நமது பாரத குடியரசுத் தலைவர் கலாமின் பிறப்பு, வளர்ப்பு, அவர் வகித்தப் பல பதவிகள் பற்றி நம்மில் பலரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரின் மறைவு நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் நாம் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அவர் திங்களன்று இரவு ஏழேமுக்காலுக்கு ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் இறந்தார். தமிழ்நாட்டில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் செவ்வாய் அன்று விடுமுறை அறிவித்திருந்தும் பல பள்ளிக் குழந்தைகள் செவ்வாய் காலை சீருடை அணித்து பள்ளிக்குச் சென்று கலாம் அவர்களைப் பற்றி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். விடுமுறை அன்று மாணவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்குச் சென்று, இறந்த ஒருவரைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அவர் எவ்வளவு பெரிய inspiring personalityயாக இருந்திருக்க வேண்டும் என்று நாமே புரிந்து கொள்ள முடியும்.
நல்லடக்கம் இன்று. நேற்று முதலே திரும்பிய இடமெல்லாம் அவரின் படமும், அதற்கு மாலையும் அதன் முன் சில மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு ஒளி வீச ஆரம்பித்து விட்டன. இவ்வாறு இறுதி மரியாதை செய்தவர்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் அல்ல. துப்புறவு தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், சின்ன மளிகைக் கடைகளும் , மரக்கடைகளும், சின்ன சாப்பாட்டுக் கடைகளும், அயர்ன் கடைகளும் வைத்திருப்பவர் தாம். இவர்கள் தான் கலாமின் படம் வைத்து மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி மரியாதை செய்தனர். ஒவ்வொரு தெரு முனையிலும் கலாமின் படம், இவர் சொன்ன பொன் மொழியுடன் வைக்கப் பட்டிருந்தது. எந்த ப்லெக்ஸ் பேனரிலும் ஸ்பான்சர் செய்தவர் பெயர் இல்லை, புகைப்படம் இல்லை. அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இன்று முழு கடையடைப்பு. இந்த மாதிரி ஒரு மரியாதையை அவர் பெற அவர் வாழ்க்கை இவர்கள் அனைவரையும் எந்தளவு பாதித்திருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
நம் நாட்டின் குடியரசுத் தலைவராக அவர் 2002-2007 வரை இருந்தார். இது வரை அந்தப் பதவியை அலங்கரித்தவர்களுள் இவரைப் போல ஒருவரை சுதந்திர இந்தியா கண்டதில்லை. ஐந்தாண்டுகள் அவரின் இல்லமாக இருந்த ராஷ்டிரபதி பவனை எளிய மக்கள் வந்து பார்க்கும் இடமாக மாற்றி வரவேற்று விருந்தோம்பல் செய்தவர் அவர்.
ராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறியதால் அவருக்கு எளியவர்களின் சிரமம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. எளிமையானவராக இருந்ததால் அவர் இந்தியாவின் மிகப் பெரிய பதவியை வகித்தவர் ஆயினும் எல்லாராலும் எளிதாக நெருங்க முடிந்தது. அவர் குடியரசுத் தலைவர் ஆனது கூட ஒரு எதிர்பாராத நிகழ்வே. பிஜேபி அரசு காங்கிரஸ் அரசுக்கும் தோதான அரசியலைச் சார்ந்தவர் யாரும் கிடைக்காததால் கலாமை சட்டென்று தேர்ந்தெடுத்தார் அப்போதைய பிரதம மந்திரி வாஜ்பாய். யாராலும் மறுப்புச் சொல்ல முடியாத ஒரு வேட்பாளர்! அதற்கு முன் அவர் வகித்தப் பதவிகள் மிகச் சிறப்புடையவை. ஆயினும் அவர் குடியரசுத் தலைவர் ஆனது தான் அவரின் உன்னதமான குணங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது. அதற்கு நாம் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
குடியரசுத் தலைவரான பின் அவர் தன் முதல் இரண்டு மாத சம்பளங்களை புட்டப்பர்த்தியில் உள்ள கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடக்கும் இப்தார் விழாவுக்கு சுமார் இரண்டரை லட்சம் செலவாகுமாம். அது அரசாங்கத்தின் செலவு. அதில் இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் தன் பங்காகக் கொடுத்துள்ளார். இதெல்லாம் சிலர் அவர் மறைவுக்குப் பின் சொல்லக் கேட்டது. இது வரை தெரியாது. அப்போ இன்னும் வெளியில் தெரியாத வண்ணம் எவ்வளவு தான தர்மம் செய்திருப்பார் என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.
இளைஞர்களுக்கு முதியவர்களைக் கண்டால் பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர் ஈர்த்தது மொத்தமும் இளைஞர்களைத் தான். இன்று அவர் கடைசிப் பயணத்தில் அஞ்சலி செலுத்தக் கலந்து கொண்ட லட்சோப லட்ச மக்கள் அனைவரும் இளைஞர்களே. அதனினும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் குழந்தைகள் தாமாகவே முன்வந்து கலாமுக்கு தங்கள் சிறு கைகளாலும் பெரிய மனத்தாலும் செய்திருக்கும் அஞ்சலிகள் தான்.
அது எப்படி சாத்தியம் ஆயிற்று? அவர் உண்மை மட்டுமே பேசினார். அதனால் சாத்தியம் ஆயிற்று. வெளிப்பூச்சும் பாசாங்கும் அவரிடம் எள்ளளவும் இலை. குழந்தைகள் அதிபுத்திசாலிகள், அதனால் அவர்களுக்கு அவரைக் கொண்டாடத் தெரிந்திருக்கிறது. தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவியும், மாணவனும் அவரைப் பற்றிச் சொல்லும் கருத்து நம்மை அசர வைக்கிறது. மரம் வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், பெற்றோர்களைப் பேணிக் காக்க வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும் என்று அவர் சொன்னார், அவற்றை எல்லாம் நாங்கள் கடைபிடிக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அவர் பதில் கடிதம் போட்டார், கையெழுத்திட்டப் புத்தகங்களை அனுப்பினார் என்று படங்களைப் பகிர்ந்துள்ளனர்! ஜனாதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின் அவரின் உழைப்பு இன்னும் அதிகமாகியது என்று சொல்லலாம். அவர் தொடர்ந்து மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து உரை நிகழ்த்தி அவர்கள் மனத்தில் ஞான விளக்கை ஏற்றினார். ஒய்வு என்பதே அவர் அகராதியில் இல்லை. அவர் உதாரணப் புருஷராய் வாழ்ந்ததால் தான் அவரால் மக்களை அவர்பால் இழுக்க முடிந்தது. எப்பொழுது சொல் ஒன்றும் செயல் வேறோன்றுமாய் இருக்குமோ அப்பொழுது ஒருவரின் நம்பகத் தன்மை போய்விடும்.
அவர் எத்தனையோ பெரிய பதவிகளை தன் வாழ்நாளில் வகித்தார். அவரின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் சமீபத்தில் அவரிடம் என்னவாக உங்களைப் பின்னாளில் மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ‘ஆசிரியராக’ என்று உடனே பதில் அளித்திருக்கிறார். அது ஒன்றே போதும் அவரின் தன்மையை நமக்கு வெளிக்காட்ட. அவர் தன்னிடம் இருந்த ஞானம் அனைத்தையும் மற்றவர்களிடம் பகிரவே ஆசைப்பட்டார். கொடை வள்ளல். நாளைய தலைமுறையை சிறப்பாக வடிவமைக்க கையில் உளியுடன் செதுக்கவே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவழித்துள்ளார்.
தமிழ் மொழி தெரிந்தவர்கள் எனில் கண்டிப்பாக அவருடன் தமிழிலேயே உரையாடுவார். தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர் உரையாடுவதே ஒரு தனி அழகு. அவர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாதாம். ஆல் இந்தியா ரேடியோவில் தான் செய்திகள் கேட்பாராம். ஆனால் உடனுக்குடன் ஈமெயில் மட்டும் செக் பண்ணிக் கொள்வாராம். அவர் ட்விட்டரில் இருந்து கொண்டு ஷில்லாங் போவது பற்றிக் கூட கடைசியாக ட்வீட் பண்ணியுள்ளார்.
எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்த பணக்கார, பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் இருந்தும் வரவில்லை, தன் கடமை என்று எதை நினைத்தாரோ அதைப் பழுதின்றி செய்தார். அனைத்து உயரிய விருதுகளையும் பெற்றும் பணிவுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவர் மறைவுக்கு இந்தியாவே அழுதது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பதைபதைக்கும் வெய்யிலிலும் கூடி நின்று, அவரின் நல்லடக்கத்தின் போது நெஞ்சுருக அழுதனர். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேரு?
நம் மத்திய அரசும் இராணுவ மரியாதையோடும் சகல ஏற்பாடுகளை செவ்வனே செய்து அவரை நல்ல முறையில் வழியனுப்பியது அனைவர் மனத்துக்கும் ஒரு ஆறுதலைத் தந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்துக்கே சென்று இறுதி அஞ்சலி செய்தது அவருக்குரிய மேன்மையை பறைசாற்றியது. மோடியும் தில்லியில் ஒரு முறை, இராமேஸ்வரத்தில் இன்னொரு முறை வந்து அஞ்சலி செலுத்தி ஒரு நல்ல முன் மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார்.
கல்யாண சாவு தான். அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை என்பது வேண்டுமானால் அவர் குடும்பத்தாருக்கு ஒரு குறையாக இருக்கலாம். அனால் அதைத் தவிர நிறை வாழ்வே வாழ்ந்தார். அனைவரும் விரும்பும் அனாயாச மரணத்தை இறுதியில் அடைந்தார். ஆயினும் செய்தி கேட்டவுடன் நம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல மனத்தில் சோகம் கவ்வியது ஏன்? இன்னும் அந்த வேதனை விலகவில்லையே. அது தான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு. அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து அவரின் வாழ்க்கை வரலாறு. அதில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் நம் வாழ்நாளில் அனுபவித்து செயல்படுத்துவது தான் அவரின் சொத்தை சரியான முறையில் பயன்படுத்துவதாகும்.
அவருக்கும் அவரின் வாழ்க்கைப் பாடத்துக்கும் நாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கோம். வாழ்க அவர் புகழ். வளர்க அவர் வகுத்த நன்னெறிகள்!
Thanks to @jvs2020 and @paramporul for their photos.
Jul 30, 2015 @ 16:33:36
நன்றி. கட்டுரை சுருக்கமாகவும் அவரது முக்கிய சிறப்புகளை வெளிச்சம்போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. ஏனோ அவருக்குப் பிறகு குடியரசுத்தலைவராக வந்த ப்ரதிபா பாட்டீல் நினைவுக்கு வருகிறார். தற்போது அவர் தன் உபயோகத்துக்கு ஒரு காரும் அதற்கு பெட்ரோல் செலவும் அரசு தரவேண்டும் என விண்ணப்பித்திருப்பதாகக் கேள்வி. What a contrast.
Jul 31, 2015 @ 06:58:16
எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அவர் நல்ல எடுத்துக்காட்டு.
Jul 30, 2015 @ 16:39:12
மிக சரியான கருத்துகள்… நன்றிமா
Jul 31, 2015 @ 06:58:38
நன்றி.
Jul 30, 2015 @ 16:39:49
நல்ல பதிவு. போற்றப்படவேண்டிய ஆளுமை அவருடையது. அவர் குடியரசுத்தலைவராக இருந்த காலம் 2002-07வரையிலானது.
Jul 31, 2015 @ 06:59:14
நன்றி.
Jul 30, 2015 @ 16:55:56
படிக்கையிலேயே கண்ணில் நீர்த்துளிகள்.
இப்படிப்பட்ட கல்யாணச்சாவை இந்த உலகம் இனி மீண்டும் காணாது.
பிஞ்சுக்குழந்தைகள் முதல் தொண்டு கிழவர்கள் வரை…… ரிக்சா ஓட்டும் கூலித்தொழிலாளி முதல் மாடமாளிகை வைத்துள்ள பணக்காரன் வரை…. அனைவரிடமும் நற்பெயர் சம்பாதிப்பது என்பது… திரு அப்துல்கலாமால் மட்டுமே இயலும்.
ஆங்காங்கே வெறுப்பை உமிழும் வார்த்தைக்காரர்கள் இந்த அட்டன்சன் சீக்கிங் மனப்பாவம் கொண்டவர்கள் மட்டுமே!
We salute you nations teacher!
Jul 31, 2015 @ 07:01:09
அழகாகச் சொன்னீர்கள்.
Jul 30, 2015 @ 17:11:02
உண்மை! குறையே சொல்ல முடியாத அளவு அவரது வாழ்க்கை அமைந்து விட்டது. அதை நேர்த்தியாக பதிந்துள்ளீர்கள். நன்றி.
Jul 31, 2015 @ 07:01:28
நன்றி அரசு.
Jul 30, 2015 @ 19:50:12
எந்தத் தலைவர் மறைவும் இந்தத் தேசத்தை இந்தளவு பாதித்ததில்லை. அவர் மறைந்தாலும் மனதில் என்றும் நிலைத்திருப்பார். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
Jul 31, 2015 @ 07:01:48
உண்மை.
Jul 30, 2015 @ 20:17:19
Very well written tribute.
Aug 03, 2015 @ 13:53:42
thank you.
Jul 31, 2015 @ 02:10:45
ஒரு பெரியார் ஒரு அண்ணா ஒரு காமராஜர் வழியில் ஒரு கலாம் ஐயா,இனிமேல் தமிழகத்தில் யாரும் பிறக்கப்போவதில்லையென்றாலும்,இந்த இயந்திர வாழ்வின் நடுவே அவரின் கருத்துக்களையேனும் மதித்து வாழ்வதும்,அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதுமே..தலையாய கடமைகளில் ஒன்றாகும் – நன்றி அம்மா, மிக நல்ல பதிவு
Jul 31, 2015 @ 07:02:10
நன்றி.
Jul 31, 2015 @ 02:12:23
ஒரு பெரியார் ஒரு அண்ணா ஒரு காமராஜர் வழியில் ஒரு கலாம் ஐயா,இனிமேல் தமிழகத்தில் யாரும் பிறக்கப்போவதில்லையென்றாலும்,இந்த இயந்திர வாழ்வின் நடுவே அவரின் கருத்துக்களையேனும் மதித்து வாழ்வதும்,அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதுமே..தலையாய கடமைகளில் ஒன்றாகும் – நன்றி அம்மா, மிக நல்ல பதிவு
Jul 31, 2015 @ 07:02:39
நன்றி மணி.
Jul 31, 2015 @ 06:45:42
போற்றுதலுக்குரிய வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர் கலாம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வானை வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கேற்ப இப்போது தெய்வத்தோடு தெய்வமாக அவர் கலந்திருப்பார் என்று நம்புகிறேன்.
Jul 31, 2015 @ 07:02:56
உண்மை ஜிரா.
Jul 31, 2015 @ 11:48:04
“ஆயினும் செய்தி கேட்டவுடன் நம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல மனத்தில் சோகம் கவ்வியது ஏன்? இன்னும் அந்த வேதனை விலகவில்லையே. அது தான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு. அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து அவரின் வாழ்க்கை வரலாறு. அதில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் நம் வாழ்நாளில் அனுபவித்து செயல்படுத்துவது தான் அவரின் சொத்தை சரியான முறையில் பயன்படுத்துவதாகும்.”
இதுவேதான் எல்லோரின் உள்ளக்கிடக்கையும்.
கலாம் ஐயா என்ற மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமென்பதே நாம் பெற்றப் பெரும் பாக்கியம்தான்.
அவர் ஒரு சரித்திர நாயகன்
சிறந்த முன்மாதிரி
உணர்ந்த இளைஞர்களுக்கு.
நன்றி தங்கள் நற்பதிவிற்கு.
Aug 03, 2015 @ 13:54:21
ரொம்ப நன்றி குமார் ராஜா.
Aug 08, 2015 @ 05:25:07
அப்துல் கலாம் நமது முன்னல் குடியரசு தலைவரென்று யாருக்குமே தெரியாது ? ? ?
Aug 16, 2015 @ 02:59:02
இந்த பதிவை சற்று காலம் முதல் பதிவாக தெரிவது போல அமைக்கலாமே…
மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
Jun 24, 2016 @ 17:30:19
கலாம் ஒரு மாமேதை…அவருடைய இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும்…