“அவரவர் தமதமதறி வறிவகை வகை
அவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள்
அவரவர் ரிறையவர் குறைவில் ரிறையவர்
அவரவர் விதிவழி யடைய நின்றனரே”
அவரவர் விருப்பபடி இருப்பதே இன்பம். மேலும் அவரவர் இஷ்ட தெய்வத்தை அவரவர் விருப்பபடி வணங்குவதுமே தான் இயல்பு நிலை. ஒவ்வொருவரின் அறிவும் புரிந்து கொள்ளும் திறனும் மாறுபடுகிறது. என் தன்மைக்கு ஏற்ப நான் புரிந்து கொள்கிறேன். என்னால் முடியும் முயற்சியில் இறங்கி என் சக்திக்கேற்ப நான் இறைவனை முயன்று அடைகிறேன். குறையொன்றும் இதிலில்லை! எம்முறைப்படியும் இறைவன் திருப்பாதங்களை அடையமுடியும். இதனை ஆணித்தரமாகச் சொன்னவர் நம்மாழ்வார்.
ஒரு சிறந்த ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மாணவனின் கிரகிக்கும் தன்மை வேறு வேறு. திறமைக்கு ஏற்பப் பாடத்தை நடத்தி, சொல்ல வந்த விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ள வைப்பதில் இருக்கிறது அவர் சாமர்த்தியம். இறைவனும் அதையே செய்கிறார். தேவைக்கேற்ப முறையும் மாறுபடுகிறது. சூரியனை வழிபடுபவர்களும் மாடசாமியை வழிபடுபவர்களும் ரங்கனாதரை வழிபடுபவரும் யாவரும் வணங்குவது ஒரே இறைத்தன்மையைத் தான். இதனால் வணங்குபவர்கள் இடையே எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இதனை அழகுத் தமிழ் பாசுரங்கள் வாயிலாகச் சொல்கிறார் நம்மாழ்வார். ஒரு இறைவனை வணங்குபவர் வேறு இறைவனை வணங்குபவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.
வேளாண் குடியில் பிறந்த காரியார் அவரின் மனைவி உடைய நங்கையார் என்ற உயர்ந்த பக்தர்களுக்கு வைகாசி விசாகத்தன்று திருக்கருகூரில் நம்மாழ்வார் பிறந்தார் (தற்போது ஆழ்வார் திருநகரி என்று பெயர்). பிறந்தது முதல் உண்ணாமல் அழாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தியப் பெற்றோர்கள் திருநகரியில் உள்ள ஆதி பிரான் கோவிலில் வந்து குழந்தையைக் கிடத்தி இறைவனிடம் பிரார்த்தித்தனர். அப்பொழுது அது வரை அசையாது இருந்த குழந்தை அங்கே இருந்த ஒரு புளிய மரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அந்த மரத்தில் உள்ள பொந்தில் உட்கார்ந்து கொண்டது. மற்ற குழந்தைகளை விட மாறுபட்டு இருந்தக் காரணத்தினால் மாறன் என்று பெயரிட்டனர். அக்குழந்தை பதினாறு வருடங்கள் அந்த பொந்திலேயே அமர்ந்திருந்தது.
இராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன், நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.
அந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.
ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.
திருமாலின் திருப்பாதங்களாகவே நம்மாழ்வார் கருதப்பட்டார். நம்மாழ்வார் சடாரி! நம்மாழ்வாரின் உருவம் பதித்த சடாரி இங்கே.
வைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார். இதில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது மதுரகவியாழ்வார் அந்தணக் குலத்தைச் சேர்ந்தவர். அவர் தன் குருவாக ஏற்றுக் கொண்டு இறைவன் மேல் கூடப் பாடாமல் தான் ஆச்சார்யனே இறைவன் என்று அவர் மேல் மட்டும் பாடியது விவசாயக் குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை.
இவை யாருடைய பாக்கள என்று எல்லோரும் கேட்க, இவை நம் ஆழ்வாரின் பாக்கள் நம் ஆழ்வாரின் பாக்கள் என்று மதுரகவியார் சொல்லிச் சொல்லி ஆழ்வாரின் திரு நாமமும் நம்மாழ்வார் என்றாயிற்று. நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், குருகூர் நம்பி, குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான், தென்னரங்கன் பொன்னடி என்று பல பேர்கள் உண்டு. காரி மாறன் என்று தந்தை பெயருடன் கூடிய பெயரும் உண்டு.
பக்தி என்னும் அங்குசத்தால் பரமன் என்னும் களிற்றை வசப்படுத்தியதால் பராங்குசம் என்றும், மகிழம்பூக்களால் ஆன மாலையணிந்து அழகுற இருந்ததால் வகுளாபரணன் என்றும், ஊர் பேரைச் சேர்த்து குருகூர் நம்பி, குருகைப் பிரான் என்றும், ‘பர’ தத்துவத்தை விளக்கியதாலும் திருமாலுக்குள்ளே அனைத்துத் தெய்வங்களும் அடக்கம் என்னும் கருத்தை வீறு கொண்டு விளக்கியதால் நாவீறுடையான் எனவும் வழங்கப்பட்டார்.
நம்மாழ்வார் திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி என்னும் நான்கு திருமறைகளை அருளினார். இதனை மதுரகவியாழ்வார் ஓலையில் எழுதினர். இந்த நான்கும் வேதத்தின் சாரமாகும். அதாவது வடமொழியில் உள்ள ரிக், யஜூர், சாம அதர்வண வேதத்தின் கருத்துக்களை ஆழ்வார் தமிழில் விளக்கினார். எனவே தான் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்னும் பெயரும் இவருக்கு உண்டாயிற்று. நம்மாழ்வாரின் பாடல்கள் திராவிட வேதம் என்றழைக்கப்பட்டன.
எல்லாவற்றிற்கும் வித்தாக இருப்பவன் இறைவன். அவனே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான். இது தான் இறைவனைப் பற்றி கீதை உபதேசிக்கும் தத்துவமாகும். இதனை ஆழ்வார்,
“யாவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்று
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி”
என்றும்,
“அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானே
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரோ”
என்று அந்த இறைவன் திருநாமம் நாராயணன் என்றும் அவன் பாற்கடலில் பள்ளிக் கொண்டவன் என்றும் இவனுக்குள் சகலமும் அடக்கம் என்றும், இதை அறிந்து கொள்வதே இறைவனை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாகும் என்று கூறுகிறார். எல்லாருக்கும் இந்த ஞானம் வருவது எளிது கிடையாது. எனவே தான் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு பற்பல தெய்வங்களை வணங்குகின்றோம்.
உயிரினங்கள் துயரமின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே யாகும் என்பது இவர் கொள்கை.
அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
(திருவாய்மொழி, 1.2.5)
பக்தியால் உலகில் எதனையும் பெறமுடியும் என்பது அவருடைய எண்ணம். நம்மாழ்வார்க்குக் காணுகின்ற பொருளனைத்தும் கண்ணன் வடிவாகவே காட்சியளிக்கும். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திலும் அவன் உள்ளான் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் அவர் ஏற்படுத்தினார். வானில் திரியும் மேகங்களைப் பார்த்து, “மேகங்களே நீங்கள் திருமாலின் திருமேனியழகை எப்படிப் பெற்றீர்” என்று கேட்பார்!
இவரது பாடல்களைத் தமிழ் சங்கத்தார் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதோ என்று கேட்க, கண்ணன் கழலிணை என்னும் பாசுரத்தின் முதல் அடியை மட்டும் பலகையில் வைக்க உடன் வைக்கப்பட்ட இதர நூல்களையெல்லாம் தள்ளி திருவாய் மொழியினைச் சங்கப் பலகை பெருமையுடன் தாங்கி நின்றது.
நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் தாக்கம் கம்பராமாயணத்தில் நன்கு வெளிப்படுகிறது. கம்பர் ஆழ்வாரின் பாசுரங்களை நன்குக் கற்று நம்மாழ்வாரைப் போற்றி அவரது பெயரிலேயே சடகோபரந்தாதி என்ற நூலை இயற்றினார்.
“வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்
தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்
முன் செல்க குணங் கடந்த
போதக் கடலெங் குருகூர்ப்
புனிதன் கவியின் னொரு
பாதத்தின் முன் செல்லுமோ
தொல்லை மூலப் பரஞ்சுடரே”
என்றார் கம்பர்.
மேலும் இவர் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இது இவரின் தனி சிறப்பு. மடலூர்தல் என்பது சங்கக் கால மரபு. தான் விரும்பியப் பெண்ணை அடைய முடியாதத் தலைவன் அவளின்றி தான் வாழ முடியாத நிலையைக் காட்ட குதிரையிலேறி எருக்கம் பூ மாலை அணிந்து அப்பெண்ணின் படம் எழுதப்பட்டக் கொடியை கையில் வைத்துக் கொண்டு உடம்பெல்லாம் புழுதிப் பூசிக்கொண்டு வெட்கத்தை விட்டு நடுத்தெருவில் நின்று என்னைக் கைவிட்ட இரக்கமில்லாத பெண் இவள் தான் என்று கூவுவானாம். இதைக் கண்ட அவ்வூர் பெரியவர்கள் மனமிரங்கி அந்தப் பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைப்பார்களாம்.
தன்னை நாயகியாய் பாவித்துக் கொண்ட நம்மாழ்வார் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பகவானிடம் மன்றாடிப் பலப் பாடல்கள் பாடுகிறார். கண்ணபிரான் பராமுகமாக இருக்கிறான், என்னைக் கைவிட்டு விட்டான் என்று அலர் தூற்றியவாறே மடலூர்வேன் என்கிறார்.
நாணும் நிறையக் கவர்ந்தென்னை
நன்னெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திற்கும்
தேவ பிரான் றன்னை
ஆணையென் தோழீ உலகு
தொறலர் தூற்றி ஆம்
கொணைகள் செய்து குதிரி
யாம் மட லூர்துமே
என்று பக்தி இலக்கியத்தில் முதல் முறை மடலேறுதலைப் புகுத்தியது நம்மாழ்வார் தான்.
பெண்ணாக இருந்து அன்பு செலுத்தி இறைவனை அடைவது எளிது. அதைத் தான் ஆண்டாள் செய்தாள். அவள் காட்டுக்குச் செல்லவில்லை, தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை, மந்திரங்கள் பயிலவில்லை. பூமாலையை தினம் இறைவனுக்குச் சூடிக் கொடுத்தாள். இந்த அண்டத்தில் பரமாத்மா மட்டுமே ஆண் மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பெண் இனம். அதனால் பெண்ணான மீராவைப் போல ஆண்டாளைப் போல அன்பு செலுத்தினால் அவன் திருவடிகளை அடைவது எளிது.
நாயகி பாவத்தின் வேறு ஒரு பரிணாமமாக தன்னை மறந்த நிலையில் தலைவி செய்யும் செயல்களைக் கண்டு ஒரு தாய் புலம்புவதாக இந்தப் பாடல் வருகிறது,
மண்ணையிருந்து துழாவி வாமனன் மண்இது என்னும்
விண்ணைத் தொழுது அவன்மேவு வைகுந்தம் என்று
கைகாட்டும்
கண்ணையுள் நீர்மல்க நின்று கடல் வண்ணன் என்னும்
அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன்
பெய்வளையீரே
(திருவாய்மொழி, 4.4.1)
நாரை, பூவை முதலிய பறவைகளை இறைவனிடம் தூதாக அனுப்பிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. பழங்காலத் துறைகள் மட்டுமல்லாமல், பழங்கால இலக்கியத் தொடர்களும் திருவாய்மொழியில் சில இடங்களில் அப்படியே உள்ளன.
நம்மாழ்வார் வேதத்தின் கருத்துக்களைத் தமிழ் படுத்தி இறை நிலையை உலகுக்கு உணரச் செய்தார். அதனை இராமனுசர் பேணிக் காத்து வளர்த்துப் பெரிது படுத்தினார். நம்மாழ்வாரின் பாசுரங்கள் இறைவனது பண்புகளையும், அவனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், ஊழ்வினை அடிப்படையில் அதற்கேற்படும் இடையுறுகளையும், அதை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்குகின்றன.
பூரண அன்பு நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும். அந்த அன்பு தியாகத்தில் இருந்து தான் பிறக்கும். இறைவனிடம் அன்பு வைத்து, தொண்டில் நம்மை முழுக்க ஐக்கியப் படுத்திக் கொண்டால் அந்த இறைவனே நம்மை ஆட்கொள்வான் என்னும் உயர்ந்த தத்துவத்தை அளித்துள்ளார் நம்மாழ்வார். அவரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி
“பாடுவதெல்லாம் பராங்குசனை, நெஞ்சத்தால்
தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்
காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்
பூண்பதேல்லாம் மாறனடிப் போது.”
“நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தாற்கு மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டவர்க்கும், எல்லா சமயத்தவர்க்கும் எல்லா இனத்தவர்க்கும் உரியவர்.” – திருவிக (தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் எட்டாம் பக்கத்தில் எழுதியது)
மகாபாரதத்துக்கு நடுவே பகவத் கீதை என்னும் முத்துக் கிடைத்ததுப் போலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இடையே நம்மாழ்வாரின் பாசுரங்கள் இரத்தினமாக மிளிர்கின்றன.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
Reference: http://www.tamilvu.org/
ஆழ்வார்கள் வரலாறு- அ. எதிராஜன்
நாலாயிர திவ்யபிரபந்தம் – இரா.வ.கமலக்கண்ணன்
சில அரியப் புகைப்படங்கள் கொடுத்து உதவிய @kryes க்கு நன்றி.
Jan 30, 2014 @ 16:18:23
எப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்.
எனக்கும் புரியும்படி எழுதுகிறீர்கள்.
அற்புதம். மஹா அற்புதம்.
God bless you and all you love.
Regards, pvr.
Jan 31, 2014 @ 01:11:39
மிக்க நன்றி 🙂 உங்கள் பாராட்டுதல்கள் எனக்கு பெரிய உந்துதல் 🙂
Jan 30, 2014 @ 16:24:56
//இவர் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இது இவரின் தனி சிறப்பு//
அருமை. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி 🙂
Jan 31, 2014 @ 01:11:59
மிக்க நன்றி 🙂
Jan 30, 2014 @ 16:37:51
திருக்குருகூர் புளியமரம் உறங்காப்புளி யென்றும், திருப்புளியாழ்வார் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வாரைப் பற்றி மிகமிகச் சிறப்பாக, எல்லா செய்திகளையும் உள்ளடக்கியதாக, பதிந்துள்ளீரகள்.ஆழ்வார் பாடல்கள் பரிபூரண சரணாகதியை காட்டுபவை.
நம்மாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.
Jan 31, 2014 @ 01:12:40
நீங்கள் ஒரு ஆசிரியர். உங்கள் வாழ்த்து எனக்குப் பொன் போன்றது, நன்றி 🙂
Jan 30, 2014 @ 17:34:59
தமிழ் விக்கியில் (http://goo.gl/pZP3ex) இல்லாதா அளவுக்கு விடயங்கள் பொதிந்துள்ளது. இதை நீங்கள் விக்கியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் 🙂
Jan 31, 2014 @ 01:10:47
மிக்க நன்றி 🙂
Jan 31, 2014 @ 01:59:04
இந்த காலை பொழுதில் நம்மாழ்வாரை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி. சொல்லிய விதத்தில் எந்த இடத்திலும் சலிப்பு தட்டவில்லை. பிறப்பினால் நான் வைணவம் பூர்வீகம் கோதை பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். பத்து வயதுக்குப்பின் உற்றார் உறவினர்களை விட்டு விட்டு தூர தேசம் சென்று வாழும் நிலை. இறைபற்றில் தீவிர விசுவாசம் காட்ட இயலாத நிலை. நீங்கள் தொடர்ந்து பக்தியில் திளைத்துக்கொண்டிருக்கும் பேறு பெற்றுள்ளீர்கள்.. ஆனாலும் எங்கு சென்றாலும் திருமால் என்னருகே உள்ளதுபோலதான் வாழ்கிறேன்.
முதன் முதலா திருமாலுக்கு மங்களாசாசனம் செய்து வைத்தவர் எம்மூர் பெரியாழ்வார் என்றறிகிறேன். அவரை பற்றியும் விவரித்தால் மகிழ்ச்சியடைவேன்.
வாழ்க நிம் பணி வளர்க நிம் தொண்டு . நன்றி சகோ
Jan 31, 2014 @ 02:09:11
மிக்க நன்றி. எல்லா புகழும் என் குருவிற்கே 🙂 அவரைப் பற்றி இங்கே.. https://amas32.wordpress.com/2012/04/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-k-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/
Jan 31, 2014 @ 02:42:07
நெறைய டீடைல்ஸ் பொதுவா இம்மாதிரியான ஆன்மீகக் கதைகளோ கட்டுரைகளோ வாசிப்பதில்லை. பெருசா சுவாரஸ்யம் இருக்காது. சும்மா கடவுள், கருணை, தூணிலும், துரும்பிலும் ரேஞ்சிலேயே போட்டடிக்கும். ஆனா இங்க நல்ல சுவாரஸ்ய கதைகள் இருக்கு. புளியமரம் சாபம் மாதிரி குழந்தைகள் விரும்பி ரசிக்கும் கதை. ஆழ்வார் பாசுரங்கள், நம்ம ஆழ்வாரா திரிஞ்சு நம்மாழ்வார் ஆனது சுவாரஸ்ய பின்னணி. பெண்ணாய் இருந்தால் அன்பு செலுத்தி இறைவனை அடைவது எளிது. ஹாஹா வைணவக் கடவுளுக்கு பெண்கள் மேல எப்போதுமே எக்ஸ்ட்ரா கேர் இருக்கும்தானே 🙂
Jan 31, 2014 @ 04:15:20
:-))
Jan 31, 2014 @ 03:34:26
திருவோணம் ஸ்ரவண விரதம் இன்று.காலையில் இவ்வளவு நல்ல விஷயம் படிக்க உதவியதற்கு நன்றி.எவ்வளவு விஷயத்தை இவ்வளவு அருமையாக சுருக்கி கொடுத்துள்ளீர்கள்.ஆழ்வார் ஆச்சாரியன் அருள் கிட்டட்டும் உங்களுக்கு.
Jan 31, 2014 @ 05:12:26
மிக்க நன்றி 🙂
Jan 31, 2014 @ 07:29:53
Pramadam Guruji…Enakkum Divya Prabandam Kattrukkollavendum. Idhu Polave ella Azhvargalum …..Super..Mikka Nandri…
Jan 31, 2014 @ 11:39:31
thanks 🙂
Jan 31, 2014 @ 12:11:27
மிக அருமையான பதிவு. மிக மிக எளிமையாக, எதார்த்தமாக ஒரு கதை சொல்வதை போல விவரித்துள்ளீர்கள். பல பல புதிய விஷயங்களை அறிந்துகொண்டேன். கட்டுரை தொடர்பான படங்களை தேர்ந்தெடுத்த பாங்கினை ரசித்தேன். பொருத்தமாக இருந்தன.
Feb 01, 2014 @ 06:31:29
மிக்க நன்றி சதீஷ் 🙂
Feb 01, 2014 @ 06:25:18
இயன்றவரை எளிமையாக கொடுத்துள்ள ஆன்மிக பதிவு.நம்மாழ்வார் என்றதும் என் நினைவுக்கு வருவது என் தந்தை..ஆழ்வார்களிலேயே அவர் தனிச் சிறப்பு வாய்ந்தவர் என்பார்.அவர் இருக்கும் பொழுது ஆழ்வார் திருநகரி சென்றோம்.மெனக்கெட்டு நம்மாவார் முன்பு அவரது பாசுரங்களைப் பாடினார் 🙂 அந்தப் புளிய மரம் ,அந்த பொந்து ,என அத்தனையும் மனதில் பதிந்து இருக்கின்றது.திருநெல்வேலி பக்கம் சென்றால் நவ திருப்பதி அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.படிக்கப் படிக்க அங்கேயே சென்று விட்டேன் ..ஆகா கேமரா இருந்திருந்தால் உறங்காப் புளி ஆழ்வார் திருநகரி போட்டோ எடுத்து கொடுத்திருக்கலாமே என நினைச்சேன் நேற்று இந்தப் பதிவு படிச்சப்போ..KRS அக்குறையை நீக்கி விட்டார் :)இந்த வயதிலும் உங்கள் தேடல்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன .தொடரட்டும்:)
Feb 01, 2014 @ 06:30:56
மிக்க நன்றி உமா 🙂 நான் இன்னும் நவ திருப்பதி சென்று தரிசித்ததில்லை.
Feb 01, 2014 @ 13:45:11
நம்மாழ்வார் பெயருக்கு பின்னால் உள்ளவைகளை எனக்கு அறிமுக படுத்தியதற்கு நன்றிகள். இதைப்போல் வரலாறு தடயங்களை உள்ளடக்கிய விவரங்களை படிக்கும்போது, அந்த இடங்களை சென்று பார்க்க ஆவல் வரும், அப்படி படித்த இடங்கள் நிறைய எண் அகத்தே இருக்கு. அதில் இப்போது ஆழ்வார் திருநகரியும் சேர்ந்துள்ளது.
Feb 01, 2014 @ 14:27:31
நன்றி 🙂
Feb 03, 2014 @ 10:01:39
சுருக்கமாக, சுவையாக முக்கியமாக எளிமையாக நம்மாழ்வார், திருவாய்மொழியின் சாரத்தை பிழிந்து வழங்கி இருக்கிறீர்கள் 🙂 பாராட்டுகள், தொடர்ந்து வைணவம் பற்றி நிறைய எழுதவும். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த பராங்குசநாயகி பாசுரம்:
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்
எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
‘கட்டமே காதல்!’என்றுமூர்ச் சிக்கும்
‘கடல்வண்ணா!கடியைகாண்’என்னும்
‘வட்டவாய் நேமி வலங்கையா!’என்னும்
‘வந்திடாய்’என்றென்றே மயங்கும்
சிட்டனே!செழுநீர்த் திருவரங் கத்தாய்!
இவள்திறத் தென்சிந்தித் தாயே?
பராங்குச நாயகி பாவம் போல, திருமங்கை மன்னன் தன்னை பரகால நாயகியாக பாவித்து அருளிய சிறிய திருமடலும், பரமபக்தியும், பேரன்பும் வெளிப்படும் இலக்கியம்…. வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
”அவரவர் தமதமது அறியறி வகை….” என்று பாடிய காரிமாறப்பிரான், இன்னொரு இடத்தில் “குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே!” என்றும் நம்மை செல்லமாக கடிந்து கொள்வார் 🙂 அவரது பக்திப்பரவச மற்றும் தண்ணொளி மிகு நிலையில் ஆழ்வார் பாடிய அனைத்தையும் அனுபவித்து புரிந்து கொள்ள பல வியாக்கியைகளை கை கொள்ளல் வேண்டும்!!!
அன்புடன்
பாலா
Feb 03, 2014 @ 12:55:54
மிக்க நன்றி. இது சம்பிரதாய வார்த்தை இல்லை. உங்களை நான் உயர்ந்த இடத்தில்
வைத்துள்ளேன். அன்புடன் நன்றி நவில்கிறேன்.
Feb 03, 2014 @ 12:09:15
நவ திருப்பதி செல்ல கார் உசிதம் அம்மா..புரட்டாசி சனி தவிர இடைப்பட்ட நாட்களில் சென்றால் கூட்டமின்றி மிக அருகில் தரிசிக்கலாம்
Feb 03, 2014 @ 12:52:35
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல், என் ஆசையை அவன் தான் நிறைவேற்றி
வைக்க வேண்டும் 🙂
Feb 23, 2014 @ 13:46:24
Thanks for the rare photo of Nammalwar in sayana thirukolam and Perumal as Nachiyar.Your article has given me abundant information on Nammalwar.Thank you. May God bless you for this wonderful kainkaryam. Raji.
Feb 23, 2014 @ 19:28:26
Thank you 🙂