திருவண்ணாமலை கிரிவலம் – நூல் அணிந்துரை

 

 

girivalam2

சொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘திருவண்ணாமலை கிரிவலம்’ என்னும் ஆன்மிக புத்தகம் கிரி வலம் செய்ய விரும்போவோர்க்கு ஒரு நல்ல எளிமையான கையேடு. திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பும் படிக்கும்போதே அங்கே போய்விட்டு வந்த திருப்தியைத் தருகிறது.

திருவாரூரில் பிறந்தாலும், காசியில் இறந்தாலும் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அப்படி பட்ட ஒரு தலத்தைப் பற்றியும் கிரி வலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அழகாக எழுதியுள்ளார்கள் நூல் ஆசிரியர்கள்.

கிரிவலம் என்றாலே ஒரு மலைப்பு வந்துவிடும், அதைப் போக்கி, எப்படி வலம் வரவேண்டும், வழியில் தரிசிக்க வேண்டிய கோவில்கள், அஷ்ட லிங்கங்கள் பற்றிய தகவல்களும் அளித்து நம்மை இந்தப் புத்தகம் கிரி வலத்துக்குத் தயார் செய்கிறது.

திருவண்ணாமலையின் இன்னும் ஒரு சிறப்பு அங்கு பல ஆசிரமங்கள் இருப்பது தான். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் சூரத் குமார் ஆகியோரின் வரலாறுகளை ஆசிரியர்கள் மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார்கள். ஆசிரமங்கள் அமைந்திருக்கும் பகுதி, திறந்திருக்கும் நேரம், மற்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

கிரிவலத்தை மையமாக எழுதிய புத்தகம் ஆனதால் கார்த்திகை தீபம் பற்றி இதில் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அது பற்றிய தகவலும் சிறிது சேர்த்திருக்கலாமோ என்பது என் எண்ணம்.

ஜெ.பியின் அருமையான கோட்டோவியங்கள் திருவண்ணாமலையை நம் கண் முன் கொண்டு நிறுத்துகிறது. பலப் பல ஓவியங்கள் – அண்ணாமலையார், விசிறி சாமியார், ரமண மகரிஷி, ஆசிரம சூழல், மலையின் பல வடிவங்கள், இவை புத்தகத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.

தங்கத் தாமரை பதிப்பகம்

சென்னை60002௦

விலை ரூ.25

girivalamback

அமர காவியம் – திரை விமர்சனம்

Amara-Kaaviyam-Movie-Wallpapers

தம்பி உடையான் படைக்கு அஞ்சான், அண்ணன் உடையான் திரைக்கு வர அஞ்சான்! எல்லாப் புகழும் ஆர்யாவுக்கே. நல்ல தயாரிப்பில் தம்பியை மிளிர வைத்துவிட்டார். ஜீவா ஷங்கரின் பங்களிப்பையும் சேர்த்தால் சத்யாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய யோகமே! அனால் அதைப் பிரமாதமாகப் பயன் படுத்திக் கொண்டது சத்யாவின் திறமைக்கு ஒரு சான்று.

சத்யா முன்பு படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் தான் அவரின் உண்மையான விசிடிங் கார்ட். நாயகி மியா ஜார்ஜும் சத்யாவும் கார்த்திகாவாகவும் ஜீவாவாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். ரோமியோ ஜூலியட் மேற்கத்தியப் பண்பாட்டுக் கதை, லைலா மஜ்னுவும், அம்பிகாபதிபதி அமராவதியும் என்றோ நடந்த கதை. ஆனால் அந்தக் காதல்களின் அழுத்தத்தையும் ஆழத்தையும் இந்தப் படத்தில் கொண்டுவந்திருப்பாது ஜீவா ஷங்கரின் வெற்றி.

இவ்வளவு இயல்பான பாத்திரப் படைப்புகளை சமீபத்தில் வந்தத் திரைப்படங்களில் நான் பார்க்கவில்லை. அப்பா, அம்மா, அக்கா, நண்பன், மருத்துவர், போலீஸ் என ஒவ்வொரு பாத்திரம்மும் நூறு சதவிகிதம் யதார்த்த வாழ்க்கையில் எப்படி இருப்பார்களோ அப்படியே படத்தில் இருக்கிறார்கள். இது உண்மை கதையா என்று தெரியாது, ஆனாலும் பல உண்மைக் கதைகளை சொதப்பியத் திரைப்படங்களை நாம் பார்த்திருப்பதால் இந்தப் படம் தெளிவாக எடுக்கப்பட்டிருப்பது உண்மையில் ஒரு welcome change.

இயக்குநர் ஜீவாவின் assistant ஷங்கர், ஜீவாவின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டதும் அல்லாமல் தன் கதையின் பாத்திரத்துக்கும் அந்தப் பெயரையே சூட்டி தன் குருவுக்கு மரியாதை செய்துள்ளார். அவரே ஒளிப்பதிவாளரும்! எண்பதுகளின் ஊட்டியை கண் முன்னே வண்ண ஓவியமாக நிறுத்துகிறார். கதை, திரைக் கதை, வசனம், ஒளிப்பதிவு அனைத்தும் ஒருவரே. ஒருப் பொறுப்பில் கூட சோடை போகவில்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம். Editing செய்திருப்பவர் சூர்யா. Slick!

படத்துக்கு இசை என்று ஜிப்ரான் பெயர் மட்டும் வருகிறது, கூடவே இளையராஜா என்றும் இருக்கணும். எண்பதுகளில் நடக்கிற கதை என்பதை ஆங்காங்கே ஒரு வரி ராஜாப் பாடலை ஒலிக்க வைத்து உணர்த்தி விடும் இயக்குநர், இசைஞானியின் பெயரையும் creditsல் சேர்த்திருக்க வேண்டும்.

சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மாறும் போது ஒவ்வொருவரும் மாறும் இயல்பை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்/கதாசிரியர் ஜீவா ஷங்கர். வசனங்களும் கச்சிதம். சிறந்த திரைக் கதையே திரைப் படத்தின் வெற்றிக்கு வழி என்று இந்தப் படம் நிருபித்து உள்ளது.

கொஞ்சம் கூட மெலோட்ராமா இல்லாமல், படம் முடிந்ததும் கனத்த இதயத்தோடு வெளியே வராமல் அதே சமயம் காதலர்களின் உணர்ச்சிகளை பார்ப்பவர்கள் முழுவதும் உள்வாங்கி கொள்ள வைத்து வெளியே அனுப்புகிறார்கள் Team Amara Kaviyam!

amarakaviyam