இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம், நாடக சபாக்கள் பாய்ஸ் கம்பெனிகளாகவும், குருகுல வாசமாக நடிகர்கள் இருந்து, பயின்ற காலத்தில் நடக்கிறது கதை. மேலும் சுதந்திரப் போராட்டம் நடக்கும் காலமாகவும் உள்ளதால் கதையில் அதுவும் முக்கிய இடம் வகிக்கிறது.
நாடக நடிகர்களாக சித்தார்த்தும், பிருதிவிராஜூம், குருவாக நாசரும், வாத்தியாக தம்பி ராமையாவும் ரொம்ப நன்றாகப் பரிமளிக்கிறார்கள். பொன் வண்ணனுக்கு மிகச் சிறிய பாத்திரம். மிகவும் அழகாக உள்ள வேதிகா அதே நாடகக் கம்பெனியில் வளரும் ஒரு நடிகையாக (கே.பி.சுந்தராம்பாளின் உண்மை வாழ்வின் நிழல் பாத்திரமாக) கச்சிதமாகப் பொருந்துகிறார்.
வாங்க மக்கா வாங்க என்று intro பாடலுடனும், நாடகக் கம்பெனியில் நடக்கும் விஷயங்கள் வைத்தும், சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய பல நாடகங்களில் இருந்து குட்டிக் குட்டியாகப் பல சீன்களைப் போட்டும், காதல், சூழ்ச்சி என்று முதல் பாதியில் நம்மை கதையில் லயிக்க வைத்துள்ளார் வசந்த பாலன்.
செட் டிசைனருக்கும், உடை அலங்கார நிபுணருக்கும், தனித் தனியாக ஒரு பூங்கொத்து! செட் டிசைனர் T.சந்தானம். அப்படியே அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறார். ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா முதல் பரிசை தட்டிச் செல்கிறார். வண்ணங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். அதே போல நடன இயக்குநருக்கும் பாராட்டுகள்! அந்தக் கால நடன அசைவுகள் எல்லாம் கண்ணுக்குக் குளுமை.
இடைவேளைக்குப் பிறகு இயக்குநருக்குக் கதையை நகர்த்தத் தெரியவில்லை. அங்கே இங்கே என்று தடுமாறி, சுதந்திரப் போராட்டத்தை உள்ளே நுழைத்து, அதிலும் சுவாரசியமாக எதுவும் சொல்லாததால் சஸ்பென்ஸ் எதுவும் இன்றி தொய்கிறது கதை.
ஜெயமோகன் வசனம். அவர் பாதிப்புப் பெரிதாக இல்லை. அவ்வை சண்முகம் பற்றிய சுயசரிதையை வசந்தபாலனிடம் ஜெயமோகன் கொடுத்துப் படிக்கச் செய்தது தான் இந்தப் படம் தொடங்குவதற்கு ஆரம்பம். அதற்கு மட்டுமே அவர் credit எடுத்துக் கொள்ளலாம்.
மதுரை என்று காட்டப்படும் ஊர் தேவகோட்டை/செட்டிநாடு. ஏன்? வசந்தபாலன்? ஏன்? செட்டிநாட்டு வீடுகள் தனித் தன்மை கொண்டவை. அவை பல படங்களில் (எல்லா படங்களிலும் அதே வீடு வேற) வந்து நமக்கு மனப்பாடமும் ஆகிவிட்டது. அதை ஏன் மதுரை என்று காட்டவேண்டும்?
பாடல்கள் வெளியீட்டின் போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. யாருமில்லா தனியிரங்கில் மிகவும் இனிமையாக உள்ளது. ஆண் பாத்திரங்களுக்கான அனைத்துப் பாடல்களையும் ஹரி சரண் மட்டுமே பாடியுள்ளார். சிறப்பான சாதனை!
படத்தில் பங்குபெற்றவர்கள் அனைவரும் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு சித்தார்த்தை இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது. ப்ரிதிவிராஜூன் நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. படம் நன்றாக இல்லை என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டுக் கடந்து செல்வது நல்லது இல்லை தான். ஆனாலும் எதிர்ப்பார்த்த திருப்பங்களும், உப்பு சப்பில்லாத திரைக் கதையும் இருந்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.