Interstellar என்றால் நட்சத்திரங்களுக்கு இடையே நடப்பது அல்லது இருப்பது என்று பொருள். நட்சத்திரங்களிடையே ஒரு மனிதன் வாழக் கூடிய கிரகத்தைத் தேடிப் போகும் சம்பவமே படத்தின் கதையானதால் கதையின் பெயர் அதுவே.
இது ஒரு science fiction படம். நான் இந்த மாதிரி futuristic science fiction படங்களின் பெரிய ரசிகை கிடையாது. ஆனால் இந்தப் படத்தின் கதை அம்சம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களைப் பார்த்துள்ளேன். பெரிதாக ரசித்ததில்லை. ஆனால் இந்தப் படத்தை பார்க்கும்போது பல சமயங்கள் சீட்டின் நுணியில் உட்கார்ந்தும் கண்ணில் வந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டும் மிகவும் லயித்துப் பார்த்தேன். பெரிய படம். 2மணி 5௦ நிமிடங்கள். ஆங்கில சப்டைட்டில் உள்ளது. மிகவும் பிரம்மாண்டமானப் படம்.
இன்றே நம் கண் எதிரே கனிம வளங்கள் சூறையாடப் படுவதையும், தண்ணீருக்காக அல்லாடுவதையும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக ரசாயன உரத்தினாலும் மற்ற விஷ விதைகளாலும் பாழ்பட்டு வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். நம் சுயநலத்தால் நாளை நம் சந்ததியனருக்கு எந்த மாதிரி உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம் என்று சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை.
அப்படி ஒரு விவசாயம் பொய்த்து அமெரிக்காவில் மக்கள் திண்டாடும் ஒரு வேளையில் நடக்கும் சம்பவங்களே கதையின் கரு. மாற்று உலகைத் தேட நாசா ஒரு குழுவை தேர்ந்தெடுத்து வேற்று கிரகத்திற்கு அனுப்புகிறது. அதற்கு முன்னேயும் ஒரு குழு சென்று அவர்களின் நிலை என்று சரியாகத் தெரியாமல் இருக்கிறது.
ஸ்பேஸ் க்ராப்டின் உள் பக்க வெளி பக்கத் தோற்றம், அது பயணிக்கும் பாதை, முதலில் இறங்கும் ஒரு நீர் நிலை, பின் செல்லும் ப்ளாக் ஹோல், அதன் பின் இறங்கும் ஒரு பொட்டல் காடான ஒரு குளிர் கிரகம் என்று ஒவ்வொரு ஸ்பாட்டும் வெகு நேர்த்தியான visual effectsஉடன் பிரம்மாண்டமாகவும் அதே சமயம் நுணுக்கமாக கவனத்துடன் தயாரிக்கப் பட்டு படம் பிடிக்கப் பட்டுள்ளது.
ஒரு குடும்பத் தலைவனாகவும் வேற்று கிரகத்தைத் தேடிச் செல்லும் குழுத் தலைவனாகவும் Matthew McConaughey பிராமதமாக நடித்துள்ளார். அவரின் தந்தை பாசம், அறிவியல் ஆர்வம், முக்கியமாக எல்லாவற்றிற்கும் மேலான ஒரு சக்தி நமக்கு உதவுகிறது என்பது புரிந்து அதன் பின் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் என்று கதை முழுதும் அவரே கோலொச்சுகிறார்.
இந்தக் கதையில் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது wormhole என்பதைப் பற்றியது. இதற்கு இன்னொரு பெயர் Einstein-Rosen bridge என்பதாகும். இது ஸ்பேசில் நேரத்தை சேமிக்கும் ஒரு குறுக்கு வழி என்று கொள்ளலாம். ஒரு tunnelஐ நினைத்துக் கொள்ளுங்கள். டன்னலின் ஒரு பக்கம் ஒரு நேரம், இன்னொரு முடிவில் வேறொரு நேரம். அது இந்தக் கதையைப் புரிந்து கொள்ள தேவையான ஒரு புது விஷயம்.
இதைத் தவிர பூமிக்கும் ஸ்பேசில் இருக்கும் கிரகங்களுக்கும் புவி ஈர்ப்பு சக்தியில் (gravity) மட்டும் மாற்றம் இல்லை, நேரத்தைக் கணக்கிடுவதிலும் மாற்றம் உள்ளது என்பதும் இப்படத்தின் அடித்தளம் ஆகிறது. எப்படி தேவர்களின் ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமோ அதே மாதிரி அந்தத் தத்துவத்தை இங்கே அறிவியல் பூர்வமாக இந்தக் கதையில் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து அங்கே தங்கும் இரண்டு மணி நேரம் கூட பூமி நேரத்தில் பல வருடங்களாகக் கணக்காகிறது.
மேலும் நாம் அன்பு செலுத்துபவரிடம் நம்மால் அமானுஷியமாக தொடர்பு கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கிழக்கு நாடுகளின் சித்தாந்த்தையைம் இந்தக் கதை கையாள்கிறது. {அதனால் தான் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்ததோ என்னவோ 🙂 }
இந்த மாதிரி ஒரு கதையை visualise பண்ணி அதை செயல் வடிவாக்கம் செய்துள்ள கிறிஸ்டபர் நோலனின் திறனை கண்டு பிரமித்து நிற்கிறேன். இதில் படத்தின் பின் பகுதியில் physics வைத்துப் பல விளக்கங்கள் வருகின்றன. எனக்கு அவை துல்லியமாகப் புரியாவிட்டாலும் குத்து மதிப்பாகப் புரிந்து கொண்டேன்.
இசை Hans Zimmer. மிகவும் அற்புதம். படத்தோடு ஒன்றியுள்ளது இசை. விண்கலத்தில் வரும் ஓசைகளும் விண்வெளியில் பயணிக்கும் போது எழும் சத்தங்களும் நம்மை அந்த இடத்துக்கேக் கொண்டு சென்று விடுகிறது. Special effectsக்கும் மற்ற ஆராய்ச்சிகளுக்கும் எவ்வளவு நேரமும் பணமும் செலவழித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
வார நாள் மதிய ஆட்டத்திற்கு சாந்தம் திரை அரங்கம் நிறைந்திருந்தது. கிறிஸ்டபர் நோலனின் பெயர் திரையில் வந்த போதும் படம் முடிந்த பிறகும், அரங்கில் இருந்த அனைவரும் கை தட்டி பாராட்டைத் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது 🙂 #TheKnowledgeableChennaiCrowd
Nov 11, 2014 @ 15:54:58
நோலன் எனக்குப் பிடித்த இயக்குனர். பிரஸ்டிஜ் பாத்ததுமே அவர் ரசிகராகிவிட்டேன். அதுக்கப்புறம் ஒவ்வொரு படமும் கலக்கல். இன்செப்ஷன் படம் பார்த்த போது அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பிளாக்கில் எழுதிய கான்செப்ட் போலவே இருந்ததும் நோலனை மிகவும் பிடித்துப் போய்விட்டது. இண்டர்ஸ்டெல்லர் கண்டிப்பாக பார்க்க வேண்டும். காத்துக்கொண்டிருக்கிறேன்.
Nov 12, 2014 @ 08:16:21
நீங்க கோபி நோலன் முருகதாஸ் :-)) நன்றி ஜிரா 🙂
Nov 11, 2014 @ 16:05:19
அருமையான விமர்சனம். சீககிரம் படம் பார்க்கணும்
அது சரி நோலன் நம்ம ஜிரா கதையை சுட்டிருக்காரா? ஜிரா உடனே கேஸ் போடுங்க. ஒரு கை பார்ர்திருவோம்
Tcsprasan
Nov 12, 2014 @ 08:16:53
நன்றி பிரசன் 🙂
Nov 11, 2014 @ 16:09:13
அற்புதமான நச் விமர்சனம் , நாளைக்கு படம் பார்க்கும் போது இன்னும் புரிஞ்சு பார்க்க முடியும் நன்றி மா 🙂
Nov 12, 2014 @ 08:23:43
நன்றி பேதரோஸ்:-)
Nov 11, 2014 @ 16:11:31
நல்ல ரசனையான விமர்சனம் அம்மா! Welcome to the club!! 🙂 Nolan சகோதரர்கள் என்றைக்குமே பார்வையாளனின் மூளைக்கு வேலை கொடுத்து ரசனையை மேன்படுத்துபவர்கள், mementoவில் தொடங்கிய இவர்கள் அராஜகம் இன்று Interstellar வரை… 🙂 எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. இணையத்தில் படத்துக்கான preparation செய்துக்கொள்ள (physics refresh) வலைப்பக்கங்களை மேய்ந்து IMAXல் கண் விரித்து மூளை கசக்கி(:-)) முழுமையாக அனுபவித்து பார்த்தேன், மறக்க முடியாத அனுபவம்!
Nov 12, 2014 @ 08:17:33
நீங்க அப்பாடக்கர் ரசிகர் போல! 🙂
Nov 11, 2014 @ 16:34:24
உங்கள் விமர்சனத்தால் படம் பார்க்கும் போது கொஞ்சம் நன்றாகவே புரியும் என நினைக்கிறேன்.நல்ல விமர்சனம்.
Nov 12, 2014 @ 08:17:59
நன்றி 🙂
Nov 11, 2014 @ 16:48:24
முக்கியமான விஷயங்களை மட்டும் கொடுத்து படத்தை பார்க்க தூண்டுறீங்களே…எனக்கும் science fiction படம் பிடிக்காதுன்னு சொல்லுறதை விட, புரியாது அதனால ரொம்ப விரும்பி பார்க்கிறதில்லை. Matrix மற்றும் Total Recall ன்னு ரெண்டு படம், எனக்கு இன்னிக்கு பார்த்தாலும் முழுசாக புரியலை ஆனால் எல்லோரும் நல்லாயிருக்குன்னு பார்க்கிறாங்க.
இந்த விமர்சனத்தை படித்தபிறகு, பார்க்கலாம்னு தோனுது ஆனால் எனது முந்தைய அனுபவங்கள் பயமுறுத்துகிறது
Nov 12, 2014 @ 08:20:56
ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் அதை தொடர்ந்து follow பண்ணி வந்தால் எளிதாகத் தான் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டத்திற்காகவும், அதை flawless ஆக ஒளிப்பதிவு செய்ததற்காக்காவுமே பார்க்கலாம் 🙂
Nov 12, 2014 @ 01:03:30
முதலில் இந்த படத்தின் விமர்சனமா என்று பயந்தேன். ஆனால் நீங்கள் மிக எளிமையாக , என் போன்ற சாமானியர்களும் , B, C சென்டர் ரசிகர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விமரிசித்துள்ளீர்கள். சபாஷ் 🙂
இப்படத்தை பொருத்தவரை தங்களின் மேதாவிலாசத்தை தெரியபடுத்தவே பலர் பயன்படுத்தி வந்துள்ளதையே கண்டுள்ள நிலையில், நீங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டதற்கு பாராட்டுகிறேன்.
எங்கு , யாருக்கு தன் மேலறிவை காண்பிக்கவேண்டும் என்பதையும் எங்கு யாருக்கு தன் எளிமையை காண்பிக்க வேண்டும் என்பதில் நீங்கள் எப்போதுமே ஒரு பக்கா ஜென்டில்மேன் ஐ மீன் வொண்டர்ஃபுள் லேடி :)) வாழ்த்துக்கள் 🙂
Nov 12, 2014 @ 08:21:57
நன்றி 🙂 நீங்கள் B, C எல்லாம் கிடையாது, A+ தான் 🙂
Nov 12, 2014 @ 04:48:30
Thanks for the review. Now I feel like watching it. Build ups played a scary role in distancing myself from watching it and I was not nocturnal during science and math classes 🙂
Nov 12, 2014 @ 08:23:04
நானும் அதே கேஸ் தான் 🙂 எனக்கேப் புரியும் போது உங்களுக்கும் புரியும் 🙂
Nov 12, 2014 @ 07:15:36
thank you for making it simple for us to understand.
Nov 12, 2014 @ 08:22:18
நன்றி பிரவீன் 🙂
Nov 12, 2014 @ 10:09:15
madam,so simple and straight forward review.intensifies the interest to see the movie.
Nov 13, 2014 @ 06:13:16
thank you 🙂
Nov 12, 2014 @ 18:37:13
மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமி ஆகிவிட, புதிய கிரகத்தைத் தேடி மனிதன் போகும் சாகச விண்வெளிப்பயணமே இன்டர்ஸ்டெல்லார் ( INTERSTELLAR ) படத்தின் ஒரு வரிக்கதை.
இந்த படம் மனிதனின் அலட்சியங்கள் நம் புவிக்கு அளிக்க காத்திருக்கும் அழிவின் கற்பனை. இன்றே நம் கண் எதிரே கனிம வளங்கள் சூறையாடப் படுவதையும், தண்ணீருக்காக அல்லாடுவதையும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக ரசாயன உரத்தினாலும் மற்ற விஷ விதைகளாலும் பாழ்பட்டு வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். நம் சுயநலத்தால் நாளை நம் சந்ததியனருக்கு எந்த மாதிரி உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம் என்று சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை.
நிலையற்ற சுக வாழ்விற்காக இயற்கையை அழித்து பணம் எனும் காகிதத்தை பெருக்கினால் நாம் அடையும் வெற்றி எதுவென உணர்த்தும் கற்பனை காவியம்.மனிதகுலம் விழித்திட வேண்டிய நேரம் இது .நாளைய தலைமுறைக்கு இயற்கையை பாதுகாத்து அளிக்க வேண்டிய பொறுப்புடன் செயலாற்றி உலகை (நம் கையில் இருக்கும் ஒரே ஒரு வாழ்விடம் ) காத்திடுவோம்…!!! #INTERSTELLAR
Nov 13, 2014 @ 06:12:49
நன்றி செல்வா.
Nov 18, 2014 @ 06:28:59
விண்வெளியில் சத்தம் கேட்காது.
E R bridge என்பது வேறு; wormhole என்பது வேறு.