அகல்யா/அகலிகை

அகல்யா/அகலிகை

அகல்யா/அகலிகை

புராண பெண் பாத்திரங்களில் சுவாரசியம் மிகுந்தவள் அகல்யா. அவளை பத்தினிப் பெண்ணாகப் பலரும், கற்பை இழந்ததால் சபிக்கப்பட்டு இராமனால் சாப விமோசனம் அடைந்தவளாக இன்னும் பலரும் பேசுவதே அவள் புகழுக்குக் காரணம். சர்ச்சைக்குரிய பெண் பாத்திரம், அதனால் கவனிக்கப் படுகிறாள்.

அகலிகை யார் என்று யாரிடம் கேட்டாலும் உடனே வரும் பதில் இராமனின் கால் பட்டதால் கல்லான அகலிகை பெண்ணாகிறாள் என்பது தான். அதனால் பெண்ணான அகலிகையின் கதை இராமனின் பெருமையை பறைசாற்ற பயன்பட்டதே தவிர அவளின் நிலையை எடுத்துச் சொல்ல அல்ல. ஆனாலும் அவள் பத்தினிப் பெண்கள் ஐவரில் ஒருத்தியாகப் போற்றப் படுகிறாள்.

பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. அகல்யா என்றால் அழகின்மை இல்லாதவள் என்று பொருள். அதாவது அவள் அழகில் சிறு குறை என்று ஒன்றுமே இல்லாதவள்! அப்படிப்பட்டப் பேரழகியை அனைத்து தேவர்களும் அடைய நினைத்தனர், அதில் முக்கியமாக இந்திரன் அவள் மேல் தீரா மையல் கொண்டிருந்தான்.

அகல்யாவின் பின்னால் இந்திரன்

அகல்யாவின் பின்னால் இந்திரன்

குழந்தையான அகல்யாவை பிரம்மன் கௌதம முனிவரிடம் வளர்க்கக் கொடுத்திருந்ததாகவும், அவள் வளர்ந்த பின் அவர் பிரம்மனிடமே அவளை திருப்பிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின் அவளுக்குக் கணவனைத் தேட சுயம்வரம் வைத்து அதில் யார் உலகை முதலில் மும்முறை வலம் வருகிறார்களோ அவருக்கே அகல்யா என்று அறிவிக்கப்பட்டது.

அவளை அடைவதற்காக இந்திரன் உலகை சுற்றி வரக் கிளம்புகிறான், ஆனால் கௌதம முனிவரோ அதற்கு முன்பே உலகை மும்முறை வலம் வந்து விட்டதால் அவருக்கே அகல்யா மனைவியாகிறாள்!

கன்றை ஈனும் பசுவைப் பார்ப்பதும் உலகை பார்ப்பதற்கு ஒப்பாகும் என்று ஒரு கருத்து. ஆதலால் காமதேனு கன்றை ஈனும் போது இரு தலை பசுவை ஒரு சேரக் கண்ட கௌதமர் மும்முறை காமதேனுவை வலம் வருகிறார். அதனால் உலகை மும்முறை வலம் வந்ததாக ஆகிவிடுகிறது. இந்திரனோ உலகை மும்முறை சுற்றி வந்து தாமதமாக வந்து சேருகிறான்.

இன்னொரு கதைப்படி பிரம்மச்சரிய விரதத்தை அவர் நல்ல முறையில் கடைப்பிடித்து அகல்யாவை வளர்த்ததால் அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகத் தெரிகிறது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான்.

ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்தக் கதையில் ஒரு முக்கிய விஷயம் கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பது.

இதற்கு பின் அகல்யாவை அடைய தக்கத் தருணத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான் இந்திரன். சேவல் விடிகாலை கூவும் போது கௌதமர் நதியில் நீராடக் கிளம்புவார். அந்த சேவலாக ஒரு முறை வந்து விடிவதற்கு ஒரு சாமம் முன்பே கூவி விடிந்தத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறான் இந்திரன். அவர் நீராட சென்ற பின் கௌதமர் உருவத்தில் குடிலுக்குள் நுழைந்து அகல்யாவைப் புணர்கிறான். அந்த சமயத்தில் அகல்யாவுக்கு அது தன் கணவன் இல்லை என்று தெரிகிறது அனாலும் தடுக்கவில்லை. (சிலர் அவள் தன் கணவன் என்றே நம்பி உடல் உறவு கொள்கிறாள் என்றும் சொல்கின்றனர்). அதற்குள் சந்தேகப்பட்டுத் திரும்பி வந்த கௌதமர் இருவரையும் ஒன்றாகக் கண்டு வெகுண்டெழுந்து அகல்யாவைக் கல்லாகப் போகும்படி சபிக்கிறார். இந்திரனுக்கு எதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாயோ அது உடல் முழுவதும் வரட்டும் என்று ஆயிரம் அல்குல்கள் உடலில் வருமாரு சபிக்கிறார்.

மாறு வேடத்தில் இந்திரன் கௌதமரால் பிடிபடுகிறான்.

மாறு வேடத்தில் இந்திரன் கௌதமரால் பிடிபடுகிறான்.

இருவரும் சாப விமோசனம் கேட்டு மன்றாடுகிறார்கள். பின் ஒரு நாளில் இராமனின் பாதங்கள் பட்டு அவள் திரும்பப் பெண்ணாக மாறுவாள் என்று அகல்யாவிற்குத் தண்டனையைக் குறைக்கிறார். இந்திரனின் ஆயிரம் அல்குல்களை ஆயிரம் கண்களாக மாற்றிவிடுகிறார். இவர் கோபத்தில் சபித்ததால் அவர் புண்ணிய பலனும் கணிசமான அளவு குறைந்துவிடுகிறது.

இந்திரன் மாறு வேடத்தில் வந்து அகலிகையை அடைவதற்கு காமத்தைத் தவிர இன்னுமொரு காரணம் உள்ளது. கௌதமர் தவ வலிமையில் மிகுந்து இருந்ததால் இவன் பதவிக்கு ஆபத்து வரும் போல் இருந்தது. மேலும் பல தேவர்களுக்கும் இவர் தவ வலிமையில் உயர்ந்து இருப்பது அச்சத்தைத் தந்தது. அதனால் இந்திரன் மற்ற தேவர்களின் ஆசியோடு செய்த சூழ்ச்சி இது. தான் அகலிகையுடன் கூடி இருக்கும் பொழுது எப்படியும் கௌதமரால் பிடிபடுவர், அப்பொழுது அவருக்குக் கோபம் வந்து இவர்களை சபிப்பார். அதனால் அவரின் தவ வலிமை அழிந்து போகும் என்றும் இந்திரன் கணக்குப் போட்டன். அவன் கணக்குப்படியே நடந்தது. அதற்குப் பகடைக் காயாக அகலிகை பயன்படுத்தப் படுகின்றாள். இது இன்னுமொரு கொடுமை!

முற்றிலும் உணர்ந்த முனிவர் ஏன் அழகு மனைவியை விட்டு நடு இரவில் குளிக்க செல்ல வேண்டும்? அகலிகையும் இந்திரனின் தந்திரத்தால் தன்னை இழக்கிறாள். அது அவள் தவறா? ஆனால் அகலிகை கௌதமரிடம் அவன் உங்களைப் போலவே இருந்ததால் நான் ஏமாந்துவிட்டேன் என்று கெஞ்சியபோதும் நீ உடலைப் பார்த்தாய் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கவில்லை அதனால் அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று நீ உணரவில்லை. அதனால் உன்னால் யார் கூப்பிட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு உன் நிலைமை இருக்கவேண்டும் என்று சபித்தார். அவள் கல்லாய் சமைந்தாள்.

இராமன் விஸ்வாமித்திரருடன் மிதிலைக்குப் போகும் வழியில் ஒரு வெட்ட வெளியில் ஒரு கல்லில் துளசி செடி முளைத்திருப்பதைப் பார்க்கிறான். இது என்ன இப்படி ஓர் அதிசயம் என்ற வினவியபோது விஸ்வாமித்திரர், ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இன்னொரு ஆணால் சபிக்கப்பட்ட பெண் இங்கு உறைகிறாள். உன் கால் பட்டு அவள் மறுபடியும் பெண்ணாக மாறுவாள் என்கிறார். அவ்வாறே நடக்கிறது.

யாருக்கும் குற்றம் சாட்டவும் தண்டிக்கவுமே அதிக விருப்பம். ஆனால் கதைப்படி இங்கே இராமன் என்னும் அவதாரப் புருஷன் அவளுக்கு விமோசனம் அளிக்கிறான். அவனை வணங்கி கௌதமருடன் வாழ கிளம்புகிறாள் அகலிகை. தனக்குக் கிடைத்த சாபத்தினால் இராம தரிசனமும் ஸ்பரிசமும் கிடைக்கும் வாய்ப்புக் கிட்டியதே என்று அந்த நிலையிலும் அகலிகை எண்ணுவதாகக் கதை முடிகிறது.

அன்பும் காதலும் காமமும் நிறைந்தது தான் வாழ்வு. ஒரு அழகான இளம் பெண் இங்கு ஒரு சுதந்திரப் பறவையாக சில நிமிடங்களாவது இருக்க ஆசைப்பட்டிருக்கிறாள். கௌதமரின் பார்வையால் ஒரு முறை கர்ப்பம் தரித்து அவள் ஒரு மகளைப் பெற்றேடுத்திருக்கிறாள். அவள் கணவனுடன் இன்பமாக இருந்தாளா என்பது கேள்விக்குறி. அவள் முன்பே இந்திரனை விரும்பினாள் என்றும் நம்பப் படுகிறது. அப்படியானால் கௌதமருடனான அவளுடைய திருமணம் ஒரு கட்டாயத் திருமணம் தானே?

அகலிகையின் கதை எழுப்பும் கேள்விகள் ஏராளம். கற்பு என்பது என்ன? புனிதத் தன்மையையும் தூய்மை கேட்டையும் பிரிக்கும் அந்த மெல்லிய கோடு எது? ஆசை – விருப்பம் இவற்றின் மதிப்பீடு என்ன? அவற்றை துறப்பதினால் வரும் மதிப்பு தான் என்ன? சிலவற்றை மாயை என்று அந்த சமயத்தில் உணரமுடிவதில்லையே. உண்மைத் தன்மையை உணர்வது தான் எப்படி?

யாரும் குறை இன்றி இருப்பதில்லை. அவர்களை அந்தக் குறையோடு ஏற்றுக் கொள்வதே விவேகம். மேலும் நாம் குறை என்று நினைப்பது அவர்க்கு அது நிறையாகவும் தெரியலாம். அதை நாம் எப்படி எடை போடுவது? நமக்கு அந்த உரிமையும் இல்லை அந்த நிலையில் நாம் இருந்தால் ஒழிய அதை எடை போடும் சக்தியும் நமக்குக் கிடையாது.

கம்ப இராமயணத்தில் கம்பர்

புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்

ஒக்க உண்டு, இருத்தலோடும் , உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்

தக்கது அன்று என்ன ஒராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா

முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்

என்கிறார். எப்பொழுது அகலிகை தன்னை இழந்தாளோ அப்பொழுதே அவளை “தாழ்ந்தனள்” என்று கூறிவிட்டார். அனால் முக்காலமும் உணர்ந்த அவளை காப்பாற்ற வேண்டிய கணவன் “தாழா முக்கண்ணன்” ஆகிறார். எல்லாவற்றிற்கும் காரணமான வில்லன் இந்திரனுக்குத் தீயவனே என்று எந்த அடைமொழியும் இல்லை. இது தான் இன்றைய சமுகம்.

பதிவிரதையாக ஒரு பக்கம் அகல்யா புஜிக்கப்படுகிறாள், ஆனால் அந்த இடத்தை அந்தப் பெண் பெற ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் அவள் கொடுக்க வேண்டிய விலை என்ன?  ஏமாற்றப்பட்ட பெண் தான் ஏமாற்றப் பட்டோம் என்று நிரூபிக்க வேண்டியது அவள் கடமை ஆகிறது. உண்மையிலேயே நீ எமாற்றப்பட்டாயா அல்லது விருப்பத்துடன் சென்றாயா என்று தான் சமூகம் முதலில் கேள்வி எழுப்புகிறது. அதுவே ஏமாற்றும் ஆண் எதையும் நிரூபிக்கவோ ஆதாரம் தரவேண்டிய அவசியமோ அன்றும் இன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதே மாதிரி கிரேக்க புராணக் கதையில் Zeus என்னும் கடவுள்  Amphitryon என்பவற்றின் மனைவி Alcmneஐ நயவஞ்சகமாக அடைகிறான். அவர்களின் சங்கமத்தில் பிறந்தவன் தான் Hercules.  அகலிகை மாதிரியே Alcmeneம்  தன் கணவனைப் போல வேடமிட்டு வந்த Zeus இடம் ஏமாறுகிறாள். ஆனால் அங்கே அவளின் அந்த செயலை பழி பாவமாகவும் தான் சுகத்துக்காக செய்த செயலாகவும் பார்க்கப் படவில்லை.

United Nations Report படி உலகத்தில் 38 பெண்களில் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப் பட்டிருகிறாள். இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் சீண்டலுக்கு ஆளாகிறாள். 58 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு பெண் வரதட்சணை கொடுமையினால் கொல்லப்படுகிறாள். ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் ஒரு பெண் அடிக்கப் படுகிறாள். பெண்களுக்கு எதிரான வன் கொடுமையில் உலகில் நான்காம் இடத்தில் நிற்கிறது இந்தியா.

A team from ASMITA Resource Centre for Women, Hyderabad, performed the ballet to launch the One Billion Rising campaign to end violence against women. The speakers at the function also expressed their concern over the declining sex ratio, which is now 1000:914 in the country.”

 

Reference: Kamba Ramayanam

http://www.pantheon.org/articles/a/ahalya.html

https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Ahalya.html

https://sites.google.com/site/epiclovestories/gautama-and-ahalya

dia.org/wiki/Ahalya

 

48 Comments (+add yours?)

 1. உமா க்ரிஷ் (@umakrishh)
  Apr 27, 2014 @ 14:15:25

  என்ன ஒரு ஆழமான analysis எல்லாக் கோணத்திலும் பார்த்திருக்கின்றீர்கள்..என்ன இருந்தால் கம்பன் ஒரு ஆண் அல்லவா? என்னைக் கேட்டால் கௌதமன் ஒரு நல்ல கணவனாக அல்லாமல் இருந்திருந்தால் அகலிகை ,இந்திரனை விரும்பியே போயிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதே..குற்றம் செய்பவனை விட குற்றம் செய்யத் தூண்டியவனையே அதிக குற்றவாளி என்கிறது சட்டம்..அந்த இபிகோ மற்றும் மனு தர்மத்தின் படி..
  எளிமையான விளக்கங்களும் கேள்விகளும்…தொடருங்கள் 🙂

  Reply

 2. Dhivya S
  Apr 27, 2014 @ 14:32:15

  அருமையான பதிவு 🙂 அட்டகாசம்மா

  Reply

 3. lotusmoonbell
  Apr 27, 2014 @ 15:02:11

  ஶ்ரீராமனின் கால்பட்டுப் புனிதமடைந்தவள் என்பதுதான் அகலிகைக்குப் பெருமை.அகல் ஒளியைப் போல் பிரகாசிக்கும் பெண்மையின் தியாகங்களால்தான் இன்றும் மழை பெய்கிறது.

  Reply

 4. S.T. Arasu
  Apr 27, 2014 @ 15:53:27

  Nice presentation and raising many thought provoking questions. விவாதிக்க பல அம்சங்கள் உள்ளன. இருந்தாலும் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட இனமாகவே பெண் படைக்கப்பட்டிருக்கிறாள். 😦

  Reply

 5. டிவிட்டியவாதி (@rkthiyagarajan)
  Apr 27, 2014 @ 16:00:51

  சொல்ல வந்த விசியத்தை அந்த ஒரு வரி யில் முடித்துவிட்டீர்கள் 😉 அருமை 😉

  Reply

 6. Kannabiran Ravi Shankar (KRS)
  Apr 27, 2014 @ 16:18:57

  வால்மீகி சொல்வது:

  அவன் உடம்புப் பகுதிகளால், “தன் கணவன் அல்ல”-னு உணர்ந்து விடுகிறாள்!
  But Lust has No Shame! = “சீக்கிரம் தேவராஜா! கெளதமர் வந்துறப் போறாரு” என்கிறாள்!

  **சுர சிரேஷ்டா, கச்ச சீக்கிரம்…இதப் பிரபோ
  = தேவர்கள் தலைவா, இதமானவனே, சீக்கிரம் கூடு

  **ஆத்மானாம், மாம்ச, தேவேசா!
  **சர்வதா ரக்ஷ, கெளதமாத்!
  = பின்பு, கெளதமருக்குத் தெரியாமல் என்னையும் உன்னையும் காப்பாற்றிக் கொள்!

  ராமாயணம் Book, பூஜை அறையில் வச்சிப், பூ போடறீங்களே!
  அதில் தான் இந்த “ஸ்லோகமும்” இருக்கு:))
  —-

  கம்பன் சொல்வது:

  கம்பனுக்கு வேற வழியில்லை! மதத்தைத் “தமிழ்”நாட்டில் காப்பாத்தணுமே! லேசாப், பூசி மெழுகு:)

  **காமப் – புது மண மதுவின் தேறல்
  **ஒக்க உண்டு இருத்தலோடும் = ரெண்டு பேரும் சேர்ந்து “உண்ணுதல்”; ஆண் மட்டுமே “உண்ணும்” சுயநலம் அல்ல!

  **உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும், தக்கது அன்று என்ன ஓராள்
  **தாழ்ந்தனள் இருப்ப; தாழா
  = இது ஏதோ, என்னைக்கும் இல்லாம புதுசா இருக்கே? மூஞ்சைப் பாரு? ஆமா நம்ம புருசன் தான்! ஆனா ஆனா…

  ஏதோ “உணர்ந்துட்டா” அவ!
  தன் புருசன், அதுவும் சந்தியா காலத்தில்? இது தக்கது அன்று -ன்னு ஆராய முடியலை அவளால! உடன்பட்டு விட்டாள்!
  —-

  கம்பன் – வால்மீகி வேறுபாடு புரிந்ததா?

  *வால்மீகி = தெரிஞ்சே உடன்படுகிறாள்
  *கம்பன்= ஐயத்தில் உடன்படுகிறாள்

  தெரிஞ்சோ/தெரியாமலோ = உடன் பட்டா என்ன?
  நீயும் அன்பு செய்ய மாட்ட,
  அன்பு செய்பவனையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

  (பாவம், அவளுக்குத் தெரியல, இந்திரன் அன்பு செய்பவன் அல்லன்;
  தன்னை விடுவித்துக் கூட்டிப் போகவும் மாட்டான்-ன்னு.. அது தனிக்கதை)

  *Lust may not have Love!
  *But True Love, has Lasting Lust!!
  = I write this from the bottom of my Heart! முருகா!

  Reply

  • Ananth
   Dec 13, 2017 @ 07:21:06

   இந்திரனும், கௌதம முனிவரும் பாற்கடல் கடையும் பொது இந்த அகலிகை என்கிற பெண் வருகிறாள். இதில் இருவரும் இந்த பெண்ணை கேட்கிறார்கள். பின் தேவர்கள் பேசி முடிவு செய்து அந்த பெண்ணை கௌதமருக்கு மனைவியாக அனுப்புகிறார்கள். ஆனால் இந்திரன் மனதில் வஞ்சம் கொண்டிருந்து, ஒரு நாள் இரவில் கௌதமர் உருவில் அகலிகையை நாடி அவள் வீடு கதவை தட்டினான்.

   ஆதாரம் : வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், சர்க்கம்-48 & 49 கூறுகிறது..

   இந்திரன் வேடமிட்டு அகலிகை குடிசையில் வந்தபின், அகலிகை இப்படி கூறுகிறாள்…

   ‘ஆயிரம் கண்ணுடைய இந்திரனே முனிவர் வேஷம் தரித்து வந்திருக்கிறார் என்பதை அகலிகை உணர்ந்து கொண்டு, ‘தேவராஜனே என்னை நாடி வந்திருகிறான் !’ என அகலிகை ஆச்சரியமடைந்தாள்’ – வசனம்-18

   ‘பின் அகலிகை தேவர்கோனை பார்த்து, பிரபு ! நீங்கள் இவ்விடத்திலிருந்து விரைவாக சென்று விடுங்க’ என்கிறாள்’ – வசனம் 19 கூறுகிறது.

   அந்த சமயத்தில் கௌதமர் வீட்டிற்க்கு வரவே, அவர் இந்திரனுக்கு சாபம் கொடுகிறார். மேலும், தன் மனைவி அகலிகை அவனோடு கொண்டிருந்த பாசத்தால் தான் இந்திரன் தன் வீடு வரை வந்துவிட்டான் என நினைத்து கோபம் கொண்டு அகலிகையை கல்லாக போகுமாறு சபித்தார்.

   மேலும், பாலகாண்டம்,சர்க்கம்-49, இல் இந்திரன் கூறுகிறார் ..

   ‘தெய்வீக தன்மை கொண்ட கௌதமருக்கு கோபத்தை உண்டாக்கி, அதன் மூலம் தேவர்களுக்கு நன்மை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே என்னால் அவ்வாறு செய்யப்பட்டது’ வசனம்-2 இல் கூறுகிறார்.

   ‘தேவர்களுக்கு உதவியாக இந்த காரியத்தை செய்தேன். (இப்படி கௌதமனின் தவத்திற்கு இடையூறு செய்யாமலிருந்தால் அவர் நீண்ட தவத்தின் பயனாக தேவலோகத்தின் அதிபதியாகி விடுவார்). எனவே, தேவர்களே நீங்கள் எல்லோரும் எனக்கு உதவுங்கள்’ – வசனம்-4 இல் கூறுகிறார்.

   இங்கே இந்திரன், அகலிகையை கற்பழித்ததாக கூறுவது பற்றி எங்குமே கூறப்படவில்லை. ஏனெனில், இந்திரன் வாசலில் நிற்கும்போதே, கௌதம முனிவர் அங்கெ வந்து விடுகிறார்.

   பின், இவள ராமர் பாதம் பட்டு சாபவிமோசனம் பெறுகிறாள். இது தான் உண்மையில் புராணங்களில் கூறுகிறது.

   Reply

 7. vasanthigopalan (@vasanthigopalan)
  Apr 27, 2014 @ 16:32:12

  எனக்கு பூரா தெரியாது அகல்யையின் கதை.எவ்வளவு அவமானம் பாவம். முழுவதும் படித்ததும் மனது கனத்துவிட்டது.அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.எல்லாப் பெண்களும் அவசியம் படிக்கவேணும்.இவ்வளவு தைரியமாக பதிந்ததற்கே உங்களைப் பாராட்ட வேண்டு்ம்.இன்றுவரை எதுவும் மாறவில்லை.மாறப் போவதும் இல்லை.

  Reply

  • amas32
   Apr 28, 2014 @ 05:13:22

   ரொம்ப நன்றி வசந்தி. எனக்கு இது மிகப் பெரிய பாராட்டு.

   Reply

 8. Kannabiran Ravi Shankar (KRS)
  Apr 27, 2014 @ 16:38:02

  பின்பு நடந்தவை, உங்களுக்கே தெரியும்!

  *முக்காலமும் உணர்ந்த முனிவன், அதிகாலை மட்டும் எப்போ? -ன்னு உணர மாட்டானோ?:)))
  *ஏமாந்து திரும்பி வர = இந்தா புடி சாபம்!

  அது கூட எப்புடி?
  *இந்திரனுக்கு = குட்டிச் சாபம்;
  *பொண்ணுக்கு= வாழ் நாள் சாபம்

  இந்திரன் தானே = ஹோம/யாகத்தின் பலன் குடுக்குற பதவி?
  பதவியைப் பகைச்சிக்கிட்டா? = சுயநலம்!

  “உடலெங்கும் யோனி”; ஆனா அதுக்கு மட்டும் Immediate பரிகாரம் குடுத்து விட்டான்;
  “உடலெங்கும் கண்” என்று மாற்றி விட்டார்கள்;

  ஆனா அவளை?
  —-

  * ஏற்கனவே உணர்விலே கல்லாய் வாழ்ந்தவளை, உடலாலும் கல் ஆக்கினான், முனி!
  * தான் மட்டும், வேதப் படிப்பை வச்சிக்கிட்டு, சகலரும் மரியாதை செய்ய உலா வந்தான் முனி!

  கல் ஆனாள் -ன்னு சொல்லுறது = கம்பன் தான்!
  வால்மீகியோ, “கல்” ஆனாள் -ன்னு கூடச் சொல்லலை!

  *யார் கண்ணிலும் பட மாட்டாள்! அவ உருவமே போச்சி..
  *மறை வாழ்வு!
  *உணவே இல்லை!
  *வெறும், காற்றின் அணுவை மூச்சாக்கி.. முருகா!

  பின்பு, இராகவன் குடிலின் உள்ளே நுழைய, அவள் “மீண்டாள்”!
  —-

  “நெஞ்சினால் பிழைப்பு இலாளை”! = இது தான் முக்கியமான வரி;
  அகலிகை = மனத்தால் மாசு அற்றவள்!

  நம்மில் யார் தான் சினிமாப் போஸ்டர்களை ரசிப்பதில்லை?
  சூர்யா-ஆர்யா, நவ்தீப்-ரவி
  = கண்களை மூடிக்கொள்ள வேணுமா பெண்கள்?

  அப்படிப் பார்த்தால், உலகில் ஒருவருக்குமே “கற்பு” இல்லாமல் போய் விடுமே?
  மகேஷ்பாபு = மன ஒக்கடு, மன அத்தடு, மன தூக்குடு:)))

  *கற்பு = உடல் சம்பந்தப்பட்டது அல்ல!
  *கற்பு = உள்ளம் சம்பந்தப்பட்டது!!

  முருகா! “அவனே” என்று மனசால் இருப்பதுவே = கற்பு!

  Reply

 9. Kannabiran Ravi Shankar (KRS)
  Apr 27, 2014 @ 16:39:22

  I salute my amas amma for this TRUTH, irrespective of religion or personal standpoints!

  *ஆம்பிளைங்க சொல்லத் தயங்குற விசயத்தைக் கூட
  *பொம்பளைங்க, பொடேர் -ன்னு போட்டு உடைச்சிச் சொல்லீருவாங்க, சில சமயம்!

  Moment of Conscience for All, ma!
  Coz, Conscience is God!

  Reply

 10. அன்புடன் பாலா
  Apr 27, 2014 @ 17:00:20

  சொல்ல வந்த, அகலிகைக்கு இழைக்கப்பட்ட கொடுமையை, வன்மம் இல்லாத ஒரு நேர்த்தியோடு சொல்லியிருக்கிறீர்கள்! ஆணாதிக்கவாதிகளையும் யோசிக்க வைக்கும் அளவுக்கு தெளிவாக எழுதியிருப்பது அதை விட சிறப்பு.! நம் பழங்கதைகளில் அகலிகை போல பல பெண்கள் இருந்தனர், இப்போதும் உள்ளனர் 😦 Your presentation & flow are going up from posting to posting 🙂 பாராட்டுகள்!

  Reply

  • amas32
   Apr 28, 2014 @ 05:32:36

   ரொம்ப நன்றி பாலா. எனக்கு உங்கள் பாராட்டு மிகப் பெரிய பலத்தை கொடுக்கிறது. நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து சின்ன சின்னப் படிகள் வைத்து மேலேறிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவதில் இருந்து தெரிந்து கொள்கிறேன். இந்தப் பதிவை எழுத ஆர்மபித்த பொழுது I started with some amount of trepidation, இது ஒரு பெண்ணிய கட்டுரை என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று! எனக்குத் தெரிந்த உண்மையை இங்கே சொல்லியுள்ளேன். மிக்க நன்றி.

   Reply

 11. Soundar
  Apr 28, 2014 @ 03:19:47

  பெண் விடுதலை பற்றி பேசுவோர், பொதுவான நிலையில் அனுகுவதில்லை; ஒரு சார்புநிலையான விவாதத்தால், பயனேதுமில்லை.
  இவர்கள் ஏன் பொய் வழக்கு போடுவோர்களைப் பற்றி பேசுவதில்லை.

  தற்காலத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது; இது இரு தரப்பிற்கும் பொருந்தும். தொலைநோக்கோடான பார்வையோடு, ஒரு அனுகுமுறை தேவை; இது பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஆரம்பிக்கபட வேண்டும் .

  Reply

 12. amas32
  Apr 28, 2014 @ 05:11:53

  மிக்க நன்றி KRS.

  Reply

 13. amas32
  Apr 28, 2014 @ 05:33:02

  நன்றி உமா.

  Reply

 14. தெனாலி™ (@i_thenali)
  Apr 28, 2014 @ 05:35:49

  தெளிவான நடை ,மிக சென்சிடிவான விஷயத்தை நன்றாக கையாண்டு பதிவிட்டிருகிறீர்கள் அது சம்பந்தமான உங்கள் தேடலும் அதை எழுத்தில் கொண்டுவந்த விதமும் தேர்ந்த எழுத்தாளரின் சாயலுடன் இருக்கிறது.வாழ்த்துக்கள் Madam :)))))))))))))))

  Reply

 15. கொம்பன் ராஜா (@kombanraja)
  Apr 28, 2014 @ 05:48:04

  புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்

  ஒக்க உண்டு, இருத்தலோடும் , உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்

  தக்கது அன்று என்ன ஒராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா

  முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்

  என்கிறார். எப்பொழுது அகலிகை தன்னை இழந்தாளோ அப்பொழுதே அவளை “தாழ்ந்தனள்” என்று கூறிவிட்டார். அனால் முக்காலமும் உணர்ந்த அவளை காப்பாற்ற வேண்டிய கணவன் “தாழா முக்கண்ணன்” ஆகிறார். எல்லாவற்றிற்கும் காரணமான வில்லன் இந்திரனுக்குத் தீயவனே என்று எந்த அடைமொழியும் இல்லை. இது தான் இன்றைய சமுகம்.

  கம்ப ராமாயணத்தில் கம்பர் கூறியது அருமையாக இருத்தது .காமம் என்பது தீண்ட தகாத ஒன்று அல்ல .அதுவும் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது .உடல் உறவு என்பது இல்ல விடில்.நமது சந்ததியை வளர்க்கவும் முடியாது.அன்பு ,நம்பிக்கை ,காமம் மூன்றும் இருப்பது தான் ஒரு நல்ல குடும்ப வாழ்கை.

  Reply

  • amas32
   Apr 28, 2014 @ 13:17:10

   ரொம்ப நன்றி கொம்பன் ராஜா. சரியா சொல்லியிருக்கீங்க.

   Reply

 16. UKG (@chinnapiyan)
  Apr 28, 2014 @ 08:12:38

  புராண கதைகள் உண்மையில் நடந்ததா இல்லை புனைவா என்ற ஆராய்ச்சியில் என்றுமே ஈடுபட்டதில்லை. அவைகளில் உள்ள சுவாரஷ்யங்களும், சொல்லவந்த நீதிகளையுமே உள்வாங்கிக்கொள்வேன்.

  நீங்கள் ஒவ்வொன்றையும் மிக நேர்த்தியாக அலசி, கொஞ்சமும் தயக்கமில்லாமல் ரிபீட் கொஞ்சமும் தயக்கமில்லாமல் விவரித்துள்ளீர்கள். அருமையான நடை.சிறிதும் அலுப்பு தட்டவில்லை என்பது உங்கள் ஸ்பெசாலிடி. வாழ்க வளர்க.

  தெனாலி™ (@i_thenali) யின் கூற்றும் என் எண்ணத்தைபோலவே உள்ளது

  Kannabiran Ravi Shankar (KRS) இவரின் விளக்கம் மிக சுவாரஸ்யமாக இருந்தது. உங்களின் பதிவால் இவரின் பொக்கிஷமும் கிடைத்தது. (நீங்க இவர்கிட்ட சித்த ஜாக்கிரதையா இருக்கணும். உங்களையே தூக்கி சாப்பிட்டுருவார் 🙂 ) விஷயம் இருக்கின்ற விஷமக்கார கண்ணன் 🙂

  நன்றி உங்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டிற்கு 🙂

  Reply

 17. பருத்தி வீரன் (@karadi_kathai)
  Apr 28, 2014 @ 12:06:26

  சிறப்பான பதிவு …
  நன்றிகள்…

  Reply

 18. amas32
  Apr 28, 2014 @ 13:19:23

  நன்றி பலராமன்.

  Reply

 19. ஆ ன ந் த ம் (@anandhame)
  Apr 28, 2014 @ 16:48:01

  அருமையான பதிவு.. பகிர்விற்கு மிக்க நன்றி… இது போல திரெளபதி பற்றிய பதிவு எழுத வேண்டி விண்ணப்பிக்கின்றேன்…

  Reply

 20. kavi
  Apr 28, 2014 @ 17:57:03

  ” அகலிகையின் கதை இராமனின் பெருமையை பறைசாற்ற பயன்பட்டதே தவிர…அவளின் நிலையை எடுத்துச் சொல்ல அல்ல.”
  இது பொது விதியாகி போனது தான் துரதிர்ஷ்டம். அழுத்தமான ஒரு பதிவு. ரசித்து படித்தேன்.
  வாழ்த்துக்கள். 🙂

  Reply

 21. thamilanna
  Apr 29, 2014 @ 01:46:51

  முனிவர்களும்,கடவுள்களும் முன்னுதாரண புருசர்களாக‌
  இருக்கவேண்டியவர்களை வால்மீகியாகட்டும்
  கம்பனாகட்டும் இப்படிச் சித்தரித்த பாவத்துக்கு
  இருவரையுமே சிரச்சேதம் செய்ய உத்திரவிடுகிறேன்.

  Reply

 22. GiRa ஜிரா
  Apr 29, 2014 @ 12:22:08

  நல்ல பதிவு. நல்ல கருத்து. எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. இனி நான் சொல்ல ஒன்னுமில்லை.

  பொதுவாகப் பெருமையானதாகப் போற்றப்படும் பண்பாட்டு வாழ்க்கைமுறைக்குள் எவ்வளவு கொடுமைகள் இருக்குன்னு புரிஞ்சிக்கிறதுக்கு அகலிகை வாழ்க்கையும் இந்தப் பதிவும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

  Reply

 23. Veeru P (@vforveeru)
  Apr 29, 2014 @ 15:53:20

  மன்னிக்கவும். நான் ரொம்ப லேட். நீங்க ஆழமா அலசியிருக்குற பதிவு, நான் ஆர்வமா எதிர்பார்த்த பதிவு . பதிவைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் இந்தக் கட்டுரைக்கு எவ்வளவு மெனக்கிட்டு இருக்குறீர்கள் என்ற ஆச்சர்யமே மிஞ்சுகிறது.

  யாரையுமே தாக்கியோ தாழ்த்தியோ எழுதாத நடை. பகடைக்காயா ஆக்கப்படுகிற பெண்களின் பரிதாபத்திற்குரிய நிலைமையையும் இயலாமையையும் உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கும் அதே நேரத்தில் எந்த ஒரு செயலுக்குமே ஒரு உந்துதல் / காரண காரியம் இல்லாமல் போகாதுன்ற கருத்தையும் உள்வச்சுச் சொல்லி இருக்றீங்க. கற்பு காமம் ஒழுக்கம் பற்றி நீங்கள் எழுப்பி இருக்கும் கேள்விகள் படிக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும். யோசிக்காமல் சந்தேகிக்கும் கௌதமர்களும் , அடங்காது அலைந்து திரியும் இந்திரர்களும் இருக்கும் வரையில் அகலிகை போன்ற அபலைகளின் அவலங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் :-(.

  ஆரம்பத்தில் வாசிக்கும் பொது , இந்தப் பதிவின் முடிவு எப்படியாக இருக்குமென்று என் மனத்தில் ஒரு விதமாய்க் கணித்து வைத்திருந்தேன். ஆனால் முற்றிலும் வேறாக, கோர்வையாக contemporary situation ஐ கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். சுளீர் உண்மைகள்.

  இந்தப் பதிவின் மற்றுமொரு அழகு , ஓவியங்கள். ஐராவதத்தில் மட்டுமே பார்த்துப் பழகிய இந்திரனை உச்சஸ்ரிவஸ் குதிரையில் காட்டியிருப்பது ஓவியரின் ரசனை. உடல் முழுக்கக் குறிகளோடு அவமானத்தில் பயந்து ஓடும் இந்திரனை போலி கௌதமரின் உடலில் இருந்து வெளிப்பட்டு வருமாறு வரைந்திருப்பதில் அவரின் ஆக்கத்திறன் தெரிகிறது.

  மொத்தத்தில் அற்புதமான பதிவு இது. உங்கள் உழைப்பிற்கு என் வந்தனம் 🙂

  – வீரு

  Reply

 24. amas32
  Apr 29, 2014 @ 16:08:57

  ரொம்ப அருமையான பின்னூட்டம் வீரு.I am very touched by your understanding of the post. எல்லா அம்சங்களையும் கவனித்து பாராட்டியதற்கு நன்றி 🙂

  Reply

 25. ஈரோடு நாகராஜன்
  Apr 29, 2014 @ 19:08:32

  நல்ல நோக்கு.

  பிற்பாடு ராமன் ஏக பத்தினி விரதன் என்பதை ஏற்றம் கொடுத்துச் சொல்லவும், அப்படி ஏக பத்தினி விரதனாய் இருக்குக்கூடிய மனம் மிகுந்தவனின் பாத ஸ்பரிசத்துக்கே எவ்வளவு வலிமை பார்த்தீர்களா என்பதை ஆசிரியர் விலியுறுத்த எண்ணியிருக்கலாம். அதோடு, கற்பு நெறி பிறழ்ந்தால் அதை ஒரு கற்புக்கரசனோ கற்புக்கரசியோ தான் புனிதப்படுத்த முடியும் என்று சொல்ல எண்ணியிருக்கலாம்.

  சரி, ராமன் சீதை இலக்குவன் சஹிதமாய்க் கானகம் செல்லும் வழியில் சீதை கால் பட்டு ஏன் ஒருவரும் விமோசனம் பெற்றதாக ஒரு நிகழ்வு ஏனில்லை? காப்பியத்தை எழுதுபவர் என்பதால் பிறகு சீதை அவச்சொல்லுக்கு ஆளாகபோகிறாள்; இப்போது எதற்கு ஒரு தூக்கி-விடல் என்று எண்ணிவிட்டாரா?

  Reply

 26. ஈரோடு நாகராஜன்
  May 01, 2014 @ 04:51:36

  🙂

  Reply

 27. amas32
  May 02, 2014 @ 03:59:40

  நன்றி மகிழ்வரசு 🙂

  Reply

 28. PS
  Sep 13, 2014 @ 17:26:37

  நண்பர்களே நீங்கள் பேசுவது, ரோஜா செடியில் முள்ளை வைத்திருப்பது கடவுள் செய்த பெருங்குற்றம் என்பது போல் இருக்கிறது.

  Reply

 29. Ananth
  Dec 13, 2017 @ 07:25:41

  இந்திரனும், கௌதம முனிவரும் பாற்கடல் கடையும் பொது இந்த அகலிகை என்கிற பெண் வருகிறாள். இதில் இருவரும் இந்த பெண்ணை கேட்கிறார்கள். பின் தேவர்கள் பேசி முடிவு செய்து அந்த பெண்ணை கௌதமருக்கு மனைவியாக அனுப்புகிறார்கள். ஆனால் இந்திரன் மனதில் வஞ்சம் கொண்டிருந்து, ஒரு நாள் இரவில் கௌதமர் உருவில் அகலிகையை நாடி அவள் வீடு கதவை தட்டினான்.

  ஆதாரம் : வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், சர்க்கம்-48 & 49 கூறுகிறது..

  இந்திரன் வேடமிட்டு அகலிகை குடிசையில் வந்தபின், அகலிகை இப்படி கூறுகிறாள்…

  ‘ஆயிரம் கண்ணுடைய இந்திரனே முனிவர் வேஷம் தரித்து வந்திருக்கிறார் என்பதை அகலிகை உணர்ந்து கொண்டு, ‘தேவராஜனே என்னை நாடி வந்திருகிறான் !’ என அகலிகை ஆச்சரியமடைந்தாள்’ – வசனம்-18

  ‘பின் அகலிகை தேவர்கோனை பார்த்து, பிரபு ! நீங்கள் இவ்விடத்திலிருந்து விரைவாக சென்று விடுங்க’ என்கிறாள்’ – வசனம் 19 கூறுகிறது.

  அந்த சமயத்தில் கௌதமர் வீட்டிற்க்கு வரவே, அவர் இந்திரனுக்கு சாபம் கொடுகிறார். மேலும், தன் மனைவி அகலிகை அவனோடு கொண்டிருந்த பாசத்தால் தான் இந்திரன் தன் வீடு வரை வந்துவிட்டான் என நினைத்து கோபம் கொண்டு அகலிகையை கல்லாக போகுமாறு சபித்தார்.

  மேலும், பாலகாண்டம்,சர்க்கம்-49, இல் இந்திரன் கூறுகிறார் ..

  ‘தெய்வீக தன்மை கொண்ட கௌதமருக்கு கோபத்தை உண்டாக்கி, அதன் மூலம் தேவர்களுக்கு நன்மை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே என்னால் அவ்வாறு செய்யப்பட்டது’ வசனம்-2 இல் கூறுகிறார்.

  ‘தேவர்களுக்கு உதவியாக இந்த காரியத்தை செய்தேன். (இப்படி கௌதமனின் தவத்திற்கு இடையூறு செய்யாமலிருந்தால் அவர் நீண்ட தவத்தின் பயனாக தேவலோகத்தின் அதிபதியாகி விடுவார்). எனவே, தேவர்களே நீங்கள் எல்லோரும் எனக்கு உதவுங்கள்’ – வசனம்-4 இல் கூறுகிறார்.

  இங்கே இந்திரன், அகலிகையை கற்பழித்ததாக கூறுவது பற்றி எங்குமே கூறப்படவில்லை. ஏனெனில், இந்திரன் வாசலில் நிற்கும்போதே, கௌதம முனிவர் அங்கெ வந்து விடுகிறார்.

  பின், இவள ராமர் பாதம் பட்டு சாபவிமோசனம் பெறுகிறாள். இது தான் உண்மையில் புராணங்களில் கூறுகிறது.

  மேலும், இந்து தொன்மவியலில் ஐந்து புராணப் பெண்கள் பஞ்சகன்னிகைகள் என்று அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்களே மிகச்சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப்பெறுகிறார்கள்.
  அவர்கள் :

  1.அகலிகை (கௌதம முனிவரின் மனைவி )
  2. திரௌபதி (பஞ்ச பாண்டவர்களின் மனைவி )
  3. சீதை ( இராமபிரானின் மனைவி )
  4. தாரை வாலியின் மனைவி ) மற்றும்
  மண்டோதரி (இராவணனின் மனைவி )

  நிலைமை இப்படி இருக்க அகலிகையை புராணங்கள் எப்படி 5 பத்தினிகளில் ஒருவராக கூறியிருக்க முடியும் ?
  எனவே, அகலிகை ஒரு பத்தினி தான்.

  சனாதன தர்மத்தில் இறைவன் ஒருவரே – அவர் நாராயணர் /விஷ்ணு /கிருஷ்ணர் ஆகும். ஆனால் சாஸ்திரங்களில் 33 கோடி தேவர்களை பற்றி கூறுகிறது. இந்த தேவர்களான பிரம்மா முதல் எல்லா தேவர்களும் பகவான் நாராயணரின் கட்டளைப்படி இந்த உலகை பராமரிக்க நியமிக்கப்பட்டவர்கள். இது ஒரு பதவி போல். நாமும் கூட அடையாளம். அதாவது 100 அஸ்வமேதயாகம் செய்தல் இந்திரனாகலாம், இப்படியே எல்லா பதவியும்.

  எனவே ஒவ்வரு தேவர்களும் தனது பதவிக்காலம் வரை இதை அனுபவித்து, பின் அவர்களது கர்மப்படி திரும்பவும் பிறவி எடுப்பர். மேலும், இந்த தேவர்கள் & நாம் (மனிதர்கள்) எல்லோருமே ஜீவாத்மாக்கள் ஆகும். தேவர்களும், மனிதர்களை போலவே ஆசை, காமம், பொறாமை,…. எல்லாம் உண்டு. ஆனால், இவர்கள் நம்மை விட சில சக்திகளை உடையவர்களாக இருக்கிறார்கள்.

  எனவே, இவர்கள் சில பதவிகளில் இருந்தாலும், சில சமயங்களில் காமத்தால் தனது நிலையை இழந்து நடந்து கொள்கிறார்கள்.

  இது போல வேத,புராணங்களில் சில இடங்களில் பிரம்மா,இந்திரன் ஆகிய தேவர்கள் மிக உயர்ந்த அறிவாளியாக இருந்தும் கூட புலன்உணர்ச்சிக்கு பலியாகி இருக்கிறார். அதனால் தான் ஒருவன் தனது தாயுடன், சகோதரியுடனும், மகளுடனும் கூட தனியாக வாழ்தல் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

  இந்த நிகழ்ச்சியில் இருந்து நாமும் பாடம் கட்டு கொள்ள வேண்டும். மனிதன் ஒரு சமூகவிலங்கு ஆவான்.

  Reply

 30. Anonymous
  Aug 02, 2022 @ 07:27:28

  It’s very huge telling that truth of world
  Respect the women’s

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: