என் பார்வையில் திரௌபதி

draupadi

கற்புக்கரசிகள் என்று புராண மாந்தர் ஐவரைக் குறிப்பிடுவர். அவர்கள் சீதை, மண்டோதரி, அகலிகை, தாரை மற்றும் திரௌபதி.

இந்த ஐவரில் சீதை, இராமன் விருப்பப்படி தன் கற்பை நிருபிக்க தீக் குளித்தாள். அகலிகையோ தன் கணவனான கௌதம முனிவரால் சபிக்கப்பட்டுக் கல்லானாள். வாலியின் மனைவியான தாரை சுக்ரீவனுக்கும் மனைவியாக வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானாள். மண்டோதரி இராவணனுக்கு நல்ல அறிவுரைகள் கூறியும் அவளின் சொற்களை உதாசீனப்படுத்தி தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான்.

இவ்வைவரின் சூழ்நிலைகள் வெவ்வேறாக இருப்பினும் அவர்கள் தாங்கிய சுமைகள் கிட்டத்தட்ட ஒன்றே.

சீதை வனவாசத்திலும் அல்லல்பட்டு, பின் இராவணனால் கடத்தப்பட்டு அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானாள்.

கௌதம முனிவரின் சாபத்தால் அகல்யா கல்லாய் சமைந்து, இராமன் பாதம் அவள் மேல் பட்டு சாப விமோசனம் அடையும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

வாலி பலகாலம் திரும்பி வராததால் அவன் மனைவி தாரை சுக்ரீவனுக்கு வானர தர்மப்படி மனைவியானாள். அவளுக்கென்று தனி சுதந்திரம் இல்லை. வாலி திரும்பி வந்த பிறகும் அவளுக்கு விமோசனம் இல்லை. அவன் இறந்த பிறகு தன் கணவனை மறைந்திருந்து கொன்ற இராமனைக் கேள்வி மட்டுமே கேட்க துணிந்தாள்.

மண்டோதரியால் தன் கணவனுக்கு நல்லறம் புகட்ட முடியவில்லை, நல்வழிப்படுத்த முடியவில்லை. இவள் பேச்சைக் கேட்காததால் இராவணன் உயிரை இழந்தான், மண்டோதரி தன் கணவனையும் மகன்களையும்!

திரௌபதியைப் பார்ப்போம். அவளின் பிறப்பே மிகவும் சுவாரசியமானது. அவள் துருபத மகாராஜன் செய்த யாகத்தில் அவருக்கு மகளாக யாகக் குண்டத்தில் இருந்து தோன்றியாவள். பேரழகியான அவளின் வாழ்க்கை ஒரு சுழலும் சக்கரத்துக்கு ஒப்பானதாக இருந்தது. அரசிளங்குமரியாகத் தோன்றியவள் விதியின் விளையாட்டால் ஐவருக்கு வாக்கப் பட்டாள், இந்திரபிரஸ்தத்தின் ராணியாக அரியணை ஏறினாள், ஆனால் அது நிலைக்கவில்லை. துரியோததனனால் அரசு பறிக்கப்பட, காட்டுக்குச் சென்று பதிமூன்று ஆண்டுகள் கடின வாழ்க்கையை வாழ்ந்து, மேலும் பத்து மாத அஞ்ஞாத வாசத்தில் விராட நாட்டு அரசியின் சிகை அலங்கார சேடிப் பெண்ணாகவும் வாழ்க்கை நடத்தினாள். ஆனால் அவளின் சபதத்தினால் கௌரவர் குலமே அழிவுக்கு வந்தது. குருக்ஷேத்திரப் போர் முடிவில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரை இழந்தனர், அதில் அவளுடைய தந்தையும், சகோதரர்களும் ஐந்து மகன்களும் அடக்கம். போரில் வெற்றிப் பெற்றும் சோகத்தை அனுபவித்தவள் அவள்.

அவள் மண வாழ்க்கையின் முக்கியத் திருப்பம் தருமரின் சூதாட்டத்தின் மேல் உள்ள பற்றினால் நிகழ்ந்தது. அனைத்தையும் சூதில் இழந்து மனைவியையும் பணயமாக வைத்துத் தோற்றார். அதனால் சான்றோர்கள் நிறைந்த துரியோதனன் அரச சபையில் அவள் இழுத்து வரப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டாள், அச்செயலை அங்கிருந்த யாரும் தடுக்கவும் இல்லை, தவறு என்று சுட்டிக் காட்டவும் இல்லை. பகவான் கிருஷ்ணனும் அவள் அபயம் என்று கூக்குரலிட்ட பிறகு வந்து அவள் மானத்தைக் காப்பாற்றி அருளினார்.

draupadi1

பெண் என்றால் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டவள் திரௌபதி. இங்கு தான் அவள் மற்ற பெண்களை விட மாறுபடுகிறாள்.

தன்னையும் தன் சகோதரர்களையும் பணயம் வைத்துத் தோற்றப் பின்னும் யுதிஷ்டிரருக்கு எப்படி அவளைப் பணயம் வைத்து சூதாட உரிமை இருந்தது என்று தர்க்க ரீதியாக நியாயமான ஒரு கேள்வியை சபையின் முன் வைத்தாள். அதில் அவளின் அறிவுத் திறன் மிளிர்ந்தது.

சபையில் தன் கணவன்மார்கள் குனிந்தத் தலையுடன் இருந்தபோது துணிச்சலுடன் அவள் கேட்டப் பல கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் கிடைக்காவிடினும் அங்கிருந்தவர்களை அக்கேள்விகள் சிந்திக்க வைத்தன. தர்மம் எது என்பதை அவள் உணர வைத்தாள்.

இறுதியில் அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காதபோது தன்னை அவமானப் படுத்திய துரியோதனனும் துச்சாதனனும் பழிவாங்கப் படும் வரை தான் விரித்தக் கூந்தலை முடியப் போவதில்லை என்று சபதம் செய்து அதனை தன் ஐந்து கணவர்கள் மூலம் நிறைவேற்றவும் செய்தாள். இவ்வகையில் பார்க்கும்போது குருக்ஷேத்திரப் போருக்கு அவளே முக்கியக் காரணி ஆகிறாள்.

அவள் ஒன்றும் தவறே செய்யாதவள் இல்லை. கர்ணனை அவன் குலத்தைக் காரணம் காட்டி சுயம்வரத்தில் இருந்து விலக்கி வைத்தாள். துரியோதனன் இவர்கள் கட்டிய அரண்மனைக்கு விருந்தினனாக வரும்பொழுது தரை என எண்ணி தண்ணீரில் விழுந்தவனைப் பார்த்து உரக்க நகைத்து அவனை புண் படுத்தினாள். ஆனால் அதற்கு அவளுக்குக் கிடைத்தத் தண்டனை விகிதச் சமன் அற்ற தண்டனை.

கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகக் கௌர்வர்களிடம் தூது போனான். அந்த சமயத்திலும் தூதின் முடிவில் சமாதானம் வரக்கூடாதே என்று தான் திரௌபதி விரும்பினாள். சமாதானமாகச் சென்றால் இவள் சபதம் நிறைவேறாது. அது கண்ணனுக்கும் தெரியும். கண்ணனுக்கும் அவளுக்கும் விசேஷ பந்தம் உண்டு. (சிசுபாலனை வதம் செய்தபோது விரலில் அடிபட்டக் கண்ணனுக்கு தன் உடையில் இருந்து சிறிது கிழித்துக் கட்டுப் போட்ட திரௌபதிக்கு பின்னொரு நாள் எண்ணிலடங்கா புடைவைகளைக் கொடுத்து நன்றிக் கடன் தீர்த்துக் கொண்டவன் அவன்.)

உடலால் ஆணின் பலவந்தத்திற்கு உட்பட்டவள் திரௌபதி. இந்த மகாபாரத நிகழ்வு நடந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்றும் பெண்ணுக்குத் தனி ஒரு சுதந்திரம் வந்துவிடவில்லை. வன்புணர்வுகள் குறையவில்லை. பெண் இன்றும் தனக்கு ஏற்படும் அநீதிகளை சகித்துக் கொண்டும் மன்னித்தும் பொறுமை தான் காத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் அன்று திரௌபதி வனவாசத்தில் எவ்வளவு துன்பப் பட்டாலும், அஞ்ஞாத வாசத்தில் எவ்வளவு சிறுமைப் பட்டாலும் தன்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டும் அவள் பட்ட அவமானத்திற்கு கணவன்களை பொறுப்பேற்க வைத்து போரிட வைத்து வெற்றியும் கண்டாள் திரௌபதி.

அரச குமாரி, அவள் நினைத்திருந்தால் பிறந்த வீடு போய் அரச போகத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டின் பெருமையையும் புகழையும் நிலை நிறுத்த அவள் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தாள். பேரழகும் பெருங்குணமும் ஓருங்கே பெற்ற மாதரசி அவள்!

திரௌபதியின் அறச் சீற்றமே அவளை அம்மனாக மக்கள் இன்று வழிபடக் காரணமாகியது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதிலும் திரௌபதி அம்மன் கோவில்களில் நடக்கும் தீமிதி விழாக்கள் தீயில் தோன்றி தீயின் சுவாலையுடன் வாழ்ந்த அவளின் வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்தும் வழிபாடாக அமைந்துள்ளது.

சீதையை இராமனின் மனைவியாக, மண்டோதரியை இராவணனின் துணைவியாக, அகலிகையை இராமன கால் பட்டு சாப விமோசனம் அடைந்த முனி பெண்டாட்டியாக, தாரையை இராமனிடம் நியாயம் கேட்ட வானரப் பெண்ணாக மட்டுமே பார்க்கும் இச்சமூகம் திரௌபதிக்குக் கோவில் எழுப்பி வழிபட்டு வருவது அவளின் வாழ்க்கை நம் மேல் ஏற்படுத்தியிருக்கும் ஒரு தாக்கத்துக்கு எடுத்துக்காட்டு!

draupadi2

This article appeared in the recent internet magazine “Namdhu Thinnai”

Photos taken from the following websites with thanks.

http://deepsdmk.hubpages.com/hub/Story-of-a-Strong-and-Independent-Lady-in-Mahabharata#

6 Comments (+add yours?)

 1. தேவா..
  Feb 21, 2015 @ 05:30:56

  இன்றுதான், திரௌபதிக்கு கோயில் இருப்பதை தெரிந்து கொண்டேன். நன்றி. மாறுபட்ட சிந்தனையின் வெளிப்பாடு.

  Reply

 2. psankar
  Feb 25, 2015 @ 08:51:19

  மகாபாரதத்தில் வரும் திரௌபதிக்கும் தமிழக திரௌபதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நினைவு. தமிழக திரௌபதி அம்மன் கோவில்களில் பாண்டவர்களுக்கு என்று சிலைகள் இருக்காது. கண்ணனும் இருக்க மாட்டார். திரௌபதி என்பவர் தாய்வழிச் சமூகத்தின் நீட்சியாக ஒரு பெண் மூதாதை மட்டுமே என்று நினைவு. KRS GiRa போன்ற அறிவாளிகளிடம் கேட்டால் பதில் கிடைக்கலாம்

  Reply

  • amas32
   Feb 25, 2015 @ 12:04:25

   ஓ, அப்படியா? எனக்குத் தெரிந்த வரையில் இருவரும் ஒருவரே.

   Reply

 3. GiRa ஜிரா
  Feb 27, 2015 @ 13:56:06

  கண்ணகி சிலைதான் இங்குண்டு
  சீதைக்குத் தனியே சிலை ஏது-ன்னு வைரமுத்து எழுதியது நினைவுக்கு வருது.

  இங்க கண்ணகிக்குப் பதில் திரவுபதி.

  திரவுபதி கோயில்தான் இங்குண்டு
  சீதைக்குத் தனியே கோயிலேதுன்னு மாத்திப் பாடலாம்.

  Reply

 4. amas32
  Feb 27, 2015 @ 16:57:54

  நன்றி ஜிரா 🙂

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: