அகல்யா/அகலிகை

அகல்யா/அகலிகை

அகல்யா/அகலிகை

புராண பெண் பாத்திரங்களில் சுவாரசியம் மிகுந்தவள் அகல்யா. அவளை பத்தினிப் பெண்ணாகப் பலரும், கற்பை இழந்ததால் சபிக்கப்பட்டு இராமனால் சாப விமோசனம் அடைந்தவளாக இன்னும் பலரும் பேசுவதே அவள் புகழுக்குக் காரணம். சர்ச்சைக்குரிய பெண் பாத்திரம், அதனால் கவனிக்கப் படுகிறாள்.

அகலிகை யார் என்று யாரிடம் கேட்டாலும் உடனே வரும் பதில் இராமனின் கால் பட்டதால் கல்லான அகலிகை பெண்ணாகிறாள் என்பது தான். அதனால் பெண்ணான அகலிகையின் கதை இராமனின் பெருமையை பறைசாற்ற பயன்பட்டதே தவிர அவளின் நிலையை எடுத்துச் சொல்ல அல்ல. ஆனாலும் அவள் பத்தினிப் பெண்கள் ஐவரில் ஒருத்தியாகப் போற்றப் படுகிறாள்.

பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. அகல்யா என்றால் அழகின்மை இல்லாதவள் என்று பொருள். அதாவது அவள் அழகில் சிறு குறை என்று ஒன்றுமே இல்லாதவள்! அப்படிப்பட்டப் பேரழகியை அனைத்து தேவர்களும் அடைய நினைத்தனர், அதில் முக்கியமாக இந்திரன் அவள் மேல் தீரா மையல் கொண்டிருந்தான்.

அகல்யாவின் பின்னால் இந்திரன்

அகல்யாவின் பின்னால் இந்திரன்

குழந்தையான அகல்யாவை பிரம்மன் கௌதம முனிவரிடம் வளர்க்கக் கொடுத்திருந்ததாகவும், அவள் வளர்ந்த பின் அவர் பிரம்மனிடமே அவளை திருப்பிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின் அவளுக்குக் கணவனைத் தேட சுயம்வரம் வைத்து அதில் யார் உலகை முதலில் மும்முறை வலம் வருகிறார்களோ அவருக்கே அகல்யா என்று அறிவிக்கப்பட்டது.

அவளை அடைவதற்காக இந்திரன் உலகை சுற்றி வரக் கிளம்புகிறான், ஆனால் கௌதம முனிவரோ அதற்கு முன்பே உலகை மும்முறை வலம் வந்து விட்டதால் அவருக்கே அகல்யா மனைவியாகிறாள்!

கன்றை ஈனும் பசுவைப் பார்ப்பதும் உலகை பார்ப்பதற்கு ஒப்பாகும் என்று ஒரு கருத்து. ஆதலால் காமதேனு கன்றை ஈனும் போது இரு தலை பசுவை ஒரு சேரக் கண்ட கௌதமர் மும்முறை காமதேனுவை வலம் வருகிறார். அதனால் உலகை மும்முறை வலம் வந்ததாக ஆகிவிடுகிறது. இந்திரனோ உலகை மும்முறை சுற்றி வந்து தாமதமாக வந்து சேருகிறான்.

இன்னொரு கதைப்படி பிரம்மச்சரிய விரதத்தை அவர் நல்ல முறையில் கடைப்பிடித்து அகல்யாவை வளர்த்ததால் அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகத் தெரிகிறது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான்.

ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்தக் கதையில் ஒரு முக்கிய விஷயம் கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பது.

இதற்கு பின் அகல்யாவை அடைய தக்கத் தருணத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான் இந்திரன். சேவல் விடிகாலை கூவும் போது கௌதமர் நதியில் நீராடக் கிளம்புவார். அந்த சேவலாக ஒரு முறை வந்து விடிவதற்கு ஒரு சாமம் முன்பே கூவி விடிந்தத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறான் இந்திரன். அவர் நீராட சென்ற பின் கௌதமர் உருவத்தில் குடிலுக்குள் நுழைந்து அகல்யாவைப் புணர்கிறான். அந்த சமயத்தில் அகல்யாவுக்கு அது தன் கணவன் இல்லை என்று தெரிகிறது அனாலும் தடுக்கவில்லை. (சிலர் அவள் தன் கணவன் என்றே நம்பி உடல் உறவு கொள்கிறாள் என்றும் சொல்கின்றனர்). அதற்குள் சந்தேகப்பட்டுத் திரும்பி வந்த கௌதமர் இருவரையும் ஒன்றாகக் கண்டு வெகுண்டெழுந்து அகல்யாவைக் கல்லாகப் போகும்படி சபிக்கிறார். இந்திரனுக்கு எதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாயோ அது உடல் முழுவதும் வரட்டும் என்று ஆயிரம் அல்குல்கள் உடலில் வருமாரு சபிக்கிறார்.

மாறு வேடத்தில் இந்திரன் கௌதமரால் பிடிபடுகிறான்.

மாறு வேடத்தில் இந்திரன் கௌதமரால் பிடிபடுகிறான்.

இருவரும் சாப விமோசனம் கேட்டு மன்றாடுகிறார்கள். பின் ஒரு நாளில் இராமனின் பாதங்கள் பட்டு அவள் திரும்பப் பெண்ணாக மாறுவாள் என்று அகல்யாவிற்குத் தண்டனையைக் குறைக்கிறார். இந்திரனின் ஆயிரம் அல்குல்களை ஆயிரம் கண்களாக மாற்றிவிடுகிறார். இவர் கோபத்தில் சபித்ததால் அவர் புண்ணிய பலனும் கணிசமான அளவு குறைந்துவிடுகிறது.

இந்திரன் மாறு வேடத்தில் வந்து அகலிகையை அடைவதற்கு காமத்தைத் தவிர இன்னுமொரு காரணம் உள்ளது. கௌதமர் தவ வலிமையில் மிகுந்து இருந்ததால் இவன் பதவிக்கு ஆபத்து வரும் போல் இருந்தது. மேலும் பல தேவர்களுக்கும் இவர் தவ வலிமையில் உயர்ந்து இருப்பது அச்சத்தைத் தந்தது. அதனால் இந்திரன் மற்ற தேவர்களின் ஆசியோடு செய்த சூழ்ச்சி இது. தான் அகலிகையுடன் கூடி இருக்கும் பொழுது எப்படியும் கௌதமரால் பிடிபடுவர், அப்பொழுது அவருக்குக் கோபம் வந்து இவர்களை சபிப்பார். அதனால் அவரின் தவ வலிமை அழிந்து போகும் என்றும் இந்திரன் கணக்குப் போட்டன். அவன் கணக்குப்படியே நடந்தது. அதற்குப் பகடைக் காயாக அகலிகை பயன்படுத்தப் படுகின்றாள். இது இன்னுமொரு கொடுமை!

முற்றிலும் உணர்ந்த முனிவர் ஏன் அழகு மனைவியை விட்டு நடு இரவில் குளிக்க செல்ல வேண்டும்? அகலிகையும் இந்திரனின் தந்திரத்தால் தன்னை இழக்கிறாள். அது அவள் தவறா? ஆனால் அகலிகை கௌதமரிடம் அவன் உங்களைப் போலவே இருந்ததால் நான் ஏமாந்துவிட்டேன் என்று கெஞ்சியபோதும் நீ உடலைப் பார்த்தாய் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கவில்லை அதனால் அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று நீ உணரவில்லை. அதனால் உன்னால் யார் கூப்பிட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு உன் நிலைமை இருக்கவேண்டும் என்று சபித்தார். அவள் கல்லாய் சமைந்தாள்.

இராமன் விஸ்வாமித்திரருடன் மிதிலைக்குப் போகும் வழியில் ஒரு வெட்ட வெளியில் ஒரு கல்லில் துளசி செடி முளைத்திருப்பதைப் பார்க்கிறான். இது என்ன இப்படி ஓர் அதிசயம் என்ற வினவியபோது விஸ்வாமித்திரர், ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இன்னொரு ஆணால் சபிக்கப்பட்ட பெண் இங்கு உறைகிறாள். உன் கால் பட்டு அவள் மறுபடியும் பெண்ணாக மாறுவாள் என்கிறார். அவ்வாறே நடக்கிறது.

யாருக்கும் குற்றம் சாட்டவும் தண்டிக்கவுமே அதிக விருப்பம். ஆனால் கதைப்படி இங்கே இராமன் என்னும் அவதாரப் புருஷன் அவளுக்கு விமோசனம் அளிக்கிறான். அவனை வணங்கி கௌதமருடன் வாழ கிளம்புகிறாள் அகலிகை. தனக்குக் கிடைத்த சாபத்தினால் இராம தரிசனமும் ஸ்பரிசமும் கிடைக்கும் வாய்ப்புக் கிட்டியதே என்று அந்த நிலையிலும் அகலிகை எண்ணுவதாகக் கதை முடிகிறது.

அன்பும் காதலும் காமமும் நிறைந்தது தான் வாழ்வு. ஒரு அழகான இளம் பெண் இங்கு ஒரு சுதந்திரப் பறவையாக சில நிமிடங்களாவது இருக்க ஆசைப்பட்டிருக்கிறாள். கௌதமரின் பார்வையால் ஒரு முறை கர்ப்பம் தரித்து அவள் ஒரு மகளைப் பெற்றேடுத்திருக்கிறாள். அவள் கணவனுடன் இன்பமாக இருந்தாளா என்பது கேள்விக்குறி. அவள் முன்பே இந்திரனை விரும்பினாள் என்றும் நம்பப் படுகிறது. அப்படியானால் கௌதமருடனான அவளுடைய திருமணம் ஒரு கட்டாயத் திருமணம் தானே?

அகலிகையின் கதை எழுப்பும் கேள்விகள் ஏராளம். கற்பு என்பது என்ன? புனிதத் தன்மையையும் தூய்மை கேட்டையும் பிரிக்கும் அந்த மெல்லிய கோடு எது? ஆசை – விருப்பம் இவற்றின் மதிப்பீடு என்ன? அவற்றை துறப்பதினால் வரும் மதிப்பு தான் என்ன? சிலவற்றை மாயை என்று அந்த சமயத்தில் உணரமுடிவதில்லையே. உண்மைத் தன்மையை உணர்வது தான் எப்படி?

யாரும் குறை இன்றி இருப்பதில்லை. அவர்களை அந்தக் குறையோடு ஏற்றுக் கொள்வதே விவேகம். மேலும் நாம் குறை என்று நினைப்பது அவர்க்கு அது நிறையாகவும் தெரியலாம். அதை நாம் எப்படி எடை போடுவது? நமக்கு அந்த உரிமையும் இல்லை அந்த நிலையில் நாம் இருந்தால் ஒழிய அதை எடை போடும் சக்தியும் நமக்குக் கிடையாது.

கம்ப இராமயணத்தில் கம்பர்

புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்

ஒக்க உண்டு, இருத்தலோடும் , உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்

தக்கது அன்று என்ன ஒராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா

முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்

என்கிறார். எப்பொழுது அகலிகை தன்னை இழந்தாளோ அப்பொழுதே அவளை “தாழ்ந்தனள்” என்று கூறிவிட்டார். அனால் முக்காலமும் உணர்ந்த அவளை காப்பாற்ற வேண்டிய கணவன் “தாழா முக்கண்ணன்” ஆகிறார். எல்லாவற்றிற்கும் காரணமான வில்லன் இந்திரனுக்குத் தீயவனே என்று எந்த அடைமொழியும் இல்லை. இது தான் இன்றைய சமுகம்.

பதிவிரதையாக ஒரு பக்கம் அகல்யா புஜிக்கப்படுகிறாள், ஆனால் அந்த இடத்தை அந்தப் பெண் பெற ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் அவள் கொடுக்க வேண்டிய விலை என்ன?  ஏமாற்றப்பட்ட பெண் தான் ஏமாற்றப் பட்டோம் என்று நிரூபிக்க வேண்டியது அவள் கடமை ஆகிறது. உண்மையிலேயே நீ எமாற்றப்பட்டாயா அல்லது விருப்பத்துடன் சென்றாயா என்று தான் சமூகம் முதலில் கேள்வி எழுப்புகிறது. அதுவே ஏமாற்றும் ஆண் எதையும் நிரூபிக்கவோ ஆதாரம் தரவேண்டிய அவசியமோ அன்றும் இன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதே மாதிரி கிரேக்க புராணக் கதையில் Zeus என்னும் கடவுள்  Amphitryon என்பவற்றின் மனைவி Alcmneஐ நயவஞ்சகமாக அடைகிறான். அவர்களின் சங்கமத்தில் பிறந்தவன் தான் Hercules.  அகலிகை மாதிரியே Alcmeneம்  தன் கணவனைப் போல வேடமிட்டு வந்த Zeus இடம் ஏமாறுகிறாள். ஆனால் அங்கே அவளின் அந்த செயலை பழி பாவமாகவும் தான் சுகத்துக்காக செய்த செயலாகவும் பார்க்கப் படவில்லை.

United Nations Report படி உலகத்தில் 38 பெண்களில் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப் பட்டிருகிறாள். இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் சீண்டலுக்கு ஆளாகிறாள். 58 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு பெண் வரதட்சணை கொடுமையினால் கொல்லப்படுகிறாள். ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் ஒரு பெண் அடிக்கப் படுகிறாள். பெண்களுக்கு எதிரான வன் கொடுமையில் உலகில் நான்காம் இடத்தில் நிற்கிறது இந்தியா.

A team from ASMITA Resource Centre for Women, Hyderabad, performed the ballet to launch the One Billion Rising campaign to end violence against women. The speakers at the function also expressed their concern over the declining sex ratio, which is now 1000:914 in the country.”

 

Reference: Kamba Ramayanam

http://www.pantheon.org/articles/a/ahalya.html

https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Ahalya.html

https://sites.google.com/site/epiclovestories/gautama-and-ahalya

dia.org/wiki/Ahalya

 

வெற்றித் திருமகள்

மஞ்சள் புடைவை என் அம்மா, நீலப் புடைவை ஜெயா

மஞ்சள் புடைவை என் அம்மா, நீலப் புடைவை ஜெயா

எங்கள் வீட்டில் முப்பது வருடங்களுக்கும் மேலாக அன்ன தாதாவாக இருப்பவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. இளம் வயதிலேயே கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு தைரியமாக அவனை விட்டு விலகி முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தனியாக வாழ்ந்து தன் பிள்ளைகளை மட்டும் இல்லாமல் பேரக் குழந்தைகளையும் நல்ல நிலைமைக்கு முன்னுக்குக் கொண்டு வந்தவர் இவர். பலருக்கு இவர் வாழ்க்கை முன்னுதாரணமாக இருக்கும்.

ராஜ மன்னார்குடியில் நல்ல வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர். இவர் மேல் மிகவும் பிரியம் வைத்திருந்தவர். ஆசையாக ஜெயலட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ஒரு முறை இவர் பாலை சிந்திவிட்டார் என்பதற்காக இவர் அம்மா இவரை அடித்ததற்காகக் கோபித்துக் கொண்டுச் சாப்பிடாமல் ஒரு சத்திரத்தில் போய் தங்கிவிட்டாராம். இவர் அம்மா தேடிக் கண்டுபிடித்துக் காலில் விழுந்து வணங்கி இனிக் குழந்தையை அடிக்க மாட்டேன் என்று சொன்ன பிறகே வீட்டுக்கு வந்தாராம். ஆனால் இவ்வளவு பிரியமாக இருந்த தந்தை, மகளுக்கு ஐந்து வயதே நிரம்பியிருந்த பொழுது இறந்து விட்டார். விவசாய நிலம் கொஞ்சம் இருந்ததால் அதை விற்று அவர் தாயார் அவரை மாயவரத்தில் சொந்தத்தில் ஒருவருக்கே மணமுடித்துக் கொடுத்தார்.

நிறைய நகைகளும் ரொக்கமும் கொடுத்து தான் திருமணம் நடந்திருக்கு.  கூட்டுக் குடும்பம். மாமியார் மிகவும் நல்லவர். ஆனால் வாய்த்தவன் நல்லவன் இல்லையே, அதனால் ஆயிரம் இருந்தும் மகிழ்ச்சி இல்லா வாழ்க்கை. ஒரு வேலையிலும் நிலையாக இருக்கமாட்டான் அவன். இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்த மைத்துனருக்கு நிறை மாதக் கர்ப்பிணியான இவர் சோறு பரிமாறினால் கூட அவன் சந்தேகப்பட்டு அடிக்கும் இயல்புடையவன். சூது, குடி என்று எல்லாக் கெட்டப் பழக்கமும் உண்டு. மாமியார் நல்ல முறையில் பார்த்துக் கொண்டதால் முதல் பிரசவம் நல்ல முறையில் நடந்தது. ஆனால் இவன் சம்பாதிக்காமல் வீட்டில் இருந்துப் பணத்தைத் திருடிச் செல்வதால் மற்ற சகோதர்கள் இவர்களை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர்.

வேறு வேறு ஊர்களுக்குச் சென்று பலப் பல வேலைகள் செய்தும் குடும்பத்தைச் சரியாக கவனிக்காமல் மாமியாரிடமே பணம் பிடுங்கியும் இவரின் நகைகள் அனைத்தையும் விற்றும் கடைசியில் மாமியார் இருக்கும் சென்னைக்கு மாமியாருடனே தங்கி இருக்க குடும்பத்தோடு வந்துவிட்டான். ஜெயாவின் அம்மா இங்கே ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார்.

சென்னையில் அம்மாவுடன் இவர்களும் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதற்குள் நான்கு குழந்தைகள். இரண்டு பெண் இரண்டு ஆண். அல்லாட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அம்மாவின் ஒருவர் சம்பாத்தியத்தில் இவ்வளவு பேர்கள் பராமரிக்கப் பட அதில் ஒரு குழந்தை போதிய உணவில்லாமல் இறந்து விட்டது. இன்னும் அவர் சில சமயம் அந்தக் குழந்தையை நினைத்து அழுவார். பதினேழு வயதில் திருமணம் முடிந்து இருபத்தி இரண்டு வயதிற்குள் நான்கு குழந்தைகளையும் பெற்றுப் பல இன்னல்களுக்கு ஆளான பின் ஒரு மகனையும் பறிகொடுத்துவிட்டார். இனி வேலைக்குச் செல்லாமல் இருந்தால் சரிப்பட்டு வராது என்று பல இடங்களுக்கு சமையலுக்கு உதவியாளராகச் செல்ல ஆரம்பித்தார். திருமணம், மற்ற விழாக்களில் இலை எடுப்பது போன்ற எடுபிடி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைத்தத் தொடர்புகளை வைத்துச் சில வீடுகளுக்கும் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

இளம் வயது, பார்க்கவும் நன்றாக இருந்ததால் கணவனால் மேலும் மேலும் தொல்லைகள். இவள் சம்பாதிக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு நாலு நாள் நன்றாக செலவழித்து விட்டுத் திரும்பவும் வீட்டுக்கு வருபவனாக இருந்திருக்கிறான்.

ஒரு முறை இவர் வேலை செய்த வீட்டிற்கே சென்று, (அன்று இவர் உடல் நிலை சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை) தன்னை ஜெயாவின் அண்ணனாக அறிமுகப் படுத்திக் கொண்டு அவள் கணவன் இறந்து விட்டதாகவும் அதற்கு முடிந்த அளவில் பண உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறான். அவர்களும் நம்பி 2000 ருபாய் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் இவர் வழக்கம் போல வேலைக்குப் போனால் அவர்கள் வீட்டில் அனைவரும் இவரைப் பார்த்து திகைத்துப் போய் நின்றிருக்கின்றனர். கணவன் இறந்த அடுத்த நாளே ஒருவர் வேலைக்கு வந்தால் அவர்களுக்கும் தான் ஷாக்காக இருக்காதா? விஷயம் என்னவென்று அறிந்தபின், வந்து உங்களிடம் பணம் வாங்கி சென்றவனே தான் அவள் கணவன் என்பதை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

குழந்தை காலில் இருக்கும் தண்டை, கொலுசு அனைத்தையும் இவர் கவனிக்காதபோது கழட்டி எடுத்துச் சென்று விற்று விடுவான். இவர் கஷ்ட்டப்பட்டு வாங்கி வைத்திருக்கும் ரேஷன் பொருட்கள் கூட விலைக்குப் போய் விடும். ஏன் ரேஷன் கார்டே அடகுக் கடைக்குப் போய்விடும். கையில் பணம் இல்லாதபோது எதை வேண்டுமானாலும் திருடுபவன் ஒரு முறை வீட்டுக்காரர்கள் தண்ணிப் பிடிக்க வைத்திருந்த அலுமினிய டேக்சாவைத் திருடி எதிர் குடிசையில் இருக்கும் சுக்குக் காபி விற்பவரிடம் கொடுத்துக் காசு பார்த்துவிட்டான். இரண்டே நாட்களில் அவர் வீட்டில் டேக்சாவைப் பார்த்த ஹவுஸ் ஓனர்கள் அவரைப் பிடித்துக் கேட்க உண்மை வெளி வந்திருக்கிறது. ஜெயாவின் கணவர் மீது போலிஸ் கம்ப்ளயின்ட் கொடுக்க அவனைப் பிடிக்க வீட்டுக்கு வந்த போலீசார் வீட்டில் சிறிது கஞ்சா இருந்ததையும் கண்டெடுத்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். இவர் போலீசிடம் மன்றாடி இருக்கிறார். டேக்சாவை திரும்ப மீட்டுக் கொடுத்துவிடுவதாக ஜெயா சொன்னபோது கஞ்சா வழக்கில் அவனை உள்ளேத் தள்ளப் போவதாகப் போலிஸ் சொல்லியிருக்கிறது. நொந்து போய் தான் வேலை செய்யும் ஒரு வங்கி மேலாளரின் பெயரைச் சொல்லியிருக்கிறார். அவரும் இவருக்காகப் பேசி அவன் மேல் FIR போடாமல் வார்னிங்குடன் விடுவித்திருக்கிறார்கள்.

வெளியே வந்த அவன், கஞ்சா கேசில் மாட்டினால் விடவே மாட்டார்கள், எப்படி போலிஸ் என்னை விட்டது, யாருடன் போய் படுத்தாய் என்று மனைவியைக் கேட்டிருக்கிறான். இனி இவனுடன் வாழ்வது வீண் என்று உணர்ந்து அப்பொழுது அவர் முக்கியமான ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்! அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு ஜாகையை மாற்றினார். அவர் கணவன் வீட்டுக்கு சில நாட்கள் வராமல் இருந்த ஒரு சமயத்தில் இதைச் செய்தார். அக்கம் பக்கம் யாரிடமும் தன் புது முகவரியையோ தான் போகும் இடத்தையோப் பற்றி மூச்சு விடவில்லை. கேட்டவர்களிடம் வேறு ஒரு இடத்தைச் சொல்லி வைத்தார். முன்பு வேலை செய்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டுப் புதிதாக வந்து குடியேறிய இடத்தில் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். எங்கள் வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்ததும் அந்தக் காலக் கட்டத்தில் தான்.

ஜெயாவுடன் என் மகன் குழந்தையாக இருக்கும்போது.

ஜெயாவுடன் என் மகன் குழந்தையாக இருக்கும்போது.

ஒரு சமயம் தீ நகரில் நடந்து சென்று கொண்டிருந்த போது கூட வந்த ஒரு அம்மிணி முப்பாத்தம்மனின் காலைப் பிடித்துக் கொள் உன் துன்பங்கள் எல்லாம் விலகும் என்று சொல்லியிருக்கிறார். இவரும் முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அந்த அம்மன் இவரை ஆட்கொண்டு விட்டார். தை, ஆடி இரண்டு மாதங்களும் தவறாமல் முப்பாத்தம்மனுக்குப் பொங்கல் வைப்பார். அவருக்கு இன்றும் என்றும் உற்றத் துணையாக இருப்பவள் முப்பாத்தம்மன் தான். அக்கம் பக்கத்தில் உள்ளோர், எங்கள் வீட்டில் உள்ளோர் யாருக்கு ஒரு கஷ்டம் வந்தாலும் முப்பாத்தம்மனிடம் வேண்டிக் கொண்டு அவர்களுக்காக இவரே நேர்த்திக் கடனை செலுத்துவார். அது முஸ்லிம் பாயாக இருந்தாலும் கிருஸ்த்துவராக இருந்தாலும் பரவாயில்லை. யாருக்குத் திருமணத் தடை இருக்கிறதோ, குழந்தை பாக்கியம் இல்லையோ, உடல் நலக் கோளாறோ, அவர்களுக்காக உடனே முப்பாத்தம்மனிடம் வேண்டிக் கொண்டு வேண்டியது நிறைவேறிய பின் மகிழ்ச்சியில் திளைப்ப்பார். மேலும் பலர் வீட்டு விசேஷங்களுக்கு ஆசையுடன் சென்று எந்தப் பலனும் எதிர்ப்பார்க்காமல் உதவிப் புரிவார்.

என் தோழிகளும் என் மகளின் தோழிகளும் இவருக்கும் நண்பர்களே 🙂 எங்கள் நண்பர்கள் சுற்றத்தார் அனைவரும் இவரையும் தங்கள் உறவினராகவே கருதுவர். இவர் மிகவும் அழகாகக் கோலம் போடுவார். அவர் இட்ட ஓர் அழகியக் கோலம் இங்கே 🙂

kolam

ஒரு இளம் பெண் தன் வயதான அம்மா மட்டுமே துணை, இருப்பினும் மனோ திடத்துடன் மூன்று குழந்தைகளையும் தனி ஆளாகப் படிக்க வைத்து வளர்த்தார். ஐம்பது பைசாவிற்கு ரவை வாங்கி அதில் வெறும் உப்பு மட்டுமே போட்டு கஞ்சி காய்ச்சி மூன்று பிள்ளைகளுக்கும் தருவாராம். அப்படிப்பட்ட நிலையில் இருந்த அவர் மகனை சிலர் உதவியுடம் correspondence course மூலம் B.com பட்டம் பெற வைத்தார். முன்பு வேலை செய்த வீட்டினர்களின் சிபாரிசும் உதவியுடனும் மதுரை டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்து விட்டார். இன்று அவன் மனைவி இரு மகன்களுடன் நன்றாக உள்ளான். அவனின் மூத்த மகன் இன்று பொறியியற் கல்லூரியில் இரண்டாம் வருட மாணவன்.

மூத்த மகளை பதினேழு வயதிலேயே ஒரு சமையல் வேலை செய்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் பிள்ளை. மருமகனும் ஒரு விபத்தில் இறந்துவிட மூன்று குழந்தைகளுடன் மகள் இவரிடமே திரும்பி வந்துவிட்டாள். இவர்களை பராமரிக்கும் பொறுப்பு கூடுதலாக வந்துவிட்டதால் இவரின் மூன்றாம் மகளின் திருமணமும் தள்ளிப் போயிற்று. ஆனாலும் அயராது உழைத்து அந்தப் பெண்ணிற்கு மட்டுமில்லாமல் தன் மகள் வயிற்றுப் பேத்திகளுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த மூன்றுப் பெண்களின் திருமணங்களும் எளிமையானத் திருமணங்கள் தான். ஆனால் இவரின் நல்ல மனசிற்கேற்ப மூவரும் இன்று வசதியோடு வாழ்கின்றனர். இவரின் மகள் வயிற்றுப் பேரன் ரொம்ப நன்றாகப் படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறான்.

இவர் கணவன் இவரைத் தேடிப் பல நாட்கள் அலைந்து எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தன் சகோதரர்களுடன் போய் இணைந்து கொண்டிருக்கிறான். பின் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கிறான். பின்னொரு நாளில் இவருக்கு விஷயம் தெரிய வந்து அவர் மகனுடன் ராமேஸ்வரம் சென்று அவனுக்காகத் தலை முழுகிவிட்டு மகனையும் பித்ருக் கடனை நிறைவேற்ற வைத்தார்.

இவருக்கு நாய் பூனை அணில் என்று அனைத்துப் பிராணிகளிடமும் மிகுந்த அன்பு. தெரு நாய்களுக்கு மிச்சம் மீதியைப் போட்டு அவைகள் இவர் தெரு முனைக்கு வரும்போதே அவரைப் பின் தொடர்ந்து ஓடிவரும். ஒரு முறை ஒரு தெரு நாய் இறந்ததற்கு அதை மடியில் போட்டுக் கொண்டு அழுது எங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே அதனை புதைக்கவும் செய்தார். மிகவும் நன்றாக சைக்கிள் ஓட்டுவார். இவர் வசிப்பதுப் பலதரப்பட்ட ஏழை மக்களுக்கு நடுவில். இவரின் அம்மா பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அம்மா இறந்த பிறகு ஒரு துணையும் இல்லாமல் வயதுக்கு வந்தப் பெண் குழந்தைகளுடன் ஒரு அவப் பெயரும் வராமல் வாழ்வது எளிதில்லை. அப்படி வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அந்தக் கஷ்டம் தெரியும்.

இந்த இடுகையை பெண்கள் தினமான மார்ச் 8 எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற்ற பெண்களின் கதையைத் தெரிந்து கொள்ளும் எல்லா நாட்களுமே மங்கையர் தினம் தான் 🙂

தன் நான்கு பேரன்ங்கள் இரண்டு பேத்திகள், இரண்டு கொள்ளுப் பேத்திகள், ஒரு கொள்ளுப் பேரனுடன் ஜெயா.

தன் நான்கு பேரன்ங்கள் இரண்டு பேத்திகள், இரண்டு கொள்ளுப் பேத்திகள், ஒரு கொள்ளுப் பேரனுடன் ஜெயா.