ஐ – திரை விமர்சனம்

shankar-i-wallpapers-vikram-amy-jackson

விக்ரமின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடித்தது தெய்வத் திருமகள் படத்தில் தான். பிதாமகனிலும் சேதுவிலும் அருமையாக நடித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை டாப் நாச் நடிப்பு தெய்வத் திருமகளில் தான். கொஞ்சம் கூட மிகை இல்லாமலும் அதே சமயம் மனவளர்ச்சிக் குன்றியவராக அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் விக்ரம். இந்தப் படம் “அதுக்கும் மேலே!”

படம் பார்த்தவர்களுக்கு இந்தக் குறியீடு புரியும் 🙂

இந்தப் படத்தில் அவர் நடிப்பையும், உழைப்பையும், பங்களிப்பையுமே மற்ற நடிகர்கள் இனி பெஞ்ச் மார்க்காக வைக்கக் கூடிய அளவு பிரமாதமாக செய்து அசத்தியுள்ளார் விக்ரம். அவர் அதை அனாயாசமாக செய்திருப்பதே என்னை மிகவும் கவர்ந்தது. ராயபுரம் மாதிரி ஒரு ஏரியா, அதில் பாடி பில்டிங்கும், மிஸ்டர் மெட்ராஸ், அடுத்து மிஸ்டர் இந்தியா ஆகும் இலக்கு மட்டுமே தான் குறிக்கோளாக, தன் உடல் பொருள் ஆவி அனைத்துமே அதுவாக வாழும் ஒருவரை தான் நாம் திரையில் காண்கிறோம்.

பாடி லேங்குவேஜில் நூத்துக்கு நூத்திப் பத்து மதிப்பெண் பெறுகிறார் விக்ரம். முதலில் மெட்ராஸ் தமிழ் பேசிக்கொண்டு லோகல் ஆசாமியாக, பின்னால் suave ஆக மாறி, அதன் பின் கூனனாக என்று ஒவ்வொரு பாத்திரத்திலும் பெரிய வித்தியாசத்தைக் காட்டி ஸ்கோர் பண்ணுகிறார்.

கதை சொல்வதில் கொஞ்சம் கூட குழப்பம் இல்லை. இத்தனைக்கும் முன்னும் பின்னும் பயணிக்கிறது கதை. தொடக்கம் முதலே விறுவிறுப்பு. படம் மூணு மணி நேரம். பின் பாதியில் சண்டைக் காட்சியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

ராம்குமார் சிவாஜி சூப்பர் சாய்ஸ். நல்ல ஒரு அறிமுகம். அந்தப் பாத்திரத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்துகிறார். பழைய முகங்களை விட புது முகங்கள் படத்திற்கு சுவாரசியத்தையும் எதிர்ப்பார்ப்பையும் கூட்டுகிறது.

படத்தின் ஹீரோ சோபிப்பது வில்லனின் விஸ்தீரணத்தை வைத்து தான். இதில் வில்லன்கள் சரியான விகிதத்தில் உள்ளது படத்தின் பலம். சந்தானமும் நல்ல துணைப் பாத்திரத்தில் வந்து பரிமளிக்கிறார்.

மாடலிங், விளம்பரம், படத்தின் ஆரம்பக் கதைக் களம். அதில் அருமையாக ஷங்கர் product placement செய்துள்ளார். படம் முழுக்க வரும் கண்ணைப் பறிக்கும் வர்ண ஜாலம் இன்னொரு மாபெரும் ப்ளஸ். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதல் முறையாக சங்கருடன் இணைந்து கண்ணுக்கு விருந்து கொடுத்துள்ளார் என்பதெல்லாம் சாதாரண பாராட்டு, “அதுக்கும் மேலே” தந்துள்ளார் 🙂 சைனாவில் எடுக்கப்பட்டக் காட்சிகள் வண்ண ஓவியம்.

இதில் மிக மிக பாராட்டப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் படத்தின் முக்கால் பகுதி விக்ரம் குருபியாக வந்தும் நம்மை எரிச்சல் படாமலும், சங்கடப் படாமலும் படத்தைப் பார்த்து ரசிக்க வைத்திருப்பது தான். Hats off to Shankar, P.C.Sriram, Vikram and the makeup team!

இந்தப் படத்தில் ஸ்டன்ட் மெகா ப்ராஜெக்ட். ஷங்கரின் பிரம்மாண்டம் வெளிப்படும் இடம் அது. விக்ரமும் அவருடன் சண்டையிடும் ஸ்டன்ட் ஆர்டிஸ்டுக்களும் risk எடுத்து நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். சைனா சண்டை காட்சிகள் படமாக்கப் பட்ட விதம் நமக்குப் புதுசு.

ஏமி ஜேக்ஸன் – ஆ அவளொரு அவளொரு தேவதை 🙂 perfect pick for the role. நன்றாக நடித்துள்ளார். மாடலாக வருவதால் வித விதமான உடைகள். பாடல் காட்சிகளிலும் உடைகள் சும்மா out of the world! இந்தப் படம் வெளிநாட்டுப் பட கேடகரியில் ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து நாமினேட் பண்ணப் பட்டு சென்றால் உடைக்காக ஆஸ்கர் கிடைக்கவேண்டும் என்பது என் கருத்து. ஆனால் அந்த கேடகரியில் ஆஸ்கர் இல்லை என்று நினைக்கிறேன். Best foreign film மட்டும் தான் உண்டு?

ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரொம்ப நன்றாக உள்ளது. பின்னணி இசை உலகத் தரம். பாடல்களும் தனியாக நான் கேட்டபோது ரசித்ததை விட படத்தில் படமாக்கப் பட்ட விதத்தால் இன்னும் சிறப்பாக உள்ளது. பாடல்கள் படமாக்கப் பட்ட விதத்தில் நூறு சதவிகிதம் ஷங்கரின் முத்திரை!

Weta Workshop என்ற special effects செய்யும் கம்பெனி தான் விக்ரமின் முகத்தில் வரும் கொப்பளங்களை செய்து கொடுத்துள்ளது. படத்தில் வரும் மற்ற ஸ்பெஷல் எபெக்ட்சும் தரமாக இருந்தது.

கதை ஆரம்பித்த விதம் நிறைய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின் பாதியில் என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது. சஸ்பென்ஸ் ஏதும் இல்லை. பின் பாதியில் ஒரு பாட்டு நிச்சயமாகக் கட் பண்ணியிருக்கலாம். ஷங்கர் gets carried away. அவருக்கு சுஜாதா மாதிரி ஒரு லகான் தேவை.

படம் பார்ப்பதில் நாட்டம் உள்ளவர்களுக்கு இந்தப் படம் ஒரு நல்ல என்டர்டெய்ன்ரே. விக்ரமின் பங்களிப்பினால் “அதற்கும் மேலே” என்று படம் பார்த்தவர்கள் நினைக்கவும் வாய்ப்புள்ளது 🙂

I poster