வேலையில்லாப் பட்டதாரி – திரை விமர்சனம்

Velaiyilla Pattathari Tamil Movie Latest Poster (2)

Debutant வேல்ராஜின் கதை/இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் ஒரு கமர்ஷியல் படம் வேலையில்லா பட்டதாரி. நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார் தனுஷ். ரஜினிக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டாலும் பெருமையாகத் தன் மருமகன் தனுஷை தன் கலையுலக வாரிசாக அவர் அறிவிக்கலாம். சூப்பர் டயலாக் டெலிவரி, துளிக் கூட பாசாங்கில்லாத பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு இவரை அடுத்த லெவலுக்குக் கொண்டு போகிறது.  ஒரு தேர்ந்த performer க்குத் தேவையான நடனம், சண்டை இவ்விரண்டு முக்கிய திறமைகளிலும் நன்றாக ஜொலிக்கிறார்.

வேலையில்லா பட்டதாரியாக அதே சமயம் தன் தகுதிக்கு ஏற்ற வேலைக்காகக் காத்திருந்து ஏச்சுப் பேச்சுக்களுக்கு ஆளாகும் கேரக்டராக சிறப்பாக செய்திருக்கிறார். அவருக்கு ஜோடி அமலா பால். பழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நன்றாக நடித்திருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் அம்மா ரோல். முன்பெல்லாம் பண்டரிபாய் தான் எல்லா ஹீரோக்களுக்கும் அம்மாவாக வருவார். தற்போதைய பண்டரிபாய் சரண்யா பொன்வண்ணன்! அவர் நடிப்பைப் பற்றி சொல்வதற்கென்ன இருக்கு. எல்லா இளம் ஹீரோக்களுக்கும் அம்மாவாக செமையாக செட்டாகிறார். தந்தையாக சமுத்திரக் கனி. அப்பாவனது கொஞ்சம் ஷாக்கிங் ப்ரமோஷன் தான். நன்றாக நடித்திருந்தாலும் ஒரு மாதிரி சோபிக்கவில்லை. ஆனால் usual அப்பாவாக வரும் நடிகர்களுக்குப் பதில் இவரை மாற்றிப் போட்டிருப்பது நன்று.

Retail வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணிகள், அவை location location location என்பார்கள். அதே மாதிரி ஒரு திரைப் படத்தின் வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணிகள் திரைக்கதை, திரைக்கதை, திரைக்கதை. இதை இயக்குநர், தயாரிப்பாளர், முக்கியமாக ஹீரோ கொஞ்சம் கவனத்தில் வைக்க வேண்டும். உழைப்புக்கேற்ற வெற்றி அதில் தான் அடங்கியுள்ளது. முதல் பாதி ரொம்ப நன்றாகப் போகிறது. வசனங்கள் நச்! பாத்திரங்களை மெருகேற்றி தவறுகள் இன்றி பயணிக்கிறது திரைக்கதை.

இந்தப் படத்தையா ட்விட்டரில் மொக்கை என்று விமர்சனம் செய்தார்கள் என்று கோபிக்கக் கூடத் தோன்றியது. இரண்டாவது பாதியில் யதார்த்தத்தில் இருந்து பாதை மாறி usual டிரேக்கில் படம் பயணிக்க ஆரம்பித்தபோது அடேய் இவ்வளவு உழைப்பையும் ஏண்டா வெஸ்ட் பண்றீங்க என்று கத்தத் தோன்றியது.

ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி வொரக் அவுட் ஆகிறதோ இல்லையோ தனுஷுக்கும் அனிருத்தும் excellent chemistry! பாடல்கள் எல்லாமே நன்றாக உள்ளன, அதற்கு ஏற்றார் போல தனுஷும் அருமையாக நடனம் ஆடுகிறார். பின்னணி இசையும் சூப்பர்!

கோரியக்ராபர், ஸ்டன்ட் மாஸ்டர் இருவருக்கும் ஒரு பூங்கொத்து! கடைசி பைட் சீனில் தான் அணிந்திருக்கும் கோட், ஷர்ட், டை, பெல்ட் அனைத்தையும் வெப்பனாகப் பயன்படுத்தி சண்டை போடுகிறார் தனுஷ் 🙂 மேலும் அவர் 6 packகுடன் ப்ருஸ் லீ மாதிரி ஒரு சீனில் கெத்து காட்டுகிறார்! சினிமெடோக்ராபி, எடிடிங் இரண்டும் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நம் சோஷியல் மீடியாவும் க்ளைமேக்ஸில் ஒரு முக்கிய பாத்திரம். ‘மூன்று’ படத்தின் போது YouTubeல் why this கொலைவெறி பாடல் viral ஆகப் போனதில் அவருக்குத் தோன்றிய ஐடியாவாக இது இருந்திருக்கலாம்.

காமெடிக்காக வில்லன் அமிதேஷ், விவேக்  படத்தின் பின் பாதியில் வருகிறார்கள்.

புகைப் பிடிப்பதால் வரும் தீமைகளை ஒரு கதாபாத்திரமே சொல்லியும் படம் முழுக்க தனுஷ் புகைப்பது ரொம்ப நெருடுகிறது.

ஒரு நல்ல மெஸ்சேஜ் சொல்ல வருகிறார்கள், தனுஷ் performance  இவை இரண்டிற்காகவும் படத்தைப் பார்க்கலாம் 🙂

??????????????????????????????????????????????????????????????????

கண் அவன் – சிறுகதை

“அம்மா செல்வம் அண்ணனை கொன்னுட்டாங்கம்மா, கண் முன்னாடியே செத்துட்டாரும்மா ” படாரென்று வாசக் கதவைத் திறந்துகொண்டு பயமும் அழுகையுமாக மூச்சிரைக்க ஓடி வந்து சொன்னாள் வீட்டு வேலை செய்யும் கோகிலா. “என்ன, என்ன சொல்ற” வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை லதாவுக்கு. லேசாக அடிவயிற்றில் ஒரு கலக்கம் ஏற்பட்டாலும் உடல் முழுவதும் ஒருவித நிம்மதி பரவுவதை அவளால் உணர முடிந்தது.

“அவங்க வீட்டு வாசலிலேயே போட்டுத் தள்ளிட்டாங்கமா. கத்தியால தல, கை, காலுன்னு எல்லா எடத்திலேயும் வெட்டிட்டாங்க. பாடியை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டுப் போயிருக்காங்கம்மா, போலீசெல்லாம் வந்திருக்கு. கட்டப் பஞ்சாயத்துல ஏதோ பிரச்சினையாம். இவரோட எதிரிங்க தான் ப்ளான் பண்ணிக் கொன்னுட்டாங்களாம்” கோகிலா மேல் விவரம் சொல்லிக் கொண்டே போனாள்.

கணவருக்கு போன் பண்ணினாள் லதா. ‘என்னங்க, செல்வத்தை யாரோ அவங்க வீட்டு வாசலிலேயே கொன்னுட்டாங்களாம்.’

‘அப்படியா? நீ வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகாதே. வாட்ச்மேனை வாசலிலேயே இருக்கச் சொல். கொஞ்சம் வேலை இருக்கு அது முடிச்சிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன்.”

தன் வாழ்க்கை தடம் மாறிப் போனதை நினைத்துப் பார்த்தாள். சிங்கப்பூரில் அவளின் வாழ்க்கை சுவர்க்கம் போல் இருந்தது. கணவன் சந்திரன் பெரிய MNCல முக்கிய அதிகாரி, கை நிறைய சம்பளம். மீரா, ராதா என்று மணி மணியாய் இரண்டு பெண் குழந்தைகள். குழந்தைகள் மேல் உசிரையே வைத்திருக்கும் கணவன். பொதுவாகவே மகள்களுக்கும் அப்பாக்களுக்கும் தனிப் பாசம் உண்டு. இவர்கள் வீட்டிலேயும் அதுதான். அவன் எந்த வெளிநாடு போனாலும் அவர்களுக்காக ஒரு பெட்டி நிறைய பரிசுப் பொருட்களுடன் தான் திரும்பி வருவான். வீட்டோடு இருந்து வீட்டு வேலை பார்க்க மரியா என்றொரு பெண். சமையலில் இருந்து பள்ளிக்குக் குழந்தைகளை தயார் செய்வது வரை அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்வாள். கிட்டி பார்டிகள், வார இறுதி டின்னர்கள், சுற்றுலாப் பயணங்கள், வருடா வருடம் லீவுக்கு இந்தியப் பயணம் எனச் சீரான மகிழ்ச்சியான இல்லறம். பேச்சும் சிரிப்புமாக எந்தப் பார்டியிலும் அவளே ராணியாக இருப்பாள். நாற்பத்தியொரு வயது என்று தெரியாத அளவு அவளுடைய அழகும் இளமையும் அவளுக்குக் கூடுதல் பிளஸ் பாயின்ட்!

indian-wife

சந்திரனின் நிறுவனம் சென்னையில் புதிய கிளையைத் தொடங்கி அவனையே அதன் நிர்வாக இயக்குநர் ஆக்கியதும் அவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன தான் சென்னையில் இருந்து நான்கு மணி நேர விமானப் பயண அளவிலேயே சென்னைக்கு மிக அருகிலேயே சிங்கப்பூர் இருந்தாலும் அவனுக்கு இந்தியாவில் அதுவும் சென்னையில் வாழ வேண்டும் என்பது தான் நெடு நாள் ஆசை. அவர்கள் நான்கு வருடத்திற்கு முன் அசோக் நகரில் வாங்கியிருந்த பிளாட்டில் வாடகைக்குக் குடியிருந்தவரும் வீட்டைக் காலி செய்திருந்தார். மீராவும் ராதாவும் ஏழாவதும் ஒன்பதாவதும் படித்து வந்தனர். இந்தியா திரும்புவதற்குச் சரியான வாய்ப்பும் நேரமும் இதைவிட அமையாது என மகிழ்ந்தான் சந்திரன்.

‘நீ முதல்ல சென்னைக்குப் போய் வீட்டை சரி செஞ்சு குழந்தைகளுக்கு நல்ல ஸ்கூல்ல சீட் வாங்கிடு, நடுவில ஏதாவது வேலை போட்டுக்கிட்டு நானும்  வரேன். பசங்களைப் பார்த்துக் கொள்ளத் தான் மரியா இருக்காளே. நீ முதல்ல போய் முக்கியமான வேலைகளைப் பார்’ என்று சொல்லி லதாவை முதலில் சென்னைக்கு அனுப்பினான் அவன்.

அசோக் நகர் வீட்டின் பூட்டைத் திறக்க முயற்சி செய்து முடியாமல் திணறிக் கொண்டிருந்த அந்த நிமிடம் அவள் கண் முன்னே இன்று நடந்தது போல இருக்கிறது. வெள்ளை சட்டை வெள்ளை பேன்ட், நெற்றியில் சிறிய விபூதி கீற்று, நடுவில் குங்குமப் பொட்டு, வலக்கையில் தங்க ப்ரேஸ்லெட்,  இடக்கையில் தங்க கைக் கடிகாரம் என எதிர் பிளாட்டில் இருந்து வெளிப்பட்டவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள் லதா. சாவியைப் பலமுறை திருப்பியும் பூட்டு திறக்காததைக் கவனித்த அவன் இயல்பாக வந்து அவளிடம் இருந்து சாவியை வாங்கி எளிதாகப் பூட்டை திறந்துக் கொடுத்தான்.

‘புதுசா இந்த வீட்டுக்குக் குடி வரீங்களா?’ என்றவனிடம், ‘இல்ல நான் தான் ஹவுஸ் ஓனர். வீட்டை சரி செய்ய வந்திருக்கேன், நாங்களே குடி வரப் போறோம்’ என்றாள்.

‘அப்படியா? என் பேரு செல்வம், என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க’ என்றவனிடம் உடனே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதை சட்டென்று அவளால் உணர முடிந்தது.

‘நான் லதா சந்திரன்’ அறிமுகப்படுத்திக் கொண்டு புன்னகைத்தபடியே அவள் வீட்டினுள் நுழைந்தாள். பின்னாடியே அவனும் நுழைவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

‘என்ன, வீடு இவ்வளவு தூசியாக இருக்கு! இருங்க நான் போய் எங்க வீட்டு வேலைக்காரியை வரச் சொல்றேன்’ என்று தன் வீட்டுக்குக் கிளம்பியவனிடம், ‘இல்லை நான் கீழே வாட்ச்மேனிடம் வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டிருக்கேன்’ என்று இவள் சொன்னதை அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்காரி கோகிலா இவள் வீட்டு வேலைக்காரியாகவும் வந்தாள்.

பின் வரும் நாட்களில் இவ்வாறு பலப் பல உதவிகளை அவன் செய்து கொடுத்தான். புது சிம் கார்ட் வேண்டும் என்றால் அடுத்த அரை மணி நேரத்தில் அண்ணன் கொடுத்துவிட்டு வரச் சொன்னாரு என்று ஒருவன் கொடுத்துவிட்டுச் செல்வான். ரேஷன் கார்ட் இல்லாமலேயே புது கேஸ் கனெக்ஷன் கிடைத்ததும் அவன் புண்ணியத்தில் தான். வீட்டுக்கு வெள்ளையடிக்கப் பெயிண்டர், மத்த மராமத்து வேலைகளுக்கு நல்ல கார்பெண்டர் என்று கேட்டாலும் கேட்காமலேயும் அவனிடம் இருந்து உதவிகள் கிடைத்தன.

‘இவரு யாரு, என்ன வேலை செய்யறாரு’ என்று கோகிலாவிடம் வந்த நாளே கேட்டாள்.

‘அவரு பெரிய ஆளுங்கட்சி ஆளும்மா. கட்சில எல்லாரையும் அவருக்குத் தெரியும். மார்கெட்ல நிறைய கடையெல்லாம் வெச்சிருக்காரு’ என்று அவளுக்குத் தெரிந்த விஷயத்தை சொன்னாள். பிறகு ஒரு சமயம் அவன் திருமணம் ஆகாதவன், அம்மா மற்றும் அண்ணன், அண்ணி அவர்கள் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாய் வாழ்கிறவன் என்று தெரிந்து கொண்டாள். பக்கத்துத் தெருவில் இருந்த அவர்கள் பழைய வீட்டை இடித்துப் பெரியதாகக் கட்டிக் கொண்டிருப்பதால் இந்த பிளாட்டில் அவன் தன் குடும்பத்துடன் தாற்காலிகமாக வசித்து வருகிறான் என்பதும் தெரிந்தது.

‘முப்பத்தஞ்சு வயசு இருக்காது, ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலை’ என்று கோகிலாவிடம் ஒரு முறை கேட்டபோது, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாதுமா. நானும் இவங்க இந்த பிளாட்டுக்கு வந்ததில் இருந்து தான் அவங்களுக்கு வேலை செய்றேன்’ என்று கூறினாள்.

ஏதாவது விசாரிக்க தினம் இரு முறையாவது அவள் வீட்டிற்கு அவன் வர ஆரம்பித்தான். வெறும் அத்தியாவசியப் பொருட்களுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தாள். ‘ஏன் ஒரு டிவி கூட இல்லாமல் இருக்கீங்க, வாங்க எனக்குத் தெரிஞ்ச கடையில் வாங்கி தரேன்’ என்று அவன் காரிலேயேக் கூட்டிக் கொண்டு போய் வாங்கிக் கொடுத்தான். வேறு பல சந்தர்ப்பங்களிலும் நானே உங்களை அங்கே டிராப் செய்கிறேனே என்று அவள் வேறு வேலைகளுக்காக வெளியே செல்லும்பொழுதும் அவளை தன் காரிலேயே அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.

ஒரு முறை டெல்லியில் வேலை இருந்ததால் சந்திரன் அங்கே வந்துவிட்டு சென்னை வழியாக சிங்கப்பூர் சென்றான். ஆனால் சில மணி நேரங்களே அவனால் இருக்க முடிந்தது. வீட்டில் அவள் செய்து கொண்டிருந்த மாறுதல்களும் புதுப்பித்தலும் அவனுக்கு மிகவும் பிடிந்திருந்தது. சமையல் அறையை முழுதுமாக சிங்கப்பூர் வீட்டில் இருப்பது போல மாற்றியமைத்துக் கொண்டிருந்தாள். கழிப்பறைகளில் டைல்ஸ், கிளாசட் எல்லாம் புதுசாக போடும் வேலையும் நடந்து வந்தது.

‘எல்லாம் சூப்பரா இருக்கு. ஆனா சீக்கிரமா சிங்கப்பூர் வந்திடு, பசங்களும் நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

பள்ளியில் அட்மிஷன் வாங்குவது தான் அவளுக்குப் பெரும் பாடாக இருந்தது. ஒரு முறை அவள் கணவனிடம் தொலைபேசியில், ‘இன்னும் எவ்வளவு ஸ்கூல் ஏறி இறங்கறதுன்னு தெரியலை. இங்க ஸ்கூல் அட்மிஷனே கிடைக்காதுன்னு நினைக்கிறேன். யாரையாவது தெரிஞ்சிருந்தா தான் ஏதாவது நடக்கும் போல இருக்கு’ என்று குறைப்பட்டுக் கொண்டிருந்தபோது உரையாடலைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த செல்வம், அவள் கணவனுடன் பேசி முடித்ததும்,

‘என்னங்க ஒரு வார்த்தை என்னை கேக்கக் கூடாதா? நம்ம ஏரியால இருக்கிற பெரிய ஸ்கூல் கலைவாணி வித்யாலயாவிலேயே நான் சீட் வாங்கித் தரேன். நாளைக்கு டீடையில்ஸ் எல்லாம் எடுத்து வெச்சு ரெடியா இருங்க. காலைல பத்து மணிக்கு பிரின்சிபாலை போயி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அடுத்த நாள், அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் பிரின்சிபாலைப் பார்க்கவே முடியாது என்று அடிக்காதக் குறையாக இவளை துரத்திய பிரின்சிபாலின் உதவியாளர் சிரித்த முகத்துடன் இருவரையும் வரவேற்று டீ கொடுத்து உபசரித்து, செல்வத்தைப் பார்த்துக் ‘கொஞ்சம் இருங்க சார் மேடம் இப்போ ப்ரீ ஆயிடுவாங்க’ என்று குழைந்து நிற்பதைப் பார்த்து வியந்து போனாள். இரண்டு பெண்களுக்கும் சீட் மிக எளிதாகக் கிடைத்தது. லதாவால் நம்பவே முடியவில்லை.

‘என்ன ட்ரீட் எல்லாம் கிடையாதா? இவ்வளவு பெரிய ஸ்கூலில் இடம் வாங்கிக் கொடுத்திருக்கேன்’ என்று சிரித்துக் கொண்டே கேட்ட செல்வத்துடன் ட்ரீட் கொடுக்க பெரிய ஹோட்டலுக்கு போனதும் எதார்த்தமாகத் தான். எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் மிகக் குறுகிய காலத்தில் நட்பு வேறாக மாறியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய், ஒரு நல்ல கணவனுக்கு மனைவி ஆகிய அனைத்தும் மறந்து தன்னை இழந்தாள். முதல் முறை இருந்த பயம் அடுத்த முறை இல்லை. ஒரு முறை பல முறை ஆனது. வேண்டாத அசுரப் பேய் ஒன்று அவளைப் பிடித்துக் கொண்டதோ என்று கூட நினைத்தாள்.

வீட்டு வேலைகள் முடிந்தன, அவள் கணவனும் சீக்கிரம் வந்து சிங்கப்பூர் வந்து பேக்கிங் வேலையை ஆரம்பிக்க அவசரபடுத்தினான். கிளம்பும் போது செல்வம், “நீ திரும்பி வரும் போது இங்க ப்ளாட்ல இருக்கமாட்டேன். கட்டி முடிச்ச எங்க வீட்டுக்குப் போயிருப்பேன், இன்னும் ரெண்டு வாரத்துல கிரஹப்பிரவேசம்” என்று கூறினான்.

சிங்கப்பூர் போனதில் இருந்து சென்னையில் இருந்த போது இருந்த மாதிரி ஓய்வாக ஆக அவளால் இருக்க முடியவில்லை. அங்கே மற்றவர்களை வேலை வாங்கினால் போதுமானதாக இருந்தது. சிங்கப்பூரில் வேலைக்கு மேல் வேலை. ரொம்ப ஓய்ச்சலாக இருந்தது. திடீரென்று அவளுக்கு மாதவிடாய் ரொம்ப நாள் தள்ளிப் போனது போலத் தோன்றியது. சில மாதங்களாகவே மாதவிடாய் சரியாக வரவுதில்லை. இந்தியா போவதற்கு முன் அவள் மருத்துவரிடம் சென்று காண்பித்தப் பொழுது, உங்களுக்கு மெனோபாஸ் சமயம் என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு வருடத்தில் முழுவதுமாக நின்றுவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. வேறு பிரச்சினை ஒன்றும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறியிருந்தார்.

டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவர் எழுதிக் கொடுத்த மருத்துவ பரிசோதனைகளை செய்தாள். லதா மருத்துவரை அடுத்த நாள் பார்க்க சென்ற போது, புன்முறுவலுடன் வரவேற்ற மருத்துவர், ‘Good news! பயப்படும்படி ஒன்னும் இல்லை, நீங்கள் pregnant’ என்றார் சிரித்தபடி.

தலையில் இடி இறங்கியது என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறாள். அதை அந்தக் கணம் உணர்ந்தாள். ‘என்ன சொல்றீங்க? எனக்கு மெனுபாஸ் டைம் என்று போன தடவை சொன்னீங்களே?’ என்றவளிடம் ‘ஆமாம், அனால் மெனுபாஸ் ஆகலையே. ஆகக் கூடும்னு தானே சொன்னேன்” என்றார் மருத்துவர்.

‘இது ப்ளான் பண்ணலை டாக்டர், அபார்ஷன் பண்ணிடலாமா?’ என்றவளிடம் ‘நான் அதற்கு ஒப்புதல் தர முடியாதுமா. கிட்டத்தட்ட நாலு மாசம் ஆகிவிட்டது. உங்க ஹீமோக்ளோபின் கவுண்டும் குறைவா இருக்கு. ரொம்ப அநீமிக்காக இருக்கீங்க. அபார்ஷன் சேப் கிடையாது’ என்றார். ‘ஏன் பயப்படறீங்க? நிறைய பேர் முதல் குழந்தையே இந்த வயசுல பெத்துக்கறாங்க’ என்றார் அவர் விஷயம் புரியாமல்.

வீட்டுக்கு எப்படி திரும்பி வந்தோம் என்று புரியாத அளவு திக்பிரமை பிடித்து இருந்தாள். செல்வத்துக்குப் போன் போட்டாள். விஷயத்தைச் சொன்னாள். ‘எப்படி ஆச்சு? நாம் பாதுகாப்போடு தானே உடலுறவு கொண்டோம்’ என்றான் அவன். இவள் என்ன பதில் சொல்ல முடியும், விதி வலியது என்பதைத் தவிர!

‘நீ என்ன செய்யப் போற?’ என்று கேட்டான். அபார்ஷன் செய்ய முடியாததைக் கூறினாள். ‘அப்போ உன் கணவனிடம் அவன் குழந்தைன்னு சொல்லிடு’ என்றான். ‘அதுவும் முடியாது, நாங்க பல மாசங்களாப் பிரிஞ்சிருக்கோம். நான் சென்னை வரும் முன்பு அவர் ஆபீஸ் வேலை விஷயமாக சைனா போயிருந்தார்’ என்றாள். அவன் பேசாமல் போனை வைத்து விட்டான்.

இரண்டு நாட்கள் துளி தூக்கம் இல்லை. நரக வேதனை. சென்னையில் இருந்தபோது சந்திரனின் பெற்றோர்கள் வந்து உதவுவதாகக் கூறினார்கள். இவள் தான் இங்கே பெயிண்டிங்கும் மற்ற வேலைகளும் நடப்பதால் உங்களுக்கு தூசி தும்பு உடம்புக்கு ஆகாது என்று வரவிடாமல் தடுத்துவிட்டாள். அவர்கள் உடன் இருந்திருந்தால் இந்த மாபெரும் தவறு நடக்காமல் இருந்திருக்குமோ என்று நொந்தாள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! வேறு வழியில்லை சந்திரனிடம் சொல்லியே ஆகவேண்டும். விவாகரத்து செய்து விடுவானோ. தஞ்சாவூரில் இருக்கும் தாய் வீட்டுக்குப் போய் மானம் கெட்ட வாழ்வு வாழவேண்டுமோ என்று ஆயிரத்தெட்டு சிந்தனைகள்.

pencildrawing4

வீட்டில் குழந்தைகள் எதிரில் பேச முடியாது. ‘சாயந்திரம் செட்டியார் முருகன் கோவில் போய் வரலாமா?’ கணவனைக் கேட்டாள். ‘நீங்க ஆபிசில் இருந்து நேரா வந்திடுங்க, நான் அங்கே வந்துடறேன்’ விநோதமாகப் பார்த்தான் சந்திரன். எப்பொழுது லீவு நாட்களில் குடும்பத்தோடுக் கோவிலுக்குப் போவது தான் வழக்கம்.

மாலை இறைவனை வணங்கி முருகனின் உதவியை மன்றாடிக் கேட்டுக் கொண்டு கோவிலை வலம் வந்து பிராகார மண்டபத்தில் அமர்ந்தாள். அவனும் அவளுடன் வலம் வந்து அமர்ந்து அவளே பேசட்டும் என்று பொறுமை காத்தான்.சில நிமிட மௌனத்திற்குப் பிறகு,

‘நான் பிரெக்னன்டாக இருக்கேன்’ என்றாள். எதோ சொல்ல வாயைத் திறந்தவன் வாயில் இருந்து பேச்சே வரவில்லை. பேயறைந்தது போல முகம் வெளிறியது. ‘என்ன சொல்ற நீ? உனக்கு என்ன பைத்தியமா? நீ எப்படி கர்பமாக இருக்க முடியும்?’ என்றான் கோபமாக.

‘இல்லை உண்மை தான். டாக்டரிடம் போயிருந்தேன். இப்போ நாலு மாசம் என்றாள்’

‘சென்னையில் என்ன ஆச்சு?’ என்றான். சுருக்கமாகச் சொன்னாள். அதற்குப் பிறகு அவன் ஒன்றுமே பேசவில்லை. வீடு வந்த பிறகு உண்ணாமல் வேறு அறைக்கு உறங்கச் சென்றான். உறங்கினானா என்று தெரியாது. மறு நாள் காலை அவள் இருக்கும் இடம் வந்தான்.

‘நான் உன்னை விவாக ரத்து செஞ்சா என் குழந்தைகளுக்குத் அம்மா இல்லாமல் போயிடும். அது மட்டும் இல்லை, அவங்களுக்கு இப்போ எல்லாம் புரிஞ்சிக்கிற வயசு. நீ செஞ்ச இந்தக் காரியம் அவங்களை நிலைகுலையச் செஞ்சிடும். வாழ்க்கை முழுக்க இந்த அவமானத்தை அவங்க சிலுவையாத் தூக்கணும். ஏளனப் பேச்சுக்களையும் உறவினர் மத்தியில் அவமானத்தையும் தாங்க வேண்டிய அவசியமும் தேவையும் அவர்களுக்கு இல்லை. அதனால உன் வயிற்றில் வளரும் இந்தக் குழந்தை என் குழந்தையாகவே வளரட்டும். இனி இதைப் பற்றிப் பேச வேறு எதுவும் இல்லை, பேசவும் வேண்டாம்’ என்று கூறி அலுவலகம் கிளம்ப ஆயத்தம் ஆனான்.

சென்னை வந்த பிறகு குழந்தை பிறந்தது. அவளின் துரதிர்ஷ்டம் குழந்தை அச்சு அசலாக செல்வத்தைப் போலவே இருந்தது. வினோத் என்று பெயரிட்டனர். மீராவும் ராதாவும் தம்பி பாப்பாவின் மேல் மிகவும் ஆசையாக இருந்தனர். சந்திரனை எதுவும் பாதிக்கவில்லை. அவனும் குழந்தையிடம் அன்புடன் கொஞ்சி விளையாடினான். லதாவை எந்த முறையிலும் கேவலமாகவோ மரியாதைக் குறைவாகவோ நடத்தவில்லை. முழுக் கவனத்தையும் அவன் அலுவலகப் பணியில் செலுத்தினான்.

சந்திரன் இல்லாத சமயம் செல்வம் வந்து ஒரு முறை குழந்தையைப் பார்த்துவிட்டுச் சென்றான். லதா நடுங்கிப் போய்விட்டாள். ‘நீங்க தயவு செய்து என்னையோ குழந்தையையோ இனிமேல் பாக்க வராதீங்க. எனக்கு நீங்க செய்யும் மிகப் பெரிய உதவியா இது இருக்கும்” என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

இப்பொழுது வினோத்துக்கு 14 வயது ஒன்பதாம் வகுப்பு. பள்ளி செல்கையில், வருகையில் அவனை செல்வம் கவனிக்கிறான் என்று அவளுக்குத் தெரியும். அனால் அதற்குப் பிறகு செல்வம் வீட்டுக்கு வரவில்லை என்பதே அவளுக்கு ஒரு பெரிய நிம்மதி. மீராவுக்கும் ராதாவுக்கும் திருமணம் முடிந்தாகிவிட்டது. இதோ இப்பொழுது அவன் இறப்பு செய்தி!

திடீரென்று வாசலில் ஒரே சத்தம். யாரோ குடித்துவிட்டுக் கத்துவது போல கேட்டது. வெராந்தாவில் இருந்த மீன் தொட்டி சல்லென்று தரையில் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு பதைபதைத்துக் கதவை திறக்க முற்பட்டபொழுது வாசலில் ஒருவன்,

‘எங்கண்ணன் அங்கே செத்துக் கிடக்கிறாரு என்னடி நீ இன்னும் புள்ளையைக் கூட்டிக்கிட்டு அங்க வரலை. அண்ணன் புள்ள தான் அண்ணனுக்குக் கொள்ளிப் போடணும் தெரியுமா?’ என்று ஒருவன் கத்துவது கேட்டது. அடப்பாவி எல்லாருக்கிட்டேயும் சொல்லிட்டு தான் செத்துப் போயிருக்கியா?

ஐயோ சீக்கிரம் வரேன்னு சொன்னாரே இன்னும் அவரைக் காணோமே என்று அவசர அவசரமாகக் கணவனுக்குப் போன் போட்டாள் லதா. ரிங் போய் கொண்டே இருந்தது சந்திரன் போன்காலை எடுக்கவில்லை. டிரைவிங்கில் எடுக்கவில்லையோ என்று வாட்ச்மேன் செல்லுக்கு போன் பண்ணி, ‘வாசல்ல கலாட்டா பண்றவங்களை கொஞ்சம் வெளியே போகச் சொல்லுப்பா’ என்றாள்.

சமாதானம் செய்து வந்தவனை வெளியேற்றும் சத்தம் வாசலில் கேட்டது. வந்தது யாராக இருக்கும். யாருக்கும் தெரியாது என்று இவள் நினைத்திருந்த விஷயம் இப்படி அவமானமாக நாலு பேர் கேட்கும்படி போட்டு உடைக்கப்பட்டு விட்டதே. அக்கம் பக்கத்தில் யாராவது கேட்டிருப்பார்களா? வினோத் ஸ்கூலில் இருந்து வரும் நேரம் வேறு!

திரும்பத் திரும்ப கணவன் செல்லுக்கு போன் போட்டுக் கொண்டே இருந்தாள். கடைசியில் போன் எடுக்கப்பட்டது ஆனால் பேசியது சந்திரன் இல்லை. ‘நான் ஆழ்வார்பேட்டை ட்ராபிக் போலிஸ் கேசவன் பேசறேன், யார் பேசறது?’ என்றார் ஒருவர் மறுமுனையில்.

‘நான் மிசஸ் லதா சந்திரன் பேசறேன். இது என் கணவர் செல் போன். எப்படி உங்களிடம் வந்தது’ என்றாள்?

‘அம்மா, பக்கத்தில் பெரியவங்க யாராவது இருக்காங்களா? கூட உறவுக்காரங்க யாரவது இருக்காங்களா?’

‘இல்லை, நான் தனியா தான் இருக்கேன். என் மகன் இன்னும் ஸ்கூலேர்ந்து வரலை, என்ன விஷயம் என்கிட்டே சொல்லுங்க’ என்றாள். ‘உங்க கணவர் பெரிய விபத்தில் சிக்கிக் கவலைக் கிடமாக இருக்கிறார். நீங்க ஆழ்வார்பேட்டை பில் ராத் ஹாஸ்பிடலுக்கு சீக்கிரமா வாங்க’ என்றார் கேசவன்.

வாசலில் வாட்ச்மேனிடம் ‘வினோத் ஸ்கூலேர்ந்து வந்தவுடன் பக்கத்து பிளாட்டில் இருக்கச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் பறந்தாள். ‘மீரா, உடனே பில்ராத் ஹாஸ்பிடலுக்கு வா, அப்பா சீரியசாம். கார் அக்சிடென்ட். நீ ராதாவுக்கும் போன் பண்ணி உடனே பெங்களூரில் இருந்து கிளம்பி வரச் சொல்லு’ என்று அவசரமாக போன் செய்தாள்.

மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் அங்கே நின்றுகொண்டிருந்த போலிஸ்காரரிடம் சென்று ‘நீங்க தான் கேசவனா?’ என்றாள்.

‘ஆமாம்மா, கூட யாரும் வரலையா?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

‘இல்லை, இப்போ என் மகள் வந்து விடுவாள். என் கணவர் எங்கே இருக்கார் சொல்லுங்க’ என்றாள்.

‘ரொம்ப சாரிம்மா, அவர் ஸ்பாட்டிலேயே இறந்து விட்டார். ரெட் லைட்டை கவனிக்காமல் வேகமாக திரும்பியபோது பஸ் இடித்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உள்ளே போய் பார்க்கலாம், உங்க மகள் வரட்டும்’ என்றார். லதாவால் எதையும் நம்ப முடியவில்லை. தன்னை சுற்றி எதோ நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் உணர்ந்தாள். ஆனால் என்னவென்று புரியவில்லை. மகளும் மருமகனும் மருத்துவமனையில் படிவங்களைப் பூர்த்தி செய்து கட்ட வேண்டிய பணத்தைக் கட்டி, செய்யவேண்டியவைகளைச்  செய்து உடலைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினர்.

அதற்குள் விஷயம் தெரிந்து வீட்டை சுற்றி உறவினர்கள் நண்பர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வினோத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னார்கள். பெண்கள் இருவரும் அப்பாவின் உடல் மேல் விழுந்து புரண்டு அழுதனர். அப்பா தலைப்பகுதியை விட்டு வினோத் விலகவில்லை.

‘பசங்க மேல உசிரையே வெச்சிருந்தான், இப்படி அவசரமா ஆக்சிடென்டில செத்துப் போயிட்டானே’ என்று யாரோ ஒருவர் பொதுவில் சொல்லிக் கொண்டு இருந்தார். இந்தத் துயரத்திலும் செல்வத்தின் ஆட்கள் யாரவது வந்து குழப்பம் செய்வார்களோ என்று லதாவின் மனம் விழித்துக் கொண்டு கவலைப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை. இந்த சமயத்தில் அவர்கள் வந்து எதுவும் செய்வது மிக ஈனமானச் செயலாக இருக்கும் என்று அவர்களே உணர்ந்து இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது.

புது உயிரைத் தனதாக்கிக் கொண்டு ஒரு முறை அவள் மானத்தைக் காப்பாற்றியவன் இம்முறை உயிரைக் கொடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறான்.

pencildrawing2

காலையில் மின் மயானத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் காலை 11மணி. வினோத் சிறுவனாக இருந்தாலும் காரியங்கள் அனைத்தையும் அவனே செய்தான். சந்திரனின் உடல் உள்ளே இழுக்கப்பட்டு தீக்கு இரையாயிற்று.

அப்பொழுது தாரை தப்பட்டை முழங்க, பட்டாசுகள் வெடிக்க மலர்கள் சொரிய செல்வத்தின் உடலும் அதே மயானத்திற்கு வந்தது. தந்தையின் அஸ்திக்காக ஓரமாக தன் அக்காக் கணவனுடன் நின்றுக் கொண்டிருந்த வினோத்திடம் வந்தார் செல்வத்தின் அண்ணன்.

‘தம்பி இந்த கற்பூரத்தைக் கொஞ்சம் தொட்டுக் கொடுப்பா’ என்று ஒரு தட்டை நீட்டினார். யாரிவர், எதற்கு நம்மை அணுகுகிறார் என்று யோசிக்கும் நிலையில் வினோத்தும் அவன் மாமாவும் இல்லை. எதுவும் புரியாவிட்டாலும் கற்பூரத்தைத் தொட்டுக் கொடுப்பதில் என்ன தவறு என்று நினைத்து வினோத் தொட்டுக் கொடுத்தான்.

 

 

The pencil sketches for this story were taken from this website, with thanks: https://croquisdecrayon.wordpress.com/tag/women-pencil-sketch/

and this website: http://imgur.com/9QmnO

இசைஞானி இளையராஜாவைச் சந்தித்தேன்

கிருஷ்ண காண சபா விழா மேடையில்

கிருஷ்ண கான சபா விழா மேடையில்

வயலின் மேதை டாக்டர் L. சுப்பிரமணியம் அவர்களுக்கு கிருஷ்ண கான சபா செயலாளர் மறைந்த திரு.யக்ஞராமன் அவர்களின் பேரில் Lifetime Living Legend Award விருதை வழங்க இசை ஞானி இளையராஜா அவர்கள் வருவதாக தி இந்துவில் ஒரு செய்தி படித்தவுடன் அந்த நிகழ்ச்சிக்கு எப்படியாவது போய் விடவேண்டும் என்று மனத்தில் ஆவல். ஆனால் எனக்கு சமயத்தில் உடல் நிலை சரியில்லாமல் போய்விடும், அதனால் பல முறை திட்டமிட்டும் பல நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாமல் போய்விடும். ஆனால் நேற்று அந்த நிகழ்ச்சிக்குப் போனது மட்டும் அல்லாமல் பெரும் ஆசியும் பெற்று வந்தேன் 🙂

மாலை ஐந்து மணி நிகழ்ச்சி தொடக்கம் என்று அறிந்து நான்கு மணிக்கே அரங்கத்துக்குப் போய் விட்டேன். எப்பொழுதுமே L.சுப்பிரமணியம், அவரது மகன் கச்சேரிக்கு (இலவச கச்சேரிகள்) போகும் போது எக்கச்சக்கக் கூட்டம் இருக்கும். அந்த பயத்தில் முன்னதாகவே சென்றேன். உள்ளே நுழைந்தால் நான் தான் முதல் விருந்தினர். டெக்னிஷியன்கள் சவுன்ட் சிஸ்டத்தை செக் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ஒவ்வொரு நாற்காலியிலும் reserved என்ற காகிதத்தை முதல் ஐந்து வரிசைகளில் ஒட்டிக் கொண்டிருந்தார். நான் ஆறாவது வரிசையில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் ஆனாலும் ஐந்தாவது வரிசையில் உட்கார்ந்தேன். நல்ல நடு சீட். ரொம்ப மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாக நாலரை மணிக்கு மேல் மக்கள் வர ஆரம்பித்தார்கள். ஐந்தரை மணிக்கு மேல் தான் நிகழ்ச்சி தொடங்கியது. அப்பொழுது அரங்கம் நிரம்பி வழிந்து பலரும் நின்று கொண்டிருந்தனர். நானும் ஐந்தாம் வரிசையில் இருந்து மூன்றாம் வரிசைக்கு நகர்ந்து இன்னும் மேடை அருகே இடம் பிடித்துவிட்டேன்.

இந்த விழாவை நடத்தியவர்கள் திரு நல்லி குப்புசாமியும் திரு  Y. பிரபு (இப்போதைய செயலாளர்) அவர்களும். திரு L. சுப்பிரமணியத்துக்கு Yagnaraman Lifetime Living Legend Awardம் இதைத் தவிர கஞ்சிரா கலைஞர் திரு புருஷோத்தமன், நாட்டியக் கலைஞர் உமா நம்பூத்ரிபாட் சத்தியநாராயணா, கர்நாடக இசைப் பாடகர் ராம், இவர்களுக்கும் Yagnaraman Award of Excellence விருதுகள் வழங்கப்பட்டன. அரங்கத்திரை தூக்கப்பட்டதும்  இளையராஜா அனைவருக்கும் வணக்கம் சொன்னார். சங்கர மடத்தில் இருந்து வந்த சில வேத வல்லுநர்கள் வேதம் இசைத்து கோவில் பிராசாதங்களை மேடையில் இருந்த அனைவருக்கும் வழங்கினர். இளையராஜா பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்.

சங்கர மடத்தின் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்கிறார்

சங்கர மடத்தின் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்கிறார்

இளையராஜாவுக்கு நல்லி குப்புசாமி மாலை போடுகிறார்.

இளையராஜாவுக்கு நல்லி குப்புசாமி மாலை போடுகிறார்.

நான் இளையராஜா அவர்களை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை. ரொம்ப எளிமையாக இருந்தார். பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டும் ஆடியன்சை பார்த்து இன்முகத்துடன் சிரித்தபடி இருந்தார். அவரை பேச அழைக்கும் முன் அவரைப் பற்றி சுருக்கமாக MC சொல்லும்போது அவர் தந்தை அவருக்கு வைத்தப் பெயர் ராசையா என்று குறிப்பிட்டார். இளையராஜா பேச ஆரம்பித்தவுடன் முதலில் அந்தத் தவறை திருத்தினார். தனக்கு பெற்றோர் வைத்தப் பெயர் ஞான தேசிகன் என்றும் பள்ளியில் அது ராசைய்யா என்று மாறியது என்றும் குறிப்பட்டார்.

சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட பொது நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை ஆனால் L.சுப்பிரமணியம் அவர்களின் விருது கொடுக்கும் விழாவிற்கு அழைக்கப்பட்ட பொழுது தன்னால் தட்ட முடியவில்லை என்று கூறினார். அவர்கள் வீட்டில் அவரும் ஒரு குடும்ப உறுப்பினராக இருந்ததையும், எப்படி சுப்பிரமணியத்தின் தந்தை V.லட்சுமிநாராயணா, அண்ணன் L.வைத்தியநாதன் இருவரும் அவரை நெருங்கிய சொந்தமாக பாவித்ததையும் நினைவு கூர்ந்தார். அவரும் வைத்தியநாதனும் சேர்ந்து பியானோ வாசிப்பார்களாம். அவர்கள் வீட்டில் ஒருவனாக வளர்ந்த அவர் இந்த விழாவுக்கு வந்து L.சுப்பிரமணியனை கௌரவிக்க வேண்டியது வேண்டியது தன் கடமை என்று கூறினார்.

IRspeaking

L.சுப்பிரமணியத்தின் வியத்தகு திறனை சிலாகித்துப் பேசினார். கலை இறைவன் கொடுத்த வரமாக இருப்பினும் அவரின் அசுர சாதகம், பயிற்சி, இசைக் கல்வி இவை மூலமாகத் தான் இன்று உலகம் புகழும் பெரிய கலைஞனாக அவர் இருக்கிறார் என்றார். ‘There is no success without discipline. There is no discipline without sacrifice’ என்றார். வாசிக்கும் போது போ போட்டுக்கொண்டே ப்ளக் பண்ணும் வித்தையை இவர் தான் ஆரம்பித்து வைத்தார் என்று கூறினார். Pluck பண்ணும் போது bow போட வராது ஆனால் அதை அவ்வளவு இலாகவமாக அவர் செய்வார் என்றார். அதற்குப் பெயர் pizzicato என்றார்.

‘இசை என்பது இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக கர்நாடக இசை இந்த பூமியில் பாடப்பட்டும் வாசிக்கப்பட்டும் வந்திருக்கிறது. அவை எல்லாம் காற்றில், ஆகாசத்தில் நிறைந்திருக்கிறது. நான் பாடலுக்கு tune போடும்போது அந்த அலைவரிசையில் இருந்து தேவையானதை pickup பண்ணிப் போடுகிறேன். இசை எனக்குத் தானாக வருகிறது. நான் இசையைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. இசை தான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது’ என்றார்.

‘ஒவ்வொரு முறையும் இசைக் கருவியை எடுத்து ஒரே ராகத்தை வாசித்தாலும் ஒரு முறை வாசிப்பதைப் போல இன்னொரு முறை இருக்காது. அந்த நேரத்தில் நமக்கு என்ன வருமோ அது தான் இசை. இதை நான் மட்டும் சொல்லவில்லை, எல்லா இசைக் கலைஞர்களையும் கேட்டுப் பாருங்கள் அனைவருமே இதனை ஒப்புக் கொள்வார்கள்’ என்றார். அதை மேடையில் இருந்த கலைஞர்கள் தலை அசைத்து ஆமோத்தித்தனர்.

‘எத்தனையோ வெளிநாடுகள் போய் வந்திருக்கிறேன் ஆனால் சென்னையை நெருங்கும் போதே எனக்குள் ஒரு vibration feel ஆகும். அது நம்ம பூமிக்கே பிரத்தியேகமானது. நானே நினைப்பேன், சரஸ்வதி தேவி எங்கும் இருப்பவள் தானே அது ஏன் நம் பூமியில் மட்டும் அவளை நான் பிரத்யேகமாக உணருகிறேன் என்று. நம் பாரத பூமி புண்ணிய பூமி, அதனால் தான்’ என்றார். அருணகிரிநாதர் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி உரையை முடித்துக் கொண்டார்.

விருது பெற்ற அனைவருக்கும் மாலை , சால்வை அணிவித்து, பட்டத்தை அவரவர்களுக்கு அன்புடன் அளித்தார். புகைப்படத்திற்கு சரியாக போஸ் செய்யாதவர்களை மறுமுறை இவரே அழைத்து சரியாக படம் எடுக்கும்படி புகைப்பட கலைஞர்களிடம் சொல்லி எடுக்க வைத்தார். மூன்றாவது வரிசையில் இருந்ததால் அவர் பேசுவது ஒலி பெருக்கி இல்லாமலேயே கேட்க முடிந்தது. பெண் கலைஞர் உமாவுக்கு மாலையை கையில் கொடுத்தார், அவர் அதை கையிலேயே வைத்துக் கொள்ள அணிந்து கொள்ளுங்கள் என்று சிரித்தபடி சொன்னார். ஆடியன்ஸில் இருந்து இதற்கு சிரிப்பலைகள் கிளம்பின 🙂

இளையராஜா சுப்பிரமணியத்திற்கு மாலை அணிவிக்கிறார்

இளையராஜா சுப்பிரமணியத்திற்கு மாலை அணிவிக்கிறார்

 

இருவரும் அன்புடன் ஆணைத்துக் கொள்கின்றனர்

இருவரும் அன்புடன் ஆணைத்துக் கொள்கின்றனர்

L.சுப்பிரமணியன் ஆரம்பித்துள்ள சாபா என்னும் சேவை நிறுவனம் வெளியிட்ட, இசையை வீட்டிலேயே பயில உதவும் CD யை இளையராஜா அவர்கள் வெளியிட நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். அப்பொழுது சுப்பிரமணியத்தின் மகனும் மகளும் மேடைக்கு வந்தனர்.

நன்றி உரை சொன்ன நால்வருமே இளையராஜா கையினால் இந்த விருதினைப் பெறுவது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று கூறினர். நால்வருமே தங்கள் பெற்றோர்கள் தான் தங்களின் இந்த நிலைக்குக் காரணம் என்று ஆத்மார்த்தமாக கூறினர். அதில் உமா பேசும்போதே இமோஷனல் ஆகிவிட்டார். L.சுப்பிரமணியம், வெளிநாட்டில் நம் இசை மதிக்கப் பட வேண்டும், தனி வாத்தியமாக வயலின் மேடையில் வாசிக்கப் படவேண்டும் என்று எப்படி தன் தந்தை ஆசைப்பட்டார் என்றும் அதுக்குத் தகுந்தார் போல் தன்னை உழைக்கவும் வைத்தார் என்றும் கூறினார். தன் அண்ணனுக்கும் தந்தைக்கும் தான், தான் பெரும் விருதுகள் அனைத்தும் போய் சேரவேண்டும், ஆனால் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றார். மேலும் சுப்பிரமணியம் நன்றி நவிலும் பொழுது இளையராஜா pizzicato பற்றி இவ்வளவு கூர்ந்து கவனித்துத் தன்னைப் பாராட்டியது பற்றி தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும் கூறினார்.

பாடகர் ராமை கௌரவிக்கும் பொழுது

பாடகர் ராமை கௌரவிக்கும் பொழுது

கிருஷ்ணா கான சபா செயலாளர் நன்றி உரை ஆற்றும் பொழுது இளையராஜா இன்று வந்து இந்த விழாவினை சிறப்பித்ததால் தான் அரங்கம் நிரம்பி வழிகிறது, ஆனால் முதலில் இவ்விழாவிற்கு இவரை எப்படி அழைப்பது, அழைத்தால் வருவாரா என்றெல்லாம் கவலைப்பட்டேன். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு தான், வந்துவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விழா முடிந்தவுடன் கூட இளையராஜா மேடையில் அனைவரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து சுப்பிரமணியத்தின் மகனும் மகளும் L. சுப்ரமணியத்துடன் சேர்ந்து வாசிக்கும் இசை கச்சேரி தொடங்க இருந்ததால் சிலர் மட்டுமே அரங்கை விட்டு வெளியேறினர். முக்கால்வாசி பேர் கச்சேரியைக் கேட்க அமர்ந்தபடியே இருந்தனர்.

கிரீன் ரூமுக்குப் போனால் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற முடியுமோ என்று தோன்றியதால் நான் விரைவில் அரங்கில் இருந்து வெளிவந்து கிரீன் ரூம் பக்கம் சென்றேன். யாராவது தடுத்தால் நகர்ந்து போய்விடலாம் என்று தான் சென்றேன். அங்கு அங்கு தடுக்க யாருமே இல்லை. இன்னும் சிலருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் இளையராஜா. என்னருகில் இன்னொருவர் நின்று கொண்டிருந்தார்.

போட்டோ எடுத்த பிறகு நல்லி குப்புசாமி பின் தொடர இவர் முன்னே வந்தார். என்னுடன் நின்றவர் ராஜாவுக்கு ரொம்ப பழக்கமானவர் போலிருக்கிறது. வணக்கம் சொல்லி ஓரிரு வார்த்தை அன்புடன் பேசினார், இவ்வளவு அருகில் இருக்கிறாரே என்று அவரை ஒரு புகைப்படம் எடுத்து, பின் குனிந்து அவர் கால்களை தொட்டு வணங்கினேன். அவர் செருப்பு அணிந்திருந்ததால் செருப்பைத் தாண்டி அவர் கால்களை தொட்டு வணங்கி எழுந்து உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்று சொன்னேன். கொஞ்சம் கூட கோபப் படாமலும், நகர்ந்து கொள்ளாமலும் சிரித்தபடி ஆசிர்வதித்தார். எனக்கு முட்டியில் அடிப்பட்டிருப்பதால் சிரமப்பட்டே குனிந்து வணங்கினேன், பொறுமையாக இருந்தார்.

காலில் விழுந்து வணங்கும் முன்

காலில் விழுந்து வணங்கும் முன்

பின் அவர் வெளியே வந்தார். பலரும் ஆடோகிராப் கேட்டார்கள், கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, அதற்குப் பின் காரில் ஏறி சென்றார். என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, அவரை நம்ஸ்கரிக்கும் பேறு எனக்கு எப்படி கிடைத்தது என்று! நான் ராஜாவின் இசையை அனுபவிக்கும் அளவுக்குக் கூட ஞானம் இல்லாதவள். ஆனால் ஒருவர் இசை ஞானி என்று கண்டு கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவை இறைவன் கொடுத்திருக்கிறான். அதன் பலனாய் அவரை வணங்கி அவர் ஆசியை பெரும் பாக்கியம் பெற்றேன். இறைவனுக்கு நன்றி 🙂