இராமானுஜர் – பகுதி 4

ramanujar9

குருவுக்கே குருவானார்

இந்நிலையில் வரதராஜப் பெருமாள் கோவிலில் யாதவ பிரகாசரின் தாய் இராமானுஜரை தரிசித்து அவரின் திவ்ய அழகைக் கண்டு தன் மகன் யாதவ பிரகாசர் இராமானுஜரின் சீடராக வேண்டும் என்று விரும்பி மகனிடமும் அவ்வாசையைத் தெரிவித்தார். கொஞ்ச காலமாகவே மன சஞ்சலத்துடன் வாழ்ந்து வந்த யாதவ பிராகசருக்கும் அவரிடம் சேர்ந்தால் நல்லது என்று தோன்றியது. ஆனால் அவரின் அகந்தை அதற்கு முட்டுக் கட்டை போட்டது. தன் சீடனையே எப்படி குருவாக ஏற்றுக் கொள்வது என்று தயங்கினார். இது பற்றி திருக்கச்சி நம்பிகளிடமும் பேசினார். அவரும் அப்படி செய்வது யாதவருக்கு மிகவும் நல்லது என்று அறிவுறுத்தினார்.

ஆனாலும் அவர் குழப்பத்துடனே இருந்தார். ஓரு நாள் இரவு அவர் கனவில் யாரோ ஒருவர் தோன்றி நீ இராமானுஜரின் சீடனாகினால் அது உனக்கு ஏற்றத்தைத் தரும் என்று அறிவுறுத்தக் கண்டு கண் விழித்தார்.துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவரை சந்திக்க திருமடத்துக்குச் சென்றார். இராமானுஜரின் திருமுக அழகும், ஒளியும் அவரை திக்குமுக்காடச் செய்தது. யாதவரைக் கண்டதும் இராமானுஜர் முகம் மலர்ந்து அவருக்கு தக்க ஆசனத்தைக் கொடுத்து அமரச் செய்தார். இராமானுஜர் சங்கு சக்கரங்களை இரு தோள்களில் பொறித்துக் கொண்டு திருமண் காப்பு இட்டுக்கொண்டு ஒளிமயமாக இருப்பதை பார்த்து அவைகளுக்கான சாத்திரங்கள் என்ன என்று இராமானுஜரைக் கேட்டார்.

அதற்கு இராமானுஜரின் கட்டளைப்படி கூரத்தாழ்வாரே பதில் உரைத்தார். வைணவ சமயத்தின் திருச்சின்னங்கள், வழிபடும் நாராயணனனின் பெருமை, அனைத்துக்கும் பல்வேறு மேற்கோள்களை வேத, புராண, இதிகாசங்களில் இருந்து எடுத்துக் காட்டி விளக்கினார். அவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்டு ஓடோடிச் சென்று இராமானுஜரின் திருவடிகளைப் பற்றி அழுது அரற்றி, உண்மையிலேயே நீங்கள் ஆதிசேஷனின் அவதாரம் தான். அஞ்ஞானத்தில் மூழ்கி நான் செய்த தவறுகளை மன்னித்து, பிறவிப் பெருங்கடலைத் தாண்டத் தோணியாக இருந்து தாங்களே என்னை உய்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் யாதவர்.

இராமானுஜரும் அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு சந்நியாசம் வழங்கினார். பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப் பட்டு கோவிந்த ஜீயர் என்னும் அடியேன் நாமமும் பெற்றார். சந்நியாசிகளின் கடமை பற்றிய நூலை அவரை எழுதுமாறு இராமானுஜர் பணித்தார். அவ்வாறே தனது எண்பதாவது வயதில் “எதிதர்ம சமுச்சயம்” எழுதி சமர்ப்பித்தார் கோவிந்த ஜீயர். குருவுக்கே குருவாக விளங்கிய எதிராஜரின் புகழ் மேலும் பரவியது.

எதிராஜரின் திருவரங்கப் பிரவேசம்

இராமானுஜர் துறவு பூண்ட விஷயம் கேள்விப்பட்டு பெரிய நம்பிகள் திருவரங்கத்தில் இருந்தபடி உள்ளம் பூரித்தார். அவதார புருஷர் என்று ஆளவந்தாராலேயே மதிக்கப்பட்ட எதிராஜரை திருவரங்கத்துக்கு அழைத்து வர மடத்தில் உள்ள அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர். அந்தப் பொறுப்பும் பெரிய நம்பியிடமே ஒப்படைக்கப் பட்டது. போன முறை மனைவிகளின் பிணக்கினால் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முடியாமல் போனது. அதனால் இந்த முறை தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றி பெற அரங்கனின் அருளை வேண்டினார் பெரிய நம்பி. உள்ளம் உருகி வேண்டி நின்ற பெரிய நம்பியின் செவியில் படுமாறு ஒரு யோசனையைக் கூறினார் அரங்கன். “தெய்வீக இசையில் வல்லவர் உன் மகன் திருவரங்கப் பெருமாள் அரையர். அவரை காஞ்சிக்கு அனுப்பி வைப்பாயாக. கச்சிப் பெருமான் முன் நின்று இச்சையுடன் அரையரைப் பாடச் சொல். அப்பாட்டுக்கு மயங்கி வரதன் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்பார், எதிராஜரே வேண்டும் என்று உறுதியுடன் கேட்கச் சொல். பெருமாள் அருளாணையின்றி இராமானுஜர் திருவரங்கம் வரமாட்டார்” என்று அருளினார்.

அவ்வாறே நிகழ்ந்தது. மனமுருகிப் பாடியதும் என்ன வேண்டும் கேள் என வரதன் சொல்ல, எதிராஜரைப் பரிசாகத் தரவேண்டும் என்று திருவரங்கப் பெருமாள் அரையர் பிரார்த்தித்தார். அருளிச் செயல்களில் பித்தரான வரதரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எதிராஜரை திருவரங்கத்துக்கு அனுப்ப உடன்பட்டார். எதிராஜரும் வரதனைப் பிரிய மனமின்றி ஆனால் தன் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டுத் திருவரங்கம் கிளம்பினார்.

முதலியாண்டானும் கூரத்தாழ்வாரும் பின் தொடர எதிராஜர் திருவரங்கம் வந்தடைந்தார். திருவரங்கமே இவரை வரவேற்க விழாக் கோலம் பூண்டிருந்தது. பெரிய நம்பிகளின் தலைமையில் எதிராஜருக்கு பெரிய வரவேற்பு அளிக்கப் பட்டது. எதிராஜர் திருவரங்கப் பெருமாள் சன்னதிக்குள் சென்று அரங்கனை கண் குளிரக் கண்டு வணங்கினார். “வாரீர் எம் உடையவரே” என்று வாழ்த்தி வரவேற்றார் திருவரங்கப் பெருமான். அன்று முதல் இராமானுஜருக்கு உடையவர் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.

பெரிய நம்பிகள் இவரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். இராமானுஜரும் அவரின் தொடர்பினால் தான் தனக்கு அரங்கனுக்கு சேவை செய்யும் பேறு கிடைத்தது என்று நன்றி நவின்றார்.

அன்று முதல், ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!” என்னும் வாழ்த்துரை உறுதியாகும் வண்ணம் உடையவர் தாம் ஆற்ற வேண்டிய திருப்பணிகளை ஆராய்ந்தார். தின விழா, பருவ விழா, மாத விழா, ஆண்டு விழா முதலான அனைத்து விழாக்களும் குறையின்றி நடைபெற, வேண்டிய பாதுகாப்புக்களை எல்லாம் சரிவர செய்யலானார். திருவரங்கர் கோவில் திறவுகோலும் கூரத்தாழ்வார் முயற்சியால் ஆறு மாத காலத்திற்குள் இராமானுஜர் பொறுப்புக்கு வந்தது. அப்பொழுதிலிருந்து திருவரங்கர் சந்நிதியின் கைங்கர்யங்களையும் அவர் முழுதுமாக ஏற்று நடத்தலானார்.  அது வரை திருவரங்க அமுதனார் என்பவர் பொறுப்பில் அக்கோவில் திறவுகோல் இருந்தது. அமுதனார் அந்தாதி பாடுவதில் வல்லவர். இராமானுச நூற்றந்தாதி பாடி இராமானுஜர் புகழை உச்சத்தில் வைத்தார் திருவரங்க அமுதனார். அவ்வந்தாதி இன்றளவும் புகழ் மங்காமல் ஒலித்து வருகிறது.

இவ்வாறு திருவரங்கத்தில் இருந்து கொண்டு திருக்கோயில் திருப்பணிகளை திருத்தமாக செய்து கொண்டும் பெரிய நம்பியிடம் மறை பொருளுக்கு விளக்கங்கள் கேட்டுக் கற்றுக் கொண்டும் இருந்தார் இராமானுஜர். ஒரு நாள் பெரிய நம்பி திருகோட்டியூர் நம்பி என்பவரைப் பற்றி அவரிடம் கூறினார். ஆளவந்தாரின் அருளுக்குப் பாத்திரமான அவரிடம் ஆளவந்தார் சில இரகசியமான உபதேசங்களை அருளிச் செய்துள்ளார். அதனால் அவரைப் போய் சந்தித்து அவரிடம் பொதிந்து கிடக்கும் உபதேசச் செல்வங்களைப் பெற்று வருமாறு இராமானுஜரிடம் பெரிய நம்பி கூறினார்.

திருக்கோட்டியூர் நம்பி

இதைக் கேட்ட உடையவர் பெரிய நம்பியிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கோட்டியூருக்குப் பயணமானார். நம்பியின் திருமாளிகை சென்று கூப்பிய கரங்களுடன் காலில் விழுந்து வணங்கி தான் வந்த காரியத்தை எடுத்துச் சொன்னார். ஆனால் திருக்கோட்டியூர் நம்பிகளோ அவரை அலட்சியமாக நாளை வா என்று அனுப்பிவிட்டார். இது போல பதினெட்டு முறை திருப்பி அனுப்பபட்டார், எந்தவித உபதேசமும் கொடுக்கவில்லை.

அதனால் உடையவரும் கோவில் திருப்பணிகளில் கவனம் செலுத்தி சோழ சிற்றரசன் அகளங்கனின் உதவியோடு மண்டபங்கள், நந்தவனம் மட்டும் அல்லாமல் மருத்துவ சாலைகளையும் நூல் நிலையங்களையும் நிறுவி பராமரித்தார். சில காலம் பொறுத்துத் திருக்கோட்டியூர் நம்பிகள் இவரின் புலமையையும், பக்தியையும், திருப்பணிகளையும் கேட்டறிந்து தண்டும் பவித்திரமாக அவர் ஒருவர் மட்டும் வருமாறு தகவல் அனுப்பினார்.

உடனே உடையவரும், கூரத்தாழ்வாரையும் முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். தனித்துத் தானே வரச் சொன்னோம், இவர்களையும் அழைத்து வந்திருக்கிறாயே என்று திருக்கோட்டியூர் நம்பிகள் வினவ உடையவர் ஆண்டானைத் தண்டாகவும், ஆழ்வாரை பவித்திரமாகவும் காட்டி உங்கள் ஆணைப்படியே வந்துள்ளேன் என்று கூறினார். அவரின் சாதுர்யமான பதிலினால் மனமகிழ்ந்த திருக்கோட்டியூர் நம்பி அம்மூவருக்கும் திரு மந்திர ரகசியங்களை உபதேசித்தார், ஆனால் இதை வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது என்று சத்தியத்தினுடன்.

மந்திரத்தின் உட்பொருளை அறிந்து கொண்ட உடையவரின் முகம் ஞானத்தால் பல மடங்கு ஒளி வீசியது. உபதேசம் பெற்ற அடுத்த நாளே விலை உயர்ந்த ஒரு இரத்தினத்தைத் தரப் போவதாகச் சொல்லி ஊரில் உள்ளோரை கோவிலுக்கு வருமாறு அழைத்தார் உடையவர். அனைவரும் தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு திருக்கோட்டியூர் கோவில் முன் திரண்டனர். இராமானுஜர் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி, நீங்கள் அனைவரும் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவதற்குரிய மகா மந்திரத்தை அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி, “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தை உரக்கக் கூவி அங்கிருந்தவர்களை மும்முறை திரும்பத் திரும்பச் சொல்ல வைத்தார்.

கூடியிருந்த மக்களும் நன்றியில் அவரை விழுந்து வணங்கி தங்கள் இல்லம் திரும்பினர். நன்றி தெரிவிக்க திருக்கோட்டியூர் நம்பியின் திரு மாளிகைக்குத் உடையவர் சென்றார். அங்கு அவரோ இவர் செய்த செயலால் இவரைப் பார்த்ததும் மிகுந்த சீற்றம் கொண்டு, உம் போன்ற குருத் துரோகிகளுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்று கடும் சொற்களை உதிர்த்தார். ஆனால் உடையவரோ அவரிடம் சாந்தமாக, குருவின் ஆணையை மீறினால் நரகமே கிட்டும் என்று தெரியும், ஆனால் நீங்கள் உபதேசித்தத் திருமந்திரத்தால் பல்லாயிரக் கணக்கானோர் பிறவிப் பயன் அடைவர். அதற்கு பதில் நானொருவன் நரகம் செல்லுதல் நன்றே என்று கூறினார். இந்த பதிலைக் கேட்டவுடன் நம்பிகளின் கோபம் தணிந்தது. தன்னுடைய குறுகிய மனப்பான்மையையும் தன் சீடரின் உயரிய உதார குணத்தையும் நினைத்து உருகிப் போனார். பரம கருணாமூர்த்தியான இராமானுஜர் இனி “எம்பெருமானார்” எனப் போற்றப் படுவார் என்று நம்பிகள் அவருக்கு விருதினைக் கொடுத்து கௌரவித்தார்.

பின் திருக்கோட்டியூர் நம்பிகள் சரம ஸ்லோகப் பொருளையும் இராமானுஜருக்கு உபதேசித்தார். சரம ஸ்லோகம் என்பது பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தில் உள்ள 66வது ஸ்லோகம்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா சர்வ பாப்பேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுசா

(எல்லா தர்மங்களையும் அறவே விட்டு, என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே – கண்ணன்)

என்பதாகும்.

ஸ்ரீ இராமானுஜர் சீடராக, குருவாக ….

உடையவர் ஐந்து குருக்களிடம் பாடம் கற்றுக் கொண்டுள்ளார். அவர்கள்,

1.பெரிய நம்பிகள். 2.திருக்கோட்டியூர் நம்பிகள். 3.திருமலையாண்டான். 4.ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர். 5.திருமலை நம்பிகள்.

இவ்வாறு ஐந்து பெரியவர்களிடம் இவர் பாடங்கள் கற்றுக் கொண்டதால் மற்றொரு ஆளவந்தாராகவே எம்பெருமானார் காட்சி அளித்தார். எம்பெருமானார் கற்றலலிலும் கற்பிப்பதிலும் நிகரற்று விளங்கி உலகினரை முக்தி நெறிக்கு அழைத்துச் சென்றார்.

எதிரி உள்ளேயே

திருவரங்கர் கோவிலை மிகவும் செம்மையாக நிர்வாகம் செய்து வந்ததினால் அதை முன்பு நிர்வாகம் செய்த ஸ்தானிகர் என்னும் பதவியில் இருந்தவரின் பெருமையும் தலைமையும் நாளடைவில் குறைந்து போயிற்று. இராமானுஜர் உயிரோடு இருக்கும் வரை தன் புகழ் ஒங்காது என்று தீர்மானித்து எம்பெருமானாரை விஷம் வைத்துக் கொல்ல தீர்மானித்தார்.

உடையவர் தினம் பிக்ஷை எடுத்தே உண்பவர். அவர் தினம் ஏழு வீடுகளுக்குச் சென்று அன்னப் பிச்சை எடுப்பார். ஸ்தானிகர் அதில் ஒரு வீட்டு சொந்தக்காரனை பொருளாசையில் மயக்கி அவன் மனைவியை விஷம் கலந்த உணவை பாத்திரத்தில் போடச்சொன்னார். மனைவிக்கு இந்த மகா பாவச் செயலை செய்ய விருப்பம் இல்லை. அதனால் தந்திரமாக விஷம் கலந்த உணவை அவர் வந்து பிச்சைக் கேட்கும்போது அவர் பாத்திரத்தில் இடாமல் அருகில் திண்ணையில் வைத்து அவர் காலில் விழுந்து வணங்கினாள். இச்செயலின் உட்பொருளை உடனே புரிந்து கொண்ட உடையவர் அந்த உணவில் விஷம் கலந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணவை தன் பாத்திரத்தில் போட்டுக் காவிரிக் கரைக்குச் சென்று காவிரி ஆற்றில் கலந்து விட்டு அன்று முழுவதும் பட்டினியாக இருந்தார்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பிகள் உடனே கிளம்பி திருவரங்கம் வந்தார். அவர் வருவது தெரிந்தவுடன் உடையவர் அவரை எதிர்கொண்டு அழைக்கக் காவிரி கரைக்குச் சென்றார். அங்கு அவரைப் பார்த்தவுடன் கொதிக்கும் மணலிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து தன் குருவை வணங்கினார். அவரை எழுந்திரு என்று சொல்லாமல் சிறிது நேரம் திருக்கோட்டியூர் நம்பிகள் பேசாமல் இருந்தார். இதைக் கண்டு மனம் பதைபதைத்து கிடாம்பியாச்சான் என்பவர் இப்படித்தான் அவரை மணலில் போட்டு வருத்துவதா என்று திருக்கோட்டியூர் நம்பிகளையே கடிந்து கொண்டு, தானே கொதிக்கும் மணலில் விழுந்து தன் மேல் உடையவரை சாற்றிக் கொண்டார்.

உடனே நம்பிகள், உன்னை மாதிரி ஒருவருக்காகத் தான் இங்கே வந்தேன். இனி நீரே இவருக்கு தினம் உணவு சமைத்துத் தர வேண்டும், உடையவர் பிக்ஷை எடுக்கப் போக வேண்டாம் என்று கட்டளை இட்டார். ஆனாலும் ஸ்தானிகர் வேறு எப்படியாவது அவரை விஷம் வைத்துக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு அவர் தினம் அருந்தும் பெருமாள் தீர்த்தத்தில் விஷம் கலந்து விட்டார். ஆயினும் அதை அருந்தி அவருக்கு ஒன்றும் ஆகாதது கண்டு தன் தவறை உணர்ந்து தன் கொடிய செயலுக்கு மன்னிப்புக் கோரி எம்பெருமானார் திருவடிகளில் விழுந்து வணங்கினான் அந்தக் கோவில் ஸ்தானிகன். நஞ்சிட்டவனுக்கும் தனது நல்ல உள்ளத்தைப் புலப் படுத்திக் கருணை புரிந்தார் உடையவர்.

யஜ்ஞமூர்த்தி

யஜ்ஞமூர்த்தி என்ற மாயாவாதக் கொள்கையுடையவர் எம்பெருமானால் வைணவம் தழைத்தோங்குவது கண்டு பொறாமை கொண்டு காசியில் இருந்து வாதம் புரிய திருவரங்கம் வந்தார். மிகவும் மேதா விலாசம் நிறைந்தவர். ஆதாலால் அவரிடம் 17 நாட்கள் இராமானுஜர் தர்க்க வாதம் செய்து கடைசியில் அரங்கன் அருளால் எதிராளியின் கர்வத்தை ஒழித்து அவரையும் வைணவம் தழுவ வைத்தார். வித்யா கர்வத்தால் ஆடம்பரமாக வாழ்ந்த யஜ்ஞமூர்த்தியின் நெஞ்சில் எளிமையும் அடக்கமும் ஏற்படலாயிற்று. அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் பெயர் உடையவரால் சாற்றப்பெற்றார். அவர் புலமை வீணாகாமல் இருக்க அவரை நூல்கள் எழுதச் சொன்னார் உடையவர். அதன் படி அவர் தீந்தமிழில் “ஞான சாரம்”, ‘பிரமேய சாரம்” ஆகிய நூல்களை இயற்றி அருளினார். குருவுக்கும் பெருமானுக்கும் சேவை செய்து அவர் தன் காலத்தைக் கழித்தார்.

சீடரின் சீலம்

இவருடைய மாணாக்கர்களில் ஒருவரான அனந்தாழ்வான் என்பவர் திருமலைக்குப் புஷ்பக் கைங்கர்யம் செய்ய அனுப்பினார். அங்கு அதை அவர் மிகச் சிறப்புடன் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க ஆசைக் கொண்டு திருமலைக்குத் தன் சீடர்களுடன் திருவரங்கத்தில் இருந்து பயணமானார் இராமானுஜர்.

வழிப் பயணத்தில் இரண்டாம் இரவு அஷ்டசகஸ்ரம் என்ற ஊரில் தங்குவதாக ஏற்பாடு. முன்னமே தன் சீடர் யாகநேசர் என்னும் செல்வந்தர் வீட்டில் தங்கப் போவதாக இராமானுஜர் இரு சீடர்கள் மூலம் தகவல் அனுப்பினார். அந்தத் தகவலைப் பெற்றுக் கொண்டவர்கள் அச்சீடர்களை உபசரிக்கத் தவறிவிட்டனர். அதை அறிந்த உடையவர் இன்னொரு சீடரான வரதாச்சாரியார் என்பவர் வீட்டுக்குச் சென்று தங்க முடிவு செய்தார். இவர் போன சமயம் அவர் பிட்சைக்குப் போயிருந்தார். வீட்டில் மனைவி இலட்சுமி அம்மாள் மட்டுமே இருந்தார். இவர்கள் உணவருந்தித் தங்க வந்திருப்பதை அறிந்து அவர்களை வரவேற்று உபசரித்து, உணவு சமைக்கும் வரை குளக்கரையில் தங்கி இளைப்பாறுமாறு கேட்டுக் கொண்டார்.

அவர்களோ பரம ஏழை. கணவர் பிட்சை எடுத்து வந்தால் தான் இருவருக்குமே உணவு. இவ்வளவு பேருக்கு எப்படி அமுது படைப்பது? அவ்வூரில் வணிகர் ஒருவர் இலட்சுமி அம்மாளின் அழகில் மயங்கி இருப்பது அவருக்குத் தெரியும். அவரிடம் போய் அவர் இச்சைக்கு இணங்குவதாகச் சொல்லி அமுது படைக்க வேண்டிய பண்டங்களை வாங்கி வந்தார்.

அன்புடன் அமுது சமைத்து வந்தவர்களுக்குப் பரிமாறினார். எம்பெருமானார் இலட்சுமி அம்மாளை ஆசிர்வதிக்கும்போது பிட்சை எடுக்கப் போன வரதாச்சாரியார் திரும்பி வந்தார். வீட்டுக்கு வந்தவர்களை மனைவி இவ்வளவு நன்றாக உபசரித்தது இருப்பதைக் கண்டு அவருக்குப் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் எப்படி செய்ய முடிந்தது என்று ஆச்சரியப்பட்டார். மனைவி அவரிடம் அனைத்தையும் சொன்னார். கோபம் கொள்ளாமல் பெரு மகிழ்ச்சியே அடைந்தார் அவர். “குரு வடிவில் வருபவர் இறைவனே. அவர் பொருட்டு அழியும் இவ்வுடலைக் கொண்டு அழியாப் பேரின்பத்தை நீ தேடிக் கொண்டாய், உன்னை மனைவியாய் பெற்ற நான் பாக்கியவான்” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் உடையவர் காலில் விழுந்தனர். வரதாச்சாரியார் வாயிலாக அனைத்தையும் கேள்விப்பட்டார் எதிராஜர். சற்றே துணுக்குற்றார். அவர்களை உணவு உண்ணச் சொல்லி மீதமிருந்த உணவை வணிகன் வீட்டுக்கு எடுத்துச் சொல்லச் சொன்னார்.

அந்தப் பிராசதத்தை உண்ட வணிகன் பசியாறியவுடன் தன் குணம் மாறுவதை உணர்ந்தான். இலட்சுமி அம்மாளிடம், “நான் நெடுங்காலமாக மிகப் பெரியப் பாவச் செயலை செய்ய இருந்தேன், விலங்காக இருந்த நான் இப்போது மனிதனாக மாறிவிட்டேன். உங்கள் குருவை தரிசிக்க அழைத்துச் செல்வீர்கள் என்றால் என் பிறப்புக் கடைத்தேறி விடும்” என்றான்.

இலட்சுமி அம்மாள் தன் கணவனிடம் இதைக் கூற மனமகிழ்ந்த அவர் அவ்வணிகனை உடையவரிடம் அழைத்துச் சென்றார். மூவரையும் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்த எம்பெருமானார் அம்மூவரின் மனக் கலக்கத்தையும் போக்கினார்.

வணிகன் தன்னையும் சீடனாக்கிக் கொள்ள விண்ணப்பித்தான். அவ்விருப்பத்தை நிறைவேற்றினார் உடையவர். தன் சொத்து அனைத்தையும் உடையவரின் திருவடிக்கே காணிக்கை ஆக்கினான் அவ்வணிகன். அதை இராமானுஜர் ஏழை வரதாச்சாரியாரிடம் அளிக்க, அவரோ குருவின் பலத்தால் எளிமையான வாழ்வு இன்ப மயமாகவும், அமைதியாகவும் நடப்பதாகக் கூறி அதை மறுத்துவிட்டார். பணப் பற்றும், மன மாசும் இல்லாத அந்த அடியவரின் சீலத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தார் எதிராஜர். அனைவராலும் பின்பற்றத் தக்கது அவர் நடத்தை என்று உரைத்தார்.

ramanujar8

இப்பகுதி “நமது திண்ணை” என்கிற இணைய இதழில் தொடர்ந்து வருகிறது. நான்காவது பாகம் ஆகஸ்ட் இதழில் வெளிவந்துள்ளது. 

4 Comments (+add yours?)

 1. தெனாலி™ (@i_thenali)
  Aug 19, 2015 @ 11:54:38

  நல் உழைப்பு ,நல் நடை ,வளர்க உங்கள் இராமானுஜர் தங்கு தடையின்றி :)))

  Reply

 2. Anonymous
  Aug 20, 2015 @ 10:52:54

  innum padikka aaval. Pramadam. Vazhga valarga un pani

  Reply

 3. sukanya5
  Aug 20, 2015 @ 10:54:14

  superb sushi. Please continue the good work.God’s grace should be with you always.lovesukanya

  Date: Tue, 18 Aug 2015 16:01:51 +0000
  To: sukanya5@hotmail.com

  Reply

 4. Trackback: இராமானுஜர் பகுதி -6 நிறைவு பகுதி! | amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: