ரெண்டு விரலில் ஒரு விரலைத் தொடச் சொல்லி ட்விட்டரில் கேட்டேன், ஒரே ஒருவர் தான் விரலைத் தொட்டார். அதுவும் அவர் தொட்ட விரல் விமர்சனம் எழுதாதே என்று நான் நினைத்திருந்த விரலை. ஆனாலும் படத்தைப் பார்க்கச் செலவழித்தப் பணத்துக்கு விமர்சனம் எழுதியாவது ஒரு பலனைப் பெற வேண்டும் என்று எழுதுகிறேன்.
R.B.குருதேவ், கோபிநாத் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். Simply superb! பாண்டிச்சேரியில் நடக்கிறது கதை, ஊரை அணு அணுவாக ரசிக்க முடிகிறது, நன்றி அவர்களுக்கு. மேலும் கடைசியில் நடக்கும் பைக் ரேசில் அவர்களின் பங்களிப்பு அமர்க்களம்!
அதர்வா சிறந்த நடிகர். நல்ல உயரமும், உடற்கட்டும் அவருக்குக் கூடுதல் பலம். இந்தப் படத்தின் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். முரளியின் மகன் என்பதால் அவரைப் பார்க்கும் போது கொஞ்சம் he tugs at my heart strings, அதுவும் தந்தையை இழந்த பாத்திரத்தில் நடிப்பதால்.
தேவதர்ஷினிக்கு அண்ணி, அக்கா ரோலில் இருந்து ப்ரமோஷன், அதர்வாவுக்கு அம்மா. நன்றாகச் செய்திருக்கிறார். சச்சு பாட்டியாக வருகிறார், எந்த விதத்திலும் கதைக்கு வலு சேர்க்காதப் பாத்திரம், கலப்பு மணத்தை narsim அழகாக வசனத்திலேயே சொல்லிவிடுகிறார், அதற்கு சச்சுவை வீணடித்திருக்க வேண்டாம். இந்தப் படத்தின் அடுத்த பலம் நர்சிம்மின் வசனம். ஒரு இடத்தில் கூட அதிகப்படியானப் பேச்சு இல்லை. ரெட்டைப் பொருளில் வசனங்கள் இல்லை.
ஹீரோயின் ப்ரியா ஆனந்த். இப்போ அஞ்சான் படம் வரை அச்சு பிச்சு பாத்திரங்கள் தான் ஹீரோயின்களுக்கு. நல்ல வேளை இதில் ப்ரியா ஆனந்துக்கு ஜெனிலியா பாத்திரம் இல்லை. அறிவுடன் பேசுகிறார். ராய் லட்சுமி, ஜெகன் நண்பர்களாக வருகிறார்கள்.
G.V. பிரகாஷ் இசை, பெண்ணே பெண்ணே பாடல் நன்றாக உள்ளது. மற்றப்படி திரைக் கதையே சரியாக அமையாத இந்தப் படத்துக்குப் பாடல்களும் பின்னணி இசையும் தலை வலியைத் தான் தருகின்றன. Editing by T.S.சுரேஷ். ரேஸ் சீனில் சிறப்பாக உள்ளது அவரின் கைவண்ணம்.
சம்பந்தமே இல்லாமல் திடீரென்று ஒரு flashback. ஏழாம் அறிவு வில்லன் நிகுயின் தான் இதிலும் வில்லன். பறந்து பறந்து அடிக்கிறார். செமத்தியாக வாங்குகிறார் அதர்வா. படத்தின் நடுவில் டெம்போவே இல்லாமல் தொய்கிறது கதை. (சூமோ இருக்கிறதா என்று கேட்காதீர்கள் ப்ளீஸ்) இஷ்டத்துக்கு நடு நடுவே நடனம், யார் யாரோ ஆடுகிறார்கள். சோகமான சிசுவேஷனிலும் டூயட் வருகிறது.
எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் போஸ் அவர்களே, படம் எடுக்க முதலில் கதை வேண்டும் ஐயா! சூப்பரான ரேஸ் காட்சிகளுக்காகப் படம் ஓடாது. தயாரிப்பாளரும் எந்த நம்பிக்கையில் பணம் போடுகிறார் என்று தெரியவில்லை. சரி விடுவோம், அவர்களுக்கே இல்லாத கவலை நமக்கெதுக்கு? ஆனால் தமிழகத்தில் நல்ல படங்கள் மட்டுமே ஓடும் என்பது பல முறை நிரூபணம் ஆன ஒன்று!