நான் ட்விட்டருக்கு வந்ததே எதேச்சையாகத் தான். என் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்தார்கள். ட்விட்டரில் அவர்கள் போடும் ட்வீட்டுக்களை நோட்டம் பார்க்க ட்விட்டரில் ஐடி இல்லாமல் அவர்களின் ட்வீட்டுக்களை மட்டும் படித்துக் கொண்டு இருப்பேன். அப்பொழுது நான் அதிகம் ப்ளாக் படிப்பதில் தான் ஆர்வம் காட்டி வந்தேன். இவர்களின் ட்விட்டர் அக்கௌன்ட் தவிர இவர்கள் பாலோ செய்யும் ட்வீட்டர்கள் டைம்லைனும் பார்த்து அவர்களின் ப்ளாக் பதிவுகளையும் படித்து வருவேன். இதை அறிந்த என் மகன் எனக்குத் தனியாக அக்கௌன்ட் திறந்து தந்தான் 🙂
ட்விட்டர் வந்த புதிதில் பல விஷயங்கள் கேட்க கூச்சம், அதனால் பலதும் கவனித்தேத் தெரிந்து கொண்டேன். DP என்றால் Display Picture, DM என்றால் Direct Message என்றெல்லாம் புரிய பல மாதங்கள் ஆயிற்று. முதலில் முட்ட DP தான் வைத்திருந்தேன். பிறகு தான் என் படம் வைத்த DP! Twitter handle @amas32 என் மகன் எனக்கு வைத்தப் பெயர் 🙂 என் முதல் பாலோவர்கள் என் மகன், மகள், என் கணவர். இவர்கள் ட்விட்டரில் முன் காலத்தில் இருந்தே இருந்தார்கள். சில பாலோவர்களுடன் ஆரம்பித்த என் ட்விட்டர் பயணம் 4 வருடங்களில் இவ்வளவு வளர்ந்திருக்கிறது.
என் அனுபவத்தை நான் பகிர்ந்து கொண்டால் புதிதாக ட்விட்டருக்கு வருபவர்களுக்கு உதவியா இருக்குமே என்று தோன்றியது. அதனால் இந்தப் பதிவு 🙂
ட்விட்டர் bio சுவாரசியமாகவும் உங்களைப் பற்றி மற்றவர் என்ன நினைக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களோ அதை சுருக்கமாக எழுதி வைக்கவும். ட்விட்டர் ஹென்டிலும் சின்னதாக இருத்தல் நலம். ஹென்டிலே 15 எழுத்துகள் இருந்தால் 140ல் 15 ஹென்டிலுக்கேப் போய்விடும்.
முதல் ரூல், ட்விட்டர் அக்கௌன்ட் திறந்த பிறகு கொஞ்ச காலம் மற்றவர் டைம் லைன் போய் ட்வீட்டுக்களைப் படித்து யார் யார் எப்படி ட்வீட்டுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். நமக்குப் பிடித்த மாதிரி ட்வீட்டுபவர்களை பாலோ செய்ய வேண்டும். பாலோ அன்பாலோ பட்டன் நம் கையில். யாரை பாலோ செய்யவும் அன்பாலோ செய்யவும் நமக்கு உரிமை இருக்கு.
முதலிலேயே நூறு இருநூறு பேர்களை பாலோ செய்யக் கூடாது. கொஞ்சம் பேரை பாலோ செய்து அவர்களுடன் உரையாட ஆரம்பிக்க வேண்டும். சும்மா ஹெலோ ஹாய் என்றெல்லாம் ட்வீட் போட்டால் யாரும் கண்டுக்க மாட்டார்கள். அவர்கள் போடும் ட்வீட்டுக்குத் தகுந்த பதில் சொல்ல முடிந்தால் அது அவர்களை உங்களுக்குத் திரும்ப பதில் அளிக்க வைக்கும். அதன் மூலம் ஒரு அறிமுகமும் நேசமும் உருவாகும்.
சிலர் ட்வீப்ஸ் ரொம்ப நல்லவர்கள், அவர்களை பாலோ செய்தவுடன் திரும்ப அவர்கள் பாலோ பேக் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களை பாலோ செய்வது ஆரம்ப காலத்தில் நமக்கு நல்லது. அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.
அதே சமயம் நம் டைம்லைனில் (நேரக்கொடு) நாமும் புது ட்வீட்டுகள் போடுவது மிக அவசியம். யாரவது நம்மை பாலோ பண்ண விரும்பினால் நம் டைம்லைன் வந்து பார்த்து நம் ட்வீட்டுகளைப் படித்து, அவை பிடித்திருந்தால் தான் பாலோ செய்வார்கள். அதனால் சினிமா, நடிகர்கள், அரசியல், உள்நாட்டு, வெளிநாட்டுக் கலவரங்கள், பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு நிலவரங்கள், மதம், மொழி, இனம், அம்மா, அப்பா, தோசை, தோழி, காதல், தோல்வி, தத்துவம், கவிதை என்று உங்களுக்குப் பிடித்த தலைப்பில் 140 எழுத்துக்களுக்குள் உருப்படியாக ஏதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள். யாரையும் புண்படுத்தி ட்வீட் போட வேண்டாம். ஆனால் அப்படி போட்டும் மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைவதும் இங்கே நடக்கிறது. அந்த சாய்சும் உங்களதே.
முதலிலேயே அதிக பாலோவர்களும் (தொடர்பவர்களும்) மிகக் குறைந்த பேரை பாலோ (தொடர்வோரும்) செய்பவர்களை (இவர்களுக்குப் பேர் ட்விட்டர் பிரபலங்கள்) பாலோ செய்ய வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நிச்சயம் உங்களை திரும்ப பாலோ செய்யப் போவதில்லை. அதனால் உங்கள் பாலோவிங் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பாலோவர் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும். இதனால் புதிதாக உங்களைத் தொடர நினைப்பவர் யாரேனும் உங்கள் டைம்லைன் வந்து பார்த்தால் என்ன இவர் நிறைய பேரை தொடர்கிறார் ஆனால் குறைந்த அளவில் தான் பாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்று உங்களை பாலோ செய்யாமல் போய்விடுவார்கள். அதனால் ஆரம்பித்திலேயே அந்த ratioவை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.
ட்விட்டரில் நிறைய சண்டைகள் நடக்கும். ராஜா ரஹ்மான் சண்டை, அஜித் விஜய் சண்டை, இது போல பல. இதை முதலில் தூர நின்றே வேடிக்கைப் பார்க்க வேண்டும். அருகில் சென்று கருத்துச் சொன்னால் எதிர் அணி உங்களை பீஸ் பீசாக்கி விடும். உங்களுக்கு நல்ல நின்று ஆடும் திறன் இருந்தால் நீங்கள் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு வெகு விரைவில் பாலோவர் எண்ணிக்கையைக் கூட்டலாம். பலரும் சண்டை போடுபவர்களை பாலோ செய்வதில் தான் அதிகப் பிரியம் வைக்கின்றனர்.
பாலோ செய்யும்போது யார் யாருடன் அதிகம் பேசுகிறார்கள் என்பதை கவனித்தும் அவர்களை மொத்தமாக பாலோ செய்யலாம். அதன் மூலம் அந்தக் குழுவில் இருக்கும் ஒருவர் நம்மை பாலோ பண்ண ஆரம்பித்தாலும் மற்றவர்களும் விரைவில் நம்மை பாலோ பண்ண வாய்ப்புள்ளது.
ட்வீட்டப் என்பது ட்விட்டரில் இருப்பவர்கள் ஒரு குழுவாக எங்காவது கடற்கரை, பூங்கா என்று நேரம் குறித்து வைத்து சந்தித்துக் கொள்வது. அதில் நேரடியாகப் பங்கேற்று நட்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலமும் பாலோவிங் எண்ணிக்கை உயரும். சிலர் சின்ன வட்டத்தை தான் விரும்புவார்கள். பெரிய பாலோவிங் எல்லாம் தேவை இல்லாமல் பிடித்த நட்புக்களை மட்டும் பாலோ செய்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
நல்ல ட்வீப்புக்களை பாலோ செய்தால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. எவ்வளவு மன அழுத்தத்துடன் ட்விட்டருக்கு வந்தாலும் சிறிது நேரத்தில் ரிலேக்ஸ் ஆகிவிடலாம். ஆனால் அதே சமயத்தில் நமக்குப் பிடிக்காத ட்வீட்டுக்களை போடுபவர்களை பாலோ செய்தால் இரத்த அழுத்தம் எகிறவும் வாய்ப்புள்ளது.
பல சமயம் பல ட்வீட்டுக்கள் நம்மை வம்புக்கு இழுக்கும். பதில் சொல்ல கை பரபரக்கும். கண்டும் காணாமல் போவது சாலச் சிறந்தது. எதையும் லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். சொல்வது எளிது, செயல் படுத்துவது கடினம். ஜாதி, மதம், பிடித்த நடிகர் பற்றிய நமக்குப் பிடிக்காத ட்வீட்டுகளைப் பார்க்கும்போது பதில் சொல்லாமல் போவது கோழைத் தனமாகத் தெரியும். அப்படியே பதில் அளித்தாலும் ஓரிரு உரையாடல்களுடன் முடித்துக் கொள்ளத் தெரிய வேண்டும். இல்லை என்றால் ட்விட்டரின் சுழலில் மாட்டிக் கொண்டு மீள்வது கடினம்.
வெளியில் வாழ்பவர்கள் தான் ட்விட்டரிலும் இருக்கிறார்கள். அதனால் அதே குண நலத்துடன் தான் இருப்பார்கள், கோபம், வெறுப்பு, பொறாமை, கிண்டல் நிறைந்தவர்களை தான் இங்கும் பார்ப்பீர்கள். என்ன எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் ஏனென்றால் anonymity. அதாவது முகமூடி – யாரென்று தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் வசதி இந்த ஊடகத்துக்கு உள்ளதால் சிலரால் அதிக வெறுப்பை உமிழ முடிகிறது. அந்த சமயத்தில் வேதனைப் படாமல் அப்படி நம்மை பாதிக்கும் எவரையும் ப்ளாக் (block) செய்து விட்டுப் போய் கொண்டே இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான்.
ட்விட்டரின் சுவாரசியமே 140க்குள் நம் கருத்தைச் சொல்வது தான், வள வள என்று பேசாமல் நறுக் சுருக்காக எண்ணங்களை பகிர்தல்! உடனுக்குடன் பதில் அளிப்பதும், உலக அளவில் எங்கு என்ன நடந்தாலும் உடனே ட்விட்டரில் தெரிந்து சுடச் சுடத் தகவல் பரிமாற்றம் ஏற்படுவதும் தான் ட்விட்டர் இவ்வளவு பிரபலம் அடையக் காரணம்.
நாம் நினைத்தேப் பார்க்க முடியாத பல நல்லோரின் நட்பு இந்த சோஷியல் மீடியாவின் மூலம் கிடைப்பது நிச்சயம். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். இலக்கியம், அரசியல் சார்ந்தவை, உலக நடப்புகள் பற்றிய அகலப் பார்வையும் அறிவும் இவ்வூடகத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. அதனால் நல்லவைகளை எடுத்துக் கொண்டு அல்லாதவைகளைத் தவிர்த்து ட்விட்டரில் ஆனந்தமாய் இருப்போம் 🙂
Mar 01, 2015 @ 19:08:03
நான் என் 4 வருட டிவிட்டர் அனுபவங்களை ஒரு பதிவாக சொல்ல விரும்பினால், எப்படி சொல்வேனோ அது போல இம்மி பிசகாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சொல்லியுள்ளீர்கள்.
எனக்கு சில சமயம் கோபம் வரும். அப்போதெல்லாம் வயது முதிர்ச்சியின் காரணமாக உரிமையுடன் கண்டிப்பேன். அதாவது இவர்கள் நம் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள் கோபப்படமாட்டார்கள் என்றறிந்தால் மட்டுமே. அப்பப்போ நானும் என்னையும் மீறி லூஸ் கீச்சும் பண்ணுவதுமுண்டு. ஆனால் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாததற்கு காரணம் 1. பல ட்வீட் அப்களில் என் முகத்தை காட்டிவிட்டேன். 2. நான் டிவிட்டரில் இருக்கும் நேரமே குறைவு 🙂
மற்றபடி நகைச்சுவையே பிரதானம். Mostly “Take it easy Policy” 🙂
உங்கள் இந்த பதிவை புதிதாக வந்து சேர்பவர்கள் அவசியம் படித்துணர்ந்தால், பின்னாளில் வரும் தர்மசங்கடங்களை நிச்சயம் தவிர்க்கலாம்.
வாழ்த்துகள் அருமையான பதிவு. நன்றி 🙂
Mar 01, 2015 @ 19:11:55
நான் மேற்சொன்ன கருத்தை பதியும்போது நேரம் 00.30 Hrs on 02.03 15. ஆனால் உங்கள் வலை பக்கம் Mar 02.03.15 @19.08.03 ன்னு காமிக்குது . அது ஏன் என்று தெரியவில்லை !
Mar 02, 2015 @ 10:37:05
நன்றி சின்னப் பையன் 🙂 அந்த anomaly ஏன்னு தெரியலை.
Mar 01, 2015 @ 20:57:43
ட்விட்டருக்கு வருபவர்களுக்கும் ஒரு வழிகாட்டி போல அமைந்திருக்கு உங்க பகிர்வு. எதையும் நல்ல நோக்கத்திலும் பயன்படுத்தலாம் கெட்ட சிந்தனையோடும் மோசமாக்கலாம் எல்லாம் நம் கையில்.
Mar 02, 2015 @ 10:38:02
நன்றி பிரபா 🙂
Mar 02, 2015 @ 02:25:14
Idhan moolamaga niraiya aridhu konden. Romba nandri
Mar 02, 2015 @ 10:38:26
🙂
Mar 02, 2015 @ 02:33:22
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் 🙂
Mar 02, 2015 @ 10:38:56
மிக்க நன்றி 🙂
Mar 02, 2015 @ 03:12:46
நான் ரொம்ப தயக்கமாக தான் இங்கு வந்தேன்.பிளாக் போய் படிப்பதெல்லாம் இப்பதான் தெரிந்துக்கொண்டேன்.இப்ப உங்களை மாதிரி சில பேர்கள் follow செய்து,சில பதில் தருவதும் நல்லாதான் இருக்கு.ஆனாலும் என் போன்றவர்களுக்கு இன்னும் தெளிவு வேண்டும்..
Mar 02, 2015 @ 10:40:56
கவனித்துக் கொண்டே வந்தீர்களானால் பிடிபட்டு விடும் 🙂 தெரியாததை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் 🙂
Mar 02, 2015 @ 04:40:29
டிவிட்டர் பத்தி யாரோ 2007லிலோ எட்டிலோ சொன்ன நினைவு. அப்போ ஐடி உருவாக்கினேன். ஆனா 2010லதான் முழுமையா டிவிட்டரா மாறுனது. டிவிட்டரில் கத்துக்கிட்டது ஏராளம். டிவிட்டர் மூலமா நிறைய நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. டிவிட்டருக்கு நன்றி.
Mar 02, 2015 @ 10:42:28
உண்மை ஜிரா, நானும் பல வகையில் பயன் அடைந்துள்ளேன். முக்கியமாக நல்ல நண்பர்கள்.
Mar 02, 2015 @ 06:54:04
டுவிட்டர் அழகான எலியட் பீச்சிலிருந்து அஷ்டலட்சுமி கோயிலுக்கு கடலில் கால் நனைத்தப்படியே போவதற்கு சமமானது … சிலசமயம் ரம்யமாக இருக்கும் பல சமயம் நரகல்களை தாண்ட வேண்டியதிருக்கும்.. எனக்கு இப்போது டுவிட்டரில் நரகல்கள் பழகிவிட்டது…
Mar 02, 2015 @ 10:42:58
சரியாகச் சொன்னீர்கள் 🙂
Mar 02, 2015 @ 17:53:36
Real good. Very comprehensive. I also had doubts as to what was DP and DM when I joined Twitter few months back. Unconsciously I have followed most of your tips. I maintain a neutral stand in most of the controversial topics. Thanks you madam.
Mar 03, 2015 @ 03:29:27
you are most welcome 🙂
Mar 02, 2015 @ 20:57:19
என்னைப் போல் புதுசா டுவிட்டர் வருபவர்களுக்கு உங்கள் பகிர்வு ஒரு வழிகாட்டி. மிக நன்றி. DP,DM போல் மீள், டேக் ன்னு சொல்றாங்களே.. அப்படினா என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்
Mar 03, 2015 @ 03:28:54
மீள் என்றால் முன்பே போட்ட ட்வீட்டை திரும்பப் போடுவது. tag, அல்லது hashtag என்பது # இந்த சிம்பல் போட்டு எதாவது பற்றி எல்லாரும் த்வீட்டுவது. அதாவது இப்போ அஜித் குழந்தைக்கு #KuttiThala என்ற டேகில் பலர் ட்வீட்டி வாழ்த்தைத் தெரிவித்தனர். அந்த டேகில் நிறைய ட்வீட்கள் வந்தால் அதுவே trending எனப்படும் 🙂
Mar 03, 2015 @ 09:26:45
ரொம்ப நன்றிங்க..
Mar 06, 2015 @ 19:14:46
பயனுள்ள பதிவு ; நானும் புதுசா டுவிட்டர் வந்தவன்தான் ; மிக்க நன்றி .
Mar 10, 2015 @ 08:24:35
அருமையான பதிவு.. 140 எண்ணிக்கைக்கு மிகும்போது ட்விட்லாங்கர் எப்படிப் போடுவது என்பதைத் தெரிவித்தால் பயனடைவோம்..
Mar 10, 2015 @ 11:24:17
ரொம்ப எளிது.twitlonger.com என்று space barல் டைப் பண்ணி அந்த வலை தளத்துக்குப் போய் ட்விட்டர் அக்கவுண்டுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பின் எழுத வேண்டியவற்றை எழுதி கீழே post என்ற இடத்தை க்ளிக் செய்தால் போதும், நம் TLல் ட்விட்லாங்கர் போஸ்ட் ஆகியிருக்கும்.
Apr 15, 2015 @ 00:12:38
நல்ல பதிவு. ட்விட்டர்க்கு வருபவர்கள் முதலில் நிறைய வாசிக்க/கவனிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது மிக முக்கியமான கருத்து. அதே சமயத்தில், பாலோபேக் செய்பவர்கள் நல்லவர்கள் என்ற கருத்தை மறுக்க விரும்புகிறேன்! எல்லோரையும் பாலோபேக் செய்பவர்கள் பலரையும் மியூட் பண்ணிவிடுவார்கள். அல்லது, அவர்கள் பார்வைக்கு உங்கள் ட்விட் செல்லவே வாய்ப்புக்கள் குறைவு என்பது என் எண்ணம்!