ரொம்ப நாள் கழித்து ஒரு சத்தான திரைப்படம். தயாரித்த தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். மேலும் இது போல நல்ல படங்களை அளிக்க வாய்ப்பும் கதையும் கிட்ட இப்படத்தை எழுதி இயக்கிய எம். மணிகண்டனுக்கும் வாழ்த்துகள்!
சேரியில் ஏழ்மையால் பள்ளிக்குச் செல்லாமல் கரி பொறுக்கி விற்கும் அண்ணன் தம்பி இருவரின் தாயார் சொல்லும் ஒரு வசனத்தின் மூலம் ஆச்சரியமாக அனைத்துப் பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தை அழகாக முன் வைக்கிறார் கதாசிரியர். “நான் உங்களை அடிக்கக் கூடாது என்று ஒரு பாலிசி வெச்சிருக்கேன், அடிக்க வெச்சிடாதீங்க” என்று சொல்வார். கதை முடியும் வரை அவர் அதை மீற சந்தர்ப்பம் வந்த போதிலும் அச் செயலை அவர் செய்யவில்லை. பலவிதப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு ஏழைப் பெண்ணால் அதை கடைபிக்க முடியும் போது மற்ற பெற்றோர்களால் கொஞ்சம் முயன்றால் முடியும் என்பதை கோடிட்டு காட்டிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கருவுக்கும் மேற் சொன்ன கருத்துக்கும் தொடர்பில்லை. எனினும், என் மனத்தில் தங்கிய இச் செய்தி பலர் மனத்திலும் தங்கும் என்றே எண்ணுகிறேன்.
சிறுவர்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். இருவருமே மனத்தை கொள்ளை கொள்கிறார்கள். அதே மாதிரி ஆயாவாக வருபவரும், மற்ற பாத்திரங்களில் வருபவர்களும் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். அதில் உச்சத்தில் நிற்பவர் சிறுவர்களுக்குத் தாயாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். எப்படி தான் இப்படி பொருந்தி நடித்தாரோ, நேரில் பார்த்தால் என் மகிழ்ச்சியை கட்டி அணைத்துப் பகிர்ந்து கொள்வேன் 🙂
படம் ஓடும் நேரம் 1௦9 நிமிடங்கள் தான். இப்படத்திற்கு இடைவேளை இல்லை. ஆனால் பாப்கார்ன், சோடா விற்பனைக்காக டக்கென்று ஓரிடத்தில் படத்தை நிறுத்துகிறார்கள். ஆங்கிலப் படம் போல் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து பார்த்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.
நான்கு பாடல்கள் உள்ளன என்கிறது விக்கி. நான் இரண்டு பாடல்களை தான் கவனித்தேன். சுமார் ரகம் தான். ஆனால் பின்னணி இசையை நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவும் மணிகண்டனே. பிரமாதமாக செய்துள்ளார். முழுக்க முழுக்க குப்பத்தில் நடக்கும் கதை. எட்டுக்கு எட்டடி கூட இல்லாத வீட்டில் நடப்பதைக் காண்பிப்பதில் இருந்து சந்து பொந்துகளில் புகுந்து புறப்படுகிறது அவர் கேமரா. அற்புதமாக எடிட் செய்த கிஷோருக்கு இப்படத்தை சமர்ப்பித்து உள்ளார்கள். அவரின் அகால மரணம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பு.
‘கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்பதை நம்மை அழ வைத்தோ விசனப் படுத்தியோ காட்டாமல், யதார்த்தமாக – இன்னும் சொல்லப் போனால் நகைச்சுவையுடன் காட்டியிருப்பது தான் இப்படத்தின் வெற்றி. ஓரிடத்தில் கூட அதிகப்படியான வசனமோ காட்சி அமைப்போ இல்லை. படத்தில் வரும் அத்தனை குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பது படத்தின் இன்னொரு பலம்.
சிம்பு guest ரோலில் வருகிறார். ஸ்மார்டாக இருக்கிறார். நீங்க ஹீரோவா நடிச்சு ஏதாவது ஒரு படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார்!
பல வெளிநாட்டு, உள்நாட்டு விருதுகளை அள்ளியிருக்கிறது இப்படம். பெரும்பாலும் விருது பெறும் படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் படமாக இருக்காது. இப்படம் அந்த mythஐ தகர்க்கும் என்று நம்புவோமாக. நான் கண்டிப்பாக இன்னொரு முறை பார்ப்பேன் 🙂
Jun 07, 2015 @ 14:17:54
நானும் உங்க உணர்வோடு ரசித்துப் பார்த்த படம்மா அருமை
Jun 07, 2015 @ 16:37:59
நன்றி பிரபா 🙂
Jun 08, 2015 @ 03:36:29
அருமையான விமர்சனம்
Jun 09, 2015 @ 01:54:25
முதல்தடவையா படம் பார்த்திட்டு உங்க விமர்சனம் படித்தேன். 1000++அருமை arputham ungalin ஒவ்வொரு வரியும்.
படம் இன்னும் கண்ணில் இருக்கிறது.
நன்றி. வாழ்த்துகள்
Jun 09, 2015 @ 02:20:07
Songs ungalukku puriyala nanbaa. “Karupu Karupu” song laam sema gethu. Uyir irunthuchi ellaa songs la yum
Jun 10, 2015 @ 11:46:25
un vimarsanathai padithapin padam partha unarvu varukirathu….Hats off!
Jun 11, 2015 @ 15:56:05
நன்றி, தமிழச்சி, சின்னப் பையன், நந்த கோபால், சுகன் 🙂
இரண்டாம் முறை பார்த்த பிறகு எனக்கு கருப்பு கருப்பு பாடல் பிடித்துள்ளது நந்த கோபால், பாயின்ட் அவுட் செய்ததற்கு நன்றி 🙂
Jul 03, 2015 @ 14:35:40
கடைபிக்க => கடைபிடிக்க.