
என் அம்மாவின் வாழ்க்கை வண்ணமயமானது. வளரும் பருவத்தில் எல்லாமே பளிச் வண்ணங்கள். என் அம்மாவின் அப்பா திரு. சக்கரவர்த்தி ஐயங்கார் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தார். அதனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலாகும் வேலை. என் அம்மாவிற்கு முன் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்ததால் என் அம்மா பிறந்த போது என் பாட்டியின் தகப்பானருக்குப் பெரும் மகிழ்ச்சி, வறுத்த பயிர் முளைத்தது போல பெண் பிறந்திருக்கிறாள் என்று அவருக்கு மரகதவல்லி என்று பெயர் சூட்டினார்.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.
என் அம்மா பிறந்தது தாய் மாமன் வீட்டில், அரியலூரில். ஆனால் அந்த சமயம் என் அம்மாவின் அப்பா இருந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். அங்கு தான் அவர் மழலைப் பருவம் கழிந்தது. அரசாங்க வேலையில் சம்பளம் நிறைய இல்லாவிட்டாலும் அரசாங்க குவார்டர்ஸ், வேலையாட்கள் என்கிற வசதிகள் நிறைய உண்டு. அதுவும் நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பின் ஒரு பெண் என்பதால் எல்லாராலும் சீராட்டப் பட்டார் என்றே சொல்ல வேண்டும். அண்ணன்கள் எல்லாருமே அந்தக் கால சூழலுக்கேற்ப மரம் ஏறுதல், விளையாட்டு என்பது சண்டையில் முடிதல் என்பது போல் இருந்ததால் என் அம்மாவும் ஒரு Tomboy தான். எதற்கும் அஞ்சமாட்டார்.
இன்னும் சொல்லப் போனால் இவர் ஒரு மருத்துவர் ஆகியிருந்தால் மிகவும் நல்ல பெயர் பெற்றிருப்பார். அண்ணன்களுக்கு அடிபட்டாலும் முதல் உதவி செய்வது இவராகத் தான் இருக்கும். யாரும் வீட்டில் இல்லாத பொழுது இவர் அண்ணன் ஒருவருக்கு முதுகு முழுக்கத் தேள் பல இடங்களில் கொட்டிவிட்டது. சிறுமியாக இருந்தாலும் உடனே கொட்டிய இடத்தில் எல்லாம் சுண்ணாம்பைத் தடவி முதலுதவி செய்திருக்கிறார். இவருக்கு முன் பிறந்த அண்ணனுக்கு சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் வலது கை செயலிழந்து விட்டது. அது இன்று வரை என் அம்மாவுக்குப் பெரிய குறை. அவர் உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணராக இன்று வலம் வந்தாலும் அவரின் உடற்குறை அவரை இன்றும் மனதளவில் வேதனைக் கொள்ள வைக்கும். பள்ளிக்குப் பேருந்தில் பயணம் செல்லும்போது முதலில் அண்ணனை பத்திரமாக வண்டியில் ஏற்றிவிட்டு அதன்பின் தான் இவர் ஏறுவாராம்.அதனால் ரொம்ப நாள் வரை அந்தப் பேருந்தின் ஓட்டுநர் இவரை தமக்கை என்றும் அவர் அண்ணனை தம்பி என்றும் நினைத்திருந்தாராம்.
ஸ்ரீவைகுண்டத்திற்குப் பிறகு என் தாத்தாவிற்கு பழனிக்குப் போஸ்டிங். எங்கள் தத்தா பாட்டி ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்தாலும் பலமுறை பழனி மலையை வலம் வந்தவர்கள். என் அம்மாவும் ஒரு வேலையாள் இடுப்பில் உட்கார்ந்தவாறு பழனி மலையை அவர்களுடன் வலம் வந்திருக்கிறார். அதன் புண்ணியப் பலனாகத் தான் எனக்கும் முருகன் அருள் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். முருகனே என் இஷ்ட தெய்வம்.
பழனிக்குப் பின் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி என் பல ஊர்களுக்கு என் பாட்டனாருக்கு transfer ஆனதால் சில சமயம் ஒரே வகுப்பைக் கூட இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கிறாராம். நடுவில் இரண்டு வருடம் அரியலூரில் தாய் மாமா வீட்டில் இருந்தும் படித்திருக்கிறார். அங்கும் மாமாவிற்கு ஐந்து ஆண் பிள்ளைகள் ஒரு பெண். அந்தப் பெண்ணே பின்னாளில் என் அம்மாவின் இரண்டாவது அண்ணனின் மனைவியாக வந்தார்.
அம்மாவிற்குப் படிப்பில் ரொம்ப ஆர்வம் கிடையாது ஆனால் அவர் எந்த விளையாட்டுப் போட்டியில் சேர்ந்தாலும் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்துவிடுவார். நன்றாகப் பாடுவார். வீட்டில் பாட்டுப் பயிற்சி தரப்பட்டது. அதனால் பாட்டுப் போட்டிகளிலும், அண்ணன்கள் trainingல் பேச்சுப் போட்டிகளிலும் எப்பவும் அம்மாவிற்கு முதல் பரிசு தான். பின்னாளில் பாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்திருக்கலாம். சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்று நினைக்கிறேன்.
என் தாத்தா எந்தெந்த ஊரில் வேலை பார்த்தாலும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் கோடை விடுமுறைகளில் இவர்களை அழைத்துச் சென்றதால் என் அம்மா தென் இந்தியாவில் அநேக ஊர்களையும், கோவில்களையும், அருவிகளையும், நதிகளையும் பார்த்து இருக்கிறார். இயற்கையிலேயே இவருக்கு சரித்திரத்திலும் பூகோளத்திலும் மிகுந்த ஆர்வம். எந்த இடம் சென்றாலும் அவ்விடத்தின் கதையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார். இன்றும் கோவில்களுக்குச் சென்றாலும் சிற்பங்களையும் அந்தக் கோவிலைக் கட்டிய அரசரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே மிகுந்த ஆர்வமாக இருப்பார்.
ஒரு முறை மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்கவும் அவரை கண்ணால் கண்டு மகிழவும் இவரின் அம்மாவும் ஒரு அண்ணனும் மதுரைக்குச் சென்ற போது இவர் சிறுமியாக இருந்ததால் இவரை அழைத்துப் போகாதது இவருக்கு மிகுந்த வருத்தம். காந்தியைப் பார்க்க முடிந்த ஒரு அரிய வாய்ப்பை அவர் தவற விட்டதை நினைத்து அளவில்லா வருத்தமே. காந்திஜி சுடப்பட்டு இறந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்டு இவர் காதில் விழுந்த பொழுது இவர் ஒரு கோவிலில் இருந்திருக்கிறார். விடாமல் கோவிலை வலம் வந்து இவர் கேட்ட செய்தி பொய்யாக இருக்க வேண்டுமே என்று இறைவனைப் பிரார்த்தித்து அழுதிருக்கிறார். இளம் வயதிலேயே அவருக்கு நிறைய தேசிய உணர்வு உண்டு. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்று இருக்க மாட்டார். அரசியலில் நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.
பிராணிகளிடமும் நிறைய அன்பு! கால் ஒடிந்த பறவையோ, தாயில்லா பூனைக்குட்டியோ இவரின் பராமரிப்பில் நன்றாகிவிடும். இவர் இண்டர்மீடியட் இரு வருட படிப்பினை ஒரு வருடம் திருச்சியிலும், ஒரு வருடம் பாளையங்கோட்டையிலும் படித்து முடித்தார். பின்பு பட்டப் படிப்புக்கு இவரின் அண்ணன்களின் பிடிவாதத்தால் மெட்ராஸ் Queen Mary’s கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருட பட்டப் படிப்பை ஒரே ஊரில் படித்து சாதனை படைத்தார். படிப்பை விட எப்பவும் போல என் அம்மா மற்ற செயல்பாடுகளில் முன்னின்று, பல குழுக்களின் செயலாளராக பங்காற்றி Queen Mary’s கல்லூரி பிரபலமாக இருந்தார் 🙂

என் அம்மா என் அப்பாவை திருமணம் புரிந்த பிறகு அவரின் கவலையற்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து பொறுப்புள்ள தலைவியாக அவரை மாற்றியது. என் அப்பா மிகவும் எளிமையானக் குடும்பத்தில் மூத்த மகனாப் பிறந்து குடும்ப சுமையைத் தாங்கும் அவசியம் இருந்ததால் என் அம்மா அவருக்கு உற்றத் துணையாக மாறி தோள் கொடுத்தார். என் தாத்தாவிற்கு என் அப்பாவை மருமகனாக்கிக் கொள்ள முக்கியக் காரணம் அவரின் நேர்மையும், கடின உழைப்பும், அன்பான அணுகுமுறையும் தான். இல்லாவிட்டால் ஒரே பெண்ணை இவ்வளவு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாகக் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்.

திருமண புகைப்படம்

தாஜ் மகாலில்

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.
என் நான்கு அத்தைகளுக்கும் என் அம்மாவும் அப்பாவும் தான் திருமணம் செய்து வைத்தனர். ஒரு சித்தப்பா என் பெற்றோரின் திருமணத்திற்குப் பின் பிறந்தவர். சித்தாப்பாக்களைப் படிக்க வைத்து அவர்களுக்கும் திருமணம் நடத்தி எல்லா உறவுகளையும் என் அம்மா அரவணைத்துக் கொண்டாடினார். என் தந்தை வழி தாத்தா ரொம்ப சிம்பிள்டன். எளிமையானவர் ஆனால் சாமர்த்தியம் கிடையாது. என் பாட்டி முடிந்த வரை தன் சாமர்த்தியத்தில் குடும்பத்தை நடத்தினார். ஆனாலும் அவருக்கும் எல்லா சுமையையும் என் அப்பா மீது சுமத்தி விட்டது மனதுக்கு வேதனையை அளித்தது. என் பாட்டி கேன்சர் வந்து 63 வயதிலேயே இறந்து விட்டார். என் அப்பா அவருக்கு 13 வயதில் பிறந்தவர். தாயின் மேல் மிகுந்த பாசம் உண்டு. என் தாத்தா அதற்கு பின் பல வருடங்கள் நல்ல முறையில் வாழ்ந்து தனது 93வது வயதில் தான் இயற்கை எய்தினார்.
என் தந்தை முதலில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் நல்ல நிலைக்கு வர ரொம்பக் கஷ்டப்பட்டதால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயது முதலே அவருக்கு இருந்தது. அதனால் அவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் செய்யும் சிறு தொழிற்சாலையை ஆரம்பித்தார். மிகவும் நல்ல முறையில் நடந்த அந்த தொழிற்சாலை, ஒரு பார்ட்னர் ஏமாற்றியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் தனியாகவும் இன்னொரு நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அதில் பால் பேரிங்க்ஸ் செய்ய ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்டிற்கு நிறைய முதலீடு செய்ததால் அதிலும் பல பணப் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
என் அம்மா தான் ஆபிஸ் நிர்வாகத்தை முதலில் இருந்து கவனித்து வந்தார். அவர் திருமணத்திற்குப் பிறகு என் தந்தையின் உந்துதலின் பேரில் B.Ed படிப்பையும் முடித்திருந்தார். ஆனால் ஆசிரியர் வேலைக்குச் சென்றதில்லை. மிகச் சிறந்த நிர்வாகி. என் தந்தை மிகப் பெரிய பொறியாளர் ஆயினும் அதிர்ஷ்டம் இல்லை. பால் பேரிங்க்ஸ் அது வரை ஜப்பானில் இருந்தும் ஜெர்மனியில் இருந்தும் தான் இம்போர்ட் செய்யப்பட்டது. முதன் முதலில் ஒரு ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரியில் இன்டிஜீனஸ் மெஷீன்களுடன் உள்நாட்டு டெக்னாலஜியுடன் பால் பேரிங்க்சை தயாரித்த முதல் இந்தியர் என் தந்தை. ஆனால் ப்ரொடக்ஷன் காஸ்ட் அதிகம். வெளிநாட்டுப் பொருளின் குறைந்த விலையோடு போட்டிப் போட முடியவில்லை.
எத்தனையோ பணப் பிரச்சினைகளையும், வங்கிக் கடன், தனியார் கடன் இவற்றை சமாளித்து என்னையும் என் தம்பியையும் நல்ல முறையில் வளர்த்ததில் என் தாயின் பங்கு மிகப் பெரியது. அவர் தைரிய லட்சுமி. எதற்கும் கலங்காமல், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து செயல் புரிந்தார்.
இதன் பின் தான் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது. என் தந்தைக்கு பார்கின்சன்ஸ் டிசீஸ் வந்துள்ளது தெரிய வந்தது. முதலில் அவரது வலது கை ஒத்துழைக்காமல் இருந்தது. அந்த சமயம் நான் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்று விட்டேன். பார்கின்சன்ஸ் டிசீசுக்கு இன்று வரை நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிக்கப் படவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் அவயங்களை செயலிழக்கச் செய்யும். அந்த நோய் இந்தியாவில் பொதுவாக யாருக்கும் வருவதும் குறைவு. அதனால் நோய் பற்றிய ஞானமும் குறைவு. ஆனால் என் அப்பா மிக மிக பாசிடிவ் பெர்சன். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்தவர், இதைக் கண்டும் அசரவில்லை. பார்கின்சன்ஸ் நோயுடன் இருபது வருடம் போராட்ட வாழ்வு வாழ்ந்தார். நான் அவரைப் பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். படிப்படியாக அவர் தன் நிலையை உயர்த்திக் கொண்டு மனிதன் தெய்வ நிலையை, வாழும் போதே அடைய முடியும் என்னும் பாடத்தை எங்களுக்கு உணர்த்திச் சென்றார்.
இத்தனை நாள் வியாபாரத்தில் என் அப்பாவிற்கு வலது கையாக இருந்த என் அம்மா உண்மையில் உமையொரு பாகனாக மாறினாள். எத்தனையோ வருடங்கள் அம்மா தான் முழுக்க முழுக்கப் பார்த்துக் கொள்ளும் நிலையில் என் தந்தை இருந்தார். உணவு ஊட்டுவதில் இருந்து குளிப்பாட்டி விடுவது வரை எல்லாமே என் தாய் தான். உதவிக்கு ஆள் இருந்தும் பலப் பல விஷயங்கள் என் அம்மா ஒருவரால் தான் என் தந்தைக்கு சரியாகச் செய்ய முடியும். அதை இன்முகத்துடன் செய்தார் என் தாய். காந்தாரி திருதிராஷ்டிரனுக்குப் பார்வை இல்லை என்று தானும் தன கண்ணைக் கட்டிக் கொண்டாள், ஆனால் என் தாய் ஒரு படி மேல். என் தந்தைக்குக் கண்ணாகவே இருந்தாள்.
என் தந்தைக்கு என் தாய் மேல் மிகுந்த காதல், அன்பு, பாசம். பெரிய இடத்துப் பெண் தன்னை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டது அவருக்கு மிகப் பெரிய பெருமை. அவர்களின் திருமணத்தில் K.B.சுந்தராம்பாள் கச்சேரியும், கொத்தமங்கலம் சுப்புவின் கச்சேரியும் நடைபெற்றது. தெரு அடைத்துப் பந்தல் போட்டு பாண்டிச்சேரியில் என் பெற்றோர் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதனால் என் தந்தை என் அம்மாவை மனத்தில் ராணியைப் போல தான் வைத்திருந்தார். மரகதம் என்ற என் அம்மாவின் பெயரை திருமணத்திற்குப் பின் அவர் மேகி என்று தான் சுருக்கி ஸ்டைலிஷ் ஆக அழைப்பார். அதனால் இன்றும் எங்கள் வீட்டுக் குழந்தைகள் என் அம்மாவை மேகி பாட்டி என்று தான் அழைக்கின்றனர் 🙂
என் அம்மாவிற்கு நிறைய படிக்கப் பிடிக்கும், உலக விஷயங்கள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாடு, எந்த டாபிக் பற்றியும் அறிவுசார்ந்து பேச முடியும். அன்பே நிறைந்த என் அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தர எல்லாம் வல்ல இறைவனையும் என் தந்தையையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்காவில்

சிங்கப்பூரில்

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.
என் வலைதளத்தில் இது என் நூறாவது இடுகை. இதை என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன் 🙂