கண் அவன் – சிறுகதை

“அம்மா செல்வம் அண்ணனை கொன்னுட்டாங்கம்மா, கண் முன்னாடியே செத்துட்டாரும்மா ” படாரென்று வாசக் கதவைத் திறந்துகொண்டு பயமும் அழுகையுமாக மூச்சிரைக்க ஓடி வந்து சொன்னாள் வீட்டு வேலை செய்யும் கோகிலா. “என்ன, என்ன சொல்ற” வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை லதாவுக்கு. லேசாக அடிவயிற்றில் ஒரு கலக்கம் ஏற்பட்டாலும் உடல் முழுவதும் ஒருவித நிம்மதி பரவுவதை அவளால் உணர முடிந்தது.

“அவங்க வீட்டு வாசலிலேயே போட்டுத் தள்ளிட்டாங்கமா. கத்தியால தல, கை, காலுன்னு எல்லா எடத்திலேயும் வெட்டிட்டாங்க. பாடியை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டுப் போயிருக்காங்கம்மா, போலீசெல்லாம் வந்திருக்கு. கட்டப் பஞ்சாயத்துல ஏதோ பிரச்சினையாம். இவரோட எதிரிங்க தான் ப்ளான் பண்ணிக் கொன்னுட்டாங்களாம்” கோகிலா மேல் விவரம் சொல்லிக் கொண்டே போனாள்.

கணவருக்கு போன் பண்ணினாள் லதா. ‘என்னங்க, செல்வத்தை யாரோ அவங்க வீட்டு வாசலிலேயே கொன்னுட்டாங்களாம்.’

‘அப்படியா? நீ வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகாதே. வாட்ச்மேனை வாசலிலேயே இருக்கச் சொல். கொஞ்சம் வேலை இருக்கு அது முடிச்சிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன்.”

தன் வாழ்க்கை தடம் மாறிப் போனதை நினைத்துப் பார்த்தாள். சிங்கப்பூரில் அவளின் வாழ்க்கை சுவர்க்கம் போல் இருந்தது. கணவன் சந்திரன் பெரிய MNCல முக்கிய அதிகாரி, கை நிறைய சம்பளம். மீரா, ராதா என்று மணி மணியாய் இரண்டு பெண் குழந்தைகள். குழந்தைகள் மேல் உசிரையே வைத்திருக்கும் கணவன். பொதுவாகவே மகள்களுக்கும் அப்பாக்களுக்கும் தனிப் பாசம் உண்டு. இவர்கள் வீட்டிலேயும் அதுதான். அவன் எந்த வெளிநாடு போனாலும் அவர்களுக்காக ஒரு பெட்டி நிறைய பரிசுப் பொருட்களுடன் தான் திரும்பி வருவான். வீட்டோடு இருந்து வீட்டு வேலை பார்க்க மரியா என்றொரு பெண். சமையலில் இருந்து பள்ளிக்குக் குழந்தைகளை தயார் செய்வது வரை அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்வாள். கிட்டி பார்டிகள், வார இறுதி டின்னர்கள், சுற்றுலாப் பயணங்கள், வருடா வருடம் லீவுக்கு இந்தியப் பயணம் எனச் சீரான மகிழ்ச்சியான இல்லறம். பேச்சும் சிரிப்புமாக எந்தப் பார்டியிலும் அவளே ராணியாக இருப்பாள். நாற்பத்தியொரு வயது என்று தெரியாத அளவு அவளுடைய அழகும் இளமையும் அவளுக்குக் கூடுதல் பிளஸ் பாயின்ட்!

indian-wife

சந்திரனின் நிறுவனம் சென்னையில் புதிய கிளையைத் தொடங்கி அவனையே அதன் நிர்வாக இயக்குநர் ஆக்கியதும் அவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன தான் சென்னையில் இருந்து நான்கு மணி நேர விமானப் பயண அளவிலேயே சென்னைக்கு மிக அருகிலேயே சிங்கப்பூர் இருந்தாலும் அவனுக்கு இந்தியாவில் அதுவும் சென்னையில் வாழ வேண்டும் என்பது தான் நெடு நாள் ஆசை. அவர்கள் நான்கு வருடத்திற்கு முன் அசோக் நகரில் வாங்கியிருந்த பிளாட்டில் வாடகைக்குக் குடியிருந்தவரும் வீட்டைக் காலி செய்திருந்தார். மீராவும் ராதாவும் ஏழாவதும் ஒன்பதாவதும் படித்து வந்தனர். இந்தியா திரும்புவதற்குச் சரியான வாய்ப்பும் நேரமும் இதைவிட அமையாது என மகிழ்ந்தான் சந்திரன்.

‘நீ முதல்ல சென்னைக்குப் போய் வீட்டை சரி செஞ்சு குழந்தைகளுக்கு நல்ல ஸ்கூல்ல சீட் வாங்கிடு, நடுவில ஏதாவது வேலை போட்டுக்கிட்டு நானும்  வரேன். பசங்களைப் பார்த்துக் கொள்ளத் தான் மரியா இருக்காளே. நீ முதல்ல போய் முக்கியமான வேலைகளைப் பார்’ என்று சொல்லி லதாவை முதலில் சென்னைக்கு அனுப்பினான் அவன்.

அசோக் நகர் வீட்டின் பூட்டைத் திறக்க முயற்சி செய்து முடியாமல் திணறிக் கொண்டிருந்த அந்த நிமிடம் அவள் கண் முன்னே இன்று நடந்தது போல இருக்கிறது. வெள்ளை சட்டை வெள்ளை பேன்ட், நெற்றியில் சிறிய விபூதி கீற்று, நடுவில் குங்குமப் பொட்டு, வலக்கையில் தங்க ப்ரேஸ்லெட்,  இடக்கையில் தங்க கைக் கடிகாரம் என எதிர் பிளாட்டில் இருந்து வெளிப்பட்டவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள் லதா. சாவியைப் பலமுறை திருப்பியும் பூட்டு திறக்காததைக் கவனித்த அவன் இயல்பாக வந்து அவளிடம் இருந்து சாவியை வாங்கி எளிதாகப் பூட்டை திறந்துக் கொடுத்தான்.

‘புதுசா இந்த வீட்டுக்குக் குடி வரீங்களா?’ என்றவனிடம், ‘இல்ல நான் தான் ஹவுஸ் ஓனர். வீட்டை சரி செய்ய வந்திருக்கேன், நாங்களே குடி வரப் போறோம்’ என்றாள்.

‘அப்படியா? என் பேரு செல்வம், என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க’ என்றவனிடம் உடனே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதை சட்டென்று அவளால் உணர முடிந்தது.

‘நான் லதா சந்திரன்’ அறிமுகப்படுத்திக் கொண்டு புன்னகைத்தபடியே அவள் வீட்டினுள் நுழைந்தாள். பின்னாடியே அவனும் நுழைவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

‘என்ன, வீடு இவ்வளவு தூசியாக இருக்கு! இருங்க நான் போய் எங்க வீட்டு வேலைக்காரியை வரச் சொல்றேன்’ என்று தன் வீட்டுக்குக் கிளம்பியவனிடம், ‘இல்லை நான் கீழே வாட்ச்மேனிடம் வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டிருக்கேன்’ என்று இவள் சொன்னதை அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்காரி கோகிலா இவள் வீட்டு வேலைக்காரியாகவும் வந்தாள்.

பின் வரும் நாட்களில் இவ்வாறு பலப் பல உதவிகளை அவன் செய்து கொடுத்தான். புது சிம் கார்ட் வேண்டும் என்றால் அடுத்த அரை மணி நேரத்தில் அண்ணன் கொடுத்துவிட்டு வரச் சொன்னாரு என்று ஒருவன் கொடுத்துவிட்டுச் செல்வான். ரேஷன் கார்ட் இல்லாமலேயே புது கேஸ் கனெக்ஷன் கிடைத்ததும் அவன் புண்ணியத்தில் தான். வீட்டுக்கு வெள்ளையடிக்கப் பெயிண்டர், மத்த மராமத்து வேலைகளுக்கு நல்ல கார்பெண்டர் என்று கேட்டாலும் கேட்காமலேயும் அவனிடம் இருந்து உதவிகள் கிடைத்தன.

‘இவரு யாரு, என்ன வேலை செய்யறாரு’ என்று கோகிலாவிடம் வந்த நாளே கேட்டாள்.

‘அவரு பெரிய ஆளுங்கட்சி ஆளும்மா. கட்சில எல்லாரையும் அவருக்குத் தெரியும். மார்கெட்ல நிறைய கடையெல்லாம் வெச்சிருக்காரு’ என்று அவளுக்குத் தெரிந்த விஷயத்தை சொன்னாள். பிறகு ஒரு சமயம் அவன் திருமணம் ஆகாதவன், அம்மா மற்றும் அண்ணன், அண்ணி அவர்கள் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாய் வாழ்கிறவன் என்று தெரிந்து கொண்டாள். பக்கத்துத் தெருவில் இருந்த அவர்கள் பழைய வீட்டை இடித்துப் பெரியதாகக் கட்டிக் கொண்டிருப்பதால் இந்த பிளாட்டில் அவன் தன் குடும்பத்துடன் தாற்காலிகமாக வசித்து வருகிறான் என்பதும் தெரிந்தது.

‘முப்பத்தஞ்சு வயசு இருக்காது, ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலை’ என்று கோகிலாவிடம் ஒரு முறை கேட்டபோது, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாதுமா. நானும் இவங்க இந்த பிளாட்டுக்கு வந்ததில் இருந்து தான் அவங்களுக்கு வேலை செய்றேன்’ என்று கூறினாள்.

ஏதாவது விசாரிக்க தினம் இரு முறையாவது அவள் வீட்டிற்கு அவன் வர ஆரம்பித்தான். வெறும் அத்தியாவசியப் பொருட்களுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தாள். ‘ஏன் ஒரு டிவி கூட இல்லாமல் இருக்கீங்க, வாங்க எனக்குத் தெரிஞ்ச கடையில் வாங்கி தரேன்’ என்று அவன் காரிலேயேக் கூட்டிக் கொண்டு போய் வாங்கிக் கொடுத்தான். வேறு பல சந்தர்ப்பங்களிலும் நானே உங்களை அங்கே டிராப் செய்கிறேனே என்று அவள் வேறு வேலைகளுக்காக வெளியே செல்லும்பொழுதும் அவளை தன் காரிலேயே அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.

ஒரு முறை டெல்லியில் வேலை இருந்ததால் சந்திரன் அங்கே வந்துவிட்டு சென்னை வழியாக சிங்கப்பூர் சென்றான். ஆனால் சில மணி நேரங்களே அவனால் இருக்க முடிந்தது. வீட்டில் அவள் செய்து கொண்டிருந்த மாறுதல்களும் புதுப்பித்தலும் அவனுக்கு மிகவும் பிடிந்திருந்தது. சமையல் அறையை முழுதுமாக சிங்கப்பூர் வீட்டில் இருப்பது போல மாற்றியமைத்துக் கொண்டிருந்தாள். கழிப்பறைகளில் டைல்ஸ், கிளாசட் எல்லாம் புதுசாக போடும் வேலையும் நடந்து வந்தது.

‘எல்லாம் சூப்பரா இருக்கு. ஆனா சீக்கிரமா சிங்கப்பூர் வந்திடு, பசங்களும் நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

பள்ளியில் அட்மிஷன் வாங்குவது தான் அவளுக்குப் பெரும் பாடாக இருந்தது. ஒரு முறை அவள் கணவனிடம் தொலைபேசியில், ‘இன்னும் எவ்வளவு ஸ்கூல் ஏறி இறங்கறதுன்னு தெரியலை. இங்க ஸ்கூல் அட்மிஷனே கிடைக்காதுன்னு நினைக்கிறேன். யாரையாவது தெரிஞ்சிருந்தா தான் ஏதாவது நடக்கும் போல இருக்கு’ என்று குறைப்பட்டுக் கொண்டிருந்தபோது உரையாடலைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த செல்வம், அவள் கணவனுடன் பேசி முடித்ததும்,

‘என்னங்க ஒரு வார்த்தை என்னை கேக்கக் கூடாதா? நம்ம ஏரியால இருக்கிற பெரிய ஸ்கூல் கலைவாணி வித்யாலயாவிலேயே நான் சீட் வாங்கித் தரேன். நாளைக்கு டீடையில்ஸ் எல்லாம் எடுத்து வெச்சு ரெடியா இருங்க. காலைல பத்து மணிக்கு பிரின்சிபாலை போயி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அடுத்த நாள், அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் பிரின்சிபாலைப் பார்க்கவே முடியாது என்று அடிக்காதக் குறையாக இவளை துரத்திய பிரின்சிபாலின் உதவியாளர் சிரித்த முகத்துடன் இருவரையும் வரவேற்று டீ கொடுத்து உபசரித்து, செல்வத்தைப் பார்த்துக் ‘கொஞ்சம் இருங்க சார் மேடம் இப்போ ப்ரீ ஆயிடுவாங்க’ என்று குழைந்து நிற்பதைப் பார்த்து வியந்து போனாள். இரண்டு பெண்களுக்கும் சீட் மிக எளிதாகக் கிடைத்தது. லதாவால் நம்பவே முடியவில்லை.

‘என்ன ட்ரீட் எல்லாம் கிடையாதா? இவ்வளவு பெரிய ஸ்கூலில் இடம் வாங்கிக் கொடுத்திருக்கேன்’ என்று சிரித்துக் கொண்டே கேட்ட செல்வத்துடன் ட்ரீட் கொடுக்க பெரிய ஹோட்டலுக்கு போனதும் எதார்த்தமாகத் தான். எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் மிகக் குறுகிய காலத்தில் நட்பு வேறாக மாறியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய், ஒரு நல்ல கணவனுக்கு மனைவி ஆகிய அனைத்தும் மறந்து தன்னை இழந்தாள். முதல் முறை இருந்த பயம் அடுத்த முறை இல்லை. ஒரு முறை பல முறை ஆனது. வேண்டாத அசுரப் பேய் ஒன்று அவளைப் பிடித்துக் கொண்டதோ என்று கூட நினைத்தாள்.

வீட்டு வேலைகள் முடிந்தன, அவள் கணவனும் சீக்கிரம் வந்து சிங்கப்பூர் வந்து பேக்கிங் வேலையை ஆரம்பிக்க அவசரபடுத்தினான். கிளம்பும் போது செல்வம், “நீ திரும்பி வரும் போது இங்க ப்ளாட்ல இருக்கமாட்டேன். கட்டி முடிச்ச எங்க வீட்டுக்குப் போயிருப்பேன், இன்னும் ரெண்டு வாரத்துல கிரஹப்பிரவேசம்” என்று கூறினான்.

சிங்கப்பூர் போனதில் இருந்து சென்னையில் இருந்த போது இருந்த மாதிரி ஓய்வாக ஆக அவளால் இருக்க முடியவில்லை. அங்கே மற்றவர்களை வேலை வாங்கினால் போதுமானதாக இருந்தது. சிங்கப்பூரில் வேலைக்கு மேல் வேலை. ரொம்ப ஓய்ச்சலாக இருந்தது. திடீரென்று அவளுக்கு மாதவிடாய் ரொம்ப நாள் தள்ளிப் போனது போலத் தோன்றியது. சில மாதங்களாகவே மாதவிடாய் சரியாக வரவுதில்லை. இந்தியா போவதற்கு முன் அவள் மருத்துவரிடம் சென்று காண்பித்தப் பொழுது, உங்களுக்கு மெனோபாஸ் சமயம் என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு வருடத்தில் முழுவதுமாக நின்றுவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. வேறு பிரச்சினை ஒன்றும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறியிருந்தார்.

டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவர் எழுதிக் கொடுத்த மருத்துவ பரிசோதனைகளை செய்தாள். லதா மருத்துவரை அடுத்த நாள் பார்க்க சென்ற போது, புன்முறுவலுடன் வரவேற்ற மருத்துவர், ‘Good news! பயப்படும்படி ஒன்னும் இல்லை, நீங்கள் pregnant’ என்றார் சிரித்தபடி.

தலையில் இடி இறங்கியது என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறாள். அதை அந்தக் கணம் உணர்ந்தாள். ‘என்ன சொல்றீங்க? எனக்கு மெனுபாஸ் டைம் என்று போன தடவை சொன்னீங்களே?’ என்றவளிடம் ‘ஆமாம், அனால் மெனுபாஸ் ஆகலையே. ஆகக் கூடும்னு தானே சொன்னேன்” என்றார் மருத்துவர்.

‘இது ப்ளான் பண்ணலை டாக்டர், அபார்ஷன் பண்ணிடலாமா?’ என்றவளிடம் ‘நான் அதற்கு ஒப்புதல் தர முடியாதுமா. கிட்டத்தட்ட நாலு மாசம் ஆகிவிட்டது. உங்க ஹீமோக்ளோபின் கவுண்டும் குறைவா இருக்கு. ரொம்ப அநீமிக்காக இருக்கீங்க. அபார்ஷன் சேப் கிடையாது’ என்றார். ‘ஏன் பயப்படறீங்க? நிறைய பேர் முதல் குழந்தையே இந்த வயசுல பெத்துக்கறாங்க’ என்றார் அவர் விஷயம் புரியாமல்.

வீட்டுக்கு எப்படி திரும்பி வந்தோம் என்று புரியாத அளவு திக்பிரமை பிடித்து இருந்தாள். செல்வத்துக்குப் போன் போட்டாள். விஷயத்தைச் சொன்னாள். ‘எப்படி ஆச்சு? நாம் பாதுகாப்போடு தானே உடலுறவு கொண்டோம்’ என்றான் அவன். இவள் என்ன பதில் சொல்ல முடியும், விதி வலியது என்பதைத் தவிர!

‘நீ என்ன செய்யப் போற?’ என்று கேட்டான். அபார்ஷன் செய்ய முடியாததைக் கூறினாள். ‘அப்போ உன் கணவனிடம் அவன் குழந்தைன்னு சொல்லிடு’ என்றான். ‘அதுவும் முடியாது, நாங்க பல மாசங்களாப் பிரிஞ்சிருக்கோம். நான் சென்னை வரும் முன்பு அவர் ஆபீஸ் வேலை விஷயமாக சைனா போயிருந்தார்’ என்றாள். அவன் பேசாமல் போனை வைத்து விட்டான்.

இரண்டு நாட்கள் துளி தூக்கம் இல்லை. நரக வேதனை. சென்னையில் இருந்தபோது சந்திரனின் பெற்றோர்கள் வந்து உதவுவதாகக் கூறினார்கள். இவள் தான் இங்கே பெயிண்டிங்கும் மற்ற வேலைகளும் நடப்பதால் உங்களுக்கு தூசி தும்பு உடம்புக்கு ஆகாது என்று வரவிடாமல் தடுத்துவிட்டாள். அவர்கள் உடன் இருந்திருந்தால் இந்த மாபெரும் தவறு நடக்காமல் இருந்திருக்குமோ என்று நொந்தாள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! வேறு வழியில்லை சந்திரனிடம் சொல்லியே ஆகவேண்டும். விவாகரத்து செய்து விடுவானோ. தஞ்சாவூரில் இருக்கும் தாய் வீட்டுக்குப் போய் மானம் கெட்ட வாழ்வு வாழவேண்டுமோ என்று ஆயிரத்தெட்டு சிந்தனைகள்.

pencildrawing4

வீட்டில் குழந்தைகள் எதிரில் பேச முடியாது. ‘சாயந்திரம் செட்டியார் முருகன் கோவில் போய் வரலாமா?’ கணவனைக் கேட்டாள். ‘நீங்க ஆபிசில் இருந்து நேரா வந்திடுங்க, நான் அங்கே வந்துடறேன்’ விநோதமாகப் பார்த்தான் சந்திரன். எப்பொழுது லீவு நாட்களில் குடும்பத்தோடுக் கோவிலுக்குப் போவது தான் வழக்கம்.

மாலை இறைவனை வணங்கி முருகனின் உதவியை மன்றாடிக் கேட்டுக் கொண்டு கோவிலை வலம் வந்து பிராகார மண்டபத்தில் அமர்ந்தாள். அவனும் அவளுடன் வலம் வந்து அமர்ந்து அவளே பேசட்டும் என்று பொறுமை காத்தான்.சில நிமிட மௌனத்திற்குப் பிறகு,

‘நான் பிரெக்னன்டாக இருக்கேன்’ என்றாள். எதோ சொல்ல வாயைத் திறந்தவன் வாயில் இருந்து பேச்சே வரவில்லை. பேயறைந்தது போல முகம் வெளிறியது. ‘என்ன சொல்ற நீ? உனக்கு என்ன பைத்தியமா? நீ எப்படி கர்பமாக இருக்க முடியும்?’ என்றான் கோபமாக.

‘இல்லை உண்மை தான். டாக்டரிடம் போயிருந்தேன். இப்போ நாலு மாசம் என்றாள்’

‘சென்னையில் என்ன ஆச்சு?’ என்றான். சுருக்கமாகச் சொன்னாள். அதற்குப் பிறகு அவன் ஒன்றுமே பேசவில்லை. வீடு வந்த பிறகு உண்ணாமல் வேறு அறைக்கு உறங்கச் சென்றான். உறங்கினானா என்று தெரியாது. மறு நாள் காலை அவள் இருக்கும் இடம் வந்தான்.

‘நான் உன்னை விவாக ரத்து செஞ்சா என் குழந்தைகளுக்குத் அம்மா இல்லாமல் போயிடும். அது மட்டும் இல்லை, அவங்களுக்கு இப்போ எல்லாம் புரிஞ்சிக்கிற வயசு. நீ செஞ்ச இந்தக் காரியம் அவங்களை நிலைகுலையச் செஞ்சிடும். வாழ்க்கை முழுக்க இந்த அவமானத்தை அவங்க சிலுவையாத் தூக்கணும். ஏளனப் பேச்சுக்களையும் உறவினர் மத்தியில் அவமானத்தையும் தாங்க வேண்டிய அவசியமும் தேவையும் அவர்களுக்கு இல்லை. அதனால உன் வயிற்றில் வளரும் இந்தக் குழந்தை என் குழந்தையாகவே வளரட்டும். இனி இதைப் பற்றிப் பேச வேறு எதுவும் இல்லை, பேசவும் வேண்டாம்’ என்று கூறி அலுவலகம் கிளம்ப ஆயத்தம் ஆனான்.

சென்னை வந்த பிறகு குழந்தை பிறந்தது. அவளின் துரதிர்ஷ்டம் குழந்தை அச்சு அசலாக செல்வத்தைப் போலவே இருந்தது. வினோத் என்று பெயரிட்டனர். மீராவும் ராதாவும் தம்பி பாப்பாவின் மேல் மிகவும் ஆசையாக இருந்தனர். சந்திரனை எதுவும் பாதிக்கவில்லை. அவனும் குழந்தையிடம் அன்புடன் கொஞ்சி விளையாடினான். லதாவை எந்த முறையிலும் கேவலமாகவோ மரியாதைக் குறைவாகவோ நடத்தவில்லை. முழுக் கவனத்தையும் அவன் அலுவலகப் பணியில் செலுத்தினான்.

சந்திரன் இல்லாத சமயம் செல்வம் வந்து ஒரு முறை குழந்தையைப் பார்த்துவிட்டுச் சென்றான். லதா நடுங்கிப் போய்விட்டாள். ‘நீங்க தயவு செய்து என்னையோ குழந்தையையோ இனிமேல் பாக்க வராதீங்க. எனக்கு நீங்க செய்யும் மிகப் பெரிய உதவியா இது இருக்கும்” என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

இப்பொழுது வினோத்துக்கு 14 வயது ஒன்பதாம் வகுப்பு. பள்ளி செல்கையில், வருகையில் அவனை செல்வம் கவனிக்கிறான் என்று அவளுக்குத் தெரியும். அனால் அதற்குப் பிறகு செல்வம் வீட்டுக்கு வரவில்லை என்பதே அவளுக்கு ஒரு பெரிய நிம்மதி. மீராவுக்கும் ராதாவுக்கும் திருமணம் முடிந்தாகிவிட்டது. இதோ இப்பொழுது அவன் இறப்பு செய்தி!

திடீரென்று வாசலில் ஒரே சத்தம். யாரோ குடித்துவிட்டுக் கத்துவது போல கேட்டது. வெராந்தாவில் இருந்த மீன் தொட்டி சல்லென்று தரையில் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு பதைபதைத்துக் கதவை திறக்க முற்பட்டபொழுது வாசலில் ஒருவன்,

‘எங்கண்ணன் அங்கே செத்துக் கிடக்கிறாரு என்னடி நீ இன்னும் புள்ளையைக் கூட்டிக்கிட்டு அங்க வரலை. அண்ணன் புள்ள தான் அண்ணனுக்குக் கொள்ளிப் போடணும் தெரியுமா?’ என்று ஒருவன் கத்துவது கேட்டது. அடப்பாவி எல்லாருக்கிட்டேயும் சொல்லிட்டு தான் செத்துப் போயிருக்கியா?

ஐயோ சீக்கிரம் வரேன்னு சொன்னாரே இன்னும் அவரைக் காணோமே என்று அவசர அவசரமாகக் கணவனுக்குப் போன் போட்டாள் லதா. ரிங் போய் கொண்டே இருந்தது சந்திரன் போன்காலை எடுக்கவில்லை. டிரைவிங்கில் எடுக்கவில்லையோ என்று வாட்ச்மேன் செல்லுக்கு போன் பண்ணி, ‘வாசல்ல கலாட்டா பண்றவங்களை கொஞ்சம் வெளியே போகச் சொல்லுப்பா’ என்றாள்.

சமாதானம் செய்து வந்தவனை வெளியேற்றும் சத்தம் வாசலில் கேட்டது. வந்தது யாராக இருக்கும். யாருக்கும் தெரியாது என்று இவள் நினைத்திருந்த விஷயம் இப்படி அவமானமாக நாலு பேர் கேட்கும்படி போட்டு உடைக்கப்பட்டு விட்டதே. அக்கம் பக்கத்தில் யாராவது கேட்டிருப்பார்களா? வினோத் ஸ்கூலில் இருந்து வரும் நேரம் வேறு!

திரும்பத் திரும்ப கணவன் செல்லுக்கு போன் போட்டுக் கொண்டே இருந்தாள். கடைசியில் போன் எடுக்கப்பட்டது ஆனால் பேசியது சந்திரன் இல்லை. ‘நான் ஆழ்வார்பேட்டை ட்ராபிக் போலிஸ் கேசவன் பேசறேன், யார் பேசறது?’ என்றார் ஒருவர் மறுமுனையில்.

‘நான் மிசஸ் லதா சந்திரன் பேசறேன். இது என் கணவர் செல் போன். எப்படி உங்களிடம் வந்தது’ என்றாள்?

‘அம்மா, பக்கத்தில் பெரியவங்க யாராவது இருக்காங்களா? கூட உறவுக்காரங்க யாரவது இருக்காங்களா?’

‘இல்லை, நான் தனியா தான் இருக்கேன். என் மகன் இன்னும் ஸ்கூலேர்ந்து வரலை, என்ன விஷயம் என்கிட்டே சொல்லுங்க’ என்றாள். ‘உங்க கணவர் பெரிய விபத்தில் சிக்கிக் கவலைக் கிடமாக இருக்கிறார். நீங்க ஆழ்வார்பேட்டை பில் ராத் ஹாஸ்பிடலுக்கு சீக்கிரமா வாங்க’ என்றார் கேசவன்.

வாசலில் வாட்ச்மேனிடம் ‘வினோத் ஸ்கூலேர்ந்து வந்தவுடன் பக்கத்து பிளாட்டில் இருக்கச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் பறந்தாள். ‘மீரா, உடனே பில்ராத் ஹாஸ்பிடலுக்கு வா, அப்பா சீரியசாம். கார் அக்சிடென்ட். நீ ராதாவுக்கும் போன் பண்ணி உடனே பெங்களூரில் இருந்து கிளம்பி வரச் சொல்லு’ என்று அவசரமாக போன் செய்தாள்.

மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் அங்கே நின்றுகொண்டிருந்த போலிஸ்காரரிடம் சென்று ‘நீங்க தான் கேசவனா?’ என்றாள்.

‘ஆமாம்மா, கூட யாரும் வரலையா?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

‘இல்லை, இப்போ என் மகள் வந்து விடுவாள். என் கணவர் எங்கே இருக்கார் சொல்லுங்க’ என்றாள்.

‘ரொம்ப சாரிம்மா, அவர் ஸ்பாட்டிலேயே இறந்து விட்டார். ரெட் லைட்டை கவனிக்காமல் வேகமாக திரும்பியபோது பஸ் இடித்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உள்ளே போய் பார்க்கலாம், உங்க மகள் வரட்டும்’ என்றார். லதாவால் எதையும் நம்ப முடியவில்லை. தன்னை சுற்றி எதோ நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் உணர்ந்தாள். ஆனால் என்னவென்று புரியவில்லை. மகளும் மருமகனும் மருத்துவமனையில் படிவங்களைப் பூர்த்தி செய்து கட்ட வேண்டிய பணத்தைக் கட்டி, செய்யவேண்டியவைகளைச்  செய்து உடலைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினர்.

அதற்குள் விஷயம் தெரிந்து வீட்டை சுற்றி உறவினர்கள் நண்பர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வினோத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னார்கள். பெண்கள் இருவரும் அப்பாவின் உடல் மேல் விழுந்து புரண்டு அழுதனர். அப்பா தலைப்பகுதியை விட்டு வினோத் விலகவில்லை.

‘பசங்க மேல உசிரையே வெச்சிருந்தான், இப்படி அவசரமா ஆக்சிடென்டில செத்துப் போயிட்டானே’ என்று யாரோ ஒருவர் பொதுவில் சொல்லிக் கொண்டு இருந்தார். இந்தத் துயரத்திலும் செல்வத்தின் ஆட்கள் யாரவது வந்து குழப்பம் செய்வார்களோ என்று லதாவின் மனம் விழித்துக் கொண்டு கவலைப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை. இந்த சமயத்தில் அவர்கள் வந்து எதுவும் செய்வது மிக ஈனமானச் செயலாக இருக்கும் என்று அவர்களே உணர்ந்து இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது.

புது உயிரைத் தனதாக்கிக் கொண்டு ஒரு முறை அவள் மானத்தைக் காப்பாற்றியவன் இம்முறை உயிரைக் கொடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறான்.

pencildrawing2

காலையில் மின் மயானத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் காலை 11மணி. வினோத் சிறுவனாக இருந்தாலும் காரியங்கள் அனைத்தையும் அவனே செய்தான். சந்திரனின் உடல் உள்ளே இழுக்கப்பட்டு தீக்கு இரையாயிற்று.

அப்பொழுது தாரை தப்பட்டை முழங்க, பட்டாசுகள் வெடிக்க மலர்கள் சொரிய செல்வத்தின் உடலும் அதே மயானத்திற்கு வந்தது. தந்தையின் அஸ்திக்காக ஓரமாக தன் அக்காக் கணவனுடன் நின்றுக் கொண்டிருந்த வினோத்திடம் வந்தார் செல்வத்தின் அண்ணன்.

‘தம்பி இந்த கற்பூரத்தைக் கொஞ்சம் தொட்டுக் கொடுப்பா’ என்று ஒரு தட்டை நீட்டினார். யாரிவர், எதற்கு நம்மை அணுகுகிறார் என்று யோசிக்கும் நிலையில் வினோத்தும் அவன் மாமாவும் இல்லை. எதுவும் புரியாவிட்டாலும் கற்பூரத்தைத் தொட்டுக் கொடுப்பதில் என்ன தவறு என்று நினைத்து வினோத் தொட்டுக் கொடுத்தான்.

 

 

The pencil sketches for this story were taken from this website, with thanks: https://croquisdecrayon.wordpress.com/tag/women-pencil-sketch/

and this website: http://imgur.com/9QmnO

68 Comments (+add yours?)

 1. S.T. Arasu
  Jul 13, 2014 @ 10:34:03

  ஒரு பெரிய நாவல் எழுத வேண்டிய அளவுக்கான சங்கதிகள் கொண்ட கதை இது. நல்ல முயற்சி! வாழ்த்துகள்!

  Reply

 2. நாட்டி நாரதர்® (@mpgiri)
  Jul 13, 2014 @ 10:41:16

  ஆண்களை மனப்பக்குவம் உள்ளவர்களாக காட்டியிருக்கிறீர்கள். விதி வினோத்தை இரண்டு கிரியைகளையும் செய்ய வைத்துவிட்டது.பெண்ணை பலவீனமானவளாக காண்பிக்க எப்படி தைரியம் வந்தது ..போர்…ஆமாம் போர்

  Reply

 3. Anonymous
  Jul 13, 2014 @ 10:53:39

  Nandraka irukku kadhai. Aanal oru nerudal-thappu seithavalai ithandikkavillaiye iraivan.

  Reply

 4. Anonymous
  Jul 13, 2014 @ 11:10:41

  Nice attempt.All the best.

  Reply

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  Jul 13, 2014 @ 11:36:07

  வணக்கம்
  கதை மிக அருமையாக உள்ளது வாழ்க்கை யதார்த்தத்தை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Reply

 6. balaraman
  Jul 13, 2014 @ 11:39:37

  புனைவே எழுதினாலும் பொதுவா ஆண்களை விட பெண்களைத் தான் உயர்ந்த குணம் உள்ளவர்களாகக் காட்டப்பாடுவார்கள். ஆனா, இந்தக் கதை அந்த வகையில் ஒரு மாற்றாக இருந்தது.

  தலைப்பு அருமை – கண்+அவன் = கணவன். 🙂

  கதைக்கு கொடுத்த விவரிப்புகளப் பாத்தா முதல் சிறுகதை மாதிரியே தெரியல. நல்ல முயற்சி. தொடருங்கள்!

  Reply

 7. சைதை தமிழரசன்
  Jul 13, 2014 @ 11:41:52

  மிரட்டிப் புட்டிங்க போங்க… வாழ்த்துக்கள்.

  Reply

 8. Anonymous
  Jul 13, 2014 @ 11:54:20

  சான்ஸே இல்லம்மா பிரமாதம் ,ஆண்களையே சாடும் கதைக்களங்களங்கலில் முற்றிலும் மாற்று

  Reply

 9. kamalesh (@itskamalesh)
  Jul 13, 2014 @ 11:58:57

  Cannot believe its a first attempt.. Congrats!! A very bold story line, it reminds me of the great director Balachander who used to make bold attempts.. his movies always portray Strong women. You too have portrayed the lead character, a very strong woman.

  Reply

 10. @tekvijay
  Jul 13, 2014 @ 12:00:42

  அருமையான முயற்சி! பலரும் சொல்வதுபோல், முதல் முயற்சி எனவே தோன்றவில்லை!

  கதை பற்றி பெரிதாக விமர்சிக்கும் அறிவு எனக்கில்லை என்றாலும், எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்!

  லதாவுக்கும் சந்திரனுக்கும் ஒரு முழு அன்யோன்யம் இல்லாமல் இருந்திருக்கிறது . இல்லையென்றால், இந்த செல்ஃபோன் காலத்தில், செல்வம் பற்றின விஷயத்தை, அதாவது இப்படி ஒருவன் அறிமுகம் ஆகி இருக்கிறான், அடிக்கடி வருகிறான் உதவி செய்கிறான் போன்றவை எல்லாம் கணவனிடம், பகிர்ந்திருப்பார் மனைவி. அதிக அன்யோன்யம் இல்லாமல் இருந்திருந்தாலும் கூட, தனியாக குடும்பத்தை விட்டு வந்து தங்கும் பெண், நிச்சயம், மகள்கள் மற்றும் இந்தியாவிலுள்ள உறவுகளுடன் தொடர்பில் இருந்திருப்பார். கிடைத்த இந்த சிறியகால தனிமையை, அவரையும் அறியாமல் அவர் மனது, விரும்பி ஏற்றுக்கொண்டிருக்காது. ஹ்ம்ம், வாழ்வியல் சிக்கல்கள்!

  தொடர்ந்து எழுதுங்கள் மா! குறிப்பாக, ஆண் பெண் உறவுச்சிக்கல்கள் பற்றி நீங்கள் நன்றாக, குறிப்பாக சமநிலையுடன் எழுதுவீர்கள் என தோன்றுகிறது!

  Reply

 11. lotusmoonbell
  Jul 13, 2014 @ 12:44:51

  சந்தர்ப்பவசத்தால் நேர்ந்த தவறால் தாய்மையடைந்த பெண் தன் கணவனிடம் தைரியமாக அதைச் சொல்வதும், தன் குழந்தைகளுக்காக பெருந்தன்மையோடு அதை ஜீரணித்த கணவனும்,மாலையளித்தவனும், இடையே வந்தவனும் ஒரே நாளில் மரணிப்பதும்……வித்யாசமான, சுவாரஸ்யமான கதை சுஷிமா. ரசித்தேன். அடுத்த கதை எப்போது?

  Reply

 12. மழை!!
  Jul 13, 2014 @ 14:42:31

  நல்ல எழுத்து நடை.. பொருத்தமான படங்கள். முதல் கதை மாதிரி தெரியவே இல்லைமா.. கலக்கறீங்க. அடுத்த ஆளுமை நீங்கதான். அடுத்த கதையை எதிர் பாக்கிறோம். :)) கலக்குங்க மா

  Reply

 13. npgeetha
  Jul 13, 2014 @ 15:57:33

  நிச்சயம் வித்தியாசமான கதைதான். பகீர் திருப்பங்கள். பதிவுகள் போலவே கதைக்கும் எழுத்து அழகாகக் கை வருகிறது. நிறைய எழுதுங்கள் அம்மா 🙂

  Reply

 14. உமா க்ரிஷ் (@umakrishh)
  Jul 13, 2014 @ 16:11:02

  உண்மையைச் சொல்லணும்னா ரொம்ப அசுவராசியமாகத் தான் படிக்க ஆரம்பித்தேன்.. இது மாதிரி கதைகளைச் சொல்வது கத்தியில் நடப்பதைப் போல.இம்மி பிசகினாலும் வேறு மாதிரி ஆகிடும்..ஓரளவு அதில அபாயக் கட்டம் தாண்டி விட்டீர்கள் 🙂 கதைத் தலைப்பும் சந்திரன் தீர்க்கமான தெளிவான முடிவும் மிகப் பிடித்திருந்தது..முதல் முயற்சியே நன்று…எனக்கு இந்தச் சிறுகதையை விட இதை எழுத வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைத் தான் மிகவும் ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.தொடாத ஏரியாவே இல்ல என்கிற ரேஞ்சுக்குப் போயிடுவீங்க போல கூடிய சீக்கிரம்..இந்த வயதில் இந்தத் துடிப்பும் மன இளமையும் ,புது விசயங்களுக்கான தேடலும் உள்ளுக்குள் ஒரு சபாஷ் போட வைக்கிறது.. வாழ்த்துகள் 🙂

  Reply

 15. உமா க்ரிஷ் (@umakrishh)
  Jul 13, 2014 @ 16:23:11

  எல்லாமே நன்றாக இருந்தது ,சிங்கப்பூரில் சொர்க்கம் போல் இருந்தது எனில் எப்படி இப்படி ஒருவனிடம் தன்னை இழக்க முடியும் இந்தப் பெண்? கணவருடன் அன்னியோன்யம் கொண்ட தோழிகள் உண்டு எனக்கு. ஒன்று விடாமல் ஒப்பிப்பாள் .காலம் காலமாக கதைகளில் , அறிந்ததில் கேள்விப்பட்டதில் ஒருவர் மனம் வெளியே அலை பாய்ந்தால் நிச்சயம் வீட்டில் ரிலேஷன்ஷிப் நல்லபடி இருக்காது என்றே மனம் படிந்து விட்டது. அதனால் தானோ என்னவோ எல்லாம் கொண்ட பெண் படக்கென ஒருவனின் உதவியில் விழுந்தாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (ஒருவேளை அதற்கு நம் அடிப்படைக் குணம்,சமூகப் பார்வை காரணமாகக் கூட இருக்கலாம் ) லதா நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே செல்வதை தடுத்திருக்கலாம்..அவசியத்திற்கு உறவுகள் வரவழைத்து துணைக்கு வைத்திருக்கலாம்.. ஏதோ சம்திங் மிஸ்ஸிங்… அடுத்த அடுத்த முயற்சிகளில் சூழல்கள் ,இன்னும் அழுத்தமாக கோர்வையாகக் கொண்டு வர வாழ்த்துகள்

  Reply

  • amas32
   Jul 13, 2014 @ 16:38:19

   இதற்கு பெயர் தான் கெமிஸ்ட்ரி என்பது 🙂 சிலரிடம் காரணமில்லாமல் ஈர்ப்பு ஏற்படும். எவ்வளவு நல்ல வாழ்கை இருந்தாலும் கணவனை விட வேறொருவருடன் உறவு ஏற்படுகிறது பலருக்கு, அதற்குக் காரணம் physical attraction. சந்தர்ப்பம் கிடைக்கும் போது தவறு இழைக்காமல் இருப்போர் மன வலிமை உடையோர், அதை பயன்படுத்தி வீழ்வோர் மனவலிமை இல்லாதவர் அல்லது அதை பெரிய தவறாக எண்ணாதவர்.

   Reply

 16. உமா க்ரிஷ் (@umakrishh)
  Jul 13, 2014 @ 16:47:05

  நிஜம் தான் .நம்ம mind set ல இருந்து பார்க்கிறப்ப இப்படித்தான் தெரியும்:) ஆனால் அதையும் தாண்டிய ஈர்ப்புகள் இருக்கவே செய்கின்றன என்பதை சமூகத்தில் ஆங்காங்கே பார்க்கவே செய்கின்றோம்.. காலம் காலமா கதா நாயகனோ/நாயகியோ தவறு செய்தால் அதற்கு ஆழமா ஒரு காரணம் இருக்கும் என்றே நம்ப வைத்து விட்டது தமிழ் சினிமா..இதுல நீங்க திடீர்னு கெமிஸ்ட்ரி,பிசிக்கல் டச் ன்னு சொன்னா…பட்டிக்காடு மனசு ஒத்துக்க மாட்டேங்குது.. ஆனாலும் யதார்த்தம்ன்னு ஒன்று இருப்பதால் உங்க பாயின்ட் கூட ஒத்துப் போறேன். அதுக்குத் தான் சொன்னேன் நீங்க எடுத்துக் கொண்ட கதைக் களம் துணிச்சலானது என்று.

  Reply

 17. Shiv (@shivBuddh)
  Jul 13, 2014 @ 16:54:20

  Amma, முதல் ??? What an Opening!!! and “locking us over flow”!! Wide Talent on show.. And the Title.. கணவன்+ அவன் – கண்அவன் , WOW!!! Much Appreciations.

  Reply

 18. Raji
  Jul 13, 2014 @ 17:20:24

  Sushi you have again proved you are a genius. I feel very sorry for character chandran. The lady escaped shame. Why.

  Reply

  • amas32
   Jul 14, 2014 @ 02:00:38

   Why not Raji? Why should you be judgemental of a female’s action all the time? Mistakes happen in life. How we live after that shows one’s greatness.

   Reply

 19. rajinirams
  Jul 13, 2014 @ 17:53:51

  செம,முதல் சிறுகதை என்று நம்ப முடியாத அளவு நல்ல சுவாரஸ்யமான விறுவிறுப்பான நடை,நல்ல அழுத்தமான கதை.ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பியிருந்தால் நிச்சயமாக பிரசுரமாகியிருக்கும்.பாராட்டுக்கள்

  Reply

 20. Lakshmanan p.samy
  Jul 14, 2014 @ 01:58:25

  என்ன, ஜெயகாந்தன் பாணியிலே தூள் கிளப்பி இருக்கீங்க!

  Reply

 21. easwaran-India
  Jul 14, 2014 @ 02:09:24

  unmaiyal punaiyappattirinrathu, mikka nanri

  Reply

 22. easwaran-India
  Jul 14, 2014 @ 02:11:50

  உண்மைகள் இந்த கதையில் பின்னப்பட்டு உள்ளது ,தொடருங்கள் மேலும்
  நன்றி

  Reply

 23. ஜெ பாண்டியன்
  Jul 14, 2014 @ 02:48:51

  முதல் கதை போல் இல்லை…சிறப்பான வடிவம் கொடுத்து உணர்வுப்புரிதலோடு கதை நகர்ந்தது சிறப்பு..

  Reply

 24. Siva
  Jul 14, 2014 @ 05:55:06

  மிகவும் அழகான அருமயான கதை. சந்திரனின் கேரக்டர் மிகவும் எதார்த்தமாக உள்ளது. (பிரக்டிகல் ஆ அவ்வாறு இருப்பது ரொம்ப கஷ்டம் ) சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவரின் வாழ்கையை எவ்வாறு புரட்டி போடுகிறது…கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது. இது உங்கள் முதல் கதை போல இல்லை! Very nice.

  Reply

 25. kanapraba
  Jul 14, 2014 @ 10:53:41

  உங்களின் நிறைய வாசிப்பு அனுபவம், முதல் கதை என்ற நினைப்பை இருத்தவில்லை. இதைச் சிறுகதை என்பதை விட நெடுங்கதைக்கான கட்டுக்கோப்பு உண்டு. சாதாரணமாக கடந்து போக முடியாத கத்தி மேல் வைக்கும் விஷயத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  Reply

 26. amas32
  Jul 15, 2014 @ 03:28:42

  நன்றி 🙂 அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் 🙂

  Reply

 27. ravie
  Jul 15, 2014 @ 04:41:00

  ithu enna kathaiya

  Reply

 28. முத்தலிப்
  Jul 15, 2014 @ 05:37:20

  இது உங்க முதல் கதைங்குறது பொய். ஒரு நாவலுக்கான கண்ட்டெண்ட்ட ஒரு சிறுகதைல எப்டி கொண்டுவந்தீங்கன்னு ஆச்சர்யமாருக்கு. தைரியமான ப்ளாட். தொடர்ந்து எழுதுங்க.

  கதையின் மொழி குறித்து ஒரு சின்ன வேண்டுகோள்

  1) “புதுசா இந்த வீட்டுக்குக் குடி வரீங்களா”
  “இல்ல நான் தான் ஹவுஸ் ஓனர். வீட்டை சரி செய்ய வந்திருக்கேன், நாங்களே குடி வரப் போறோம்”

  2) “எப்படி ஆச்சு? நாம் பாதுகாப்போடு தானே உடலுறவு கொண்டோம்”
  “அப்போ உன் கணவனிடம் அவன் குழந்தைன்னு சொல்லிடு”

  இந்த ரெண்டு டயலாக்கும் அதே இருவர் வெவ்வேறு சமயங்களில் பேசுவது. இந்த இரண்டிலும் உள்ள சின்ன வேற்றுமைகளலாம் அடுத்த கதைகள்ல இன்னும் கவனமா இருப்பீங்கன்னு தெரியும்.

  இந்த மாதிரி கத்திமேல் நடக்கும் கதையை எடுத்து ஜாக்கிரதையா கையாண்டதுக்கே ஹாட்ஸ் ஆப்.

  இன்னும் நிறைய எழுதுங்க

  Reply

  • Vijay
   Jul 16, 2014 @ 05:02:53

   முத்தலிப் சொன்னதை ஆமோதிக்கிறேன். முதல் உரையாடல் பேச்சு நடை. அடுத்து கொஞ்சம் இலக்கியத்தனமா இருக்கு. இந்த மாதிரி விசயத்தை பேசும் இருவர் இவ்வளவு இலக்கியமயமா பேசறது நம்பமுடியாது. Go with natural conversational flow, you have used English / Tanglish in other parts of the story.

   Reply

   • amas32
    Jul 16, 2014 @ 05:30:43

    Those changes were also made with the feedback I received initially. Will make sure the mistakes don’t appear in my next story, hopefully I write one 🙂

 29. amas32
  Jul 15, 2014 @ 06:23:49

  நன்றி முத்தலிப் 🙂 அடுத்தக் கதை இன்னும் பெட்டரா வரும்னு நம்புவோம் 🙂

  Reply

 30. parthiban anbazhagan
  Jul 15, 2014 @ 11:16:35

  மைக்ரோ நொடியில் மனம் மாறுற அளவுக்கு செல்வத்தோட உறவுகள் நல்லவங்கன்னா.. அப்பறம் ஏ ப்ளாட்ல வந்து வாட்ச்மேன் இருக்கப்பவே கலாட்டா பண்ணாங்க..?

  Reply

  • amas32
   Jul 16, 2014 @ 05:34:04

   மைக்ரோ நொடியில் மாறவில்லை. பெரும் சாவு/இழப்பு அங்கு ஏற்பட்டிருக்கு. யாருக்கும் அந்த நேரத்தில் மனிதாபமான உணர்ச்சிகள் தான் மேலோங்கி நிற்கும். முதலில் கலாட்டா செய்தவர்களைக் கூட திரும்ப செல்ல நினைத்தபோது அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் தடுத்திருக்கலாமே.

   Reply

 31. ரகு
  Jul 16, 2014 @ 03:25:35

  படிக்கும் போது பெரிய எழுத்தாளர் எழுதியது போல் இருந்தது. வாழ்த்துக்கள்.
  முதல் முயற்சியே அருமையாய் உள்ளது.

  Reply

 32. ரகு(@japan_raghu)
  Jul 16, 2014 @ 03:26:29

  😉

  Reply

 33. eakalaivan1
  Jul 16, 2014 @ 06:32:35

  முதல் கதை என்று உணர முடியாத அளவிற்கு கதையின் நடை. கதை படித்து முடித்த பிறகும், அப்படியே சிறிது நேரம் நம் மனதில் தங்கி விடும் உணர்ச்சி மிகுந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் அம்மா 🙂

  Reply

 34. @chinnapiyan
  Jul 16, 2014 @ 13:37:11

  ஏராளமாக புத்தகறிவும் பட்டறிவும் கொண்டுள்ள உங்களுக்கு கதை சொல்வது எப்படியென்று கற்று தரவா வேண்டும். இயல்பாகவே மிக தாராளமாக சரளமாக வாக்கியங்களை கோர்த்து சுவாரஸ்யமாக சூழ்நிலையை விவரித்து சொல்ல வருகிறது என்பது ஒரு வரபிரசாதம்.
  நல்ல இனிமையான குடும்பத்தை சேர்ந்த மாது தவறி விட்டாள் என அறியும்போது இந்த பாழும் மனது ஏற்க மறுக்கிறது. எங்கோ ஓரிரு இடங்களில் நடைபெறும் கெட்ட விஷயங்களை பரபரப்புக்காக உண்மை சம்பவம் என அதை பரவலாக்கி பின்னர் ஒருகாலத்தில் இதெல்லாம் சகஜம் என் மக்களை எண்ணவைப்பது ஊடகங்களின் வியாபார தந்திரம். அத்தகைய பரபரப்புக்கு நாமும் துணை போக வேண்டுமா. எடுத்தாட்கொள்ள எவ்வளவோ நல்ல கருத்துக்கள் உள்ளனவே.
  கதையை படிக்கும் முன் எழுதியவரின் பிம்பம் ஒன்று படிப்பவரின் மனதில் ஏற்கனவே பதிந்திருக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல.
  “புது உயிரைத் தனதாக்கிக் கொண்டு ஒரு முறை அவள் மானத்தைக் காப்பாற்றியவன் இம்முறை உயிரைக் கொடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறான்.” என்னை கவர்ந்த இடங்களில் ஒன்று.
  உலகுக்கு தெரியாதவரைக்கும் ஓகே . தெரிந்தபின் உயிர் வாழ்வது என்பது ஒரு நல்ல பெண்மணிக்கு கடினம்.

  முதல் கதை என்பது யாராலும் நம்பமுடியாத. அங்க நிக்கிறீங்க நீங்க. நன்றி வாழ்க வளர்க 🙂

  Reply

  • amas32
   Jul 17, 2014 @ 02:49:39

   எடுத்துக் கொண்ட subject சாதாரணமா எல்லாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று என்று தெரியும். இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதை நான் highlight பண்ணுவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. இந்த extreme situationஐயும் ஒரு கணவன் எப்படி கையாள்கிறான் என்றே சொல்ல வந்தேன். sensationalismகாக இந்தக் கதையை எழுதவில்லை.

   தவறுகள் நிகழ்கின்றன. அதற்குப் பின் வாழ்க்கையை வாழ்வது நம் கையில்.

   உங்கள் கருத்துக்கள் என்றுமே எனக்கு முக்கியம், படித்துப் பின் நீண்ட பின்னூட்டம் இட்டதற்கு நன்றி :-))

   Reply

   • @chinnapiyan
    Jul 18, 2014 @ 08:03:56

    நன்றி புரிந்து கொண்டேன்.:) அடுத்த கதை இளைய தலைமுறைக்கு வாழை பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நகைச்சுவை கலந்து அவர்களின் சிந்தையை சீர்தூக்கும் கதையாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன். அதற்கான திறன் தங்களிடம் உள்ளது.
    மீண்டும் நன்றி. வாழ்த்துகள் 🙂

 35. Anonymous
  Jul 17, 2014 @ 11:37:42

  “என்ன தான் சென்னையில் இருந்து நான்கு மணி நேர விமானப் பயண அளவிலேயே சென்னைக்கு மிக அருகிலேயே சிங்கப்பூர் இருந்தாலும்”

  ipadi irunthirukalam

  என்ன தான் சென்னையில் இருந்து நான்கு மணி நேர விமானப் பயண அளவிலேயே சிங்கப்பூர் இருந்தாலும்

  Reply

 36. Ganesh
  Jul 17, 2014 @ 13:07:22

  வாழ்க்கையின் எதார்த்ததை நேர்மையாக எதிர்கொள்ளும் மனிதர்களை தைரியமாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்… சுவாரஸ்யம். நன்றிகள்…

  Reply

 37. vasanthigopalan (@vasanthigopalan)
  Jul 29, 2014 @ 08:01:23

  எல்லோரும் சொல்ற மாதிரி முதல் கதை மாதிரியே இல்ல.Flow நல்லா இருக்கு.நிஜம் மாதிரியே தோணுது. தொடருங்கள்.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: