ராஜ் கிரணுக்கு அவார்ட் வாங்கிக் கொடுக்கப் போகும் படம் இது. அற்புதமான நடிப்பு, விமலுக்குத் தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். துளி பாசாங்கு இல்லை. துளி ஓவர் அக்டிங் இல்லை. நான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பாராட்டி மகிழ்வேன்.
நல்ல திரைக் கதை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் முதல் முறை நகரத்துக்கு வந்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கிராமத்து வாழ்க்கை வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறார். விமலுக்கும் ராஜ் கிரணுக்கும் இருக்கும் பாசப் பினைப்புக்கானக் காரணம் முன்கதை சுருக்கமாக கனகச்சிதம். பல படங்களில் அஸ்திவாரம் வீக்காகவும் பில்டிங் ஸ்டிராங்காகவும் கட்டி நாம் பார்க்கும் இரண்டரை மணி நேரத்திலேயே கட்டிடம் சரிந்து விழுந்து விடுகிறது.
ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு கனமான கதை. துணுக்குத் தோரணங்களும் நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை ஜோக்குகளும் இல்லாமல் அதே சமயம் தாத்தாவின் செயல்களிலேயே ஒரு நகைச்சுவையை இழையோட வைத்துக் கதையை தந்திருக்கிறார் இயக்கி/எழுத்து வடிவும் கொடுத்திருக்கும் N.ராகவன்.
இப்பொழுது வரும் பலத் திரைப்படங்களில் முதல் பாதி நன்றாக் இருந்தும் பின் பாதி காலை வாரி விட்டுவிடுகிறது. உண்மையிலேயே இடைவெளிக்குப் பிறகு பக் பக்கென்று பயந்து கொண்டிருந்தேன். இரண்டாவது பாதியில் சொதப்பிவிடுவார்களோ என்று. சொதப்பவில்லை. பின் பாதியும் நன்றே. ஆனால் பின் பாதி மனத்தை நெகிழவைக்கிறது. அரங்கை விட்டு வெளிவரும்போது ஒருவர் நான் எதுக்குமே அழமாட்டேன், இந்தப் படத்தில் அழுதுவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டு வந்ததைக் கேட்டேன்.
படத்தின் முடிவு நமக்கு வருத்தத்தைத் தந்தாலும் அது சரியான முடிவு. இதைத் தவிர இரண்டு வேறு மாதிரி முடித்திருக்கலாம். ஒன்று happy ending. எல்லாரும் மகிழ்ச்சியாக வீட்டுக்குச் செல்லலாம். இன்னொன்று எப்பொழுதும் சினிமாவில் வைக்கப் படும் ஒரு சோக முடிவு. இவ்விரண்டு முடிவுகளும் அல்லாமல் யதார்த்தமான மூன்றாவதாக ஒரு முடிவைக் கொடுத்த இயக்குநருக்கு ஒரு பெரிய பாராட்டு.
விமல் லட்சுமி மேனன் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது. முத்தக் காட்சி ஒன்னும் கிக்காக இல்லை. சாதா தான். fy fy fy பாடல் மாதிரி இதிலும் ஒரு பாடல். ஆனால் தரத்தில் அந்தப் பாடலுக்குக் கிட்டக் கூட வரவில்லை இதில் உள்ள பாடல். காமிரா இயக்கம் கண்ணைக் கவருகிறது. அதுவும் சென்னை மெரீனா பீச் வரும் காட்சிகளில் காமிராமேன் மாசானியின் கைவண்ணம் அழகு. தேவாவின் Editingம் நேர்த்தி.
இசை ரகுநந்தன். பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை நன்று.
திருப்பதி பிரதர்ஸ் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம், நல்ல ஒரு படத்தைத் தயாரித்துக் கொடுத்ததற்கு! எப்பொழுதுமே கதை இருந்தால் படம் வெற்றி பெரும். இதில் கதை உள்ளது, வெற்றிபெறுமா என்பது மக்கள் கையில் உள்ளது.
Jun 08, 2014 @ 15:28:52
நல்ல விமர்சனம்மா! ராஜ்கிரண், எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரின் ஆரம்ப கால படங்களின் ஒவர் செண்டிமெண்டினால் “படுத்தி” எடுத்தாலும் “நந்தா”,”தவமாய் தவமிருந்து”,”பாண்டவர் பூமி”,”சண்டைக்கோழி” படஙகளில் மிளிர்ந்தார். அவருக்காக விமலையெல்லாம் சகித்துக் கொண்டு பார்க்கணும் :).
Jun 08, 2014 @ 15:42:16
Excellent Review, let’s hope our people make this movie a success.
Jun 09, 2014 @ 04:11:43
ப்பா..வர வர ஒரு அக்மார்க் சினிமா விமர்சகராகவே மாறி விட்டீர்கள்..இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலைப் பார்த்துவிட்டே படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது..அதில் அவர்கள் ஏமாற்றம் செய்யாமலே கொடுத்திருக்கிறார்கள் என்று படித்துப் புரிந்து கொண்டேன்..படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுத்தி விட்டீர்கள் 🙂
Jun 09, 2014 @ 04:32:41
படம் நல்லாருக்குன்னு சொல்றீங்க. இப்பப் போக முடியாது. ஒரிஜினல் டிவிடி வந்தப்புறம் பாத்துக்கலாம். ஆனா சோக முடிவுன்னு வேற சொல்றீங்களே. அதான் யோசனையா இருக்குது.
Jun 09, 2014 @ 06:39:34
அருமையான விமர்சனம் அம்மா. இரண்டாம் பாதி பாடல்களில் இன்னும் சிறத்தை எடுத்திருக்கலாம்.
-ஆந்தைகண்ணன்
Jun 09, 2014 @ 06:57:40
அருமையான விமர்சனம்.பாடல்,இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாம்.வேறு எந்த படமும் இல்லாததலால் மஞ்சப்பை நிறைந்து விடும்.
-ஆந்தைகண்ணன்