நல்ல படம்! கதை – மோகன் ராஜா & சுபா, இயக்கம் – மோகன் ராஜா, கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் கடைசி நொடி வரை விறுவிறுப்புக் குறையாத ஒரு நல்ல படைப்பு “தனி ஒருவன்.” ஜெயம் ரவிக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு பாத்திரம். தூள் கிளப்பியிருக்கார். வில்லனும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருப்பது ராஜாவின் வெற்றி. வாழ்த்துகள்! ‘தனி ஒருவன்’ வெற்றி என்றாலும் கதை, திரைக் கதை, வசனம், நடிப்பு, எடிடிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு, எல்லாமே சேர்ந்து தான் மொத்த பேர்களின் பங்களிப்போடு வெற்றியாக அமைந்துள்ளது 🙂
அரவிந்த் ஸ்வாமிக்குள் இப்படி ஒரு உன்னத நடிகர் இத்தனைக் காலம் ஒளிந்து கொண்டு இருந்தாரா? அவர் அழகுக்காக அந்தக் காலத்தில் ஒரு பெண்கள் கூட்டம் அப்படி அவரை வழிபடும். இப்போ இந்தப் படத்துக்குப் பிறகு திரும்ப விட்ட இடத்தில் இருந்து அது தொடர எக்கச்சக்க வாய்ப்புள்ளது 🙂
ஜெயம் ரவி & அரவிந்த் சுவாமி இருவருமே கம்பீரம்! அலட்டல் இல்லாமல் நடித்திருப்பது மிகச் சிறப்பு. மிக மிக நேர்த்தியாக பாத்திரங்களின் படைப்பு. உளவியல் காரணங்களை நன்கு அலசி ஒவ்வொரு பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. நிறைய ஓட்டைகள் உள்ள திரைக் கதைகளை பார்த்துப் பார்த்து சலித்த நமக்கு உருப்படியான ஒரு கதையம்சம் உள்ள ஒரு படத்தைப் பார்த்தத் திருப்தி இதில் கிடைக்கிறது. (அதாவது ஓட்டைகள் குறைவு). ஷாட்டுக்கு ஷாட் சுவாரசியங்கள் கூடிக் கொண்டே போகிறது.
எப்படி திரைக் கதை ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டோ அதே மாதிரி வசனங்களும். கூர்மையாக, கருத்துச் செறிவுடன் அமைந்து படத்துக்கு வலு சேர்க்கின்றன. ஹீரோயினை அச்சு பிச்சு என்று காட்டாமல் அவரையும் கதைக்குத் தேவையான ஒரு பாத்திரமாகப் படைத்ததற்கு இயக்குநருக்கு ஒரு மிகப் பெரிய நன்றி. நயன்தாரா சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில் அரவிந்த் சுவாமி மிக suave வில்லனாக வருகிறார். மிக focussed ஆன கர்ம வீரனாக ஜெயம் ரவி வருகிறார். பேராண்மையில் பார்த்த ரவியின் நடிப்புச் சாயல் இதிலும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
தேவை இல்லாமல் ஒரு டூயட். அதுக்குக் கத்திரி போட்டிருக்க வேண்டும். அதுவும் தவிர முதல் பாதி கொஞ்சம் நீளமாக உள்ளது. அதிலும் எடிட்டர் கருணை பார்க்காமல் சில சீன்களை வெட்டி இருக்கலாம். அதைத் தவிர குறை என்று சொல்ல வேறு ஒன்றும் இல்லை. ஹிப் ஹாப் தமிழா பின்னணி இசை ஒகே.
தம்பி ராமையா, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா, ஹரிஷ் உத்தமன், முக்தா கோட்சே ஆகிய அனைவருமிடம் இருந்தும் சோடை போகாத நடிப்பு! ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறு மில்லிமீட்டர் சிப்பே சொந்தமடா என்று பாடுமளவுக்கு படத்தில் டெக்னாலஜி நிறைய பயன்படுத்தப் பட்டிருக்கிறது. குழப்பமில்லாத ஒரு நல்ல த்ரில்லர்.
Aug 29, 2015 @ 08:33:25
நேற்று தோஹாவில் கிராண்ட் மால் சினிமாவில் மேட்னி ஷோ பார்த்தோம். மிகவும் விறுவிறுப்பான படம். அர்விந்த்சாமி ரிட்டர்ன்ஸ்!
Aug 29, 2015 @ 12:52:20
yes indeed 🙂
Aug 29, 2015 @ 13:35:03
ரொம்ப நல்லா இருக்கு உங்க விமர்சனம். நிறை குறை சரியா சொல்லயிருக்கீங்க. செம படம்னு ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட பிறகு, வேறு எதையும் ஆராயாமல் போய் பார்க்க வேண்டியது நான் உங்களுக்கு செய்யும் மறியாதை :))
எப்படியோ திரைப்படங்களை பார்க்காத என்னை, அடிக்கடி பார்க்க வச்சிட்டீங்க. :)))
Aug 31, 2015 @ 05:35:01
என்னது இது… எல்லாரும் இந்தப் படத்தை நல்லாருக்குன்னு சொல்றீங்க. அப்போ எப்படியும் ரெண்டு மூனு வாரம் ஓடும். அப்ப பாத்துக்கலாம் 🙂