும் ரொம்ப மென்மையாக இருக்கும்.
இந்தப் பாடலின் பல்லவியில் வரும் கடைசி இரண்டு வரிகள் தான் என்னை இந்தப் பாடலுக்கே ஈர்த்தது. வலம்புரி சங்கு வளைந்து வெண்மையாகவும் மழ மழவேன்றும் இருக்கும். காதலியின் கழுத்தை வலம்புரி சங்கைப் போல வழுக்குகிறது உன் கழுத்து என்கிறான் காதலன். அவளோ வழுக்கும் அவள் கழுத்தை கண்ணதாசன் எழுத்து என்கிறாள். எனக்கு இந்த வரி ஏனோ ரொம்பப் பிடித்தது. கவிஞன் கற்பனைக்கு சுதந்திரம் உண்டு. தீவிர கண்ணதாச ரசிகர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் இந்த உவமை கச்சிதமாக இந்த இடத்தில் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது. கண்ணதாசனின் கவிதைகள் மிகவும் மென்மையாகவும் படிக்க நெருடல் இல்லாமல் எளிமையாகவும் இருக்கும்.
இந்தப் பதிவின் சுட்டி: http://4varinote.wordpress.com/2013/08/27/guest34/
Sep 07, 2013 @ 03:27:38
என்னவொரு ரசனை…!
Sep 07, 2013 @ 06:07:59
பாராட்டித் தானே இருக்கீங்க? 🙂 நன்றி 🙂
Sep 09, 2013 @ 06:19:16
கண்ணதாசனின் எழுத்தாளுமை இன்னும் யாருக்கும் கைவரவில்லை என்பதுதான் உண்மை. என்னதான் கண்ணதாசனைப் போலவே எழுதினார் என்று சொல்லிக் கொண்டாலும் மற்ற கவிஞர்கள் நெடுந்தொலைவு பின்னால் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
Sep 09, 2013 @ 07:37:01
nandri:-)