
எளிமைக்கும் பக்திக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்றால் அவர் அனுமன் தான்! வீரமும் விவேகமும் நிறைந்த ஒருவர் பணிவுக்கும் உதாரணப் புருஷராய் இருப்பது அரிது. பலம் பொருந்தியவர் யாருக்கும் பணியத் தேவையில்லை. ஆனால் பெரும் வல்லவரான அனுமான் இராமதாசனாய் வாழ்ந்து பக்தியின் மேன்மையையும் உன்னதத்தையும் உலகுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்.
பிரிந்த இராமனும் சீதையும் அவரின்றி இணைந்திருக்க முடியாது. ஆனால் அதை சாதித்த அகம்பாவம் அவரிடம் துளியும் கிடையாது. அவர் தன்னை இராமனின் கருவியாக மட்டுமே பார்த்தார். இலங்கை சென்றார், சீதையைக் கண்டார், இராவணனை வெல்ல வழி வகுத்தார், இழந்த மகிழ்ச்சியை மீட்டுக் கொடுத்தார் இராமனுக்கு!
பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு. பக்திக்கு முதல் தேவை மமதை இன்மை. ஆங்கிலத்தில் தூய பக்தியை unconditional love என்பார்கள். எதையும் எதிர்ப்பார்க்காத அன்பே பக்தி. பக்தன் என்பவன் தனக்கு மேல் ஒருவர் இருப்பதை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டு நடக்கிறான். பக்தியில் ஒன்பது வகைகள் உள்ளன. அவற்றை விளக்கும் வடமொழிப் பாடல் கீழே.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணுஹு
ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சாக்கியம் ஆத்ம நிவேதனம்.”
ஸ்ரவணம் – கேட்பது; கீர்த்தனம் – பாடுவது; ஸ்மரணம் – நினைப்பது, அசை போடுவது; பாத சேவனம் – திருவடிகளில் அடைக்கலம்; அர்ச்சனம் – துதிப்பது; வந்தனம் – வணங்குவது; தாஸ்யம் – சொல்வதை சிரமேற் கொண்டு செய்வது; சாக்கியம் – நட்புடன் இருப்பது; ஆத்ம நிவேதனம் – பரிபூரண சரணாகதி.
இப்பாடல் எப்படி படிப்படியாக இறைவனுடன் ஒன்றுவது என்பதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்கிறது. முதலில் ஸ்ரவணம் – காதால் நல்லவற்றைக் கேட்பது.
“செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” திருக்குறள்-411
பெரியோர்களின் நல்ல வாக்குகளைக் கேட்டுணர்ந்தாலே வாழ்வில் நற்பயனை அடைவோம் என்கிறார் வள்ளுவர். நல்லவற்றைக் கேட்பதில் தலையாயது இறை நாமத்தையும் அவரின் புகழை சொல்லும் கதைகளையும் கீர்த்தனங்களையும் கேட்பது தான்.

அனுமன் எங்கெல்லாம் இராமகதை சொல்லப் படுகிறதோ அங்கெல்லாம் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை. பத்மா சேஷாத்ரி பள்ளியில் என் குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த போது ஒரு இராமாயண சொற்பொழிவு அந்த பள்ளி அரங்கில் நடை பெற்றது. அப்பொழுது எங்கிருந்தோ ஒரு குட்டிக் குரங்கு அந்த அரங்கினுள் நுழைந்து சொற்பொழிவு முடியும் வரை இருந்துவிட்டு ஓடிவிட்டதாம். அங்கிருந்த குழந்தைகளுக்கு அத்தனை ஆச்சரியம். கே.கே.நகரில் குரங்கைக் கண்டவர் உண்டோ?

எப்பொழுதுமே எந்த மதத்திலுமே இறை வழிபாட்டுக்கு இசைக்கு தான் முதலிடம். நாம் உருகி இறை நாமத்தைப் பாடும்போது இறைவன் நம் கண்ணுக்குத் தெரிகிறானோ இல்லையோ நம் மனப்பாரம் இறக்கப்பட்டு லேசாகிவிடும். கீர்த்தனத்துக்கு அத்தனை மகிமை. அனுமன் சப்ளாக் கட்டையுடன் இருக்கும் படங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர் எப்பொழுதும் இராம நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்பார். இசைக்கு மயங்காத பேர்களுண்டோ? இறைவன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? பாட்லகள் மூலம் நம் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துவது எளிது.

அடுத்து இறைவனை நினைப்பது (ஸ்மரணம்). ஏதோ உப்புப் பெறாத விஷயத்துக்குக் கவலைப் படுவதை விட அந்த நேரத்தில் இறைவன் லீலைகளையும் அவனைப் பற்றிய பெருமைகளையும் சிந்தித்தால் கவலைக்கு இடமே இருக்காது. கவலைப் படும் அந்நேரத்தை இறை சிந்தனை எடுத்துக் கொள்ளும். அனுமன் எப்போதும் இராமனை நினைத்த வண்ணம் தான் இருப்பார். அப்படிப்பட்ட இதயத்தில் நினைப்பில் இருப்பவர் தானே குடிகொண்டிருக்க முடியும்? அனுமனின் இதயத்தைப் பிளந்தால் இராம சீதா தான் இருப்பார்கள், அப்படி அவர் இதயத்தைத் திறந்து காட்டும் சந்தர்ப்பமும் இராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஏற்பட்டது. அனுமனுக்கு அன்புப் பரிசாக சீதை மிக விலை உயர்ந்த முத்து மாலையை அளித்தாள். அவரோ அதை ஒவ்வொன்றாகக் கடித்துத் துப்பினார். அதைப் பார்த்துக் கோபம் கொண்ட சீதை அவரைக் கேள்விக் கேட்க அவரோ இந்த முத்துக்களில் இராமன் இருக்கிறாரா என்று தேடுகிறேன் என்றாராம். நாங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறோம், நீ அதில் தேடுகிறாயே என்ற சீதை கேட்க, உடனே இராமன் சொல்படி அனுமன் தன் இதயத்தைத் திறந்து காட்ட அங்கு அவ்விருவரே இருந்தனர். எப்பொழுதும் இறை சிந்தனையில் இருக்கும் ஒருவரின் இதயத்தில் அக்கடவுள் உறைவது ஆச்சரியமில்லையே!

அடுத்துப் பாத சேவனம் – நின்னை சரண் அடைந்தேன் மனோ பாவம் தான் இது. இறைவனின் தாமரை பாதங்களை பூசிப்பது, திருவடிகளில் அடைக்கலம் ஆவது. அனுமனின் இராம பக்தி சீதையை அசோகவனத்தில் முதன் முதலில் கண்டதும் தொழுவதில் தெரிகிறது.
கம்ப ராமாயணத்தில் அனுமன் சீதையைத் தொழுது,
வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர் அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்; உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என, கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான்: 2
‘ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்! வாழி, சோபனம்! மங்கல சோபனம்! ஆழி ஆன அரக்கனை ஆரியச் சூழி யானை துகைத்தது, சோபனம்!’ 3
பாடினான் திரு நாமங்கள்; பல் முறை கூடு சாரியில் குப்புற்றுக் கூத்து நின்று ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச் சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். 4
‘தலை கிடந்தன, தாரணி தாங்கிய மலை கிடந்தனபோல்; மணித் தோள் நிரை அலை கிடந்தென ஆழி கிடந்தன; நிலை கிடந்தது, உடல் நிலத்தே’ என்றான். 5
பாதசேவனத்தின் முழு அழகை இப்பாடல் வரிகளில் காணலாம்.


அர்ச்சனம்- இறைவனைத் துதிப்பது. அனுமன் அருகில் சென்றாலே இராம ஜெபத்தின் ஓசை கேட்குமாம். துதித்தல் என்பது ஒருவரின் புகழ் பாடுதல். நாம் ஒருவரை உண்மையில் நேசிக்கும்போது தான் அவரின் அருமை பெருமைகளைப் போற்றுவோம். அனுமன் இராமனை நேசித்தார், அதனால் அவரை போற்றுவது தன்னிச்சையான செயலாக அவருக்கு அமைந்தது. இராவணனை அவன் சபையில் சந்திக்கும்போதும் அவர் இராமனின் பெருமையை எடுத்துக் கூறுதல் இவ்வகையையேச் சேரும்.

வந்தனம் – வணங்குவது! கை கூப்பிய அனுமனை தான் நாம் எந்தக் கோவிலிலும் காண்கிறோம். வினயத்தின் மறு உருவம் அனுமன். இராமனை எக்காலமும் தொழுத வண்ணம் உள்ளார். உள்ளத்தாலும் செய்கையினாலும் நம் பெற்றோர்களையும் இறைவனையும் தொழத் தூண்டுவது இவரின் இந்தக் குணமே.

தாஸ்யம் – காலால் இட்ட வேலையை தலையால் செய்வது! இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். மூலிகையைப் பறித்து வா என்றால் சஞ்சீவி மலையையே பெயர்த்துக் கொண்டு வந்தவராயிற்றே! சீதை இருக்கிமிடத்தைக் கண்டுபிடித்து, இலங்கைக்குப் பாலம் அமைத்து எத்தனை எத்தனை சேவைகளைச் செய்திருக்கிறார் அவர். நாம் நம் வாழ்வில் ஒருவருக்கு ஒரு சிறு உதவி செய்துவிட்டு, வாழ்நாள் முழுக்கச் சொல்லிக் காட்டிக் கொண்டிருப்போம் அல்லது தன்னால் தான் அக்காரியமே வெற்றிப் பெற்றது என்று உரிமைக் கொண்டாடுவோம். அனுமனோ அடக்கத்தின் மறு உருவம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருந்தார்.
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன் என்பது அனுமனுக்கும் இராமனுக்கும் உள்ள நட்பிற்கு ஒரு சான்று. இராமன் தனக்கும் சீதைக்குமே தெரிந்த ஒரு அந்தரங்க நிகழ்ச்சியை அனுமனிடம் சீதையைக் காணும்போது சொல்லச் சொல்லி அனுப்புகிறார். அதுவும் தவிர தன் கணையாழியையும் கொடுத்தனுப்புகிறார்! இது அனுமன் மேல் இராமன் வைத்த நம்பிக்கைக்குச் சான்று.

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்.
ஒருவரை நேசிக்கவும் பக்தி கொள்ளவும் ஆரம்பித்தப் பின் தோழமை உணர்வு தழைத்தோங்கும். அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் இதே பாவம் தான் இருந்தது. இதில் இறைவனும் நம்மை நண்பனாகப் பாவிப்பது தான் நாம் செய்த பெரும் பேறு! நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கிப் பத்து அடி எடுத்து வைப்பார். சாக்கியம் நாம் இறைவனுடன் நட்பு பாராட்டுவது, அன்னியோனத்தை மேம்படுத்திக் கொள்வது ஆகும்.
கடைசியில் ஆத்ம நிவேதனம். இராமன் தன் அவதாரக் காலம் முடிந்த பின் சரயு நதியில் தன்னுடன் வைகுண்டத்தில் இருந்து வந்த அனைவருடன் இறங்கி மேல் லோகம் போகிறார். ஆனால் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு இங்கே இருப்பதே தனக்கு வைகுண்டம் என்று பூலோகத்திலேயே இருந்து விடுகிறார் அனுமன். எவருக்குமே இறைவனுடன் சமீபித்து இருப்பது தான் பிடிக்கும் அது தான் ஆன்மிகத்தின் வெற்றி என்று நினைப்பவர் மத்தியில் இராமனின் புகழை பரப்பிக் கொண்டு இராம நாமத்தின் இன்பத்தில் திளைத்து இருப்பதே ஆத்ம நிவேதனமாகக் கருதுகிறார் அனுமன்.

Photos taken from these websites with thanks.
http://godsingold.blogspot.in/2014/09/bhakt-hanuman.html
http://www.exoticindiaart.com/article/
http://megaupl0ad.ws/files/hanuman%20in%20meditation&id=mix
https://vibhormahajan.wordpress.com/2012/05/28/
http://pillai.koyil.org/?p=380
மார்ச் மாதம் ‘நமது திண்ணை’ மின்னிதழில் வெளிவந்த என் கட்டுரை இது.
முழு இதழுக்கான லிங்க்