எங்கள் வீட்டில் முப்பது வருடங்களுக்கும் மேலாக அன்ன தாதாவாக இருப்பவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. இளம் வயதிலேயே கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு தைரியமாக அவனை விட்டு விலகி முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தனியாக வாழ்ந்து தன் பிள்ளைகளை மட்டும் இல்லாமல் பேரக் குழந்தைகளையும் நல்ல நிலைமைக்கு முன்னுக்குக் கொண்டு வந்தவர் இவர். பலருக்கு இவர் வாழ்க்கை முன்னுதாரணமாக இருக்கும்.
ராஜ மன்னார்குடியில் நல்ல வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர். இவர் மேல் மிகவும் பிரியம் வைத்திருந்தவர். ஆசையாக ஜெயலட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ஒரு முறை இவர் பாலை சிந்திவிட்டார் என்பதற்காக இவர் அம்மா இவரை அடித்ததற்காகக் கோபித்துக் கொண்டுச் சாப்பிடாமல் ஒரு சத்திரத்தில் போய் தங்கிவிட்டாராம். இவர் அம்மா தேடிக் கண்டுபிடித்துக் காலில் விழுந்து வணங்கி இனிக் குழந்தையை அடிக்க மாட்டேன் என்று சொன்ன பிறகே வீட்டுக்கு வந்தாராம். ஆனால் இவ்வளவு பிரியமாக இருந்த தந்தை, மகளுக்கு ஐந்து வயதே நிரம்பியிருந்த பொழுது இறந்து விட்டார். விவசாய நிலம் கொஞ்சம் இருந்ததால் அதை விற்று அவர் தாயார் அவரை மாயவரத்தில் சொந்தத்தில் ஒருவருக்கே மணமுடித்துக் கொடுத்தார்.
நிறைய நகைகளும் ரொக்கமும் கொடுத்து தான் திருமணம் நடந்திருக்கு. கூட்டுக் குடும்பம். மாமியார் மிகவும் நல்லவர். ஆனால் வாய்த்தவன் நல்லவன் இல்லையே, அதனால் ஆயிரம் இருந்தும் மகிழ்ச்சி இல்லா வாழ்க்கை. ஒரு வேலையிலும் நிலையாக இருக்கமாட்டான் அவன். இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்த மைத்துனருக்கு நிறை மாதக் கர்ப்பிணியான இவர் சோறு பரிமாறினால் கூட அவன் சந்தேகப்பட்டு அடிக்கும் இயல்புடையவன். சூது, குடி என்று எல்லாக் கெட்டப் பழக்கமும் உண்டு. மாமியார் நல்ல முறையில் பார்த்துக் கொண்டதால் முதல் பிரசவம் நல்ல முறையில் நடந்தது. ஆனால் இவன் சம்பாதிக்காமல் வீட்டில் இருந்துப் பணத்தைத் திருடிச் செல்வதால் மற்ற சகோதர்கள் இவர்களை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர்.
வேறு வேறு ஊர்களுக்குச் சென்று பலப் பல வேலைகள் செய்தும் குடும்பத்தைச் சரியாக கவனிக்காமல் மாமியாரிடமே பணம் பிடுங்கியும் இவரின் நகைகள் அனைத்தையும் விற்றும் கடைசியில் மாமியார் இருக்கும் சென்னைக்கு மாமியாருடனே தங்கி இருக்க குடும்பத்தோடு வந்துவிட்டான். ஜெயாவின் அம்மா இங்கே ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார்.
சென்னையில் அம்மாவுடன் இவர்களும் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதற்குள் நான்கு குழந்தைகள். இரண்டு பெண் இரண்டு ஆண். அல்லாட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அம்மாவின் ஒருவர் சம்பாத்தியத்தில் இவ்வளவு பேர்கள் பராமரிக்கப் பட அதில் ஒரு குழந்தை போதிய உணவில்லாமல் இறந்து விட்டது. இன்னும் அவர் சில சமயம் அந்தக் குழந்தையை நினைத்து அழுவார். பதினேழு வயதில் திருமணம் முடிந்து இருபத்தி இரண்டு வயதிற்குள் நான்கு குழந்தைகளையும் பெற்றுப் பல இன்னல்களுக்கு ஆளான பின் ஒரு மகனையும் பறிகொடுத்துவிட்டார். இனி வேலைக்குச் செல்லாமல் இருந்தால் சரிப்பட்டு வராது என்று பல இடங்களுக்கு சமையலுக்கு உதவியாளராகச் செல்ல ஆரம்பித்தார். திருமணம், மற்ற விழாக்களில் இலை எடுப்பது போன்ற எடுபிடி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைத்தத் தொடர்புகளை வைத்துச் சில வீடுகளுக்கும் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.
இளம் வயது, பார்க்கவும் நன்றாக இருந்ததால் கணவனால் மேலும் மேலும் தொல்லைகள். இவள் சம்பாதிக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு நாலு நாள் நன்றாக செலவழித்து விட்டுத் திரும்பவும் வீட்டுக்கு வருபவனாக இருந்திருக்கிறான்.
ஒரு முறை இவர் வேலை செய்த வீட்டிற்கே சென்று, (அன்று இவர் உடல் நிலை சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை) தன்னை ஜெயாவின் அண்ணனாக அறிமுகப் படுத்திக் கொண்டு அவள் கணவன் இறந்து விட்டதாகவும் அதற்கு முடிந்த அளவில் பண உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறான். அவர்களும் நம்பி 2000 ருபாய் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் இவர் வழக்கம் போல வேலைக்குப் போனால் அவர்கள் வீட்டில் அனைவரும் இவரைப் பார்த்து திகைத்துப் போய் நின்றிருக்கின்றனர். கணவன் இறந்த அடுத்த நாளே ஒருவர் வேலைக்கு வந்தால் அவர்களுக்கும் தான் ஷாக்காக இருக்காதா? விஷயம் என்னவென்று அறிந்தபின், வந்து உங்களிடம் பணம் வாங்கி சென்றவனே தான் அவள் கணவன் என்பதை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
குழந்தை காலில் இருக்கும் தண்டை, கொலுசு அனைத்தையும் இவர் கவனிக்காதபோது கழட்டி எடுத்துச் சென்று விற்று விடுவான். இவர் கஷ்ட்டப்பட்டு வாங்கி வைத்திருக்கும் ரேஷன் பொருட்கள் கூட விலைக்குப் போய் விடும். ஏன் ரேஷன் கார்டே அடகுக் கடைக்குப் போய்விடும். கையில் பணம் இல்லாதபோது எதை வேண்டுமானாலும் திருடுபவன் ஒரு முறை வீட்டுக்காரர்கள் தண்ணிப் பிடிக்க வைத்திருந்த அலுமினிய டேக்சாவைத் திருடி எதிர் குடிசையில் இருக்கும் சுக்குக் காபி விற்பவரிடம் கொடுத்துக் காசு பார்த்துவிட்டான். இரண்டே நாட்களில் அவர் வீட்டில் டேக்சாவைப் பார்த்த ஹவுஸ் ஓனர்கள் அவரைப் பிடித்துக் கேட்க உண்மை வெளி வந்திருக்கிறது. ஜெயாவின் கணவர் மீது போலிஸ் கம்ப்ளயின்ட் கொடுக்க அவனைப் பிடிக்க வீட்டுக்கு வந்த போலீசார் வீட்டில் சிறிது கஞ்சா இருந்ததையும் கண்டெடுத்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். இவர் போலீசிடம் மன்றாடி இருக்கிறார். டேக்சாவை திரும்ப மீட்டுக் கொடுத்துவிடுவதாக ஜெயா சொன்னபோது கஞ்சா வழக்கில் அவனை உள்ளேத் தள்ளப் போவதாகப் போலிஸ் சொல்லியிருக்கிறது. நொந்து போய் தான் வேலை செய்யும் ஒரு வங்கி மேலாளரின் பெயரைச் சொல்லியிருக்கிறார். அவரும் இவருக்காகப் பேசி அவன் மேல் FIR போடாமல் வார்னிங்குடன் விடுவித்திருக்கிறார்கள்.
வெளியே வந்த அவன், கஞ்சா கேசில் மாட்டினால் விடவே மாட்டார்கள், எப்படி போலிஸ் என்னை விட்டது, யாருடன் போய் படுத்தாய் என்று மனைவியைக் கேட்டிருக்கிறான். இனி இவனுடன் வாழ்வது வீண் என்று உணர்ந்து அப்பொழுது அவர் முக்கியமான ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்! அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு ஜாகையை மாற்றினார். அவர் கணவன் வீட்டுக்கு சில நாட்கள் வராமல் இருந்த ஒரு சமயத்தில் இதைச் செய்தார். அக்கம் பக்கம் யாரிடமும் தன் புது முகவரியையோ தான் போகும் இடத்தையோப் பற்றி மூச்சு விடவில்லை. கேட்டவர்களிடம் வேறு ஒரு இடத்தைச் சொல்லி வைத்தார். முன்பு வேலை செய்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டுப் புதிதாக வந்து குடியேறிய இடத்தில் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். எங்கள் வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்ததும் அந்தக் காலக் கட்டத்தில் தான்.
ஒரு சமயம் தீ நகரில் நடந்து சென்று கொண்டிருந்த போது கூட வந்த ஒரு அம்மிணி முப்பாத்தம்மனின் காலைப் பிடித்துக் கொள் உன் துன்பங்கள் எல்லாம் விலகும் என்று சொல்லியிருக்கிறார். இவரும் முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அந்த அம்மன் இவரை ஆட்கொண்டு விட்டார். தை, ஆடி இரண்டு மாதங்களும் தவறாமல் முப்பாத்தம்மனுக்குப் பொங்கல் வைப்பார். அவருக்கு இன்றும் என்றும் உற்றத் துணையாக இருப்பவள் முப்பாத்தம்மன் தான். அக்கம் பக்கத்தில் உள்ளோர், எங்கள் வீட்டில் உள்ளோர் யாருக்கு ஒரு கஷ்டம் வந்தாலும் முப்பாத்தம்மனிடம் வேண்டிக் கொண்டு அவர்களுக்காக இவரே நேர்த்திக் கடனை செலுத்துவார். அது முஸ்லிம் பாயாக இருந்தாலும் கிருஸ்த்துவராக இருந்தாலும் பரவாயில்லை. யாருக்குத் திருமணத் தடை இருக்கிறதோ, குழந்தை பாக்கியம் இல்லையோ, உடல் நலக் கோளாறோ, அவர்களுக்காக உடனே முப்பாத்தம்மனிடம் வேண்டிக் கொண்டு வேண்டியது நிறைவேறிய பின் மகிழ்ச்சியில் திளைப்ப்பார். மேலும் பலர் வீட்டு விசேஷங்களுக்கு ஆசையுடன் சென்று எந்தப் பலனும் எதிர்ப்பார்க்காமல் உதவிப் புரிவார்.
என் தோழிகளும் என் மகளின் தோழிகளும் இவருக்கும் நண்பர்களே 🙂 எங்கள் நண்பர்கள் சுற்றத்தார் அனைவரும் இவரையும் தங்கள் உறவினராகவே கருதுவர். இவர் மிகவும் அழகாகக் கோலம் போடுவார். அவர் இட்ட ஓர் அழகியக் கோலம் இங்கே 🙂
ஒரு இளம் பெண் தன் வயதான அம்மா மட்டுமே துணை, இருப்பினும் மனோ திடத்துடன் மூன்று குழந்தைகளையும் தனி ஆளாகப் படிக்க வைத்து வளர்த்தார். ஐம்பது பைசாவிற்கு ரவை வாங்கி அதில் வெறும் உப்பு மட்டுமே போட்டு கஞ்சி காய்ச்சி மூன்று பிள்ளைகளுக்கும் தருவாராம். அப்படிப்பட்ட நிலையில் இருந்த அவர் மகனை சிலர் உதவியுடம் correspondence course மூலம் B.com பட்டம் பெற வைத்தார். முன்பு வேலை செய்த வீட்டினர்களின் சிபாரிசும் உதவியுடனும் மதுரை டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்து விட்டார். இன்று அவன் மனைவி இரு மகன்களுடன் நன்றாக உள்ளான். அவனின் மூத்த மகன் இன்று பொறியியற் கல்லூரியில் இரண்டாம் வருட மாணவன்.
மூத்த மகளை பதினேழு வயதிலேயே ஒரு சமையல் வேலை செய்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் பிள்ளை. மருமகனும் ஒரு விபத்தில் இறந்துவிட மூன்று குழந்தைகளுடன் மகள் இவரிடமே திரும்பி வந்துவிட்டாள். இவர்களை பராமரிக்கும் பொறுப்பு கூடுதலாக வந்துவிட்டதால் இவரின் மூன்றாம் மகளின் திருமணமும் தள்ளிப் போயிற்று. ஆனாலும் அயராது உழைத்து அந்தப் பெண்ணிற்கு மட்டுமில்லாமல் தன் மகள் வயிற்றுப் பேத்திகளுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த மூன்றுப் பெண்களின் திருமணங்களும் எளிமையானத் திருமணங்கள் தான். ஆனால் இவரின் நல்ல மனசிற்கேற்ப மூவரும் இன்று வசதியோடு வாழ்கின்றனர். இவரின் மகள் வயிற்றுப் பேரன் ரொம்ப நன்றாகப் படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறான்.
இவர் கணவன் இவரைத் தேடிப் பல நாட்கள் அலைந்து எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தன் சகோதரர்களுடன் போய் இணைந்து கொண்டிருக்கிறான். பின் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கிறான். பின்னொரு நாளில் இவருக்கு விஷயம் தெரிய வந்து அவர் மகனுடன் ராமேஸ்வரம் சென்று அவனுக்காகத் தலை முழுகிவிட்டு மகனையும் பித்ருக் கடனை நிறைவேற்ற வைத்தார்.
இவருக்கு நாய் பூனை அணில் என்று அனைத்துப் பிராணிகளிடமும் மிகுந்த அன்பு. தெரு நாய்களுக்கு மிச்சம் மீதியைப் போட்டு அவைகள் இவர் தெரு முனைக்கு வரும்போதே அவரைப் பின் தொடர்ந்து ஓடிவரும். ஒரு முறை ஒரு தெரு நாய் இறந்ததற்கு அதை மடியில் போட்டுக் கொண்டு அழுது எங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே அதனை புதைக்கவும் செய்தார். மிகவும் நன்றாக சைக்கிள் ஓட்டுவார். இவர் வசிப்பதுப் பலதரப்பட்ட ஏழை மக்களுக்கு நடுவில். இவரின் அம்மா பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அம்மா இறந்த பிறகு ஒரு துணையும் இல்லாமல் வயதுக்கு வந்தப் பெண் குழந்தைகளுடன் ஒரு அவப் பெயரும் வராமல் வாழ்வது எளிதில்லை. அப்படி வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அந்தக் கஷ்டம் தெரியும்.
இந்த இடுகையை பெண்கள் தினமான மார்ச் 8 எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற்ற பெண்களின் கதையைத் தெரிந்து கொள்ளும் எல்லா நாட்களுமே மங்கையர் தினம் தான் 🙂
Apr 19, 2014 @ 08:51:21
Super! Enakku eppavum Jayavay pidikkil. Tharsamayam Jayavukku en manadhil oru magudam sootiyirukkiren. Hats Off!.
Apr 19, 2014 @ 09:55:21
இந்த ஜெயா அம்மாவை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சும்மாவா சொன்னார்கள்.. இருப்பினும் அவர்களின் மன திடம் மற்றும் வைராக்கியம் அவர்களை நடத்தியுள்ளதை அறிகிறேன். நல்ல பதிவு..
Apr 19, 2014 @ 10:25:09
Thank you Sukan and Renuga 🙂
Apr 19, 2014 @ 10:43:00
வாழ்க்கையில் இதை விட ஒரு மோசமான தருணம் இல்லை என்ற நிலை வரும் பொழுது நமக்குள் இருக்கும் விஸ்வரூபம் வெளிப்படும்..அது போன்ற நிலைக்குப் பிறகு எதையுமே எதிர் கொள்ளும் தைரியம் தன்னிச்சையாக வந்து அமர்ந்து கொள்ளும்.அது போன்ற ஒரு பெண்மணியாக இவரைக் காண்கின்றேன். என்ன செய்வது அடுப்பில் வைத்த கொள்ளிக் கட்டை எரிந்து தான் ஆக வேண்டும் என்று அந்த கையாலாகாத நபரோடு முடங்கினால் இன்று வெற்றி பெற்று இருந்திருக்க மாட்டார்..இந்த அம்மாவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் 🙂
Apr 19, 2014 @ 10:51:51
Thank you for bringing out the true story of a great leader – the one who led her life from one of miserable agony to a glorious one.
Apr 19, 2014 @ 11:57:42
Thank you Uma and PVR!
Apr 19, 2014 @ 12:20:41
ஒரு பக்கம் வேதனையாய் இருந்தாலும் ஒரு பக்கம் நேர்மையாய் கடுமையாய் உழைத்து வாழ்க்கையை வெற்றி கொண்டுள்ளார் என்றறியும்போது மிக பெருமையாக உள்ளது. எத்தனை அவதாரங்கள் மகள், மனைவி, தாய், பாட்டி , பூட்டி. அவர் நீடுழி மகிழ்ச்சியோடு உங்கள் போன்ற நல்லுள்ளங்களோடுசேர்ந்து வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்களுக்கும் நன்றி.
பதிவின் ப்ரசண்டேசன் அருமை. ஒரு இடத்தில் மட்டும் சற்றே குழப்பம். ஐந்து வயதில் இறந்தது ஜெயாவின் அம்மா என்றிருக்கிறது. அது அப்பாவாக இருக்கலாம்
Apr 19, 2014 @ 13:48:30
பெண் என்று பிறந்தாலே சோதணைகளைக் கடக்கத் தான் வேண்டும். கதை சொல்லிய விதம் அருமை.
Apr 19, 2014 @ 14:16:59
போற்றப்படக்கூடிய பெண்மணி ஜெயா அவர்கள். _/\_ @SeSenthilkumar
Apr 19, 2014 @ 14:37:58
Thank you for sharing.People like you also cheered along with Jaya amma.Nicely written.
Apr 19, 2014 @ 16:23:52
தன்னம்பிக்கையுடனும், திடசித்தத்துடனும் வாழ்ந்து காட்டிய ஜெயா அவர்களின் வாழ்க்கை பாராட்டற்குரியது. நீங்கள் வலைப்பதிவு செய்யுமளவுக்கு சிறந்த வாழ்க்கை நடத்தும் அவருக்கு என் அன்பின் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.
Apr 20, 2014 @ 03:06:14
அருமையான பதிவு!
Apr 20, 2014 @ 07:38:00
தோல்விகள் பல சந்தித்தாலும் மனம் தளராமல் இறுதி வரை போராடவேண்டும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு இந்த ஜெயா அம்மா. I’m inspired. Thanks for sharing! 🙂
Apr 20, 2014 @ 08:21:20
நன்றி சின்னப் பையன், ஷர்மி ஜெகன், சே.செந்தில்குமார், வசந்தி கோபாலன், லோடஸ் மூன்பெல், புலவர் தருமி, பலராமன் 🙂
Apr 20, 2014 @ 14:49:18
Thanks for such an inspiration. Almost all women in India are facing struggles in their life and most probably they give up. They should learn lessons from women like Jaya ma and go on. Thanks for sharing, it is a nice write up.
Apr 20, 2014 @ 16:18:24
உண்மையில் எனது கண்கள் கலங்கிவிட்டது, வாழ்க்கையில் சலிப்புற்றவர்களுக்கு மிகமிக ஒரு நல்ல உதாரணம் .
மேலும் நல்ல எழுத்து நடை, இந்த அளவிற்கு ு கவணித்தள்ளீர்கள் அம்மா, Really great..!
Apr 21, 2014 @ 07:14:26
Thank you Ranjani and infosri 🙂
Apr 21, 2014 @ 11:48:40
ஜெயாம்மாவின் வாழ்க்கைப் பதிவைப் படம் போல மனக்கண்ணில் ஓட்டிப்படித்தேன். நல்லவங்களுக்குக் கஷ்டம் வந்தாலும், ஈற்றில் எதோவொரு ரூபத்தில் நன்மைகள் வந்து சேரும். அருமையான பதிவு.உங்க மகன் போட்டோவில் துறு துறு 😉
Apr 24, 2014 @ 16:40:34
pengalukul erukum thunichal sariyana nerathil varum yenbadhu jayha amma vazhkaiel unmai aetru
Apr 25, 2014 @ 03:52:14
Thank you Praba and Arulselvi. She is very happy with so much good wishes from all of you 🙂
Apr 28, 2014 @ 07:30:14
The pity is that she is not an isolated one. Many women fight for their Family like this and go unnoticed. Great that you have brought her agonies and her strengths, her fights and her success here.