பகவத் கீதை – Chapter 18 slokha 67 and 68

bhagavadgita1

Chapter 18 slokha 67

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன

ந சாசுச்ருஷவே வாச்யம் ந ச மாம் யோப்யசூயதி

பொருள்: தவமில்லாதவன், பக்தி இல்லாதவன், சேவை செய்யாதவன், என்னை நிந்திப்பவன்,- இவர்களுக்கு ஒரு போதும் நீ கீதோபதேசத்தை சொல்லக் கூடாது.

Chapter 18 slokha 68

ய இதம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி

பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்சய:

யார் இந்த மேலான ரகசியத்தை என் பக்தர்களுக்குச் சொல்கிறார்களோ என்னிடம் மேலான பக்தி கொள்கிறானோ அவன் சந்தேகம் இல்லாமல் என்னையே அடைகிறான்.

67ஆவது சுலோகத்தில் சிரத்தையுடன் இறைவணக்கம் செய்யாதவனிடம் கீதைப் பற்றி சொல்லாதே என்று தான் கண்ணன் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் சிரத்தை இல்லாதவனுக்கு உயரிய கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் முயற்சி இருக்காது.

பக்தி என்பது ஒரு நம்பிக்கை. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு சொல்லி புரிய வைப்பது முடியாத காரியம்.  புத்தி மட்டும் இருந்தால் கீதை புரியாது. பக்தி இருந்தால் தான் புரியும். பக்திக்கு விஷயமாக இருப்பவன் கீதாச்சாரத்தில் விளக்கப்பட்டிருக்கிறார்.  பக்தி ஒன்றினாலேயே அடையப் படுபவர் நாராயணன்.  கர்ம ஞான வைராக்கியத்தின் மூலம் பக்தியை பெற முடியும். வைராக்கியம் இல்லாமல் பக்தி வராது. அது வருவதற்கு கர்ம யோகத்தை பின் பற்ற வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தகுந்த மாதிரி இறைவனை அடைய வெவ்வேறு வழிகளையும் பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார். பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என்று. கடைசியில் இதெல்லாம் முடியாவிட்டால் சரணாகதி தான் உனக்கு வழி என்கிறார். அதாவது எனக்கு எல்லாம் நீயே, உன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும் என்று நம்பி நம் கடமையை செய்து வருதல்.

ஆங்கிலம் தெரியாதவனிடம் நீங்கள் ஆங்கிலத்தில் என்ன சொன்னாலும் புரியாது. அது போலத் தான் பக்தி இல்லாதவனிடம் கண்ணனின் பெருமைகளை சொன்னால் நேர விரயம். பின் கீதையின் பயன் என்ன என்று கேட்டால், கீதையை பக்தியுள்ளவர்கள் கேட்டு நற்பயன் பெற்று, புரியாதவர்களுக்காகவும் பக்தியில்லாதவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யலாம்.

மன நலம் குன்றியவனிடம் சிந்தாமல் சாப்பிடு என்று அறிவுரை சொன்னால் பின் பற்றுவானா? இன்னொரு பிறவியில் தன் கரம் வினை தீர்ந்த பின் அறிவுள்ளவனாகப் பிறந்து தானும் நன்றாக வாழ்ந்து பிறரையும் நல் வழி படுத்துவான். கண்ணனே அர்ஜுனனிடம், பல பிறவிகள் முடிந்தால் தான் நீ பக்தன் ஆக முடியும் என்கிறார்.

ஒரு பாறையின் மேல் விதை போட்டு நீர் வார்த்து, செடி முளைக்குமா என்றால் தலைகீழாக நின்றாலும் அங்கு செடி முளைக்காது. நிலம் பண்படவேண்டும். நேரே பக்தி பண்ண முடியாது. பல பிறவிகள் எடுத்து நாமே உணர்ந்து பின் பக்தி மார்க்கத்தை தேர்வு செய்ய முடியும். நம் கர்ம வினைகளை நாம் அனுபவிக்க தான் வேண்டும். முக்தியை அடைய குறுக்கு வழி கிடையாது.

கண்ணன் கருணை மிகுந்தவர். யாரையும் அவன் ஒதுக்கி வைப்பதில்லை. ஆனால் மன முதிர்ச்சி இருப்பவுருக்கே கீதையை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது என்று கூறுகிறார். இப்பிறவி இல்லை எனினும் இன்னுமொரு பிறவியில் புரிந்து கொண்டு வைகுண்டத்தை அடையும் பாக்கியம் ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உண்டு. அதையும் அவர் கீதையில் சொல்லியிருக்கிறார்.

சிரத்தை இல்லாதவருக்கும் பக்தி இல்லாதவருக்கும் கீதை சொல்லிப் பிரயோஜனமில்லை. அதனால் சிரத்தை இல்லாதவர்களுக்கும் பக்தி இல்லாதவர்களுக்கும் இறை அருள் கிட்டாதா என்றால், கிட்டும், கர்ம வினைகள் தீர்த்த பிறகு.

நான் சொல்வதும் நம்பிக்கை சார்ந்த விஷயமே. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இங்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறோம், நம் அனுபவங்களால் ஒரொரு நம்பிக்கையுடன் உள்ளோம். அவரவர்களுக்கு எது தகுந்ததோ அதை தான் எடுத்துக் கொள்ள முடியும். பிறந்த குழந்தைக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்று பாலும், தேனும், பாதாமும் கொடுக்க முடியாது. தாய்ப்பால் தான் உகந்தது. அதைத் தான் கண்ணன் சொல்கிறார்.

கண்ணன் கீதாச்சார்யன் அவன் பாதங்களை பிடித்து தான் அடைய முடியும். வழியை சொல்லிவிட்டு போய் சேருகிற இடத்தை சொல்லாவிட்டாலும், அடையும் இடத்தை சொல்லிவிட்டு வழியை சொல்லாவிட்டாலும் பிரயோஜனமில்லை. தத்வம் நாராயணன். வழி பக்தி.

நமக்கு என்று தான் கீதையை கொடுத்திருக்கிறார். 1/2 ஸ்லோகம், 1/4 ஸ்லோகம் சொன்னாலும், தப்பா சொன்னாலும், புரியாம சொன்னாலும் அவருக்கு ஆனந்தமே.. சொல்ல வேண்டும் என்று நினைத்து வந்தாலே அவருக்கு சந்தோஷம். உனக்கு அனைத்தும்மாக இருப்பவன் நான் என்கிறார்.

‘சரணாகதி செய் நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னையே கேட்பவன் தான் எனக்குப் பிடித்தவன். அவன் தான் எனக்கு வேண்டியவன். பன்னெடுங்காலமாக இருக்கும் பாவம் பக்தி வராமல் தடுக்கும். புண்ணியம் செய். பலனை எதிர்பார்க்காதே. என்னிடம் விட்டுவிடு. பாவம் செய்யாதே எனக்குப் பிடிக்காது.’ என்கிறார்.

கோவிந்தான்னு திரௌபதி கூப்பிட்டதற்காக அர்ஜுனனுக்கு வேலைக்காரனாக, தேரோட்டியாக இருக்கிறார் கண்ணன். என்னையும் நினத்துக் கொண்டு  இன்னொன்றையும் நினைக்காதே என்கிறார். இதை அடைய கர்ம, ஞானம், பக்தி மூலம் முடியும்.

அவரோடு எப்போதும் சேர்த்து இருக்கணும்னு யார் நினைக்கிறார்களோ அவர்களுக்கு யோகஷேமம் கொடுக்கிறார். கிடைக்காதது கிடைத்தல் யோகம், கிடைத்தது தங்கினால் சேமம். அந்தப் புதையல் கண்ணன் தான்.

யார் என் பக்தனுக்கு கீதையின் தத்துவத்தைச் சொல்கிறானோ என்னிடம் மேலான பக்தியைக் கொள்கிறானோ அவன் என்னை அடைகிறான் என்று வாக்கும் கொடுக்கிறார் கண்ணன். 68ஆவது சுலோகத்தில் நம்பிக்கையுடையவர்களுக்கும் பக்தர்களுக்கும் கீதையின் கருத்துக்களை சொல் என்கிறார்.

அதனால் 67 ஆவது ஸ்லோகத்தை 68 ஆவது சுலோகத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

bg2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: