“மூணு லட்ச ரூபாய் போட்டோக்கும் விடியோக்கும் மட்டும்” என்று பெருமைப் பட்டுக் கொண்டாள் மேகலா. “அமெரிக்காவில் MS முடிச்சிட்டு அமேசான்ல செஞ்சுக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு, இங்க வந்து இந்த மாதிரி போட்டோ எடுக்கிறான் இந்தப் பையன். இதுக்குப் பேரு கேண்டிட் போட்டோகிரபியாம், எப்படி சூப்பரா இருக்குப் பாரு”
தன் மருமகனைத் தான் இப்படி புகழ்கிறாள் என்று ஒரு நிமிஷம் ஏமாந்த ரமா பின் சுதாரித்து, போட்டோகிராபரைத் தான் மேகலா புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். ஒரொரு பக்கமாகப் புரட்டிய ரமா புகைப்படங்களின் அழகைப் பார்த்து மயங்கினாள். மேகலாவையே இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறானே என்று மனத்திற்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டு, நிச்சயம் இவனைத் தான் தன் மகள் கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் ரமா.
மேயர் கிருஷ்ணசாமி முதலியார் மண்டபம் அல்லது AMM சர்வேச்வரி டிரஸ்ட் மண்டபம், இவை இரண்டில் ஒன்று தான் என்று திருமணத்துக்கு ஏற்கனவே அவள் முடிவு செய்து வைத்திருந்தாள். சமையலுக்கு இருக்கவே இருக்கிறார் அறுசுவை வேந்தர் சொக்கநாதர்.
ரிசெப்ஷன் கச்சேரிக்கு புல்லாங்குழல் ராஜேஷ். அவள் அத்தைப் பேரன் கல்யாணத்தில் அவனின் வாசிப்பைக் கேட்டாள், சினிமா பாடல்களும் கர்நாடக சங்கீதமும் இரண்டும் கலந்து அருமையாக வாசித்தான். அதனால் அவனும் fixed.
இன்னும் என்ன பாக்கி? மாப்பிள்ளை மட்டும் தான்! அவன் தான் இன்னும் சிக்கவில்லை. மகளுக்குப் பிடித்தா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. பார்க்கும் வரன் எல்லாம் ஏதாவது காரணத்துக்குத் தட்டிப் போய் கொண்டே இருந்தது.
ஆனால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதைத் தீவிரமாக நம்பினாள் ரமா. அதனால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல லேப்டாப்பை ஆன் செய்து தமிழ் மேட்ரிமோனியலில் இது வரை பார்க்காத வரன்களைத் தேடி சரியா இருக்கும் என்று தோன்றியதை ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்தாள்.
மாலை சஹானா ஆபிசில் இருந்து வந்தவுடன் ரமா, “சஹானா, டீ குடிச்சிட்டு வா. நான் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சிருக்கிற profiles எல்லாம் வந்து பாரு, ஏதாவது பிடிச்சிருக்கான்னு சொல்லு.” என்றாள்.
முகம் கழுவிக் கொண்டு வந்து அவள் அருகில் உட்கார்ந்த மகள், “அம்மா, நானே உங்கிட்ட சொல்லனும்னு இருந்தேன், இந்த மேட்ரிமோனியல்ல தேடறது எல்லாம் வேண்டாம் மா. எனக்கு ஒருத்தனை ரொம்பப் பிடிச்சிருக்கு மா. அவனுக்கும் என்னை” என்றாள் மெதுவாக.
அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “யாரு அவன்? உன்னோட வேலை பார்க்கிறானா?” என்றாள் ரமா.
“இல்லம்மா, அப்பாக்கிட்டயும் உன் கிட்டயும் அதனால் தான் இத்தனை நாள் சொல்ல தயக்கமா இருந்துது. நீங்க IT கம்பெனில வேலை பார்க்கிற பையனா தேடிக்கிட்டு இருக்கீங்க. இவன் freelance photographer மா. என்ன சொல்லுவீங்களோன்னு பயந்து தான் இத்தனை நாள் சொல்லலை. ஆனா USல படிச்சு மாஸ்டர்ஸ் டிக்ரீலாம் வாங்கியிருக்கான் மா.”
“யாரு? மேகலா பொண்ணு கல்யாணத்துக்கு போட்டோ எடுத்தானே, அவனா?”
“அம்மா எப்படி மா உனக்குத் தெரியும்? யாருக்குமே எங்க லவ் மேட்டர் தெரியாதுன்னு நினச்சிக்கிட்டு இருந்தோம்!” மகிழ்ச்சியில் கட்டிக் கொண்டாள்.
சஹானா கல்யாணத்துக்கு போட்டோகிராபரா யாரை வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள் ரமா.
photo credits, with thanks : http://www.maharaniweddings.com/top-indian-wedding-vendor-platinum-blog/2014-12-31/5016-mahwah-nj-indian-wedding-by-house-of-talent-studio