மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

kalam2

நமது பாரத குடியரசுத் தலைவர் கலாமின் பிறப்பு, வளர்ப்பு, அவர் வகித்தப் பல பதவிகள் பற்றி நம்மில் பலரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரின் மறைவு நம்மிடையே  ஏற்படுத்திய தாக்கம் நாம் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அவர் திங்களன்று  இரவு ஏழேமுக்காலுக்கு ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் இறந்தார். தமிழ்நாட்டில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் செவ்வாய் அன்று விடுமுறை அறிவித்திருந்தும் பல பள்ளிக் குழந்தைகள் செவ்வாய் காலை சீருடை அணித்து பள்ளிக்குச் சென்று கலாம் அவர்களைப் பற்றி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். விடுமுறை அன்று மாணவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்குச் சென்று, இறந்த ஒருவரைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அவர் எவ்வளவு பெரிய inspiring personalityயாக இருந்திருக்க வேண்டும் என்று நாமே புரிந்து கொள்ள முடியும்.

நல்லடக்கம் இன்று. நேற்று முதலே திரும்பிய இடமெல்லாம் அவரின் படமும், அதற்கு மாலையும் அதன் முன் சில மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு ஒளி வீச ஆரம்பித்து விட்டன. இவ்வாறு இறுதி மரியாதை செய்தவர்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் அல்ல. துப்புறவு தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், சின்ன மளிகைக் கடைகளும் , மரக்கடைகளும், சின்ன சாப்பாட்டுக் கடைகளும், அயர்ன் கடைகளும் வைத்திருப்பவர் தாம். இவர்கள் தான் கலாமின் படம் வைத்து மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி மரியாதை செய்தனர். ஒவ்வொரு தெரு முனையிலும் கலாமின் படம், இவர் சொன்ன பொன் மொழியுடன் வைக்கப் பட்டிருந்தது. எந்த ப்லெக்ஸ் பேனரிலும் ஸ்பான்சர் செய்தவர் பெயர் இல்லை, புகைப்படம் இல்லை. அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இன்று முழு கடையடைப்பு. இந்த மாதிரி ஒரு மரியாதையை அவர் பெற அவர் வாழ்க்கை இவர்கள் அனைவரையும் எந்தளவு பாதித்திருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

kalam3

நம் நாட்டின் குடியரசுத் தலைவராக அவர் 2002-2007 வரை இருந்தார். இது வரை அந்தப் பதவியை அலங்கரித்தவர்களுள் இவரைப் போல ஒருவரை சுதந்திர இந்தியா கண்டதில்லை. ஐந்தாண்டுகள் அவரின் இல்லமாக இருந்த ராஷ்டிரபதி பவனை எளிய மக்கள் வந்து பார்க்கும் இடமாக மாற்றி வரவேற்று விருந்தோம்பல் செய்தவர் அவர்.

kalam5

ராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறியதால் அவருக்கு எளியவர்களின் சிரமம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. எளிமையானவராக இருந்ததால் அவர் இந்தியாவின் மிகப் பெரிய பதவியை வகித்தவர் ஆயினும் எல்லாராலும் எளிதாக நெருங்க முடிந்தது. அவர் குடியரசுத் தலைவர் ஆனது கூட ஒரு எதிர்பாராத நிகழ்வே. பிஜேபி அரசு காங்கிரஸ் அரசுக்கும் தோதான அரசியலைச் சார்ந்தவர் யாரும் கிடைக்காததால் கலாமை சட்டென்று தேர்ந்தெடுத்தார் அப்போதைய பிரதம மந்திரி வாஜ்பாய். யாராலும் மறுப்புச் சொல்ல முடியாத ஒரு வேட்பாளர்! அதற்கு முன் அவர் வகித்தப் பதவிகள் மிகச் சிறப்புடையவை. ஆயினும் அவர் குடியரசுத் தலைவர் ஆனது தான் அவரின் உன்னதமான குணங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது. அதற்கு நாம் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

குடியரசுத் தலைவரான பின் அவர் தன் முதல் இரண்டு மாத சம்பளங்களை புட்டப்பர்த்தியில் உள்ள கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடக்கும் இப்தார் விழாவுக்கு சுமார் இரண்டரை லட்சம் செலவாகுமாம். அது அரசாங்கத்தின் செலவு. அதில் இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் தன் பங்காகக் கொடுத்துள்ளார். இதெல்லாம் சிலர் அவர் மறைவுக்குப் பின் சொல்லக் கேட்டது. இது வரை தெரியாது. அப்போ இன்னும் வெளியில் தெரியாத வண்ணம் எவ்வளவு தான தர்மம் செய்திருப்பார் என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.

இளைஞர்களுக்கு முதியவர்களைக் கண்டால் பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர் ஈர்த்தது மொத்தமும் இளைஞர்களைத் தான். இன்று அவர் கடைசிப் பயணத்தில் அஞ்சலி செலுத்தக் கலந்து கொண்ட லட்சோப லட்ச மக்கள் அனைவரும் இளைஞர்களே. அதனினும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் குழந்தைகள் தாமாகவே முன்வந்து கலாமுக்கு தங்கள் சிறு கைகளாலும் பெரிய மனத்தாலும் செய்திருக்கும் அஞ்சலிகள் தான்.

kalam

அது எப்படி சாத்தியம் ஆயிற்று? அவர் உண்மை மட்டுமே பேசினார். அதனால் சாத்தியம் ஆயிற்று. வெளிப்பூச்சும் பாசாங்கும் அவரிடம் எள்ளளவும் இலை. குழந்தைகள் அதிபுத்திசாலிகள், அதனால் அவர்களுக்கு அவரைக் கொண்டாடத் தெரிந்திருக்கிறது. தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவியும், மாணவனும் அவரைப் பற்றிச் சொல்லும் கருத்து நம்மை அசர வைக்கிறது. மரம் வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், பெற்றோர்களைப் பேணிக் காக்க வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும் என்று அவர் சொன்னார், அவற்றை எல்லாம் நாங்கள் கடைபிடிக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

kalam1

சமூக வலைதளங்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அவர் பதில் கடிதம் போட்டார், கையெழுத்திட்டப் புத்தகங்களை அனுப்பினார் என்று படங்களைப் பகிர்ந்துள்ளனர்! ஜனாதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின் அவரின் உழைப்பு இன்னும் அதிகமாகியது என்று சொல்லலாம். அவர் தொடர்ந்து மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து உரை நிகழ்த்தி அவர்கள் மனத்தில் ஞான விளக்கை ஏற்றினார். ஒய்வு என்பதே அவர் அகராதியில் இல்லை. அவர் உதாரணப் புருஷராய் வாழ்ந்ததால் தான் அவரால் மக்களை அவர்பால் இழுக்க முடிந்தது. எப்பொழுது சொல் ஒன்றும் செயல் வேறோன்றுமாய் இருக்குமோ அப்பொழுது ஒருவரின் நம்பகத் தன்மை போய்விடும்.

அவர் எத்தனையோ பெரிய பதவிகளை தன் வாழ்நாளில் வகித்தார். அவரின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் சமீபத்தில் அவரிடம் என்னவாக உங்களைப் பின்னாளில் மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ‘ஆசிரியராக’ என்று உடனே பதில் அளித்திருக்கிறார். அது ஒன்றே போதும் அவரின் தன்மையை நமக்கு வெளிக்காட்ட. அவர் தன்னிடம் இருந்த ஞானம் அனைத்தையும் மற்றவர்களிடம் பகிரவே ஆசைப்பட்டார். கொடை வள்ளல். நாளைய தலைமுறையை சிறப்பாக வடிவமைக்க கையில் உளியுடன் செதுக்கவே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவழித்துள்ளார்.

தமிழ் மொழி தெரிந்தவர்கள் எனில் கண்டிப்பாக அவருடன் தமிழிலேயே உரையாடுவார். தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர் உரையாடுவதே ஒரு தனி அழகு. அவர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாதாம். ஆல் இந்தியா ரேடியோவில் தான் செய்திகள் கேட்பாராம். ஆனால் உடனுக்குடன் ஈமெயில் மட்டும் செக் பண்ணிக் கொள்வாராம். அவர் ட்விட்டரில் இருந்து கொண்டு ஷில்லாங் போவது பற்றிக் கூட கடைசியாக ட்வீட் பண்ணியுள்ளார்.

எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்த பணக்கார, பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் இருந்தும் வரவில்லை, தன் கடமை என்று எதை நினைத்தாரோ அதைப் பழுதின்றி செய்தார். அனைத்து உயரிய விருதுகளையும் பெற்றும் பணிவுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவர் மறைவுக்கு இந்தியாவே அழுதது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பதைபதைக்கும் வெய்யிலிலும் கூடி நின்று, அவரின் நல்லடக்கத்தின் போது நெஞ்சுருக அழுதனர். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேரு?

நம் மத்திய அரசும் இராணுவ மரியாதையோடும் சகல ஏற்பாடுகளை செவ்வனே செய்து அவரை நல்ல முறையில் வழியனுப்பியது அனைவர் மனத்துக்கும் ஒரு ஆறுதலைத் தந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்துக்கே சென்று இறுதி அஞ்சலி செய்தது அவருக்குரிய மேன்மையை பறைசாற்றியது. மோடியும் தில்லியில் ஒரு முறை, இராமேஸ்வரத்தில் இன்னொரு முறை வந்து அஞ்சலி செலுத்தி ஒரு நல்ல முன் மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார்.

கல்யாண சாவு தான். அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை என்பது வேண்டுமானால் அவர் குடும்பத்தாருக்கு ஒரு குறையாக இருக்கலாம். அனால் அதைத் தவிர நிறை வாழ்வே வாழ்ந்தார். அனைவரும் விரும்பும் அனாயாச மரணத்தை இறுதியில் அடைந்தார். ஆயினும் செய்தி கேட்டவுடன் நம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல மனத்தில் சோகம் கவ்வியது ஏன்? இன்னும் அந்த வேதனை விலகவில்லையே. அது தான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு. அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து அவரின் வாழ்க்கை வரலாறு. அதில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் நம் வாழ்நாளில் அனுபவித்து செயல்படுத்துவது தான் அவரின் சொத்தை சரியான முறையில் பயன்படுத்துவதாகும்.

அவருக்கும் அவரின் வாழ்க்கைப் பாடத்துக்கும் நாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கோம். வாழ்க அவர் புகழ். வளர்க அவர் வகுத்த நன்னெறிகள்!

kalam6

Thanks to @jvs2020 and @paramporul for their photos.

சிறப்பு மிகுந்த ஆடி மாதம்

ambal
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

Month_Adi

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது! ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.

fire 3

இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

adiamavasai
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது. தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை அதுக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.  நெல்,கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது.  ‘ஆடிப்பெருக்கு’ அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.

adiperuku

நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள். இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது.

rice-varieties

திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்கள் சிவபெருமானையும், திருமாலையும் முழுமுதற்கடவுளாக வழிபட்டு வந்தனர். ஒருநாள் இருவருக்கும் சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டது. அனைத்தையும் அறிந்த ஆதிசக்தியிடம் விடைபெறுவதற்காக கைலாசம் சென்று முறையிட்டனர். சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும் பதுமனுக்கும் உணர்த்த விரும்பிய ஆதிசக்தி கோமதியம்மனாக வடிவமெடுத்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் என்றும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.

adikiruthikai

குரு பூர்ணிமா  ஆடி மாதப் பௌர்ணமி அன்று மாணவர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணன், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர். ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. புத்தர்கள் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.

sri-andal-1

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று  தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண உறவு கூடிவரும். பார்வதி தேவி ருதுவான நாளும் ஆடிப் பூரமே. அதனால் சிவன் கோவில்களிலும் ஆடிப் பூரம் அன்று அம்பாளுக்கு சிறப்பான வழிபாடுகள் உண்டு.

வரலட்சுமி நோன்பும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று வரும். இதுவும் பெண்கள் மிகவும் போற்றி வழிபடும் ஒரு பண்டிகை. வீட்டில் சௌகர்யங்கள் பெருகவும், இல்லத்தரசிக்கு மாங்கல்ய பலம் கூடவும் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு இது. வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்து உபசரித்தாள் அவள் அருள் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் கோவில்களில் திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாகதேவதைக்குப் பால் தெளித்து விசேஷ பூஜையும் செய்வார்கள்.

varalakshmipoojai

இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுவதற்கும் காரணம் உண்டு. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

rangoli

Reference : http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=10436

மாரி – திரை விமர்சனம்

maari-movie-poster-350x350

“இது எப்படி இருக்கு” என்று கெட்ட வில்லனாக ரசிகர்களை ஈர்த்த அந்தக் கால ரஜினியைப போல   “செஞ்சிடுவேன்” என்று விரல் action உடன் அவர் ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்கிறார் இந்தக் கால தனுஷ். ஆட்டோக்காரனாக அடிவாங்கி சுருண்டு விழுந்து, பின் வாங்கின எதையும் திருப்பிக் கொடுக்கும் குணம் கொண்ட ரஜினியைப் போல ஆட்டோக்காரன் தனுஷும் மாரியாக மாறுகிறார்! இன்னும் சொல்லப் போனால் கதையும் அதில் உள்ள ஹீரோவும் வில்லனும் செய்யும் சாகசங்களும் எம்ஜிஆர் நம்பியார் காலப் பழசு.

ஆனால் திரை அரங்கில் தனுஷ் என்டிரி ஆகும்போதும், பஞ்ச் வசனங்கள் பேசும்போதும், எதிரிகளை பஞ்ச் என்று குத்தும் போதும், விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. அதோடு ஜிகினா காகிதத் தூள்களும் திரையின் மீது வீசப்படுகின்றன. அதனால் படங்கள் இன்று நடிகர்களின் ரசிகர்களின் ஆதரவோடு மட்டும் ஓடுகின்றன, கதையோ நடிப்போ தேவையில்லை என்று தோன்றுகிறது.

இந்தப் படத்தில் விஜய் யேசுதாஸ் புதுமுகமாக நல் வரவு. அதுவும் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். மலையாளப் படங்களில் நடித்திருப்பதால் நடிப்பில் முதிர்ச்சி உள்ளது. பாராட்டுகள். காமெடிக்கு ரோபோ ஷங்கர்! தனுஷுடன் கூட இருக்கும் ஒரு அல்லக்கை பாத்திரம். படத்தில் உள்ள மற்றதைப் பொறுத்துக் கொள்ளும் திறன் நமக்கு இருக்கும் போது இவர் பங்களிப்பும் மோசமில்லை என்றே சொல்ல வேண்டும். காஜல் அகர்வால் படத்துக்குத் துளியும் ஒட்டாத ஒரு ஹீரோயின். ஒரே ஒரு நல்ல விஷயம் ஹீரோயின் பற்றி ஹீரோ கடைசியில் எடுக்கும் முடிவு! எப்பவும் போல இருக்கும் முடிவாக இருந்திருந்தால் குமட்டிக் கொண்டு வந்திருக்கும்.

அனிருத் இசை. அது  என்ன செண்டிமெண்டா என்று தெரியவில்லை, தனுஷ் அனிருத்துடன் ஒரு பாட்டிலாவது குத்தாட்டம் போட்டால் படம் ஓடும் என்று நினைக்கிறார் போலும். அதனால் தனுஷுடன் சேர்ந்து நாலு ஸ்டேப்ஸ் போடுகிறார் அனிருத். பாடல்கள் படத்துக்கு ஏத்தா மாதிரி உள்ளன. பின்னணி இசை தலைவலி.

நடிகர்கள் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார்கள் என்று எண்ணிய பிறகு அவர்கள் சொல்வதை தான் இயக்குநர்களும் கேட்க வேண்டும் என்று விதியா அல்லது பாலாஜி மோகன் தரமே இவ்வளவுதானா என்றும் புரியவில்லை.

செட் ரொம்ப கண்ணை உறுத்தியது. இப்போ கதை இருக்கோ இல்லையோ மற்ற நகாசு வேலைகளில் தமிழ் படங்கள் முன்னேறிவிட்டன. இப்படத்தில் அவர்கள் வசிப்பதாகக் காட்டப்படும் திருவல்லிக்கேணி செட்டும் மார்கெட்டும் ரொம்ப சுமார் ரகம்.

இவ்வளவு பொறுமையா இப்படத்திற்கு நான் விமர்சனம் எழுதியதற்கு என் உள் மனம் என்னை மிகவும் பாராட்டுகிறது. தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை ரசிப்பார்கள். எனக்கும் தனுஷ் பிடிக்கும். ஆனால் ஆடுகளம், VIP இவை இரண்டுக்கும் கிட்டக் கூட இப்படம் வரவில்லை. Over build up வசூலுக்கு ஆகாது மச்சி. விரைவில் விழித்துக் கொள்ளுங்கள்.

maari

பாகுபலி – திரை விமர்சனம்

bahubali

இஷ்கிடே ஷக் சத்தே கட கட். துரே சிக் மிக்கு பகு பக்கி.  ஷிகர் சபர் டிஸ்க் டிஸ்க். இஸ்கு இஸ்கு!

பயப்படவேண்டாம். இப்படத்தில் கள்வர்கள் நாட்டு மக்கள் பேசுவதற்காகப் புதிதாக கார்க்கி இயற்றியதாகச் சொன்ன மொழியில் நானும் விமர்சனத்தை எழுத ஆரம்பித்தேன். என் மன நலமும் உங்கள் மன நலமும் கருதி தமிழுக்கு மாறிவிடுடேன்.

பிரபாஸ் நல்ல உயரம் உயரத்துக்கு ஏற்ற உடல் வாகு.  இவர் முகத்துக்கும் உடல் வாகுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது அவரின் சிக்ஸ் பேக். சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அவர் அடிக்கும் ஒவ்வொரு அடியும், விடும் ஒவ்வொரு அம்பும், சுழற்றும் ஒவ்வொரு கதையும் நின்னு விளையாடுகிறது. மற்றபடி நடிக்கத் தெரியவில்லை. மக்கு மாதிரி இருக்கிறார். ரானா டக்குபாட்டி சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்துக்கு ஏற்றத் தேர்வு! அவருடன் பிரபாசுக்கு நிறைய சீன்கள் இருப்பதால் நடிப்பில் வித்தியாசம் இன்னும் தூக்கலாகத் தெரிகிறது.

குழந்தைகளுக்கும் பாண்டஸி பிரியர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். முதலில் வரும் அருவிக் காட்சிகள் பிரம்மாண்டம். பிரபாஸின் பலத்தைக் காட்டும் அறிமுகக் காட்சிகள் அத்தனையும் அருமை! படம் முழுக்க இயற்கை காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன. எது உண்மை எது CGI என்று கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ள அளவு இரண்டும் அழகாக நெய்யப்பட்டுள்ளன. இக்கதை நடக்கும் நகரம் ராவணனின் அரண்மனையும் இலங்கையும் அந்த நாளில் எப்படி இருந்திருக்கும் என்று என் மனக் கற்பனையில் இருந்ததோ அந்த மாதிரி உள்ளது. அவ்வளவு பிரம்மாண்டம்!

ஒளிப்பதிவு செந்தில் குமார். அசுர உழைப்பு! CGயும் நடிகர்களையும் இணைத்துப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் பொழுது பெரும் பொறுப்பு ஒளிப்பதிவாளர் தோள்களில் தான் விழுகிறது. அதை சிறப்புடன் செய்துள்ளார். Editing கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ். அவரின் பங்களிப்பும் நன்று.

ரம்யா கிருஷ்ணனும் சத்யராஜும் படத்தைத் தாங்கும் இரு தூண்கள். உத்தமவில்லன்னுக்குப் பிறகு இன்னொரு ஐயோ பாவம் பாத்திரம் நாசருக்கு. ரோகிணியும் மற்ற நடிகர்களும் நன்றாக செய்துள்ளனர். அனுஷ்காவும் உள்ளார். இரண்டாம் பாகத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் என்று நம்புவோமாக! தமன்னா வீராவேசமாக நடித்துள்ளார். இதுவரை ஏற்றிராதப் பாத்திரம். அழகில் துளியும் குறையில்லை 🙂 பிரபாஸுடன் ஒரு டூயட். அது தேவையில்லை என்றாலும் அவரின் ரசிகர்களுக்கு விருந்து.

இசை – மரகதமணி. மூன்று பாடல்களுக்குமே கதைக்குத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகவும் இல்லை. உண்மையில் படத்தின் வேக ஓட்டத்துக்குத் தடையாக உள்ளன. அதிலும் ஒரு குத்துப்பாட்டு. ஷ்அப்பாடா என்றிருந்தது. நடனக் காட்சிகளில் தெலுகு வாசனை தூக்கல்! பின்னணி இசை சில இடங்களில் அற்புதம், சில இடங்களில் ஹைதிராபதி ஹோட்டல்களில் பேக்கிரவுண்டில் இழையோடும் instrumental இசை போல் இருந்தது.

சண்டை காட்சிகளின் பிரம்மாண்டம் நேரில் பார்த்தால் தான் தெரியும். அவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதிலும் கதை (mace) ஷாட்புட் இரும்பு குண்டு மாதிரி சங்கிலியோடு இணைந்து எதிரியைத் தாக்கி பின் ஹீரோ கைக்கே வரும் அழகு சூப்பர்.

ஆனால் கதையுடன் என்னால் ஒட்டமுடியவில்லை. சேர, சோழ, பாண்டியர், முகலாய, ராஜபுத், அல்லது ஆங்கிலேய அரசு சார்ந்த உண்மையான கதைகளை ஒட்டி இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் மிகவும் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இதில் சொல்லப்படும் ஊரும், எதிரிகளும், சண்டைகளும் Lord Of The Rings வகை fantasy ரகம். அவைகளை விரும்புவபர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

இதுவரை இந்திய சினிமாக்களில் மிகவும் பணச் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம் இது என்று wiki சொல்கிறது (250 கோடி ரூபாய்). ராஜமௌலியின் இயக்கம், திரைக்கதையில் வந்துள்ள மிகப் பெரிய பட்ஜெட் படம். சிரத்தையுடன் எடுத்துள்ளார். அதற்கு அவரை மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும். இதன் இரண்டாம் பாகம் 2016ல் வெளியாகும் என்று சொல்லப் படுகிறது. அதனால் இப்படம் முடியும் போது க்ளைமேக்ஸ் இருக்கிறது ஆனால் இல்லை.

Rana Baahubali HD Wallpaper

பாபநாசம் – திரை விமர்சனம்

Papanasam-2015-film-Poster

வெகு நாளைக்குப் பிறகு பீடாவுடன் ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி. ஒரு சிறந்த நடிகர் நடித்து வேற்று மொழியில் வெற்றிப் படமாக வந்த ஒன்றை ரீமேக் செய்த பின்னும் அதே அளவு தரம் வந்தாலே மகிழ்ச்சி. இப்படம் த்ரிஷ்யத்தை விட சிறப்பாக வந்துள்ளது. இந்தப் புதுக் குழுவின் பங்களிப்பும், இயக்குநர் ஜீது ஜோசபின் அதிக அர்பணிப்பும் பழைய வைரத்தைப் பட்டை தீட்டி மெருகேற்றி ஜொலிக்க வைத்துள்ளது!

இப்படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதை தான். அது தான் இப்படத்தின் வெற்றிக்கு முழுக்காரணம். இதைப் புரிந்து கொண்டதால் தான் பல மொழிகளிலும் இப்படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காகக் கதை திரைக்கதையை உருவாக்கிய ஜீது ஜோசபுக்குத் தனி பாராட்டு!

கமலஹாசன்! அவர் நடிப்பைப் பற்றிப் புதிதாக என்ன இருக்குப் புகழ? ஆயினும் இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் அவர் செய்திருப்பது இதே கிளைமேக்சை வெவ்வேறு மொழிகளில் செய்த அந்தந்த நடிகரைக் காட்டிலும் எட்டமுடியாத உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இன்று நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகர்கள் இவர் படங்களை பாடங்களாக எடுத்துப் படித்தால் நமக்கு இன்னும் நல்ல தமிழ் நடிகர்கள் கிடைப்பார்கள். Hats off to Kamal!

எந்தப் படைப்புமே எல்லோரின் பங்களிப்பால் தான் பரிமளிக்கிறது. பாபநாசமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு கதாபாத்திரமும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒன்று, படத்தில் கமல் நடிப்பதாகவே தெரியவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையை, ஒரு குடும்பத் தலைவனை மட்டுமே திரையில் காண்கிறோம்.

ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன் முக்கிய பாத்திரங்களில் வருகிறார்கள். அதில் ஆஷா சரத் மலையாளத்திலும் அதே பாத்திரத்தை ஏற்று நடித்தவர், தமிழிலும் அதே அளவு பிரமாதமாக நடித்துள்ளார். இங்கே ஆனந்த் மகாதேவனின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரும் கமலைப் போலக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கொஞ்சம் கூட மிகையில்லாத நடிப்பு.

கௌதமி கமலுக்கு நல்லதொரு இணை, திரையிலும். அழகான தோற்றம், பாங்கான உடை மற்றும் ஆபரணங்களின் தேர்வு அவர் பாத்திரத்துக்கான மரியாதையை அதிகப் படுத்துகிறது. தேர்ந்த நடிகை. சற்றேக் கடினமானப் பாத்திரத்தை அனாயாசமாகக் கையாள்கிறார். தேவர் மகனில் பார்த்த அவர் நடிப்பிற்குப் பிறகு இப்படத்தில் அவரை மிகவும் பிடித்திருக்கிறது.

பாடல்கள் இரண்டு தான். இரண்டும் சூப்பர். வினா வினா, யேயா என் கோட்டிக்காரா – கேட்க கேட்க அலுக்காத டியுன்கள். பின்னணி இசையும் வெகு சிறப்பு. தற்போது இருக்கும் புது இசை அமைப்பாளர்களை ஓரம் கட்டி ஜிப்ரான் ரேசில் முந்துவார் என்று தோன்றுகிறது.

Editing A class. அயுப் கானுக்குப் பாராட்டுகள். துளி அதிக சதை இல்லை. அப்படியும் மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். ஆனால் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. ஒளிப்பதிவு மிகவும் நன்று, பச்சைப் பசேல் காட்சிகள் கண்ணுக்கு விருந்து. வாழ்த்துகள் சுஜீத் வாசுதேவ்!

இப்படம் த்ரில்லர் என்பதால் முதல் முறை பார்க்கும்போது இருக்கும் பாதிப்பும், பிடித்தமும் இரண்டாவது முறை இருக்காது. அதனால் இப்படத்தின் வேறு மொழி பிரதியைப் பார்த்தவர்களுக்கு இப்படத்தில் புதிதாகப் பார்க்க ஒன்றும் இல்லை, கமலின் உன்னதமான நடிப்பைத் தவிர. தமிழில் இப்படத்தை முதலில் பார்ப்பவர்கள் மிகவும் ரசித்துப் பார்ப்பார்கள். மற்றப்படி கமல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

உத்தமவில்லனுக்கு நல்ல மாற்று மருந்து 🙂

Papanasam1