சமீபத்தில் பார்த்தப் படங்கள் எல்லாம் இரண்டே முக்கால் மூணு மணிநேர படங்கள், இந்தப் படம் இரண்டு மணி நேரத்துக்கும் கம்மி என்று சென்சார் சான்றிதழ் பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது. ஆனால் படம் முடியும் போது ஷ்ஷ்ப்பா இரண்டு மணி நேரமே தாங்கலையே சாமி என்றிருந்தது!
ஜோதிகாவுக்கு perfect come back படம் இது. அவர் வயதுக்கு, அனுபவத்துக்கு, தகுதிக்கு சூப்பர் பொருத்தம்! சிக்ஸர் பவுண்டரின்னு சீனுக்கு சீன் அனாயாசமாக ஸ்கோர் பண்ணியுள்ளார். படம் முழுவதும் சிம்பிளான உடை, நகை. துளி கிளேமர் கிடையாது. ஆபிஸ், வீடு, இதர இடங்கள் அனைத்தும் கச்சிதமான செட் டிசைன்.
டெல்லி கணேஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தேவ தர்ஷினி, இளவரசு, அபிராமி போன்றோர்கள் செகண்ட் டேக் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. யாரும் எங்கும் சோடை போகவில்லை. மகளாக நடித்திருக்கும் பெண் ரொம்ப அழகாக செய்திருக்கிறார்.
சொதப்பல் ரகுமான் கதாபாத்திரத்தில் ஆரம்பிக்கிறது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனின் ஆதங்கங்கள் எல்லாரும் அறிவார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பாத்திரம் மனைவியிடம் வெறுப்புடன் பழகுவதற்கு வலுவான/நம்பகத்தன்மை உடைய காரணம் இல்லாததால் கதையின் ஓட்டத்தையும் நாம் படத்தோடு ஒன்றுவதையும் தடை செய்கிறது. வில்லனைப் போல காட்டாமல் இன்னும் யதார்த்தமாகச் சித்தரித்திருக்கலாம்.
அதே போல ஜோதிகாவிற்கு இயற்கை வேளாண்மையில் முதலில் ஈடுபாடு எப்படி வந்தது என்று சொல்லியிருந்தால் கதை இன்னும் நேர்மையாக இருந்திருக்கும். இயற்கை வேளாண்மை தான் படத்தின் அடி நாதம். மேலும் இயற்கை வேளாண்மையின் தந்தை நம்மாழ்வாரைப் பற்றி கண்டிப்பாக ஓரிரு வார்த்தைகளாவது ஜோதிகா பாத்திரத்தின் மூலம் சொல்லியிருக்க வேண்டும்.
இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ள FaceBook பற்றிய காட்சிகள் ரொம்ப செயற்கையாக உள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசை “வாடி ராஜாத்தி” தவிர எடுபடவில்லை. நடனம், சண்டை காட்சிகள் எதுவும் கிடையாது. நகைச்சுவைக்குத் தனி டிரேக் இல்லை. கதையோடு பின்னி வருகிறா மாதிரி நகைச்சுவை காட்சிகளும் கிடையாது. Flash backல் ஜோதிகா கல்லூரி மாணவியாக வரும் சீனில் இன்னும் கொஞ்சம் மேக்கப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அரங்கத்தில் நிறைய பெண்கள். பெண் சுதந்திரத்தை/கனவை பறிக்க பெண்கள் அனுமதி தரக் கூடாது என்பது கதையின் கரு. ரொம்ப அடிமை வாழ்வுடன், கணவனால், பிள்ளைகளினால் ஏளனப்படுத்தப் பட்டவர்கள் ஜோதிகாவின் கேரக்டருடன் தங்களை identify பண்ணி முடிவில் inspiration பெறலாம். மற்றவர்களுக்கு இப்படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கடைசியில் கூட மகள் புரிந்து கொண்ட அளவு கணவன் தன் அணுகுமுறையில் என்ன தவறு இருந்தது என்று புரிந்து கொண்ட மாதிரி கதையில் காட்டவில்லை. Low budget படம். ரீமேக், அதே இயக்குநர் – கடகடன்னு எடுத்துட்டாங்க. அதனால் சூர்யாவின் முதல் தயாரிப்பு இலாபத்தையே தரும்.
May 16, 2015 @ 17:06:24
வணக்கம்
தங்களின் பார்வையில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் நிச்சயம் பார்க்கிறோம்… பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
May 17, 2015 @ 04:28:34
படிப்பவர்களுக்கு பிடித்துபோகுமாறு, நிறைகளை அதிகமாகவும், குறைகளை குறைத்தும் விமர்சித்துள்ளீர்கள். நன்றி. அவசியம் போய் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
May 25, 2015 @ 15:58:53
நன்றி ரூபன், சின்னப் பையன் 🙂
Jun 05, 2015 @ 02:57:50
சமீபத்தில்தான் குடும்பத்துடன் படம் பார்த்தேன். குறைகளைச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஒரேயொரு விஷயத்தில் மாறுபடுகிறேன்: Subtle humor இருந்தது. படம் போரடிக்கவில்லை!