வெகு நாளைக்குப் பிறகு பீடாவுடன் ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி. ஒரு சிறந்த நடிகர் நடித்து வேற்று மொழியில் வெற்றிப் படமாக வந்த ஒன்றை ரீமேக் செய்த பின்னும் அதே அளவு தரம் வந்தாலே மகிழ்ச்சி. இப்படம் த்ரிஷ்யத்தை விட சிறப்பாக வந்துள்ளது. இந்தப் புதுக் குழுவின் பங்களிப்பும், இயக்குநர் ஜீது ஜோசபின் அதிக அர்பணிப்பும் பழைய வைரத்தைப் பட்டை தீட்டி மெருகேற்றி ஜொலிக்க வைத்துள்ளது!
இப்படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதை தான். அது தான் இப்படத்தின் வெற்றிக்கு முழுக்காரணம். இதைப் புரிந்து கொண்டதால் தான் பல மொழிகளிலும் இப்படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காகக் கதை திரைக்கதையை உருவாக்கிய ஜீது ஜோசபுக்குத் தனி பாராட்டு!
கமலஹாசன்! அவர் நடிப்பைப் பற்றிப் புதிதாக என்ன இருக்குப் புகழ? ஆயினும் இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் அவர் செய்திருப்பது இதே கிளைமேக்சை வெவ்வேறு மொழிகளில் செய்த அந்தந்த நடிகரைக் காட்டிலும் எட்டமுடியாத உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இன்று நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகர்கள் இவர் படங்களை பாடங்களாக எடுத்துப் படித்தால் நமக்கு இன்னும் நல்ல தமிழ் நடிகர்கள் கிடைப்பார்கள். Hats off to Kamal!
எந்தப் படைப்புமே எல்லோரின் பங்களிப்பால் தான் பரிமளிக்கிறது. பாபநாசமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு கதாபாத்திரமும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒன்று, படத்தில் கமல் நடிப்பதாகவே தெரியவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையை, ஒரு குடும்பத் தலைவனை மட்டுமே திரையில் காண்கிறோம்.
ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன் முக்கிய பாத்திரங்களில் வருகிறார்கள். அதில் ஆஷா சரத் மலையாளத்திலும் அதே பாத்திரத்தை ஏற்று நடித்தவர், தமிழிலும் அதே அளவு பிரமாதமாக நடித்துள்ளார். இங்கே ஆனந்த் மகாதேவனின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரும் கமலைப் போலக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கொஞ்சம் கூட மிகையில்லாத நடிப்பு.
கௌதமி கமலுக்கு நல்லதொரு இணை, திரையிலும். அழகான தோற்றம், பாங்கான உடை மற்றும் ஆபரணங்களின் தேர்வு அவர் பாத்திரத்துக்கான மரியாதையை அதிகப் படுத்துகிறது. தேர்ந்த நடிகை. சற்றேக் கடினமானப் பாத்திரத்தை அனாயாசமாகக் கையாள்கிறார். தேவர் மகனில் பார்த்த அவர் நடிப்பிற்குப் பிறகு இப்படத்தில் அவரை மிகவும் பிடித்திருக்கிறது.
பாடல்கள் இரண்டு தான். இரண்டும் சூப்பர். வினா வினா, யேயா என் கோட்டிக்காரா – கேட்க கேட்க அலுக்காத டியுன்கள். பின்னணி இசையும் வெகு சிறப்பு. தற்போது இருக்கும் புது இசை அமைப்பாளர்களை ஓரம் கட்டி ஜிப்ரான் ரேசில் முந்துவார் என்று தோன்றுகிறது.
Editing A class. அயுப் கானுக்குப் பாராட்டுகள். துளி அதிக சதை இல்லை. அப்படியும் மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். ஆனால் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. ஒளிப்பதிவு மிகவும் நன்று, பச்சைப் பசேல் காட்சிகள் கண்ணுக்கு விருந்து. வாழ்த்துகள் சுஜீத் வாசுதேவ்!
இப்படம் த்ரில்லர் என்பதால் முதல் முறை பார்க்கும்போது இருக்கும் பாதிப்பும், பிடித்தமும் இரண்டாவது முறை இருக்காது. அதனால் இப்படத்தின் வேறு மொழி பிரதியைப் பார்த்தவர்களுக்கு இப்படத்தில் புதிதாகப் பார்க்க ஒன்றும் இல்லை, கமலின் உன்னதமான நடிப்பைத் தவிர. தமிழில் இப்படத்தை முதலில் பார்ப்பவர்கள் மிகவும் ரசித்துப் பார்ப்பார்கள். மற்றப்படி கமல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.
உத்தமவில்லனுக்கு நல்ல மாற்று மருந்து 🙂
Jul 03, 2015 @ 15:30:02
நீங்க விமர்சனம் போடுறதுக்குள்ளே படத்த பார்த்திறனும்னு ரொம்ப மெனக்கெட்டேன். ஹும்.. நாளை மாலை 3.45 ஷோக்குத்தான் டிக்கட் கிடைச்சது. பார்த்துட்டு வந்து சொல்றேன்.
சொல்றதுக்கு என்ன இருக்குது 🙂 எல்லாம் சுபமாகவே இருக்கும். உங்களுக்கும் மேலே ஒரு அப்பீல் இருக்க முடியுமா :))
Jul 03, 2015 @ 15:57:41
Arputhamana vimarsanam. Drishyam parthen. Un vimarsanam padithapin perumai konden. Nanum kamalin theevera rasigai allava…
Jul 03, 2015 @ 15:58:53
Arputhamana vimarsanam. Drishyam parthen. Un vimarsanam padithapin perumai konden. Nanum kamalin theevera rasigai allava…
Jul 04, 2015 @ 09:55:25
கலக்கல் விமர்சனம் அம்மா, நீங்க ஏற்கனவே மர்டர் வெறி கமல் ரசிகை அதையும் தாண்டி கடைசி வரியில வச்சீங்க ஒரு பொடி ஆகா மொளகாப் பொடி 😉
Jul 04, 2015 @ 11:07:47
Your Final lines are Climax Twist :)))
Jul 05, 2015 @ 11:42:47
சூப்பர் விமர்சனம். உண்மையிலேயே உத்தமவில்லனுக்கு நல்லதொரு மாற்று மருந்து. பாபநாசத்துக்கு அடுத்து மாத்து மருந்து குடுக்காம இருக்கனுமேன்னு கடவுளை வேண்டிக்குவோம் 🙂
Jul 08, 2015 @ 14:21:59
நன்றி சின்னப் பையன், சுகன்யா, பிரபா, தெனாலி, ஜிரா 🙂
Jul 09, 2015 @ 12:18:07
நீண்ட நாட்களுக்குப்பின் மனதுக்கு நிறைவைத் தந்த படம். படத்தை குடும்பத்துடன் கண்டுகளித்தேன்.(தியேட்டரில்).