நம்மாழ்வார்

ஆராவமுதன்- நம்மாழ்வார் திருவடித்தொழல்

ஆராவமுதன்- நம்மாழ்வார் திருவடித்தொழல்

“அவரவர் தமதமதறி வறிவகை வகை

அவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள்

அவரவர் ரிறையவர் குறைவில் ரிறையவர்

அவரவர் விதிவழி யடைய நின்றனரே”

அவரவர் விருப்பபடி இருப்பதே இன்பம். மேலும் அவரவர் இஷ்ட தெய்வத்தை அவரவர் விருப்பபடி வணங்குவதுமே தான் இயல்பு நிலை. ஒவ்வொருவரின் அறிவும் புரிந்து கொள்ளும் திறனும் மாறுபடுகிறது. என் தன்மைக்கு ஏற்ப நான் புரிந்து கொள்கிறேன். என்னால் முடியும் முயற்சியில் இறங்கி என் சக்திக்கேற்ப நான் இறைவனை முயன்று அடைகிறேன். குறையொன்றும் இதிலில்லை! எம்முறைப்படியும் இறைவன் திருப்பாதங்களை அடையமுடியும். இதனை ஆணித்தரமாகச் சொன்னவர் நம்மாழ்வார்.

ஒரு சிறந்த ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மாணவனின் கிரகிக்கும் தன்மை வேறு வேறு. திறமைக்கு ஏற்பப் பாடத்தை நடத்தி, சொல்ல வந்த விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ள வைப்பதில் இருக்கிறது அவர் சாமர்த்தியம். இறைவனும் அதையே செய்கிறார். தேவைக்கேற்ப முறையும் மாறுபடுகிறது. சூரியனை வழிபடுபவர்களும் மாடசாமியை வழிபடுபவர்களும் ரங்கனாதரை வழிபடுபவரும் யாவரும் வணங்குவது ஒரே இறைத்தன்மையைத் தான். இதனால் வணங்குபவர்கள் இடையே எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இதனை அழகுத் தமிழ் பாசுரங்கள் வாயிலாகச் சொல்கிறார் நம்மாழ்வார். ஒரு இறைவனை வணங்குபவர் வேறு இறைவனை வணங்குபவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.

வேளாண் குடியில் பிறந்த காரியார் அவரின் மனைவி உடைய நங்கையார் என்ற உயர்ந்த பக்தர்களுக்கு வைகாசி விசாகத்தன்று திருக்கருகூரில் நம்மாழ்வார் பிறந்தார் (தற்போது ஆழ்வார் திருநகரி என்று பெயர்). பிறந்தது முதல் உண்ணாமல் அழாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தியப் பெற்றோர்கள் திருநகரியில் உள்ள ஆதி பிரான் கோவிலில் வந்து குழந்தையைக் கிடத்தி இறைவனிடம் பிரார்த்தித்தனர். அப்பொழுது அது வரை அசையாது இருந்த குழந்தை அங்கே இருந்த ஒரு புளிய மரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அந்த மரத்தில் உள்ள பொந்தில் உட்கார்ந்து கொண்டது. மற்ற குழந்தைகளை விட மாறுபட்டு இருந்தக் காரணத்தினால் மாறன் என்று பெயரிட்டனர். அக்குழந்தை பதினாறு வருடங்கள் அந்த பொந்திலேயே அமர்ந்திருந்தது.

நம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS

நம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS

இராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன்,  நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.

உறங்காப் புளி - ஆழ்வார்திருநகரி  நன்றி KRS

உறங்காப் புளி – ஆழ்வார்திருநகரி
நன்றி KRS

அந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.

நம்மாழ்வார் சின் முத்திரையுடன்

நம்மாழ்வார் சின் முத்திரையுடன்

ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.

திருமாலின் திருப்பாதங்களாகவே நம்மாழ்வார் கருதப்பட்டார். நம்மாழ்வார் சடாரி! நம்மாழ்வாரின் உருவம் பதித்த சடாரி இங்கே.

நன்றி KRS

நன்றி KRS

வைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார். இதில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது மதுரகவியாழ்வார் அந்தணக் குலத்தைச் சேர்ந்தவர். அவர் தன் குருவாக ஏற்றுக் கொண்டு இறைவன் மேல் கூடப் பாடாமல் தான் ஆச்சார்யனே இறைவன் என்று அவர் மேல் மட்டும் பாடியது விவசாயக் குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை.

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

இவை யாருடைய பாக்கள என்று எல்லோரும் கேட்க, இவை நம் ஆழ்வாரின் பாக்கள் நம் ஆழ்வாரின் பாக்கள் என்று மதுரகவியார் சொல்லிச் சொல்லி  ஆழ்வாரின் திரு நாமமும் நம்மாழ்வார் என்றாயிற்று. நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், குருகூர் நம்பி, குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான், தென்னரங்கன் பொன்னடி என்று பல பேர்கள் உண்டு. காரி மாறன் என்று தந்தை பெயருடன் கூடிய பெயரும் உண்டு.

நம்மாழ்வர்களின் பெயர்கள் - நன்றி KRS

நம்மாழ்வர்களின் பெயர்கள் – நன்றி KRS

பக்தி என்னும் அங்குசத்தால் பரமன் என்னும் களிற்றை வசப்படுத்தியதால் பராங்குசம் என்றும், மகிழம்பூக்களால் ஆன மாலையணிந்து அழகுற இருந்ததால் வகுளாபரணன் என்றும், ஊர் பேரைச் சேர்த்து குருகூர் நம்பி, குருகைப்  பிரான் என்றும், ‘பர’ தத்துவத்தை விளக்கியதாலும் திருமாலுக்குள்ளே அனைத்துத் தெய்வங்களும் அடக்கம்  என்னும் கருத்தை வீறு கொண்டு விளக்கியதால் நாவீறுடையான் எனவும் வழங்கப்பட்டார்.

நம்மாழ்வார் திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி என்னும் நான்கு திருமறைகளை அருளினார். இதனை மதுரகவியாழ்வார் ஓலையில் எழுதினர். இந்த நான்கும் வேதத்தின் சாரமாகும். அதாவது வடமொழியில் உள்ள ரிக், யஜூர், சாம அதர்வண வேதத்தின் கருத்துக்களை ஆழ்வார் தமிழில் விளக்கினார். எனவே தான் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்னும் பெயரும் இவருக்கு உண்டாயிற்று. நம்மாழ்வாரின் பாடல்கள் திராவிட வேதம் என்றழைக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்தாக இருப்பவன் இறைவன். அவனே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான். இது தான் இறைவனைப் பற்றி கீதை உபதேசிக்கும் தத்துவமாகும். இதனை ஆழ்வார்,

“யாவரும் யாவையும் எல்லாப் பொருளும்

கவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்று

பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி”

என்றும்,

“அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானே

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரோ”

என்று அந்த இறைவன் திருநாமம் நாராயணன் என்றும் அவன் பாற்கடலில் பள்ளிக் கொண்டவன் என்றும் இவனுக்குள் சகலமும் அடக்கம் என்றும், இதை அறிந்து கொள்வதே இறைவனை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாகும் என்று கூறுகிறார். எல்லாருக்கும் இந்த ஞானம் வருவது எளிது கிடையாது. எனவே தான் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு பற்பல தெய்வங்களை வணங்குகின்றோம்.

உயிரினங்கள் துயரமின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே யாகும் என்பது இவர் கொள்கை.

அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
(திருவாய்மொழி, 1.2.5)

 பக்தியால் உலகில் எதனையும் பெறமுடியும் என்பது அவருடைய எண்ணம். நம்மாழ்வார்க்குக் காணுகின்ற பொருளனைத்தும் கண்ணன் வடிவாகவே காட்சியளிக்கும். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திலும் அவன் உள்ளான் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் அவர் ஏற்படுத்தினார். வானில் திரியும் மேகங்களைப் பார்த்து, “மேகங்களே நீங்கள் திருமாலின் திருமேனியழகை எப்படிப் பெற்றீர்” என்று கேட்பார்!

இவரது பாடல்களைத் தமிழ் சங்கத்தார் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதோ என்று கேட்க, கண்ணன் கழலிணை என்னும் பாசுரத்தின் முதல் அடியை மட்டும் பலகையில் வைக்க உடன் வைக்கப்பட்ட இதர நூல்களையெல்லாம் தள்ளி திருவாய் மொழியினைச் சங்கப் பலகை பெருமையுடன் தாங்கி நின்றது.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் தாக்கம் கம்பராமாயணத்தில் நன்கு வெளிப்படுகிறது. கம்பர் ஆழ்வாரின் பாசுரங்களை நன்குக் கற்று  நம்மாழ்வாரைப் போற்றி அவரது பெயரிலேயே சடகோபரந்தாதி என்ற நூலை இயற்றினார்.

“வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்

தோர் விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக் கொழுந்தின்

முன் செல்க குணங் கடந்த

போதக் கடலெங் குருகூர்ப்

புனிதன் கவியின் னொரு

பாதத்தின் முன் செல்லுமோ

தொல்லை மூலப் பரஞ்சுடரே”

என்றார் கம்பர்.

மேலும் இவர் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இது இவரின் தனி சிறப்பு. மடலூர்தல் என்பது சங்கக் கால மரபு. தான் விரும்பியப் பெண்ணை அடைய முடியாதத் தலைவன் அவளின்றி தான் வாழ முடியாத நிலையைக் காட்ட குதிரையிலேறி எருக்கம் பூ மாலை அணிந்து அப்பெண்ணின் படம் எழுதப்பட்டக் கொடியை கையில் வைத்துக் கொண்டு உடம்பெல்லாம் புழுதிப் பூசிக்கொண்டு வெட்கத்தை விட்டு நடுத்தெருவில் நின்று என்னைக் கைவிட்ட இரக்கமில்லாத பெண் இவள் தான் என்று கூவுவானாம். இதைக் கண்ட அவ்வூர் பெரியவர்கள் மனமிரங்கி அந்தப் பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைப்பார்களாம்.

பராங்குச நாயகி

நம்பெருமாள்

தன்னை நாயகியாய் பாவித்துக் கொண்ட நம்மாழ்வார் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பகவானிடம் மன்றாடிப் பலப் பாடல்கள் பாடுகிறார். கண்ணபிரான் பராமுகமாக இருக்கிறான், என்னைக் கைவிட்டு விட்டான் என்று அலர் தூற்றியவாறே மடலூர்வேன் என்கிறார்.

நாணும் நிறையக் கவர்ந்தென்னை

நன்னெஞ்சம் கூவிக் கொண்டு

சேணுயர் வானத்திற்கும்

தேவ பிரான் றன்னை

ஆணையென் தோழீ உலகு

தொறலர் தூற்றி ஆம்

கொணைகள் செய்து குதிரி

யாம் மட லூர்துமே

என்று பக்தி இலக்கியத்தில் முதல் முறை மடலேறுதலைப் புகுத்தியது நம்மாழ்வார் தான்.

நம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்! நன்றி KRS

நம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்! நன்றி KRS

பெண்ணாக இருந்து அன்பு செலுத்தி இறைவனை அடைவது எளிது. அதைத் தான் ஆண்டாள் செய்தாள். அவள் காட்டுக்குச் செல்லவில்லை, தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை, மந்திரங்கள் பயிலவில்லை. பூமாலையை தினம் இறைவனுக்குச் சூடிக் கொடுத்தாள். இந்த அண்டத்தில் பரமாத்மா மட்டுமே ஆண் மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பெண் இனம். அதனால் பெண்ணான மீராவைப் போல ஆண்டாளைப் போல அன்பு செலுத்தினால் அவன் திருவடிகளை அடைவது எளிது.

சூடிக் கொடுத்தச் சுடர்கொடி

சூடிக் கொடுத்தச் சுடர்கொடி

நாயகி பாவத்தின் வேறு ஒரு பரிணாமமாக தன்னை மறந்த நிலையில் தலைவி செய்யும் செயல்களைக் கண்டு ஒரு தாய் புலம்புவதாக இந்தப் பாடல் வருகிறது,

மண்ணையிருந்து துழாவி வாமனன் மண்இது என்னும்
விண்ணைத் தொழுது அவன்மேவு வைகுந்தம் என்று
கைகாட்டும்
கண்ணையுள் நீர்மல்க நின்று கடல் வண்ணன் என்னும்
அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன்
பெய்வளையீரே

             (திருவாய்மொழி, 4.4.1)

 நாரை, பூவை முதலிய பறவைகளை இறைவனிடம் தூதாக அனுப்பிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. பழங்காலத் துறைகள் மட்டுமல்லாமல், பழங்கால இலக்கியத் தொடர்களும் திருவாய்மொழியில் சில இடங்களில் அப்படியே உள்ளன.

நம்மாழ்வார் வேதத்தின் கருத்துக்களைத் தமிழ் படுத்தி இறை நிலையை உலகுக்கு உணரச் செய்தார். அதனை இராமனுசர் பேணிக் காத்து வளர்த்துப் பெரிது படுத்தினார். நம்மாழ்வாரின் பாசுரங்கள் இறைவனது பண்புகளையும், அவனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், ஊழ்வினை அடிப்படையில் அதற்கேற்படும் இடையுறுகளையும், அதை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்குகின்றன.

பூரண அன்பு நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும். அந்த அன்பு தியாகத்தில் இருந்து தான் பிறக்கும். இறைவனிடம் அன்பு வைத்து, தொண்டில் நம்மை முழுக்க ஐக்கியப் படுத்திக் கொண்டால் அந்த இறைவனே நம்மை ஆட்கொள்வான் என்னும் உயர்ந்த தத்துவத்தை அளித்துள்ளார் நம்மாழ்வார். அவரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி

“பாடுவதெல்லாம் பராங்குசனை, நெஞ்சத்தால்

தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்

காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்

பூண்பதேல்லாம் மாறனடிப் போது.”

azhwar thalam - tamizh isai (thiruvaai mozhi paNN) நன்றி KRS

azhwar thalam – tamizh isai (thiruvaai mozhi paNN) நன்றி KRS

“நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தாற்கு மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டவர்க்கும், எல்லா சமயத்தவர்க்கும் எல்லா இனத்தவர்க்கும் உரியவர்.” – திருவிக (தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் எட்டாம் பக்கத்தில் எழுதியது)

மகாபாரதத்துக்கு நடுவே பகவத் கீதை என்னும் முத்துக் கிடைத்ததுப் போலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு  இடையே நம்மாழ்வாரின் பாசுரங்கள் இரத்தினமாக மிளிர்கின்றன.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

ஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS

ஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS

ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS

ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS

Reference: http://www.tamilvu.org/

ஆழ்வார்கள் வரலாறு- அ. எதிராஜன்

நாலாயிர திவ்யபிரபந்தம் – இரா.வ.கமலக்கண்ணன்

சில அரியப் புகைப்படங்கள் கொடுத்து உதவிய @kryes க்கு நன்றி.

வீரம் – திரை விமர்சனம்

veeram

அடிதடி சண்டையோடு கூடிய குடும்பச் சித்திரம் வீரம். அஜித்துக்குரிய charisma வுடன் திரையில் தோன்றுகிறார். வந்து நின்றாலே ஒரு கம்பீரம். இவருக்குத் தான் நரையுடன் திரையில் தோன்ற நிறைய தில்லு உள்ளது! முழுப் படமும் இவரால் மட்டுமே நகருகிறது.

சந்தானம் காமெடி பலப் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிரித்து ரசிக்கும்படி உள்ளது. அஜித்தின் நான்கு தம்பிகளில் ஒரு தம்பியான விதார்த் நன்றாகச் செய்துள்ளார். தமன்னா படம் முழுக்க அழகாக வருகிறார். அவர் செய்ய வேண்டிய பாத்திரத்தைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். தமன்னா மேல் அஜீத்துக்குக் காதல் வருவதை இன்னும் கொஞ்சம் பலமானக் காரணங்கள் மூலம் சித்தரித்து இருக்கலாம். திருமணமே வேண்டாம் என்று இருப்பவர் அவ்வளவு எளிதாக காதல் வயப்படுவது நம்பும்படியாக இல்லை. மேலும் கதையில் சுவாரசியம் அதிகம் இல்லை. பெரிய ஹீரோ வைத்துப் படம் எடுத்தால் கதையைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று இயக்குநர்களுக்கு யாரோ பாடம் எடுத்திருக்கிறார்கள் போல! மாஸ் ஹீரோ படங்களில் கதையை சல்லடைப் போட்டுத் தேட வேண்டியிருக்கிறது. எந்தப் படத்தின் தரத்துக்கும் கதை தான் மூலதனம். அதை உணரும் இயக்குனரே வெற்றி பெற முடியும் என்பது என் தாழ்மையானக் கருத்து.

DSP இசை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாடல்களும் மனதில் நிற்கவில்லை, பின்னணி இசையும் பிராமாதம் என்று சொல்லமுடியாது. சில இடங்களில் மட்டும் நன்றாக இருந்தது. பெரிய blessing படம் 2 மணி 40 நிமிடங்கள் தான்.

இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் trainஇல் நடக்கும் சண்டைக்காட்சி நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளது. Editingம் சிறப்பாக உள்ளது. மற்றப்படி படம் முழுக்க வரும் சண்டைக் காட்சிகள் பார்த்துப் பார்த்து சலித்த சண்டைகளே. இதில் நேற்று நான் பார்த்த ஜில்லாவில் நடித்த அதே ஸ்டன்ட் பார்ட்டிகள் இதிலும் நடித்து ஆயாசப் படுத்தினார்கள். இதற்காகவே அஜித்தும் விஜயும் ஒரு ரெண்டு மாத இடைவெளியில் அவர்கள் படங்களை ரிலீஸ் பண்ணினால் நன்று!

அஜித் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். Confusion இல்லாமல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. சில இடங்களில் வசனங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால் அஜித் சார் நீங்களும் நல்ல கதையைத் தேர்ந்தெடுங்களேன்.

ஜில்லா – திரை விமர்சனம்

jilla

விஜய் படத்துக்குப் படம் இளமையாகிறார்! என்ன இரகசியமோ தெரியவில்லை. உடலை ட்ரிம் ஆக வைத்துக் கொள்வது எப்படி என்று இவர் கொஞ்சம் மற்ற கலை உலக நண்பர்களுக்கும் சொல்லித் தரலாம்.  நடனம்!! வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! பேசாம அவர் நடனங்களை மட்டும் தொகுத்து ரிலீஸ் பண்ணியிருக்கலாம். D.இமானின் பாடல்கள் okay ரகமாக இருந்தாலும் படத்தில் விஜயின் நடனத்தோடு சேர்ந்து பார்க்கும் பொழுது பாடலும் அழகாகத் தொனிக்கிறது. விஜயும் ஸ்ரேயா கோஷலும் பாடிய கஞ்ஜா பாடல் அருமை. விரசாப் போகையிலே பாடல் படமாக்கப் பட்ட விதமும் ஷங்கர் பட பீல் இருந்தது.

மோகன் லாலும் விஜயும் நல்ல காம்பிநேஷன். அவர்களுக்குள் ஈகோ இல்லாமல் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பது படம் முழுக்கத் தெரிகிறது. இருவருக்குமே நடிக்கவும் நல்ல வாய்ப்பும் உள்ளது, நன்றாகப் பயன் படுத்தியுள்ளார்கள்.

ஹீரோயின் காஜல் அகர்வால். படத்தின் முதல் தப்பு. துப்பாக்கியையே திரும்பப் பார்ப்பது போலத் தோன்றுவதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆகிவிட்டார். ஒரே மாதிரி expressions. நடை உடை பாவனையில் போன படத்தில் இருந்து இந்தப் படத்திற்கு மாற்றமே இல்லை. இவ்வளவு தான் நடிக்க வரும் என்று தெரிந்திருந்தால் வேறு நடிகையைப் போட்டிருக்கலாமே, நடிகைகளுக்கு அவ்வளவு பஞ்சமா? மேலும் show piece தானே? ஒரு போலிசுக்கான உடல் மொழி அவரிடம் சிறிதும் இல்லை.

பெண்களை ஏளனப்படுத்தும் வசனங்களும் காஜல் அகர்வாலின் பின்பக்கத்தைத் தட்டும் அந்தக் காட்சியும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒரு பெண்ணை பலம் உள்ள ஒருவன் வந்து பெண் கேட்டால் பயந்து ஒத்துக் கொள்வார்கள் போலப் பெண்ணின் பெற்றோரைக் காட்டியிருப்பது சமூகத்துக்குத் தவறான செய்தியை அனுப்புகிறது. இன்னும் எத்தனை காலம் தான் இது தொடரும்? மேலும் ஹீரோயின் போலிசாக இருந்தாலும் லூசாகக் காட்டுவது ஏனோ?

கதை! தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவையே அரைப்பதற்கு ஏன் இத்தனை பணத்தையும், நடிகர்கள், இதர தொழில் நுட்ப வல்லுனர்களின் நேரத்தையும் உழைப்பையும் விரயம் செய்ய வேண்டும்? பழைய கதையாக இருந்தாலும் திரைக்கதை சிறப்பாக இருந்தால் பார்ப்பவர்களை வசப்படுத்தும். அதுவோ இங்கே படு மோசம். எப்பவும் போல ஒரு தாதா கதை, வாரிசு, ஹீரோ எனப்படுபவன் பத்துப் பேரை ஒரே அடியில் பீரங்கியால் தாக்கியது போல வீழ்த்திவிடுவான் – அதையும் நம்ப நாம் திரையரங்கில் காதில் ஒரு முழம் பூ சுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்போம்.

என்ன தான் பதவி பணம் இருந்தாலும் போலீசில் சேருவது அவ்வளவு சுலபமா? கதாப்பாத்திரம் படி விஜய் என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை அடியாள் ரேஞ்சுக்குக் காட்டிவிட்டு திடீரென்று நிமிஷமாக Assistant Commissioner ஆகிவிட்டார் என்கிறார்கள். அதுக்கும் மேல ஒரே ராத்திரியில் ஆபரேஷன் கிளீன் என்று ஒரு மருத்துவர் இல்லா ஆபரேஷனையும் நடத்துகிறார். முதல்வனில் ஒரு நாள் முதல்வர் செய்ததை ஓர் இரவில் ரவுடி டர்ண்ட் AC செய்கிறார்!

அடிதடி, மணல் கொள்ளை, கிரேனைட் கொள்ளை என்றால் மதுரை தான் ஹெட் குவார்ட்டர்ஸ் என்பது சினிமாவில் தற்போது எழுதப் படாத விதி. மொட்டை மாடி சீன்களில் மதுரை கோவில்களைக் காட்டிவிட்டால் கதைக் களம் மதுரை என்றாகிவிடாது. பேசும் மொழியில் வட்டார வழக்கு இருக்க வேண்டும். இங்கோ மோகன் லால் மலையாள வாடையுடன் பேசுகிறார். விஜய் எப்பவும் போலப் பேசுகிறார். இதுக்கு எதுக்கு மதுர?எத்தனையோ ஓட்டைகள் அதில் இது ஒன்றும் பெரிய ஓட்டை இல்லை என்று விட்டுவிட வேண்டியது தான் seasoned cinema goer ன் கடமை!

டைட்டிலில் காஜல் அகர்வால் பெயருக்கு அடுத்தப் பெயராக சூரியின் பெயர்! நல்ல பிரமோஷன் தான். அனால் இந்தப் படத்தில் காமெடி மிகப் பெரிய டிராஜடி. சூரி சோபிக்கவில்லை. அதுக்குப் பதிலா விஜயின் பல சீன்கள் காமெடியாக இருந்து அதற்கு ஈடு கட்டுகின்றன.

பூர்ணிமா பாக்கியராஜ் தான் அம்மா கம் மோகன்லால் மனைவி. அவர் நடிப்புக் கூட அழுத்தமாக இல்லாதது திரைக்கதை சொதப்பலால் வந்த வினை. சம்பத் ஒரு மந்திரி என்பதே நம்ப முடியாமல் இருக்கும் பொழுது அவர் தான் வில்லன் என்றும் அவருக்கு ஒரு flashback கொடுப்பதும் டார்ச்சரின் உச்சம். நீண்ட/சுருள் சுருள் முடியோடு வரும் அடியாட்கள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டார்களா என்று சந்தேகிக்கும் அளவுக்கு படம் முழுக்க ஸ்டண்ட் பார்ட்டிகள் கும்பல்.

காப்பியடிப்பதிலும் ஒரு நேர்த்தி வேண்டும். வெளிநாட்டுப் படங்களைக் காப்பி அடித்தாலும் சரி நம்முடைய பழையப் படங்களைக் காப்பி அடித்தாலும் சரி பார்க்கிற ரசிகனுக்குப் படம் சுவாரசியமாக இருக்க வேண்டும். இந்த இயக்குனர் நேசன் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. ஒரு messageம் இல்லை.

ஒரு பெரிய நடிகர் இருந்தால் எப்படிப்பட்ட படம் எடுத்தாலும் ஓடிவிடும் என்ற மாயத் தோற்றத்தை நாம் தான் உடைக்க வேண்டும். அதே போல விஜய் போன்ற நல்ல திறமையும், பவரும் உள்ள நடிகர்கள் சிறந்த படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பு. இந்தப் படத்தை எங்கள் வீட்டில் இருந்து மூன்று பேர் போய் பார்த்தோம். 450ரூ செலவு. அதற்குப் பதில் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தேவையான உடை வாங்கிக் கொடுத்திருக்கலாம். விஜயின் டேலன்ட் இப்படி வீணாவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

வாழ்க்கையே ஒரு நாடகம் தானே!

Translation of Life’s All About Drama, an interview of Madhuri Shekar by Anusha Parthasarathy in The Hindu MetroPlus Jan 2 2014 edition!

madhurimetro

Following her heart. (Photo: S.S. Kumar)

இந்த வருடம் மாதுரி சேகரின் இரண்டு நாடகங்கள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன.  ஒரு பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் வேலையை விட்டுவிட்டு எப்படி ஒரு நாடக ஆசிரியராக மாறினார் என்பதை இந்த சென்னைப் பெண் அனுஷா பார்த்தசாரதியிடம் பகிர்கிறார்!

முதலில் நாடக மேடையின் மேல் இருந்த ஈடுபாட்டை ஒரு பொழுதுபோக்காக எண்ணியதால் அமெரிக்காவில் தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் நல்ல ஒரு மார்கெடிங்க் வேலையில் அமர்ந்தார். ஆனால் அவருள் இருந்த கதாசரியை அவரை நிம்மதியாக அந்த வேலையில் இருக்க விடவில்லை. நல்ல ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு MFA (Masters in Fine Arts, The University of Southern California, Los Angeles, California) முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பயிற்சி! ஜூன் 2013ல் பட்டம் பெற்றார். தற்போது அவரின் இரண்டு நாடகங்கள் “In Love And Warcraft” ம் “A Nice Indian Boy” பெரிய நாடகக் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் அரங்கேற உள்ளன.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சரித்திர பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்புப் பெற்றார். சிறு வயது முதலே கதை சொல்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரி நாடகங்கள் பலவற்றில் பங்கேற்றாலும் நாடகத் துறையை தன் தொழிலாகக் கொள்ள அப்பொழுது அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் தன் முதல் முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரியில் நாடகத் துறை இருந்ததால் தன்னுள்ளிருந்த ஆர்வம் வெளிப்பட அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

“எப்பொழுதுமே என் ஆழ்மனத்தில் அந்த எண்ணம் இருந்ததால் ஒரு வாய்ப்புக் கிடைத்தவுடன் வெளி வந்துவிட்டது.” என்கிறார். நாடகத்துடனான அவர் காதல்அவர் தந்தை Bay Area (USA)வில்  கிரேசி மோகனின் நாடகங்களை அரங்கேற்றும் சமயத்திற்கு, பல வருடங்கள் பின்னோக்கிப் போகிறது! “நான் அவர் ஒத்திகை செய்து நடிப்பதைப் பார்த்து வளர்ந்தேன், என் ஆர்வம் அங்கு ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.

கண்மூடிக் குதித்தல்!

2010ல் MFA பட்டப்படிப்பில் சேர்ந்தார். மூன்று வருட படிப்பில் நாடகத் திரைக்கதை -வசனம், தொலைக்காட்சித் திரைக்கதை- வசனம், சினிமா திரைக்கதை -வசனம், ஆகியவற்றில் தேர்ந்து 6 நாடகங்களும், 2 சினிமாக் கதைகளும் எழுதி முடித்திருக்கிறார். “இந்தப் படிப்பின் பயிற்சி ஒருவரை பன்முக எழுத்தாளராக மாற்றுகிறது. என் நல்ல வேலையை விட்டுவிட்டு இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த என் முடிவில் நிறைய அபாயம் இருந்தும் நான் இந்த முடிவில் தீர்மானமாக இருந்து செயல்பட்டேன். இதை நான் செய்யாவிட்டால் பின்னாளில் வருந்துவேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.” மேலும் சொல்கிறார், “என்னை எது மகிழ்விக்கிறதோ அந்தத் துறையில் முழுமையான ஈடுபாட்டோடு அந்த 3 வருடங்கள்  பயிற்சிப் பெற்றது எனக்கு ஒரு மிக அற்புதமான அனுபவம். இதை நான் பகுதி நேர பயிற்சியாகவோ அல்லது பயிற்சியே இல்லாமல் இந்தத் துறைக்கு வந்திருந்தாலோ இந்த அளவு தேர்ச்சி எனக்கு வந்திருக்காது”.

தயாரிப்பில் இருக்கும் இரண்டு நாடகங்களுமே அவர் படிக்கும் பொழுது எழுதியவை. “மூன்றாம் வருடப் படிப்பில் இருக்கும்போது அந்த வருடம் பட்டம் பெறுபவர்களும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நாடகப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அதில் வெற்றிப் பெறுபவரின் படைப்பை The Alliance Group in Atlanta தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும்” என்கிறார் மாதுரி. இவருடைய நாடகம், “In Love And Warcraft”மற்ற மிகப் பெரிய கல்லூரிகளான Colombia University, NYU, Julliard School, ஆகியக் கல்லூரிகளில் படித்தவர்கள் சமர்ப்பித்த நாடகங்களுள் மிகச் சிறந்ததாகத் தேர்வாகி “Kendeda Play Writing Contest” ல் முதல் பரிசை வென்றது. இந்த நாடகம் இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தயாராகி மேடை ஏறும். “2013 ஆம் வருடம் மிக அற்புதமான வருடமாக எனக்கு இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற சூட்டோடு என்னுடைய thesis நாடகமான A Nice Indian Boyஐ  East West Players என்கிற மிகப் பழமையும் பாரம்பரியமும் மிக்க ஆசிய அமெரிக்க நாடகக் கம்பெனியினால் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்கிறார். இந்த நாடகம் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தயாராகி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கேறும். மேலும் இந்த நாடகம் சான் டியாகோ என்னும் ஊரில் உள்ள  The Old Globe Theater லும் படிக்கப்பட்டது.

“In Love And Warcraft” நாடகம் ஒரு ரோமான்டிக் காமெடி. இந்த நாடகத்தின் நாயகி வார்கிராப்ட் என்ற கணினி விளையாட்டின் தீவிர விசிறி/விளையாட்டு வெறியர். அவளை நிஜ வாழ்வில் ஒரு பையன் விரும்பும் போது என்னாகும் என்பதே கதை. “A Nice Indian Boy” வேறு மாதிரியானக் கதை. “அமெரிக்கா வாழ் ஓரினச் சேர்க்கையாள இந்தியப் பையன் ஒரு இந்துத் திருமண முறையில் தனக்குப் பிடித்தத் தன் காதலனை மணக்க விரும்புகிறான். அவன் விரும்புவதோ ஒரு அமெரிக்க ஆணை! பெற்றோர்களோ அப்பொழுது தான் தங்கள் மகன் இப்படிப்பட்டவன் என்கிற உண்மையை உணர்ந்து மனத்தைத் தேத்திக் கொண்டிருக்கும் தருவாய. அப்பொழுது  அவன் தன காதலனை வீட்டுக்கு அழைத்து வந்து அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் கோரிக்கையை முன் வைக்கிறான். அதே சமயம் பெரியோர்களால் நிச்சயித்த அவர்கள் மகளின் திருமணம் ஆட்டம் கண்டு அவள் தன் கணவனை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்ற முடிவோடு தாய் வீடு திரும்புகிறாள். இந்த நாடகம் திருமண பந்தத்தை இந்தியர்களுடைய பார்வையில் அலசுகிறது” என்கிறார் மாதுரி.

சிகண்டி பற்றியும், அரவான் பற்றியும் இந்த நாடகத்தில் ஒரு சீனில் கதாநாயகன் மேற்கோள் காட்டுவதாக வருகிறது.” இந்த நாடகம் முழுக்க விநாயகர் பற்றிய குறியீடுகளும் வந்து கொண்டே இருக்கும். இந்து மதப்படி அவர் திருமணம் ஆகாதவர் ஆயினும் மற்றவர் திருமணங்களுக்கு உதவுபவர். இந்த விஷயங்களை எல்லாம் இந்திய அமெரிக்க வாழ்வியலோடுப் பின்னிப் பிணைக்க ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் வளர்க்கப்பட்டாலும் இந்து மதத்தோடு ஒரு தொடர்பை அழுத்தமாக ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒரு இந்திய வம்சாவளியின் கதை இது. மேலும் arranged  திருமணம் புரிந்த சகோதரி, தன பெற்றோருக்கு அது சரிப்பட்டாலும் அவளுக்கு அது சரியாக அமையாமல் இருப்பது பற்றியும் இதில் பேசுகிறேன்” என்கிறார் மாதுரி.

லாச் என்ஜலசில் நடக்கும் ஒரு நாடக ஆசிரியர்கள் பயிற்சி கூட்டத்திற்கும் மாதுரி அழைக்கப் பட்டுள்ளார். (L.A’s Center Theater Group) “ஒரு வருடத்திற்கு 7 கதாசிரியர்களுக்கு மட்டுமே அவர்கள் அழைப்பு விடுப்பார்கள். அவர்களுக்காக ஒரு நாடகம் எழுத நான் அழைக்கப் பட்டிருக்கிறேன். இந்த நாடகத்தின் கதைக் களம் ஒரு கெமிஸ்ட்ரி லேப். என் அறைத் தோழியின் முதுகலைப் படிப்பு வாழ்க்கையில் இருந்து வந்த ஒரு கதைக் கரு இது”.

University of Southern California வில் உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றி வருகிறார். ” என்னை அமெரிக்காவில் உள்ளோர்கள் ஒரு இந்திய எழுத்தாளராக பார்க்கக் கூடாது என்பதற்காக என் முதல் நாடகம் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியதாக எழுதினேன். நடிப்பவர்களும் எல்லா தேசத்தவராகவும் இருக்கின்றனர். நான் பல்கலைக் கழகத்தில், என் உபரி வருமானத்திற்காக உலக நாடகத்தின் சரித்திரம் பற்றி பாடம் எடுக்கிறேன்”.