தமிழ் சினிமா ரசிகர்களை அறிவாளிகள் என்று நிச்சயமாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் வில்லா. அதற்கு இயக்குநருக்கு ஒரு பாராட்டு! நிறைய ஆராய்ச்சி செய்து திரைக்கதையிலும் கவனம் செலுத்திப் படத்தை எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் தீபன் சக்கிரவர்த்தி. பீட்சா 2 என்று பெயர் வைத்தாலும் பிட்சா படத்தின் தொடர்ச்சி அல்ல இந்தப் படம். படம் ஓடும் நேரம் ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் தான். ஆனாலும் முதல் பாதியில் சுவாரசியம் அதிகம் இல்லை. அடுத்த பாதி அந்தக் குறையை சரி செய்து விடுகிறது.
சூது கவ்வும் படத்தில் நடித்த அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி தான் படத்தின் நாயகன், நாயகி. அசோக் செல்வன் நன்றாக நடித்திருந்தாலும் படம் முழுக்க ஒரு சீரியஸ் எக்ஸ்பரஷனோடே வருவதைத் தவிர்த்திருக்கலாம். சஞ்சிதா ஷெட்டி கொடுத்தப் பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.
படம் முழுக்க புதுச்சேரியில். கட்டடங்களும் கடற்கரையும் அழகு. தீபக் குமாரின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் நன்றாக உள்ளது. படத்தின் பலம் பின்னணி இசை. அதை சந்தோஷ் நாராயணன் செவ்வனே செய்திருக்கிறார். ஆனால் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவேயில்லை.
த்ரில்லர் கதை. எப்பவும் போல ஏழை ஹீரோ பணக்காரப் பெண்ணைக் காதலித்து, தாதா, அடிதடி, என்று அரைத்த மாவையே அரைக்காமல் புதுக் கதையை எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் திகில் நிறைந்ததாக சீட்டின் நுணியில் உட்கார்ந்துப் பார்க்கும்படியானக் கதை இல்லை என்பது கொஞ்சம் வருத்தமே.
நாசர் சின்ன ரோலில் வருகிறார். S.J.சூர்யா கேமியோ பாத்திரத்தில் வருகிறார். இயக்குநர், கதை, ஹீரோ இவர்கள் தோள்களில் படம் தூக்கிச் செல்லப்படுகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் கிளாஸ் ஆனால் சற்றே காம்ப்ளெக்ஸ். கொஞ்சம் புரிந்து கொள்ள மெனக்கட வேண்டும். படம் க்ரிஸ்பாக உள்ளது.