தத் – ஈஸ்வர தத்துவம் / பகவத் கீதை பகுதி-2

Bhagavat Gita and Krishna4

ஒரு கதை உண்டு. உலோபியான ஒருவன் இறக்கும் தருவாயில் தன் மகன் நாராயணனிடம் தன்னிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலைச் சொல்ல நாராயணா என்று அழைக்கிறான். அந்த சமயத்திலேயே அவன் உயிர் பிரிகிறது. இறக்கும் தருவாயில் தெரியாமலேயே நாராயண நாமத்தைச் சொன்னாலும் அவன் சொர்க்க லோகம் போகிறான்! கதை வேடிக்கையானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நாம் இறக்கும் நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாகத் தான் நம் அடுத்தப் பிறவியில் பிறக்கிறோம் என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார்.

இவ்வுலகத்தை வவிட்டுப் பிரியும் நேரத்தில் இறைவனை நினைத்தால் இறை பதத்தை அடைவோம். ஆனால் திடீரென்று கடைசி நிமிடத்தில் இறைவனை நினைக்கத் தோணாது. அதற்குப் பயிற்சி அவசியம். எப்பொழுதும் நம் மனம் இறைவனையே எண்ணியிருந்தால் தான் எந்தக் கணத்தில் நம் ஆத்மா உடலை விட்டுப் பிரிகிறதோ அப்பொழுதும் இறைவனை நினைத்த வண்ணம் இருக்கும்.

இது எப்படி முடியும்? அதற்கு பகவத் கீதையில் பதில் வைத்திருக்கிறார் கண்ணன். ஒன்பதாம் அத்தியாயத்தில் இறைவனை வழிபட எளிய வழிகளைச் சொல்லிக் கொடுக்கிறார். ‘இலை, பூ, பழம் காய், தண்ணீர், இவற்றை யார் பக்தியோடு எனக்கு அர்ப்பணிகிறானோ அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்கிறார். அதுவும் முடியவில்லையா, ‘நீ எதை செய்கிறாயோ, உண்கிறாயோ, உடுக்கிறாயோ அதையே எனக்கு அர்ப்பணித்து விடு’ என்கிறார். இதைவிட எளிமையான வழிபாடு இருக்க முடியுமா? இதையே நாம் தினம் தினம் செய்தால் அதுவே நம் வாழ்க்கை முறையாகிவிடுகிறது. அதன் பின் நாம் கண்ணனுடன் இணைவது உறுதி.

lotusflower

எங்கெங்கு காணினும் கண்ணனடா என்பதை நாம் உணர்வதற்கான முதல் வழி அவனின் பெருமைகளை உணர ஆரம்பிப்பதே தான்.

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
 என்று பாடுகிறார் மகா கவி சுப்பிரமணிய பாரதி.

பலவற்றில் உள்ள ஒருமைப்பாட்டை இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்கிறோம். அப்படி பார்த்தும் கண்ணனின் பெருமைகளின் ஒரு அம்சத்தைத் தான் நம்மால் உணர முடிகிறது. கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்:

தோள் கண்டார் தோளே கண்டார்;

தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்;

தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

தோள் கண்டார் தோளே கண்டார், தாமரை மலர் பாதங்களைக் கண்டவர்கள் அதற்கு மேல் கண்களை நகர்த்த முடியவில்லை. அவ்வழகில் மயங்கி நின்றனர். கையழகைக் கண்டவர் அதோடு வேறு எங்கும் பார்க்கவில்லை. அது போல தான் நாமும் காணும் காட்சிகளிலும் நடக்கும் சம்பவங்களிலும் இறைவனின் ஒரு குணத்தை மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவனின் பெருமைகளுக்கு எல்லையே கிடையாது.

முதலில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்ட அர்ஜுனன், பிறகு ஒன்றிலேயே எல்லாவற்றையும் பார்க்க ஆசைப் படுகிறான். பலவற்றில் ஒன்றை பார்ப்பதற்குப் பேர் விபூதி. ஒன்றில் அனைத்தையும் பார்ப்பதற்குப் பேர் விஸ்வரூபம். கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணன் அல்லவா ஆதலால் அவரும் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தருகிறார். அதையும் அவனின் ஊனக் கண்ணால் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து ஞானக் கண்ணைக் கொடுக்கிறார். அந்தக் காட்சியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முடிவில் அர்ஜுனன் கண்ணனை பழைய வடிவத்தில் பார்க்க ஆசைப் படுகிறான். பக்தனுக்குக் கட்டுப்பட்டவராச்சே கண்ணன், அதனால் பழைய உருவத்தை தன் பக்தனும் நண்பனும் ஆன அர்ஜுனனுக்குக் காட்டுகிறார்.

A_Vishva-rupa_print

இறைவனைப் புரிந்து கொள்ளக் கூட விஞ்ஞானம் அவசியமாகிறது. ஆதி சங்கரர் சொல்கிறார், பரம்பொருளைப் பற்றிய  அனுமான அறிவே ஞானம், அனுபவ அறிவே விஞ்ஞானம் என்று. அந்த இரண்டையும் பெற்று வெகு சிலரே இறைவனின் உண்மை நிலையை அறிந்து கொள்கிறார்கள். நம்மிடம் ஒரு தேடல் இருக்க வேண்டும், அப்பொழுது தான் உண்மை என்னும் இறைவன் நமக்குச் சரியாகப் புலப்படுவார்.

அறிவு மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது, அறிவு ஒருவருக்கு அளிக்கும் ஒளி தான் ஞானம். ஒருவன் ஞானியாக மாறும்போது தான் அறிவின் நோக்கம் நிறைவேறுகிறது.

தத் த்வம் அசி என்கிற மகா வாக்கியமானது உபதேச வாக்கியமாகக் கருதப் படுகிறது. வேதத்தின் முழுப் பொருளை உணர்த்தும் இவ்வாக்கியத்தை தத் த்வம் அசி என்று மூன்றாகப் பிரித்துப் பொருளை உணரலாம். எளிமையாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால், தத்வமசி என்பது ‘That You Are’! பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஆறு ஆறு அத்தியாயங்கள் தத் த்வம் அசி என்ற மூன்று சொற்களின் பொருளை விளக்குவதாக அமைகிறது. நான் முன்பே த்வம் பற்றி எழுதியுள்ளேன்.

https://amas32.wordpress.com/2013/10/21/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/

த்வம் என்பது நீ/நான். நம்மை அறிந்து கொள்வது எளிது. கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் நம்மைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

ஏழாவது அத்தியாயத்தில் இருந்து பன்னிரெண்டாவது அத்தியாயம் வரை ‘தத்’ என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. தத் என்பது இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்வது. கடைசி ஆறு அத்தியாயங்கள் ‘அசி’- அதுவாகிறாய், அதாவது நாம் அது வாகிறோம். ஜீவாத்மா பரமாத்மாவின் உறவினை விளக்குகிறது இந்த மகா வாக்கியம்.

இறைவனைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அனால் அதை நமக்காக குரு சீடன் உரையாடல் மூலம் அழகாக கேள்வி பதில் வடிவில் கீதையில் ஏழிலிருந்து பன்னிரெண்டாம் அத்தியாயங்களில் கண்ணன் சொல்கிறார்.

எக்கும் இரும்பும் சேர்ந்து செய்யப்பட ஒரு நீராவி இயந்திரம் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்படும் நீராவியினால் செயல்படுகிறது. நீராவி தனித்து இருக்கும்போது இந்த ஆற்றல் அதற்கு இல்லை. அனால் அதே ஒரு ஜடப் பொருளான இயந்திரத்தில் செலுத்தப்படும் போது  செயல் திறன் மிக்கதாக மாற்றப் படுகிறது. அதே மாதிரி அழிவில்லாத பரிபூரணமான ஆத்மா உயிரற்றப் பொருள்களை ஆணைத்துப் பலவாகத் தோன்றும் இவ்வுலகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

steamengine

எல்லா பருத்தி ஆடையிலும் பருத்தி இருப்பது போல, எல்லா தங்க நகைகளிலும் தங்கம் இருப்பது போல, எல்லா நாம ரூபங்களிலும் இறைவன் சாராம்ச பொருளாக ஊடுருவி நிற்கின்றான். சிறுசும் பெரிசுமாகவும், வட்டமும் நீளமும் ஆக இருக்கும் முத்துக்களான ஜீவாத்மாக்களை பரமாத்மா எனும் நூல் ஒன்றாகக் கோக்கின்றது. நாம் தொடர்பு கொள்ளும் எல்லோரிடமும் ஆத்மாவின் உறவை மறக்காமல் பழகினால் நாம் போகும் பாதை சரியானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

நாம் இந்த வாழ்க்கைக்கு எந்த அளவு மரியாதை தருகிறோமோ அதே அளவு மரியாதையை வாழ்க்கையும்  நமக்குத் தரும் என்பது விதி. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியும், அலுப்பும் சலிப்புமாக எதிர்கொண்டால் அவ்வாறே ஆகவும் நம் வாழ்க்கை அமைகிறது.

ஆன்ம நாட்டம் கொண்டவர்கள் தேடித் தேடிக் கடைசியில் தானே ஆத்மா என்று கண்டுகொள்கிறார்கள். ‘என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள் என்னிடமே வந்தடைகிறார்கள்’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா! ‘சிந்தனை எப்படியிருக்கிறதோ அப்படியே நாம் மாறுகிறோம்’. நல்லவற்றையே திரும்பத் திரும்ப நினைத்தால் அவ்வாறே நாம் மாறுகிறோம்.சிந்தனையை ஒத்து செயலும் நல்லதாகவே அமைகிறது.

கண்ணன் நமக்கு உத்தரவாதத்தையும் தருகிறார். ஒரு வீட்டுக்குத் தேவையானப் பொருளை வாங்கினால் உத்தரவாத அட்டை அதனுடன் வருவது போல கண்ணனும் நாம் இந்த பூவுலகில் பிறக்கும் போது என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்ற உத்தரவாத அட்டையுடன் தான் நம்மை அனுப்புகிறார். அதுவும் வாழ்நாள் உத்தரவாதம்! என்னை நிரந்தரமாக வழிபடுகிறவனுக்கு நல்ல யோகத்தையும் வளங்களையும் தருவேன் என்று கண்டிப்பாக உறுதி அளிக்கிறார்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் பக்தி யோகம் செய்யும் முறைகளைப் பற்றியும், பக்த லட்சணங்களைப் பற்றி அவர் கீதையில் சொன்னதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வழிபாட்டு முறையில் சில சம்பிரதாயங்களைக் கையாள்வது தான் பக்தி என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிதும் தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன், சுயநலமின்றி, இறைவனிடம் அன்பு செலுத்துவது தான் உண்மையான பக்தி. ஒருவருக்கு வரும் சுக துக்கங்கள் நமக்கு வந்ததாகக் கருதினால் அதுவே உண்மையான அன்பு. இந்த குணங்களுடன் யாரொருவன் இருக்கிறானோ அவனே எனக்கு மிகவும் பிரியமானவன், எனக்கு மிகவும் நெருக்கமானவன் என்று ஒரு பாடலில் சொல்கிறார் கண்ணன்.

வேதங்களும் வேதாந்தங்களும் பரம்பொருள் என்றால் என்ன என்று விளக்கமாகச் சொல்வதில்லை. ஆனால் அதை சுட்டிக் காட்டுகின்றன. எல்லாம் அறிந்தவர், புராதானமவர், அணுவைக் காட்டிலும் நுணுக்கமானவர் ஆனாலும் பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருப்பவர், உலகெல்லாம் ஆட்சிப் புரிகின்ற சக்தி ரூபமானவர், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவர், சிந்தனைக்கு எட்டாதவர், சூரியனைப் போல ஒளி வீசுபவர், அறியாமை அல்லது இருளுக்கு அப்பாற் பட்டவர் என்று க்ளூக்கள் தான் தரப் படுகின்றன! இறைவனை தேடிக் கண்டு பிடிப்பது நம் கையில் தான் உள்ளது.

எல்லா மண் பண்டங்களிலும் களிமண் இருப்பது போல இறைவன் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். எல்லா பொருட்களும் என்னுள் அடங்கியிருக்கிறது ஆனால் அவற்றில் நான் இல்லை என்கிறார் எம்பெருமான். கடலில் இருந்து தான் அலைகள் உருவாகின்றன ஆனால் அலைகள் நானல்ல என்று கடல் சொல்லலாம். விழித்தவன் இடம் தான் கனவு கண்டவனும் இருக்கிறான். ஆயினும் கனவு நேரத்தில்  இருந்தவன் அவனல்ல. முற்றிலும் விழித்துக் கொண்ட நிலை வந்ததும் அவனிடம் கனவு அனுபவங்களும் இல்லை.

மனத்துடனோ புத்தியுடனோ தன்னை இணைத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது மாமுநிவனும் மகா அயோக்கியனும் ஒண்ணு தான். எழுந்தவுடன் திருடனுக்குத் திருட்டுப் புத்தியும் முனிவருக்கு இறை சிந்தனையும் தோன்றும். அவர்கள் இருவருக்கும் இயக்கமளிக்கும் உயிர் சக்தி ஒன்று தான்.

நாம் சினிமாவுக்குப் போகிறோம். கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கொலை கொள்ளை நடக்கின்றன. புயலிலும் மழையிலும் நாயகி சிக்கித் தவிக்கிறாள். ஆனால் படம் முடிந்ததும் வெள்ளித் திரையில் அதற்கான ஒரு சுவடும் இல்லை. புயல் மழையினால் திரை நனையவில்லை, கிழியவில்லை. அடிதடியினால் வெள்ளை திரையில் ரத்தக் கறையும் காணவில்லை. இறை பொருளின் நிலைமையும் அது போலத் தான்.

movie-screen

மேஜை மேல் ரேடியம் முகப்புள்ள கடிகாரம் ஒன்று உள்ளது. அந்த மேஜையின் மேல காகிதங்களும் புத்தகங்களும் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றாக நீக்கியபோது அதன் அடியில் இருந்த கடிகாரம் இருட்டிலும் ஒளிவிடுகிறது. இறைவனின் சுயம் பிரகாச பேருண்மையும் அதே மாதிரி தான். அறியாமை விலகியவுடன், சுய ஒளியில் தானாகவே அப்பேருண்மை நம் உணர்வில் தோன்றுகிறது.

கிருஷ்ணா பரமாத்மா மேலும் பதினோறாம் அத்தியாயத்தில் தன்னை அர்ஜுனனுக்கு விளக்க முற்படுகிறார், அதன் மூலம் நமக்கும்! அவர் சொல்லும் பல உதாரணங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்:

‘ஒளி அளிப்பவைகளில் நான் சூரியன், நட்சத்திரங்களில் நான் சந்திரன், புலன்களில் நான் மனம், ருத்திரர்களில் நான் சங்கரன், வீரமிக்க தெய்வ தளபதிகளுக்குள் நான் சிவபெருமானின் மைந்தன் மயில்வாகனன், வேலன், மலைகளில் நான் மேரு, சொற்களில் நான் தனிச் சொல் ‘ஓம்’, நீர் நிலைகளில் நான் சமுத்திரம், அசைவில்லாப் பொருள்களில் நான் இமயம், மரங்களில் நான் அரச மரம், பசுக்களில் நான் காமதேனு, பாம்புகளில் நான் வாசுகி, அசுரர்களில் நான் பிரகலாதன், ஆயுதம் தாங்கிய வீரர்களில் நான் இராமன், நதிகளில் நான் கங்கை, விக்ஞாயானங்களில் நான் ஆத்மா விக்ஞானம், எழுத்துக்களில் நான் ‘அ’ எழுத்து, மாதங்களில் நான் மார்கழி, காலங்களில் நான் வசந்தம், யாப்பு வகைகளில் நான் காயத்திரி, எல்லாவற்றிற்கும் விதை போன்று இருப்பவன் நான் தான்’ என்று முடிக்கிறார்.

முழுமையான ஒரு முக வழிபாட்டின் மூலம் யார் வேண்டுமானாலும் பகவானின் இறைத் தன்மையைக் காணலாம், அவரின் மாட்சியை தனக்குள் அனுபவிக்கலாம் என்று கண்ணன் கூறியவுடன் அர்ஜுனன் முகத்தில் அதை எப்படி அடைய முடியும் என்ற கவலை ரேகைகள் ஓடுவதை அவர் பார்த்திருப்பார். அதனால் அதற்கு எளிமையான வழி முறைகளையும் அவரே சொல்கிறார்.

1. பக்தனின் செயல்கள் யாவும் இறைவனின் திருப்பணியாகவே அமையவேண்டும்.

2. அவனின் இலக்கு இறைவனை அடைவதாகவே இருக்க வேண்டும்.

3. இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்க வேண்டும்.

4. பற்றுக்களை விட்டொழித்திருக்க வேண்டும்.

5. எவரிடமும் பகைமை உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்.

இவ்வைந்து அம்சங்களையும் சிரமேற்கொண்டு செய்து வந்தால் நம்மால் இறைவனை உணர முடியும். முதலில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்து பின் இறைவனை எங்கும் எதிலும் காணும் நிலையை அடைவோம்.

krishna

Ref: சுவாமி சின்மயானந்தாவின் பகவத் கீதை உரை.

30 Comments (+add yours?)

 1. Kannabiran Ravi Shankar (KRS)
  Sep 12, 2014 @ 02:28:09

  கம்பன், இங்கு இருப்பதால்.. இந்தக் கேள்வி:
  //ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்//

  ஊழ் கண்ட சமயம் என்றால் எது?

  அந்தச் சமயத்தவரால் இறைவனை “முழுக்கக்” காண முடியாதது போல்,
  பெண்களும் இராமனை முழுசாப் பாக்க முடியலை
  அடா அடா அடா, என்னே கம்பனின் உவமைத் திறன்!:) என்ற பொல்லா ரசிப்புக்கு ஆளாகாமல், அந்த முருகன் தான் என்னை ரட்சிக்கணும்:)

  //ருத்திரர்களில் நான் சங்கரன்,
  மலைகளில் நான் மேரு
  யாப்பு வகைகளில் நான் காயத்திரி//

  ஏன் முக்கியமான ஒன்றை மட்டும் விட்டுட்டீங்க-ம்மா?:)
  சேனானீனாம் அகம்= “ஸ்கந்தஹ”

  Reply

  • amas32
   Sep 12, 2014 @ 06:44:10

   சேர்த்துவிட்டேன் 🙂
   //வீரமிக்க தெய்வ தளபதிகளுக்குள் நான் சிவபெருமானின் மைந்தன் மயில்வாகனன், வேலன்,//
   நன்றி.

   Reply

 2. vasanthigopalan
  Sep 12, 2014 @ 02:37:50

  காலைல நல்ல விஷயமாக பகிர்ந்தமைக்கு நன்றி.கீதையை எளிமையாக புரியும்படி எழுதியுள்ளீர்கள்.பகவத் விஷயமும் உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது.வாழ்த்துக்கள்.
  ஜடபரதர் மானை நினைத்து உயிரை விட்டதால் மானாகப் பிறந்தார் என்ற கதை ஞாபகம்வருகிறது.KRS அவர்கள் சொல்வது தேவப் பெருமாள் திருக்கச்சி நம்பிகளுக்கு சொன்னவை.பெரியாழ்வாரும் அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் என்கிறார்.நல்ல விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.நன்றி.

  Reply

 3. amas32
  Sep 12, 2014 @ 06:14:10

  நன்றி வசந்தி 🙂

  Reply

 4. Siva
  Sep 12, 2014 @ 06:39:13

  மிகவும் அருமையான பதிவு. தங்களின் குரு யார் என்று தெரிந்து கொள்ளலாமா ? எப்பொழுதும் கடவுள் சிந்தனையுடன், நல்ல சிந்தனையுடன் இருந்தால் நாம் இறக்கும் தருவாயில் நற்கதியை அடையலாம்! Very well written Ma’m

  Reply

 5. sukanya (@sukanya29039615)
  Sep 12, 2014 @ 08:58:32

  pramadam. Elizhiya upamanangal solli Geethai puriyavaithuvittai. Kannaninperaul pera vendukiren.

  Reply

 6. lotusmoonbell
  Sep 12, 2014 @ 09:36:35

  //இறக்கும் நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாகதான் மீண்டும் பிறப்பார்கள்//
  மரணம் யாருக்கு எப்படி எவ்வாறு வரும் என்று யாராலும் சொல்லமுடியாது. அதே போல இறந்த பின் ஆன்மா என்ன ஆகும் என்பதும் இதுவரை யாரும் அறியப்படாத ஒன்று. எந்த வித சாதி சமய குல வேறுபாடுகளும் இன்றி சகமனித நேயம்,கருணை, அன்பு இதுதான் நல்ல வாழ்வுக்குத் தேவை.
  நன்றி, வணக்கம்.

  Reply

  • amas32
   Sep 12, 2014 @ 11:39:44

   நன்றி அம்மா 🙂

   Reply

  • Anonymous
   Sep 13, 2014 @ 02:38:49

   இறந்த பின்பு || வாசு ரூபம் , ருத்ர ரூபம் , கடைசியாக ஆதித்திய ரூபம் || அதற்காகத்தான் பிண்டம் மூன்றாக வைப்பது. இது எல்லோருக்கும் யார் என்ன சாதியாக இருந்தாலும் இதை தான் வேதமும் சொல்கிறது #ஏதோ என் சின்ன அறிவுக்கு சிலர் சொல்லி கேட்டது. #நன்றி

   Reply

 7. பிரம்மபுத்திரன்.தா
  Sep 12, 2014 @ 19:23:23

  இவ்விளக்கமானது, எனது மடமையால் இறைவனை நொந்து கொண்டிருக்கும் பொழுது, இறைவனின் கருணையால் வாசிக்க நேர்ந்தது. முதலில் நான் தங்கள் பாதத்தை வணங்க ஆசைப்படுகிறேன். புனிதகீதையின் இச்சிறு பகுதியிலேயே எனது பெரிய பிரச்சினைகளாக நினைத்தவற்றிர்க்கு பயத்தை போக்கி, பாதையை காட்டியது. தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்
  ஓம் நமோ நாராயணாய
  ஓம் நமச்சிவாய
  திருச்சிற்றம்பலம்

  Reply

  • amas32
   Sep 13, 2014 @ 01:34:40

   பெரிய சொற்கள், ரொம்ப நன்றி. நீங்கள் சொன்னது போல் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ அவன் சித்தம் இன்றி ஓர் அணுவும் அசையாது. அவன் அருளே இந்தப் பதிவை உங்களைப் படிக்க வைத்து உங்களுக்கு மனத் தெளிவை அளித்திருக்கிறது.

   Reply

 8. Lakshmi
  Sep 13, 2014 @ 16:16:13

  பெரியவர்கள் உபதேசித்தகருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ளும்படி விளக்கிய உதாரணங்களுடன் கூடிய அருமையான கட்டுரை.பள்ளி பாடத்திலேயே சேர்க்கலாம். லக்ஷ்மி.Mayooravalli.

  Reply

 9. அன்புடன் பாலா
  Sep 13, 2014 @ 20:32:49

  மிக நன்று. நீங்கள் திடமாக நம்பிக்கை உங்கள் எழுத்துகளில் தெளிவாக பரிமளிக்கிறது, மேலும் அறிவுரை இல்லாத தொனி இது போன்ற இடுகைகளில் அவசியம்…. சொன்னவைகள் வாசிப்பவரை சரியாக சென்றடைய! நீங்கள் அதை நேர்த்தியாக செய்திருப்பதாகவே உணர்கிறேன்.

  //வழிபாட்டு முறையில் சில சம்பிரதாயங்களைக் கையாள்வது தான் பக்தி என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிதும் தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன், சுயநலமின்றி, இறைவனிடம் அன்பு செலுத்துவது தான் உண்மையான பக்தி. ஒருவருக்கு வரும் சுக துக்கங்கள் நமக்கு வந்ததாகக் கருதினால் அதுவே உண்மையான அன்பு.
  //
  உணர்ந்து புரிந்து கொள்வதற்காக ஆதாரமான செய்தி இதுவே!!!
  வாழ்க!

  Reply

 10. PVR (@to_pvr)
  Sep 14, 2014 @ 13:16:50

  Well written piece. I endorse Vasanthigopala, Lotusmoonbell, அன்புடன் பாலா ஆகியோரின் பாராட்டுகள். இவர்கள் சொல்வதுபோல, உங்களுக்கு அழகாக எழுதவருகிறது.

  KRS also complements you for easy style of writing with apt analogies. என்ன, உரிமையுடன் கொஞ்சம் சீண்டிக்கலாய்க்கிறார். பூசைக்குப்பின் ஓய்வுக்கு அமரும் பக்தருக்கு, ரெஸ்ட் ரூம் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டு, அங்கிருக்கையில் உயிரின் பிரிகிறது. KRS எழுப்பிய வினாவுக்கு, நீங்கள் எதிர்வினா எழுப்பியிருந்தால், அவரே சிறப்பாக விளக்கியிருப்பார்.

  ஒருவர் நாத்திகராகவே இருந்தாலும்கூட, nature’s call வருவதால்தான் ரெஸ்ட் ரூம் போகிறாரா அல்லது அந்த அறையை மோகித்து, விருப்பத்தால் போகிறாரா… அப்போது அவர் மனநிலை, நானறிந்த வரை, “இது வேற ஒரு தொல்லை. நிம்மதியா கண்ணயரவிடாமல் (அல்லது ஈடுபட்டிருக்கும் பணியைத்தடங்கல் செய்துக்கொண்டு…)” என்றுதான் நினைப்பார். அப்பொது அவர் விருப்பம் அந்தக்குறுக்கீடா அல்லது அவர் தொடர நினைத்ததா? உடனே வீடு சென்று என் குடும்பத்தாரோடு இருக்க விழைகிறேன். அப்போது வாகனம் (ஆட்டோ, ஏரோப்ளேன்… ஏதோ ஒண்ணு) காலதாமதமில்லாமல் கிடைக்க, மனசுக்குள் வேண்டவும் செய்கிறேன்; அப்போது என் உயிர் பிரிந்தால், எல்லாம்வல்ல இறை, இவனோட கடைசி எண்ணம், விருப்பம் வாகனம்தான்; ஆகவே இவன் ..

  Reply

 11. PVR (@to_pvr)
  Sep 14, 2014 @ 13:19:09

  என்று தட்டையாக நினைக்குமா அல்லது, குடும்பத்தை நேசிப்பவன் என்று…. ? :))

  Reply

  • amas32
   Sep 14, 2014 @ 13:53:55

   ரொம்ப அருமையான விளக்கம், நன்றி 🙂
   நீங்கள் தட்டை எல்லாம் இல்லை நல்ல முறுக்குத் தான் 😉

   Reply

 12. psankar
  Sep 14, 2014 @ 18:09:19

  உங்கள் பதிவில் சில பொருட்பிழைகள் இருப்பதாகப்பட்டது. ஆனால் அதைப்பற்றி விவாதிக்க இது இடமில்லை.

  சில எழுத்துப் பிழைகள் இருந்தன, அவற்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

  “சுப்பிரமன்னிய பாரதி” இல்லை “சுப்பிரமணிய பாரதி”

  “இவ்வுலகத்தை வீட்டுப் பிரியும் நேரத்தில்” – விட்டுப்

  “அவ்வாறேவாகவும்” இல்லை “அவ்வாறேயாகவும்” அல்லது “அவ்வாறே ஆகவும்”. “இஈஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும்” என்பதுதான் விதி.

  “ஆணைத்துப்” இல்லை “அனைத்து”

  இவை தவிர வேறு சில பிழைகளும் இருந்தன. இப்போதைக்கு இவை போதும். அடுத்த முறை இவை வராமல் பார்த்துக் கொள்ளவும் 🙂

  Reply

 13. amas32
  Sep 15, 2014 @ 04:30:52

  நன்றி, சரி செய்கிறேன். ஆனால் அணைத்து தான். அரவணைத்து என்ற பொருளில்.

  Reply

  • psankar
   Sep 15, 2014 @ 04:55:10

   அட, ஆமாம். “அணைத்து” என்பதுதான் சரி இங்கு. “ஆ” என்பதைத் திருத்தியவுடன் முழு வரியையும் மீண்டும் படித்துப் பார்த்திருக்க வேண்டும். திரையுருட்ட (scroll) சோம்பி, “அணைத்து” என்று இருக்காது என்று முடிவெடுத்து “அனைத்து” என்று மாற்றி விட்டேன். மன்னிக்கவும்.

   Reply

 14. தெனாலி™ (@i_thenali)
  Sep 15, 2014 @ 13:23:10

  சின்ன சின்ன அழகான மேற்கோள்கள் கடவுளின்
  தத்துவங்களை தேவையான இடத்தில்
  பயன்படுத்தியிருப்பது என முழு ஆன்மீக எழுத்தாளராக மாறிவிட்டீர்கள் .”ஆன்ம அனுபவம்” என்ற பெயரில் இந்த வரிசை கட்டுரைகளை தொகுத்தாலும் தகும் #### வாழ்த்துக்கள் மேடம் :)))))

  Reply

  • amas32
   Sep 15, 2014 @ 13:29:55

   ரொம்ப நன்றி தெனாலி 🙂 நீங்கள் என்னை ஊக்கியதால் தான் பகுதி 2 வந்தது, இறை அருளால் பகுதி 3ம் விரைவில் வரணும் 🙂

   Reply

 15. தெனாலி™ (@i_thenali)
  Sep 15, 2014 @ 13:32:41

  அப்டியா!!!!!!!! நல்ல விஷயத்துக்கு நானும் ஒரு காரணம்ன்னு நினைக்கிறப்போ சந்தோஷம், தொடர வேண்டும், நல்ல விஷயங்கள் :)))

  Reply

 16. indicasenthil
  Sep 15, 2014 @ 14:06:51

  எத்தனை விரிவான விவரமான கீதாச்சாரம்!
  கண்ணனே கன்னித்தமிழ் பயின்று புலமை பெற்று வந்தமை போல!
  உவமை ஒப்புமை மொத்தமும் மேதமை.
  நாத்திகர் சூழ் சந்துலகில் துருப்பிடித்துப் போன எம்புலன்கள் யாவும்..
  தம்மை புதுப்பித்துக் கொண்டன தங்களின் தன்னிகரில்லா இன்னிசை ‘கீதம்’ கேட்டு!
  தொடரட்டும் இந்த மெய்ஞான விசிறல்..
  அடையட்டும் அஞ்ஞானம் சிதறல். 🙂

  Reply

  • amas32
   Sep 15, 2014 @ 15:57:43

   ரொம்ப நன்றி 🙂 இந்தமாதிரி பாராட்டும் சொற்கள் எனக்கு ஊக்க மருந்து, மிக்க நன்றி 🙂

   Reply

 17. UKG (@chinnapiyan)
  Sep 15, 2014 @ 17:48:00

  முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிக எளிமையான உரை. இளைய தலைமுறையும் இதை படித்து இன்புறவேண்டும் என்பதே என் ஆதங்கம். யாருக்கெல்லாம் அருகதை உள்ளதோ அவர்கள் படித்து கடைத்தேரட்டும்.

  மரணதருவாயில் நாராயணா என்றால் மறுபிறவியும், கோவிந்தா என்றால் மறுபிறவி இல்லாத முத்தியும் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள்.

  மரணம் எப்போ சம்பவிக்கும் என்று யாரும் அறியாத நிலையில் இருக்கும்போது உயிர் பிரிகிறது. அதற்குத்தான் இறைவனின் பெயர்களை சதா சர்வ காலமும் உத்சாடனம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். பாமர மக்களால் அது இயலாது என்ற காரணத்தால்தான், இறைவனின் பெயர்களை சூட்டிக்கொண்டார்கள். கடைசி நிமிடத்தில் ” அய்யா கிருஷ்ணசாமி ! ( நெஞ்சு வலிக்குதுடா) “, “லக்ஷ்மி ! ( தண்ணி கொண்டா)” என்று நம்மை அறியாமல் இறைவனின் பெயரை சொல்லவைத்தார்கள் நம் முன்னோர்கள்.

  யாரிடமும் பகைமை பாராட்டாமல் இருப்பது ஒன்றே போதும் இறைவனை அடைய. அதாவது பிறரிடம் அன்பு செலுத்துதல்.

  ஏனென்றால் நாம் எல்லோரும் அந்த இறைவனின் படைப்புகளே, என்று சொல்லாமல் சொல்லியுள்ள உங்களுக்கு பாராட்டுகள். உங்கள் எழுத்துகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙂

  Reply

  • amas32
   Sep 16, 2014 @ 02:09:26

   ரொம்ப நன்றி சின்னப்பையன் 🙂
   //மரணதருவாயில் நாராயணா என்றால் மறுபிறவியும், கோவிந்தா என்றால் மறுபிறவி இல்லாத முத்தியும் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள்.//
   நீங்க சொல்லியுள்ள அனைத்துக் கருத்துக்களும் உண்மை. என்னை ஊக்குவிப்பதில் முதன்மையானவர் நீங்கள், நன்றி 🙂

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: