மன்னு புகழ் கோசலை தன்… இராகவன் தாலாட்டு.

kulasekara perumals aradhanai murthy

குலசேகர ஆழ்வார் ஆராதனை மூர்த்தி

சில நாட்களாக குலசேகர ஆழ்வார் அருளிய இராகவனைத் தாலாட்டும் பாடல்களைத் திரும்பத் திரும்பப் படிக்க மனம் ஏங்கியது. அந்தப் பாடல்களில் தெரிந்த அபரீதமான அன்பு என்னை மெய் மறக்க செய்தது. Love என்று சிம்பிளாக ஆங்கிலத்தில் சொல்லப்படும் அன்பு பல வகைப் படும். காதலன் காதலியிடம் காட்டுவது, கணவன் மனைவியிடம் காட்டுவது, பெற்றோர் மக்களிடம், மக்கள் பெற்றோரிடம், நண்பர்களுக்கிடையே, இப்படி எத்தனையோ விதமான அன்புகள். அன்பின் ஆழத்தைப் பொருத்தும் நம் பொருளாதார நிலையை பொருத்தும் நாம் அன்பை வெளிப்படுத்தும் விதங்களும் மாறுபடும்.

அதில் மிகவும் எளிமையானதும் தூய்மையானதும் ஒரு குழந்தையிடம் நாம் காட்டும் அன்பே ஆகும். குழந்தைக்கு நம்மிடம் இருந்து எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. நமக்கும் குழந்தையிடம் இருந்து பிரதி பலனாக எதையும் பெற முடியாது. தன்னலமற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடே குழந்தைகளிடம் நாம் காட்டும் அன்பு.

குலசேகர ஆழ்வாரோ பெருமாளிடம், முக்கியமாக இராமனிடம் அதிகமான பக்தி வைத்திருந்தவர். இராம கதையைக் கேட்கும் பொழுதே அது என்றோ நடந்தது என்பாதை கூட உணராமல் யுத்தக் காண்டத்தின் போது இராவணனுக்கு எதிராக போர் தொடுக்க தன் படையுடன் கிளம்பி கடலில் இறங்கி விட்டார். அந்த அளவு இராம பக்தி. அப்படிப்பட்டவர் தாயாகி இராமனை தாலாட்டிப் பாடும் பாடல்களின் சுவையை சொல்லவும் வேண்டுமோ?

kulasekara azhvar

குலசேகர ஆழ்வார்

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

இந்தப் பாடலைப் படித்தாலே போதும், பொருள் புரிந்துவிடும். அவ்வளவு எளிமையான சொற்கள். புகழ் மிக்க கௌசல்யாவின் மணி வயிற்றில் உதித்தவனே, இராவணனின் முடியைத் தரையில் சாய்த்தவனே, அழகிய மதிள்கள் சூழ்ந்திருக்கும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே, என் இனிய அமுதே, இராகவனே, தாலேலோ! இப்படி அருமையாகத் தாலாட்டுப் பாடுகிறார் குலசேகர ஆழ்வார்.
புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!
தாமரை மலர் மேல் பிரம்மன் உருவில் இருந்து இந்த உலகத்தைப் படைத்தவனே, மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே, பார்த்தவர்கள் எல்லாரும் மனம் மயங்கும் பேரழகைக் கொண்டவனே, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கண்மணியே, இராகவனே தாலேலோ.
கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ
பரிமளம் நிறைந்த கருங்கூந்தலையுடைய கோசலையின் குலத்தில் உதித்தவனே, பெரும் புகழ் கொண்ட சனகனின் மருமகனே, தசரதனின் புதல்வனே, கங்கையை விட சிறந்த தீர்த்தங்களை உடைய திருக்கண்ணபுரத்தில் வசிக்கும் என் கண்மணியே, இராகவா, தாலேலோ. இந்தப் பாடலில் எனக்கு ரொம்பப் பிடித்தது இராமனை தாசரதீ என்று குலசேகர ஆழ்வார் அழைப்பதே. கோசலையின் குலத்தில் உதித்த தாசரதீ. குலசேகர ஆழ்வாரும் அரசன், தன்னைப் போன்று அரச குலத்தில் உதித்த தசரதன் மைந்தன் என்ற பெருமையாக சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.
smiling rama
தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
தாமரை மேல் பிரமனைப் படைத்தவனே, தசரதனின் பெருமை மிக்க குழந்தையே, மிதிலை இளவரசியின் மணவாளனே! வண்டு கூட்டங்கள் பூக்களில் மது உண்டு இசை பாடும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமணியே, வலக்கையில் மிகப் பெரிய வில்லினை ஏந்தியவா, இராகவனே, தாலேலோ! இந்தப் பாடலில் உள்ள கவி நயம் மனத்தை உருக்குகிறது. இராகவனை போற்றி போற்றி பாடுகின்ற இப்பாடலைக் கேட்டு நம் உள்ளம் கொள்ளைப் போவது திண்ணம்.
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!
நாட்டை ஆளும் உரிமையையும், அதோடு அடர்ந்த செல்வத்தையும் பரதனுக்கு வழங்கி, தீராத அன்பை உடைய தம்பி இலக்குவனோடு அருமையானக் காட்டை அடைந்தவனே, அழகான மலைப் போன்ற மார்பை உடையவனே, திருக்கண்ணபுரத்தஅரசே, மாலையை அணிந்த நீண்ட முடியைக் கொண்ட என் தாசரதீயே தாலேலோ. இதை எழுதும்போதே என் கண்களில் நீர் சுரக்கின்றது. என்ன ஒரு description! கொடைத் தன்மையும், அழகும், அன்பும் நிறைந்த என் இராகவா தாலேலோ என்கிறார் குலசேகராழ்வார்.
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!
உற்றார் உறவினர் எல்லாரும் பின் தொடர, பழமையானக் காட்டை அடைந்தவனே, வேறு கதி இல்லாதவர்களுக்கு அரு மருந்து போன்றவனே, அயோத்தி நகருக்கு அரசனே, கற்றவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்தில் வசிக்கும் என் கண்ணின் மணியே, சித்தியின் சொல்லை சிரமேற்கொண்ட சீராமா தாலேலோ.
Bhadrachalam1
ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!
ஆலிலையின் மேல் சின்னக் கண்ணனாய் இருந்து பின்பு பிரளயக் காலத்தில் உலகம் அனைத்தையும் உண்டவனே, வாலியைக் கொன்று கிஷ்கிந்தையை சுக்ரீவனுக்குக் கொடுத்தவனே, காலின் மணி நதியின் கரையின் மேல் அலை அடிக்கும் படி செய்யும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கண்ணின் மணியே, ஆலி நகரின் அதிபதியே, அயோத்தி மன்னனே, தாலேலோ!
மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
பாறைகளினால் அணைக்கட்டி இலங்கையை அழித்தவனே, கூர்மாவதாரத்தில் அலைகடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்தவனே, கலையில் வல்லவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்தில் வாழும் கண்மணியே, வலக்கையில் வில் வைத்திருப்பவனே, சேவகனே, சீராமா, தாலேலோ.
தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!
சுருள் முடியை உடைய தயரதன் குலத்தில் உதித்தக் குழந்தையே, வளைந்த வில்லை வைத்து பெரிய மதிள் சுவரை உடைய இலங்கையை வென்றவனே, கழுநீர் பூக்கள் எங்கும் மலரும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கண்மணியே, பக்தர்களுக்கு அருள் புரிபவனே, இராகவனே, தாலேலோ.
ramasita1
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
தேவரையும், அசுரர்களையும், திசைகளையும் படைத்தவனே, எல்லோரும் வந்து உன் திருவடி வணங்க அரங்கத்தில் துயில்கின்றவனே, காவிரி நதி பாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் மாணிக்கமே, நெடிய, சிறந்த வில்லை வலக்கையில் உடையவனே, இராகவனே, தாலேலோ.
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!
எதிரிகளால் வெல்ல முடியாத பெரிய மதிள்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் காகுத்தன் திருவடி மேல் தாலேலோ என்று சொன்ன தமிழ்மாலையை, பகைவரைக் கொல்லத் துடிக்கும் வேலை வலக்கையில் ஏந்திய வெண்கொற்றக் குடையைக் கொண்ட குலசேகர மன்னன் சொன்ன இந்த வேதத்துக்கு ஒப்பான பத்து பாடல்களிலும் வல்லவர்கள் இறைவனுடன் என்றும் நட்பு கொண்ட பக்தர்கள் ஆவார்கள்!
kodanda raman
இந்தப் பாசுரங்களைக் கேட்டு மகிழ்ந்துறங்கும் இராகவன் தான் எப்பேர்ப்பட்டவன். இந்த மாதிரி ஒரு பக்தனை அடைந்த இராகவனின் பெருமையை நம்மால் சொல்லவும் முடியுமோ?
பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடலின் மூலம் தான் இந்தப் பாடல்களைப் படிக்க ஆவல் கொண்டேன். அதன் சுட்டி இங்கே.
நிச்சயம் மெய்மறந்து கேட்பீர்கள்.
                      ஆழ்வார் திருவடிகளே சரணம்.
திருக்கண்ணபுரம்

திருக்கண்ணபுரம்

Thanks to this blog post which  I referred to http://kannansongs.blogspot.in/2007/09/68.html
Advertisements

27 Comments (+add yours?)

 1. Anonymous
  Jun 20, 2014 @ 17:07:10

  அருமை , உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் , இப்படிக்கு தாதா ….

  Reply

 2. உமா க்ரிஷ் (@umakrishh)
  Jun 20, 2014 @ 17:19:20

  இது போன்ற பாடல்கள் அறிமுகத்துக்கு நன்றி..அதுவும் இவ்வளவு பொறுமையான விளக்கம் எந்த அளவுக்கு அதை ஆழ்ந்து படித்திருப்பீர்கள் என உணர்த்துகிறது…உங்கள் தேடல் தொடரட்டும் :)அப்பத்தான் நெல்லுக்குப் பாய்வது எனைப் போன்ற புல்லுக்கும் பாயும்:)

  Reply

 3. UKG (@chinnapiyan)
  Jun 20, 2014 @ 17:30:08

  ஆஹா தமிழில் தான் எத்தனை பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. அள்ள அள்ள குறையாதே. இதில் முத்து குளித்து ஆனந்தத்தில் மற்றவர்களையும் திளைக்க செய்த அநேகரில் நீங்களும் ஒருவர்.
  மிக அருமையாக விளக்கவுரை சொல்லியுள்ளீர்கள்.

  இன்றைய இளைய தலைமுறை இதையெல்லாம் அனுபவிக்காமல் திசை மாறி போய்க்கொண்டிருக்கின்றனர் என்பதை நினைக்கும்போது மனம் வேதனை அடைகிறது. ஆனால் நிச்சயம் ஒருநாள் நீண்ட உழைப்புக்கு பின் ஈசி சேரில் உட்கார்ந்து ஒய்வு எடுக்கும் காலத்தில் பருகி ஆனந்தித்து நம்மைப்போல மருகுவார்கள்.

  அவ்வகையில் உங்கள் காலத்திற்கு பின்னே பலவருடங்கள் கழித்து தங்களின் வாரிசுகள் படித்து சுவைக்கவும், பாட்டியின் பெருமையை போற்றிடவும், நீங்கள் அவர்களுக்கு விட்டு செல்லும் சொத்து இது.

  நன்றி. வாழ்க வளர்க 🙂

  Reply

  • amas32
   Jun 21, 2014 @ 02:08:47

   ரொம்ப நன்றி, உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு டானிக் போல 🙂

   Reply

 4. veeru
  Jun 21, 2014 @ 01:26:28

  பக்தி ரசம் சொட்டும் பதிவு. குலசேகர ஆழ்வாரின் பாசுரங்கள் மிக எளிமையாகவும் ஒரு சாதாரண பக்தன் எப்படி இறைவனைத் துதிப்பானோ (அதாவது, மீண்டும் மீண்டும் தனக்குப் பிடித்த மாதிரியானவாறு இறைவனை அழைப்பது) அது போலவே இருக்கிறது . நான் இலக்கியம் பண்ணப் போகிறேன் என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல், வெறும் இராமகாதலை மட்டுமே வெளிப்படுத்தும் விதத்தில் மிக இனிமயாக , பெருமாளைத் தரிசித்த நொடியிலேயே, பரவசப் பெருக்கெடுத்து பாசுரங்களை பாமழையென ஒரே பாட்டமாகப் பெய்துவிட்டார் என்று நினைக்கிறேன் . கிட்டத்தட்ட இராமாயணத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் அழகான ஒன் லைனராகச் சொல்லி விட்டார்.

  நான் பார்த்ததிலேயே ஶ்ரீரங்கத்திற்கு அடுத்து மிகப்பெரிய பெருமாள் கோவில் திருக்கண்ணபுரம் கோயில். அங்கிருக்கும் திருக்குளத்தில் ஒரு ஊரே வசிக்கலாம். அங்கு வீற்றிருக்கும் நீலமேகப் பெருமாள் கொள்ளை அழகு. சந்நிதியில் இருந்து வெளியே வரவே மனமிருக்காது . நாங்கள் போனபோது விஷேஷம் ஏதும் இல்லையென்பதால் கோயிலில் எங்களைத் தவிர ஆளேயில்லை . மிக மிகத் திருப்தியான தரிசனம் . மீண்டும் திருக்கண்ணபுரம் கோயிலையும் பெருமாளையும் உங்கள் பதிவின் மூலம் என் மனக் கண் முன் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி .

  ஒரு கேள்வி . ஆலி நகர் என்றால் என்ன? எங்கிருக்கிறது?

  @vforveeru

  Reply

 5. amas32
  Jun 21, 2014 @ 02:12:45

  ஆலி நகர் எங்கிருக்கிறது என்று KRSஐத் தான் கேட்கணும்.
  விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி வீரு. திருக்கண்ணபுரம் இன்னும் போய் சேவித்ததில்லை. உங்கள் விவரணையில் கண்டு களித்தேன் 🙂

  Reply

 6. Anonymous
  Jun 21, 2014 @ 02:22:44

  அருமையான பதிவு…

  Reply

 7. vasanthigopalan (@vasanthigopalan)
  Jun 21, 2014 @ 02:58:11

  ஆஹா!அருமையான பதிவு.நமக்கு பிடித்த சப்ஜெக்டா இருந்தா மனது முழுசாக ஈடுபடுகிறது.ராமருக்கு பெருமாள் திருமொழியும்,கண்ணனுக்கு முகுந்தமாலையும் பாடினவர் குலசேகரப்பெருமாள்.விளக்கங்கள் நன்றாக உள்ளது.நன்றி பதிவிற்கு.

  Reply

 8. அன்புடன் பாலா
  Jun 21, 2014 @ 08:00:47

  அருமையான இடுகை, தொடரட்டும் ஆழ்வார் சேவை 🙂

  குலசேகராழ்வருக்கு “பெருமாள்” என்று திருநாமம் உண்டு. பெருமாள் திருமொழியின் அழகுக்குக் காரணம் 2,
  ஒன்று அதன் எளிமையும், அதில் வெளிப்படும் ஒருவகை பக்திப்பேருவகையும்…
  மற்றது அதில் “மனத்துக்கினியான்” (மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய் — திருப்பாவை) ஸ்ரீராமபிரானுக்கு தாலாட்டாக அமைந்த பதிகமும், குட்டிக்கண்ணன் குறித்த பதிகமும்!

  ஏகபத்தினிவிரதன் என்ற ஒரு காரணத்துக்காகவே சீதாராமன் மனத்துக்கினியவன் ஆகிறான் 🙂

  குலசேகரப்பெருமாள் கண்ணனைப் பற்றி, ( கண்ணனின் பால லீலைகளைக் காண யசோதைக்குக் கிட்டிய கொடுப்பினை தனக்கு வாய்க்கவில்லையே என்று தேவகி சோகத்தில் புலம்புவது போல) ஒரு மிக அற்புதமான பாசுரத்தை அருளியுள்ளார்:

  “”குழகனே! என் தன் கோமளப் பிள்ளாய்!
  கோவிந்தா! என் குடங்கையில் மன்னி,

  ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல்
  ஒரு கையால் ஒரு முலை-முகம் நெருடா,

  மழலை மென்னகை இடையிடை அருளா
  வாயிலே முலை இருக்க,என் முகத்தே

  எழில் கொள் நின் திருக்கண்ணிணை நோக்கந்
  தன்னையும் இழந்தேன்,இழந்தேனே!”

  கண்ணனுக்குப் பாலூட்டிய ஒரு காரணத்துக்காகவே யசோதை, மிகவும் போற்றப்படும் வைணவ அடியார்களையும், அறிவார்ந்த ஆச்சார்யர்களயும் கூட விஞ்சிய புண்ணியாத்மா ஆகிவிடுகிறாள்!

  இவ்வாழ்வார் எழுதிய கீழுள்ள பாடலினால், விஷ்ணு ஆலயங்களின் உள்வாயிற்படி, “குலசேகரன் படி” என்றே இன்றும் அழைக்கப்படுகிறது!

  செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
  நெடியானே வேங்கடவா* நின்கோயிலின் வாசல்*
  அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
  படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே

  இப்பெருமாள் ஆழ்வார் போற்றும், அன்பின் சிகரமான ஸ்ரீராமனே, இராவணனுடான பெரும்போர் முடியும் தறுவாயில், பெருங் கோபத்தில் இருந்ததாக வைணவப்பெருந்தகைகள் உரைப்பர்! ராமபிரானின் சினத்திற்கு அஞ்சி இராவண சேனை நடுநடுங்கும் நோக்கு வெளிப்படும் வகையில் அமைந்த, திருமங்கை மன்னன் அருளிய பெரிய திருமொழிப் பதிகமுண்டு (10.2.1 – 10.2.10) அதில் ஒரு பாசுரம்:

  புரங்கள் மூன்றுமோர் மாத்திரைபோதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
  சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
  இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
  குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல்! கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.

  http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=2452

  கீழே சுட்டியிருக்கும் இரு பாசுரங்களும், ஆழ்வாரின் பேரன்பால் விளைந்த சொல்லாட்சிக்கு எடுத்துகாட்டுகள்:

  பொய்சிலைக் குரலேற்று ஒருத்தமிறுத்து* போரர வீர்த்தகோன்*
  செய்சிலைச்சுடர் சூழொளித்* திண்ணமாமதிள் தென்னரங்கனாம்*
  மெய்சிலைக் கரு மேகமொன்று* தம் நெஞ்சில் நின்று திகழப்போய்*
  மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என்மனம் மெய் சிலிர்க்குமே!

  ஆதி அந்தம் அனந்த அற்புதமான* வானவர் தம்பிரான்*
  பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உய்ந்திட*
  தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
  காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல்செய்யும் என் நெஞ்சமே!

  இதற்கு மேல் எழுதினால், என் பின்னூட்டமே ஒரு இடுகையாகி விடும் அபாயம் உள்ளதால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தொடர்கிறேன் 🙂

  Reply

 9. amas32
  Jun 21, 2014 @ 08:26:23

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் பின்னூட்டம் எனக்கு ஆழ்வாரே ஆசிர்வதித்ததுப் போல உள்ளது. நன்றி என்று சொல்வது வெறும் சொற்களாக இருக்கும். அதற்கும் மேலே 🙂 நிறைய படிக்கணும், புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஆழ்வார் பெருமாள் அருள் புரிய வேண்டுகிறேன்.

  Reply

 10. மழை!!
  Jun 23, 2014 @ 06:34:01

  அருமையான பாடல்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி அம்மா :)) நல்ல முன்னுரை.. 🙂

  Reply

 11. GiRa ஜிரா
  Jun 23, 2014 @ 09:11:12

  பதிவைப் பாராட்டுறதா அதுக்கு வந்த பின்னூட்டங்களைப் பாராட்டுறதான்னு தெரியலையே.

  தமிழ்ப் பாட்டுகளை எடுத்து விளக்கம் எழுதுறதுங்குறது ரொம்பக் கடினம்னு ரொம்பப் பேரு நெனைக்கிறாங்க. அந்த எண்ணத்தை ஒடச்சி நீங்க எழுதுற இந்தப் பாசுரப் பதிவுகள் பாராட்டுக்குரியவை.

  பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரமாண்டு வாழியவே!

  Reply

 12. amas32
  Jun 23, 2014 @ 12:20:10

  உண்மை தான் ஜிரா, நன்றி 🙂

  Reply

 13. Kannabiran Ravi Shankar (KRS)
  Jun 25, 2014 @ 02:11:28

  “சுயநலமே உருவான ஓர் ஆழ்வார்”-பாட்டை இட்டு இயம்பியமைக்கு நன்றி-ம்மா!:)

  சற்றுக் காலந் தாழ்த்தியே இங்கு வந்தேன்; இந்த “ஈரத் தமிழ்”, பல நேரங்களில் என்னைப் பாடாய்ப் படுத்தி விடும்.. அதான்!

  பொதுவா, இந்தியச் சமயவியல் (குறிப்பா வைணவம்):
  “My, நான், என்னுடைய” போன்ற சொற்களைத் தவிர்க்கச் சொல்லுவாங்க; அவை “சுயநலச்” சொற்கள்:)

  “நான்” அல்ல! = “அடியேன்” என்பதே வழக்கு!
  ஆனால் இந்த ஆழ்வாரைப் பாருங்க; “My My” என்றே பாடுகிறார்;

  * “என்னுடைய” இன்னமுதே! இராகவனே! தாலேலோ
  * “எங்கள்” குலத்து இன்னமுதே! இராகவனே! தாலேலோ

  என்னுடைய இராகவனே = My Ragava, My Ragava
  அதான் “சுயநலமே உருவான ஓர் ஆழ்வார்”- ன்னு விளையாட்டுக்குக் குறிப்பிட்டேன்:)
  தவறாகக் கொள்ள வேணாம்; மன்னிக்க!
  —–

  காதல், அன்பு, பக்தி
  =இந்த மூன்றில் மட்டும்.. Possesiveness/ “தன்னலம்” அழகாத் தான் இருக்கு இல்லையா?:)
  =என் எம்பெருமான், என் முருகன்.. என்று.. ஓர் “உறவு” தேவைப்படுது போலும்!

  எல்லாம் அற, “என்னை இழந்த நலம்”
  சொல்லாய் முருகா, சுர பூபதியே
  -ன்னு பாடிய அருணகிரி கூட… அந்த “My” விட முடியல:)

  “எனது” முன் ஓடி, வரவேணும் – என் முருகா
  “எனது” முன் ஓடி, வரவேணும்!

  Reply

  • amas32
   Jun 25, 2014 @ 02:28:01

   நானும் அந்த விஷயத்தில் சுயநலம் உள்ளவள் தான் என்று நினைக்கிறேன் 🙂 என் தாத்தா நான் சிறுமியாக இருக்கும்பொழுது என்னிடம், இறைவனை தரிசிப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் சுயநலமாக இருப்பது தவறில்லை என்று சொன்னதால் அவர் வாக்கை பெரியோர் வாக்காக எண்ணி நான் ஏதும் தவறாகச் செய்யவில்லை என்றே இருக்கிறேன் 🙂

   Reply

 14. Kannabiran Ravi Shankar (KRS)
  Jun 25, 2014 @ 12:49:11

  //கன்னி நன் மா மதில்//

  மதில் மேல கன்னிகள் இருப்பாங்களோ? Sight அடிக்க வசதியாக?:))
  ஆழ்வார் என்ன சொல்லுறாரு-ம்மா? #Doubt

  பாட்டில் வரும் சில தமிழ்ச் சொல்லாட்சிகளை, இங்கு எடுத்து வைக்கிறேன்.. பாத்துட்டுச் சொல்லுங்க

  *கொங்கு மலி கருங் குழலாள்
  *அற்றவர்க்கு அரு மருந்தே

  *கன்னி நன் மா மதில் புடை சூழ்
  *காலின் மணி கரை அலைக்கும்

  *கலை வலவர் சிலை வலவர்
  *கொல் நவிலும் வேல் வலவன்
  *ஏவரி வெஞ் சிலை வலவா

  ல, ள, ழ Practice u want?
  வேகமா வாய் விட்டுப் படிங்க பார்ப்போம்:))

  தளை அவிழும் நறுங் குஞ்சி
  வளையவொரு சிலையதனால்
  களை கழுநீர் மருங்கு அலரும்
  இளையவர்க்கு அருளுடையாய்

  Reply

  • Kannabiran Ravi Shankar (KRS)
   Jun 30, 2014 @ 10:57:41

   கன்னி = முதல்/ ஆதி என்ற பொருளும் உண்டு:)
   *கன்னிப் பேச்சு
   *கன்னி முயற்சி
   etc etc..

   கன்னி நன் மா மதில் = முதல் மதில், நகரின் முகப்பு மதில்!
   அழிவில்லாத, வலிமையான மதில், கண்ணபுரத்துக்கு!

   அப்படியென்ன அழிவில்லாத?
   சில காலத்துக்குப் பின் மதிலும் நகரும் அழிஞ்சிறாதா?

   திரு(அவள்) + கண்ணன்(அவன்) புரம் = திருக்கண்ணபுரம்!
   இந்த ஊருக்கு
   = “ஸ்ரீமத் அஷ்டாக்ஷர – மகா மந்திர ஸித்தி – க்ஷேத்திரம்” -ன்னு பேரு!

   திருமங்கை எனும் கள்வர் குல மன்னன்/ ஆழ்வாருக்கு..
   “ஓம் நமோ நாராயணாய”
   -என்னும் திரு எட்டெழுத்தின் பொருளைச் சொல்லிய ஊர்!
   அதனால், “வலிமை” பெற்ற ஊர்..

   வலம் தரும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
   நலம் தரும் சொல்லை
   நான் கண்டு கொண்டேன்… “****” என்னும் நாமம்!

   இந்த ஊர் வெண் பொங்கல், ரொம்ப Famous!:)
   =முனியோதரையன் பொங்கல்

   நடை சாத்தி விட்டதால், தான் கொண்டு வந்த பொங்கலை, இறைவனுக்குத் தர முடியாமல் போக..
   மனதாலேயே, உணவைப், பெருமாளுக்கு நிவேதனம் செய்த அன்பன்..
   மனப் பொங்கலுக்கு அத்துணை வாசனை!
   அவன் நினைவாக இன்றும் = முனியோதரையன் பொங்கல்;

   பெரிய குளக்கரையில், காலை நீருக்குள் ஆட்டிக் கொண்டே, Jollyஆ உக்காந்துக்கிட்டே சாப்பிடலாம்:)

   Reply

 15. amas32
  Jun 30, 2014 @ 11:05:42

  நன்றி KRS 🙂 எவ்வளவு சிறப்பான தகவல்கள் தருகின்றீர்கள். இன்னுமொரு நூற்றாண்டிரும்.

  Reply

 16. Kannabiran Ravi Shankar (KRS)
  Jun 30, 2014 @ 11:43:19

  இன்னொன்னும் கவனிச்சீங்களா-ம்மா?
  //தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!//

  இறைவனுக்குத் “தேவன்-அசுரன்” -ன்னு வேறுபாடு கிடையாது!
  ஆழ்வார்கள், அதைப் பல இடங்களில் சொல்லி, “வெறுப்புணர்ச்சி” நீக்குவார்கள்;
  ஏதோ, தேவர்கள் -ன்னா ரொம்ப உத்தமர்கள் போலவும்
  அசுரர்கள் -ன்னா, அயோக்யர்கள் போலவும் ஒரு பிம்பம்:(

  தேவர்கள் தலைவன் இந்திரன் “குணத்தை” நாம அறிய மாட்டாமோ என்ன?:(
  ஆனாலும் பதவி! யாக/ஹோமங்களுக்கு பூர்ணம் தரும் பதவி அவன் கிட்ட இருப்பதால், முனிவர்கள்/ரிஷிகள், அவனைப் பகைத்துக் கொள்வதில்லை:))

  ஆனால், ஆழ்வார்கள்= வேதம் வழி வந்தவர்கள் அல்லர்; தமிழ் வழி வந்தவர்கள்!
  அவர்களுக்கு ஹோம/பரிகாரங்களில் நம்பிக்கையும் இல்லை! இறைத் தொண்டர்களின் பாத மண், தன் மேல் பட்டாலே, பாவம் போய்விடும் என்று= தொண்டர் அடிப் பொடி ஆன ஆழ்வார்களும் உண்டு!

  அதனால் துணிந்து, அசுரர்களின் நற்குணங்களையும் பாடுவார்கள்!
  தொண்டர் குலத்தின் தலைவனாய்
  = அந்தணனை வைக்காது, அசுரன் (பிரகலாதனை) வைப்பார்கள்!

  ஆண்டாள், இராவணனை= தென்னிலங்கைக் கோமான் (Gentleman) என்பாள்:)

  குணத்தைப் பொருத்தே தேவன்/அசுரன்;
  அதனால் தான், “பிறப்பால் தேவனே” ஆனாலும்.. கீழ்த்தரச் செயல் செய்த இந்திரன் மகன் ஜெயந்தன் = “காகாசுரன்” என்றும் பாடினார்கள்;

  அந்த நெறியில் தான்.. இந்தப் பாசுரமும்!
  “யாவரும்” வந்து அடி வணங்க, அரங்க நகர் துயின்றவனே!
  //தேவரையும் அசுரரையும்// நீ தான் படைத்தவனே!

  Reply

  • Kannabiran Ravi Shankar (KRS)
   Jun 30, 2014 @ 12:02:59

   தமிழில், “மதம்” கலந்து விட்டால்
   பல பொய்களும் = உண்மை ஆகி விடும்:))

   “பக்தி” என்கிற பேரில், we succumb to adoring violence/falsehood:(
   ஆழ்வார்/ அருணகிரி கூட, அதற்கு விதிவிலக்கு அல்ல!:(
   பாருங்க பாடுறாரு:
   “வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!”

   வேற வழியில்லை.. மதக் கட்டமைப்பு அது மாதிரி! மீறினா, ஒதுக்கி வைக்கப்படுவர்:((

   உண்மை தான்! வாலி = “கொலை” தான்!
   அதற்கான “கர்ம பலனை”, இராமனே ஏத்துக்கிட்டான்; He was killed in the same “hidden” way in the next avatar
   ஆனா, அதை ஒரு சம்பவமாகப்/ படிப்பினையாகப் பார்க்காமல்,
   “பக்தி”-ங்கிற பேரில், அதையே “புகழ்ந்து புகழ்ந்து” பாடினா எப்படி?

   அசுரனை “அழிச்சவனே, அழிச்சவனே” -ன்னு பாடுவதா, மனத்தில் இறை அன்பு வளர்க்கும்?
   “அசுரர் குடி கெடுத்த ஐயா வருக”-ன்னு கவசத்தில் வரும்! எனக்குத் தான் அப்படிச் சொல்ல வாய் வராது:(

   ஒருத்தவங்க “குடி கெடுப்பானா” முருகன்?:((((((
   ஈனன் கூட அப்படிச் செய்ய மாட்டான்.. என் முருகனா செய்வான்?
   ஆனா, “பக்தி” எ. போர்வையில், we get licence to talk & sing like this..

   சென்ற தலைமுறைகளில், மதம் பரப்பல் இருந்தது; அப்போ it was ok to glorify & sing such self aggrandisement traits!
   இனி வரும் தலைமுறைகள் = மதம் to மனிதம் = மாற வேண்டும்!
   சூர சம்ஹாரம் போன்ற reenactments நின்று விட வேண்டும்!

   அதற்கு, இது போன்ற, அசுர வெறுப்பின்மைப் பாசுரங்கள் துணை செய்யட்டும்!

   Reply

 17. Kannabiran Ravi Shankar (KRS)
  Jun 30, 2014 @ 12:14:44

  //பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே//

  பாசுரங்களின் பெரிய drawback இதான்:)

  பணம் வரும், ஜெயம் வரும்,
  எதிரி அழிவான், பொண்டாட்டி கிடைப்பா
  = இது போன்ற பலஸ்ருதி/ நூற்பயன்களை ஆழ்வார்கள் சொல்லவே மாட்டார்கள்:))
  = இந்தப் பாட்டெல்லாம் ஓதினா, நல்ல பக்தர்கள் ஆகலாமாம்! யாருக்குய்யா வேணும்?:)

  ஹோமம் பண்ணாதே, காம்யார்த்த சடங்குகள் வேணாம்!
  நவகிரகம் சுத்தாதே.. எல்லாமே உனக்குப் பெருமாள் தான்!
  = தமிழ் வைணவத்தின் Biggest Drawback:)
  = பொதுமக்களை attract பண்ணவே தெரியல, அதான் Minority சமயமாப் போயிருச்சி:))
  —–

  குலசேகராழ்வார் சொல்லும் இன்னொரு பலனைப் பாருங்கள்!

  ஈரத் தமிழை ஓதினால் என்ன கிடைக்கும்?
  = மனசிலே ஈரம் கிடைக்கும்!

  “இந்த நற்றமிழ் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே!”
  Whattay Confidence!
  தமிழை ஓதினால்.. நரகம் போக மாட்டாய்! இறைவனிடம் செல்வாய்!

  இதான் ஈரத் தமிழ் வீறு!

  Reply

 18. Kannabiran Ravi Shankar (KRS)
  Jun 30, 2014 @ 12:15:04

  தசரதன் மகன் = தாசரதி
  அப்போ, ஈசன் மகன் = ஈசரதி-யா?:)) | என் முருகனுக்குப் புதுப் பேரு; U like it ma?:))

  Reply

  • amas32
   Jun 30, 2014 @ 12:40:13

   :-)) “A rose by any other name would smell as sweet” முருகனை எப்பெயர் சொல்லி அழைத்தாலும் அவன் அழகனே 🙂

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: