எங்கள் மகள் ஸ்க்ரிப்ட் ரைடிங்கில் முதுகலைப் பட்டம் பெறும் தருவாயில் அவள் தான் எழுதிய ஒரு நாடகத்தை ஒரு போட்டிக்கு அனுப்பி வைத்தாள். அந்தப் போட்டி வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மிகவும் மதிப்பு மிக்க ஒரு நாடக ஆரங்கம் Alliance Theatre (http://alliancetheatre.org/) நடத்தும் போட்டி (Alliance Kendeda National Graduate Playwriting Competition). அதில் பெருமை மிக்கப் பலக் கல்லூரிகளில் இருந்து நாடகத் துறையில் முதுகலை பட்டம் பெரும் பலரும் தங்கள் நாடகங்களைப் போட்டிக்கு அனுப்புவார்கள். அந்த பெரு மதிப்புடைய போட்டியில் மாதுரி முதல் பரிசு பெற்றாள். அதில் பரிசுத் தொகையைத் தவிர அவளின் நாடகம் அவர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப் படும். இது பரிசு பெரும் நபருக்குப் பெரியதொரு அங்கீகாரம் மட்டும் இல்லை அவர் நாடகத்தை குன்றிலேற்றி பிரகாசிக்கச் செய்யும் ஒரு அரிய வாய்ப்பு!
இயக்குநர் தேர்வில் இருந்து நடிகர்கள் தேர்வு வரை போட்டியில் வெற்றிப்பெற்ற கதாசிரியரின் பங்கு பெருமளவு. என் மகளுக்கு அவர்கள் முதலில் அழைத்து வந்த இயக்குநரையே மிகவும் பிடித்துவிட்டது (Laura Kepley). பின் நடிகர்கள் தேர்வுக்கு அவள் அட்லாண்டா சென்று பல ஆடிஷன்கள் நடத்தியும் சரியான நடிகர்கள் கிடைக்காததால் அவர்கள் அவளை நியுயார்க்கிற்கும் வரச்சொல்லி அங்கு ஆடிஷன் நடத்தித் தகுந்த நடிகர்களைத் தேர்வு செய்தனர்.
மாதுரியின் இன்னுமொரு நாடகமான A Nice Indian Boyயையும் East West Players என்னும் இன்னுமொரு மதிப்பு மிக்க நாடகத் தயாரிப்பு நிறுவனம் இதே சமயம் தயாரிக்க முன் வந்தது. இந்த நாடகம் அவர்கள் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றிருந்தது. அதனால் அந்த நாடகத்தின் இயக்குநர்/நடிகர்கள் தேர்விலும் ரிஹர்சலிலும் அவள் ஈடுபட்டிருந்தாள். முதல் நாடகம் அட்லாண்டா என்னும் ஊரிலும் இரண்டாவது நாடகம் லாஸ் ஏஞ்சலிஸ் என்ற நகரத்திலும் தயாரிக்கப்பட்டு ஒரே மாதத்தில் (FEB 2014) அரங்கேறுகின்றன.
இங்கு இயக்குநர் சொல்லும் மாற்றங்களை கதாசிரியர் தான் மாற்றித் தரவேண்டும். இயக்குனரே மாற்றி கொள்ள முடியாது. அதனால் நாடக ஆசிரியர் ரிஹர்சலின் போது இருக்கவேண்டியது அவசியம் ஆகிறது. அதனால் இரண்டு முறை அவள் அட்லாண்டா சென்று இரண்டு முறையும் சுமார் இரண்டு வாரங்கள் தங்கி மாற்றங்களை எழுதிக் கொடுத்தாள். ஒவ்வொரு நாளும் 12 மணிக்கு ஆரம்பித்து ரிஹர்சல் மாலை 8 மணிக்கு முடியும். அட்லாண்டா நகரம் நாடகத் துறைக்கு நல்ல ஒரு ஆதரவைத் தரும் ஊர். பாரம்பரியத்தை மிகவும் போற்றும் ஒரு நகரம். கலைக்கு நிறைய ஊக்கம் அளிக்கும் விதத்தில் பல செல்வந்தர்கள் தாராள நன்கொடை அளித்துக் கலையை இங்கு வளர்க்கின்றனர்.
Alliance Theaterல் நேற்று February 5ஆம் தேதி In Love and Warcraft நாடக அரங்கேற்றம். நாடகம் 8மணிக்கு ஆரம்பம். 6.30க்கு சிறப்பு விருந்து. முக்கிய donorகள், Kendeda போட்டி Finalists 5 பேர்கள், மேலும் நாங்களும் அவ்விருந்துக்கு அழைக்கப் பட்டிருந்தோம். ரொம்ப அருமையானதொரு விருந்து. நாடகத்தினால் சமூகத்தக்கு என்ன பயன் என்பதைப் பற்றி ஐந்து பேரும் சில வார்த்தைகள் பேசினார்கள். பிறகு பரிசை வென்ற மாதுரி பேச அழைக்கப்பட்டாள். அவள், தான் playwright ஆக ஆன தன் பயணத்தைப் பற்றி மிகவும் அழகாகப் பேசினாள். வந்திருந்தவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள். ஒன்றிரண்டு இந்திய வம்சாவளியினர் இருந்தனர்.
என்னையும் என் கணவரையும் அனைவரும் மிகவும் அன்புடன் வரவேற்று எங்கள் மகளைப் பற்றி மிகவும் புகழ்ந்தனர். வந்து பேசியவர்களில் பலர் அந்த நிறுவனத்தின் trustees, தேர்வுக் குழுவினர், சிலர் donorகள். அவர்கள் மாதுரியை முன்பே சந்தித்திருந்தனர். விருந்து முடிந்து அந்தக் கட்டிடத்திலேயே இருந்த அரங்கத்திற்கு சென்றோம். சரியாக எட்டு மணிக்கு நாடகம் ஆரம்பம் ஆயிற்று. அரங்கமே மிகவும் பழமை வாய்ந்ததும் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் விதமாக இருந்தது. அங்கு எங்கள் மகளின் நாடகம் அரங்கேறுவதே இறைவன் கருணை என்று தோன்றியது.
செட்டுக்கும் உடை அலங்காரத்திற்கும் நிறைய மெனக்கெட்டிருந்தார்கள். சோபாக்கும் நாற்காலிக்கும் வயரினால் கட்டப்பட்ட லீவர் புல்லி வைத்து அரங்கத்தை விட்டு உள்ளே இழுக்கப்பட்டன. வரவேற்பு அறை நிமிடத்தில் ஒரு தெருவாக மாற இம்முறைக் கையாளப்பட்டது. நியு யார்க்கைச் சேர்ந்த ஒரு டிசைன் ஹவுஸ் இவர்களின் செட் டிசைனராக இருந்து ஒவ்வொரு set ஐயும் அவ்வளவு professional ஆக தயாரித்திருந்தனர்! செட் டிசைனர் Andrew Boyce.
நாடகம் வார்கிராப்ட் என்னும் interactive கம்பியுடர் விளையாட்டோடு சம்பந்தப்பட்டது. அதனால் அதில் வரும் கதாப்பத்திரங்களுக்காக அச்சு அசலாக அந்த கம்பியுடர் கேமில் எப்படி வருமோ அதே மாதிரி costumes தயாரிக்கப் பட்டிருந்தன. ஆடை வடிவமைப்பாளர் Lex Liang. இது அவர்களின் தயாரிப்பு தரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு.
நாடகம் முடிந்ததும் standing ovation கிடைத்தது. நடிகர்கள் அற்புதமாக நடித்திருந்தனர். நாங்கள் மாதுரியின் பெற்றோர்கள் என்று நன்றாகத் தெரிந்ததால் வந்திருந்தவர்களில் அநேகம் பேர் எங்களிடம் வந்து நாடகத்தை சிலாகித்து மாதுரியைப் பற்றிப் பாராட்டிச் சென்றனர்.
இந்த நாடகம் இதே அரங்கில் தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும். வார நாட்களில் மாலையில் ஒரு show. வார இறுதியில் இரண்டு மதியம் ஒரு ஷோ, இரவு ஒரு ஷோ. இது இளைஞர்களுக்கான ஒரு நாடகம். அவர்கள் நன்றாக relate செய்து அனுபவித்து மகிழ்வார்கள்.
மாதுரி பிறந்தது அமெரிக்காவில் என்றாலும் வளர்ந்தது சென்னையில் தான். இளங்கலைப் பட்டம் சென்னையில் தான் பெற்றாள். மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று அவர்களின் ரசனைக்கு ஏற்ப தரமான நாடகத்தை எழுதியது மிகவும் பாராட்டுக்குரியது. அவளின் முதல் முதுகலைப் பட்டம் வேறுத் துறையில். ஆனால் தன் ஆர்வம் நாடகத் துறையில், குறிப்பாக எழுத்து தான் தன் passion என்பதை தெளிவுற உணர்ந்து அந்தத் துறையில் நல்ல முறையில் கால் பதித்துள்ளாள். அவள் மேலும் சிறப்பாக பல நாடகங்கள், சினிமாக் கதைகள் எழுதி பெயரும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் 🙂
Feb 07, 2014 @ 04:32:19
சூப்பர், வாழ்த்துகள் 🙂
Feb 07, 2014 @ 04:47:49
பெருமைக்குரிய விடயம். வாழ்த்துக்கள். தங்கள் மகள் இள வயது அமெரிக்கராக இருந்தாலும், இந்தியாவில் வளர்ந்தவர். அப்படி ஒரு பின்புலத்தை வைத்துக்கொண்டு தற்கால அமெரிக்கக் கலாச்சார விசயங்களை இள வயதிலேயே நாடகமாக மேடையில் ஏற்றுவது என்பது சாதாரண விசயமே இல்லை! பாராட்டுக்கள்.
Welcome to the home of Southern hospitality – Peachtreee city of Atlanta, the capital city of the great state of Georgia 🙂
Feb 07, 2014 @ 04:54:38
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! 🙂
Feb 07, 2014 @ 05:51:36
வாவ்.. வாழ்த்துகள். ஒரு stand upபார்த்திருக்கேன் அவங்களது.. இது யூட்யூப்ல வருமாம்மா????
Feb 07, 2014 @ 08:40:55
pramadamana varnani. Neril parthathupol irundhadhu. Arumaiyana kuzhandhai Madhuri. En manamarntha vazthukkal.
Feb 07, 2014 @ 08:43:09
Lovely. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும், தன் மகளின் புகழை நேரில் காணும் தாய் தந்தையர், மற்றும் அவர்தம் சுற்றமும் நட்பும்!
God Bless!!
Feb 07, 2014 @ 10:12:25
Congratulations to your daughter and Hats off to you and Shekar sir,as you did not come between her dreams.God bless your family.
Feb 07, 2014 @ 11:50:44
அனைவருக்கும் நன்றி 🙂 இது YouTubeல் வராது. புகைப்படங்கள் எடுக்கவோ லைவ் ட்வீட் பண்ணவோ கூட அனுமதி இல்லை. நான் போட்டிருக்கும் படங்கள் கூட அவர்கள் வெப் சைட்டில் இருந்து எடுத்தவை.
Feb 07, 2014 @ 14:09:19
கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் உங்கள் பூரிப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள். (வேறென்ன கேக்க போறேன்? ரசம் வித் ஊர்காய் ட்ரீட் ஊர் வந்ததும் கொடுக்கவும்)
Feb 08, 2014 @ 04:18:45
definitely 🙂
Feb 07, 2014 @ 16:33:32
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை மட்டுமல்ல மகளையும் சான்றோள் எனக் கேட்ட தாய்.
அந்தத் தாயின் மனநிலையை இந்தப் பதிவு அழகாகக் காட்டுகிறது. அருமை.
மாதுரிக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுக்கும் சேகர் சாருக்கும் சேர்த்துதான் 🙂
விரும்பியதையே படிக்கும் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். பிடித்த துறையிலேயே படித்து.. படித்த துறையிலேயே வேலை செய்வது என்பது ஆண்டவன் அருளன்றி எதுவுமில்லை.
வாழ்க. வளர்க.
Feb 08, 2014 @ 04:19:14
thank you 🙂
Feb 08, 2014 @ 05:47:58
குழந்தைகளின் கனவை நனவாக்கப் பெரும்பாலும் பெற்றோர் விரும்புவதில்லை. செல்வி. மாதுரியின் கனவைப் பூர்த்தி செய்து நாடக அரங்கேற்றத்திற்கும் நேரில் சென்றது மிகப் பெரிய வரப்பிரசாதம். உங்கள் இருவருக்கும், செல்வி. மாதுரிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Feb 08, 2014 @ 19:37:47
மிக்க நன்றி 🙂
Feb 08, 2014 @ 14:47:20
Yet another Feather in her Cap. மகுடத்தின் மேல் மகுடமாக பல சிறப்புகள் நிச்சயம் பெறுவாள் உங்கள் மகள். ஒரு தாயின் பூரிப்பும் பெருமிதமும் நீங்கள் தந்தருளிய விதத்தில் படிக்கின்றவர்களையும் மகிழ்ச்சியும் பெருமையும் தொற்றிக்கொள்ள செய்கிறது.நன்றி நன்றி 🙂
Feb 08, 2014 @ 19:37:23
மிக்க நன்றி 🙂
Feb 09, 2014 @ 12:19:37
அருமை!! மேலும் பல பரிசுகளை அவர் வெல்ல வாழ்த்துகள் 🙂
Feb 09, 2014 @ 14:55:21
நன்றி 🙂
Feb 13, 2014 @ 06:00:34
வாழ்த்துக்கள் அம்மா. மாதுரிக்கும், உங்களுக்கும், சேகர் சாருக்கும். ஜிரா சொல்லியிருப்பது போல, ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருக்கீங்க.. மென்மேலும் பல வெற்றிகளைப் பெற அந்த ஆணடவன் அருள் கிட்டட்டும் – ப்ரசன்னா
Feb 13, 2014 @ 06:37:57
nandri 🙂
Feb 17, 2014 @ 06:15:29
ஏற்கனவே கமெண்ட் எழுதி சிஸ்டம் ரிஸ்டார்ட் ஆகவும் அப்படியே விட்டுட்டேன்.இப்போ திரும்பவும் படிக்கிறேன்.ரொம்ப fresh ஆ இருக்கு படிக்க 🙂 உங்க போன வருட அமெரிக்கப் பயணப் பதிவை இவ்விடம் நினைவு கூர்கிறேன். பிள்ளைகளைப் பிரிந்து வாடும் துயரம் தாண்டி அவர்கள் உணர்வை மதித்து சுதந்திரம் கொடுத்து விலகி நின்று ரசிக்கும் தன்மை எல்லாப் பெற்றோருக்கும் வந்துவிடுவதில்லை.இப்படி ஒரு பெற்றோர் எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்த்து விடுவதும் இல்லை. பிள்ளைகளைப் பெற்று சோறு போட்டு வளர்க்கும் கடமை தாண்டி அவங்க எதிர்காலம் கருத்தில் கொண்டு வளர்த்து அது சரியாகவும் இருக்கு என்ற ஆசுவாசத்தைப் பிள்ளைகள் தரும் வரை போராட்டம் தான்.நீங்க அதுல ஜெயிச்சுட்டீங்க .
மாதுரியின் ஆர்வம் கலை,இதையெல்லாம் உங்க பார்வை மூலமாகவே இங்கே பார்ப்பதால்தான் எங்களாலும் அதைப் புரிஞ்சுக்க முடியுது என்றே நினைக்கிறேன்.பிள்ளைகள் பெற்றோர் பெருமை கொள்ள நடந்தாலே வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதாக மாறிவிடும்.அதனால் மாதுரியை திரும்ப வாழ்த்த வேண்டிய அவசியமில்லை அல்ரெடி அவங்களுக்கு அது கிடைச்சுடுச்சு..இனி அனைத்தும் நலமே..இனி அவங்க வாழ்க்கைப் பயணம் இனிதாகவே அமையும் என்ற நம்பிக்கை உண்டு 🙂 பெருமைமிகு பெற்றோர் பெருமை மிகு பிள்ளைகள் வேறென்ன சொல்ல..ரசிக்கிறேன் :)ஹ்ம்ம்..நாடகம் பார்க்கக் கொடுத்துவைக்கல எங்களுக்கு அதான் வருத்தம்
Feb 17, 2014 @ 15:39:16
ரொம்ப நன்றி உமா.ஒவ்வொரு எழுத்திலும் அன்பைத் தோய்த்து எழுதிருக்கீங்க.