இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம், நாடக சபாக்கள் பாய்ஸ் கம்பெனிகளாகவும், குருகுல வாசமாக நடிகர்கள் இருந்து, பயின்ற காலத்தில் நடக்கிறது கதை. மேலும் சுதந்திரப் போராட்டம் நடக்கும் காலமாகவும் உள்ளதால் கதையில் அதுவும் முக்கிய இடம் வகிக்கிறது.
நாடக நடிகர்களாக சித்தார்த்தும், பிருதிவிராஜூம், குருவாக நாசரும், வாத்தியாக தம்பி ராமையாவும் ரொம்ப நன்றாகப் பரிமளிக்கிறார்கள். பொன் வண்ணனுக்கு மிகச் சிறிய பாத்திரம். மிகவும் அழகாக உள்ள வேதிகா அதே நாடகக் கம்பெனியில் வளரும் ஒரு நடிகையாக (கே.பி.சுந்தராம்பாளின் உண்மை வாழ்வின் நிழல் பாத்திரமாக) கச்சிதமாகப் பொருந்துகிறார்.
வாங்க மக்கா வாங்க என்று intro பாடலுடனும், நாடகக் கம்பெனியில் நடக்கும் விஷயங்கள் வைத்தும், சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய பல நாடகங்களில் இருந்து குட்டிக் குட்டியாகப் பல சீன்களைப் போட்டும், காதல், சூழ்ச்சி என்று முதல் பாதியில் நம்மை கதையில் லயிக்க வைத்துள்ளார் வசந்த பாலன்.
செட் டிசைனருக்கும், உடை அலங்கார நிபுணருக்கும், தனித் தனியாக ஒரு பூங்கொத்து! செட் டிசைனர் T.சந்தானம். அப்படியே அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறார். ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா முதல் பரிசை தட்டிச் செல்கிறார். வண்ணங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். அதே போல நடன இயக்குநருக்கும் பாராட்டுகள்! அந்தக் கால நடன அசைவுகள் எல்லாம் கண்ணுக்குக் குளுமை.
இடைவேளைக்குப் பிறகு இயக்குநருக்குக் கதையை நகர்த்தத் தெரியவில்லை. அங்கே இங்கே என்று தடுமாறி, சுதந்திரப் போராட்டத்தை உள்ளே நுழைத்து, அதிலும் சுவாரசியமாக எதுவும் சொல்லாததால் சஸ்பென்ஸ் எதுவும் இன்றி தொய்கிறது கதை.
ஜெயமோகன் வசனம். அவர் பாதிப்புப் பெரிதாக இல்லை. அவ்வை சண்முகம் பற்றிய சுயசரிதையை வசந்தபாலனிடம் ஜெயமோகன் கொடுத்துப் படிக்கச் செய்தது தான் இந்தப் படம் தொடங்குவதற்கு ஆரம்பம். அதற்கு மட்டுமே அவர் credit எடுத்துக் கொள்ளலாம்.
மதுரை என்று காட்டப்படும் ஊர் தேவகோட்டை/செட்டிநாடு. ஏன்? வசந்தபாலன்? ஏன்? செட்டிநாட்டு வீடுகள் தனித் தன்மை கொண்டவை. அவை பல படங்களில் (எல்லா படங்களிலும் அதே வீடு வேற) வந்து நமக்கு மனப்பாடமும் ஆகிவிட்டது. அதை ஏன் மதுரை என்று காட்டவேண்டும்?
பாடல்கள் வெளியீட்டின் போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. யாருமில்லா தனியிரங்கில் மிகவும் இனிமையாக உள்ளது. ஆண் பாத்திரங்களுக்கான அனைத்துப் பாடல்களையும் ஹரி சரண் மட்டுமே பாடியுள்ளார். சிறப்பான சாதனை!
படத்தில் பங்குபெற்றவர்கள் அனைவரும் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு சித்தார்த்தை இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது. ப்ரிதிவிராஜூன் நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. படம் நன்றாக இல்லை என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டுக் கடந்து செல்வது நல்லது இல்லை தான். ஆனாலும் எதிர்ப்பார்த்த திருப்பங்களும், உப்பு சப்பில்லாத திரைக் கதையும் இருந்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
Nov 28, 2014 @ 14:22:00
நன்றிமா நாளைக்கு கொஞ்சம் சந்தோஷமா படம் பார்ப்பேன் 🙂 நிறை குறை நச்..
Nov 28, 2014 @ 15:19:30
😉
Nov 28, 2014 @ 15:42:02
மிகவும் “தேர்ந்த” விமர்சனம் (மதிப்புரை)
பல “சிறுசிறு” நல்லது உள்ள படத்தை, ஒரே வரியில் “நன்றாக இல்லை” என்று உடைத்து விடாது..
“சிறுசிறு” கவனித்து, லயித்து
இறுதியில், கதையில்லை என்று சொன்னது, சாலவும் அழகு!:)
உங்கள் விமர்சனத்தில் இருந்தே “சிறுசிறு”க்களைத் தொகுக்க, இசைவு தாருங்கள்-மா:)
—
1. மிகவும் அழகாக உள்ள வேதிகா:)
2. குட்டிக் குட்டியாகப் பல நாடக சீன்களைப் போட்டு, காதல்/சூழ்ச்சி என்று முதல் பாதி
3. செட் டிசைனர் + ஒளிப்பதிவாளர்= நிரவ் ஷா
4. அந்தக் கால நடன அசைவுகள்
5. பாடல்கள், யாருமில்லா தனியிரங்கில் மிகவும் இனிமையாக உள்ளது:)
6. எனக்குச் சித்தார்த்தை இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது:) – I know why:)
நச்! விமர்சனம்.
Nov 28, 2014 @ 15:49:21
திருப்புகழ் பாட்டு எப்படி இருந்துச்சி-ம்மா? – ஏவினை நேர்விழி..
—
நீங்க சின்னப் பொண்ணா இருந்தா மன்னிச்சி விட்டிருப்பேன்:) ஏன் வரிக்கு வரி “ச்” குடுக்குறீக?:))
ஒற்று இட்டு நிரப்புவதைத் தான் சொல்லுறேன்:)
எதிர்ப்பார்த்த”த்” திருப்பங்களும்
சப்பில்லாத”த்” திரைக்கதையும்
தனித் தன்மை”க்” கொண்டவை
பல”ப்”படங்களில்
Too Much ச்-ing, I say:)
Nov 29, 2014 @ 03:07:00
திருப்புகழ் மிகவும் அருமையாக இருந்தது. அந்தப் பெண் வேதிகாவின் அபிநயமும் நாட்டியமும் அந்தப் பாடலின் பொருளை மனத்தில் பதிய வைத்துவிட்டது 🙂 ஒற்றுப் பிழைகளை சரி செய்கிறேன், நன்றி 🙂
Nov 28, 2014 @ 16:12:15
பொதுவாக விமர்சனங்களை இணையத்தில் படிக்கும் போது கடைசி பாராவிலிருந்து தொடங்குவேன், அந்த வகையிலும் தங்கள் எழுத்தின் வடிவமும் ரசனைக்குரியது. நான் பார்த்திராத காலத்து நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்ததற்காகவே பார்க்க வேண்டிய படம்
Nov 29, 2014 @ 03:07:23
நிச்சயமாக 🙂
Nov 28, 2014 @ 16:53:32
நல்ல விமர்சனம்..இன்னொன்னு சீக்கிரமே படிக்கிற மாதிரி சின்னதாகவும்.. 🙂 ஏன் செட்டிநாடு வீடு என அவரைக் கேள்வி கேட்டீங்க அவர் சொல்ல மாட்டாரு நான் சொல்றேன்..
மதுரையில் ஷூட்டிங் எடுப்பது சிரமம் அம்மா படக்கென கூட்டம் கூடிவிடும்..அதுவும் முக்கியமான நடிகர்கள் எதிர்பார்ப்புக்கு உள்ளது..
அதே சமயம் பொதுவாகவே காரைக்குடி பக்கம் ஷூட்டிங் எடுப்பது எளிது..காரணம் அங்க மக்கள் அடர்த்தி அவ்வளவாக இல்ல..பெரும்பாலும் வீட்டை விட்டு வெளிநாட்டில் வசிப்பார்கள்..
பெரிதாக டெவெலப்மென்ட் இல்லாத ஊரு..அதனால் மக்களும் (ஆதியில் இருந்தே அங்கிருப்பவர்கள் மட்டுமே ..அல்லது அழகப்பா பல்கலைக் கழகத்தில் படிக்க தற்காலிகமாக வந்தவர்கள் ) கொஞ்சம் சிட்டி தள்ளியே எந்த வித தொந்தரவும் இன்றிப் படம் எடுக்கலாம் என்பதே பெரும்பான்மை படங்கள் அங்கே படமாக்கப்பட காரணம்
பீரியட் பிலிம் எடுப்பது பெரிய சிக்கலான விஷயம்…எண்பதுகள் என்பதாலோ என்னவோ சசிகுமார் சுப்ரமணியபுரம் ல ஜெயிச்சுட்டார்..இன்னொன்னு ஒவ்வொன்னும் ரொம்ப மெனக்கடனும்
சிரமம் தான்
Nov 29, 2014 @ 03:10:57
ம்ம், நீங்க சொல்வது சரிதான். ஆனால் வேறு ஊரிலாவது எடுத்திருக்கலாம். இருபது கோடி பட்ஜெட்டில் படம். ரஹ்மான் தவிர மற்ற நடிகர்கள் பெரிய தொகை வாங்கி இருக்க மாட்டார்கள்.சீன் செட்டிங் எல்லாம் பிராமாதமாக செய்து, மதுரை என்று ஊரை பல முறை காட்டும்போது ரொம்ப நெருடுகிறது 🙂
Nov 29, 2014 @ 05:36:12
என்ன ரஹ்மானும் நடித்திருக்கிறாரா அம்மா? 😉
Nov 29, 2014 @ 02:01:15
திரை விமர்சனம் எழுதுவதற்கு எந்த விதமான தர்மசங்கடமும்
(பிரபல நடிகர், கதை கரு, அதுவும் காப்பி பேஸ்ட் அயல்நாட்டு படத்திலிருந்து, பாடல்கள், இசையமைப்பு, வெளியிடும் தேதி including ட்ரைலர், டீசர், FirstLook wallpost , டிவிட்டரில் படம் குறித்த ஏகப்பட்ட கத்திக்குத்துகள் இவை எல்லாம் எந்த விதத்திலும் நிர்பந்திக்காத)
ஏற்படாத ஒரு திரைப்படம். அதனால் சீக்கிரமே விமர்சனம் எழுதிவிட்டீர்கள் 🙂
நீங்கள் ஒரு அன்னபறவை. தண்ணீர் தவிர்த்து பாலை மட்டும் எடுத்துக்கொள்பவர் 🙂
வழக்கம்போல் கதையை ஒரு ஒன் லைனாக கூட சொல்லவில்லை
ஏழாவது பாரா சூப்பர். நல்ல ஒரு அப்சர்வேஷன்.
எல்லாத்தையும் விட கடைசியா முடித்து வைத்தீங்க பாருங்க , அங்கே நிக்கிறீங்க.
முதல் பாதி ஓகே ஆனால் ரெண்டாம் பாதி…?
இது ஏன் அப்படியாகிவிடுகிறது? உங்களுக்கு தெரியாதது அல்ல.
எல்லாவகையிலும் திருப்தியான பிறகே டைரக்டர் ஒரு படம் எடுக்க முன்வருகிறார். ஆனால் நடைமுறை என்று வரும்போது பல கட்டங்களில் நிறைய காம்ப்ரோமைஸ் பண்ணி தொலைக்க வேண்டியது இருக்கிறது. எதிர்பார்த்தபடி அமைய காலம் தாழ்த்த வேண்டியதுள்ளது. கிடைத்த கால்ஷீட்களை சரியா பயன்படத்தனும், தயாரிப்பாளரின் பணம் வட்டி இம்சைகள், இவைகள் எல்லாம் ஆரம்பத்திலிருந்த உற்சாகத்தை சிறுக சிறுக சிதறடித்து விட்டு, எப்படியாவது படத்தை முடித்து ரிலீஸ் செய்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படும்போது, எல்லா படங்களும் இப்படித்தான் “முதல் பாதி ஓகே. ரெண்டாம் பாதி …?
நன்றி வாழ்த்துக்கள் 🙂
Nov 29, 2014 @ 03:18:40
என் விமர்சனத்தை விட உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமையாக உள்ளது, நன்றி 🙂 ஆம், கதை காபி இல்லை தான். சங்கரதாஸ் சுவாமியின் கதையைத் தழுவி அவ்வை சண்முகத்தின் சுய சரிதையைப் படித்ததில் தோன்றிய கதை இது. அதற்கு பாராட்ட தான் வேண்டும். ஆனால் மூன்று மணி நேரம் ஒருவர் செலவிட்டுப் படம் பார்க்கச் செல்லும் போது, அவர் வெளிய வரும்போது மன நிறைவோடு செல்ல வைக்க வேண்டியது இயக்குநரின் பொறுப்பு.
முழு ஸ்க்ரிப்டையும் ரெடி பண்ணிய பிறகு படப்பிடிப்புக்குச் சென்றால் தான் படத்தை சிறப்பாகக் கொண்டுவர முடியும்.
Nov 29, 2014 @ 05:15:58
What Chinnapayan told is even applicable if you are making (10-15 min) short film. As Amma told its director’s responsibility. When we come out of theatre hall, we should feel satisfied. Whether a film is big or small not decided just by Budget or star cast, how audience response.
For Chettinad house set also, yes its unacceptable when he try to show it as Madurai.
When 100 typical masala film fail and only 10 film hit, producer/director will continue to take such a film.
But when this kind of film fails (for various reasons including poor direction, not tight screenplay etc), they simply stamp that audience did not like this kind of films. thats the sad part
You reviewed very well
Nov 29, 2014 @ 06:54:43
thank you 🙂
Dec 01, 2014 @ 12:05:45
நல்ல விமர்சனம்.
என்னுடைய விமர்சனம் இங்கே.
https://gragavanblog.wordpress.com/2014/12/01/kaaviya-thalaivan/
சில இடங்களில் மாறுபடுகிறேன்.
அது செட்டிநாடு வீடு என்று உங்களுக்குத் தெரிந்ததால் உறுத்துகிறது. அந்தக் காலத்தில் வீடுகள் அப்படித்தான் இருந்தன. எங்கள் அம்மாவின் ஊரில் கிட்டத்தட்ட இதே மாதிரி வீடுகள் உண்டு. ஆனால் அளவில் சிறியதாய். அப்படியிருக்க… மதுரையில் இது போன்ற வீடுகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
இன்றைய சூழலில் மதுரையில் பழைய மதுரை போன்ற இடங்களே இல்லை என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பச் சென்னை என்றால் அந்தக் காட்சிகளை இன்றைய சென்னையில் எடுக்க முடியுமா? அது போலத்தான் இதுவும்.
சித்தார்த்தின் நடிப்பு இன்னும் முன்னேற வேண்டும். எனக்கென்னவோ பிருத்திவிராஜும் வேதிகாவும் நன்றாக நடித்தது போலத் தோன்றுகிறது.
Dec 01, 2014 @ 13:27:41
உங்க விமர்சனம் படிச்சேன் ஜிரா, all your points are valid. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க 🙂