
திரு SKP கருணா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த Dialogue என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு எனக்கும் என் கணவருக்கும் கிட்டியது. இடம்: அண்ணா சாலையில் உள்ள புக் பாயிண்ட். நேரம் ஞாயிறு (6.10. 2013) மாலை 6 மணி. ஒரிங்கிணைப்பாளர்கள் பவா செல்லத்துரை, SKP கருணா. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சி. இதை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் வந்து கலந்து கொண்டவர்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஷ்கினின் புதிய படம். பல விதங்களில் சிறப்பு வாய்ந்த படமாக, உலகத் தரத்தில் உள்ள படமாக, பாராட்ட வேண்டிய ஒரு படமாக வந்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் பெயர் முன்னணி இசை என்ற பெயருடன் முதன் முதலில் டைட்டிலில் இடம் பெற்றிருக்கிறது. இளையராஜாவையும் வைத்துக் கொண்டு ஒரு பாடல் கூட படத்தில் வைக்காமல் துணிச்சலாகப் படம் எடுத்திருப்பது இன்னொரு சிறப்பாம்சம். படத்தில் அச்சுப் பிச்சு காமெடி, குத்துப் பாட்டு ஹீரோயிச சண்டைகள், கதாநாயகி, வெளி நாட்டில் டூயட் பாடல், எதுவுமே இல்லாமல் வந்துள்ள ஒரு படம் இது. கதை சொல்லும் விதம் அலாதியாக இருந்தது. இந்தப் படத்தை ட்விட்டரிலும் பேஸ் புக்கிலும் பலரும் பாராட்டுவதைப் பார்த்து கருணா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். இது மாதிரி பல கலந்துரையாடல்களைப் பல வருடங்களாக டயலாக் என்ற அமைப்பின் மூலம் இவர் திருவண்ணாமலையில் செய்து வந்திருக்கிறார் என்று இந்த நிகழ்ச்சியின் போது எங்களுக்குத் தெரியவந்தது. ஆனால் சென்னையில் இதுவே முதல் முறை. மேலும் பத்திரிகை அடிக்காமல், இணையத்தின் மூலமே அழைப்பு அனுப்பி மிகக் குறுகியக் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டும் அரங்கம் நிரம்பி வழிந்தது அவரின் ஒருங்கிணைப்புச் சாதனைக்குக் கிடைத்த வெகுமதி.
ரொம்ப அருமையாக கேக்கும், தேநீரும், காப்பியும், நிகழ்ச்சிக்கு முன்னாடி வழங்கப்பட்டது. அரங்கம் குளிர்விக்கப் பட்ட ஒன்று. நாற்காலிகளும் மேடையும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. உட்கார இடமில்லாமல் 50க்கும் மேற்பட்டோர் நின்றுக் கொண்டு நிகழ்ச்சியைப் ரசித்தனர். ட்விட்டர் நண்பர்கள் எனக்குத் தெரிந்த வரை, @ivedhalam @thirumarant @jill_online @Nattu_G @amas32 @n_shekar @LathaMagan @ammuthalib @yathirigan @iKaruppiah @luckykrishna @ChittizeN @get2karthik @kabuliwala @sanakannan வந்திருந்தனர். விட்டுப் போன ட்வீட்டர்கள் பெயர்கள் சொன்னீர்களானால் இந்தப் பதிவில் சேர்த்து விடுவேன்.

பவா செல்லத்துரை அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பத்து நிமிட எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. பின் கருணா, மிஷ்கின், ஓவியர் மருது, எழுத்தாளர், CBI ஆபிசரகா இந்தப் படத்தில் வரும் ஷாஜி, சிறு பெண் சைத்தன்யா, விலை மாதுவாக நடித்த ஏஞ்சல் க்லேடி, மருத்துவ மாணவனாக நடித்த ஸ்ரீ மேடைக்கு அழைக்கப் பட்டனர். மிஷ்கின் வரும் பொழுது எழுந்து நின்று கைத்தட்டி அனைவரும் மகிழ்ச்சியையையும் பாராட்டுதல்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடாகிறது என்று தெரிந்த உடனே எனக்கும் என் கணவருக்கும் மிஷ்கினுக்கு இந்த கலந்துரையாடலில் ஏதாவது ஒரு சின்ன பரிசு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு கலைஞனுக்குப் பணமோ பதவியோ பெரிசில்லை. அவனைப் பாராட்டிப் புகழும் ஒரு சொல்லுக்கே அவன் ஆசைப் படுகிறான். அதனால் தான் சிறு விழாவும் அவனுக்குப் பெரும் அங்கீகாரமாக விளங்குகிறது. பலதும் யோசித்து, சட்டென்று இந்த எண்ணம் என் மனதில் வந்தது. அவர் இளையராஜாவின் இசைத் தொகுப்பை CDக்களாக இலவசமாக (1000 CD) அளித்தார். அதில் அவர் ராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படம் பேஸ் புக்கில் இருப்பதைப் பார்த்து அதை போஸ்டராகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்தோம். அதன் கீழ் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தின் தலைப்பையும் போட்டு, உலகத் தரம் வாய்ந்த படங்களைத் தருவதற்கு எங்கள் பாராட்டுகள் என்ற வாசகத்தையும் எழுதி அதன் கீழே கையழுத்து போட இடமும் விட்டிருந்தோம். அரங்கத்தில் வந்திருந்த ட்வீட்டர்களிடமும் மற்றவர்களிடமும் கை எழுத்துக்களை வாங்கி பின் கையோடு கொண்டு சென்றிருந்த பிரேமில் போட்டு அவரிடம் கொடுக்கக் காத்திருந்தோம்.

முதலில் கருணா அனைவரையும் வரவேற்றுப் பேசினார், எப்படி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம் என்று சுருக்கமாக சொன்னார். அவருக்கும் மிஷ்கின்னுக்கும் நெருக்கமான் நட்பு பல வருடங்களாக இருந்திருப்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது.

வந்திருந்தவர்களில் இருந்து இணையப் பதிவாளர்கள் பலரை பவா செல்லத்துரை வரிசையாகப் பேச அழைத்தார். அவருக்குத் துணையாக அவர் துணைவியார் எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா உதவியாக இருந்தார். நிறைய பேர் தங்களுக்குப் படத்தில் பிடித்தது, அல்லது கண்ட குறைகள் இவற்றை தெளிவாகப் பேசினார்கள்.
இந்தியா டுடே நிருபர் கவின் மலர் மிஷ்கினை நிறைய முறை பேட்டி எடுத்தவர் என்ற முறையிலும் அவர் சமீபத்தில் எடுத்த பேட்டி இன்று பத்திரிகையில் வருகிறது என்பதாலும் அவரும் பேச அழைக்கப்பட்டார். அவர் ரொம்ப அற்புதமாகப் பேசினார். அவர் பேச்சின் நடுவே திருநங்கைப் பாத்திரம் வெகு சிலரால் மட்டுமே திரைப் படங்களில் நல்ல முறையில் காண்பிக்கப் படுகிறது என்று சொன்னார். திரைப்படம் முடிந்ததும் நடித்தவர்கள் பெயர்கள் வரும் பொழுது ஏஞ்சல் க்லேடியின் பெயருக்கு முன் தேவதை என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் வண்டியில் வீடு போய் சேரும் வரை அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டே இருந்ததைப் பகிரும் பொழுது அவர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டார். பார்ப்பவர் பலரின் மனத்தையும் அது வெகுவாகப் பாதித்தது.
ட்ராட்ஸ்கி மருது அவர்களின் அருமையான அனுபவ பகிர்வு அடுத்து வந்தது. எப்படி திரைப்படம் என்பது ஒரு visual media, அதை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் வெகு சிலரே, அதில் மிஷ்கின் ஒருவர் என்று சிறப்பாக உரையாற்றினார். நீண்ட உரை, ஆனால் மிகவும் கருத்து செறிவானது.
அவருக்கு அடுத்து என் கணவர் பேசினார். அவரும் படத்தின் நிறைகளையும், அதில் நடித்தவர்களின் திறமையை வெளிக் கொண்டுவந்த மிஷ்கின்னையும் பாராட்டினார். நல்ல படங்கள் எடுக்கும் போது அவை கமர்ஷியலாக வெற்றிப் பெற்றால் தான் இன்னும் நிறைய படங்கள் அது போல தர முடியும் என்றும் கூறனார். பிறகு நானும் மேடைக்குச் சென்று அந்த பிரேமில் போடப்பட்ட வாழ்த்துப் போஸ்டரை அவருக்கு வந்திருந்தவர்கள் சார்பாகப் பரிசளித்தோம். அதைப் பெற்றுக் கொள்ளும் போது என் காலையும் என் கணவர் காலையும் தொட்டு வணங்கி நெகிழ்த்தி விட்டார். அவரை அன்புடன் அனைத்துக் கொண்டு, அருகில் இருந்த சைத்தன்யா, ஏஞ்சல் க்லேடி, ஸ்ரீ இவர்களை அரவணைத்துக் கொண்டு என் பாராட்டுதலையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டேன்.

ஸ்ரீ பேசினார், சின்னக் குழந்தை சைத்தன்யா அவ்வளவு அழகாகப் பேசியது. எப்படி தன்னை படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் அன்புடன் நடத்தினர் என்று அந்த சிறியவள் பெரியவள் போல சொன்னாள். ஏஞ்சல் க்லேடி பேசியது மிகவும் அருமையான் ஒரு பகிர்வு. தன்னை எப்படி மிஷ்கின் தன் குழுவில் ஒருவராகப் பிணைத்துக் கொண்டு எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரு பெண்ணை நடத்துவது போல நடத்தினார் என்று கூறினார். எப்பொழுது அவர் வந்து அமரும் இடத்தில் எந்த சலசலப்பும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களை நாம் ஒருவராக ஏற்றுக் கொள்கிறோம் என்பதை மிஷ்கினிடம் தான் கண்டேன் என எடுத்துச் சொன்னார்.
தங்க மீன்கள் ராம் மிஷ்கின் பேசுவதற்கு முன் பேசினார். எப்படி இணைய தளத்தில் சொல்லப் படும் கருத்து வேகமாகப் பரவி படங்களின் வெற்றியை நிர்ணயிக்கிறது என்றும் மிஷ்கின்னுடன் உள்ள தன் நட்பைப் பற்றியும் பொதுவாக இன்றைய சூழலில் எப்படி நல்ல படங்கள் விலை போகாமல் இருக்கும் துன்பத்தையும் சொன்னார். ரொம்ப நல்ல உரை.

கடைசியல் மிஷ்கின் மைக்கைப் பிடித்தார். எல்லோரையும் ஒரு பிடி பிடித்தார். ஒரு படம் எடுத்துப் பாருங்கய்யா அதன் வலி என்னன்னு உங்களுக்குத் தெரியும் என்று ஆரம்பித்துத் தன ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார். விமர்சனம் செய்யுங்கள் ஆனால் விமரிசனங்களால் படத்தைக் கொல்லாதீர்கள், எங்களுக்கும் கொஞ்சம் புத்தி இருக்கு என்று நம்புங்கள் என்றார். “நீங்களே இவ்வளவு லாஜிக் பாக்கும்போது…எடுத்த எனக்கு தோன்றியிருக்காதா? எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு என்றார் கோபமாக. மேலும் பிடிக்கவில்லையென்றால் தாமதமாக விமரிசனம் செய்யுங்கள், படத்தின் வியாபாரம் உங்கள் ஒரு வரி விமர்சனத்தினால் பாதிக்கப்படுகிறது. இரவு பகல் உழைத்துப் படம் எடுக்கிறோம், நிறைய ஆராய்ச்சி செய்கிறோம். 108 க்கு போன் செய்திருக்கலாமே என்பது எல்லா விமர்சகர்களும் வைக்கும் குற்றச்சாட்டு. அது எனக்குத் தொன்றியிருக்காதா? என் assistant directors சொல்லியிருக்க மாட்டார்களா? குண்டடிப்பட்டு கிடக்கும் அவன் நிலையை அந்த மருத்துவ மாணவன் கணித்து ஆம்புலன்ஸ் வரும் வரை தாங்க மாட்டான் என்பதை உணர்ந்தே அவன் செயல் படுகிறான் என்று விளக்கினார். ஸ்ப்லினாக்டமி பற்றி 3 மாதம் ஆய்வு செய்தும் 30 மருத்துவர்களைக் கலந்தாலோசித்தும், அந்தப் பகுதியை ஓர் மருத்துவரை வைத்தே இயக்கியதையும் சொன்னார். இந்த மாதிரியான படங்களுக்கு ஆதரவளியுங்கள். ஒரு ஓட்டை படத்தில் இருக்கும் லாஜிக் குறைபாடுகளைக் கண்டுக்காமல் அந்த படத்தை அமோக வெற்றிப் படமாக ஓட செய்கிறீர்கள், அதே என் போன்றும், ராம் போன்றும், பாலா போன்றும் எடுக்கும் படத்தில் உள்ள சிறு தவறுகளை பூதக் கண்ணாடி மூலம் பெரிது படுத்துகிறீர்கள் என்று குறைப் பட்டுக் கொண்டார். தங்கமீன்களில், ராம் எவிட்டா மிஸ் வீட்டுக்குச் செல்லும் காட்சிக்கு நிகரான இன்னொன்றை நூறு வருடமானாலும் யாராலும் எடுக்கமுடியாது என்று கூறினார்.
படம் துவக்கத்துல முதுகுல சிலுவையை சுமந்தவன்… முடிவுல நெஞ்சுல சுமக்கிறான்…இத எத்தன பேரு கவனிச்சீங்க என்று கேட்டார். பாட்டில்லாமல் புரடியூசரிடம் கதை சொல்லிப்பாருங்கள்..செருப்பால் அடிப்பார்கள். பாட்டு இல்லாம் ஒரு படம் எடுத்ததாலே இன்னும் நிறைய இயக்குனர்/தயாரிப்பாளர்களுக்கு இந்த செயல் ஒரு முன்னுதரணமாக இருக்கும், அதை நீங்கள் பாராட்ட வேண்டும் என்று சொன்னார். அந்த சமயத்தில் ராஜாவைப் பற்றிப் பேசும் போது வந்த உரையாடலை சொல்லும் பொழுது அப்பா என்று ராஜாவை அழைப்பார் என்று தெரிந்துக் கொள்ள முடிந்தது. ராஜாவே சொன்னாராம், இப்படி ரிஸ்க் எடுக்காதே, ரெண்டு பாட்டாவது வை என்றாராம். பின் இவர் பிடிவாதத்தைப் பார்த்து எப்படியோ போ என்று சொல்லிவிட்டாராம் 🙂
ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள் என்றார். ”சினிமா என்பது possible vs probable… possibleஆ என்பதை தான் நான் கவனத்தில் கொள்கிறேன். Probable என்றாலே போதும்…ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. இதை ஒரு டாக்டரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டபின் தான் அந்தமாதிரி எடுத்தேன. இது ஒரு பூ..இதை மிதிச்சிடாதீங்க என்றார். அவர் நந்தலாவின் தோல்வியினால் மிகவும் மனம் நொந்து இருப்பது ரொம்பத் தெளிவாகத் தெரிந்தது.
முக்கியமாக அவர் ஒரு விஷயத்தை முன்னிறுத்தினார். திருநங்கை என்று தனியாகச் சொல்லாதீர்கள். அவர்களும் பெண்கள்தான். பெண்கள் என்றே அழையுங்கள் என்றார். பெண்களை விடவும் மென்மையான இதயம் கொண்டவர்கள் அவர்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்கள் அனைவரும் அவரைப் பாராட்டித்தான் பேசினர். இருந்தும் அவர் கோபம் முந்தைய தோல்விகளினாலும், முந்தைய மனக் காயங்களினாலும் ஏற்பட்டது என்றே தெரிந்தது. நந்தலாலா ஒரு ஜப்பானிய படத்தின் காப்பி என்று பத்திரிகைகள் அவரை சாடின என்றார், ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தப் பொழுது மன நலக் காப்பகத்தில் இருந்து இறந்த தன் சகோதரன் தான் தன் நினைவிற்கு வந்து அந்தப் படத்தை எடுத்ததாகச் சொன்னார். இன்றும் தன் தாய் அவனை நினைத்து அழுவதை நினைவுக் கூர்ந்தார்.
இந்த உரைக்குப் பின் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இசை CD விற்பனை நடை பெற்றது. அது இலவசமாக அளிக்கப்பட்டாலும் டொனேஷனாக ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நம்மால் முடிந்த அளவு கொடுக்கலாம் என்று முன்பே அறிவிக்கப் பட்டிருந்தது. ஒரு லட்சம் ரூபாய் அதன் மூலம் அந்தத் தொண்டு நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
பின்னர் கருணா அங்குக் கூடியிருந்தவர்களை மிஷ்கினுடன் தனியாக உரையாட விருப்பம் உள்ளவர்கள் அருகில் வந்து பேசலாம் என்று அழைத்து அறிமுகப் படுத்தி வந்திருந்தவர்களை கௌரவப் படுத்தினார். நிறைய பேர் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி அவருடன் உரையாடினார்கள். நிறைய பேர் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர் 🙂
ரொம்ப அருமையான ஒரு மாலைப் பொழுது. ஒரு கலைஞனின் ஒரு படைப்பாளியின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள எனக்குக் கிடைத்த ஒரு நாள்ல வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். நன்றி கருணா 🙂