மாசு – திரை விமர்சனம்

maas

இதை இட்லி என்றால் சட்னி கூட நம்பாது என்று ட்விட்டரில் ஒரு சொலவடை உண்டு. அது போல இதை பேய்ப் படம் என்றால் குழந்தை கூட நம்பாது.

சூரியா இரட்டை வேடம். பேய்களுக்கு வயதாகாது என்று ஒரு நம்பிக்கை போல. அதனால் ஒருவர் இறந்த போது என்ன வயதோ அதே வயதில் பேய்கள் இருப்பதால் ரெண்டு சூரியாவும் இளைஞர்களே! அதை யோசித்த assistant டைரெக்டருக்கு ஒரு ஷொட்டு. அட்லீஸ்ட் வாரணமாயிரம் அப்பா சூரியாவைப் போல ஓல்ட் கெட்டப்பில் பார்ப்பதை தவிர்க்கிறோம்!

நிறைவேறாத ஆசையில் இறந்தவர்கள் ஆவியாக உலாத்துவார்கள் என்ற அடிப்படையில் கதையை எழுத ஆரம்பித்தக் கதாசிரியர், எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்பது மட்டும் அல்ல எப்படி கதையை இரண்டரை மணி நேரத்துக்கு இழுத்துச் செல்வது என்பது கூடத் தெரியாமல் திரு திரு என்று விழித்து நம்மையும் தலை சுத்தி உட்கார வைத்து விடுகிறார்.

பிரேம்ஜிக்கு யாராவது இசை அமைக்கவோ இசை arranger பணியோ கொடுத்தால் புண்ணியமா போகும். நடிப்பதை நிறுத்தி விடுவார். எவ்வளவோ செஞ்சிருக்கீங்க பிரேம்ஜி! நடிப்பதில் இருந்து VRS வாங்கி அந்த நல்லதையும் செஞ்சிடுங்க!

வெங்கட் பிரபு பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே நான் அவருக்கு செய்யும் பெரும் உபகாரம்.

நகைச்சுவை மருந்துக்கும் கிடையாது. பேய்கள் பண்ணும் சேஷ்டைகள் காமெடி கணக்கில் வரும் என்று வெங்கட் பிரபு நினைத்திருப்பார் போல. சூரியாவுக்குப் படத்துக்குப் படம் அதே மேனரிசம். ஷர்ட்டை பின் பக்கம் தள்ளி விட்டுக் கொள்வது, “நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லியே ஆகணும்” மாதிரி அதே டயலாக் டெலிவரி, பார்த்து அலுத்து விடுகிறது. அப்போ நாங்களும் சொல்லுவோம் இல்ல, “என்ன கொடுமை சரவணன் இது” என்று! (சூரியாவின் இயற்பெயர் சரவணன் என்பது இங்கே நச்சுன்னு பொருந்துது).

க்ளைமேக்ஸில் ஒரே குண்டில் அழகா வில்லனைக் க்ளோஸ் பண்ணியிருக்க முடியும். ஆனால் performance பண்ண முடியாமல் அது என்ன க்ளைமேக்ஸ் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை, சூரியா சும்மா கயற்றில் தொங்கி பறந்து பறந்து அடிக்கிறார்!

யுவன் ஷங்கர் ராஜா இசை. சித்தப்பா பிள்ளை என்று தனி அக்கறை ஏதும் காட்டி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே இரைச்சல். ஐயா கொஞ்சம் practice செய்து formக்கு வாருங்கள். உங்கள் ரசிகர்கள் waiting for you.

நயன்தாராவுக்கு இந்தப் படத்தில் வயது தெரிகிறது. மேக்கப்பில் கவனம் தேவை. ஆனால் ஒன்று சொல்லியே ஆக வேண்டும் 🙂 சூரியா மிகவும் இளமையாக அழகாக இருக்கிறார். ஆனால் பொதுவாக படங்களில் நடனத்தில் ஸ்கோர் செய்கிறவர் இந்தப் படத்தில் பேய்களோடு டேன்ஸ் etcவில் புதிதாக ஏதும் சிரமப்பட்டு நடன அசைவுகள் செய்யவில்லை. அவருடைய அயன், ஆதவன் அஞ்சான் ஸ்டெப்ஸ்களே திரும்பத் திரும்ப ஆடுவது போல ஒரு தோற்றம்.

ஒரு சூரியா சிலோன் தமிழராக வருகிறார். கேனடா, இங்கிலாந்து வாழ் தமிழர்களை கவர் செய்வதற்காக இருக்கலாம். கதைக்கு எந்த விதத்திலும் அது வலு சேர்க்கவில்லை.

சூரியா உங்களுக்கு நிறைய திறமை, வாய்ப்பு, அழகு, அறிவு, வயது, சினிமா பின்புலம் எல்லாம் அமைந்துள்ளது. நடிப்புலகில் சிலருக்கே இந்த மாதிரி அமையும். அடுத்தப் படத்தில் நல்ல கதையையும் இயக்குநரையும் தேர்ந்தெடுத்து சிறந்த ஒரு படத்தை எங்களுக்குத் தர வேண்டுகிறேன். இப்படியே தொடர்ந்தால் உங்கள் fan baseம் வியாபார அந்தஸ்தும் குறைந்துவிடும்.

maasi

36 வயதினிலே – திரை விமர்சனம்

36vayathinile

சமீபத்தில் பார்த்தப் படங்கள் எல்லாம் இரண்டே முக்கால் மூணு மணிநேர படங்கள், இந்தப் படம் இரண்டு மணி நேரத்துக்கும் கம்மி என்று சென்சார் சான்றிதழ் பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது. ஆனால் படம் முடியும் போது ஷ்ஷ்ப்பா இரண்டு மணி நேரமே தாங்கலையே சாமி என்றிருந்தது!

ஜோதிகாவுக்கு perfect come back படம் இது. அவர் வயதுக்கு, அனுபவத்துக்கு, தகுதிக்கு சூப்பர் பொருத்தம்! சிக்ஸர் பவுண்டரின்னு சீனுக்கு சீன் அனாயாசமாக ஸ்கோர் பண்ணியுள்ளார். படம் முழுவதும் சிம்பிளான உடை, நகை. துளி கிளேமர் கிடையாது. ஆபிஸ், வீடு, இதர இடங்கள் அனைத்தும் கச்சிதமான செட் டிசைன்.

டெல்லி கணேஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தேவ தர்ஷினி, இளவரசு, அபிராமி போன்றோர்கள் செகண்ட் டேக் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. யாரும் எங்கும் சோடை போகவில்லை. மகளாக நடித்திருக்கும் பெண் ரொம்ப அழகாக செய்திருக்கிறார்.

சொதப்பல் ரகுமான் கதாபாத்திரத்தில் ஆரம்பிக்கிறது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனின் ஆதங்கங்கள் எல்லாரும் அறிவார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பாத்திரம் மனைவியிடம் வெறுப்புடன் பழகுவதற்கு வலுவான/நம்பகத்தன்மை உடைய காரணம் இல்லாததால் கதையின் ஓட்டத்தையும் நாம் படத்தோடு ஒன்றுவதையும் தடை செய்கிறது. வில்லனைப் போல காட்டாமல் இன்னும் யதார்த்தமாகச் சித்தரித்திருக்கலாம்.

அதே போல ஜோதிகாவிற்கு இயற்கை வேளாண்மையில் முதலில் ஈடுபாடு எப்படி வந்தது என்று சொல்லியிருந்தால் கதை இன்னும் நேர்மையாக இருந்திருக்கும். இயற்கை வேளாண்மை தான் படத்தின் அடி நாதம். மேலும் இயற்கை வேளாண்மையின் தந்தை நம்மாழ்வாரைப் பற்றி கண்டிப்பாக ஓரிரு வார்த்தைகளாவது ஜோதிகா பாத்திரத்தின் மூலம் சொல்லியிருக்க வேண்டும்.

இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ள FaceBook பற்றிய காட்சிகள் ரொம்ப செயற்கையாக உள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசை “வாடி ராஜாத்தி” தவிர எடுபடவில்லை. நடனம், சண்டை காட்சிகள் எதுவும் கிடையாது. நகைச்சுவைக்குத் தனி டிரேக் இல்லை. கதையோடு பின்னி வருகிறா மாதிரி நகைச்சுவை காட்சிகளும் கிடையாது. Flash backல் ஜோதிகா கல்லூரி மாணவியாக வரும் சீனில் இன்னும் கொஞ்சம் மேக்கப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அரங்கத்தில் நிறைய பெண்கள். பெண் சுதந்திரத்தை/கனவை பறிக்க பெண்கள் அனுமதி தரக் கூடாது என்பது கதையின் கரு. ரொம்ப அடிமை வாழ்வுடன், கணவனால், பிள்ளைகளினால் ஏளனப்படுத்தப் பட்டவர்கள் ஜோதிகாவின் கேரக்டருடன் தங்களை identify பண்ணி முடிவில் inspiration பெறலாம். மற்றவர்களுக்கு இப்படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கடைசியில் கூட மகள் புரிந்து கொண்ட அளவு கணவன் தன் அணுகுமுறையில் என்ன தவறு இருந்தது என்று புரிந்து கொண்ட மாதிரி கதையில் காட்டவில்லை. Low budget படம். ரீமேக், அதே இயக்குநர் – கடகடன்னு எடுத்துட்டாங்க. அதனால் சூர்யாவின் முதல் தயாரிப்பு இலாபத்தையே தரும்.

36vayathinile1

ஸ்ரீ இராமானுஜர் – பகுதி 1

”பூமன்னுமாது பொருந்தியமார்பன் புகழ்மலிந்த

பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்

தாம்மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம்

நாம்மன்னிவாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே” – இராமானுச நூற்றந்தாதி 1

ramanujar

ஆச்சாரியனின் ஒரு கண் நம் மேல் பட்டாலே அது மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவின் பார்வைகளை விட வலிமை மிக்கது.

ஸ்ரீ இராமானுஜர் அப்படிப்பட்ட ஒரு குரு. அவர் இறைவனை விடக் கருணை மிக்கவர். ஏனென்றால் இறைவன் தான் நம்மை இந்த சம்சார சாகரத்தில் தள்ளியவர். ஆனால் இவரோ அதிலிருந்து மீட்டு நம்மைத் திரும்பத் தாய் வீட்டுக்கு அனுப்பும் விண்கலமாக இருக்கிறவர். இறைவனை விட நம்மை இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுவித்துத் திரும்பப் பிறவா வரத்தை நமக்கு நல்கும் வள்ளல் ஆவார்!

துவைதம், அத்துவைதம் ஆகிய இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து நமக்கு அவர் அளித்த பொக்கிஷம் தான் விசிட்டாத்துவைதம். உயிர்க்கும், உயிரற்றவைகளுக்கும், உலகுக்கும் உள்ளுரைப் பொருளாக உள்ளவன் நாராயணனே என்னும் தத்துவமே விசிட்டாத்துவைதம். ஆன்மா பரமாத்மா ஒன்றென அறிவிக்கும் அத்துவைதம். ஆன்மா பரமாத்மா வேறென அறிவிக்கும் துவைதம்.

இவ்விரு தத்துவங்களையும் ஒரு சேரக் கட்டி, உயிர், உடல், இறை இந்த மூன்றும் ஒன்றென முழங்கும் நெறி தான் விசிட்டாத்வைதம். விசித்தல் என்றால் கட்டுதல். இவ்வரிய பணியின் மூலம் அசித்திலும் இறைவன் உறைகிறான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொன்னவர் எதிராஜர். ஏற்கனவே நாதமுனிகள், ஆளவந்தார் போன்ற வைணவ பெரியவர்கள் வித்திட்டு வளர்த்த விசிட்டாத்வைதத்தை விளக்குப் போல் உலகத்துக்குப் பிரகாசப் படுத்தினார் இராமானுஜர்.

மேலும் இவர் அன்று செய்த சமய/சமுதாயப் புரட்சி ஒரு இமாலய சாதனை. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னேயே மதப் புரட்சி செய்தவர் அவர். இன்றைக்கும் அவர் வரலாறு நமக்குப் படிப்பினையாக உள்ளது.

நலம் தருவது நற்பண்பே

ஒரு முறை திருவரங்கத்தில் வசந்தோத்சவத்தில் மேல தாளத்துடனும் சர்வ அலங்காரத்துடனும் பெருமாள் வீதி உலா வரும்போது காமத்தால் உந்தப்பட்டு ஒரு பெண்ணும் ஆணும் தெரு என்பதும் உணராமல் கட்டுண்டு கிடந்தனர். அப்பொழுது காவிரியில் நீராடிவிட்டு இராமானுஜர் ஸ்ரீ முதலியாண்டானுடன் வரும் போது இதைக் கண்டு, அவர்களை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார். வந்தவர்கள் அழைத்தப் பின் தான் அவன் தன்னிலை உணர்ந்தான். தன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர்களுடன் இராமானுஜரை தரிசிக்கச் சென்றான். அவரைக் கண்டதும் விழுந்து வணங்கி ஒரு ஓரமாகப் பணிவுடன் நின்றான்.

இராமானுஜர் அவனிடம், “அவளுக்கு தான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இல்லாமல் போகலாம். நீ இவ்வாறு பொது இடத்தில் நடந்து கொள்ளலாமா? அவளிடம் என்ன அமுதத்தையா பருகிக் கொண்டிருந்தாய்” என்று கேட்டார்.

அவனோ கொஞ்சமும் சலனமில்லாமல், “ஆம் அவள் கண்களை விட அழகியது வேறு எதுவும் இல்லை. அதைக் கண்டால் என் சித்தம் கலங்கி விடுகிறது” என்றான். அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார் உடையவர். அவன் பெயர் தனுர்த்தாசன் என்றும், மற்போர் வீரன் அவன் எனத் தெரிந்து கொண்டார். அவனிடம், “உன் மனைவியின் கண்களை விட அழகானக் கண்களை நான் உனக்குக் காட்டுகிறேன்” என்று கூறி திருவரங்கர் சந்நிதிக்கு அழைத்துச் சென்று கற்பூர ஆரத்தியின் போது அரங்கனைக் காண வைத்தார். அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே என்று அவருக்குத் தெரியுமே! அழகிய தீப ஒளியில் கரிய மாணிக்கமாகக் காட்சி தந்த அரங்கனின் செந்தாமரைக் கண்களை கண்ட தனுர்த்தாசன் வைத்தக் கண் வாங்காமல் அரங்கனை தரிசித்தான். அவன் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது. சுய நினைவுக்கு வந்த பிறகு இராமானுஜரின் பொற்பாதங்களில் தன் மனைவி ஹேமாம்பாளுடன் விழுந்து வணங்கினான்.

Sri Ranganathar1

இராமானுஜர் அருளால் ஞான ஒளி பெற்ற தனுர்த்தாசன் பிள்ளையுறங்காவில்லி என்று சிறப்புடன் அழைக்கப் பெற்றார். பின் கணவனும் மனைவியும் திருவரங்கத்திலேயே தங்கி விட்டனர். தினமும் நீராடப் போகும்போது முதலியாண்டான் கையைப் பிடித்துச் சென்ற இராமானுஜர் நீராடியபின் தனுர்த்தாசரின் கையைப் பற்றிய வண்ணம் திரும்பி வருவார். தனுர்த்தாசன் பிராமணர் இல்லையாகிலும் இராமானுஜர் அவனுடன் அன்னியோன்னியமாக இருக்கிறாரே என்று பலருக்கும் பொறாமை ஏற்பட்டது. இதை அறிந்தும் இராமானுஜர் அமைதியாக இருந்தார்.

ஒரு நாள் அனைவரும் உறங்கியபின் எல்லா சீடர்களின் கௌபீனங்களையும் (கோமணங்களையும்) இராமானுஜர் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டார். பொழுது விடிந்ததும் கிழிந்த கௌபீனங்களைப் பார்த்துச் சீடர்கள் ஒருவரை ஒருவர் தரக் குறைவாகத் தாக்கிப் பேசிக் கொண்டனர்.

மறு நாள் இரவு தம் சீடர்களை இராமானுஜர் தன்னிடம் அழைத்தார். இரவு முழுவதும் தனுர்த்தாசரை இங்கேயே வைத்துக் கொள்கிறேன், நீங்கள் போய் அவர் மனைவியின் நகைகளைக் களவாடிக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இட்டார். அவ்வாறே சீடர்கள் செய்தனர். தனுர்த்தாசர் மனைவி படுத்திருந்தும் உறங்காமல் கணவருக்காகக் காத்திருந்ததால் இவர்கள் வந்து தன் நகைகளை திருடுவது நன்கு தெரிந்தது. ஒரு பக்க நகைகளைக் கழட்டிய பின் மறு பக்க நகையையும் திருட வசதியாகத் திரும்பிப் படுத்தார். அதைக் கண்ட சீடர்கள் எங்கே இவர் முழித்துக் கொண்டு விட்டாரோ என்று பயந்து அது வரை திருடிய நகைகளுடன் ஓடிவிட்டனர். சீடர்கள் வந்தவுடன் தனுர்த்தாசரை வீட்டிற்கு அனுப்பினார். பின்னோடே சீடர்களையும் போகச் சொன்னார்.

தனுர்த்தாசர் தன் இல்லத்தை அடைந்ததும் அவர் மனைவி நடந்ததைக் கூறினார். அதற்கு அவரோ “நீ திரும்பிப் படுத்திருக்கக் கூடாது. நகைகளை நன்கொடையாக அளிக்கிறோம் என்கிற அகம்பாவம் உன்னிடம் இருந்திருக்கிறது. ஆண்டவனை நினைத்த வண்ணம் ஏதும் அறியாமல் நீ இருந்திருப்பாயானால் வந்த வறியவர்கள் அனைத்தையும் கழட்டிச் சென்றிருப்பார்கள். நான் என்ற எண்ணம் இன்னும் உன்னை விட்டு அகலவில்லை” என்றார்.

அதற்கு அவர் மனைவி “என் மனத்தில் நான் என்ற அகம்பாவம் தோன்றாமல் இருக்க நீங்கள் தான் ஆசீர்வதிக்க வேண்டும்” என்று உருகி வேண்டினாள். இதை மறைந்திருந்து கேட்ட சீடர்கள் மடத்துக்குச் சென்று இராமானுஜரிடம் நடந்ததைச் சொன்னர்.

விடிந்ததும் பிராமண சீடர்கள் அனைவரையும் அழைத்த இராமானுஜர் அரியதொரு அறிவுரையைச் சொல்லத் தொடங்கினார். “குலமதம், கல்விமதம், தனமதம் ஆகிய மும்மதங்களால் மனிதன் சீரழிகிறான். கல்விமதம் மிக்க நீங்கள் நேற்றிரவு கௌபீனம் கிழிந்துவிட்டது என்று ஒருவரை ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகத் தாக்கிக் கொண்டீர்கள்! நகைகளை எல்லாம் பறி கொடுத்த பின்பும் தனுர்த்தாசரும், அவர் துணைவியாரும் எவ்வளவு மன அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள்! எனவே அகந்தை கொண்டவனை பிராமணன் என்பதா? அடக்கம் மிக்கவனை பிராமணன் என்பதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.”

அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. வெட்கத்துடன் தலை குனிந்து நின்றனர்.

“சீடர்களே இனம் பற்றிய கருவத்தை விட்டொழியுங்கள். நல்லொழுக்கத்தை கடைபிடிக்க முயலுங்கள். பிறப்பில் அனைவரும் சமமே. பிறப்பினால் உயர்ந்தவன் என்று கூறிக் கொள்பவன் மனித குலத்துக்கே வைரியாவான். ஆன்மா என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். ஆன்ம லாபத்துக்காக பாடுபடுங்கள். கல்வி, செல்வம், பிறப்பு ஆகிய அனைத்தையும் விடக் குணமே சிறந்தது. எனவே நலந்தரும் நற்குணத்தால் நாளும் உயரப் பாடு படுங்கள்!” என்று இராமானுஜர் கூறிய அறிவுரையால் சீடர்களின் அஞ்ஞான இருள் அகன்று ஞான ஒளி பெருகிற்று.

இராமானுஜரால் அநேகர் ஆட்கொள்ளப்படக் காரணம் அவரது எளிமை, சின்னஞ்சிறியவர்களிடம் அன்பு பாராட்டும் அவர் இதயம். ஒரு நாள் அவர் திருவீதி வழியாக வருகையில் நண்டும் சிண்டுமாக நாலைந்து பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குறுக்கும் நெடுக்குமாகப் புழுதியில் கோடுகள் போட்டு இது கோவில், இது கோபுரம், இது பிராகாரம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட இராமானுஜர் சற்றே நின்று ரசிக்க, ஓரு சிறுவன் இதோ உங்கள் பெருமாள் என்று தரையில் ஒரு கோட்டைக் காட்ட உடனே உடையவர் உள்ளத்தில் உவகைப் பொங்க, “தமர் உகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே” என்று சொல்லிக் கொண்டே கீழே விழுந்து சேவித்தார். குழந்தைகள் கொடுத்தக் கொட்டாங்குச்சி மண் பிராசதத்தையும் மகிழ்ச்சியுடன் தான் மடியில் வாங்கிக் கொண்டார். குழந்தைகள் குதூகலித்தனர்.

பிள்ளைகளோ பெரியவர்களோ, கற்றவரோ கல்லாதவரோ, கீழ்வகுப்போ மேல்வகுப்போ, எல்லா பிறவிகளையும் ஒரே நோக்கில் பார்த்தது அவரது ஒவ்வொரு செயலிலும் உறுதியானது.

(தொடரும்..)

This was published in Namadhu Thinnai May issue which can be read here 

mobile- System- Read online

photos courtesy http://anudinam.org/2012/07/05/ramanuja-nutranthathi-102/

 

உத்தம வில்லன் – திரை விமர்சனம்

 

uv2

இப்போ அப்போ என்று கண்ணாமூச்சி காட்டி விளையாடிய உத்தம வில்லன் இன்று 3மணி ஆட்டத்திற்கு வெளிச்சத்துக்கு வந்தார். கமல் படம் என்றாலே ஹைப் அதிகம் தான். அதிலும் அவர் குருநாதர் கேபியுடன் என்னும் போது கூடுதல் எதிர்ப்பார்ப்பு!

நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் கமலஹாசன். அதுவும் இப்படத்தில் அவர் பாத்திரம் very close to his real life. இப்பட நாயகன் மனோரஞ்சனுக்கும் கமலஹாசனுக்கும் நிறைய parallel உள்ளது. அதனால் இப்படத்தைப் பார்க்கும்போது அவரைப் பற்றிய ஒரு பயோபிக் ( biopic) மாதிரியும் உணர்வதை தடுக்க முடியவில்லை.

நான் தான் சகலகலா வல்லவன் என்று அவர் அன்று பாடியது இன்று இப்படத்துக்குத் தான் மிகவும் பொருந்தும். அனாயாசமாக உணர்ச்சிகளைக் கொட்டுகிறார், பாடுகிறார், பல நடன வகைகளை நளினமாக ஆடுகிறார். கதை, திரைக் கதை வசனமும் அவரே! இயக்கம் ரமேஷ் அரவிந்த் என்று வந்தாலும் படம் முழுக்கக் கமலஹாசனே வியாபித்து இருப்பதால் இயக்கத்தை ரமேஷ் அரவிந்த் செய்திருப்பாரா அல்லது அவர் இயக்க ஏதாவது இருந்திருக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

கேபியை மிகவும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார் கமல். முன்பு பொய் என்று ஒரு படம் அவர் நடிப்பில் வந்தது. மிகப் பெரிய disappointment அது. அதனால் இந்தப் படத்தில் பாலச்சந்தர் எப்படி செய்திருப்பாரோ என்று கொஞ்சம் அச்சமாகவே எனக்கு இருந்தது. ஆனால் அற்புதமாக நடித்திருகிறார். எப்படி இந்தப் படத்தில் கமல் almost தன் வாழ்க்கையைத் திரையில் வாழ்ந்திருக்கிறாரோ அதே போலத் தான் கேபியும் அவர் வாழ்க்கையை மார்க்கதரிசியாக வாழ்ந்திருக்கிறார்.

ஊர்வசி, K.விஸ்வநாத், இருவருக்கும் சின்ன சின்னப் பாத்திரங்கள் தான். ஆனால் பொருத்தமானப் பாத்திரத் தேர்வுகள். K. விஸ்வநாத் விக்ரமுடன் ராஜபாட்டை என்றொரு படத்தில் சிறிதும் பொருந்தா ஒரு ரோலில் நடித்திருப்பார். இதில் கம்பீரமாக வருகிறார்.

ஸ்பெஷல் மென்ஷன் to M.S.பாஸ்கர். எப்படி தேவர் மகனில் வடிவேலுவுக்கு மனத்தில் நிற்கும்படியான ஒரு பாத்திரம் அமைந்ததோ அது மாதிரி மிகவும் லேட்டானாலும் லேடஸ்டாக எம்.எஸ்.பாஸ்கருக்கு நினைவில் நிற்கும் சொக்கு செட்டியார் பாத்திரம் அமைந்துள்ளது. நடிகனின் மேனேஜராக வாழ்ந்திருக்கிறார் மனுஷன்.

கமல் படங்களின் செட் ப்ராபெர்டிகளான ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் ஒகே. அதில் பூஜா பெட்டர், நடிப்பில் செயற்கை தன்மை இருப்பினும், நடனத்தில் ஸ்கோர் செய்கிறார். இன்னொரு கமல் பட ஆஸ்தான நடிகரான ஜெயராமன் மென்மையான நடிப்பில் மிளிர்கிறார்.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் இசை. ஜிப்ரான் பூந்து விளையாடி இருக்கார். பின்னணி இசை and பாடல்கள் இரண்டும் நன்று. ஒரு சின்ன ரோலில் வந்து போகிறார், அதே போல கு. ஞானசம்பந்தமும். இருவருக்கும் பதில் வேறு எவரேனும் வந்திருக்கலாம்.

இனி படத்தின் தொய்வுக்கானக் காரணத்தைப் பார்ப்போம். கதைக்குள் கதையாக வரும் கதை தான் இழுவை. படத்தில் பாலச்சந்தரே எந்தப் படத்துக்கும் கதை தான் முக்கியம் என்று ஒரு டயலாக் சொல்கிறார். பிறகு அத்தனை பெரிய நடிகரை ஒரு குழந்தைகள் கதை பட ரேஞ்சில் அவரே இயக்குவது விந்தையாக உள்ளது. சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு எதுக்கு? எடிட்டிங் டேபிளில் அதன் தொடர்ச்சி கட் ஆகிவிட்டதோ? முழுதாகவே கட் பண்ணியிருக்கலாமே. நாசர் என்றொரு நல்ல நடிகரை இப்படி வீணடித்திருக்க வேண்டாம் கமல்! கதைக்குள் கதையில் அவர் வருவதால் வரும் சோகம் இது. அதில் எந்தப் பாத்திரத்தில் யார் வந்தாலும் சோபிக்காமல் போய் விடுகின்றனர்.

படத்தின் கரு சாகாவரம். அதற்கு இரண்டாம் கதை இல்லாமலே இன்னும் அழகான ஒரு திரைக்கதையை இயற்றி இருக்கலாம். படத்தில் பிராமணர்களைக் காட்டும் ஒரு காட்சி வருகிறது. மிக மிக அனாவசியமானக் காட்சி. கமலுக்கு அப்படிக் காட்டுவதில் எதோ கிக் வருகிறது என்று நினைக்கிறேன்.

படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது ஒரு மகிழ்ச்சி.

Overdose of கமல் இப்படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்.  அதன் குறைகளுடனே எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. பல இடங்களில் நெகிழ்ச்சி, கண்களைத் துடைத்துக் கொள்ளும் அளவுக்கு 🙂

uv3