காக்கிச் சட்டை – திரை விமர்சனம்

kakkisattai

சிவகார்த்திகேயா! நீங்கள் முழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது! நல்ல கதை தான் ஒரு நடிகனின் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணி என்று புரிந்து கொண்டு செயல்படுங்கள் இல்லாவிட்டால் கார்த்தி மாதிரி நீங்கள் மாறி விட வாய்ப்புள்ளது.

நடிப்பில், நடனத்தில், மாஸ் அப்பீலில் நல்ல முன்னேற்றம். சிவகார்த்திகேயன் உங்கள் கண்ணில் ஒரு காந்தம் உள்ளது. நல்ல charisma. அதை பயன்படுத்தி வாய்ப்பைத் தவற விடாமல் நீங்கள் முன்னேற வேண்டுமே என்று எனக்கு பதைபதைப்பாக உள்ளது.

முதல் பாதியில் நேர்மையான் கான்ஸ்டபிளாக சுறுசுறுப்பாக, துறுதுறுப்பாக வருகிறார் ஹீரோ. காதல் தோழி ஸ்ரீ திவ்யா. வருத்தப் படாத வாலிபர் சங்கத்தில் இருந்த கெமிஸ்டிரியை விட  இப்படத்தில் கொஞ்சம் குறைவே.

பாடல்கள் படு மோசம். இரைச்சல் தான். BGM நன்றாகப் போட்டிருப்பதால் அனிருத் பாஸ் மார்க் வாங்குகிறார். வெளிநாட்டுக்கெல்லாம் போய் டூயட்டை படம் பிடித்திருக்கிறார்கள்.

கதையைக் கோவையாகச் சொல்லவேண்டும் என்று கூட ஒரு இயக்குநருக்குத் தெரியாதா? முதல் பாதியில் சுத்தமாக ஒன்றுமே இல்லை. இரண்டாம் பாதியில் கடைசி 20 நிமிடங்கள் சற்றே சுவாரசியமாக இருந்தது. அதுவும் அரைத்த மாவையே அரைத்து! இப்படி விமர்சிப்பது கூட புளித்துப் போய் விட்டது. கதையில் புது யுக்திகள் திருப்பங்கள் எதுவும் இல்லை. பிறகு பணமும் நேரமும் செலவழித்து ஒருவர் எதுக்குத் திரை அரங்கத்துக்குப் போய் படத்தைப் பார்க்கவேண்டும்?

தனுஷுக்கும் சிகாவுக்கும் இப்படத்தில் மனஸ்தாபம் என்று ஒரு வதந்தி. எதற்கு சண்டையோ தெரியவில்லை. ஆனால் ஏன் இந்த மாதிரி ஒரு படம் எடுத்தீர்கள் என்று ரசிகர்களாகிய நாம் தனுஷுடன் சண்டைக்குப் போகலாம் என்று எனக்குத் தோன்றுகிறது..

எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஏன் மனம் கொத்திப் பறவை கூட, இந்தப் படங்களில் ஏறிய சிவகார்த்திகேயனின் graph இந்தப் படத்தில் இறங்கு முகம். இமான் அண்ணாச்சி நன்றாக செய்திருக்கிறார். அவர் பாத்திரமும் அவருக்கான நகைச்சுவை வசனங்களும் மிக நன்று. பிரபு ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். பாவம் வித்யுலேகா ராமன், ஒரு குட்டி ரோல்.

இப்போ புதுசா திரைக்கதை ஆசிரியர்களிடம் கிடைத்திருக்கும் பூமாலை உடல் உறுப்புத் திருட்டு. அதை ஒவ்வொரு படத்திலும் பிச்சி பிச்சிப் போட்டு விளையாண்டு கொண்டிருக்கிறார்கள், at our expense.

படப்பிடிப்பு தேர்தல் முடிந்த கையோடு நடந்திருக்கு என்று தெரிகிறது. சிகா, பிரபு இருவர் விரல் நகங்களிலும் வோட்டுப் போட்ட மை அழியாமல் உள்ளது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு சிவா கார்த்திகேயன் படத்தில் ஒரு இடத்தில் சொல்கிறார். நமக்காக அவரே சொல்லிவிட்டார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்.

kakkisattai1

என் பார்வையில் திரௌபதி

draupadi

கற்புக்கரசிகள் என்று புராண மாந்தர் ஐவரைக் குறிப்பிடுவர். அவர்கள் சீதை, மண்டோதரி, அகலிகை, தாரை மற்றும் திரௌபதி.

இந்த ஐவரில் சீதை, இராமன் விருப்பப்படி தன் கற்பை நிருபிக்க தீக் குளித்தாள். அகலிகையோ தன் கணவனான கௌதம முனிவரால் சபிக்கப்பட்டுக் கல்லானாள். வாலியின் மனைவியான தாரை சுக்ரீவனுக்கும் மனைவியாக வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானாள். மண்டோதரி இராவணனுக்கு நல்ல அறிவுரைகள் கூறியும் அவளின் சொற்களை உதாசீனப்படுத்தி தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான்.

இவ்வைவரின் சூழ்நிலைகள் வெவ்வேறாக இருப்பினும் அவர்கள் தாங்கிய சுமைகள் கிட்டத்தட்ட ஒன்றே.

சீதை வனவாசத்திலும் அல்லல்பட்டு, பின் இராவணனால் கடத்தப்பட்டு அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானாள்.

கௌதம முனிவரின் சாபத்தால் அகல்யா கல்லாய் சமைந்து, இராமன் பாதம் அவள் மேல் பட்டு சாப விமோசனம் அடையும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

வாலி பலகாலம் திரும்பி வராததால் அவன் மனைவி தாரை சுக்ரீவனுக்கு வானர தர்மப்படி மனைவியானாள். அவளுக்கென்று தனி சுதந்திரம் இல்லை. வாலி திரும்பி வந்த பிறகும் அவளுக்கு விமோசனம் இல்லை. அவன் இறந்த பிறகு தன் கணவனை மறைந்திருந்து கொன்ற இராமனைக் கேள்வி மட்டுமே கேட்க துணிந்தாள்.

மண்டோதரியால் தன் கணவனுக்கு நல்லறம் புகட்ட முடியவில்லை, நல்வழிப்படுத்த முடியவில்லை. இவள் பேச்சைக் கேட்காததால் இராவணன் உயிரை இழந்தான், மண்டோதரி தன் கணவனையும் மகன்களையும்!

திரௌபதியைப் பார்ப்போம். அவளின் பிறப்பே மிகவும் சுவாரசியமானது. அவள் துருபத மகாராஜன் செய்த யாகத்தில் அவருக்கு மகளாக யாகக் குண்டத்தில் இருந்து தோன்றியாவள். பேரழகியான அவளின் வாழ்க்கை ஒரு சுழலும் சக்கரத்துக்கு ஒப்பானதாக இருந்தது. அரசிளங்குமரியாகத் தோன்றியவள் விதியின் விளையாட்டால் ஐவருக்கு வாக்கப் பட்டாள், இந்திரபிரஸ்தத்தின் ராணியாக அரியணை ஏறினாள், ஆனால் அது நிலைக்கவில்லை. துரியோததனனால் அரசு பறிக்கப்பட, காட்டுக்குச் சென்று பதிமூன்று ஆண்டுகள் கடின வாழ்க்கையை வாழ்ந்து, மேலும் பத்து மாத அஞ்ஞாத வாசத்தில் விராட நாட்டு அரசியின் சிகை அலங்கார சேடிப் பெண்ணாகவும் வாழ்க்கை நடத்தினாள். ஆனால் அவளின் சபதத்தினால் கௌரவர் குலமே அழிவுக்கு வந்தது. குருக்ஷேத்திரப் போர் முடிவில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரை இழந்தனர், அதில் அவளுடைய தந்தையும், சகோதரர்களும் ஐந்து மகன்களும் அடக்கம். போரில் வெற்றிப் பெற்றும் சோகத்தை அனுபவித்தவள் அவள்.

அவள் மண வாழ்க்கையின் முக்கியத் திருப்பம் தருமரின் சூதாட்டத்தின் மேல் உள்ள பற்றினால் நிகழ்ந்தது. அனைத்தையும் சூதில் இழந்து மனைவியையும் பணயமாக வைத்துத் தோற்றார். அதனால் சான்றோர்கள் நிறைந்த துரியோதனன் அரச சபையில் அவள் இழுத்து வரப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டாள், அச்செயலை அங்கிருந்த யாரும் தடுக்கவும் இல்லை, தவறு என்று சுட்டிக் காட்டவும் இல்லை. பகவான் கிருஷ்ணனும் அவள் அபயம் என்று கூக்குரலிட்ட பிறகு வந்து அவள் மானத்தைக் காப்பாற்றி அருளினார்.

draupadi1

பெண் என்றால் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டவள் திரௌபதி. இங்கு தான் அவள் மற்ற பெண்களை விட மாறுபடுகிறாள்.

தன்னையும் தன் சகோதரர்களையும் பணயம் வைத்துத் தோற்றப் பின்னும் யுதிஷ்டிரருக்கு எப்படி அவளைப் பணயம் வைத்து சூதாட உரிமை இருந்தது என்று தர்க்க ரீதியாக நியாயமான ஒரு கேள்வியை சபையின் முன் வைத்தாள். அதில் அவளின் அறிவுத் திறன் மிளிர்ந்தது.

சபையில் தன் கணவன்மார்கள் குனிந்தத் தலையுடன் இருந்தபோது துணிச்சலுடன் அவள் கேட்டப் பல கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் கிடைக்காவிடினும் அங்கிருந்தவர்களை அக்கேள்விகள் சிந்திக்க வைத்தன. தர்மம் எது என்பதை அவள் உணர வைத்தாள்.

இறுதியில் அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காதபோது தன்னை அவமானப் படுத்திய துரியோதனனும் துச்சாதனனும் பழிவாங்கப் படும் வரை தான் விரித்தக் கூந்தலை முடியப் போவதில்லை என்று சபதம் செய்து அதனை தன் ஐந்து கணவர்கள் மூலம் நிறைவேற்றவும் செய்தாள். இவ்வகையில் பார்க்கும்போது குருக்ஷேத்திரப் போருக்கு அவளே முக்கியக் காரணி ஆகிறாள்.

அவள் ஒன்றும் தவறே செய்யாதவள் இல்லை. கர்ணனை அவன் குலத்தைக் காரணம் காட்டி சுயம்வரத்தில் இருந்து விலக்கி வைத்தாள். துரியோதனன் இவர்கள் கட்டிய அரண்மனைக்கு விருந்தினனாக வரும்பொழுது தரை என எண்ணி தண்ணீரில் விழுந்தவனைப் பார்த்து உரக்க நகைத்து அவனை புண் படுத்தினாள். ஆனால் அதற்கு அவளுக்குக் கிடைத்தத் தண்டனை விகிதச் சமன் அற்ற தண்டனை.

கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகக் கௌர்வர்களிடம் தூது போனான். அந்த சமயத்திலும் தூதின் முடிவில் சமாதானம் வரக்கூடாதே என்று தான் திரௌபதி விரும்பினாள். சமாதானமாகச் சென்றால் இவள் சபதம் நிறைவேறாது. அது கண்ணனுக்கும் தெரியும். கண்ணனுக்கும் அவளுக்கும் விசேஷ பந்தம் உண்டு. (சிசுபாலனை வதம் செய்தபோது விரலில் அடிபட்டக் கண்ணனுக்கு தன் உடையில் இருந்து சிறிது கிழித்துக் கட்டுப் போட்ட திரௌபதிக்கு பின்னொரு நாள் எண்ணிலடங்கா புடைவைகளைக் கொடுத்து நன்றிக் கடன் தீர்த்துக் கொண்டவன் அவன்.)

உடலால் ஆணின் பலவந்தத்திற்கு உட்பட்டவள் திரௌபதி. இந்த மகாபாரத நிகழ்வு நடந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்றும் பெண்ணுக்குத் தனி ஒரு சுதந்திரம் வந்துவிடவில்லை. வன்புணர்வுகள் குறையவில்லை. பெண் இன்றும் தனக்கு ஏற்படும் அநீதிகளை சகித்துக் கொண்டும் மன்னித்தும் பொறுமை தான் காத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் அன்று திரௌபதி வனவாசத்தில் எவ்வளவு துன்பப் பட்டாலும், அஞ்ஞாத வாசத்தில் எவ்வளவு சிறுமைப் பட்டாலும் தன்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டும் அவள் பட்ட அவமானத்திற்கு கணவன்களை பொறுப்பேற்க வைத்து போரிட வைத்து வெற்றியும் கண்டாள் திரௌபதி.

அரச குமாரி, அவள் நினைத்திருந்தால் பிறந்த வீடு போய் அரச போகத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டின் பெருமையையும் புகழையும் நிலை நிறுத்த அவள் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தாள். பேரழகும் பெருங்குணமும் ஓருங்கே பெற்ற மாதரசி அவள்!

திரௌபதியின் அறச் சீற்றமே அவளை அம்மனாக மக்கள் இன்று வழிபடக் காரணமாகியது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதிலும் திரௌபதி அம்மன் கோவில்களில் நடக்கும் தீமிதி விழாக்கள் தீயில் தோன்றி தீயின் சுவாலையுடன் வாழ்ந்த அவளின் வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்தும் வழிபாடாக அமைந்துள்ளது.

சீதையை இராமனின் மனைவியாக, மண்டோதரியை இராவணனின் துணைவியாக, அகலிகையை இராமன கால் பட்டு சாப விமோசனம் அடைந்த முனி பெண்டாட்டியாக, தாரையை இராமனிடம் நியாயம் கேட்ட வானரப் பெண்ணாக மட்டுமே பார்க்கும் இச்சமூகம் திரௌபதிக்குக் கோவில் எழுப்பி வழிபட்டு வருவது அவளின் வாழ்க்கை நம் மேல் ஏற்படுத்தியிருக்கும் ஒரு தாக்கத்துக்கு எடுத்துக்காட்டு!

draupadi2

This article appeared in the recent internet magazine “Namdhu Thinnai”

Photos taken from the following websites with thanks.

http://deepsdmk.hubpages.com/hub/Story-of-a-Strong-and-Independent-Lady-in-Mahabharata#

அனேகன் – திரை விமர்சனம்

anegan

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க என்று சிவபுராணத்தில் வரும். ஒரு தனுஷ் அனேகனாக வரும் படம் இது. கதைப் பஞ்சம் தமிழ் சினிமா உலகில் தலை விரித்தாடுவதால் அநேகன் தனுஷுக்கு பல பாத்திரங்களில் வரும் வாய்ப்பு இருந்தும் நச்சுனு எந்த பாத்திரத்திலும் பதியமுடியவில்லை. இன்னும் வலுவான பாத்திரப் படைப்பு கிடைத்திருந்தால் சும்மா தூள் கிளப்பியிருப்பார். VIP பார்த்துவிட்டு ஆசையோடு போகிறவர்களுக்குக் கொஞ்சம் let down தான் இந்தப் படம். எனிவே லைட் எண்டர்டெயின்மென்ட் வகையில் இப்படம் சேர்த்தி.

ரொம்ப ஈசியா ஸ்கோர் செய்கிறார் தனுஷ். ஆனா கொஞ்சம் யாரடி நீ மோகினி தனுஷ் சாயல் ஆங்காங்கே வருகிறது. சில இடங்களில் அவர் மேனரிசம் தலைவரை நினைவுபடுத்துகிறது, அது may be எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை. நடனத்தில் தனுஷுக்குத் தனி ஸ்டைல்!

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு ரொம்ப அருமை. பர்மா/மியன்மார் ஊரில் எடுத்தவை கண்ணுக்கு விருந்து. இந்த ஏரியாவில் நாம் ரொம்ப முன்னேறிவிட்டோம் என்று நினைக்கிறேன். இப்போ வரும் எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு பிரமாதமாக உள்ளது.

ஹீரோயின் அமைரா தஸ்தூர் இன்னொரு ஜெனிலியா டைப்ஸ். அழகா இருக்கார். நடிப்பும் ஒகே. நடிகர் கார்த்திக் சர்ப்ரைஸ் ரி என்ட்ரி. நல்லா செஞ்சிருக்கார். கடைசியில் டயலாக் பேசிக் கழுத்தறுத்து விடுகிறார். ஆனால் அது முழுக்க முழுக்க கே.வி.ஆனந்த் fault. கார்த்திக் மாதிரியே தனுஷ் பேசுமிடம் அமர்க்களம்!

ஹேரிஸ் ஜெயராஜ் இசையில் டங்காமாரி ஆல்ரெடி ஹிட். மற்றப் பாடல்கள் சுமார் வகை. பின்னணி இசை ஒகே.

அயன் தான் அவர் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்தப் படம். அடுத்து கோ. அது கூட முடிவில் இன்னும் க்ரிஸ்பா முடித்திருக்கலாம். அந்தப் படங்களில் ஒரு போதை கடத்தல் பற்றியோ ஜர்னலிசம் பற்றியோ நாம் தெரிந்து கொள்ளக் கூடிய அளவில் புதிய, தெரியாத விஷயங்கள் இருக்கும். இதிலும் Gaming industryயில் வீடியோ கேம்ஸ் உருவாக்கும் கம்பெனியில் நடக்கும் தில்லுமுல்லுகளை பற்றி சொல்ல வருகிறார், ஆனால் அநேகக் கதைகள் படத்தில் இருப்பதால் அது முழுமை பெறவில்லை.

இரு முறை தோற்று மூன்றாம் முறை வெற்றிப் பெரும் கதாப்பாத்திரம் நிச்சயம் விஜய்க்கு செட் ஆகியிருக்காது. தனுஷ் ரசிகர்களும் இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் நல்ல வேளைக்கு ஆனந்த் படத்தை ரொம்ப ஹைப் பண்ணவில்லை. அதானால் போகிறவர்களுக்கு ஏமாற்றமும் கம்மியாக இருக்கும்.

மொத்தத்தில் நல்லதொரு என்டேர்டயின்மென்ட் படம்.

Anegan Movie Audio Release Date Poster

என்னை அறிந்தால் – திரை விமர்சனம்

 

YennaiArindhaal

எதுவுமே ஒருவருக்கு இயல்பா வருவதை முன்னிறுத்திச் செய்யப்படுவது வெற்றிப் பெறும். அஜித்துக்கு 7 வயது பெண்ணின் அப்பாவாக இருப்பது வெகு இயல்பாக வருகிறது. Action ஹீரோவாக நடிப்பதோ அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! இரண்டும் சேர்ந்த கலவை தான் “என்னை அறிந்தால்” சத்யதேவ். அதனால் பாத்திரப் படைப்பிலேயே கௌதம் மேனன் ஸ்கோர் செய்து விடுகிறார். வெறும் ஆக்ஷன் மட்டும் இல்லாமல் அன்பு, பாசம், கொஞ்சம் தத்துவம் என்று நல்ல விகிதத்தில் கலந்து அளித்திருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் நல்லதொரு விருந்து.

அஜித் பளிச்சென்று இருக்கிறார். He is definitely handsome 🙂 த்ரிஷாவுடனான சீன்களில் இருவரின் ஜோடிப் பொருத்தமும் ரொம்ப அழகாக உள்ளது. படம் முழுக்க அவர் ஆளுமை தான். நடிப்பு மிக நன்று! அனுஷ்கா லிங்காவில் இருந்ததை விட ரொம்ப better. விவேக்கும் கெக்கபிக்கே காமெடி இல்லாமல் அவருக்கு அளிக்கப்பட்டப் பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார். சிறுமியாக நடித்த அனிகாவை அவர்  வயதுக்குத் தகுந்தாற்போல நடிக்க வைத்திருப்பதால் நம்மை மிகவும் ஈர்க்கிறார். அருண் விஜய்க்கு வில்லன் பாத்திரம். அஜித்தின் வெற்றிக்கு ஒரு காரணம் அருண் விஜய் நன்கு நடித்திருப்பதால் தான்! ஒரு பலமான வில்லனை எதிர்க்கும்போது தான் ஹீரோ உயர்கிறார்.

மற்றப்படி அதே கெட்டவனை எதிர்க்கும் நல்லதொரு போலீஸ்காரன்  கதை தான். கெட்டவன் வீழ்கிறான், நல்லவன் வாழ்கிறான், அட்லீஸ்ட் அடுத்தப் படம் வரை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் நன்றாக உள்ளது. அந்தப் பாடல் வரிகள் (தாமரை) மிகவும் பொருள் செறிவுடன் இருக்கு. மற்றவை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பின்னணி இசை நன்று. படம் விறுவிறுப்பாகப் போகிறது. 176 நிமிடங்கள். ஆனால் திரைக் கதையில் வேகத் தடை இல்லை.

கதையின் ஓட்டம் சமூகப் பார்வையில் எனக்குப் மிகவும் பிடித்திருந்தது.

பெண்ணின் உடம்பை உரித்துக் காட்டும் ஐடம் டேன்ஸ் இல்லை.

இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் டூயட் இல்லை.

விவாகரத்து ஆனப் பெண்ணை ஹீரோ காதலிக்கிறார். அதுவும் அப்பெண் கைபடாத ரோஜா இல்லை. அப்பெண்ணிற்கு ஒரு குழந்தை உள்ளது.

உடல் உறுப்புக்களின் திருட்டைப் பற்றிய விழிப்புணர்வு வரவேற்க்கத்தக்கது.

வெவ்வேறு இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வது நம்மை அறிந்துகொள்ள உதவும் என்று ஒரு சிறு எண்ணத்தை இந்தப் படம் மூலம் பார்ப்பவர்கள் மத்தியில் விதைத்துள்ளார் இயக்குநர்

குடும்பத்துடன் பார்க்கலாம். அஜித் ரசிகர்கள் இப்படத்தை மிகவும் கொண்டாடுவார்கள்.

yennaiarindhal